Arts
13 நிமிட வாசிப்பு

சிப்பிரியானோ சான்செசின் இலங்கை நிலப்படம்

May 23, 2023 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

இத்தொடரின் முந்திய பகுதியில்  இலங்கையைக் காட்டும் மிகப் பழைய நிலப்படத்தில் இலங்கையின் வட பகுதி தொடர்பாகக் காணப்படும் தகவல்களைக் குறித்துப் பார்த்தோம். இந்தப் பகுதியிலே சில குடியேற்றவாதக்கால இலங்கைப் படங்களில் பொதுவாக இலங்கையின் வடபகுதி பற்றியும் குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசம் தொடர்பாகவும் காணப்படும் தகவல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கால இலங்கை நிலப்படங்கள்

சிப்பிரியானோ-சான்செஸ்-வரைந்த-இலங்கையின்-நிலப்படம்

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொலமி திரட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட இலங்கையின் நிலப்படத்துக்குப் பின்னர், இலங்கையைப் பற்றிய புதிய தகவல்களைப் பயன்படுத்தி வரையப்பட்ட நிலப்படங்கள் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. 1500 களின் தொடக்கத்தில் முதன் முதலாக இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயர், படிப்படியாக இலங்கைபற்றிய தமது அறிவை வளர்த்துக்கொண்டனர். அந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் பின்னர் அவர்கள் இலங்கையின் நிலப்படங்களை வரைந்ததாகத் தெரிகிறது. இன்று நமக்குக் கிடைக்கும் இவ்வாறான நிலப்படங்களில் காலத்தால் முந்தியது  1580-1590 காலப் பகுதியில் சிப்பிரியானோ சான்செஸ் (Cypriano Sanchez) என்பவரால் வரையப்பட்ட நிலப்படமாகும். (படம்-1) இன்று எமக்குக் கிடைக்கின்ற சான்செசின் நிலப்படத்தோடு தொடர்புடைய குறிப்புகளின்படி குறித்த நிலப்படம் அவரது மூல நிலப்படத்தை அடிப்படையாகக் கொண்டு கிறிஸ்தவ மதகுருவான “பெட்ரஸ் பிளனிக்கஸ்” என்பவருக்காக வரையப்பட்டது. பிளனிக்கஸ் இப்படத்தை நிலப்படங்களைத் தயாரித்து வெளியிடும் “ஜெரார்டஸ் மேக்கார்ட்டர்” என்பவருக்கு வழங்க அது அவருடைய புகழ் பெற்ற நிலப்படத் தொகுப்பில் 1606 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியானது.1 சான்செஸ் ஒரு இஸ்பானியர் என்றும் போர்த்துக்கேயர் என்றும் வேறுபட்ட கருத்துகள் உள்ளன.

இந்நிலப்படத்தில் தீவிலுள்ள பல அம்சங்கள் இலகுவாக அடையாளம் காணத்தக்கனவாகவும் அவற்றின் அமைவிடங்கள் குறிப்பிடத்தக்க துல்லியத்துடனும் உள்ளன. இந்த நிலப்படம் இலங்கைத் தீவை ஒழுங்கற்ற ஐங்கோண வடிவம் கொண்டதாகக் காட்டுவதுடன், தாளில் கிழக்கு மேல்நோக்கி இருக்குமாறு வரையப்பட்டுள்ளது.

16 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் அரசியற் பிரிவுகள்

இந்த நிலப்படம் அக்காலத்தில் இலங்கையிலிருந்த அரசியற் பிரிவுகளைப் பெயர் குறித்துக் காட்டுகிறது. மொத்தம் ஒன்பது பிரிவுகள் உள்ளன. இவை கோட்டே, யாழ்ப்பாணம், கண்டி, சீதாவாக்கை, திருகோணமலை, மட்டக்களப்பு, பதினேழு கோறளை, சிலாபம், யால என்பவை. கோட்டேயைப் பேரரசு (Imperio) எனக் குறிப்பிடும் இந்நிலப்படம், ஏனைய தனி அரசியல் பிரிவுகளை இராச்சியம் (Reino) என்கிறது. தென்பகுதியில் உள்ள யால இராச்சியம் 300 ஆண்டுகளுக்கு முன்னரே உடல் நலத்துக்கு ஒவ்வாத சூழல் காரணமாக மக்களால் கைவிடப்பட்டுக் காடாய்ப் போனது என்ற குறிப்பும் உள்ளது.  எனவே சான்செசின் நிலப்படத்தில், அதன் காலத்தில் இலங்கைத் தீவில் இருந்ததாக எட்டு அரசியற் பிரிவுகள் காட்டப்பட்டுள்ளன. இன்றைய வன்னிப் பகுதி எந்த இராச்சியத்தில் அடங்கியது என்று நிலப்படம் தெளிவாகக் காட்டவில்லை. வன்னிப் பகுதி பற்றிச் சான்செசுக்குப் போதிய தகவல்கள் இல்லாதிருந்தது இதற்குக் காரணமாகலாம்.

கோட்டே ஆட்சியாளர்கள் இலங்கை முழுவதற்கும் உரிமை கோரினர். கோட்டே இராச்சியத்தின் உரிமை போர்த்துக்கேயருக்குக் கையளிக்கப்பட்ட பின்னர் அவர்களும் இலங்கையிலிருந்த எல்லா இராச்சியங்களும் கோட்டேயின் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவை என்றே கருதிவந்தனர். போர்த்துக்கேயர் காலத்து நூல்களிலும் இந்தக் கருத்தையே காண முடிகிறது. இந்தக் கருத்தை அடியொற்றியே சான்செசும் தனது நிலப்படத்தில் கோட்டேயைப் பேரரசு எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலப்படம் வெளியான “மேக்கார்ட்டர்” நிலப்படத் தொகுப்பில் பின்வரும் குறிப்பு உள்ளதாகத் தெரிகிறது:

“முற்காலத்தில் இங்கே ஒரு அரசனே ஆட்சிசெய்தான். பிற்காலத்தில் ஆட்சியுரிமை பல இளவரசர்களுக்கிடையே பிரிக்கப்பட்டது. இவர்கள் வஞ்சனையால் கொல்லப்பட்டனர். இப்போது ஒன்பது அரசர்கள் உள்ளனர். இவர்களுள் பலம் வாய்ந்தவன் கொழும்பின் ஆட்சியாளன் (Columusi). அவனுக்கு மற்றவர்கள் திறை செலுத்துகின்றனர்.”2

இந்தக் கூற்றுக்குச் சான்றுகள் எதுவுமில்லை. உண்மையில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளின் ஆட்சியுரிமை மாற்றங்கள் இங்கே குறிப்பிட்டிருப்பதுபோல் எளிமையானவை அல்ல. சோழர், பாண்டியர், கலிங்க மாகன், சாவகன் முதலியோரின் படையெடுப்புகளூடாக ஆட்சியுரிமை மாற்றங்களும் புதிய அரச வம்சங்களும் உருவாகின. இலங்கையில் அரசுரிமை மாற்றங்களின் வரலாறு சிக்கலானது. குறிப்பாக வட பகுதியின் ஆட்சியுரிமை வரலாறு இன்னும் தெளிவாக அறியப்படாதது. கோட்டே அரசனிடம் அரசுரிமையை எழுதி வாங்கிக்கொண்ட போர்த்துக்கேயர், இலங்கை முழுவதையும் கைப்பற்றும் தமது நோக்கத்தை நியாயப் படுத்த இவ்வாறான கருத்துகளைப் பயன்படுத்த முயன்றனர் என்றே கருதவேண்டியுள்ளது.

சான்செஸ் இந்த நிலப்படத்தை வரைந்த காலத்தில் கோட்டே இராச்சியம் போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன் 1560 ஆம் ஆண்டில், அவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது படையெடுத்து யாழ்ப்பாணக் குடாநாட்டையும் அதை அண்டியுள்ள தீவுகளையும் மன்னார்த் தீவையும் கைப்பற்றி மூன்று மாதங்கள்வரை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இக்காலப்பகுதியில் யாழ்ப்பாண அரசன் முதலாம் சங்கிலி, போர்த்துக்கேயரின் கீழ், சிற்றரசனாக இருக்க இணக்கம் தெரிவித்து ஒரு ஒப்பந்தம் செய்திருந்தான். மூன்று மாதங்களின் பின்னர் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை விட்டுத் துரத்தப்பட்டனர்.3 ஆனாலும் மன்னார்த் தீவு போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.  அங்கே அவர்கள் ஒரு கோட்டையையும் அமைத்திருந்தனர். எனவே அவர்களுக்கு மன்னார்த் தீவைப் பற்றிப் போதிய அறிவு இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு பற்றி ஓரளவு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், வன்னியைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

யாழ்ப்பாணக் குடாநாடும் அதை அண்டிய தீவுகளும்

தொலமியின் நிலப்படத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு உள்ளதா இல்லையா என்பது சர்ச்சைக்கு உரியதாக இருப்பது பற்றி ஏற்கனவே பார்த்தோம்.  சான்செஸ் வரைந்த நிலப்படம் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் அதன் அருகே அமைந்துள்ள சில தீவுகளையும் தெளிவாகவே காட்டுகிறது. ஆனால், அவற்றின் வடிவமும் அமைவிடங்களும் வேறு சில அம்சங்களும் துல்லியமாக இல்லை. யாழ்ப்பாணக் குடாநாடு இருப்பதைத் தெளிவாகக் காட்டும் முதல் நிலப்படமாக இதனைக் கொள்ளலாம். இப்படத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு ஏறத்தாழ ஒரு முக்கோண வடிவத்தில் காணப்படுகின்றது.  யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் வன்னிப் பெருநிலப்பரப்புக்கும் இடையிலுள்ள கடல்நீரேரி ஒரு ஆறு போலவே வரையப்பட்டுள்ளது. இதனால், யாழ்ப்பாணக் குடாநாடும் வன்னியும் ஒரே நிலப்பரப்புப் போலத் தோற்றமளிக்கிறது.  

யாழ்ப்பாணக் குடாநாட்டை அண்டிச் சில தீவுகளும் காணப்படுகின்றன. இவற்றுள் நான்கு தீவுகளுக்குப் பெயர்கள் குறித்துள்ளனர். இவை பெரிய தீவு (Ilha Grande), ஆட்டுத் தீவு (Ilha das Cabras), ஃபோர்காடொஸ் தீவு (Ilha dos Forcados), பசுத் தீவு (Ilha das Vacas) என்பன. இவற்றைத் தற்காலப் பெயர்களுடன் அடையாளம் காண முடியாவிட்டாலும், வேறு ஆவணங்களிலிருந்து பசுத் தீவு என்பது நெடுந்தீவைக் குறிக்கிறது என அறியலாம். “ஃபோர்காடொஸ்” தீவு புங்குடுதீவையும்“ ஆட்டுத் தீவு எழுவை தீவையும் குறிக்கக்கூடும். பெரிய தீவு என்பது அதன் அளவில் அடிப்படையில் இன்றைய வேலணைத் தீவைக் குறிக்கிறது எனத் துணியலாம். காரைதீவு (இன்றைய காரைநகர்) தனித் தீவாக அல்லாமல் குடாநாட்டுடன் இணைந்து காணப்படுகிறது.

சான்செசின்-நிலப்படத்தில்-யாழ்ப்பாணக்-குடாநாடும்-தீவுகளும்-வன்னியின்-ஒரு-பகுதியும்

யாழ்ப்பாணக் குடாநாட்டைக் குறிக்கும் பகுதிக்குக் குறுக்கே “யாழ்ப்பாண இராச்சியம்” என எழுதப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் ஓரிடத்தில் கோட்டை (Fortaleza) என்ற குறிப்பும் உள்ளது. (படம்-2) குடாநாட்டுக்குள் வீதிகளையோ அடையாளங் காணத்தக்க பிற அம்சங்களையோ வரைபடம் காட்டாததால், மேற்படி கோட்டையின் அமைவிடத்தைத் தெளிவாக அறிய முடியாது. இவ்வரைபடம் வரையப்பட்ட காலத்தில் போர்த்துக்கேயரின் கோட்டை எதுவும் இப்பகுதியில் இல்லை. அக்காலத்தில், நல்லூரிலும் கோப்பாயிலும் கோட்டைகள் இருந்துள்ளன.4 எனவே, படத்தில் குறித்துள்ளது இவ்விரண்டில் ஒன்றாக இருக்கக்கூடும்.

கோட்டே இராச்சியப் பகுதியில் பல ஊர்களைப் பெயர் குறித்துக் காட்டும் இந்த நிலப்படம், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் ஊர்கள் எதையும் குறித்துக் காட்டவில்லை. தலைநகரமான நல்லூரின் பெயர்கூட இல்லை. பொதுவாகப் பனந்தோப்பு, பற்றைக் காடு முதலிய குறிப்புகளே உள்ளன. இந்நிலப்படம் குளங்களைச் செவ்வக வடிவில் காட்டுகிறது. குடாநாட்டுக்குள் ஒரேயொரு குளத்தையே நிலப்படத்தில் காணமுடிகிறது.

யாழ்ப்பாணப் பிரதேசத்துத் துறைகள்

அதேவேளை, 1560 ஆம் ஆண்டின் போரைப் பற்றிக் கோட்டு, கேரோஸ், டிரினிடாட் ஆகிய போர்த்துக்கேய வரலாற்று எழுத்தாளர்கள் தந்துள்ள தகவல்களிலிருந்து ஊர்காவற்றுறை, கொழும்புத்துறை, பண்ணைத்துறை, பருத்தித்துறை ஆகிய இடங்களில் துறைகள் இருந்ததை அறிய முடிகின்றது. அத்துடன், போர்த்துக்கேயப் படைகள் யாழ்ப்பாணத்தில் எங்கே தரையிறங்குவது என்பது தொடர்பில் இடம்பெற்ற ஆலோசனைகள் பற்றி விவரமாக எழுதியுள்ள கேரோஸ் பாதிரியார், யாழ்ப்பாணத்தில் தரையிறங்க வசதியான இரண்டு துறைமுகங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.5 இவை கொழும்புத்துறையும் ஊர்காவற்றுறையும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இதிலிருந்து, அக்காலத்தில் மேற்படி துறைகளைப் பற்றிப் போர்த்துக்கேயர் அறிந்திருந்தனர் என்பது தெளிவாகிறது. ஆனால், மேற்படி துறைமுகங்கள் எதையும் நிலப்படம் குறித்துக் காட்டவில்லை. எனினும், இலங்கையிலிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு யானை ஏற்றுமதி செய்வதற்குப் பயன்பட்ட “யானைத்துறை” யைச் சான்செஸ் பெயர் குறித்துக் காட்டியுள்ளார். இதை அவர் காரைநகரில் குறித்துள்ளார். ஆனால், கேரோஸ் பாதிரியார் தனது நூலில் யானைத்துறை வேலணைத் தீவின் பகுதியான ஊர்காவற்றுறையில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.6 மேலே குறிப்பிட்ட மூலங்களுள் ஒன்று யானைத்துறையின் அமைவிடத்தைத் தவறாகக் குறித்துள்ளதா அல்லது கேரோசின் நூல் சான்செசின் நிலப்படத்துக்கு ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்குப் பிற்பட்டது என்பதால், இடைக்காலத்தில் யானைத்துறையின் அமைவிடம் மாற்றப்பட்டதா என்பது தெளிவில்லை.

மன்னார், வன்னிப் பகுதிகள்

மன்னார்த் தீவு, அதற்கு அண்மையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடங்களான குதிரைமலை, காரைதீவு என்பவற்றை நிலப்படம் பெயர் குறித்துக் காட்டுகிறது.  நிலப்படம் வரையப்பட்ட காலத்தில் இப்பகுதிகள் போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததால், அங்குள்ள இடப் பெயர்களைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர் எனலாம். ஆனாலும், அங்கிருந்த கோட்டை, தேவாலயம் போன்றவற்றை நிலப்படம் காட்டவில்லை.

வன்னிப் பகுதியில் இருந்த ஊர்ப் பெயர்கள் எதுவும் நிலப்படத்தில் இல்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் காட்டியது போல, பற்றைக் காடுகள், பாலை நிலங்கள் முதலிய பொதுவான புவியியல் அம்சங்களின் பெயர்களே உள்ளன. இப்பகுதியிலும் சில குளங்கள் உள்ளன. இரண்டு குளங்களுக்கு அருகே யானைகள் நீரருந்தும் குளங்கள் என்ற குறிப்புகளும் காணப்படுகின்றன.

இப்பகுதிக்குள் பாதைகள் அல்லது வீதிகளைப் புள்ளிக் கோடுகளால் படம் காட்டுகிறது. இவை எந்த அளவுக்குத் துல்லியமானவை என்பது தெரியவில்லை. இவற்றுள் மன்னாருக்கு அண்மையிலுள்ள ஓரிடத்திலிருந்து மேற்கு-கிழக்காக முல்லைத்தீவுக்கு அண்மையிலுள்ள ஒரு ஆறு வரை செல்லும் ஒரு பாதை “அரச பாதை” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான விளக்கம் தெரியவில்லை.

சில சமகால வரலாற்று நிகழ்வுகளின் தாக்கம்

இந்த நிலப்படத்தில் 1560 போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தின்மீது  படையெடுத்த வரலாற்றோடு தொடர்புடைய சில அம்சங்களும் காணப்படுகின்றன.  இப்படையெடுப்புக்குத் தலைமை தாங்கியவன் கோவாவிலிருந்த போர்த்துக்கேய அரசப் பிரதிநிதி டொன் கொன்ஸ்டன்டீனோ டி பிரகன்சா என்பவன். யாழ்ப்பாணக் குடாநாட்டை வன்னியிலிருந்து பிரிக்கும் கடல்நீரேரியை ஆறாகக் கருதி அதற்கு “டொன் கொன்ஸ்டன்டீனோ ஆறு” என்ற பெயர் நிலப்படத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

நிலப்படத்தின் சில இடங்களில் காட்டுப் பன்றி, மரை, நரி, யானை முதலிய விலங்குகளின் படங்கள் உள்ளன. பொதுவாக இவற்றுக்குப் பொருள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அழகுக்கும், வெளியிடங்களை நிரப்புவதற்குமாகவே பெரும்பாலும் இவை பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், வன்னிப் பகுதியில் ஒரு யானையும் அதன் மேல் பயணம் செய்யும் ஒரு மனிதனையும் காட்டும் படம் சற்று வேறுபட்டது. மேற்படி மனிதன் நல்ல உடையுடன், தலையில் முடியும் அணிந்திருப்பதைக் காண முடிகிறது. கையில் ஈட்டியும் உள்ளது. (படம்-3) இதிலுள்ள மனிதன் குறிப்பாக யாரையாவது குறிக்கக்கூடும் என்றும், இப்படத்துக்கு ஏதாவது பொருள் இருக்கலாம் எனவும் கருதப்பட்டது.  

1560 ஆம் ஆண்டில் பிரகன்சா தலைமையில் வந்த போர்த்துக்கேயப் படைகள் நல்லூரைக் கைப்பற்றிய பின்னர், யாழ்ப்பாண அரசன் முதலாம் சங்கிலி வன்னிக்குள் தப்பிச் சென்றான். அரசனைத் துரத்திச் சென்ற போர்த்துக்கேயப் படைப்பிரிவினர் வன்னிக்குள் அரசன் யானையில் பயணம் செய்ததைக் கண்டதுபற்றிய குறிப்பு போர்த்துக்கேயப் பாதிரியாரான கோட்டு, கேரோஸ் ஆகியோர் எழுதிய நூல்களில் உள்ளது.7 நிலப்படத்தில் யானைமீது பயணம் செய்யும் மனிதனின் படம் இந்த நிகழ்வைக் குறிக்கக்கூடும் என்றும், யானைமீது இருப்பது முதலாம் சங்கிலி மன்னனாக இருக்கலாம் என்றும், டியோகூ டூ கோட்டு என்பவரது நூலை மொழிபெயர்த்த டொனால்ட் பெர்கூசன் என்பவர் கருதுகிறார். 8    

மேற்படி அம்சங்கள், யாழ்ப்பாண இராச்சியம் தொடர்பிலான 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுத் தகவல்களை நிலப்படத்தை வரைந்த சான்செஸ் அறிந்திருந்தார் என்பதைக் காட்டுகிறது.

அடிக்குறிப்புகள்

  1. Rob van Diessen and Bert Nelemans, Comprehensive Atlas of the Dutch United East India Company – IV Ceylon (Voorburg: Asia Maior/ Atlas Maior, 2010), 28.
  2. Dennis N. Fernando, “Peninsular Jaffna from Ancient to Medieval Times: Its Significant Historical and Settlement Aspects”, Journal of the Royal Asiatic Society of Sri Lanka, New Series, Vol. 32 (1987/88), 67.
  3. Fernao De Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon vol I, trans. S. G. Perera (New Delhi: Asian Educational Services, 1992), 369-376.
  4. Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon vol I, 359.
  5. Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon vol I, 353.
  6. Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon vol I, 55.
  7. Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon, 368-369.
  8. Donald Ferguson (trans. and ed.), “History of Ceylon from the Earliest Times to 1600 A. D. as Related by Joao de Barrows and Diogo do Couto,” Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society XX, no. 60 (1908): 194.

ஒலிவடிவில் கேட்க

8177 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)