Arts
18 நிமிட வாசிப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் 1971 ஏப்ரல் கிளர்ச்சி – பகுதி 1

February 13, 2024 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்று கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம் : G.B கீரவல்ல

வித்தியோதயாப் பல்கலைக்கழக வளாகத்தின் பிக்கு மாணவர் விடுதியில் 1971 ஏப்ரல் 2 ஆம் திகதி ‘ஜனதா விமுக்தி பெரமுன’ என்னும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் ‘பொலிட் பீரோ’வின் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் 1971 ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி பி.ப 11.30 மணிக்கு நாட்டில் உள்ள எல்லா பொலிஸ் நிலையங்கள் மீதும் ஆயுதப் படைகளின் நிலைகள் மீதும் தாக்குதல் தொடுப்பதெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதே மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) இத் தீர்மானத்தின் நோக்கமாகும். இந்த முடிவின் பயனாக நாட்டில் உள்ள 93 பொலிஸ் நிலையங்களின் மீது ஏப்ரல் 5 ஆம் திகதி இரவும் அடுத்த சில நாட்களிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுள் 5 முக்கிய பொலிஸ் நிலையங்கள் ஜே.வி.பியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. இதனைவிட 35 பொலிஸ் பகுதிகள் அதன் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இந்தப் பெரும் அறைகூவலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் பொலிஸ் படை, 43 பொலிஸ் நிலையங்களை கைவிட்டுவிட்டுப் பின்வாங்கியது. பெரும்பாலான இடங்களில் சிவில் நிர்வாகம் முற்றாகவே செயலிழந்தது. ஏப்பிரல் 14 ஆம் திகதியளவில் கொழும்பு நகரம் தவிர்ந்த மாகாண நகரங்களும், அந் நகரங்களை அடுத்த பகுதிகளும் ஜே.வி.பியின் கட்டுப்பாட்டில் வீழ்ந்தன. பொலிஸ் மா அதிபர் கூற்றுப்படி நிலைமை பின்வருமாறு இருந்தது.

“பொலிஸ் நிலையங்கள் கைவிடப்பட்டுப் பின்வாங்கியதும், சிவில் நிர்வாகம் செயலிழந்ததும் காரணமாக இப்பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்தனர். அவர்கள் கூட்டுறவுக் கடைகளில் இருந்த உணவை விநியோகித்தார்கள். தபால் கந்தோர்களில் முத்திரைகளை விற்பனை செய்தார்கள். அவர்கள் நீதிமன்றங்களில் அமர்ந்து நீதி விசாரணைகளையும் நடத்தினார்கள்.”

ஜே.வி.பியின் தாக்குதலின் முறையும் வேகமும் நாட்டின் பெரும்பகுதியின் நிர்வாகத்தை உடனடியாகவே செயலிழக்கச் செய்தது. ஆயினும் ஜே.வி.பியினால் முறைசார்ந்த பாதுகாப்பு ஒழுங்கமைப்பை உருவாக்கி தமது கட்டுப்பாட்டுக்குள் வந்த பகுதிகளின் அதிகார நிறுவனங்களை தம் கைக்குள் கொண்டுவரவோ, தமது படைகளை ஒருங்கிணைத்துப் பலப்படுத்தவோ முடியவில்லை. அரசாங்க ஆயுதப் படைகள் மாவட்ட மையப்பகுதிகளில் தமது ஆட்களை ஒன்று சேர வைத்து மட்டுப்படுத்தப்பட்டளவில் நிர்வாகத்தை கொண்டியங்கியதோடு ஆயுதங்களும், ஆளணியும் கிடைக்கும் வரை சமாளித்துக்கொண்டிருந்தன. ஏப்ரல் 11 ஆம் திகதி பி.ப 7 மணியளவில் கேகாலை மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் பிரதமரின் வதிவிடமான அலரி மாளிகைக்கும் இராணுவத் தலைமையகத்திற்கும் வானொலியூடான செய்தியை அனுப்பிவைத்தார். கேகாலை மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் ஜே.வி.பியின் கட்டுப்பாட்டுக்குள் வீழ்ச்சியுற்றிருந்தன. அங்கிருந்து கிடைத்த பின்வரும் செய்தி அன்றிருந்த நிலையைப் படம் பிடித்துக்காட்டுவதாக இருந்தது.

jvp riot

“கேகாலையின் பிரதான பொலிஸ் அலுவலகம் தவிர்ந்த பிற எல்லாப் பொலிஸ் நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன. இரவு நேர காவல் ‘ரோந்து’ நடைபெறுவதில்லை. சில இடங்களில் கிளர்ச்சியாளர்கள் இரவும் பகலும் கட்டுக்கடங்காமல் திரிகின்றனர். கிளர்ச்சியாளர்களை பின்வாங்கச் செய்யும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும். காலை விடிந்ததும் படை நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளோம். விரிவான அறிக்கை அனுப்பப்படும்.”

ஜனநாயக முறைமை நன்கு வேரூன்றியிருந்த ஒரு நாடு எனக் கருதப்பட்ட இலங்கையில் இப்படியான திடீர் கிளர்ச்சி ஏற்பட்டமை ஒரு எதிர்பாராத அதிர்ச்சியாகும். இலங்கையில் தேர்தல்கள் ஒழுங்காக நடைபெற்று ஆட்சிமாற்றம் சுமுகமாக நிறைவேறிக்கொண்டு வந்தது. ஒரு கட்சி ஆட்சி முறைக்கு மாறும்போக்கு இலங்கையில் வெளிப்படவில்லை. மார்க்சியக் கட்சிகள் கூட்டரசாங்கங்களை அமைத்தன. எதிர்க்கட்சி ஆசனங்களில் திரும்ப அமர்ந்துகொண்டன. அக் கட்சிகளும் பிரித்தானியப் பாராளுமன்ற மரபுகளை விசுவாசத்தோடு ஏற்று ஒழுகின. புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணத்தை அவை கைவிட்டுவிட்டதாகவே தோன்றியது. இக் கிளர்ச்சி நடைபெறும் நாள்வரை இலங்கையை அரசியல் நிலைபேறு அல்லது உறுதிநிலைக்கு சிறந்த உதாரணமான நாடாகக் கருதும் நிலை காணப்பட்டது.

மிதவாத அரசியல் பாரம்பரியம்

பிரித்தானியர் ஆட்சியின் கீழ் (1796-1948) இலங்கையில் இரு தடவைகள் 1818 ஆம் ஆண்டிலும் 1848 ஆம் ஆண்டிலும் இரு கலகங்கள் ஏற்பட்டன. இவ் இரண்டையும் தவிர பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் காலனிய அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் எவையும் இடம்பெறவில்லை. காலனிய அரசிடம் முறையீட்டு மனுக்களைச் சமர்ப்பித்தல், வெள்ளை மாளிகை அலுவலகத்திற்கு அரசியல் சீர்திருத்தக் கோரிக்கைகளை அனுப்புதல், சட்ட சபையில் இலங்கையர்களுக்கு கூடியளவு பிரதிநிதித்துவம் வேண்டும் என வாதாடுதல் போன்ற வழிமுறைகளில் இலங்கையின் படித்த ‘உயர்குழாம்’ அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தது. ஆசியாவின் தேசியவாதத்தின் இலங்கை மாதிரியை ‘சீர்திருத்த இயக்கம்’ (Reform movement) என்றே கூறலாம் என வரலாற்றாசிரியர் கே.எம்.டி. சில்வா குறிப்பிட்டுள்ளார். இச்சீர்திருத்தவாதிகளை ‘அரசியல் யாப்புச் சீர்திருத்தம் கோருவோர்’, ‘மிதவாதிகள்’, ‘பழமைவாதிகள்’ ஆகியோரைக் கொண்ட கலப்புக்குழு எனவும் குறிப்பிடும் சில்வா அவர்கள் இலங்கையின் அரசியல் தலைவர்களின் சீர்திருத்தவாத அரசியல் மனப்பாங்கை சுட்டிக்காட்டுகிறார். இலங்கை 1948 இல் சுதந்திரத்தைப் பெறும்வரை, அதன் அரசியல் முறைமை (Political system) அமைதிப் பாதையில் பரிணாம வளர்ச்சி பெற்றதையும் அது ஆசியாவின் சுதந்திர தேசங்களுள் அரசியல் உறுதிநிலையுடையதாக விளங்கியதையும் மேற்குறித்த வரலாற்றுப் பின்புலத்தில் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.

கிளர்ச்சிவாத இயக்கங்களின் தோற்றம்

அமைதிப் பாதையில் பயணித்த இலங்கையில் 1965 ஆம் ஆண்டின் பின்னர் புரட்சிவாதக் குழுக்கள் தோற்றம்  பெற்றன. இவ்வாறான தலைமறைவு குழுக்கள் சிலவற்றை அடையாளம் காணலாம்.

  1. விஜயவீர குழு
  2. பெரதிக சுலங்க குழு
  3. கினிபுப்புர குழு
  4. சுமித்தெவிநுவர
  5. தர்மசேகர குழு
  6. சமாஜவாத சங்கமய

என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட ஆறு வெவ்வேறு குழுக்கள் இக்காலத்தில் செயற்பட்டன. இக்குழுக்கள் மரபுவழி இடதுசாரிகளோடு முரண்பாடு கொண்டனவாய் அவர்களோடு தொடர்பை முறித்துக் கொண்டிருந்தன. இறுதியில் ரோஹண விஜயவீர குழு ‘ஜனதா விமுக்திப் பெரமுன’ (மக்கள் விடுதலை முன்னணி) என்னும் இயக்கத்தை கட்டியெழுப்பி, புரட்சியொன்றின் மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்குடன் செயற்படலாயிற்று. 1971 ஏப்ரல் கிளர்ச்சி மேற்குறித்த வளர்ச்சிப் போக்குகளின் தர்க்கரீதியான விளைவு எனவே கருதலாம். ஜே.வி.பி எனப்படும் இம் மக்கள் விடுதலை முன்னணியினால் நடத்தப்பட்ட 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் முக்கிய இயல்புகள் பின்வருவன.

Rohana VijayaweerA

1. இக் கிளர்ச்சி தன்னியல்பாகத் தோன்றிய ஒழுங்கமைக்கப்படாத கிளர்ச்சியன்று. இதனை ஒழுங்கமைக்கப்படாத விவசாயிகள் கிளர்ச்சி, உணவுக் களஞ்சியங்களை உடைத்துப் பங்கிடும் கிளர்ச்சிகள் (Food Riots), மாணவர்கள் கிளர்ச்சிகள் போன்றவற்றுடன் ஒப்பிடுதல் ஆகாது. இது ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இயங்கிய ஒரு இயக்கத்தின் திட்டமிடப்பட்ட ஆயுதக் கிளர்ச்சியாகும். இக் கிளர்ச்சியாளர்கள் அரசு அதிகாரத்தை (State Power) கைப்பற்றுதல் என்ற நோக்கத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். 1971 இற்கு முந்திய பல ஆண்டுகளாக இளைஞர்களை அணிதிரட்டி அவர்களுக்குத் திட்டமிட்டபடி விரிவுரைகளை நிகழ்த்தியும் பயிற்சி முகாம்களை நடத்தியும் தமது கொள்கையைப் பரப்பி இளைஞர்களை வசப்படுத்தினர். இளைஞர்கள் சிறு சிறு கட்சிக் குழுக்களாக (Party Cells) ஒழுங்கமைக்கப்பட்டனர்.

2. இக் கிளர்ச்சியின் இரண்டாவது முக்கிய இயல்பு, இக் கிளர்ச்சி முழுமையாக இளைஞர்களால் நடத்தப்பட்டமையாகும். ஏப்ரல் கிளர்ச்சியை அடுத்து கைது செய்யப்பட்டவர்களில் தாமாகவே சரணடைந்தவர்கள் பற்றிய புள்ளிவிபரங்களின் படி 86.6 வீதத்தினர் 16-32 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களாகக் காணப்பட்டனர்.

3. 1971 கிளர்ச்சி, அக் கிளர்ச்சிக்கு ஓராண்டு காலத்திற்கு முன்னர் 1970 இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட கிளர்ச்சியாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இக் கூட்டணி, ரொட்சிசவாத கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மொஸ்கோ பிரிவு) ஆகிய இரு இடதுசாரிக் கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அமைந்ததாக இருந்தது. மேற்குறித்த இரண்டு இடதுசாரிக் கட்சிகளிடமும் பலமிக்க தொழிற்சங்கங்கள் இருந்தன. இத் தொழிற்சங்க ஆதரவு கூட்டணி, அரசாங்கத்திற்கு அரசியல் பலத்தை வழங்குவதாக அமைந்தது. கூட்டணி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுப் பதவிகள் சில மேற்குறித்த இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. நிதி அமைச்சு அவ்வாறான அமைச்சுக்களில் ஒன்றாக இருந்தது. இடதுசாரி அமைச்சர்கள் வெளி உலகால் ‘மார்க்சிஸ்டுகள்’ என நன்கு அறியப்பட்டவர்களாக இருந்தனர்.

JVP protest

ஆட்சியிலிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம், இக் கிளர்ச்சியானது அரசியல் நோக்குடன் கொள்கைகள் எதுவுமில்லாத சில பிரிவினரால் தூண்டப்பட்ட ஒன்று என அறிவித்தது. இடதுசாரி அரசியல் கட்சிகளும் மக்கள் விடுதலை முன்னணியை ஒரு பிற்போக்குவாத இயக்கம் எனவும் இடதுசாரிச் சார்புடைய ஒரு அரசாங்கத்திற்கு எதிராக இவ் இயக்கம் ஆயுதங்களைத் தூக்கியுள்ளது எனவும் குற்றம் சாட்டின. மக்கள் விடுதலை முன்னணி இடதுசாரி அரசியலுக்கு எதிரான பிற்போக்கு இயக்கம் என்ற வகையில் அரசாங்கமும் அரசாங்கத்தோடு கூட்டணியில் இணைந்திருந்த கட்சிகளும் விளக்கம் கொடுத்தன. இந்த விளக்கம் மக்கள் விடுதலை முன்னணியின்  தோற்றத்திற்கான சமூக –  பொருளாதார காரணிகளை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அவ் இயக்கம் ஆயுதமேந்தி போராடும் வழியை தெரிவு செய்தமைக்கான காரணங்களை பிற்போக்கு இயக்கம் என்ற அடையாளப்படுத்தல் விளக்கவில்லை எனவும் பல புலமையாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் தோற்றத்தை வரலாற்று நோக்கில் புரிந்து கொள்ள வேண்டும் என நாம் கருதுகின்றோம்.  அவ்வாறான புரிதலுக்கு பின்வரும் இரண்டு வினாக்களுக்கான விடைகளைத் தேட வேண்டும் எனவும் கருதுகின்றோம்.

1. இலங்கையின் தாராண்மைவாத அரசியல் முறைமை (Liberal system) 1956 ஆம் ஆண்டு முதல் மக்கள் வாதம் என்னும் திருப்பத்தை எடுத்திருந்த பின்புலத்தில் அம்முறைக்குள் இருந்து பாராளுமன்றப் பாதையை நிராகரித்து பலாத்கார வழிகளில் ஆயுதமேந்திய போராட்டம் மூலம் அரசு அதிகாரத்தை கைப்பற்றும் தந்திரோபாயத்தைக் கையாளும் ஒரு இயக்கம் தோன்றியது ஏன்?

2. தலைமறைவு இயக்கமாகச் செயற்பட்ட புரட்சி இயக்கத்தினரின் நடவடிக்கைகளையும், அப் புரட்சி இயக்கத்தவர்களையும், 35 ஆண்டு கால வரலாற்றையுடைய மரபுவழி இடதுசாரிக் கட்சிகள் தம் கட்சிகளுடன் இணைத்து உள்ளீர்த்துக் கொள்வதற்குத் தவறியதன் காரணங்கள் யாவை?

மேற்குறித்த இரு வினாக்களுக்கான விடையைத் தேடுவதாயின், இலங்கையில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்டுவந்த சமூக – பொருளாதார மாற்றங்களையும் அரசியல் வளர்ச்சிகளையும் ஆராய்தல் அவசியம் எனக் கருதுகிறோம்.  இவ்விதமான ஆய்வு, இலங்கைச் சமூகத்தில் வர்க்கங்களின் உருவாக்கம், அச் சமூகத்தின் சமூக – பொருளாதார அரசியல் கட்டமைப்புகளின் பரிணாம வளர்ச்சி, அங்கு தோற்றம் பெற்ற முரண்பாடுகளின் இயல்பு ஆகியவற்றை தெளிவுபடுத்துவதாக அமையும் எனலாம். இலங்கை அரசியல் சுதந்திரம் பெற்றபோது வெளித்தோற்றத்தில் அது உறுதியுடைய சமூக – பொருளாதார அரசியல் கட்டமைப்புகளை கொண்ட நாடாகக் காட்சியளித்தது. ஆயினும் அதன் உள்ளார்ந்த முரண்பாடுகள் எதிர்காலத்தில் வன்முறை மோதலாகவும், கிளர்ச்சியாகவும் வெளிப்படக்கூடிய இயல்பைக் கொண்டிருந்தன.

jvp ARREST

இலங்கையின் பொருளாதாரம்

பிரித்தானியரால் 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் ஏற்றுமதி – இறக்குமதி மாதிரியிலான (Export – Import Model) பொருளாதாரம் உருவாக்கம் பெற்றது. மத்திய மலைப்பகுதிகளில் முதலில் கோப்பித் தோட்டங்களும் பின்னர் தேயிலைத் தோட்டங்களும் பிரித்தானிய கம்பனிகளால் ஆரம்பிக்கப்பட்டன. இத் தோட்டங்களில் பிரித்தானியக் கம்பனிகளின் முதலீடு பிரதான பங்கைப் பெற்றிருந்தது. இலங்கையின் கரையோர மாகாணங்களில் இறப்பர், தென்னைத் தோட்டங்கள் இலங்கையர்களான முதலீட்டாளர்களால் ஆரம்பிக்கப்பட்டன. தேயிலை என்ற பிரதான ஏற்றுமதிக்குத் துணையான மேலதிக ஏற்றுமதிப் பண்டங்களான இறப்பர், தென்னை உற்பத்திகளில் இலங்கையர்களின் முதலீடு பிரதான இடத்தைப் பெற்றது.

மேற்குறித்த ஏற்றுமதி உற்பத்தித்துறைக்கு அருகே விவசாயக் குடியான்களின் மரபுவழி விவசாய உற்பத்தி முறை இயங்கியது. பிழைப்பூதிய உற்பத்தியாகவிருந்த விவசாயக் குடியான் உற்பத்தி சிற்றுடைமைப் பண்ட உற்பத்தியாக (Commodity Production) மாற்றம் பெற்றது. குடியான் சமூகத்தின் மேன்மிகை உற்பத்தி சந்தையில் விற்பனைக்குரிய பண்டங்களாக ஆகியதால், கிராம மட்டத்தில் பரிவர்த்தனை உறவுகள் (Exchange Relations) விருத்தியுற்றன. பண்ட உற்பத்தியின் விரிவாக்கம் பணப் பரிவர்த்தனையை அதிகரிக்கச் செய்தது. இம் மாற்றங்களின் விளைவாகக் குடியான் சமூகமும், பொருளாதாரமும் நாட்டின் முழுமையான பொருளாதாரக் கட்டமைப்பின் பகுதியாக இணைக்கப்பட்டன.

கொழும்பு நகரமும் பிற நகரங்கள் சிலவும் வர்த்தக நிறுவனங்களதும் நிர்வாக நிறுவனங்களினதும் தலைமை மையங்களாக விருத்தியுற்றன. கொழும்பை மையமாகக் கொண்டு போக்குவரத்து வலையமைப்பு, நாடு முழுவதையும் ஒன்றிணைக்கும் வகையில் விருத்தியுற்றது.

பிரித்தானியர் ஆட்சியில் இலங்கையில் உருவான பொருளாதார அமைப்பை இரட்டைப் பொருளாதாரம் (Dual Economy) என அழைப்பதுண்டு. இப் பொருளாதாரம் தோட்டத்துறை, மரபுவழி விவசாயத்துறை என்ற இருவேறு பிரிவுகளைக் கொண்டதாய் இருந்தமையால் இரட்டைப் பொருளாதாரம் என்ற வருணிப்பில் பொருத்தமுடைமை உள்ளது.

அ. தோட்டத்துறை – பெருந்தோட்ட விவசாயம், கைத்தொழில் உற்பத்தி, வர்த்தகமும் சேவைத் துறைகளும் என்பன ஒருங்கிணைந்தவையாக இருந்தன. இத்துறையின் உற்பத்தி ஏற்றுமதிக்கான உற்பத்தியாகவும் விளங்கியது.

ஆ. கிராமத்து விவசாயத்துறை – பிழைப்பூதிய விவசாயம், கைவினைத் தொழில்கள், உள்நாட்டு வர்த்தகத்திற்குரிய பண்ட உற்பத்தி, மக்களின் நுகர்வுத் தேவைக்கான உற்பத்தி.

மேற்குறித்த இரட்டைத்துவம் (Dualism), அந்நிய முதலாளித்துவம் மரபுவழிப் பொருளாதார முறைமையின் மீது செலுத்திய தாக்கத்தால் ஏற்பட்ட திணிப்பு ஆகும். இலங்கையின் ஏற்றுமதித் துறை நவீனத்துவ முறையாக, மரபுத்துறையில் இருந்து வேறுபட்ட பாதையில் விரைவாக முன்னேறிச் சென்றது என்று கூறமுடியாது. இலங்கையின் பொருளாதாரம் முதலாளித்துவ வளர்ச்சியின் பயனான குறைவிருத்தியை (Under – Development) வெளிப்படுத்தியது. அந்திய முதலீட்டாளர்களின் நலன்களுக்கு ஏற்றவகையில் மரபுவழி விவசாயத்துறை, ஏற்றுமதி உற்பத்திக்குக் கீழ்ப்பட்டதாய் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றம், மேற்குறித்த பொருளாதாரக் கட்டமைப்புடன் தொடர்புடையது. புதிதாக தோற்றம்பெற்ற இம் முதலாளி வர்க்கம் ‘கம்பிரடோர் முதலாளி வர்க்கம்’ (Comprodore Bourgeoise) என கூறத்தக்க வர்க்கத்தின் இயல்புகளை உடையது. இலங்கையின் தேசிய உயர்குழாம் (National ELite) கம்பிரடோர் முதலாளித்துவத்தின் பண்புக்கூறுகளை கொண்டிருந்தது. இக் கட்டுரையில் நாம் இவ் வர்க்கத்தினைப் பற்றி ஆராயப் போவதில்லை. மாறாக சுதேசிய முதலாளி வர்க்கத்தின் தோற்றத்தினால் கிராமிய மட்டத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் பற்றியே நாம் கவனம் செலுத்த விரும்புகின்றோம்.

கிராமியத்துறை மாற்றங்கள்

பிரித்தானிய காலனியம் கிராமியத் துறையில் இருவகையான தாக்கங்களை ஏற்படுத்தியது. 

அ. காலனியம் கிராமங்களில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை உருவாக்கியது. ஆனால் உற்பத்தி உறவுகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய முறையில் உற்பத்திச் சக்திகள் (Forces of Production) வளர்ச்சியடையவில்லை. 

ஆ. பொருளாதாரத்திலும் நிர்வாகத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள் கிராமிய சமூகங்களில் புதிய வகை வேலைவாய்ப்புகளை உருவாக்கின. 

இவ் விருவகையான தாக்கங்களில் முதலாவதான உற்பத்தி உறவுகளில் ஏற்பட்ட மாற்றம் முக்கியமானது. பிந்திய காலத்தில் ஏற்பட்ட சிக்கலான சமூக விருத்திக்கு இதுவே காரணமாயிற்று.

கிராமப் பகுதிகளில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் வளர்ச்சியடைந்தன எனக் கூறினோம். இதன் விளைவு யாது? கிராமங்களின் மேன்மிகை உற்பத்தி, பண்டங்கள் (Commodities) வடிவில் வெளியே சென்றது. இது மரபுவழிச் சமூகத்தில் இருந்துவந்த சமநிலையைக் குழப்பியது. புதிய நுகர்வுத் தேவைகள் உருவாகின. நுகர்வுக்கான பண்டங்கள் வெளியிலிருந்து வரவேண்டியதாயிற்று. இப் பண்டங்களின் நிரம்பலும் விலைகளும் சர்வதேச வர்த்தகப் போக்குகளால் தீர்மானிக்கப்படுவனவாய் இருந்தன. கிராமப்புற மக்கள் தமது நுகர்வுத் தேவைகளுக்காக வெளியிலிருந்து வரும்  பண்டங்களில் தங்கியிருக்கும் நிலை இன்று வரை தொடர்கிறது. அரிசி, கோதுமை மா, எண்ணெய், சீனி, உடுதுணிகள் ஆகிய பொருட்கள் வெளியிலிருந்து வரவேண்டியிருந்தது. இம் மாற்றம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிப்பட்டுத் தெரிந்தது. 1911 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு அறிக்கையில் டென்ஹாம் (Denham) பின்வருமாறு குறிப்பிட்டார்.

“கடந்த நூறாண்டு காலத்தில் சுதேச மக்களின் பழக்கவழக்கங்களும் தேவைகளும் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் பெற்றுவிட்டன. இதனால் இன்று ஐரோப்பியப் பொருட்களுக்கான கேள்வி பெருமளவில் அதிகரித்துவிட்டது.”

மேற்கண்டவாறு நுகர்வுத் தேவைகள் மாறிக்கொண்டிருந்த வேளை, கிராமங்களின் நில உடமை முறையில் மாற்றம் ஏற்பட்டது. காணி, சந்தையில் விற்பனைக்குரிய பண்டம் (Commodity) ஆகியது. 19 ஆம் நூற்றாண்டில் காணிகள் அரசால் விற்பனை செய்யப்பட்டன. இதனால் கிராமங்களைச் சூழவுள்ள காணிகள் புதிய உடமையாளர்களிடம் குவிந்தது. தானிய வரி (Grain Tax) இதனை மேலும் மோசமாக்கியது. வரியைக் கட்ட முடியாத குடியான் விவசாயிகள் காணிகளை குத்தகைக்கு கொடுத்தல், அடகு வைத்தல், விற்றல் ஆகிய வழிகளில் புதிய முதலாளிகளுக்கு விற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். வரி கொடுக்காதவர்களின் காணிகளை அரசாங்கம் ஏலத்தில் விற்பனை செய்து வரியை அறவிட்டது. இதன் பயனாக கிராமங்களில் அமைப்பு மாற்றம் (Structural Change) ஏற்பட்டது. உற்பத்தி உறவுகளில் (Production Relations) ஏற்பட்ட இம் மாற்றம் கூலி உழைப்பாளர் வகுப்பு என்னும் புதிய வர்க்கத்தை உருவாக்கியது. முன்பு உழைப்பு மூன்று வடிவங்களில் பெறப்பட்டது. அவையாவன:

  1. உழைப்பு வாடகை (Labour rent)

தான் பயிரிடும் நிலத்திற்காக கிராமத்து நிலப்பிரபுவின் காணியில், குடியான் உழைப்பை வழங்குதல் உழைப்பு வாடகை எனப்பட்டது.

  1. உழைப்பு பரிவர்த்தணை (Exchange Labour)

உழவு, அருவி வெட்டுதல், சூடு மிதித்தல் போன்ற வேலைகளை குடியான் விவசாயிகள் பரஸ்பரம் பரிமாறுதல். உதாரணமாக ‘A’ என்ற விவசாயி ‘B’, ‘C’ ஆகியவர்களின் காணியில் நடைபெறும் அருவி வெட்டுதல், சூடு மிதித்தல் என்பவனற்றில் தனது உழைப்பை வழங்குவார். பின்னர் ‘B’, ‘C’ ஆகியோரும் தமது உழைப்பை ‘A’ இற்கு வழங்குவர். சிங்கள மரபுவழிச் சமூகத்தில் ‘அத்தம்’ என அழைக்கப்படும் உழைப்பு பரிவர்த்தனை முறை இருந்து வந்தது.

  1. பங்காளி முறைப் பயிரிடுதல் (Sharecropping) 

சிங்கள மொழியில் இது ‘அன்டே’ (Ande) எனப்படும். நிலப்பிரபு, குடியான் பயிரிடும் நிலத்திற்குரிய உள்ளீடுகளான (Inputs) விதைநெல், பசளை, உழவுக்கான எருமைகள் போன்றவற்றை வழங்குவார். குடியான் உழைப்பை மட்டும் வழங்குவார். அறுவடையின் அரைப்பகுதிக்கு மேல் நிலப்பிரவிற்கு சேரும்.

மேற்கூறிய மூன்று வடிவங்களில் வழங்கப்பட்ட உழைப்பு பணத் தொடர்பு (Cash Nexus) இல்லாதது. ஆனால் புதிதாகப் புகுந்த கூலி உழைப்பு, கிராம சமூகத்தில் உழைப்பின் பரிவர்த்தனையை பணத்தைக் கொடுத்து வாங்குவதும் விற்பதுமான உறவாக மாற்றியது. பணத் தொடர்பு சமூக கட்டமைப்பைக் குலைத்து புதியவகை உறவுகளை வேலை கொள்வோர் (Employer) – வேலையாள் (Employee) உறவாக மாற்றியது.  இந்த மாற்றங்களின் ஒட்டுமொத்த விளைவாகக் கிராமப்புறத்தில் ஏற்பட்ட மாற்றங்களை காலனிய முறைமையின் கீழ் ஏற்பட்ட தங்கியிருத்தல் முதலாளித்துவம் (Dependent Capitalism) எனலாம்.

கிராம சமூகத்தின் மூன்று பிரதான வர்க்கங்கள்

கிராமச் சமூகத்தில் முதலாளித்துவ உறவுகள் வளர்ச்சியுற்றன எனக் குறிப்பிட்டோம். அவ்வாறாயின் அங்கு முயற்சியாளர் வகுப்பு (Entrepreneurial Class) தோன்றுவதற்கான நிலைமைகள் உருவாகின எனலாம். ஆயினும் அங்கு முயற்சியாளர் வகுப்பு உருவாகவில்லை. அதற்குப் பதிலாக, சிங்களக் கிராமப்புறத்தில் பின்வரும் மூன்று முக்கியமான வகுப்புகள் தோன்றின.

  1. கடை வைத்திருப்போர் (Shopkeepers)

கிராமத்தின் நுகர்வுத் தேவைகளை பூர்த்திசெய்யக் கூடியவர்களான வர்த்தகர்கள் எல்லாக் கிராமங்களிலும் கடைகளை ஆரம்பித்தனர். புதிய வர்த்தக வாய்ப்புக்களால் இவர்கள் நன்மை பெற்றனர்.

  1. நில உடமையாளர்கள்

கிராமப் புறங்களில் உருவான காணிச் சந்தையை (Land Market) பயன்படுத்தி நன்மை பெற்ற நில உடமையாளர் வகுப்பினர் இவ் வகையினராவர்.

  1. புதிய தொழில் வாய்ப்புகளால் நன்மை பெற்ற சம்பளம் பெறும் உழைப்பாளர் வகுப்பு

கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்தி கிராமத்துக்கு வெளியே அரச – தனியார் அலுவலகங்கள், கைத்தொழில் ஆகியவற்றின் மூலம் சம்பளம் பெறும் உழைப்பாளர்கள் இப் பிரிவுகளில் அடங்குவர்.

இந்த மூன்று வர்க்கங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை; பொருளாதாரம், சமூகம் என்ற இரு நிலைகளிலும் இவை ஒன்றாகப் பிணைக்கப்பட்டவை. புதிதாக உருவாக்கம் பெற்ற கிராமச் சமுதாயத்தின் மிக முக்கியமான இயல்புகளில் ஒன்று மேற்குறித்த வர்க்கங்களின் பிணைப்பு ஆகும். ‘அரச மர நிழலில் சாதி, இரத்த உறவுமுறை, திருமணம் – இலங்கையின் உட்பகுதிக் கிராமங்கள் பற்றிய ஆய்வு (Under The Bo Tree : Studies In Caste – Kinship and Marriage in the Interior Ceylon) என்ற நூலின் ஆசிரியரான நூர் யல்மன் (Nur Yalman) கிராமங்களின் கடை ‘முதலாளிகள்’ பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டார். 

“இலங்கையின் நிலவரைக் காட்சியின் (Landscape) குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் கிராமங்கள் தோறும் காணப்படும் கிராமத்து கடைகளாகும். இச் சிறுகடை வியாபாரிகள் தனிமைப்பட்ட ஒதுக்குப்புறமான கிராமங்களுக்குக் கூட பணப் பொருளாதாரத்தைப் புகுத்தியுள்ளனர்.”  

நூர் யல்மன் கண்டியின் ‘தெறுத்தன்ன’ (Terutenne) என்ற கிராமத்தின் கடை வியாபாரிகள் மற்றும் நில உடமையாளர்கள் பற்றிய புள்ளிவிபர அட்டவணையைத் தந்துள்ளார்.

Chart

மேலே குறிப்பிட்ட நபர்கள் யாவரையும் ஒன்றாகச் சேர்த்து ‘கிராமத்துக் குட்டி முதலாளித்து வர்க்கம்’ (Rural Petty Bourgeoisie) எனலாம். இவ் வர்க்கத்தின் பொருளாதார அடித்தளம் பரிவர்த்தனைச் சாதனங்களின் சிற்றுடைமை (Ownership of Small Scale Means of Exchange) ஆகும். இக் கடை வியாபாரிகளும் நில உடமையாளர்களும் கிராமத்து காணிகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தைப் பெற்று கிராமத்தில் செல்வாக்குள்ள மனிதர்களாக இருந்தனர். இவர்களில் சிலருக்கு கிராமத்துக்கு வெளியே நகரப் பகுதிகளில் தொழில்கள் செய்வதன் மூலமும் மேலதிக வருமானம் கிடைத்தது.

கிராமத்து குட்டி முதலாளித்துவ வகுப்பு கிராமத்தில் தமக்குள்ள சமூக அந்தஸ்தை பயன்படுத்தி தம் பிள்ளைகளுக்கு வேலை தேடிக் கொடுக்கக் கூடியவர்களாய் இருந்தனர். இதனால் இவர்கள் சமூக – பொருளாதார நிலையில் உயர்ந்தனர். கிராமிய – சமூக நிறுவனங்களான கிராமச் சபைகள், கிராம நலன் விருத்திச் சங்கம், மது ஒழிப்புச் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றில் முக்கிய பதவிகளை இவர்கள் வகித்தனர். 20 ஆம் நூற்றாண்டின் அரசியல் மாற்றங்கள் குட்டி முதலாளி வகுப்பை கிராமத்தின் மிகச் சக்தி வாய்ந்த வகுப்பாக மாற்றியது. குறிப்பாக 1931 இல் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டமை இந்த வகுப்பின் ஆதிக்கம் வளர வழிவகுத்தது. சிங்கள மொழிப் பாடசாலை ஆசிரியர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், கிராம சபை உறுப்பினர்கள், கடை முதலாளிகள் ஆகியோர் அரசியல் களத்தில் அதிகாரம் மிக்கவர்களாக விளங்கினர். குட்டி முதலாளித்துவக் கருத்தியல், மேலாதிக்கம் பெற்ற கிராமியக் கருத்தியலாக (Dominant Rural Ideology) விளங்கியது.

உற்பத்தி முறையில் (Mode of Production) முழுமையான மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால் முதலாளித்துவ சமூக உறவுகள் கிராம சமுதாயத்தில் வளர்ச்சியடைந்திருந்தன. இந் நிலைமை, வளர்ச்சியுறாத உற்பத்தி முறையின் மீதான புதிய சமூக உறவுகளின் சுமத்துதல் (Super Imposition) எனலாம். இது இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் இயல்பை நிர்ணயிப்பதாக அமைந்தது. முதலாளித்துவம் வளர்ச்சியடையும் போது உழைப்பாளி வர்க்கம் உற்பத்திச் சாதனங்களை (Means of Production) இழந்து, உழைப்புச் சக்தியை சந்தையில் விற்பனை செய்பவர்களாக மாறுவர். ஆனால் இலங்கையின் தொழிலாளி வர்க்கம் கிராமப்புறத்தில் வேர் கொண்டதாக இருந்தது. தமது சொத்துக்களை உடமையாக வைத்துக்கொண்டு கிராமத்துக்கு வெளியே அயலில் உள்ள நகரப்பகுதியில் தொழில்செய்து வருமானத்தையும் பெற்றனர். நிலம், வியாபாரக் கட்டிடங்கள், வாகனங்கள் போன்ற உடமைகள் மூலமும் இவர்களுக்கு வருமானம் கிடைத்தது. சமூகவியலாளர் நியூட்டன் குணசிங்க ‘கண்டியின் கிராமம் ஒன்றில் உற்பத்தி உறவுகளும் வர்க்கங்களும்’ (Production Relations and Classes in a Kandyan Village) என்னும் தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“பெருந்தொகையான தொழிலாளர்கள் பிரதான நகரங்களைச் சூழவுள்ள கிராமங்களில் வதிபவர்களாக உள்ளனர். கிராமத்தின் வாழ்க்கைத் தராதரத்தை கொண்டு மதிப்பிடும்போது இவர்கள் உயர் வருமானம் பெறும் குழுவினராக உள்ளனர். அவர்கள் கிராமத்து தொழிலாளர்களையும் வறிய விவசாயக் குடியான்களையும் விட உயர் வருமானத்தைப் பெறுகின்றனர். கிராமத்து மக்களுடன் நகரப் புறத் தொழிலாளர் இயக்கத்தை தொடர்புபடுத்துபவர்களாக இத் தொழிலாளர்கள் விளங்குகின்றனர். இத் தொழிலாளர்கள் கிராமத்தில் வதிபவர்களாக இருப்பதன் காரணம் அவர்களுக்கு கிராமத்தில் சொத்துக்கள் உடமையாக இருப்பது தான்.  அவர்கள் கிராமப் பின்னணியில் சுரண்டப்படுவதில்லை; அவர்களின் மீதான உழைப்புச் சுரண்டல் கிராமத்திற்கு வெளியே இடம்பெறுகிறது. அவர்களின் வர்க்க உணர்வு நிலையில் (Class Consciousness) சொத்துடைமை சில மட்டுப்பாடுகளை விதிக்கிறது. எனினும் இதனை பெரிய பின்னடைவு என்றும் கூறமுடியாது (Gunasinghe. Newton 1975).”

தொழிலாளர் வர்க்கத்தின் குட்டி முதலாளித்துவ இயல்புகள், இலங்கையின் குட்டி முதலாளித்துவ வளர்ச்சியின் தன்மையினால் தீர்மானிக்கப்படுவதைக் காணலாம்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

7579 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (10)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)