Arts
16 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணக் கட்டளையகத்தைக் காட்டும் நிலப்படங்கள் – பகுதி 1

December 22, 2023 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

17 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணக் கட்டளையகத்தைத் தனியாகக் காட்டும் நிலப்படங்கள் கிடைக்கின்றன. 1698 ஆம் ஆண்டில் யான் கிறிஸ்டியாஸ் தூர்சி (Jan Christiaensz Toorsee) என்பவர் வரைந்த ‘யாழ்ப்பாணப் பட்டினத்தினதும் வன்னியினதும் நிலப்படம்’ என்று தலைப்பிட்ட நிலப்படம் ஒன்று நெதர்லாந்திலுள்ள மொழியியல், புவியியல், இனவியல் என்பவற்றுக்கான அரச நிறுவனத்தில் (Koninklijk Instituut voor taal-, Land- en Volkenkunde) உள்ளது.1 இந்நிலப்படத்தில் உள்ள தகவலின்படி ஏற்கெனவே 1679 இலும் 1680 இலும் இதே பகுதியைக் காட்டும் நிலப்படங்களைத் தூர்சி வரைந்ததாகத் தெரிகிறது. அந்நிலப்படங்கள் இப்போது கிடைப்பதில்லை.

ஏறத்தாழ இதே காலப்பகுதியில் தூர்சி வரைந்த, இலங்கைத் தீவையும் தென்னிந்தியாவின் சில பகுதிகளையும் காட்டும் நிலப்படம் ஒன்றைப் பற்றி இத்தொடரின் முன்னைய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தோம். அந்த நிலப்படம் முழு இலங்கையையும் தென்னிந்தியாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய பெரிய நிலப்பரப்பைக் காட்டுகின்றது. மேற்படி நிலப்படத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு உள்ளிட்ட இலங்கையின் புற வடிவம் துல்லியமாக இல்லை. இவ்விடயத்தில் 1698 ஆம் ஆண்டின் நிலப்படம் கூடிய திருத்தமாக உள்ளதால் முன்னர் குறிப்பிட்ட நிலப்படம் இதற்கு முந்தியது என்பதில் ஐயமில்லை. எவ்வாறெனினும், இலங்கையின் வட பகுதி தொடர்பான தகவல்கள் இரண்டு நிலப்படங்களிலும் அதிக வேறுபாடுகளின்றியே காணப்படுகின்றன. 1698 இன் நிலப்படம் மேற்படி நிலப்படங்களில் உள்ளவற்றுடன் மேலும் சில புதிய தகவல்களைச் சேர்த்த மேம்பாடு எனலாம்.

முன்னர் வரைந்த நிலப்படங்களிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் நான்கு பெரும் பிரிவுகள், மக்கள் வாழும் தீவுகள், தேவாலயங்கள், கோட்டைகள் ஆகியவை 1698 இன் நிலப்படத்திலும் உள்ளன. அவற்றுடன், புதிய யானை வீதியையும் ஆளுநரின் ஆணைப்படி வெட்டுவிக்கப்பட்ட கிணறுகளையும்  நிலப்படத்தில் புதிதாகச் சேர்த்துள்ளதாக அதில் உள்ள குறிப்பொன்றிலிருந்து அறியமுடிகின்றது. யாழ்ப்பாணக் கட்டளையகத்தின் எல்லைக்கு வெளியே மேற்குக் கடற்கரையை அண்டிக் கற்பிட்டி வரையிலான பகுதிகளையும் நிலப்படம் காட்டுகிறது. புதிய யானை வீதியை முழுமையாகக் காட்டுவதற்காக இவ்வாறு வரையப்பட்டதாகத் தோன்றுகிறது.

வன்னிப் பிரிவு எல்லைகள்

மேற்படி  நிலப்படம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய நிர்வாகப் பிரிவுகளை எல்லை குறித்துக் காட்டிய போதிலும். வன்னிப் பகுதியின்  பிரிவுகளைக் காட்டவில்லை. எனினும்,  வன்னிப்பகுதி தொடர்பான வேறு பல தகவல்களை நிலப்படத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடிகிறது. முக்கியமான வீதிகள், இவ்வீதிகளை அண்டியிருந்த ஏராளமான ஊர்கள், ஆறுகள், குளங்கள், மடங்கள்,  முதலிய பல்வேறு அம்சங்களை நிலப்படம் காட்டுகிறது.

வன்னிப் பிரிவுகளை இந்நிலப்படம் எல்லை குறித்துக் காட்டாவிட்டாலும், சில இடங்களில் மட்டும் வீதிகள் பிரிவு எல்லைகளைக் கடக்கும் இடங்களில் அது பற்றிய குறிப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, நெடுங்கேணியிலிருந்து பனைநின்ற குளத்துக்குச் செல்லும் வீதி, உரங்கரைப்பற்றுக்கும் கருநாவற்பற்றுக்கும் இடையிலான எல்லையையும் கருநாவற்பற்றுக்கும் மேல்பற்றுக்கும் இடையிலான எல்லையையும் கடக்கும் இடங்களை நிலப்படம் குறித்துக் காட்டுகிறது.

கோட்டைகள்

யாழ்ப்பாணக் கட்டளையகத்திலிருந்த யாழ்ப்பாணக் கோட்டை, ஊர்காவற்றுறைக் கடற் கோட்டை, ஆனையிறவுக் கோட்டை, பைல் கடவைக் கோட்டை, பெச்சூட்டர் கடவைக் கோட்டை, பூனகரிக் கோட்டை, மன்னார்க் கோட்டை, அரிப்புக் கோட்டை ஆகிய எட்டுக் கோட்டைகள் இந்நிலப்படத்தில் உள்ளன. இவற்றுள் மன்னார், அரிப்பு ஆகிய இடங்களிலிருந்த கோட்டைகள் தவிர்ந்த ஏனைய ஆறு கோட்டைகளைப்பற்றிய விவரங்களை இத்தொடரின் சென்ற கட்டுரையில் பார்த்தோம். மன்னார்க் கோட்டை, அரிப்புக்கோட்டை ஆகியவற்றைப் பற்றிய சில வரலாற்றுத் தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மன்னார்க் கோட்டை

யாழ்ப்பாண இராச்சியத்தின்மீது போர்த்துக்கேயரின் முதலாவது படையெடுப்பு 1560 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இராச்சியத்தைப் போர்த்துக்கேயர் கைப்பற்றினராயினும். அதனை முழுமையாகத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், மன்னார்த் தீவையும் அண்டிய பகுதிகள் சிலவற்றையும் அவர்கள் கைப்பற்றிக்கொண்டனர். உடனடியாகவே மன்னார்த்தீவில் ஒரு கோட்டையையும் அவர்கள் கட்டித் தம்மைப் பலப்படுத்தினர்.  யாழ்ப்பாண இராச்சியத்தின ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதியொன்றில் முதலில் கட்டப்பட்ட குடியேற்றவாதக் கோட்டை இதுவே. மன்னார்த்தீவும் அதை அண்டிய பகுதிகளும் மன்னார்க் கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த போர்த்துக்கேயத் தளபதி ஒருவரின் பொறுப்பில் இருந்தன. அத்தளபதிகள் அவ்வப்போது யாழ்ப்பாண இராச்சியத்தின் விடயங்களிலும் தலையீடு செய்துவந்தனர்.

மன்னார்க் கோட்டை மன்னார் வளைகுடாப் பகுதியில் வணிக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது. அத்துடன், மன்னாரை அண்டிய பகுதிகளில் இடம்பெற்றுவந்த முத்துக்குளிப்பை மேற்பார்வை செய்வதற்கான தலைமை இடமாகவும் அக்கோட்டை விளங்கியது.

mannar fort

1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னர், கொழும்பிலிருந்து முன்னேறிய ஒல்லாந்தப் படைகள் மன்னாரைத் தாக்கி அதைக் கைப்பற்றினர். 108  ஆண்டுகள் போர்த்துக்கேயரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த மன்னார்த் தீவும் அங்கிருந்த கோட்டையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த தலைநிலப் பகுதிகளும்  ஒல்லாந்தர் வசமாகின. ஒல்லாந்தர் மன்னார்க் கோட்டையை மேம்படுத்தித் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருந்தனர். (படம்-1) மன்னார்க் கோட்டை சதுரவடிவம் கொண்டது. மூலைகளில் நான்கு கொத்தளங்கள் இருந்தன. கோட்டை மதில் ஒவ்வொன்றும் 180 அடி நீளமானது.2

அரிப்புக் கோட்டை

யாழ்ப்பாண இராச்சியக் காலத்திலிருந்தே அரிப்பை அண்டிய கடற்பகுதியில் முத்துக்குளிப்பு ஒரு முக்கிய பொருளாதாரச் செயற்பாடாக இருந்துவந்தது. முத்துக்குளிப்பு ஒவ்வோராண்டும் சில நாட்கள் மட்டுமே இடம்பெறும். அக்காலத்தில், இடம்பெறக்கூடிய, சட்டத்துக்குப் புறம்பாக முத்துக்குளிப்பதைத் தடுப்பதற்கும் பிற அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்குமாக அமைக்கப்பட்டதே அரிப்புக் கோட்டை. இது மன்னாரிலிருந்து 10 கிலோமீட்டர் தெற்கே உள்ளது. போர்த்துக்கேயர் கட்டிய அரிப்புக் கோட்டையைப் புதிய இரண்டு அம்புத்தலை வடிவக் கொத்தளங்களை அமைத்து ஒல்லாந்தர் மேம்படுத்தினர். அரிப்புக் கோட்டை, ஒவ்வொரு பக்கமும் ஏறத்தாழ 50 அடி நீளம் கொண்ட சதுர வடிவம் கொண்டது. இந்தக் கோட்டை, பாதுகாப்பைப் பொறுத்தவரை குழப்பமான அமைப்பைக் கொண்டதாக இருந்ததாக இலங்கையிலிருந்த ஒல்லாந்தர் கோட்டைகளை ஆய்வுசெய்த நெல்சன் கருதுகிறார். இது ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே பயன்படும் ஒரு கோட்டையாக இருந்ததால் ஒல்லாந்தர் இதற்கு அதிக கவனம் கொடுக்காமல் இருந்திருக்கக்கூடும் என்பது அவரது கருத்து.3

mannar - arippu

அரிப்புக் கோட்டையைச் சூழ்ந்த பகுதி பெரும்பாலும் பயன்பாடற்ற தரிசு நிலங்களைக் கொண்டதாகவும், உடல்நலத்துக்கு ஒவ்வாத சூழல் கொண்டதாக இருந்தபோதும், முத்துக்குளிப்பு இடம்பெறும் காலங்களில், குறிப்பாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்து குவியும் வணிகர்கள், முத்துக்குளிப்போர், பல்வேறு சேவைகளை வழங்குவோர், உள்ளூர் அரச அதிகாரிகள் முதலியவர்களால் இப்பகுதி திருவிழாக் கோலம் பூணும். அந்நாட்களில் ஆயிரக் கணக்கான தோணிகள் முத்துக்குளிப்பில் ஈடுபடும்.4 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் யொகான் வூல்ஃப்காங் ஹைட் என்பவர் வரைந்த படம் ஒன்று அக்காலத்தில் அரிப்புக் கடற்பகுதியில் இடம்பெற்ற முத்துக்குளிப்புக் காட்சியைக் காட்டுகிறது. (படம்-2) அரிப்புக் கடற்பரப்பில் ஒல்லாந்தரின் கண்காணிப்புக் கப்பல்கள் பணியில் ஈடுபட்டிருப்பதையும் ஏராளமான தோணிகள் முத்துக்குளிப்பில் ஈடுபட்டிருப்பதையும் கரையில் வணிகர்களும் பிறரும் முகாமிட்டிருப்பதையும் ஒல்லாந்தரின் படை நிலையையும் படத்தில் காணமுடிகிறது.5 முத்துக்குளிப்பு இடம்பெறும் ஆண்டுகளில் அரசாங்கத்துக்குப் பெருமளவு வருமானம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்காலத்தில் இது அழிபாடுகளாகக் காணப்படுகிறது.

வீதிகள்

1680 களிலும், 1690 களிலும் வரையப்பட்ட சில இலங்கைப் படங்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வன்னிப்பகுதியிலும் இருந்த வீதிகள் குறித்துக் காட்டப்பட்டிருப்பதைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். அந்த நிலப்படங்களைப் பற்றி விளக்கியபோது வீதிகள் பற்றி அவை தரும் தகவல்களை மேலோட்டமாகப் பார்த்தோம். இங்கே அவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். (படம்-3)

jaffna old map

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்றுள்ள பெரும்பாலான வீதிகள் பிற்காலத்தில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டவை. ஒல்லாந்தர் காலத்தில் குறைவான வீதிகளே இருந்தன. அவற்றுள், மூன்று முக்கிய வீதிகளை மட்டுமே நிலப்படம் காட்டுகிறது. யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை வீதி, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணத்திலிருந்து தென்மராட்சி, பச்சிலைப்பள்ளியூடாகச் சுண்டிக்குளம் செல்லும் வீதி என்பனவே அவை. இன்னும் சில வீதிகள் இருந்திருக்கக்கூடும் எனினும், நிலப்படம் அவற்றைக் காட்டவில்லை.

வன்னிப் பகுதியில் இருந்த பல வீதிகளையும் நிலப்படம் காட்டுகிறது. இவற்றுள் பூனகரியிலிருந்து தென்கிழக்காகச் செல்லும் வீதியும், ஆனையிறவுக்கு எதிர்ப் பக்கத்தில் உள்ள குளவியாதன்குழி மடத்திலிருந்து தென்மேற்குத் திசையில் செல்லும் வீதியும் வலைவச்சபுலோ என்னும் இடத்தில் சந்திக்கின்றன. அங்கிருந்து ஒரு வீதி தெற்கு நோக்கி அனுராதபுரப் பகுதிவரை செல்கிறது. குளவியாதன்குழி மடத்திலிருந்து தொடங்கும் இன்னொரு வீதி, ஒட்டன்கட்டு, பனைநின்றகுளம், பழையமடு, ஒதியமலை, வேடன் ஆலங்குளம் ஆகிய இடங்களூடாகப் பழைய தென்னமரவாடி என்னும் இடத்துக்குச் செல்கிறது. தவிர, யாழ்ப்பாணத்திலிருந்து சுண்டிக்குளம் ஊடாக வன்னிக்குள் வரும் வீதி கிழக்குக் கரையோரமாகச் செல்கிறது. அனுராதபுரம் செல்லும் வீதியில் நெடுங்கேணியில் தொடங்கி, கிழக்கு நோக்கிச் செல்லும் ஒரு நீண்ட வீதி, பழைய தென்னமரவாடிக்குச் செல்லும் வீதியைப் பனைநின்றகுளத்தில் சந்திக்கிறது. பூனகரியிலிருந்து மேற்குக் கரையோரமாகத் தெற்கு நோக்கிக் கொழும்பினூடாகத் தென்னிலங்கைப் பகுதிக்குச் செல்லும் வீதியொன்றும் உள்ளது. இவை தவிரப் பல சிறிய வீதிகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன.

இந்நிலப்படத்தில் உள்ள கரையோர வீதிகள் தற்கால வீதிகளுடன் பெருமளவுக்குப் பொருந்தினாலும்,  வன்னியின் உட்பகுதியிலுள்ள வீதிகள் பல தற்கால வீதிகளுடன் பொருந்துவதாகத் தெரியவில்லை. பிற்காலத்தில் இப்பகுதியில் பல புதிய வீதிகள் அமைக்கப்பட்டதால் பழைய வலையமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவுக்கு ஊடாக வன்னியின் நடுப்பகுதியை ஊடறுத்துச் செல்லும் இன்றைய கண்டிவீதி 1850 ஆம் ஆண்டுக்குப் பின்னரே அமைக்கப்பட்டது. இவ்வீதியிலிருந்து கரையோரங்களை நோக்கிச் செல்லும் சில வீதிகளும் பிற்காலத்தவையே. இதனால் ஏற்கெனவேயிருந்த சில வீதித் தடங்கள் பயன்பாடற்றுப் போயிருக்கலாம். எனினும், இந்நிலப்படத்தில் வீதிகள் சரியான அளவீடுகளுக்கு அமைய வரையப்படவில்லையென்றே தோன்றுகிறது. அவ்வீதிகளை அண்டி அமைந்துள்ள சில ஊர்களும் அவற்றின் சரியான அமைவிடங்களிலிருந்து பெருமளவுக்கு விலகி இருப்பதைக் காணமுடிகிறது. வீதிகளினதும் ஊர்களினதும் அமைவிடங்களைக் குறித்ததில் துல்லியம் பேணப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.

புதிய யானை வீதி

1698 ஆம் ஆண்டின் நிலப்படத்தில் புதிய வீதியொன்று சேர்க்கப்பட்டதைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டோம். இந்த வீதியைப் புதிய யானை வீதி (Neiuwe Eliphantsweg) என்று தூர்சி குறிப்பிட்டுள்ளார். இந்த வீதியைச் சிவப்பு நிறத்தில் காட்டியுள்ளதாகவும் நிலப்படத்தில் குறிப்பு உள்ளது. இதன் அடிப்படையில் இவ்வீதி முசலி ஆற்றின் (அருவி ஆறு) தென் கரையில் தொடங்கி மேற்குக் கடற்கரைக்குச் சமாந்தரமாகத் தெற்கு நோக்கி மோதரகம் ஆற்றின் வடகரைவரை செல்கிறது. பின்னர் ஏற்கெனவே மேற்குக் கரையோரமாக உள்ள வீதிக்குக் கிழக்குப் பக்கமாக மோதரகம் ஆற்றங்கரையில் தொடங்கி வண்ணாத்திவில்லு என்னும் இடத்தைத் தாண்டிச் சென்று இன்னொரு வீதியுடன் இணைகிறது. இவ்வீதி படம்-4 இல் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

new elephant road

முசலி ஆற்றிலிருந்து மோதரகம் ஆறு வரையான இந்த வீதியின் பகுதி ஏற்கெனவே இருந்த வீதியை மேம்படுத்திப் பெறப்பட்டது. மோதரகம் ஆற்றுக்குத் தெற்கேயுள்ள இதன் எஞ்சிய பகுதி பழைய நிலப்படங்களில் இல்லை. எனவே அப்பகுதி 1690 களில் புதிதாக அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அக்காலத்தில், இலங்கையிலிருந்து யானைகளை ஏற்றுமதி செய்வதன்மூலம் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு நல்ல வருமானம் கிடைத்தது. இலங்கையின் பல பகுதிகளிலும் யானைகள் பிடிக்கப்பட்டன. 1690 களில் வரையப்பட்ட நிலப்படமொன்றில் மாத்தறைக்கு அண்மையில் கிரிவப்பத்து என்னும் இடத்தில் யானை பிடிக்கும் பகுதி குறித்துக் காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் தென்பகுதியில் யானைகள் பிடிப்பதற்கான முக்கியமான பகுதியாக இது விளங்கியது. காலி, மாத்தறை முதலிய பல தென்னிலங்கைப் பகுதிகளிலிருந்து ஏற்றுமதிக்காக யானைகள் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டதாக யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி சுவார்டெக்குரூன், 1697 இல் எழுதிய அறிக்கை ஒன்றில் தகவல் தந்துள்ளார்.6 யாழ்ப்பாணக் கட்டளையகத்தில் தமது நேரடி ஆளுகைக்கு உட்பட்டிருந்த மாதோட்டம், முசலி, பெருங்களி, பூனகரி ஆகிய பகுதிகளில் பணியாட்கள் மூலமாக ஒல்லாந்தர் யானைகளைப் பிடித்தனர். வன்னிச் சிற்றரசுகளிடமிருந்தும் யானைகள் திறையாகப் பெறப்பட்டன.7 இவை அனைத்தையும் ஊர்காவற்றுறையிலிருந்தே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். கோயில் விழாக்களில் பயன்படுத்தவும், பாரமான வேலைகளைச் செய்வதற்கும், போர்த் தேவைகளுக்கும் இந்தியாவின் பல பகுதிகளில் இலங்கை யானைகளுக்கான கேள்வி இருந்தது. தஞ்சாவூர், கோல்கொண்டா, வங்காளம் முதலிய பல்வேறு இடங்களிலிருந்து வரும் வணிகர்கள் அவற்றை வாங்கிச் செல்வர்.

தென்னிலங்கையில் பிடிக்கப்படும் யானைகளை ஊர்காவற்றுறைக்குக் கொண்டுவருவதற்காக, 1698 ஐ அண்டிய காலப்பகுதியில் மேம்படுத்தப்பட்ட வீதியே இந்த புதிய யானை வீதி ஆகும். தென்னிலங்கையிலிருந்து இவ்வீதியூடாக யானைகளை நடத்தி ஊர்காவற்றுறைக்குக் கொண்டுவரப் பல கிழமைகள் எடுத்ததாகத் தெரிகிறது.8 கொழும்பிலிருந்த ஒல்லாந்த ஆளுநரின் ஆணைப்படி இந்தப் புதிய யானை வீதியை அண்டிக் கிணறுகள் வெட்டப்பட்டதாகவும் அவற்றையும் குறித்துக் காட்டியுள்ளதாகவும் நிலப்படத்திலுள்ள குறிப்பிலிருந்து அறியமுடிகிறது. இவ்வழியால் கொண்டுவரப்படும் யானைகளுக்குத் தேவையான நல்ல நீரைப் பெறுவதற்காகவே இவை வெட்டப்பட்டிருக்கலாம். நிலப்படத்தில் இக்கிணறுகள் இரண்டு இடங்களில் உள்ளன.  ஒன்று மருதோடை என்னும் இடத்திலும், மற்றது பள்ளிக்கண்டல் என்னும் இடத்திலும் அமைந்துள்ளன. இவை உண்மையில் யாழ்ப்பாணக் கட்டளையகத்துக்குள் அடங்கவில்லை.

தென்னிலங்கையில் பிடிக்கப்படும் யானைகள் யாழ்ப்பாணத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டாலும், அதனால் யாழ்ப்பாணக் கட்டளையகத்துக்கு எவ்வித வருமானமும் கிடைப்பதில்லை. யாழ்ப்பாணக் கட்டளையகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் வன்னியிலும் பிடிக்கப்படும் யானைகளிலிருந்து வரும் வருமானமே யாழ்ப்பாணக் கட்டளையகத்தின் வருமானமாகக் கணக்கு வைக்கப்பட்டது.9

குறிப்புகள்

  1. Rob van Diessen and Bert Nelemans, Comprehensive Atlas of the Dutch United East India Company – IV Ceylon (Voorburg: Asia Maior/ Atlas Maior, 2010), 238.
  2. W. A. Nelson, The Dutch Forts of Sri Lanka, The Military Monuments of Ceylon (with updates by R. K. de Silva) (Colombo: Sri Lanka-Netherlands Association, 2004), 112.
  3. Nelson, The Dutch Forts of Sri Lanka, 114.
  4. Nelson, The Dutch Forts of Sri Lanka, 115.
  5. Johann Wolffgang Heydt, Heydt’s Ceylon, Being the Relevant Sections of the Allerneuester Geographisch- und Topographischer Schau-Plats,trans. Reven-Hart (Ceylon Government Information Department, 1952), –.
  6. Memoir of Hendrick Zwaardecroon, Commandeur of Jaffnapatam 1697, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1911), 5.
  7. Memoir of Hendrick Zwaardecroon, 5-6, 9-10.
  8. Diessen and Nelemans, Comprehensive Atlas, 238.
  9. Memoir of Hendrick Zwaardecroon, 5.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5967 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)