Arts
16 நிமிட வாசிப்பு

18 ஆம் நூற்றாண்டின் நிலப்படங்களில் யாழ்ப்பாணக் குடாநாடும் அதை அண்டிய பகுதிகளும்

November 17, 2023 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

17 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தரால் வரையப்பட்ட இலங்கையின் நிலப்படங்களில் யாழ்ப்பாணத்தையும் அதை அண்டிய பகுதிகளையும் பற்றிய தகவல்கள் குறித்து ஏற்கெனவே பார்த்தோம். 18 ஆம் நூற்றாண்டில் இறுதி நான்கு ஆண்டுகள் நீங்கலாக, இலங்கை ஒல்லாந்தரின் ஆட்சியின் கீழேயே இருந்தது. அக்காலத்தில் வரையப்பட்ட இலங்கைப் படங்களில், தீவின் வடிவம் படிப்படியாகத் திருத்தமடைந்து வந்தது. அத்துடன், பல்வேறு தேவைகளுக்காக இலங்கையின் வடபகுதியின் பல்வேறு பகுதிகளைக் காட்டும் விவரமான நிலப்படங்களையும் வரைந்தனர். அதேவேளை, இக்காலப்பகுதியில் வெளியான சில நிலப்படங்கள் பழைய நிலப்படங்களைத் தழுவி வரையப்பட்டதால் அவற்றில் இலங்கையின் வடிவம் துல்லியமாக இல்லை. அவற்றிலுள்ள தகவல்களும் சிலவேளைகளில் அவற்றின் காலத்துக்குப் பொருத்தமானவையாக இல்லை. எடுத்துக்காட்டாக 1724-1726 காலப்பகுதியில் வெளியான பிரான்ஸ்வா வலன்டைனின் நூலில் உள்ள இலங்கையின் நிலப்படம் ஒன்று தீவின் வடிவத்தை அக்காலத்தில் அறிந்திருந்த அளவுக்குத் துல்லியமாகக் காட்டவில்லை. அதேவேளை, வடபகுதியில் குறிப்பாக வன்னிப் பகுதியில் நிர்வாகப் பிரிவுகள் முறையாகக் காட்டப்படவில்லை. மிகப்பழைய நிலப்படங்களில் காணப்பட்ட ‘வேடர்களின் நிலம்’ என்னும் பிரிவும் நிலப்படத்தில் உள்ளது.1

யொவான்னஸ் ஃபொன் கம்பன் (Joannes van Campen) என்பவர் வரைந்த இலங்கையின் புறவுரு நிலப்படம் ஒன்று நெதர்லாந்தின் தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ளது. இது 1719 ஆம் ஆண்டில் மார்ட்டினஸ் லெயுசிகாம் என்பவரால் தொகுக்கப்பட்ட நிலப்படத் தொகுப்பு ஒன்றில் காணப்படுகிறது. இத்தொகுப்பு யாழ்ப்பாணக் கட்டளையகத்தின் பல்வேறு பகுதிகளைக் காட்டும் பல நிலப்படங்களை உள்ளடக்கியது. மேற்கூறிய இலங்கையின் புறவுருவ நிலப்படத்தில் வடபகுதி தொடர்பில் குறிப்பிடத்தக்க விவரங்கள் இல்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அருகிலுள்ள தீவுகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளதுடன், வடபகுதியிலிருந்த கோட்டைகளையும் நிலப்படம் பெயர் குறித்துக் காட்டுகிறது. யாழ்ப்பாணக் கோட்டை, ஊர்காவற்றுறைக் கடற்கோட்டை, பருத்தித்துறைக் கோட்டை, பூநகரிக் கோட்டை, ஆனையிறவுக் கோட்டை, பெஸ்ச்சூட்டர்க் கடவைக் கோட்டை, மன்னார்க் கோட்டை, இலுப்பைக்கடவைக் கோட்டை, அரிப்புக் கோட்டை ஆகியவற்றை நிலப்படத்தில் காணலாம். பெஸ்ச்சூட்டர்க் கடவைக் கோட்டையின் அமைவிடம் பிழையாக உள்ளது. பைல் கடவைக் கோட்டை நிலப்படத்தில் இல்லை. மேலே குறிப்பிட்ட நிலப்படத் தொகுப்பிலுள்ள ஏனைய நிலப்படங்கள் இந்தக் கட்டுரைத் தொடருக்கு முக்கியமானவை. இவற்றைப் பற்றிப் பின்னர் விவரமாக ஆராயலாம்.

ancient jaffna map 1

போல்ட்டஸ் யாக்ப்ஸ் ஃபொன் லியர் (Baltus Jacobsz van Lier) என்பவர் 1751 ஆம் ஆண்டில் வரைந்த இலங்கையின் நிலப்படம் அக்காலத்து நிலப்படங்களில் குறிப்பிடத்தக்கது. இதில் நடுவில் இலங்கையின் படமும் அதைச் சுற்றிலும் உட்செருகலாக அக்காலத்தில் இலங்கையில் இருந்த 22 கோட்டைகளின் வரைபடங்களும் உள்ளன. (படம்-1) இவற்றுள் 11 கோட்டைகள் வடபகுதியிலுள்ளவை. இந்த நிலப்படம் குறிப்பாக, இலங்கையில் அக்காலத்திலிருந்த நிர்வாகப் பிரிவுகளைக் காட்டுவதற்காகவே வரையப்பட்டதாகத் தெரிகிறது. ஆனாலும், முக்கியமான வீதிகள், ஊர்கள், கோட்டைகளின் அமைவிடங்கள் முதலியவற்றையும் நிலப்படம் குறித்துக் காட்டுகிறது.

இந்த நிலப்படத்தில் யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள தீவுகளுக்கு ஒல்லாந்தர் வழங்கிய பெயர்களுடன் உள்ளூரில் வழக்கிலிருந்த பெயர்களையும் குறித்துள்ளனர். இவை நெடுந்தீவு (Nedantivo), புங்குடுதீவு (Poengartivo), அனலை தீவு (Annelletivo), நயினா தீவு (Nayentivo), எழுவை தீவு (Ellevativo), காரை தீவு (Caretivo), இரணை தீவு (Jrrenetivo), பாலை தீவு (Paletivo) என்பன. இங்கே அடைப்புக்குறிக்குள் உள்ளவை நிலப்படத்தில் உள்ளபடி தமிழ்ப் பெயர்களின் ஒல்லாந்த மொழி ஒலிபெயர்ப்புகள் ஆகும். இப்பெயர்களை ஒல்லாந்தர் ஆட்சிக்காலத் தொடக்கத்திலிருந்தே பல்வேறு ஆவணங்களில் காண முடிந்தாலும், 17 ஆம் நூற்றாண்டின் நிலப்படங்களில் அவை முழுமையாகப் பயன்படவில்லை. குறிப்பாக, அனலை தீவு, எழுவை தீவு, பாலை தீவு ஆகியவற்றுக்கு நெருக்கமான பெயர்களைப் பழைய நிலப்படங்களில் காணமுடியவில்லை. போல்ட்டஸ் யாக்ப்ஸ் ஃபொன் லியரின் நிலப்படத்தில் மேற்படி பெயர்கள் காணப்படுவது, அக்காலத்து ஒல்லாந்த நில அளவையாளர்கள் உள்ளூர் வழக்குகளுக்குப் பழக்கப்பட்டிருந்ததை அல்லது உள்ளூர் அதிகாரிகளின் உதவியைப் பெற்றுச் சரியான தகவல்களைத் தருவதில் அக்கறை கொண்டிருந்ததை காட்டுகிறது எனலாம். இந்நிலப்படத்தில் வேலணைத் தீவின் பெயரைக் குறிக்கவில்லை. தவறுதலாக விடுபட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது..

நிலப்படம், நிர்வாகப் பிரிவுகளைத் தடித்த எல்லைக்கோடுகளால் பிரித்து, வெவ்வேறு நிறங்கள் தீட்டித் தெளிவாகக் காட்டுகிறது. இலங்கையின் வடபகுதியின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரிவுகளைக் காட்டுவதுடன் பெருநிலப் பரப்பிலுள்ள 15 நிர்வாகப் பிரிவுகளும் நிலப்படத்தில் உள்ளன.

1766 ஆம் ஆண்டில், கண்டி இராச்சியத்துக்கும் ஒல்லாந்தருக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படும் இன்னொரு நிலப்படம் 1751 ஆம் ஆண்டின் நிலப்படத்தை ஒத்ததே. ஆனால், 1766 ஆம் ஆண்டின் நிலப்படத்தில் உள்ள விளக்கக் குறிப்புகள் வடபகுதியிலிருந்த நிர்வாகப் பிரிவுகளைப் பற்றிச் சில கூடுதல் தகவல்களைத் தருகின்றது. பெருநிலப் பரப்பிலிருந்த கரைச்சிப் பிரிவும்; பூநகரி, இலுப்பைக்கடவை, பல்லவராயன்கட்டு ஆகியவற்றை உள்ளடக்கும் பகுதியும்; மன்னாரைச் சேர்ந்த மாதோட்டம், நானாட்டான், முசலி ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியும் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் நேரடி ஆளுகைக்குள் இருந்தன. பனங்காமம், கருநாவற்பற்று, மேல்பற்று, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, கரிக்கட்டுமூலை, தென்னமரவாடி ஆகிய பிரிவுகள் வன்னியர்களால் ஆளப்பட்டதாகவும், இதற்காக அவர்கள் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு யானைகள் கொடுத்ததாகவும் மேற்படி விளக்கக் குறிப்பிலிருந்து அறியமுடிகிறது. பிரிவுகளின் பெயர்களில் வேறுபாடுகள் காணப்பட்டபோதும், இந்தியாவுக்கான ஒல்லாந்த ஆளுநர் நாயகம் ரைக்கிளோஃப் ஃபொன் கூன்ஸ் (Ryclof van Goens) யாழ்ப்பாணக் கட்டளைத்தளபதி அந்தனி பவிலியனுக்கு 1665 இல் எழுதிய குறிப்பிலும் இதே தகவல் இருப்பதைக் காணலாம்.2 1697 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கட்டளைத்தளபதி சுவார்டெக்குரூன் எழுதிய வழிகாட்டற் குறிப்பில், பரந்த வன்னிப் பிரதேசம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வன்னியர்களின் பொறுப்பில் விடப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவ்வன்னியர்கள் ஆண்டுதோறும் மொத்தமாக 42 ½ யானைகளை ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனிக்குத் திறையாகச் செலுத்தக் கடமைப்பட்டவர்கள். ஆனாலும், வன்னியர்கள் இந்தத் திறையை ஒழுங்காகச் செலுத்தாமல் தவிர்த்து வந்தனர்.3  

ancient jaffna map 2

1751 ஆம் ஆண்டின் நிலப்படத்தில் உட்செருகலாக வரையப்பட்டுள்ள கோட்டைகளுள் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அதற்கு அண்மையிலும் அமைந்துள்ளவையாகக் காட்டியுள்ள கோட்டைகள் ஆறு. அவை, யாழ்ப்பாணக் கோட்டை, ஊர்காவற்றுறைக் கடற் கோட்டை (ஹமென்ஹீல்), பருத்தித்துறைக் கோட்டை,  பூநகரிக் கோட்டை, ஆனையிறவுக் கோட்டை,  த லேயு கோட்டை, பெஸ்ச்சூட்டர் கடவைக் கோட்டை, பைல் கடவைக் கோட்டை என்பனவாகும். யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாணக் கட்டளையகத்தின் முதன்மைக் கோட்டை. ஊர்காவற்றுறைக் கடற் கோட்டை இந்து மாகடற் பகுதியிலிருந்து யாழ்ப்பாணக் கோட்டைக்கான அணுகுவழியைப் பாதுகாப்பதற்காகக் கடலில் அமைக்கப்பட்டது. பூநகரி, ஆனையிறவு, பெஸ்ச்சூட்டர் கடவை, பைல் கடவை ஆகிய இடங்களில் அமைந்துள்ள கோட்டைகள் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் வன்னிப் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்துப் பாதைகளை அண்டி அமைந்துள்ளன. த லேயு (De Leeuw) கோட்டையைப் பச்சிலைப்பள்ளிப் பிரிவில் ஆனையிறவுக்கு மேற்கே நீரேரிக் கரையோரமாக நிலப்படத்தில் குறித்துள்ளனர். (படம்-2) இந்தக் கோட்டையைப் பற்றி வேறு ஆவணங்கள் எதிலும் தகவல் இருப்பதாகத் தெரியவில்லை. 1766 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கட்டளைத்தளபதி மூயார்ட் எழுதிய குறிப்பில் அப்பகுதியில் ஆனையிறவு, பெஸ்ச்சூட்டர், பைல் ஆகிய மூன்று கோட்டைகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். இந்தக் கோட்டையின் வரைபடமும் நிலப்படத்தில் இருப்பதால், வேறெங்காவது இருக்கவேண்டியதை இவ்விடத்தில் காட்டினரா, அல்லது கட்டுவதற்காகத் திட்டமிடப்பட்டுப் பின்னர் கைவிடப்பட்டதா என்பது தெரியவில்லை.

யாழ்ப்பாணக் கோட்டை ஐங்கோண வடிவமும் மூலைகளில் அம்புத்தலைவடிவக் கொத்தளங்களும் கொண்டமைந்தது. அக்காலத்தில் நவீனமாக இருந்த பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைத் தழுவி வடிவமைக்கப்பட்டது. இதைப் பற்றிய விவரமான விளக்கங்களைப் பின்னர் பார்க்கலாம். பருத்தித்துறையில் அமைக்கப்பட்டிருந்த கோட்டை வழமைக்கு மாறான முக்கோண வடிவம் கொண்டது. இதில் ஒரு கொத்தளம் மட்டுமே இருந்தது. இலங்கையிலிருந்த கோட்டைகளுள் பாதுகாப்புப் பெறுமானம் மிகக் குறைவாகக் காணப்பட்ட கோட்டை இதுவே.4  

பைல் கடவைக் கோட்டை சுண்டிக்குளப் பகுதியூடாக வன்னிக்குச் செல்லும் பாதையை அண்டி அமைந்துள்ளது. ஆனையிறவுக் கோட்டை யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்கும் இடையில் அமைந்த கடல்நீரேரி குறுகலாக இருக்கும் பகுதியை அண்டி இருக்கிறது. அக்காலத்தில், ஆனையிறவுக்கூடாக வன்னிக்குச் செல்லும் கண்டி வீதி இல்லை. ஆனால், குறுகலான இப்பகுதியூடாக வள்ளங்களைப் பயன்படுத்தியும், கோடை காலங்களில் நடந்தும் போக்குவரத்து இடம்பெற்றிருக்கும். பெஸ்ச்சூட்டர் கோட்டை மேற்கூறிய இரண்டு கோட்டைகளுக்கும் இடையில் கோயில்வயல் பகுதியில் உள்ளது. பூநகரிக் கோட்டை யாழ்ப்பாணத்திலிருந்து கல்முனையூடாக வன்னிக்குள் வரும் பாதையை அண்டி அமைந்துள்ளது. இக்கோட்டைகள் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் வன்னிக்கும் இடையிலான போக்குவரத்தைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டவை. குறிப்பாக, மனிதர்கள் போய்வருவதைக் கண்காணித்தல், அனுமதி இல்லாமல் பொருட்களை எடுத்துச் செல்வதைத் தடுத்தல், யானைகள் நுழைவதைக் கட்டுப்படுத்துதல், வன்னியர்களைக் கண்காணித்தல் என்பன இக்கோட்டைகளின் முக்கிய பணிகளாக இருந்தன.5

ancient Jaffna map 3

பூநகரி, ஆனையிறவு, பெஸ்ச்சூட்டர் கடவை, பைல் கடவை, த லேயு ஆகிய இடங்களிலுள்ள கோட்டைகள் எதிர் மூலைகளில் இரண்டு கொத்தளங்களைக் கொண்ட சதுர வடிவமானவை. பூநகரிக் கோட்டை இவற்றுட் பெரியது. (படம்-3) இதன் ஒரு பக்க மதிலின் நீளம் 100 அடி (ஏறத்தாழ 30 மீட்டர்). ஏனைய நான்கும் சிறிய கோட்டைகள், ஏறத்தாழ ஒரே வடிவமும் அளவும் கொண்டவை. (படம்-4) இவற்றின் ஒரு பக்க மதில் 50 அடி (ஏறத்தாழ 15 மீட்டர்) நீளமானது.6

ancient jaffna map 4

பருத்தித்துறைக் கோட்டை ஒல்லாந்தர் காலத்திலேயே கைவிடப்பட்டு அழிந்துவிட்டது. பெஸ்ச்சூட்டர் கடவை, பைல் கடவை ஆகிய இடங்களிலிருந்த கோட்டைகள் ஒல்லாந்தர் காலத்துக்குப் பின்னர் பயன்பாடின்றி அழிந்துவிட்டன. பூநகரிக் கோட்டை பிரித்தானியர் காலத்திலும் வேறு தேவைகளுக்குப் பயன்பட்டுப் பிற்காலத்தில் கைவிடப்பட்டு அழிந்தது. ஆனையிறவுக் கோட்டை அண்மைக்காலம் வரை இராணுவப் பயன்பாட்டிலிருந்து உள்நாட்டுப் போர்க்காலத்தில் முற்றாக அழிந்துவிட்டது. யாழ்ப்பாணக் கோட்டையும் அண்மைக்காலம்வரை பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்பட்டிருந்து உள்நாட்டுப் போரில் பெருமளவு சேதத்துக்கு உள்ளாகியபோதும், தற்போது பகுதியளவாகத் திருத்தப்பட்டுள்ளது. உள்ளேயிருந்த இராணி மாளிகை, தேவாலயம் உள்ளிட்ட எல்லாக் கட்டடங்களும் அழிந்துவிட்டன.

‘நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் இலங்கைத் தீவின் நிலப்படம்’ என்னும் தலைப்புடன், 1789 ஆம் ஆண்டில் வரையப்பட்ட நிலப்படம் ஒன்று நெதர்லாந்தின் தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ளது. (படம்-5) இந்த நிலப்படம் ஒல்லாந்தரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளின் பெரும் பிரிவுகளில் உள்ள துணைப் பிரிவுகளையும் காட்டுகிறது. வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு, தீவுப்பகுதி, பூநகரிப் பகுதி, கரைச்சி, மன்னாருக்கு உட்பட்ட பகுதிகள் என்பவற்றின் துணைப்பிரிவுகளின் எல்லைகளையும் பெயர்களையும் நிலப்படம் காட்டுகிறது. 1719 ஆம் ஆண்டிலேயே யாழ்ப்பாணக் கட்டளையகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பிரிவுகளுக்குத் தனித்தனியான விவரமான நிலப்படங்கள் வரையப்பட்டன. அவை அப்பிரிவுகளின் துணைப் பிரிவுகளையும் தெளிவாகக் காட்டுகின்றன. இவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது 1789 ஆம் ஆண்டின் நிலப்படத்திலுள்ள துணைப்பிரிவுகளின் எல்லைகள் துல்லியமானவையாக இல்லை. எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாண நகரை அண்டிய வண்ணார்பண்ணை, நல்லூர், சுண்டிக்குழி, கோப்பாய் ஆகிய துணைப்பிரிவுகளின் எல்லைகளைச் சரியாக வரையவில்லை.

ancient Jaffna map 5

ஜோன் டு பெரோன் (Jean Du Perron) என்னும் பிரான்சியர் 1789 இல் வரைந்த இன்னொரு நிலப்படமும் நெதர்லாந்தின் தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ளது. இலங்கையின் புறவுரு மேலே விளக்கிய நிலப்படத்தில் உள்ளதுபோலவே இருப்பதால் அதையும் ஜோன் டு பெரோனே வரைந்திருக்கக்கூடும் என்ற கருத்து உண்டு.7 இதுவும் இலங்கையிலிருந்த ஒல்லாந்தரின் ஆட்சிப் பகுதிகளிலிருந்த துணை நிர்வாகப் பிரிவுகளைக் காட்டுகிறது.

குறிப்புகள்

  1. Atlas of Mutual Heritage, Map of Ceylon, https://www.atlasofmutualheritage.nl/en/page/2984/map-of-ceylon
  2. Instructions from the Governor-General and Council of India to the Governor of Ceylon 1656-1665, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1908), 85.
  3. Memoir of Hendrick Zwaardecroon, Commandeur of Jaffnapatam 1697, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1911), 5.
  4. W. A. Nelson, The Dutch Forts of Sri Lanka, The Military Monuments of Ceylon (with updates by R. K. de Silva) (Colombo: Sri Lanka-Netherlands Association, 2004), 103.
  5. Memoir of Anthony Mooyart, Commandeur of Jaffnapatam for the information and Guidance of his Successor Noel Anthony Lebeck 1766, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1910), 9.
  6. Nelson, The Dutch Forts of Sri Lanka, 97-101a.
  7. Rob van Diessen and Bert Nelemans, Comprehensive Atlas of the Dutch United East India Company – IV Ceylon (Voorburg: Asia Maior/ Atlas Maior, 2010), 48.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5044 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)