Arts
18 நிமிட வாசிப்பு

பறையிசைக்கும் மக்களின் குலதெய்வம் வல்லியக்கன்

March 8, 2024 | Ezhuna

பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது.

கருவிக்கையாட்சி, மொழிப்பயன்பாடு என்பவற்றின் வழி மனிதனின் பகுத்தறிவுச் சிந்தனை தொழிற்படத் தொடங்கியது. அப்போதே இயற்கையின் அதீத ஆற்றல் மனிதனுக்கு அதன் மீது பயத்தையும், பக்தியையும் உருவாக்கியது. தன்னை மீறிய மேம்பட்ட சக்தி உண்டு என்ற பிரக்ஞையும் நம்பிக்கைகயும் மேலோங்கத் தொடங்கின. இயற்கை மீதான பயபக்தி இயற்கை வழிபாடாகவும் பின் இயற்கைத் தெய்வ வழிபாடாகவும் பரிணாமமுற்றது. நிலத்தெய்வங்கள், குலதெய்வங்கள், அச்சத்தால் உருவாக்கப்பட்ட பல தெய்வங்கள் எனப் பல்வகைத் தெய்வங்கள் உருவாக்கம் பெற்றன. காலதேச வர்த்தமானத்திற்கேற்ப தெய்வங்களின் முதன்மையும் மாறத்தொடங்கியது. அவ்வாறு மாறாத, மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்த மரபார்ந்த தெய்வங்கள், நாட்டார்தெய்வங்கள், கிராமியத் தெய்வங்கள் எனப்பட்டன. 

காலனித்துவத்தின் வழி ஈழத்துப்புலத்தில் உருவான நவீனத்துவம், ஆங்கிலமயப்பட்ட, மேலைத்தேய கருத்தாக்கங்களையும், வாழ்வியலையும், கலாசார பண்பாடுகளையும் வியப்புடன் நோக்கி அவையே மேலானவை எனும் மனப்பதிவைத் தந்தன. அரச உத்தியோகம், மத்தியதர வர்க்கத்தைப் பெருகச் செய்தது. சுதேச கலை, கலாசாரம், பண்பாடு, பொருளாதாரம், தத்துவம், சமய மரபுகள் போன்றவற்றை கீழ்மையானவையாக எண்ணவும் புறமொதுக்கவும் செய்தன. பின்காலனிய உலகமயமாதல் சூழல், ஒற்றைப் பண்பாட்டை அவாவி நிற்கிறது. இது சிறுசிறு இனக்குழுக்களினது தனித்த அடையாளங்கள் சிதைவதற்கும், வரலாறற்றுப் போதலுக்கும் இருப்புச் சார்ந்த கேள்விகளுக்கும் உட்படுத்தலை அவதானிக்கச் செய்தன. இதன் வழி ‘மாற்றுச்சிந்தனை’ முதன்மையுறத் தொடங்கியது. பண்பாட்டுப் பன்மைத்துவத்தின் முக்கியத்துவம், சுதேச அறிவியல், சமயம், தத்துவம், கலாசார மரபுகளின் வழி வரலாறு பற்றிய பிரக்ஞை என்பன மீளக் கட்டமைக்கப்படத் தொடங்கின.   

மனிதனுக்கு உள்ளார்ந்த சிந்தனை (abstract thinking) தோன்றிய காலத்திலிருந்து இயற்கை சார் உணர்வு ஏற்பட்டது. அதன்வழி இயற்கை, வழிபாட்டுப் பொருளானது. இயற்கைப் பொருட்கள்  அனைத்தும் கடவுளர் ஆயின. இவ்வியற்கையின் சக்தியே இயக்கன்; இதனை சமூக மானிடவியலாளர்கள் ‘அனிமிசன்’ என்கின்றார்கள். இயற்கையின் கடவுளர் தன்மை இயக்கன் – இயக்கியாயின், இயக்கனும் இயக்கியும் கொடூரமும், அழகும், அன்பும் நிறைந்தவையாக எடுத்தாளப்படுகின்றன. இந்தியாவின் பிரதான சமயங்களான இந்து சமயம், பௌத்தம், சமணம் போன்றன இயக்கன் – இயக்கியை உள்வாங்கின. குறிப்பாக ஒரு கடவுளை முதன்மைப்படுத்தும் போது அது இயக்கர்களின் தலைவனாக – இயக்கிகளின் தலைவியாகக் காட்டப்பட்டது. சிவன் பூதநாதரானார். இலங்கையின் வரலாற்று நூல்களில் சிங்கதேசக் குடிமகனான விஜயன் இயக்கியாகிய குவேனியைத் திருமணம் செய்தமையும் தலைவனானமையும் இவ்வாறாகவே இருக்கலாம். 

தமிழர் மரபிலும் ஏனையோர் மரபிலும் இயக்கி பெற்ற இடத்தை இயக்கன் பெறவில்லை. அதேபோல இலங்கை வரலாற்றில் நாகர்கள் பெற்ற வரலாற்றுத்தடத்தை இயக்கர்கள் பெறவில்லை. விஜயனால் குவேனி கைவிடப்பட்ட பின் அவர்களின் குழந்தைகள் வளர்ந்து தகாப்புணர்ச்சி வழி குடும்பங்கள் உருவானதாகவும் அவர்களே வேடுவர்கள் எனப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இலங்கையின் ஆதிவேடர்களின் தெய்வம் ‘யக்கு’ என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் வாழ்வில் நிலமானியமுறையும் அதன்வழி கெடித்திருந்த சாதியமும் சமூகவியல் தளத்தில் முக்கியமானவை. தொழில்ரீதியான அடுக்குமுறை பேதத்தைத் இது தந்தது; கலை, பண்பாடு, பொருளாதாரம், சமயம் என எல்லாத் தளங்களிலும் செல்வாக்குச் செலுத்தியது. இதன் வழி சாதியத் தெய்வங்களும், சாதியக் கோயில்களும் உருவாகின. பறையிசைக்கும் குடிகளின் தெய்வமே வல்லியக்கன்.  

வல்லியக்கன்  

இயற்கை – இயக்க – இயக்கன் – இயக்கி வழிபாட்டின் வழி உருவான வழிபாடாக இதனை இனங்காண்பதோடு ‘யக்’ வழிபாட்டோடும் இணைத்து இத்தெய்வம் பற்றிய முதன்மை ஆய்வினைச் செய்த பேராசிரியர் இரகுபதி கருத்துரைக்கின்றார். இயற்கை வழிபாடு உலகப் பொதுமைக்குமானது. இயற்கை எனும் தமிழ்ச் சொல் இயற்கை வழிபாட்டைக் குறித்து, அது பின் இயக்க வழிபாடாக இயக்கன் – இயக்கி எனும் ஆண், பெண் வழிபாடாக வளர்நிலை பெற்றிருக்க வேண்டும். அதனை ‘யக்’ வழிபாட்டோடு இணைத்தல் அவசியமற்றது.  ‘வல்லியக்கன்’ எனும் பெயர் பற்றி பல்வகை அனுமானங்கள் உண்டு. 

  1. வல்லி – இயக்கன் – வல்லி எனும் பறையிசைக்கும் மக்களின் மூதாதையால் வழிபடப்பட்ட தெய்வம், வல்லியக்கன் எனக் கூறப்பெற்றிருக்கலாம். ஏனெனில் வல்லி, வல்லியப்பன் எனும் பெயர்கள் இன்றும் பறையிசைக்கும் மக்களிடம் செல்வாக்குடன் காணப்படுகிறது. வல்லியின் வழித்தோன்றல்கள் வல்லியக்கனை வழிபடுகின்றனர்.  
  1. வலிமை பொருந்திய இயக்கன் என்ற நம்பிக்கையின் வழி உருவான பெயராக இருக்கலாம். 
  1. வள்ளிபுனம் – வள்ளி புலம் – வல்லி புரம் வள்ளி – வல்லி எனும் அடிப்படையில் வல்லியின் தலைவன் முருகனைக் குறிப்பதாக எழுந்து பின்பு அது தனித்தெய்வமாக உருப்பெற்றிருக்கலாம். வள்ளி வேடுவர் பெண் என்பதும் இலங்கை வரலாற்றில் இயக்கர் வேடுவர்களாக சித்தரிக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது. 

ஈழத்தின் வல்லியக்கன் வழிபாட்டிடங்கள்

ஈழத்தில் பறையிசைக்கும் மக்கள் வாழுமிடங்கள் எங்கும் வல்லியக்கன் வழிபாடு இருந்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டாலும் அதற்குப் போதிய சான்றுகள் இல்லை.  

“கன்னாபுரம் நின்று அந்நாள் நடந்து  
அறிதரிய ஏழாலை அதில் மீதுறைந்து  
புன்னாலைக்கட்டுவன் அச்செழுகோப்பாய் புத்தூர்
நீர்வேலி வறுத்தலைவிளான் பளையிரண்டு  
மன்னார் சுழிபுரம் சங்கானை தோலவரம்  
மற்றுமுள்ள தேசமெல்லாங் கடந்து
சுன்னாகம் வாழவரு வல்லியக்கராசனை தொழுவார்க்கு  
வல்வினைநோய் தொலைந்து போகும்”

இப்பாடலை கிறிஸ்தவப் பாதிரியார் சுவாமி ஞானப்பிரகாசர் தன் கட்டுரையில் எடுத்தாண்டுள்ளார். ஏழாலை வல்லியக்கன் கோயில் பூசாரி வல்லியக்கன் ‘பத்தாசியாக’ கோயில் நிகழ்வுத் துண்டுப் பிரசுரத்தில் அச்சடித்து வெளியிட்டுள்ளார். இது வாய்மொழிப் பாடலாக இருந்திருக்க வேண்டும். 

இப்பாடல் ஈழநிலத்தின் வடபுலத்தில் வல்லியக்கன் கோயில் இருந்த இடங்களைப் பட்டியற்படுத்துகின்றது. கன்னாபுரம், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், அச்செழு, கோப்பாய், புத்தூர், வறுத்தலைவிளான், பளை இரண்டும், மன்னார், சுழிபுரம், சங்கானை, தொல்புரம், சுன்னாகம் என்பன அவையாகும். இவற்றுள் தெல்லிப்பழையில் ஆலயமுண்டு. கிளிநொச்சி மாவட்ட பளை, விடத்தற்பளை மற்றும் இயக்கச்சி பிரதேசங்களில் வல்லியக்கனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சங்கானை கோயில் அழிக்கப்பட்டுவிட்டது. அது போலவே தொல்புரம், சுழிபுரம், சுன்னாகம், மன்னார் கோயில்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குடிசனப் பரவலாக்கத்தின் வழி உருவான வேலணை சின்னமடு, நவாலி, சண்டிலிப்பாய், இருபாலை, அச்செழுவின் புதியகோயில் போன்றன கள ஆய்வினூடாகப் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.  

வல்லியக்கன் கோயில்கள் தனிக்காணிகளிலும் வீட்டு வளவுகளினுள்ளும் அமைந்துள்ளமை இது ஒரு குலதெய்வ வழிபாடு என்பதை உறுதிப்படுத்துகின்றது. கோயிலாக இல்லாமல் ஆலமரம், நாவல்மரம், மஞ்சவுண்ணா, பூவரசு போன்ற மரங்களின் கீழ் வல்லியக்கன் அமர்ந்திருந்தார். கல் – மயோசியன் கல் (வெள்ளைக்கல்) சூலம் போன்ற பருப்பொருட்களின் ரூபத்தில் அவர் வழிபடப்பட்டார். மரங்களின் கீழ் திறந்த வெளியிலும் சீமெந்துக் கட்டடங்களிலும் இக்கோயில்கள் அமைந்துள்ளன. இத்தெய்வத்தின் இணைத்தெய்வமாக முடி மன்னர் (கோண்டாவில், அச்செழு, ஏழாலை) காணப்படுகிறார். இதனை விட தற்காலத்தில் இணைத்தெய்வங்களாக காளி (நவாலி), விறுமர், ஐயனார் (கரவெட்டி) என்பன காணப்படுகின்றன.  

வழிபாட்டு முறைகள்  

வல்லியக்கனை வழிபடும் முறைகள் பிரதேச வழக்காறுகளுக்கேற்ப சிற்சில மாறுபாடுகளுடன் காணப்படுகின்றன. சில இடங்களில் நித்தம் ‘விளக்கு வைக்கும்’ வழக்கம் உண்டு. ஆனால் பல ஆலயங்களில் வெள்ளிக்கிழமை, விஷேட நாட்கள் போன்ற குறித்த நாட்களில் மட்டும் இவ்வழக்கம் காணப்படுகின்றது. எல்லாக் கோயில்களிலும் ‘வைகாசி விசாகம்’ மிகச்சிறப்பாகப் பொங்கல் வைத்துப் பூசித்து வழிபடப்படும் நாளாகக் காணப்படுகிறது. நாட்டார் தெய்வங்களுக்குப் பொதுவில் வைகாசி விசாகதினம் குளித்தியாக, பொங்கல் நாளாக, மடை நாளாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதன்னின்றும் மாறுபட்டு ஏழாலை வல்லியக்கனுக்கு சித்திரை மாத நான்காவது புதன்கிழமை விஷேடநாளாகக் கருதப்பட்டு மடைப்பண்டம் எடுக்கப்பட்டு பொங்கி வழிபடப்படுகின்றது. கரவெட்டி கோயிலில் பங்குனி கடைசிப்புதன் விஷேடநாளாகும். மடைப்பண்டம் எடுக்கும் மரபு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. மடைப்பண்டம் எடுக்கும் முதல்நாள் ஆலயச்சூழல் தூய்மைப்படுத்தப்படும். ‘விளக்கு வைத்தல்’ நிகழும். விளக்கு வைப்பவர், பூசை செய்பவர் பறையிசைக்கும் மக்களில் ஒருவராக இருப்பார். இந்நிகழ்வின் பூசாரியாக அவர் திகழ்வார். ஆனைக்கோட்டை போன்ற சில கோயில்களில் வாய்கட்டிப் பூசை செய்யும் முறைமையும் உண்டு. இது கப்புறாளை (கதிர்காமம்), கப்பூகர் (மண்டூர்க்திர்காமம், செல்வச்சந்நிதி) எனும் வாய்கட்டி பூசை செய்யும் முறையின் செல்வாக்கால் வந்திருக்கக் கூடும்.

kappuralai

பொங்கலுக்கு உரிய பண்டங்கள், பாத்திரங்கள் இணைத் தெய்வங்களின் ஆலயங்களில் வைத்துப் பூசை செய்யப்பட்டு புனிதப்படுத்தப்பட்டு வல்லியக்கன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். மடைப்பண்டம் கொண்டுசெல்லப்படும் போது மடைப்பறை இசைக்கப்படும். ஆலயங்களின் நிகழ்வுகளுக்கு இசைக்கவெனத் தனிப்பறையும் தனியான ‘இசைப்பு’ முறையும் கலைஞர்களும் இருந்ததாக அறியமுடிகிறது. இது மங்கல இசையாக, பறை சாற்றுதலாகக் கூறப்படுகிறது. பலியிடும் வழக்கம் இருக்கவில்லை என எல்லா ஆலயக்காரர்களும் உறுதிபட உரைக்கின்றனர். கரவெட்டி கோயிலில் மட்டும் ஆலயத்துக்கு அப்பால் உள்ள சந்தியில் வைத்து மடைப்பண்டம் எடுப்பதாகவும் மடைப்பண்டம் எடுக்கும் போது ‘கோழியறுத்தல்’ எனும் பலி நிகழ்த்தப்படுவதாகவும் நேர்காணல் (சி.அருணகிரிநாதன், வயது 61) மூலம் அறிய முடிந்தது. வல்லியக்கனை வழிபடுதலினூடாக சந்ததி பெருக்கம், நோய் நொடியில் இருந்து விடுபடுதல் போன்ற நம்பிக்கைகள் காணப்படுகின்றன. தமது நேர்த்தி நிறைவுறும் போது நேர்த்திக்கடன் செலுத்தும் முறை காணப்படுகிறது. இது ‘தெய்வக்கடன்’ என்றே கூறப்படுகிறது. பொங்குதல், மடைபரவுதல் போன்றன அவற்றுட்சில. மட்சம், மாமிசம் படைப்பதில்லை. தற்போது காவடியெடுத்தல் போன்றனவும் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வாலய விஷேடதினங்களில் கலையாடி, குறிசொல்லல், திருநீறு போடுதல் போன்றனவும் நிகழ்த்தப்படுகின்றன.  

சமகாலப் பயில்வுகள் 

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி மிகவும் நசுக்கப்பட்ட நிலையில் தமது பொருளாதாரத்துக்கு மூலமாக இருந்த பறையை 1950 – 1970 இடையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வின் வழி உடைத்தும் எரித்தும் ‘இனி பறை இசைப்பதில்லை’ எனச் சபதம் செய்து ஈழத்தின் வடக்குப் பிரதேசத்தில் பல பிராந்தியங்களில் பறையிசைக்கும் தொழில் கைவிடப்பட்டது. பெருந்தெய்வவுருவாக்கம் – பெருங்கோயிற் பண்பாடு, சமஸ்கிருதமயமாக்கம் எனும் பிராமணர்க்குக் தம் கோயிலைக் கையளிக்கும் செயற்பாட்டின் வழி ஆலயங்களில் பறை வாத்தியம் வெளியேற்றப்பட்டு தவில் மங்கல வாத்தியமாக்கப்பட்டது. கிழக்கிலும் மலையகத்திலும் இன்றும் ஆலயங்களில் பறை ஓரளவேனும் இசைக்கப்படுகிறது. வடக்கில் செல்வச்சந்நிதி போன்ற ஒருசில ஆலயங்களில் பறையிசைக்கும் மக்களின் குலமல்லாத இறையடியவர் பறை ‘அறை’கிறார்.   

vallipuram

இவ்வாறான செயற்பாடுகளும் இலங்கையின் யாவருக்குமான இலவசக்கல்வி, இலவச உணவு, இலவச உடை, இலவச வைத்தியசாலை போன்ற செயற்றிட்டங்களும் எல்லாச் சமூகங்களையும் வலுப்படுத்தியது. அரசாங்க உத்தியோகத்தர்களை, நிலையான மாதச்சம்பளம், ஓய்வூதியம் பெறுகின்றவர்களை உருவாக்கியது. இவ்வாறு உருவான புதிய வர்க்கம் , உயர்சாதியல்லாத மக்களிடம் ‘சாதிய நீக்கம்’ – உறவு நீக்கம், அடையாள நீக்கம் எனும் உணர்வுகளை செயல்நிலைப்படுத்தத் தூண்டியது. இதற்கு பறையிசைக்கும் மக்களின்  படித்தவர்க்கமும் தப்பவில்லை. தம் குலமக்கள் இருந்த இடங்களை விட்டு நகரங்களையும் வேறு நிலங்களையும் நோக்கிப் பெயர்ந்தனர். குல தெய்வங்களைக் கைவிட்டனர்.  

இதன்வழி வல்லியக்கன், ‘சைவம் அகலக்காலூன்றி நின்ற நிலத்தில்’ வல்லிபுரத்தாழ்வார் ஆயினார். தாமே பூசைசெய்து வழிபட்ட வல்லியக்கனை பெருங்கோயில் வழி கட்டமைக்க முற்பட்டு சீதாராமசாஸ்திரிகளை நாடிய போது ‘வல்லி’ எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு கோண்டாவில் வல்லியக்கனை வல்லிபுர ஆழ்வாராக மாற்றினார். அக்கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ந்து பிராமணர் கோயிலாக்கப்பட்டது (பறையிசைக்கும் மக்கள் கருவறைக்குள் செல்லுதல் தடைப்பட்டது). இதன் வழி, தாம் மேற்சாதியானதாக அம்மக்கள் நம்புகின்றனர். இவ்வழி, வேலணை சின்னமடு வல்லியக்கன், நாராயணர் – கிருஷ்ணனாக மாற்றப்பட்டுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டு இரகுபதி, யாழ்ப்பாண சைவ உயர் சாதியினருக்கு எதிரான வைணவராக வல்லியக்கன் வழி பறையிசைமக்கள் மாறுவதாகவும், இதில் அம்பேத்கார் சிந்தனையின் சாயல் இருக்கக்கூடும் என்றும் கூறுகிறார் (இரகுபதி, பொ., 2006, பக்22 – 23). ஆனால் அச்செழுவிலுள்ள வல்லியக்கன் கடந்த 2021 ஆம் ஆண்டில் சிவபெருமானாக மாற்றப்பட்டுள்ளமை இக்கருத்துக்கு மாறானதாக, அம்பேத்கார் வழி சிந்திக்காது ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்க வழி நின்றதையே காட்டுகின்றது. இவ்வாறான மேனிலையாக்கங்கள் பிராமணரை முதன்மைப்படுத்துகிறது. மக்களை வெளித்தள்ளுகிறது. மடைப்பண்டம் எடுத்தல், மடைப் பறையிசைத்தல் முதலான பாரம்பரிய முறைகள், கலைகள், நம்பிக்கைகள் புறந்தள்ளப்பட்டு இல்லாதொழிக்கப்படுகிறது.  

selachanithi

சீமெந்துக் கற்களால் கட்டப்படட் வல்லியக்கன் கோயில்களில் விஷ்ணுவின் சங்குசக்கரம் (ஆனைக்கோட்டை) பிள்ளையார், முருகன் (சண்டிலிப்பாய்), விறுமர், ஐயனார் (கரவெட்டி) போன்ற சின்னங்கள், தெய்வங்கள் இடம்பிடித்து வருதலையும் சமஸ்கிருதமயமாதலுக்கான வெளி அண்மிப்பதையும் அவதானிக்க முடிகிறது. பறையிசை என்பது இருமரபுக் கோயில்களிலும் இல்லை என்பதும் கோயிற்பறை இல்லாது ஒழிந்து போனதையும் சாவுப்பறை வாசிப்பவர் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருத்தலையும் அதுவும் தன் கலைப்பெறுமானத்தை இழந்து வருதலையும் சாவுப்பறையின் இடத்தை ‘பாண்ட்’ (Band) வாத்தியம் ஆக்கிரமித்து வருதலையும் அவதானிக்க முடிகிறது. பெரும்பாலான பறையிசைக்கும் மக்கள் சாதிய – தன்னடையாள நீக்கத்திற்காகவும் வேறுசில நம்பிக்கைகள், தேவைகள் என்பனவற்றுக்காகவும் கிறிஸ்தவத்திற்கு (குறிப்பாக புரட்டஸத்தாந்தம்) மாறிவருகின்றனர். ஆதிதிராவிடர்களுக்கான அடையாளங்கள், தெய்வங்கள், வழிபாட்டுமுறைகள், கலைகள் கைவிடப்படுகின்றன. சமாந்தரமாக, தமிழர் வரலாறு சிதைவுறுதலும் நிகழ்கிறது.  

நிறைவுரை   

பறையிசை இசைக்கும் கலைஞர்கள் சாதிய ஒடுக்குமுறையினின்றும் தாழ்வு மனப்பாங்கில் இருந்தும் விடுதலை பெற அவாவிநிற்றலின் வழி தன்னடையாளத்தைத் துறத்தல் நிகழ்கிறது. அதன் ஒரு அங்கமாக, ஈழத்தமிழர்களில் ஒரு பிரிவினரான ஆதித் தமிழர்களாக அடையாளப்படுத்தப்படும் பறையிசைக்கும் மக்கள், தம் குலதெய்வமான வல்லியக்கனை நாராயணனாகவும் சிவனாகவும் மாற்றி பெருந்தெய்வவழிபாட்டினுள்ளும் சமஸ்கிருதமயமாதலினுள்ளும் கலக்கச்செய்து மேனிலையாக்கம் பெற முயற்சிக்கின்றனர். வல்லியக்கனைக் கைவிடுகின்றனர். தம் சமயம் துறந்து கிறிஸ்தவத்திற்கு மாறி புது அடையாளத்தை உருவாக்குகின்றனர். உலகமயமாதலுள் ஒன்ற முற்படுகின்றனர். வரலாற்றாசிரியர்கள் ஈழத்தில் தமிழர், நாகர் வழி வந்தவர்கள் எனக் கூறுகின்றனர். இயக்கர் வரலாறு குவேனி வழி வேடுவருள் தொலைக்கப்பட்டது. இயக்கரை – வல்லியக்கரை வழிபடும் வழிபாட்டின் வழி தமிழர் வரலாற்றைச் சீரமைக்க வாய்ப்புள்ளது. அத்தோடு ஈழத்தில் மட்டுமே வல்லியக்கன் வழிபாடு நிலவி வருதலும் கவனத்திற்குரியதாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8190 பார்வைகள்

About the Author

தி. செல்வமனோகரன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் சைவசித்தாந்த துறையின் முதுநிலை விரிவுரையாளராக தி. செல்வமனோகரன் திகழ்கிறார் . இந்திய மெய்யியல் கற்கை புலத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றுள்ளார். இந்துக்கற்கை புலம் சார்ந்து காஷ்மீர சைவமும் சைவ சித்தாந்தமும், இலங்கையில் சைவத்தமிழ் பண்பாட்டு வளர்ச்சியில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, நாயன்மார் பாடல்கள், தமிழில் மெய்யியல் எனும் நூல்களை எழுதியுள்ளார். பெறுதற்கரிதான இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மீள்பதிப்புச் செய்துள்ளார். 'சொற்களால் அமையுலகு' என்னும் இவரது நூல் கலை, இலக்கியம் சார்ந்த விமர்சன நூலாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)