Arts
22 நிமிட வாசிப்பு

இலங்கையின் சிங்களச் சமூகத்தில் சாதியின் வகிபாகம் : ஜனநாயகமும் சாதியும் அரசியலும் – பகுதி 4

March 31, 2024 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்று கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம் : பிரசன்ன டி சொய்சா

சாதி ஒதுக்குதலுக்கும் பாரபட்சம் காட்டுதலுக்கும் எதிரான சட்டப் பாதுகாப்பின்மை

இலங்கையில் சாதி பாரபட்சம் காட்டுதலைத் தடுக்கக் கூடியதான அரசியல் யாப்புச் சட்டப் பாதுகாப்பின் போதாமை சுட்டிக் காட்டப்பட வேண்டியது. சட்டப் பாதுகாப்பைப் பெறுவதற்கான நிறுவன ரீதியான தடைகளும் உள்ளன. இக் காரணங்களால் பொது வெளியில் கேள்விக்கு உட்படுத்தப்படாதனவான மறைமுகமான வெளித் தெரியாத காரணிகள் ஜனநாயக விலக்கலுக்குத் துணை புரிகின்றன. இலங்கையில் விளிம்பு நிலையினருக்கு பாதுகாப்பு வழங்கும், சமவாய்ப்புச் சட்டங்கள் (EQUAL OPPORTUNITY LEGISLATION) இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமவாய்ப்புச் சட்டங்கள் ‘POSITIVE DISCRIMINATION LEGISLATION’ எனவும் அழைக்கப்படுகின்றன. 

இலங்கையின் அரசியல் யாப்பின் உறுப்புரை 12 அடிப்படை உரிமைகள் பற்றிக் குறிப்பிடுகிறது. 

‘இனம், சமயம், மொழி, சாதி, பாலினம், அரசியல் அபிப்பிராயம், பிறந்த இடம்  அல்லது இவை போன்ற ஏதேனும் அடிப்படைகளில் நபர் ஒருவருக்கு சட்டத்தின் முன் பாரபட்சம் காட்டுதல் ஆகாது‘ என இவ் உறுப்புரை கூறுகிறது. உறுப்புரை 12 (3) மேற்சொன்ன காரணங்களின் அடிப்படைகளில் நபர் ஒருவருக்கு பொது இடங்கள், பொதுப் பாவனைக்குரிய வசதிகள் என்பனவற்றில் பாரபட்சம் காட்டலாகாது எனக் கூறுகின்றது. கடைகள், பொது உணவகங்கள், ஹோட்டல்கள், பொழுது போக்கு மகிழ்வு இடங்கள், குறித்த நபர் ஒருவரின் சமயத்தின் பொது வழிபாட்டிடம் என்பன இவ்வுறுப்புரையின் கீழ் பொது இடங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. உறுப்புரை 12 (2), 12 (3) என்பனவற்றின்படி பாதிக்கப்பட்ட ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு மனுச் செய்து சட்ட நிவாரணம் கோரலாம். 

ஹேவவெல்லகே ஜில்பேர்ட் சில்வா எதிர் கௌரவ சட்டமா அதிபர் நாயகம் வழக்கு சாதியடிப்படையிலான பாரபட்சம் தொடர்பான நிவாரணம் கோருதலுக்குச் சிறந்த உதாரணமாகும். 

அரசியல் யாப்பின் உறுப்புரை 12 (4) பெண்கள், சிறுவர்கள், இயலாமையுடையோர் (DISABLED PERSONS) என்போரின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் சட்டங்களை இயற்றலாம் எனக் கூறுகிறது. இப்பிரிவு சாதியடிப்படையிலான  சமூக விலக்கல், பாரபட்சம் என்பன பற்றிய சட்டங்களை இயற்றுதலை உள்ளடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

1957 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்கச் சட்டம் சாதியடிப்படையிலான பாரபட்சம் காட்டுதலைத் தடுப்பதற்கான சட்டமாகும். இது PREVENTION OF SOCIAL DISABILITIES ACT NO 21 OF 1957 எனப் பெயரிடப்பட்டது. இச்சட்டம் பின்னர் 1971 இன் 18 ஆம் இலக்கச்  சட்டத்தால்  திருத்தப்பட்டது. இச்சட்டம் தாழ்நிலைச் சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு போதிய பாதுகாப்பை வழங்கவில்லை என ரியுடர் சில்வாவும் பிறரும் எழுதிய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது (சில்வாவும் பிறரும் 2009 b : 15).

அரசின் பொறுப்பு 

ஜயதேவ உயன்கொட 2015 இல் எழுதிய ஆய்வு ஒன்றில் சமூக விலக்கல் (SOCIAL EXCLUSION) நிகழ்வதற்கு அரச உத்தியோகத்தர்கள் பங்களிப்பு வழங்கிய சில சந்தர்ப்பங்களை எடுத்துக் காட்டியுள்ளார். அம்பஹேன என்னும் இடம் குருணாகல மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப் பகுதியின் கிராம சேவகர் அப்பகுதியின் வெவ்வேறு சாதியினரிடையே சமூக விலக்கல் இருப்பதை நீடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். காணியற்றவர்களான கொவிகம சாதியினருக்கு காணிகளை வழங்கிய போது கொவிகம சாதிக் குடியிருப்புகள் அமைக்கப்பட்ட இடத்தில் அக்கிராமத்தின் கின்னர சாதியினருக்குக் காணி வழங்க மறுத்து விட்டார். கிராம சேவகர் அம்பஹேனவின் கின்னர மக்களுக்கு காணி வழங்கும் சிபாரிசுக் கடிதங்களைக் கொடுப்பதற்கு மறுத்தார். கின்னர மக்களுக்கு வேறாக ஒரு கிராமம் உருவாக்கப்பட வேண்டும் (வெனம கமக் கதன்ன) என்ற கருத்தின் அடிப்படையிலேயே தாம் கடிதம் வழங்க மறுத்ததாக அவர் குறிப்பிட்டார் (உயன் கொட 2015:222). இக் கிராமத்தின் தபாற்காரர் கின்னர மக்களுக்கான கடிதங்களை அவரவர் வீட்டிற்கு கொண்டு சென்று கொடுப்பதைத் தவிர்த்து வழியில் உள்ள கடையொன்றில் ஒன்றாகச் சேர்த்துக் கொடுத்து விட்டுச் செல்கிறார் (உயன் கொட 2015 : 223). குடும்ப மருத்துவ உத்தியோகத்தரும் இவ்விதமே பாகுபாடு காட்டும் முறையில் பணியாற்றுகிறார். ஒரு பெண் நேர்காணலின் போது கூறியதாவது “மருத்துவத் தாதி இக்கிராமத்துக்கு வருவதே கிடையாது. பல தடவை சொல்லியனுப்பியும், தொலைபேசி அழைப்புக்கள் கொடுத்தும் அழைத்த பின்னர் தான், கர்ப்பிணித் தாய்மாருக்கு உதவி செய்ய இம் மருத்துவத் தாதி வருவார்” (உயன்கொட 2015:222).  இவ்வாறாக  முறைசாராப் பண்பாடாக ‘தீண்டாமை’ உத்தியோகத்தர்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவ்வுத்தியோகத்தர்கள் அரசியல் யாப்புச் சட்டப்படி இக்கிராமத்தவர்களுக்கு பாரபட்சமற்ற சேவையை வழங்கும் கடப்பாடு உடையவர்களாய் இருந்த போதும் அதனை மீறி நடந்து கொள்கின்றனர். அம்பஹேன கிராமத்திற்குச் செல்வதற்கான பாதை திருத்தப்படாமல் உள்ளது. கிராமவாசிகள் பல தடவை முறைப்பாடுகளை அனுப்பிய போதும் பிரதேச சபை அலுவலகமும், பிரதேச செயலாளர் அலுவலகமும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக் கிராமத்துக்கு மின்சாரமும், குடிநீரும் வழங்குவதற்கு இந்த நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறாக அரச நிறுவனங்களாலும், அவற்றில் பணிபுரியும் உத்தியோகத்தர்களாலும் சமத்துவமான பிரஜாவுரிமை (EQUAL CITIZENSHIP) இம் மக்களுக்கு மறுக்கப்படுகிறது. சமத்துவமற்ற பிரஜாவுரிமை என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று, இலங்கையில் சாதி பொதுவிடத்தில் பேசக்கூடாத விடயமாகக் கருதப்படுகிறது. இக் காரணத்தால் சமூக முரண்பாடுகள் பற்றிய விவாதம்/உரையாடல் என்பனவற்றிலும் ‘சாதி’ என்னும் விடயம் பேசுபொருளாக எடுக்கப்படுவதில்லை. தீர்வுத் திட்டங்களில் மூல காரணம் எது என்பதைக் கவனத்தில் கொண்டு தீர்வு செய்யப்படுவதில்லை. இங்கிரிய பகுதியின் பிரதேச செயலாளர் இது பற்றிக் கருத்துரைக்கும் போது பின்வருமாறு கூறினார். “எமக்கு முறைப்பாடுகள் செய்யப்படும் போது சாதிப் பிரச்சினையின் வடிவில் உரிய சொற்களை உபயோகித்து பிரச்சனையின் தன்மை எடுத்துரைக்கப்படுவதில்லை. கையாளப்படும் மொழி பிரச்சினையை சாதி சாராத பிரச்சினையாகவே முன் வைக்கிறது. பாதிக்கப்பட்டவர்களே சாதி அடிப்படையிலான பாரபட்சம் காட்டுதலை, தமது உண்மையான பிரச்சினையை மறைத்து விடும் வார்த்தைகளால் முன் வைக்கின்றனர். உத்தியோகம் என்ற எல்லைக்குள் சாதி விலகி நிற்கிறது. (டி சொய்சா 2014 :12)”

இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எல்லா குடிமைச் சங்கங்கள், கழகங்கள் என்பன கொவிகம, பத்கம என்பனவற்றிற்கு தனித் தனியானவையாக இயங்குகின்றன. கொவிகமவிற்கு தனியான விளையாட்டுக்கழகங்கள் உள்ளன. இதே போல் பத்கம சாதியினரின் விளையாட்டுக் கழகங்கள் தனியாக இயங்குகின்றன. சமுர்த்தி சங்கமும் இரு வேறு கூட்டங்களை தனித்தனியாக நடத்துகின்றது. கொவிகம சமுர்த்தி உறுப்பினர்களின் கூட்டம் தனியாகவும், பத்கம சமுர்த்தி உறுப்பினர்களின் கூட்டம் தனியாகவும் நடைபெறும். ஆனால் கூட்டம் நடைபெறும் நேரம் மட்டும் வேறுபடும். நிர்வாக உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்யும் ஆண்டுப் பொதுக்கூட்டம் மட்டுமே விதிவிலக்கான கூட்டம் ஆகும் (டி சொய்சா 2014:12). இங்கிரியாவின் கிராமங்களில் ஒன்றில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் (WDO) எல்லோருக்கும் பொதுவான கூட்டம் ஒன்றை நடத்தினார். அக்கூட்டத்திற்கு பத்கம சாதிப் பெண்கள் ஒரு சிலரே வந்திருந்தனர். அவர்கள் கூட அப்பெண் உத்தியோகத்தரின் வற்புறுத்தலின் காரணமாகவே பங்கேற்றனர். கொவிகம சாதிப் பெண்கள் பத்கம சாதிப் பெண்களைக் கூட்டத்திற்கு அழைத்ததை விரும்பவில்லை. அவர்கள் அப்பெண் உத்தியோகத்தரின் செய்கையையிட்டு அதிருப்தி தெரிவித்தனர் (டி சொய்சா 2014:12-13).

மேலே குறிப்பிட்டபடி பிரஜைகளிற்கான சமூகநலன் விருத்திச் சங்கங்களில் சாதியடிப்படையில் இரு வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டமை, சாதிப் பாரபட்சத்திற்கான அரச அங்கீகாரத்திற்கான வெளிப்படையான உதாரணமாகும். ‘சமூகவிலக்கல் பண்பாட்டை’ (CULTURE OF SOCIAL EXCLUSION) அரசு ஏற்றுக் கொள்கிறது என்பதற்கும் மேலாக ஆதரவளிக்கின்றது என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்.

இவ்வாறாக சாதிகளைப் பிரித்துத் தனிமைப்படுத்தும் நடைமுறைகளுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இது பொது இடங்களில் பிரஜைகளுக்கு சமத்துவ உரிமையையும் (RIGHT TO EQUALITY) கௌரவத்தையும் மறுக்கும் செயலாகும். இது நடைமுறை விதியாக மாற்றப்படும் போது இதன் தீங்கான பின் விளைவுகள் வெளிப்பட்டுத் தெரிகின்றன. நடைமுறை விதியாகிப் போகும் போது ஆதிக்கச் சாதியும், ஒடுக்குதலுக்கு உள்ளாகும் சாதியும், அரச உத்தியோகத்தர்களும் அதனை இயல்பான ஒன்றாகவே கருதிவிடும் நிலை தோன்றுகிறது. பொது வெளியில் சமூக விலக்கல் என்பது, இயல்பானது; இயற்கையானது என்பது உறுதியாகின்றது.

சாதியடிப்படையிலான பாரபட்சம் காட்டுதலும், விளிம்பு நிலையாக்கலும் வறுமையோடு நெருங்கிய தொடர்புடையது. அரச உத்தியோகத்தர்கள் வறுமைத் தணிப்புத் திட்டங்களைத் தயாரிக்கும் போது பொருளாதாரப் பிரச்சனைகளை மையப்படுத்தி அவற்றைத் தயாரிக்கின்றனர். ஆனால் பொருளாதாரப் பிரச்சினைகளில் சாதி அடிப்படையிலான பாரபட்சம் உள்ளார்ந்து இருப்பதை அரச உத்தியோகத்தர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை (டி சொய்சா 2014:17). இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இரு பிரிவுகளில் அரச உத்தியோகத்தர்கள் வேண்டுமென்றே விளிம்பு நிலைச் சாதியினருக்கு பாரபட்சம் காட்டுகின்றனர் எனக் கூற முடியாது. அவர்கள் சாதியடிப்படையிலான பாரபட்சம் காட்டுதல் நடைமுறையில் உள்ளதைக் ‘கண்டும் காணதவர்களாக‘ நடந்து கொள்கின்றனர். இது இருந்து வரும் நிலையைத் தொடர்ந்தும் பேணுவதை (MAINTAIN STATUS QUO), அதாவது சாதியடிப்படையிலான பாரபட்சம் காட்டுதல் தொடர்வதை, ஏற்றுக் கொள்வதற்கு சிறந்த உதாரணமாகும். 

அரசியல் உள்ளீர்த்தலும் விலக்கலும் ஜனநாயகத்தை மட்டுப்படுத்தலும்

இப்பகுதியில் அரசியல் உள்ளீர்த்தல் (POLITICAL INCLUSION) அரசியல் விலக்கல் (POLITICAL EXCLUSION) என்பனவற்றிற்கும் ஜனநாயகத்தை மட்டுப்படுத்துவதற்கும் உள்ள தொடர்பு ஆராயப்படவுள்ளது. 

இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவின் பல்பிட்டிகொட, குரான தெற்கு ஆகிய இரு கிராமங்களிலும் மைய நீரோட்ட அரசியல் கட்சிகள் யாவும் தமது கிளைகளை கொண்டிருக்கின்றன. இக் கிராமங்களில் இடது சாரிக் கட்சிகளின் கிளைகள் செயற்பாட்டில் இல்லை என்பது கவனத்திற்குரியது. இக்கிராமங்களின் கொவிகம, பத்கம ஆகிய இரு சாதியினருக்கும் வாக்குரிமை உள்ளது. தேர்தல்களில் வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கும் இரு சாதியாட்களுக்கும் உரிமை உள்ளது. அதற்குச் சட்ட ரீதியான தடைகள் இல்லை. முதல் தோற்றத்தில் அரசியல் களத்தில் ஜனநாயகத்தின் இருப்பு உறுதியாகிறது. ஆனால் நுண்நிலையில் ஆராய்ந்து பார்க்கும் போது, இக்கிராமங்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம் நடைமுறையில் இருப்பதைக் காணலாம். மைய நீரோட்ட அரசியல் கட்சிகளின் அரசியல் அமைப்புகள் இக்கிராமங்களில் உள்ளன. இவ்வமைப்புகள் அ) பத்கம சாதிக்கான அமைப்புகள் ஆ) கொவிகம சாதிக்கும் ஏனைய இடைத்தரச் சாதிகளுக்குமான அமைப்புகள் என தனித் தனியாகச் செயற்படுகின்றன. ஒரு கட்சி பத்கம சாதியினருக்குப் பங்கேற்புச் செய்வதை அனுமதிக்கும் போது அது ஒரு ஜனநாயக நடவடிக்கையாக அமைகிறது. அத்தோடு அவ்வாறு அனுமதித்தல் அரசியல் உள்ளீர்த்தல் (POLITICAL INCLUSION) ஆகவும் அமைகிறது. ஆயினும் பிரச்சினைக்குரிய விடயம் யாதெனில் அக்கட்சி கொவிகம சாதியினருக்கு மட்டுமே பங்கேற்பை வழங்கும் இன்னொரு அமைப்பை அதே கிராமத்தில் அமைப்பதாகும். இவ்வாறு செய்வதன் மூலம் உள்ளீர்த்தல், விலக்கல் என்ற இரண்டையும் குறித்த கட்சி நடைமுறைப்படுத்துகிறது. கொவிகம சாதி அமைப்பில் பத்கம சாதி நபர் ஒருவர் பங்கேற்க முடியாது. ஆகையால் உள்ளீர்த்தல் தத்துவத்தை விட விலக்குதல் தத்துவம் மேலாதிக்கமுடையதாக அமைந்து விடுகிறது. 

பல்பிட்டிகொட, குரான தெற்கு ஆகிய இரு கிராமங்களிலும் இன்று வரை பிரதேச சபை உறுப்பினராக பத்கம சாதி நபர்கள் எவரும் தெரிவு செய்யப்படவில்லை. பத்கம சாதி நபர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை மட்டும் உள்ளது. ஆனால் அவர்கள் எவருக்கும் தேர்தலில் வேட்பாளராக நின்று பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஆகையால் இக்கிராமங்களில் ஜனநாயகம் ஒரு விசேட வடிவத்தில் செயற்படுவதைக் காணலாம். ஒரே சமயத்தில் உள்ளீர்த்தல், விலக்குதல் என்ற இரண்டையும் செயற்படுத்தும் மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம் என இதனை வரையறை செய்யலாம். அரசியல் களத்தில் மறைமுகமான விலக்கல் (INDIRECT EXCLUSION) இக் கிராமங்களில் நடைபெறுவதைக் காணலாம். 

ஜனநாயகமும் சமூகவிலக்கலும்

பல்பிட்டிகொட, குரான தெற்கு ஆகிய இரு கிராமங்களிலும் சமூக விலக்கல் இரு வகைகளில் இடம் பெறுவதைக் காணலாம். 

இக்கிராமங்களின் தாழ்நிலைச் சாதிகள் தாமாகவே சமூக விலக்கலை செய்து கொள்ளுதல் ஒரு வகையாகும். விளையாட்டுப் போட்டிகள், சமய நிகழ்ச்சிகள், போன்ற சமூக நிகழ்வுகளை உயர் சாதியினர் ஒழுங்கு செய்யும் போது, தாழ் நிலையில் உள்ளவர்களான சாதியினர் அந்நிகழ்வுகளில் பங்கு கொள்ளாமல் தாமாகவே விலகிக் கொள்கின்றனர். இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது ஏற்படக்கூடிய அவமானம், அசௌகரியம் என்பனவற்றைத் தவிர்ப்பதற்காக அவர்கள் இவ்வாறு ஒதுங்கி விலகிக் கொள்கின்றனர். இதனைச் சுய விலக்கல் (SELF EXCLUSION) எனலாம். ஆயினும் இச்சுய விலக்கலுக்குப் பின்னால் சமூக அதிகாரமும், வன்முறையும் மறைமுகமாக நின்று செயற்படுகிறது. சமூகக் கட்டமைப்புக்களிலும் நடைமுறைகளிலும் இவ் வன்முறை மறைந்துள்ளது. 

இக்கிராமங்களின் பாடசாலைகளில் ஒரே சாதியைச் சேர்ந்த மாணவர்களே கல்வி கற்பதைக் காணலாம். உதாரணமாக ஒரு பாடசாலை பத்கம சாதியினரின் பாடசாலையாக  இருக்கும். இன்னொரு பாடசாலை கொவிகம உயர் சாதியினரின் பாடசாலையாக இருக்கும். பத்கம சாதியினர் பாடசாலையில் கொவிகம சாதிப் பிள்ளைகள் சேர்ந்து கொள்ள மாட்டார்கள். தமது வாழ்விடத்துக்கு அருகில் உள்ள பத்கம பாடசாலையில் சேர்ந்து படிப்பதைத் தவிர்த்து தூரத்தே உள்ள கொவிகம பாடசாலைக்குச் சென்று படிப்பார்கள். பிரயாணச் செலவு, சிரமம், நேர விரயம் ஆகியனவற்றைப் பொருட்படுத்தாது தூர இடங்களுக்கு கல்விக்காகச் செல்வார்கள். மிகவும் வறியவர்களான கொவிகம சாதியினரின் பிள்ளைகள் சிலர் மட்டும், வேறு மாற்று வழி இல்லாமையால் பத்கம பாடசாலைக்கே சென்று கல்வி கற்பதுண்டு. உயர் சாதியினர் தமது பிள்ளைகளை பத்கம சாதிப் பாடசாலையில் சேர்ப்பதைத்  தவிர்ப்பதன் காரணம் தெளிவானது. தாழ் நிலையில் உள்ள சாதியொன்றின் பிள்ளைகளுடன் தமது பிள்ளைகள் பழகுவது, சமூக ரீதியிலும் பண்பாட்டு ரீதியிலும் தாழ்வானது என கொவிகம சாதியினர் கருதுகின்றனர். இந்நடத்தை மறைமுகமான சமூக விலக்கலுக்கு (HIDDEN EXCLUSION)  காரணமாகிறது. 

மனித கௌரவமும் பண்பாட்டு உரிமைகளும், பண்பாட்டு விலக்கலும்

இலங்கையில் பண்பாட்டு விலக்கல் (CULTURAL EXCLUSION) என்னும் பொருள் குறித்து சமூக மானிடவியலாளர்களும், சமூகவியலாளர்களும் போதிய கவனம் செலுத்தவில்லை. குருணாகல மாவட்டத்தின் ‘கொகம்பகண்ட‘ கிராமத்தில் கள ஆய்வு செய்த ஜயதேவ உயன்கொட அக்கிராமத்தின் கின்னர சாதியினர் பண்பாட்டு விலக்கலுக்கு உள்ளாவதைப் பற்றிய சில விபரங்களைத் தந்துள்ளார். இக்கிராமத்தின் கின்னர மக்கள் சமயத் தேவைகளை பெற முடியாது விலக்கலுக்கு உள்ளாகின்றனர். இவர்களின் சமயம் பௌத்தம் ஆகும். பௌத்தம் சமத்துவத்தைப் போதிக்கும் சமயம், கின்னரர்களின் வீடுகளில் மரணம் நிகழும் போது, பெளத்த  சமயச் சடங்குகளைச் செய்வதற்கு புத்த குருமார் முன் வருவதில்லை. இதனால் இவர்கள் தூர இடங்களில் உள்ள குருமாரையோ அல்லது புத்த துறவிகள் அல்லாத சாதாரண மக்களையோ சடங்குகளை நடத்தி வைப்பதற்காக அழைத்து வர வேண்டியுள்ளது.  கிராமத்தில் உள்ள புத்த கோவிலில் உள்ள புத்த குருவின் சேவையை கின்னர மக்களால் பெற முடியவில்லை. கொகம்பகண்ட  கிராமத்தின்  கின்னர சாதியினர் சமைத்த உணவைத் தானமாகக் கொடுத்தால் அதை புத்த குருமார்கள் ஏற்பதில்லை (உயன் கொட 2013:286-287).

உடுநுவர பிரதேச செயலாளர் பிரிவின் குரகல என்னும் கிராமம் ‘றொடியா’ சாதியினர் வாழும் கிராமமாகும். இக் கிராமம் பற்றி ஆராய்ந்த ரியுடர் சில்வாவும் பிறரும் குரகல கிராமத்தவர்களின் மரணச் சடங்குகளில் அயலில் உள்ள புத்த கோவில்களின் குருமார் பங்குபற்றி சடங்குகளைச் செய்வதற்கு முன் வருவதில்லை; அம்மக்கள் தூர இடங்களில் இருந்து குருமாரை அழைத்து வருவதுண்டு என்று குறிப்பிட்டுள்ளனர் (சில்வாவும் பிறரும் 2009a:47). றொடியா சமூகத்தினரின் பிள்ளைகளை சமய வகுப்புக்களில் சேர்த்துக் கொள்வதில்லை. இப்பகுதியின் ‘தகம்பாசல்கள்’ (சமயப் பாடசாலைகள்) றொடியா சமூகப் பிள்ளைகளை சேர்க்காமல் விடுவதற்குப் பல சாக்குப் போக்குகளைச் சொல்லி மறுத்து வருகின்றன. 

கொகம்ப கண்ட கிராமத்தின் இளைஞர்கள் சிலர் ஒரு தடவை கிராமத்தின் தலைமைப் பிக்குவை அணுகி ஒரு வேண்டுகோளை முன் வைத்தனர். “கின்னர சாதியினராகிய நாம் தானம் கொடுக்க முன் வரும் போது அதனை ஏற்க வேண்டும்; எமது சாதியினரின் சமைத்த உணவை நீங்கள் தானமாக ஏற்க வேண்டும்” என்பதே அவர்கள் முன் வைத்த கோரிக்கை. ‘தாயக்க சபை‘ (வழிபாட்டாளர்களின் சபை) என்னும் குழுவினர் சம்மதம் தெரிவித்தால் தாம் தானத்தை ஏற்பதற்குக் தயார் எனப் பிரதமகுரு கூறினார். 

பின்னர் தாயக்க சபையின் உயர்சாதி  உறுப்பினர்கள் இதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. வழமையான நடைமுறையின்படி தாழ் நிலையினரான கின்னரர்களிடமிருந்து சமைத்த  உணவைத் தானமாகப் பெற முடியாது. அது விலக்கப்பட வேண்டியது எனத் தாயக்க சபை முடிவு செய்தது. குடிமக்களின் ஒரு பகுதியினரின் பண்பாட்டு உரிமைகள் மறுக்கப்படுவதற்கு இது உதாரணமாகும் என உயன் கொட குறிப்பிடுகிறார். சமய நிகழ்வுகளில் பண்பாட்டு நடவடிக்கைகளில் சம உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

முடிவுரை

இலங்கையில் ஜனநாயகமாக்கல் செயல்முறை ஆரம்பிக்கப்பட் காலம் தொடக்கம் தேர்தல் அரசியலில் அடிநிலைச் சாதியினர் ஜனநாயகத்தின் நன்மைகளைப்  பெறவில்லை. சமூகநல அரசும் (WELFARE STATE) சமூக நல வசதிகளை இச்சமூகங்களிற்கு முழுமையாக வழங்கவில்லை. இதன் விளைவாக சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை (RIGHT TO EQUALITY) இம் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ நவீனத்துவம் சாதியை ஒழித்து அதனிடத்தில் வர்க்க உறவுகளை உருவாக்கவில்லை. இலங்கையின் சமூக அடுக்கமைவில் (SOCIAL STRATIFICATION) சாதி, வர்க்கம் என்ற இரண்டும் பிணைப்புற்றதாக அமைந்துள்ளன. நவீனமயமாதல் செயல்முறையின் பயனாக சாதி முறையின்  சில கூறுகள் மாறியுள்ளன. இம்மாற்றங்கள் பொருண்மிய நிலையில் ஏற்பட்ட மாறுதல்கள் மட்டுமேயாகும். சாதியின் கருத்தியல் கூறுகள் மாறாது நிலை பெற்றுள்ளன. 

ஆரம்ப காலம் முதலே சமூக-அரசியல் வாழ்முறையிலும் நடைமுறையிலும் முரண்பாடுகள் நிறைந்துள்ள நிலை காணப்பட்டது. பொது வெளியில் சாதியின் சமத்துவமின்மை தொடருகிறது. அதே சமயம் சமத்துவத்தை அடி்படையாகக் கொண்ட ஜனநாயகமும் செயற்படலாயிற்று. காலனிய கால கட்டத்தில் கராவ, சலாகம, துராவ என்னும் மூன்று சாதிகள் பொருளாதார வாய்ப்புக்களைப் பயன்படுத்தி சொத்துக்களையும் செல்வத்தையும் தேடிக் கொண்டன. இதனால் இச்சாதியினரின் பெற்றோர் தம் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியை வழங்கினர். தரமான கல்வி மூலம் மருத்துவம், சட்டம் போன்ற உயர் தொழில் துறைகளில் உயர் பதவிகளைப் பெற்று கராவ, சலாகம, துராவ சாதிகள் சமூகப் படிநிலையில் தம்மை உயர்த்திக் கொண்டன. காலப் போக்கில் தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்ட போது இச்சாதிகள் தமக்குப் பிரதிநிதித்துவம் வழங்கக் கூடிய முறையில் தேர்தல் தொகுதிகளை எல்லை வகுக்குமாறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இச்சாதியினருக்கு சட்ட மன்றங்களில் பிரதிநிதித்துவம் கிடைத்தது. தேர்தல் அரசியல் சாதி அடையாளம், சாதி அடிப்படையிலான அணி திரட்டல் என்பனவற்றை தூண்டி வளர்த்தது. விகிதாசார முறைத் தேர்தல் அறிமுகம் செய்யப்பட்ட பின், சிறுபான்மைச் சாதிகளும் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெறும் வாய்ப்பு கிடைத்தது. சிறுபான்மைச் சாதிகளின் பேரம் பேசும் பலம் (BARGAINING POWER) அதிகரித்தது. அரசியல் களத்தில் பேரம் பேசும் பலம் அதிகரித்த போதும் சமூக அரங்கில் (SOCIAL ARENA) பேரம் பேசும் பலம் அதிகரிக்கவில்லை. 

கருத்தியல் மட்டத்தில் சமூக விலக்கல் நடைமுறையில் உள்ளது. சமூகக் கட்டமைப்புகளில் கருத்தியல் ஊடுருவியிருப்பதால் சமூக விலக்கல் அக் கட்டமைப்புகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. சமூக விலக்கல் காரணமாக சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு ஜனநாயக உரிமைகள் முழுமையாகக் கிடைப்பதில்லை. விளிம்பு நிலையில் உள்ளோர் உயர் சாதியினர் அனுபவிக்கும் உரிமைகளை அனுபவிப்பதில்லை. உயர் சாதியினர் பெறும் சலுகைகளைப் பெறுவதில்லை. இக்காரணத்தால் இலங்கையில் நடைமுறையில் உள்ள ஜனநாயகத்தை, சமூக நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம் (SOCIALLY RESTRICTED DEMOCRACY) என்றே கருதலாம்.

சமூக நிலையில் ஜனநாயகம் (SOCIAL DEMOCRACY) இல்லாத காரணத்தால் சிறுபான்மைச் சாதியினர் மனித கௌரவத்தைப் பெறமுடியாதவர்களாய் உள்ளனர். இதனால் பாதிக்கப்படும் குடி மக்கள் விடுதலையைப் பெறுவதற்குப் பல தடைகள் உள்ளன. சில சந்தர்ப்பங்களில் அரச உத்தியோகத்தர்கள் சமூக விலக்கலுக்கு நேரடியான காரணமாக செயற்படுகின்றனர். வேறு சில சந்தர்ப்பங்களில் அரச உத்தியோகத்தர்கள் சமூக விலக்கலுக்கு மறைமுகமாகப் பங்களிப்பு செய்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவ்வுத்தியோகத்தர்கள் வேண்டுமென்றே பாரபட்சமான  செயல்களைச் செய்வதில்லை. அவர்களுடைய செயல்கள் இருந்து வரும் நடைமுறைகளையும், நியமங்களையும் மீள் உருவாக்கம் செய்வதற்கு உதவுகின்றன. சாதி உறவுகளில் பாதிப்புக்கு உள்ளாதல் பின்வரும் வழிகளில் நடைபெறுகின்றது. 

  • பாரபட்சம் காட்டப்படுதல் (DISCRIMINATION)
  • விளிம்பு நிலைக்குத் தள்ளுதல் (MARGINALISATION)
  • தனிமைப்படுத்தி பிரித்து வைத்தல் (SEGREGATION)
  • மூலதன வளங்களை மறுத்தல் (DEPRIVATION OF CAPITAL)

மேற்கூறியவை சமூக விலக்கலின் கருவிகளாக செயற்படுவதையும் காணலாம். 

சாதிப் படிநிலை அமைப்பு இருக்கும் போது சமூக விலக்கல் தவிர்க்க முடியாதது. மறைமுகமான சமூக விலக்கல்கள் சமூக சமத்துவமின்மையைக்  கட்டமைக்கின்றன. சுய விலக்கல் (SELF EXCLUSION) சிறுபான்மைச் சாதியினரால் சுயமாகவே செய்து கொள்ளப்படுவது; அவமதிப்பு, அசௌகரியம் என்பனவற்றையும் தவிர்ப்பதற்காக அவர்கள் சுய விலக்கலில் ஈடுபடுகின்றனர். மறைமுகமான சமூக விலக்கல் (HIDDEN SOCIAL EXCLUSION) உயர்சாதியினரால், அடிநிலைச் சாதிகளோடு தொடர்புகளை விலக்குவதற்கு கையாளும் நடைமுறையாகும். சாதியடிப்படையிலான பாரபட்சம் காட்டுதலுக்கு சட்டப் பாதுகாப்பைப் பெறுவதும், சட்ட நிவாரணத்தைப் பெறுவதும் சாத்தியமானதாக இல்லை. சட்டமுறைமை, சட்ட அமுலாக்கம் என்பன பலவீனமானவை. சட்டத்திற்கும், யதார்த்தத்தில் அதனை செயற்படுத்துவதற்கும் இடையே இடைவெளி உள்ளது. பண்பாட்டுத் தளத்தில் இடம்பெறும் பண்பாட்டு விலக்கல் சமூக விலக்கல் ஆகும். இது மனித கௌரவத்தைப் பாதிக்கின்றது. 

இக்கட்டுரையில் இடம்பெறும் முக்கிய கலைச் சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன.

CULTURAL EXCLUSION – பண்பாட்டு விலக்கல்

DISCRIMINATION – பாரபட்சம் காட்டுதல்

EQUAL OPPORTUNITY LAWS – சமவாய்ப்புச் சட்டங்கள்

HIDDEN EXCLUSION – மறைமுக விலக்கல்

INDIRECT EXCLUSION – மறைமுக விலக்கல்

MARGINALISATION – விளிம்பு நிலையாக்கல்

MARGINS – விளிம்பு நிலை, எல்லை நிலை

POLITICAL EXCLUSION – அரசியல் விலக்கல்

POLITICAL INCLUSION – அரசியல் உள்ளீர்த்தல்

REPRESENTATION – பிரதிநிதித்துவம்

RESTRICTED DEMOCRACY – மட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம்

SELF EXCLUSION – சுய விலக்கல்

SOCIAL EXCLUSION – சமூக விலக்கல்

பிரசன்ன டி சொய்சா எழுதிய ‘DEMOCRACY IN THE SOCIAL MARGINS; CASTE, SOCIAL EXCLUSION AND THE LIMITS OF DEMOCRATIC CITIZENSHIP IN SRI LANKA’ என்னும் ஆய்வு கட்டுரையைத் தழுவியும், சுருக்கியும் இத் தமிழ் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் ‘JAYADEVA UYANGODA’ அவர்களால் பதிப்பிக்கப்பட்ட ‘DEMOCRACY AND DEMOCRATISATION IN SRI LANKA : PATHS, TRENDS AND IMAGINATIONS (VOL I ,CHAPTER 12, PAGES 487-523)’ என்ற நூலில் இருந்து பெறப்பட்டது. 

image 1

பிரசன்ன டி சொய்சா 

சட்டத்தரணியாக தொழில் புரிபவர். B.A, LL.B ஆகிய பட்டங்களை இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் பெற்றவர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதுகலைமாணி (M.A) பட்டத்தையும் பெற்றுள்ளார். அப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் கலாநிதிப்பட்ட ஆய்வை  மேற்கொண்டு வருகிறார். சர்வதேச உறவுகள் துறையில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார். இலங்கையில் “ஜனநாயகமும் அரசியலும் சாதி உறவுகளும்“ என்னும் பொருள் பற்றிய ஆய்வில் விசேட கவனம் செலுத்தி வரும் ஆய்வாளராக இவர் விளங்குகிறார்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

3172 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (10)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)