Arts
11 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகம் – 1

February 10, 2024 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

இந்தத் தொடரின் சென்ற இரண்டு கட்டுரைகளிலும் 1698 ஆம் ஆண்டில் கிறிஸ்டியானோ தூர்சி என்பவர் வரைந்த, யாழ்ப்பாணக் கட்டளையகத்தைக் காட்டும் நிலப்படத்தில் காணப்படும் பல்வேறு தகவல்களைப்பற்றியும் அவற்றின் வரலாற்றுத் தொடர்புகள் பற்றியும் ஆராய்ந்தோம். அடுத்த சில கட்டுரைகளில் 1719 ஆம் ஆண்டில் மார்ட்டினஸ் லெயுசிக்காம் (Martinus Leusecam) என்பவர் தொகுத்த யாழ்ப்பாணக் கட்டளையகம் தொடர்பான ஒரு தொகுப்பில் அடங்கிய நிலப்படங்கள் தரும் தகவல்கள் பற்றிப் பார்க்கலாம்.    

நெதர்லாந்தின் தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள இந்த நிலப்படத் தொகுப்பைத் தயாரித்த லெயுசிகாம், யாழ்ப்பாணத்தில் சத்தியப்பிரமாண நில அளவையாளராகப் பணியாற்றியவர். 1716-1723 காலப்பகுதியில் இலங்கையின் ஒல்லாந்த ஆளுனராக இருந்த ஐசாக் ஒகஸ்தீன் ரம்ப் (Isaac Augustijn Rumpf) என்பவரின் கட்டளைக்கு அமைய இந்த தொகுப்பு உருவாக்கப்பட்டது. இத்தொகுப்பில் யாழ்ப்பாணக் கட்டளையகம் தொடர்பான 31 நிலப்படங்கள் அடங்கியுள்ளன. இத்தொகுப்பில் முதலாவதாக முழு இலங்கையையும் காட்டும் ஒரு நிலப்படமும், அடுத்து யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் ஒரு நிலப்படமும் அடங்கியுள்ளன. எஞ்சிய நிலப்படங்கள் கட்டளையகத்தின் பல்வேறு பகுதிகளைத் தனித்தனியாகக் காட்டுகின்றன.1 

இவை 1) யாழ்ப்பாணத்தின் நான்கு பிரிவுகள், 2) வலிகாமப் பிரிவு, 3) வடமராட்சிப் பிரிவு, 4) பச்சிலைப்பள்ளிப் பிரிவு, 5) தென்மராட்சிப் பிரிவு, 6) வேலணைத் தீவு, 7) காரைதீவு, 8) எழுவைதீவு, 9) அனலைதீவு, 10) நயினாதீவு, 11) நெடுந்தீவு, 12) புங்குடுதீவு, 13) தென்னமரவடி, 14) பனங்காமம், 15) கரிக்கட்டுமூலை, 16) கரைச்சி, 17) மாதோட்டம், 18) கருநாவற்பற்று, 19) மேல்பற்று, 20) பெருங்கழிப்பற்று, 21) இலுப்பைக்கடவை, 22) பல்லவராயன்கட்டு, 23) பூனகரி, 24) பறங்கிச்செட்டிகுளம், 25) முள்ளியவளை, 26) புதுக்குடியிருப்பு, 27) நானாட்டான், 28) மன்னார், 29) முசலிப்பற்று ஆகியவற்றைக் காட்டும் நிலப்படங்களாகும். மேற்படி நிலப்படங்களிலிருந்து வரலாறு தொடர்பான பல புதிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள உதவுவதுடன், வேறு மூலங்களினூடாகக் கிடைக்கும் தகவல்களை உறுதி செய்துகொள்வதற்கும் பயன்படக்கூடியவை.

ஒல்லாந்த மத அமைப்புக்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த நிலப்படங்களை வரைந்திருக்கக்கூடும் என்று ஆர். எல். புரோகியர் கருதுகிறார்.2 நிலப்படங்களில் தேவாலயங்களுக்கும் கோவிற்பற்றுப் பிரிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதனாலும், விளக்கக் குறிப்புகளில் தேவாலயங்கள், அவற்றின் கீழிருந்த ஊர்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள் இருப்பதாலும் இந்தக் கருத்து ஏற்பட்டிருக்கலாம். ஆனால், 1694 ஆம் ஆண்டில் பத்தேவியாவிலிருந்த ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் மேலதிகாரிகள் ஊர்கள், நாட்டுப் பிரிவுகள் ஆகியவற்றைக் காட்டும் நிலப்படங்களைக் கேட்டுக் கடிதம் அனுப்பியதாகவும், அவற்றைத் தயாரிக்கும் வேலைகள் நடைபெறுவதாகவும் யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதியாக இருந்த சுவாடெக்குரூன் 1697 இல் எழுதிய வழிகாட்டற் குறிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.3 அத்துடன், கோவிற்பற்றுகள் சமயத் தேவைகளுக்காக மட்டுமன்றி நிர்வாகப் பிரிவுகளாகவும் செயற்பட்டன என்பதையும் கோவிற்பற்றுகள் அல்லாத வன்னிப் பிரிவுகளுக்கும் தனித்தனியான நிலப்படங்கள் தொகுப்பில் இருப்பதையும் கருத்திற் கொண்டால், மேற்படி நிலப்படங்களை நிர்வாகத் தேவைகளுக்காகவே தயாரித்திருக்கக் கூடுதல் வாய்ப்புகள் உண்டு.

லெயுசிக்காமின் யாழ்ப்பாணக் கட்டளையகம்

மேலே குறிப்பிட்ட நிலப்படத் தொகுப்பிலுள்ள, யாழ்ப்பாணக் கட்டளையகத்தை முழுமையாகக் காட்டும் நிலப்படம், சென்ற இரண்டு கட்டுரைகளில் எடுத்தாளப்பட்ட தூர்சியின் நிலப்படத்தைப் போன்றது. ஆனாலும், இத்தொகுப்பிலுள்ள நிலப்படம் கூடுதல் விவரங்களைத் தருகிறது. (படம்-1)

map 1

“யாழ்ப்பாணக் கட்டளையகம் முழுவதையும் உள்ளடக்கிய நிலப்படம்” என்ற தலைப்பிட்ட இதில் விளக்கக் குறிப்பொன்று உள்ளது. இக்குறிப்பிலிருந்து நிலப்படம்,  நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப்பட்டினம், மக்கள் வாழுகின்றனவும் வாழாதனவுமான தீவுகள், ஆறு வன்னிப் பிரிவுகள், வன்னியின் எல்லைப் பகுதியிலுள்ள நான்கு கோயிற்பற்றுகள், அவற்றுக்குக் கீழ்ப்பட்ட ஊர்கள், கரைச்சி, பறங்கிச்செட்டிகுளம், புதுக்குடியிருப்பு, மன்னார், மாதோட்டம் ஆகியவற்றையும், அப்பகுதிகளிலுள்ள தேவாலயங்கள், பொது வீதிகள், குளங்கள், ஆறுகள், மன்னார்க் குடாக்கடலோர அமைப்பு ஆகியவற்றையும் காட்டுவதை நோக்கமாகக்கொண்டு வரையப்பட்டதாகத் தெரிகிறது. 

இந்த நிலப்படத்தில் பல்வேறுபட்ட குறியீடுகள் காணப்படுகின்றன. ஆனால், இவை தொடர்பான விளக்கக் குறிப்புகள் எதுவும் இல்லை. பெரும்பாலும் இடப்பெயர்களுக்கு எதிரில் அமைவிடங்களைக் குறிக்க சிறிய வட்டம் உள்ளது. இவற்றுட் சில மண்ணிறமாகவும் வேறு சில கறுப்பாகவும் உள்ளன. இவ்வேறுபாட்டுக்கான காரணம் தெரியவில்லை. சிறிய வீடு போன்ற குறியீடுகளும் உள்ளன. இக்குறியீட்டைத் தனியாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளைச் சேர்த்தும் பயன்படுத்தியுள்ளனர். அத்துடன், இவை முன்னர் குறிப்பிட்ட வட்டங்களுக்கு உள்ளும், வேறாகவும் பயன்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்தோ தனியாகவோ மரத்தைக் காட்டும் குறியீடும் பரவலாகக் காணப்படுகின்றது. தனி வீடு, மடத்தை அல்லது சிறிய ஊரைக் குறிக்கக்கூடும். பல வீடுகள், பெரிய ஊரைக் குறிக்கக்கூடும். மரங்கள், நிழல் மரங்களைக் குறிப்பதாக இருக்கலாம். இவை தவிர, தேவாலயம், குருமனை, கோட்டை, யானை அடைப்பு (Elephant kraal) போன்ற சிறப்பு அமைப்புக்களைக் காட்டும் குறியீடுகளும் பயன்பட்டுள்ளன. 

பிரிவு எல்லைகள்

இந்த நிலப்படம் யாழ்ப்பாணக் கட்டளையகத்தின் கீழிருந்த எல்லாப் பிரிவுகளின் எல்லைகளையும் குறித்துக் காட்டுகிறது. முன்னர் விளக்கிய தூர்சியின் நிலப்படம் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த நான்கு பெரும் பிரிவுகளான வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி ஆகியவற்றின் எல்லைகளை மட்டுமே காட்டியது. ஆனால், இந்த நிலப்படத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் தீவுப்பகுதியிலும் மன்னாரிலும் வன்னிப் பகுதியில் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் நேரடிக் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளிலும் இருந்த எல்லாக் கோயிற்பற்றுப் பிரிவுகளின் எல்லைகளையும் காட்டியுள்ளனர். அத்துடன், ஒல்லாந்தரின் நேரடிக் கட்டுப்பாடுக்குள் அடங்காத பகுதியை இளநீல நிறக் கோட்டினால் ஏனைய பகுதிகளிலிருந்து பிரித்துக்காட்டியுள்ளனர். இப்பகுதிக்குள் அடங்கியிருந்த ஏழு பிரிவுகளின் எல்லைகளையும் நிலப்படம் காட்டுகிறது. அதேவேளை, கண்டியரசனின் ஆளுகைக்குட்பட்ட பகுதியின் எல்லையை மஞ்சள் நிறக் கோடு காட்டுகிறது.

யாழ்ப்பாணக் குடாநாடும் தீவுகளும்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்த சுண்டிக்குழி, நல்லூர், வண்ணார்பண்ணை, மானிப்பாய், உடுவில், வட்டுக்கோட்டை, சங்கானை, பண்டத்தரிப்பு, தெல்லிப்பழை, மயிலிட்டி, மல்லாகம், கோப்பாய், புத்தூர், அச்சுவேலி, உடுப்பிட்டி, கட்டைவேலி, பருத்தித்துறை, நாவற்குழி, சாவகச்சேரி, வரணி, கச்சாய், எழுதுமட்டுவாள், முகமாலை, புலோப்பளை, தம்பகமை, முள்ளிப்பற்று ஆகிய 26 கோயிற்பற்றுப் பிரிவுகளும் அவற்றின் எல்லைகளுடன் வெவ்வேறு நிறங்கள் தீட்டிக் காட்டப்பட்டுள்ளன.  (படம்-2) பெரும்பாலான கோயிற்பற்றுப் பிரிவுகள் ஒரே பெரும்பிரிவுக்குள் அடங்குகின்றன. இன்றைய வடமராட்சி கிழக்குப் பகுதியில் அடங்கிய குடத்தனை, அம்பன் – நாகர்கோயில், குடாரப்பு, செம்பியன்பற்று, ஆகிய ஊர்கள் முறையே  தென்மராட்சியின் வரணி, எழுதுமட்டுவாள், பச்சிலைப்பள்ளியின்  முகமாலை, தம்பகமை ஆகிய கோவிற்பற்றுப் பிரிவுகளிலும் அடங்கியிருந்ததை நிலப்படத்திலிருந்து அறியமுடிகிறது. அதேவேளை, ஆழியவளை, உடுத்துறை என்பனவும் அயலில் உள்ள வேறு சில ஊர்களும் பச்சிலைப்பள்ளியின் முள்ளிப்பற்றுக் கோவிற்பற்றுக்குள் அடங்கியிருந்தன.

map 2

தீவுப் பகுதியில் பெரிய தீவான வேலணைத் தீவு மட்டுமே மூன்று கோவிற்பற்றுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை அல்லைப்பிட்டி, வேலணை, ஊராத்துறை (ஊர்காவற்றுறை} என்பன. இதைத் தவிர ஏனைய மக்கள் வாழும் தீவுகளான காரைதீவு (தற்போதைய காரைநகர்), புங்குடுதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, இரணை தீவு என்பன தனித்தனிப் பிரிவுகள். இவற்றை நிலப்படம் தெளிவாகக் காட்டுகிறது.

மன்னார்த்தீவும் அயற் பகுதிகளும்

யாழ்ப்பாணம் போர்த்துக்கேயரின் நேரடி ஆட்சியின் கீழ் வருவதற்கு 59 ஆண்டுகளுக்கு முன்னரே மன்னார்த் தீவைத் தமது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்துவிட்டனர். அத்துடன், மன்னார்த் தீவுக்கு எதிர்ப்பக்கம் தலைநிலத்தில் இருந்த மாதோட்டமும் சில அயல் பகுதிகளும்கூடப் போர்த்துக்கேயரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. ஒல்லாந்தர் மன்னாரைக் கைப்பற்றியபோது, மாதோட்டம், நானாட்டான், முசலிப்பற்று ஆகியவற்றுடன் செட்டிகுளத்தின் ஒரு பகுதியும் மன்னார்த் தளபதியின் ஆளுகைக்குள் இருந்தன. இந்தச் செட்டிகுளப் பகுதியே நிலப்படத்தில் பறங்கிச் செட்டிகுளம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஒல்லாந்தரின் நேரடிக் கட்டுப்பாட்டிலிருந்த மன்னார்த் தீவிலும் மன்னார் நகரம், தோட்டவெளி, மீனவர் குடியிருப்பு, புனித பீட்டர், கரிசல், பேசாலை, தலைமன்னார் ஆகிய ஏழு கோவிற்பற்றுகளின் எல்லைகளையும் நிலப்படம் காட்டுகிறது. (படம்-3) அத்துடன், ஒல்லாந்தரின் நேரடி ஆளுகைக்குள் அடங்கியதாக வன்னிப் பெருநிலப்பரப்பின் மேற்குக் கரையோரமாக அமைந்த முசலிப்பற்று, நானாட்டான், மாதோட்டம், பெருங்கழிப்பற்று, இலுப்பைக்கடவை, பல்லவராயன்கட்டு, பூனகரி, கரைச்சி ஆகிய கோவிற்பற்றுகளையும் பறங்கிச்செட்டிகுளம் பிரிவையும் நிலப்படத்தில் காட்டியுள்ளனர்.  எனினும், பெருங்கழிப்பற்று, இலுப்பைக்கடவை, பூனகரி ஆகிய கோவிற்பற்றுகளில் அடங்கிய சில ஊர்களை மட்டும் “A” என்னும் எழுத்தால் குறித்துள்ளனர். அக்காலத்தில் பெருங்கழிப்பற்றில் 4 துணைப்பிரிவுகளும், இலுப்பைக்கடவையிலும் பூனகரியிலும் ஒவ்வொன்றிலும் 6 துணைப்பிரிவுகளும் இருந்தபோதிலும், பெருங்கழிப்பற்றில் புதுக்குளம், கோனென்குளம், கோயில்குளம் ஆகிய மூன்று துணைப்பிரிவுகளும்; இலுப்பைக்கடவையில் திகாலி, ஆத்திமோட்டை, கல்நாட்டி ஆகிய துணைப்பிரிவுகளும்; பூனகரியில் தியாகமும் மட்டுமே இவ்வாறு குறித்துக் காட்டப்பட்டவை. நிலப்படத்திலுள்ள விளக்கக்குறிப்பிலும் இவ்வாறு காட்டியுள்ளதுபற்றிய தகவல் உள்ளது. இந்த ஏழு துணைப்பிரிவுகளை மட்டும் இவ்வாறு சிறப்பாகக் குறித்ததற்குக் காரணம் தெரியவில்லை.

map 3

வன்னிப் பிரிவுகள்

வன்னியில் ஒல்லாந்தரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வராத வன்னிப் பகுதி பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் குறிப்பிட்ட எண்ணிக்கையான யானைகளை வழங்கவேண்டும் என்ற நிபந்தனையின்கீழ், வெவ்வேறு வன்னியர்களின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. இதற்காகக் குறித்த வன்னியர்கள் மொத்தமாக ஆண்டுக்கு 42 ½ யானைகளை ஒல்லாந்தருக்கு வழங்கவேண்டும்.  யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் கைப்பற்றிய காலத்திலிருந்தே இந்த நடைமுறை மாற்றமின்றிப் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.4 ஆனால், பிரிவுகளின் எண்ணிக்கையும் எல்லைகளும் காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து வந்ததைப் போர்த்துக்கேய ஆவணங்களும், பல்வேறு காலகட்டங்களில் பதவியிலிருந்த ஒல்லாந்த ஆளுனர்களும் கட்டளைத் தளபதிகளும் எழுதிய குறிப்புகளும் காட்டுகின்றன. 

போர்த்துக்கேயர் காலத்தில் தென்னமரவடி, முள்ளியவளை, கருநாவற்பற்று, பனங்காமம் ஆகிய நான்கு பிரிவுகள் இருந்ததாக கேரோஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.5 1658-1665 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் கட்டளையகத்தின் தளபதியாகப் பதவி வகித்த அந்தனி பவிலியன் என்பார் உர்கன் (உறுகரைப்பற்று), கரிக்கட்டுமூலை, மேல்பற்று, விளாங்குளம், தென்னமரவடி, முள்ளியவளை ஆகிய ஆறு பிரிவுகளைக் குறிப்பிட்டுள்ளார்.6 17 ஆம் நூற்றாண்டில் 1690 க்கு முன்னர் வரையப்பட்ட பல நிலப்படங்கள் உறுகரைப்பற்று, கருநாவல்பற்று, மேல்பற்று, முள்ளியவளை, கரிக்கட்டுமூலை, தென்னைமரவடி ஆகிய ஆறு பிரிவுகளைக் காட்டுகின்றன. 

1697 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி சுவார்டெக்குரூன் தனது வழிகாட்டற் குறிப்பில் பனங்காமம், பெரியவிளாங்குளம், புதுக்குடியிருப்பு, கரிக்கட்டுமூலை, மேல்பற்று, முள்ளியவளை கருநாவற்பற்று, தென்னமரவடி ஆகிய எட்டுப் பிரிவுகளைக் குறித்துள்ளார்.7 இங்கே எடுத்துக்கொண்ட 1719 ஆம் ஆண்டின் நிலப்படம் பெரியவிளாங்குளம் என்னும் ஊரைப் பனங்காமப் பிரிவுக்குள் காட்டுகிறது. நிலப்படத்தின்படி, இது பனங்காமப்பற்றின் வடகிழக்கு மூலையை அண்டி, கருநாவற்பற்றின் தெற்கு எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. எனவே, இது பனங்காமத்தின் துணைப்பிரிவு எனக் கருதலாம். ஒல்லாந்தரின் நேரடி ஆளுகைக்குள் வராத வன்னி ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதாக ஒல்லாந்த ஆளுனர் ஹென்ட்றிக் பெக்கர் 1716 இல் எழுதிய வழிகாட்டற் குறிப்பொன்றில் குறிப்பிட்டுள்ளார். பனங்காமம், கருநாவற்பற்று, மேல்பற்று, முள்ளியவளை, கரிக்கட்டுமூலை, தென்னமரவடி ஆகியவையே அவர் குறிப்பிட்ட பிரிவுகள்.8 ஆனால், நிலப்படம் கூடுதலாகப் புதுக்குடியிருப்பையும் சேர்த்து ஏழு பிரிவுகளைக் காட்டுகிறது. (படம்-4) இது சுவார்டெக்குரூன் குறிப்பிட்டுள்ள பிரிவுகளை ஒத்திருக்கிறது. கரிக்கட்டுமூலையின் பகுதிகள் தொடர்ச்சியாக அமையாமல் இரண்டு தனித்தனித் துண்டுகளாக இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. இரண்டுக்கும் இடையில் மேல்பற்று, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை ஆகிய பிரிவுகள் உள்ளன. 

map 4

போர்த்துக்கேயர் காலத்தில் பனங்காமத்தின் ஒரு பகுதியாக இருந்த உறுகரைப்பற்றின் பெயர், இடைக்காலத்தில் பனங்காமத்துக்குப் பதிலாகப் பயன்பட்டதையும், 1690 இற்குப் பின்னர் உறுகரைப்பற்று என்னும் பெயர் பயன்பாடற்றுப்போய்ப் பனங்காமம் என்ற பெயர் திரும்பவும் பயன்பாட்டுக்கு வந்ததையும் நிலப்படங்கள் காட்டுகின்றன. அதேவேளை, 1719 இற்குப் பிற்பட்ட நிலப்படங்களே புதுக்குடியிருப்பை ஒரு தனிப் பிரிவாகக் காட்டுகின்றன. முன்னர் புதுக்குடியிருப்பு முள்ளியவளைப் பிரிவுக்குள் அடங்கியிருந்ததாகத் தெரிகிறது. 

நிலப்படம் வன்னிப் பிரிவுகளின் எல்லைகளைக் குறித்துக்காட்டுவதால், அவற்றின் அளவுகளை ஒப்பிட முடிகிறது. பனங்காமம் எல்லாவற்றிலும் பெரிய பிரிவு. கருநாவற்பற்று, மேல்பற்று, கரிக்கட்டுமூலை என்பன அதற்கு அடுத்த நிலையில் காணப்படுகின்றன. புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, தென்னமரவடி ஆகிய பிரிவுகள் ஒப்பீட்டளவில் சிறியவை. நிலப்படத்தில் விளக்கக் குறிப்பில் உள்ளபடி, மேற்படி ஏழு பிரிவுகளையும் சுற்றிலும் உள்ள இளநீல நிற விளிம்பு, இவை ஒல்லாந்தரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் அடங்காதவை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது. அத்துடன், நிலப்படம் ஏராளமான ஊர்களைக் குறித்துக்காட்டுவதால், அக்காலத்தில், வெவேறு பிரிவுகளுக்குள் அடங்கியிருந்த ஊர்கள் எவை என்பதையும் தெளிவாக அறிய முடிகின்றது. 

குறிப்புகள்

  1. Rob van Diessen and Bert Nelemans, Comprehensive Atlas of the Dutch United East India Company – IV Ceylon (Voorburg: Asia Maior/ Atlas Maior, 2010), 240A.
  2. R. L. Brohier, “Ceylon in Maps,” The Journal of the Dutch Burgers Union, vol XXXII, no. 2 (October 1942), 82.
  3. Memoir of Hendrick Zwaardecroon, Commandeur of Jaffnapatam 1697, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1911), 18.
  4. Memoir of Hendrick Zwaardecroon, 5.
  5. Fernao De Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon vol I, trans. S. G. Perera (New Delhi: Asian Educational Services, 1992), 51.
  6. Instructions from the Governor-General and Council of India to the Governor of Ceylon 1656-1665, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1908), 110-111
  7. Memoir of Hendrick Zwaardecroon, 6.
  8. Memoir of Hendrick Becker, Governor and Director of Ceylon for the Successor Isaac Augustyn Rumpf 1716, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1914), 15.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4979 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)