Arts
17 நிமிட வாசிப்பு

17 ஆம் நூற்றாண்டின் நிலப்படங்களில் யாழ்ப்பாணத்துத் தீவுகள்

August 23, 2023 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

17 ஆம் நூற்றாண்டில், போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தின் கீழிருந்த இலங்கையின் கரையோரப் பகுதிகள் படிப்படியாக ஒல்லாந்தரின் ஆளுகைக்குள் வந்தன. இறுதியாக, 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியப் பகுதிகளை ஒல்லாந்தர் கைப்பற்றினர். ஒல்லாந்தர் ஆட்சிக் காலத் தொடக்கத்தில் வரையப்பட்ட இலங்கைத் தீவின் நிலப்படங்களில் போர்த்துக்கேயர் கால நிலப்படங்களின் தாக்கம் காணப்பட்டபோதும், ஒல்லாந்தர்கால நிலப்படங்கள் தரத்திலும் துல்லியத்திலும் முன்னேற்றமடைந்து வந்தன.

1658 இற்கு முந்திய ஒல்லாந்தரின் இலங்கைப் படங்கள்

யாழ்ப்பாண இராச்சியத்தை ஒல்லாந்தர் கைப்பற்றுவதற்கு முன், 1650 களின் முற்பகுதியில் வரையப்பட்ட இலங்கையின் நிலப்படங்களில் யாழ்ப்பாணப் பகுதியின் வடிவமும் அதைப் பற்றிய தகவல்களும் மிகவும் பழைய நிலப்படங்களை அடியொற்றியவையாகவே காணப்படுகின்றன. குறிப்பாக, “முன்னர் தப்ரொபானா எனவும் இப்போது உள்ளூர்வாசிகளால் தெனெரிசிம் எனவும் அழைக்கப்படும் சேலான் தீவு” 1 எனத் தலைப்பிட்ட நிலப்படம் 1638-1657 காலப்பகுதியைச் சேர்ந்தது. (படம்-1) இந்நிலப்படத்தில் இலங்கையின் வடிவம் ஓரளவு திருத்தமாகக் காணப்பட்டாலும், யாழ்ப்பாணப் பகுதியின் வடிவமும் தகவல்களும், இக்கட்டுரைத் தொடரில் ஏற்கெனவே விளக்கப்பட்ட, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிப்பிரியானோ சான்செசின் நிலப்படத்தை ஒத்துள்ளன. சான்செசின் நிலப்படத்தில் உள்ளதுபோலவே குடாநாட்டுக்கு மேற்கேயுள்ள தீவுகளில் நான்கு தீவுகள் இந்நிலப்படத்திலும் உள்ளன. இவற்றுள் மூன்றுக்கு “பெரிய தீவு” (வேலணைத் தீவு), “ஆட்டுத் தீவு” (எழுவை தீவு?), “ஃபோர்காடோசுத் தீவு” (அனலை தீவு) எனப் பெயர் குறித்துள்ளனர்.2 சில எழுத்துமூல ஆவணங்களில் யாழ்ப்பாணத்துத் தீவுகள் சிலவற்றில் பெருமளவில் ஆடுகள் காணப்பட்டதைப் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், எத்தீவுக்காவது “ஆட்டுத்தீவு” என்ற பெயர் வழங்கியது குறித்த தகவல் இல்லை. காரைதீவைத் தனித் தீவாகக் காட்டாமல் குடாநாட்டுடன் சேர்த்து வரைந்துள்ளதாகத் தெரிகிறது.

taprobane

ஏறத்தாழ இதே காலப்பகுதியில் சேயுவர் சான்சன் (Sieur Sanson) என்பவர் வரைந்த, “இலங்கையும் மாலைதீவுகளும் – முற்காலத்தவரின் தப்ரொபேனான இலங்கை”3 என்னும் தலைப்பிட்ட நிலப்படமும் யாழ்ப்பாணப் பகுதி தொடர்பில் இதே தகவல்களையே தருகிறது. மேற்படி நிலப்படங்கள், கூடுதல் தகவலாக, இலங்கையின் நிர்வாக எல்லைகளைக் குறித்திருந்தாலும், அவை 17 ஆம் நூற்றாண்டிலிருந்த பிரிவுகளின் உண்மை நிலையைக் காட்டவில்லை என்பது இந்நிலப்படங்களை ஆய்வு செய்த டியேசன் முதலானோரின் கருத்து.4 எனவே, யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி ஏற்படுவதற்கு முற்பட்ட நிலப்படங்களிலிருந்து யாழ்ப்பாணப் பகுதியைப் பற்றி மிகமிகக் குறைவான தகவல்களையே பெற முடிகிறது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

1658-1700 காலப்பகுதியைச் சேர்ந்த ஒல்லாந்தரின் இலங்கைப் படங்கள்

1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கேயரிடமிருந்து ஒல்லாந்தர் கைப்பற்றிக்கொண்டனர். இந்நிகழ்வுக்குப் பின்னர், 1700 வரையான காலப்பகுதியில் வரையப்பட்ட இலங்கைப் படங்களில் இலங்கையின் வடபகுதியின் புற வடிவம் ஓரளவு திருத்தமாக உள்ளது. மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் வரையப்பட்ட இலங்கைப் படங்களுள், யொகானெசு விங்பூன்சு (1670), நிக்கோலசு விசுச்சர் (1680), தோபியசு கொன்ராட் லொட்டே, யொகானெசு வான் கியூலென், ஜொகான் ரோகவீன் (1683) ஆகியோர் வரைந்த இலங்கைப் படங்களும், பாதிரியார் போல்டேயசின் நூலில் உள்ள படமும் (1672) குறிப்பிடத்தக்கவை. மேலே குறிப்பிட்ட நிலப்படங்கள் அனைத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் புற வடிவம் ஏறத்தாழ ஒரே மாதிரியாக வரையப்பட்டுள்ளன. இவற்றை, யாழ்ப்பாணக் குடாநாடு தொடர்பான ஒரே மூலத் தரவுகளைப் பயன்படுத்தி வரைந்திருக்கக்கூடும்.

இவற்றைவிட, 17 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டில் வரையப்பட்டதாகக் கருதப்படும், இலங்கையையும் மதுரைக் கரையோரத்தையும் காட்டும் நிலப்படம், “இலங்கையின் வரைபடம்” எனத் தலைப்பிட்ட 1665-1670 காலப்பகுதியைச் சேர்ந்த ஒரு படம், 1690-1700 காலப்பகுதியில் ஜே. சி. தூர்சி என்பவர் வரைந்த, இலங்கையையும் தென்னிந்தியாவின் மலபார், கோரமண்டல் கரையோரங்களையும் காட்டும் நிலப்படம், அதே காலத்தைச் சேர்ந்த “இலங்கை” என்ற தலைப்புடன் கூடிய இன்னொரு நிலப்படம் என்பனவும் பல தகவல்களைத் தருகின்றன. இவற்றில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் புற வடிவங்கள் முன்னர் குறிப்பிட்ட படங்களிலிருந்து வேறுபடுவதைக் காணமுடிகின்றது.

1658 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட இலங்கையின் நிலப்படங்களில் யாழ்ப்பாணக் குடாநாடு, தலைநிலத்துடன் சேர்ந்ததுபோல் காட்டியிருப்பதை முன்னர் சுட்டிக்காட்டினோம். பிற்பட்ட காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு தலைநிலத்திலிருந்து தெளிவாகப் பிரித்து வரையப்பட்டிருப்பதைக் காணலாம். வடிவங்கள் துல்லியமாக இல்லாவிடினும், குடாநாட்டின் மேற்கே உள்ள முக்கியமான தீவுகள் அனைத்தையும் அக்கால நிலப்படங்கள் காட்டுவதுடன், சிலவற்றின் பெயர்களையும் தருகின்றன. இந்தக் கட்டுரையில் யாழ்ப்பாணத்தை அண்டியுள்ள தீவுகள் தொடர்பாக மேற்குறிப்பிட்ட நிலப்படங்கள் தரும் தகவல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

தீவுகளின் பெயர்கள்

வரலாற்றில் யாழ்ப்பாணத்துத் தீவுகளுக்குப் பல்வேறுபட்ட பெயர்கள் வழங்கியுள்ளன. பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த எழுத்துமூல ஆவணங்களில் இவ்வாறான பெயர்கள் தொடர்பான விவரங்கள் உள்ளன.

போர்த்துக்கேய வரலாற்றாளரான பாதிரியார் கேரோசின் நூலில் யாழ்ப்பாண இராச்சியத்தை அண்டியுள்ள தீவுகளைப் பற்றிய தகவல்களைக் காண முடிகின்றது. யாழ்ப்பாண இராச்சியத்துக்கு உட்பட்ட பகுதிகளின் கரைகளுக்கு அப்பால் எட்டுத் தீவுகள் உள்ளதாகவும், அவற்றுள் இரண்டில் மக்கள் வாழ்வதில்லை என்றும் ஏனைய ஆறு தீவுகளில் மக்கள் வாழ்வதாகவும் அந்நூல் குறிப்பிடுகின்றது. தணதிவ (வேலணைத்தீவு), கார்திவா (காரைதீவு), கொங்கர்திவா (புங்குடுதீவு), நெருந்திவா (நெடுந்தீவு), நயடாதிவா (நயினாதீவு), போர்ச்சுகல்தீவு (Portugaldive) ஆகியவை மக்கள் வாழும் தீவுகள் என்று நூல் தகவல் தருகிறது.5 இறுதியாகக் குறிப்பிட்ட போர்ச்சுகல்தீவு எது என்பதில் குழப்பம் உள்ளது. இதற்குப் பசுத்தீவு என்ற பெயரும் இருப்பதாக நூல் குறிப்பிடுகிறது. ஆனால், பசுத்தீவு என்பது, ஏற்கெனவே நெருந்தீவு எனக் குறிப்பிடப்பட்ட நெடுந்தீவுக்கு உரிய இன்னொரு பெயர். மக்கள் வாழும் தீவுகளில் நூல் குறிப்பிடாமல் விட்ட பெயர் அனலைதீவு. இதற்கு “ஃபோர்சாடொசுத் தீவு” என்ற பெயரும் வழங்கியது. எனவே, இதையே “போர்ச்சுகல்தீவு” என பாதிரியார் கேரோசின் நூல் பிழையாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.

1660, 1700 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட குறுகிய காலப்பகுதியிலேயே தீவுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறான பல பெயர்கள் பயன்பாட்டில் இருந்ததை அக்காலப்பகுதிக்கு உரிய நிலப்படங்களிலிருந்து அறியமுடிகின்றது.

1670 ஆம் ஆண்டில், யொகானெசு விங்பூன்சு என்பவர் வரைந்த நிலப்படம், தீவுகளுக்குப் போர்த்துக்கேயர் காலத்தில் புழக்கத்திலிருந்த பெயர்களையே தந்துள்ளது. (படம்-2) இதில், வேலணைத் தீவுக்கு “கைஸ்” (Isle de Kais) என்றும், காரைதீவுக்குக் “கார்திவா” (Isle de Cardiva) என்றும், புங்குடுதீவுக்குப் பசுத்தீவு எனப் பொருள்படும் “வாக்காஸ் தீவு” (Isle de Vacas) எனவும், நயினாதீவுக்கு நாகத்தீவு என்ற பொருள் தரும் “கோப்ரா” தீவு (Isle de Kobra) எனவும், அனலை தீவுக்கு “ஃபோர்சாடொசு” தீவு (Isle de Forcados) எனவும், எழுவைதீவுக்கு வரண்ட தீவு என்னும் பொருளில் “டெசெர்ட்டா” தீவு (Isle de Deserta) எனவும் பெயர் குறித்துள்ளது.

map 2

இங்கே பெயர் குறிப்பதில் சில பிழைகளும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. உண்மையில் நெடுந்தீவுக்கே பசுத்தீவு என்ற பெயர் வழங்கியது. 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தப் படைகளுடன் வந்து, அடுத்த சில ஆண்டுகள் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்து மதப் பணி புரிந்த பாதிரியார் போல்டேயசு, தான் எழுதிய நூலில், இந்தியாவிலுள்ள தொண்டியிலிருந்து பெருமளவு பசுக்கள் இத்தீவுக்கு இறக்குமதியானதால், நெடுந்தீவைப் போர்த்துக்கேயர் பசுத்தீவு (Ilha das Vacas) என அழைத்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.6 இந்நிலப்படத்தில் புங்குடுதீவுக்கு அருகில் இப்பெயர் குறித்திருப்பது தவறு என்றே தோன்றுகிறது.

அதேபோல, புங்குடுதீவுக்கும் அனலைதீவுக்கும் இடையில் காட்டியுள்ள ஒரு தீவுக்கு அருகே “டொன்னா கிளாரா” (Donna Clara) என்ற பெயர் உள்ளது. ஆனால், மேற்படி பெயர் அனலைதீவுக்கே வழங்கியதாகப் பிற ஆவணங்களிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. பாதிரியார் போல்டேயசின் நூலில் அனலைதீவைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. அனலைதீவு முன்னர் டொன்னா கிளாரா என அழைக்கப்பட்டதாகவும், போர்த்துக்கேயர் காலத்தில் அங்கே வாழ்ந்து அதிகாரம் செலுத்திய ஒரு பெண்ணின் பெயராலேயே தீவு அப்பெயரைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்பெண் பயன்படுத்திய இருக்கை ஒன்று தனது காலத்திலும் அத்தீவில் இருந்ததைப் பற்றியும், அது, ஒரே நேரத்தில் இருவர் இருக்கக்கூடிய அளவு பெரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.7 போர்த்துக்கேயரின் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத் தீவுகள் ஒவ்வொன்றும் குத்தகை அடிப்படையில் தனிப்பட்ட போர்த்துக்கேயருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர்களே அத்தீவுகளை நிர்வாகம் செய்தனர்.8 மேலே குறிப்பிட்ட டொன்னா கிளாராவும் அனலைதீவை அவ்வாறு குத்தகை ஆட்சியாகப் பெற்ற ஒருவராக இருந்திருக்கக்கூடும். 

ஒல்லாந்தர், யாழ்ப்பாணத்துத் தீவுகளுக்கு, முன்னர் வழங்கிய பெயர்களுக்குப் பதிலாகத் தமது நாட்டிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களின் பெயர்களைச் சூட்டினர். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய அதே ஆண்டில் (1658) ஆளுனர் ரைக்கிளோஃப் ஃபொன் கூன்சு (Rycklof van Goens) யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதிக்கு எழுதிய வழிகாட்டற் குறிப்பில் தீவுகளுக்கு இட்ட புதிய பெயர்களைப் பற்றிய தகவல் உள்ளது. இதன்படி, மக்கள் வாழும் தீவுகளுள் காரைதீவுக்கு “அம்ஸ்டர்டாம்”, வேலணைத்தீவுக்கு “லேடன்”, புங்குடுதீவுக்கு “மிடெல்பேர்க்”, நெடுந்தீவுக்கு “டெல்ஃப்ட்”, நயினாதீவுக்கு “ஹார்லெம்”, அனலைதீவுக்கு “ரொட்டர்டாம்”, இரணைதீவுகளுக்கு “ஹூர்ண்”, “என்கூசன்” ஆகிய புதிய பெயர்கள் இடப்பட்டன.9 இதிலிருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியவுடனேயே, ஒரே நேரத்தில் தீவுகளுக்குப் புதிய பெயர்கள் சூட்டப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், 1658-1700 காலப்பகுதியில் வெளியான இலங்கையின் நிலப்படங்களை ஆய்வு செய்யும்போது, தீவுகளின் புதிய பெயர்கள் படிப்படியாகவே நிலப்படங்களில் பயன்பாட்டுக்கு வந்ததை அறியமுடிகிறது. சில தீவுகளின் பெயர்களை நிலப்படங்களில் பிழையாகக் குறித்திருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. நிலப்படம் வரைந்தவர்கள் சில தீவுகளைப் பிழையாக அடையாளம் கண்டதனால் இவ்வாறான பிழைகள் ஏற்பட்டிருக்கக்கூடும்.

map 3

1672 இல் வெளியான பாதிரியார் போல்டேயசின் நூலில் உள்ள இலங்கையின் வடபகுதியைக் காட்டும் படம், சில தீவுகளுக்குப் புதுப் பெயர்களை மட்டும் தருகிறது; சில தீவுகளுக்குப் பழைய பெயர்களுடன் புதுப் பெயர்களையும் தருகிறது; சில தீவுகளைப் பழைய பெயரிலேயே காட்டுகிறது.  இப்படம் நெடுந்தீவுக்கும் புங்குடுதீவுக்கும் முறையே “டெல்ஃப்ட்” (Delft), “மிடெல்பேர்க்” (Middelburg) ஆகிய புதிய பெயர்களை மட்டும் குறித்துள்ளது. அதேவேளை, வேலணைத்தீவுக்கு “லேடன்” என்னும் புதுப் பெயருடன் “ஊராத்துறை” என்ற பழைய பெயரும், காரைதீவுக்கு “அம்ஸ்டர்டாம்” என்ற புதுப் பெயருடன் “காரதிவா” என்ற பழைய பெயரும் படத்தில் உள்ளன. நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு ஆகியவற்றை முறையே பிராமணத் தீவு, டொன்னா கிளாரா, டெசெர்ட்டா எனப் பழைய பெயர்களிலேயே நிலப்படம் காட்டுகிறது. எனினும், முன்னர் குறிப்பிட்ட விங்பூன்சின் நிலப்படத்தில் நயினாதீவுக்கும் அனலைதீவுக்கும் குறித்துள்ள பெயர்களுக்குப் புறம்பாக இங்கே வேறு பழைய பெயர்கள் உள்ளன. இந்நிலப்படத்தில், மன்னாருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடைப்பட்ட மேற்குக் கரையோரத்துக்கு அப்பால் உள்ள இரணைதீவு எனப்படும் இரட்டைத் தீவுகளுக்கு ஹோர்ண், என்கோசன் ஆகிய இரண்டு புதிய பெயர்களைக் குறித்துக் காட்டியுள்ளனர். (படம்-3) 

நிக்கொலாசு விசுச்சரின் இலங்கை நிலப்படம், எந்தத் தீவுக்கும் பழைய பெயர்களைத் தரவில்லை. (படம்-4) நெடுந்தீவு, புங்குடுதீவு, வேலணைத்தீவு, காரைதீவு ஆகியவற்றுக்கு முறையே “டெல்ஃப்ட்”, “மிடில்பேர்க்”, “லேடன்”, “அம்ஸ்டர்டாம்” எனப் புதிய பெயர்களையே அப்படம் தருகிறது. நெடுந்தீவில் அதன் பெயருடன் கூடவே வேறு இரண்டு இடப்பெயர்களை விசுச்சர் குறித்துள்ளார். மேக்கூர் (Mekour), கலா கூர் (Kala kour) என்னும் இப்பெயர்கள் மேற்கு ஊர், கிழக்கு ஊர் என்பவற்றின் போர்த்துக்கேய ஒலிப்பு வடிவமாகத் தெரிகின்றது. நயினாதீவு, அனலைதீவு ஆகிய இரு தீவுகளுக்கும் முறையே “ஹோர்ண்” (Hoorn), “என்கோசன்” (Enk Huysen) என்னும் பெயர்களை இப்படத்தில் காணமுடிகிறது. ஏற்கெனவே எடுத்துக்காட்டிய “ஃபொன் கூன்சு” எழுதிய குறிப்பில் உள்ளபடி இது பிழை என்பது தெளிவு. ஹோர்ண், என்கோசன் என்னும் பெயர்கள் உண்மையில் இரணைதீவு என அழைக்கப்பட்ட இரட்டைத் தீவுகளுக்கு உரியவை. விசுச்சர் இரணைதீவை அடுத்தடுத்துள்ள நயினாதீவு, அனலைதீவு என்பவற்றுடன் அடையாளம் கண்டு பெயர்களை மாற்றித் தந்துள்ளார். அனலைதீவுக்கு உரிய ரொட்டர்டாம் என்னும் புதிய பெயரை விசுச்சர், மன்னார்த் தீவுக்கும் வேலணைத் தீவுக்கும் இடையில் இருப்பதாகக் காட்டியுள்ள இன்னொரு தீவுக்கு இட்டுள்ளார். இரணைதீவையே இவ்வாறு ஒற்றைத் தீவாகக் காட்டியுள்ளதாகத் தெரிகின்றது.

map 4

கோட்டைகளும் தேவாலயங்களும்

போர்த்துக்கேயர் காலத்தில் பாதுகாப்பும், கத்தோலிக்க மதத்தைப் பரப்புதலும் முக்கிய இடத்தை வகித்தன. இதனால், அக்கால நிலத் தோற்றத்தில் கோட்டைகளுக்கும், தேவாலயங்களுக்கும் முக்கியத்துவம் இருந்தது. ஒல்லாந்தர் காலத்தில் போர்த்துக்கேயக் கோட்டைகளையும் தேவாலயங்களையும் கைப்பற்றிய அவர்கள் அவற்றை மேம்படுத்திப் பயன்படுத்தினர். தீவுப்பகுதியில், ஊர்காவற்றுறையிலும் நெடுந்தீவிலும் போர்த்துக்கேயர் கோட்டைகளைக் கட்டியிருந்தனர்.10 ஊர்காவற்றுறைக்கும் காரைதீவுக்கும் இடையில் உள்ள கடற்பகுதியிலிருந்த சிறிய தீவிலும் ஒரு கோட்டையைக் கட்டியிருந்தனர். இறுதியாகக் குறிப்பிட்ட ஊர்காவற்றுறைக் கடற் கோட்டையை (Fort Caes) தவிர ஏனைய இரண்டும் நீண்டகாலம் நிலைத்திருக்கவில்லை. ஒல்லாந்தர் அவற்றை மேம்படுத்திப் பயன்படுத்தவுமில்லை. கடற்கோட்டையை மேம்படுத்தி அதற்கு “ஹம்மன்ஹீல்” (Hamenhiel) என்ற புதுப் பெயரும் இட்டனர்.  இந்தக் கோட்டை இந்தியப் பெருங்கடலிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்கான நுழைவாயிலைப் பாதுகாத்தது.

மேலே எடுத்தாண்ட 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலப்படங்கள் அனைத்தும் கடற்கோட்டையைக் காட்டுகின்றன.  விங்பூன்சு தனது நிலப்படத்தில் கோட்டையையும் அதில் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் கொடியையும் குறித்துள்ளார்.  பெயர் இல்லை. ஏனைய நிலப்படங்களில் “ஹம்மன் ஹீல்” என்ற பெயரைக் காணமுடிகின்றது. விங்பூன்சும் விசுச்சரும் தமது நிலப்படங்களில் காரைதீவில் ஒரு கோட்டையைக் காட்டியுள்ளனர். ஆனால், காரைதீவில் கோட்டையொன்று இருந்ததற்கான வேறு சான்றுகள் இல்லை. ஊர்காவற்றுறையில் குறிக்க வேண்டியதை அவர்கள் பிழையாகக் காரைதீவில் குறித்துள்ளதாகத் தோன்றுகிறது. போல்டேயசின் படத்தில் வேலணைத் தீவில் “பழைய கோட்டை” என்ற குறிப்பு உள்ளது. அவ்விடத்தில் இருந்து பின்னர் கைவிடப்பட்ட கோட்டையையே இது குறிக்கிறது என்பதில் ஐயமில்லை. இதன் அழிபாடுகளை இப்போதும் காண முடியும்.

போர்த்துக்கேயர் காலத்தில் தீவுப் பகுதியில் ஆறு கத்தோலிக்கத் தேவாலயங்கள் இருந்தன. வேலணைத்தீவில் அல்லைப்பிட்டி, வேலணை, ஊர்காவற்றுறை ஆகிய இடங்களில் மூன்று தேவாலயங்கள் இயங்கின. இவை தவிர, காரைதீவு, புங்குடுதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளிலும் தேவாலயங்களை நிறுவியிருந்தனர்.11 1658 இற்குப் பின்னர் ஒல்லாந்தர் அவற்றைக் கைப்பற்றி அவற்றைப் புரட்டசுத்தாந்த கிறித்தவத் தேவாலயங்களாக்கினர். அவற்றுடன் அனலைதீவிலும் ஒரு தேவாலயத்தை நிறுவினர்.12 17 ஆம் நூற்றாண்டுக்குரிய பெரும்பாலான ஒல்லாந்தர் இலங்கைப் படங்கள் அக்காலத்திலிருந்த தேவாலயங்களை முழுமையாகக் குறித்துக் காட்டவில்லை. விங்பூன்சின் நிலப்படம், வேலணைத் தீவில் இரண்டும், காரைதீவிலும் புங்குடுதீவில் ஒவ்வொன்றுமாக நான்கு தேவாலயங்களை மட்டுமே காட்டுகிறது. ஆனால், போல்டேயசின் படம் அக்காலத்திலிருந்த ஏழு தேவாலயங்களுடன் நெடுந்தீவிலும் எழுவைதீவிலும் இரண்டு தேவாலயங்களைக் காட்டுகிறது. குறித்த காலப் பகுதியில் இவ்விரு தீவுகளிலும் தேவாலயங்கள் இருந்ததற்குச் சான்றுகள் இல்லை. 17 ஆம் நூற்றாண்டின் நிலப்படங்கள், தேவாலயங்களைச் சரியாகக் காட்டுவதில் அக்கறை செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

மேற்கோள்கள்

  1. தலைப்பு நிலப்படத்தில் உள்ளபடி: insvla Zeilan, olim Taprobana, nunc incolis Tenarisim.
  2. நிலப்படத்திலுள்ளபடி போர்த்துக்கேய மொழிப் பெயர்கள்: Ilha Grande, Ilha das Cabras, Ilha Forcados.
  3. தலைப்பு நிலப்படத்தில் உள்ளபடி: Ceylan et les Maldives – Ceylan Isle Qui est la Taprobane des Anciens.
  4. Rob van Diessen and Bert Nelemans, Comprehensive Atlas of the Dutch United East India Company – IV Ceylon (Voorburg: Asia Maior/ Atlas Maior, 2010), 31.
  5. Fernao De Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon vol I, trans. S. G. Perera (New Delhi: Asian Educational Services, 1992), 55-56.
  6. Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 340.
  7. Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 340.
  8. Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon, 56.
  9. Instructions from the Governor-General and Council of India to the Governor of Ceylon 1656-1665, trans. Sophia Pieters (Colombo: Ceylon Government Printer, 1908), 84.
  10. W. A. Nelson, The Dutch Forts of Sri Lanka, The Military Monuments of Ceylon (with updates by R. K. de Silva) (Colombo: Sri Lanka-Netherlands Association, 2004), 80.
  11. க. வேலுப்பிள்ளை, யாழ்ப்பாண வைபவ கௌமுதி (புது டில்லி: ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ், 2004), 86.
  12. Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 340.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7085 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)