Arts
24 நிமிட வாசிப்பு

தனிநபர் உரிமைகளும் அரசு அதிகாரமும் : பிறேஸ் கேர்டில் விவகாரத்தை முன்வைத்து ஓர் மீளாய்வு – பகுதி 1

April 16, 2024 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளை கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்று கொண்டு வருதலும் உள்ளீர்த்து தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன

றெஜி சிறிவர்த்தன அவர்கள் 2000 ஆம் ஆண்டில் எழுதிய ஆய்வுக் கட்டுரையொன்றின் ஆங்கிலத் தலைப்பு பின்வருமாறு அமைந்தது:

“THE BRACE GIRDLE AFFAIR IN RETROSPECT: CONTRADICTIONS OF IMPERIALISM, OF THE POST COLONIAL STATE AND OF THE LEFT”

மேற்படி கட்டுரையின் மையப் பொருளாக தனிநபர் உரிமைகளும் அரசு அதிகாரமும் (RIGHTS OF THE INDIVIDUAL AND THE POWER OF THE STATE) என்னும் விடயப் பொருள் அமைந்துள்ளது. 

1937 இல் பிறேஸ் கேர்டில் என்ற பிரிட்டிஷ்காரரை நாடு கடத்தும் கட்டளையை அக்காலத்தில் ஆளுநராக இருந்த சேர். எட்வார்ட் ஸ்ரப்ஸ் பிறப்பித்தார். இக் கட்டளைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் ஆளுநரின் கட்டளை இலங்கையின் அரசியல் யாப்புக்கு மாறானது (UN-CONSTITUTIONAL) என்றும் சட்டப்படி செல்லாதது என்றும் உயர் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியது. இப் புரட்சிகரமான நீதித் தீர்ப்பை மையமாக வைத்து றெஜி சிறிவர்த்தன தனிநபர் உரிமைகளும் அரசு அதிகாரமும் என்ற விடயத்தை அலசுகிறார். ‘பிறேஸ்கேர்டில் விவகாரம்‘ (THE BRACEGIRDLE AFFAIR) கட்டுரையாசிரியருக்கு இப்பொருளை மையமாக வைத்து மூன்று முரண்பாடுகளை, இலங்கையின் அரசியல் வரலாற்றோடு தொடர்புபடுத்தி ஆராய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது. இக் கட்டுரையில் அவர் ஆராய்ந்து வெளிப்படுத்திய மூன்று முரண்பாடுகளாவன:

  1. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள் (CONTRADICTIONS OF IMPERIALISM)
  2. இலங்கையின் பின்காலனிய அரசின் முரண்பாடுகள் (THE CONTRADICTIONS OF THE POST COLONIAL STATE)
  3. இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் முரண்பாடுகள் (THE CONTRADICTIONS OF THE LEFT)

இம் மூன்று முரண்பாடுகளையும் விளக்கிக் கூறும் றெஜி சிறிவர்த்தன பின்வரும் விடயங்களைப் பற்றிய கூர்மையான அரசியல் விமர்சனத்தை முன்வைக்கிறார்.

  1. 1931 ஆம் ஆண்டில் சர்வச வாக்குரிமையின் படியான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட சட்ட சபையை (LEGISLATURE) உருவாக்கிய பிரித்தானியா, இலங்கையில் சுதந்திரமான நீதிமுறையையும் உருவாக்கியது. தாராண்மை ஜனநாயகத்தின் இரு தூண்களான இவ்விரு நிறுவனங்களையும் உருவாக்கியதன் மூலம் முற்போக்கான பாதையில் இலங்கையை நடத்திச் சென்ற பிரித்தானியா, ஆளுநர் என்ற சர்வாதிகாரியிடமும், மூன்று செயலாளர்களிடமும் கட்டுப்பாடற்ற நிர்வாக அதிகாரத்தையும் கொடுத்திருந்தது. காலனிய அரசு இரு முகங்களைக் கொண்டதாக இருந்தது. ஒன்று தாராண்மைவாதம் (LIBERALISM) என்ற முகம், மற்றது ஏகாதிபத்திய நலன்களை வெளிப்படுத்திய ஒடுக்குமுறை (REPRESSION) என்ற முகம். இவையே ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள். 
  1. காலனிய காலத்தின் நீதித்துறை பிறேஸ்கேர்டில் வழக்கில் புரட்சிகரமான தீர்ப்பை வழங்கியது. 

நிர்வாக அதிகாரத்தைக் கொண்டிருந்த ஆளுநரின் நாடு கடத்தல் கட்டளையை சட்ட முரணானது எனத் தீர்ப்பளித்து, ஆளுநரின் முகத்தில் கரி பூசுவதாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்தது. 

பின்காலனிய அரசு (POST COLONIAL STATE) காலனிய அரசை விட மேம்பாடுடையதாக இருந்ததா என்ற முக்கியமான கேள்வியை எழுப்பும் றெஜி சிறிவர்த்தன, பிரதமர் சேர்.யோன். கொத்தலாவல, சிறிமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர். ஜயவர்த்தன ஆகிய இலங்கையின் நிர்வாகத்துறைத் தலைவர்களான பிரதமர்களதும் ஜனாதிபதியினதும் அரசியல் நடத்தையை நுண் பரிசீலணைக்கு உட்படுத்துகிறார். 

  1. பிறேஸ் கேர்டில் விவகாரத்தின் மூலம் பிரபலம் தேடிய இடதுசாரித் தலைவர்கள் பின்காலனிய கட்டத்தில் எவ்விதம் நடந்து கொண்டார்கள்? இலங்கையின் இடதுசாரி இயக்கம் பிறேஸ் கேர்டில் என்ற தனிநபரின் உரிமைக்காக போராடிய வீர வரலாற்றைக் கொண்டதென்றால், காலனிய அரசின் கீழ் வாக்குரிமை பெற்றுத்தந்த தோட்டத் தொழிலாளர் வகுப்பை நாடற்றவர்களாக்கிய பின்னர், சிறிமா–சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் நாடு கடத்திய போது கண்மூடி மௌனம் காத்த செயலை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

மேற்குறித்த மூன்று முரண்பாடுகள் பற்றியும் பரிசீலிப்பதற்கு முன் பிறேஸ் கேர்டில் பற்றிய விபரங்களைச் சுருக்கமாகக் குறிப்பிடுவோம். 

யார் இந்த பிறேஸ் கேர்டில்?

பிறேஸ் கேர்டில் பிரித்தானியாவில் பிறந்தவர். பிரித்தானியப் பிரஜையான பிறேஸ் கேர்டில் தனது 16 வயதில் அவுஸ்திரேலியாவிற்குச் சென்று அங்கு வாழ்ந்தார். பின்னர் 1936 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தார். அவர் இலங்கையில் கம்பனியொன்றின் தேயிலைத் தோட்டத்தில் ‘தோட்டத்துரை’ (PLANTER) வேலையில் பயிற்சியாளராகச் சேர்ந்து வேலை செய்து வந்தார். அவுஸ்திரேலியாவில் இருந்த காலத்தில் அங்கு ‘வாலிபர் கம்யூனிஸ்ட் கழகத்தில்‘ உறுப்பினராகச் சேர்ந்து கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளராக இருந்த பிறேஸ் கேர்டில் இலங்கையில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த காலத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மீது அனுதாபம் உடையவராகவும், இடதுசாரிகளோடு தொடர்புடையவராகவும் இருந்தார். இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் புலனாய்வாளர்கள் இவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்தனர். ஆளுநருக்கு இவரைப் பற்றிய குற்றச்சாட்டுகள் கொண்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டன. பிறேஸ் கேர்டில் இலங்கை வந்து ஓர் ஆண்டு காலம் மட்டுமேயான நிலையில் 1937 ஏப்ரல் மாதம் அவரை நாடு கடத்தும் உத்தரவு ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டது. பிறேஸ் கேர்டில் என்ற பெயரையோ அந்த தனிநபர் பற்றியோ கேள்விப்பட்டிராத இலங்கையர்களுக்கு பரபரப்பூட்டும் செய்திகள் வெளிவரத் தொடங்கின. றெஜி சிறிவர்த்தன அப்போது 15 வயது மாணவராக இருந்தார். அந்த நிகழ்வுகளை தமது அனுபவ மீட்டலாக றெஜி சிறிவர்த்தன கூறுவதோடு அவரது கட்டுரை ஆரம்பிக்கிறது. 

brace

“சேர் எட்வார்ட் ஸ்ரப்ஸ் பிறேஸ் கேர்டிலை நாடு கடத்தும் கட்டளையைப் பிறப்பித்த செய்தியை நான் பத்திரிகை வாயிலாக அறிந்த போது பதினைந்து வயதுப் பள்ளி மாணவனாக இருந்தேன். எனக்கு பிறேஸ் கேர்டில் பற்றி எதுவும் தெரியாது. அவரை நான் கண்டதுமில்லை. ஆளுநர் கட்டளை பிறப்பித்ததும் பிறேஸ் கேர்டில் தோட்டத்தை விட்டு வெளியேறித் தலைமறைவானார். பொலிஸ் புலனாய்வாளர்கள் அவரை சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்தார்கள். ‘டெய்லி நியுஸ்’ பத்திரிகையின் நிருபர் ஒருவர் பிறேஸ் கேர்டிலை பேட்டி காண்பதற்காக இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டார். அந் நிருபரின் கண்கள் மூடிக் கட்டப்பட்ட பின்பே அவர் இரகசிய மறைவிடத்துக்கு கூட்டிச் செல்லப்பட்டார். நிருபரின் நேர்காணல் டெஸ்லி நியுஸில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறிருக்க தலைமறைவாகி 11 நாட்கள் கழிந்து பிறேஸ் கேர்டில் காலி முகத்திடலில் லங்கா சமசமாஜக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மேடையில் தோன்றி உரையாற்றினார். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நீதிகோரிய போராட்டம், ஆளுநரின் கட்டளையை நீதிமன்றம் வலிதற்றது என இரத்து செய்தமை, பிறேஸ் கேர்டில் விடுதலை எனப் பரபரப்பான சம்பவங்கள் நிறைந்த ஒரு நாடகம் நடந்தேறியது. அரசியல் அறிவு அதிகம் இல்லாத பாடசாலை மாணவனான எனக்கு பிறேஸ் கேர்டில் ‘ரொபின் கூட்’ (ROBINHOOD) கதையின் நாயகனை ஒத்த சாகச வீர புருஷனாகவே தோன்றினார். அப்போது லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்களைப் பற்றியும் நான் அறிந்திருக்கவில்லை.” 

றெஜி சிறிவர்த்தனவின் கதை சொல்லல் முறையில் அமைந்த தொடக்கப் பந்தியை எனது வார்த்தைகளில் மேலே தந்துள்ளேன். றெஜி சிறிவர்த்தன 1937 நிகழ்வுகள் நடைபெற்று நான்காண்டுகள் கடந்த பின் பல்கலைக்கழக மாணவனாகவும், லங்கா சமசமஜாக் கட்சியின் உறுப்பினராகவும் ஆகியிருந்தார். அப்போது தடை செய்யப்பட்டு விட்ட அக்கட்சியின் தலைமறைவு உறுப்பினராக அவர் செயற்படவும் தொடங்கினார். 

லங்கா சமசமஜாக் கட்சி என்ற தலைமறைவு இயக்கத்தின் உறுப்பினனாக நான் ஆகிய போது அந்த இயக்கத்தின் நான்கு தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பிறேஸ் கேர்டில் என்ற மனோரதிய வீரதீரர் (ROMANTICA HERO) என்ற பிம்பம் எனது மனதில் பதிந்திருந்தது. அந்த ஏகாதிபத்திய போராளி பற்றி லங்கா சமசமாஜக் கட்சியின் உட்கட்சி உறுப்பினர்களிடையே நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. 1942 இல் ஒரு தடவை நான் எட்மன்ட் சமரக்கொடியை சந்தித்தேன். அவர் சிறையில் இருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்தார். பிறேஸ் கேர்டில் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டிராத சமரக்கொடி, ‘இலங்கைக்கு ஸ்டாலினிசத்தைக் கொண்டு வந்தவர் தான் இந்த மனிதர்’ என்று என்னிடம் கூறினார். இதே கருத்தையே எட்மன்ட் சமரக்கொடி 1960 இல் கட்சிப் பத்திரிகையான ‘சமசமாஜிஸ்ட்’ இதழிலும் (1-3-60 இல்) பதிவிட்டார். 

பிறேஸ் கேர்டில் பற்றிய மாறுபட்ட அபிப்பிராயம் சில ஆண்டுகள் கழிவதற்குள்ளேயே தலைமறைவு இயக்கமான லங்கா சமசமாஜக் கட்சிக்குள் தோன்றி விட்டது. இதன் பின்னணியில் உலக ரீதியில் இடது சாரிகளிடையே ஏற்பட்ட ’ரொட்ஸ்கிசம் எதிர் ஸ்டாலினிசம்’ என்னும் கருத்து மோதல் இருந்தது. லங்கா சமசமாஜக்கட்சி 1942 இல் சட்ட விரோத இயக்கமாக அறிவிக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டது. இத் தடைக்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர் 1939 ஆம் ஆண்டில் லங்கா சமசமாஜக் கட்சி ஸ்டாலினைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது. இத் தீர்மானத்தின் பின்னர் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஸ்டாலினிற்கும் ஆதரவானவர்களான கம்யூனிஸ்டுகள் லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேறினர். ல.ச.ச கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. 

யுத்த காலத்தில் இடதுசாரி இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு

கம்யூனிஸ்டுகள் ல.ச.ச கட்சியில் இருந்து வெளியேறியமை ரொட்ஸ்கிசம் எதிர் ஸ்டாலினிசம் என்ற சர்ச்சையின் பின்னணயில் நிகழ்ந்ததை மேலே குறிப்பிட்டோம். இப் பிளவு பிலிப் குணவர்த்தன, கொல்வின் ஆர்.டி. சில்வா, லெஸ்லி குணவர்த்தன, என்.எம் பெரேரா ஆகிய தலைவர்களை பிரித்தானியாவின் யுத்த நடவடிக்கைகளுக்கு எதிரான ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுப்பதற்கும், அக் கட்சியில் இருந்து வெளியேறிய கம்யூனிஸ்டுகள் (எஸ்.ஏ. விக்கிரமசிங்கவும் பிறரும்), யுத்தத்தில் பிரித்தானியாவிற்கு சார்பான நிலைப்பாட்டை எடுப்பதற்கும் காரணமாயிற்று. சமசமாஜிஸ்டுகள் ஸ்டாலினிஸ்ட் ஆதரவாளனான பிறேஸ் கேர்டில் மீது கொண்டிருந்த அபிப்பிராயம் மாறியதன் பின்னணி இதுவேயாகும். 1939 இல் சமசமஜாக் கட்சியினர் ஸ்டாலினிற்கு எதிரான முடிவை மேற்கொண்டது சரியான முடிவேயாகும் என்ற கருத்தை றெஜி சிறிவர்த்தன குறிப்பிடுகிறார். அத்தகைய முடிவைச் செய்ததன் மூலம் சமசமாஜக்கட்சி ‘கம்யூனிஸ்ட் அகிலம் என்ற வலைப் பொறியில்’ (COMINTERN NET) வீழ்வதில் இருந்து தவிர்த்துக் கொண்டது என அவர் குறிப்பிடுகிறார். இம் முடிவைக் கட்சி செய்திராவிடில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் 1942 இல் பிரித்தானியாவின் யுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கியது போன்று யுத்தத்தை ஆதரித்து, இந்தியாவின் ’வெள்ளையனே வெளியேறு’ (QUIT INDIA) இயக்கத்திற்கு எதிராகச் செயற்படும் நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் கூறுகிறார். எட்மன்ட் சமரக்கொடி அவர்கள் பிறேஸ் கேர்டில் பற்றி ‘இலங்கைக்கு ஸ்டாலினிசத்தைக் கொண்டு வந்தவர் தான் இந்த மனிதர்‘ என்று கூறிய கருத்தைப் பற்றியும் றெஜி சிறிவர்த்தன கூறியிருப்பது சுவாரசியமானது. சமரக் கொடியின் கூற்று மிகைப்படுத்தப்பட்டது. சோவியத் யூனியனின் மதிப்பு அக்காலத்தில் உயர்வாக இருந்தது. அயல் நாடான இந்தியாவில், பாக்கு நீரிணைக்கு அப்பால், பலமானதொரு கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. பிறேஸ் கேர்டில் இலங்கைக்கு வந்திருந்தால் என்ன, வராமல் போயிருந்தால் என்ன, ஸ்டாலினிசம் இலங்கைக்கு வந்தேயிருக்கும். 

சமசமாஜக் கட்சியினரிடம் 1940 களில் இருந்த ரொட்ஸ்கிசவாத கொள்கைப்பற்று, பிற்காலத்தில் மங்கிப் போனது என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடுதல் பொருத்தமானது. 

காலனிய அரசின் முரண்பட்ட கொள்கைகள்

பிறேஸ் கேர்டில் நாடு கடத்தல் சம்பவம் நடைபெற்ற சூழ்நிலையில், பிரித்தானியா தனது காலனிகள் தொடர்பாக கடைப்பிடித்த கொள்கையில் இரு முரண்பட்ட போக்குகள் இருந்தமையை அவதானிக்கலாம். இந்தியா தொடர்பாக பிரித்தானியா கடைப்பிடித்த கொள்கையில் இருந்து பிரித்தானியாவின் மாதிரிக் காலனியான (MODEL COLONY) இலங்கை பற்றிய கொள்கை வேறுபட்டதாக இருந்தது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் மீது பற்றுதலையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்திய இலங்கைத் தலைவர்களிடம், அவர்கள் கோரிக்கைகளாக முன்வைக்காதவற்றை, பிரித்தானியா வலிந்து வழங்க முன்வந்தது. 1931 அரசியல் யாப்பு சீர்திருத்தம் இலங்கைக்குச் சுயாட்சியை (SELF GOVERNMENT) வழங்கியது. சர்வசன வாக்குரிமையை வழங்கியது. சர்வசன வாக்குரிமையின் அடிப்படையில் தேர்தல் முறை, பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பன இலங்கைக்கு கேட்காமலே வழங்கப்பட்ட வெகுமதிகள். அருகே இருந்த இந்தியாவின் தீவிரவாத, கிளர்ச்சிவாத தலைவர்களை நம்புவதற்கு பிரித்தானியா தயாராக இருக்கவில்லை. ஆனால் பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் மீது பற்றுதலையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்திய இலங்கைத் தலைவர்களிடம் பிரித்தானியா நம்பிக்கை வைக்கத் தயாராக இருந்தது. 

டொனமூர் அரசியல் சீர்திருத்தங்களின்படி சர்வசன வாக்குரிமையை பிரித்தானியா வழங்க முன்வந்த பொழுது, இலங்கையின் பழமைவாதிகளான மிதவாதத் தலைவர்கள் அதனை ஏற்க மறுத்தனர். தொழிற்சங்கத் தலைவரும் அரசியல்வாதியுமான ஏ.ஈ. குணசிங்க மட்டுமே சர்வசன வாக்குரிமையை ஆதரித்தார். ஏனைய தலைவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு வாக்குரிமையை வழங்கக்கூடாது. சொத்துக்கள் இல்லாதவர்கள், வரி செலுத்தாதவர்கள் தம் பொறுப்பை உணர்ந்து செயற்பட மாட்டார்கள் என வாதிட்டனர். இந்த வாதங்களையெல்லாம் புறந்தள்ளிய பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு இவை யாவற்றையும் தாராளமாக அள்ளிக் கொடுத்தது. காரணம், இலங்கையின் தலைவர்கள் தமக்குக் கொடுத்த ஆட்சி அதிகாரத்தை பிரித்தானியாவின் பொருளாதார, வர்த்தக நலன்களுக்கு எதிராக உபயோகிக்க மாட்டார்கள் என பிரித்தானியா நம்பியது என்று றெஜி சிறிவர்த்தன அவர்கள் குறிப்பிடுகின்றார். பிரித்தானியாவின் காலனிகள் தொடர்பான கொள்கையில் இருமுகங்கள் இருந்தன. அவற்றுள் ஒரு முகம் தாராண்மை முகம். மற்றது ஒடுக்கு முறை முகம் (ONE LIBERAL THE OTHER REPRESSIVE). பிரித்தானியா இலங்கை தொடர்பாக 1930 கள் முதல் 1948 வரை தாராண்மை முகத்தைக் காட்டி வந்தது. 

“முதலாவதான (தாராண்மை) முகம் பிரித்தானியா தனது சொந்த நாட்டிற்குள் நடைமுறைப்படுத்திய சட்டங்கள், உருவாக்கிய நிறுவனங்கள், பரிணாம வளர்ச்சியூடாக உருவான நடைமுறைகள் என்பனவற்றின் ஒரு பகுதியை காலனிகளுக்கு மாற்றும் செயல்முறையைக் கொண்டது.” 

இலங்கையின் மிதவாதத் தலைவர்களின் மீது மதிப்பை வைத்திருந்த பிரித்தானியா 1930 தொடக்கம் 1948 இல் சுதந்திரம் வழங்கிய காலம் வரை தொடர்ச்சியாக தனது தாராண்மைவாத முகத்தையே காட்டி வந்தது. இலங்கைத் தலைவர்களும் விசுவாசம் மிக்கவர்களாகவே நடந்து வந்தனர். இணக்கப் போக்கும், பொறுமையும் இரு தரப்பினரிடம் இருந்து வந்தது. 

பிரித்தானியா இலங்கை என்னும் ‘மாதிரிக் காலனி‘ யில் அரசியல் பரிசோதனை ஒன்றைச் செய்தது என்றும் றெஜி சிறிவர்த்தன குறிப்பிடுகிறார். சர்வசன வாக்குரிமை, பிரதிநிதித்துவ ஜனநாயகம், பிரித்தானியாவின் மந்திரி சபை முறை என்பன இப் பரிசோதனையின் முக்கிய கூறுகள் என்பதே அவரது வாதமாகும். ஆயினும் பிரித்தானியாவின் ‘ஒடுக்கு முறை முகம்‘ தேவையேற்பட்ட போது வெளிப்பட்டதென்றும் குறிப்பிடுகிறார். 

சேர். எட்வாட் ஸ்ரப்ஸ் அவர்களின் பொறுமையைப் பரிசோதித்த பிறேஸ் கேர்டில்

philip

பிறேஸ் கேர்டிலை கடத்தும் தான்தோன்றித்தனமான, சர்வாதிகாரத் தன்மையுள்ள கட்டளையை சேர். எட்வாட் ஸ்ரப்ஸ் பிறப்பித்ததற்குரிய காரணத்தை காலனிய அரசின் ஒடுக்குமுறை இயல்பைக் கொண்டு விளக்கலாம். சட்டசபையின் உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மந்திரி சபையிடமே பிறேஸ் கேர்டில் நடவடிக்கை தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் இருந்தது. சேர். எட்வாட் ஸ்ரப்ஸ் மந்திர சபைக்குத் தெரியாமலே தம் கையில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு செயலாற்றினார். மிதவாதிகளான சட்டசபை உறுப்பினர்களுக்கு இது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. சிறிபால சமரக்கொடி என்ற உறுப்பினர், ஆளுநரின் செயலை எதிர்க்கும் பிரேரணையொன்றைச் சட்ட சபையில் முன்மொழிந்தார். தமது பிரேரணை மீது உரையாற்றிய சமரக்கொடி தம்மை பிரத்தானியாவின் விசுவாசம்மிக்க குடிமக்கள் (LOYAL SUBJECTS) எனக் குறிப்பிட்டார். அவர் விசுவாசம்மிக்க குடிமக்கள் என்ற தொடரை உபயோகித்ததில் ஒரு உள்நோக்கம் இருந்தது. பிலிப் குணவர்த்தன, என்.எம். பெரேரா என்ற இரு சமசமாஜிஸ்டுகள் சட்டசபையில் உறுப்பினர்களாக இருந்தார்கள். இவர்கள் இருவரும் தீவிரவாதிகள். இவர்கள் தவிர்ந்த ஏனையோர் மிதவாதிகள்; பிரித்தானியாவின் விசுவாசிகள். சிறிபால சமரக்கொடி, தான் உட்பட்ட ‘விசுவாசிகளை’ தீவிரவாதிகளிடம் இருந்து வேறுபடுத்தி விசுவாசம் மிக்க குடிமக்கள் எனக் குறிப்பிட்டதன் காரணம் இதுவே. சட்டசபை விவாதத்தின் போது உறுப்பினர்களிடையே விசுவாசம் மிக்க குடிமக்களின் புண்பட்ட மன உணர்வு வெளிப்பட்டுத் தெரிந்தது என்றும் றெஜி சிறிவர்த்தன குறிப்பிடுகிறார். 

n.m. perera

சேர். எட்வேட் ஸ்ரப்ஸ் அவர்களின் நடவடிக்கை பிரித்தானியாவின் இலங்கை பற்றிய கொள்கைக்கு மாறுபட்ட செய்கையாக விளங்கியது. பிறேஸ் கேர்டில் அவர்களின் நடவடிக்கைகளால் அச்சமடைந்த பொலிஸ் திணைக்களத்தின் தகவல்கள் ஸ்ரப்ஸ் அவர்களுக்கும் அச்சத்தை ஊட்டியிருக்க வேண்டும். 

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், அவ்விடயம் பற்றி பிரித்தானியாவின் மந்திரிசபை பரிசீலனை செய்தது. காலனிகளுக்கான அமைச்சர் (SECRETARY FOR COLONIES) மந்திரி சபைக்கு ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அவ்வறிக்கையில் அவர் ஆளுநரின் செயல் ‘அரசியல் ரீதியில் புத்தியற்ற செயல்’ (POLITICALLY UNWISE) எனக் குறிப்பிட்டிருந்தார். காலனிகளுக்கான மந்திரியின் அரசியல் ரீதியில் புத்தியற்ற செயல் என்ற அபிப்பிராயம் சரியானது என்பதை இலங்கையின் நிகழ்வுகள் நிரூபித்தன என்று றெஜி சிறிவர்த்தன குறிப்பிடுகிறார். 

“டொனமூர் அரசியல் யாப்பு செயல் முறையில் இருந்த காலத்தில் ஏற்பட்ட முக்கியம் வாய்ந்த அரசியல் யாப்பு நெருக்கடி (CONSTITUTIONAL CRISIS) பிறேஸ் கேர்டில் விவகாரத்தால் தோன்றியது. இதன் பயனாக லங்கா சம சமாஜக்கட்சி தேசிய அரங்கில் முன்னிலைக்கு வந்தது. இந்த விவகாரம் அதற்குப் பிரபலத்தையும், மக்கள் ஆதரவையும் தேடித் தந்தது. இப்பிரச்சினையை அக்கட்சி மக்களிடம் எடுத்துச் சொல்லிப் பிரச்சாரம் செய்தது மட்டுமல்லாமல், அப்போதைய மந்திரிசபையின் ஆதரவையும் பெற்றது. சட்ட சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களினது ஆதரவும் அக் கட்சிக்குக் கிடைத்தது. ஏ.ஈ. குணசிங்க என்ற தொழிற்சங்கத் தலைவரும் தனது ஆதரவை வழங்கினார். எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க, ஏ.ஈ. குணசிங்க, ஜோர்ஜ்.இ.டி. சில்வா போன்ற முக்கியமான தலைவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியின் கூட்டங்களில் மேடையில் தோன்றி ஆதரவளித்துப் பேசினார்கள்.”

தேசியவாத அலையொன்று பிறேஸ் கேர்டில் சம்பவத்தை அடுத்து மேலெழும்பியது. அத்தேசியவாத எழுச்சிக்கு லங்கா சமசமாஜக் கட்சி தலைமை தாங்கியது. ஆயினும் வெகுவிரைவிலேயே இந்த எழுச்சி அலை அடங்கிப் போனது. இலங்கையின் மிதவாதத் தலைவர்கள் ஆளுநரையும், அவரது உயர் அதிகாரிகளான மூன்று செயலாளர்களையும் புண்படுத்தும் வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் அவதானத்துடன் பேசினார்கள், இணக்கான முறையில் நடந்து கொண்டனர். 

நீதித்துறையின் சுதந்திரம்

பிறேஸ் கேர்டில் நீதித்தீர்ப்பு இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் முக்கியமான தீர்ப்பு ஆகும். இத்தீர்ப்பு நீதித்துறையின் சுதந்திரம் (INDEPENDENCE OF THE JUDICIARY) என்ற தத்துவத்தை விளக்குவதற்கான உதாரணமாக விளங்குகிறது. றெஜி சிறிவர்த்தன பின்வருமாறு கூறுகிறார். 

“பிறேஸ் கேர்டில் விவகாரத்தில் நிர்வாகத்துறை (EXECUTIVE) தனது ஒடுக்குமுறை அதிகாரத்தைப் பிரயோகித்தது. இவ்வாறு அது செயற்படும் போது ஏகாதிபத்தியத்தின் நீண்டகால நலன்களுக்கு பாதகம் விளைவிக்கும் முறையில் செயற்பட்டது. தொலைநோக்கு அற்ற புத்தியற்ற இந்நடவடிக்கையை சுதந்திரமான நீதித்துறை என்ற நிறுவனம் தடுத்து நிறுத்தியது. சரி செய்தல் நடவடிக்கை (CORRECTIVE ACTION) மூலம் உயர் நீதிமன்றம் நிர்வாகத் துறையின் செய்கையைச் சமன் செய்தது.” 

காலனிய அரசின் நிர்வாகத் துறையின் ஒடுக்குமுறை அதிகாரம், எல்லை மீறி உபயோகிக்கப்பட்ட போது, அதனைக் கட்டுப்படுத்தும் நீதி அதிகாரத்தை (JUDICIAL POWER) உயர் நீதிமன்றம் உபயோகித்து, கட்டுப்படுத்தலும் சமன்படுத்தலும் (CHECKS AND BALANCES) என்னும் அரசியல் யாப்புத் தத்துவத்தை செயற்படுத்தியதை பிறேஸ் கேர்டில் விவகாரத்தில் காண முடிகிறது. பிரதம நீதியரசர் சிட்னி அப்பிரஹாம் எழுதிய இத்தீர்ப்பிற்கு நீதியரசர்களான மார்டினஸ் (MARTINEZ), சோறட்ஸ் (SOERTSZ) ஆகிய இருவரும் தமது உடன்பாட்டை வழங்கினர். சேர். சிட்னி அப்பிரஹாம் பிரிட்டிஷ்காரர்; மற்ற இரு நீதிபதிகளும் இலங்கையர்கள் ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆளுநரின் வேண்டுகோள்

பிரித்தானியாவின் தாராண்மைவாத ஜனநாயக மரபின்படி நிர்வாகத் துறையின் (ஆளுநரின்) எழுந்தமானமான நடவடிக்கை மீது உயர் நீதிமன்றம் தலையீடு செய்தது. ஆளுநரின் கட்டளையை இரத்து செய்த உயர் நீதிமன்றம் சட்டத்தின் முன் யாவரும் சமம் (EQUALITY BEFORE THE LAW) என்னும் மனித உரிமைக் கொள்கையை உறுதி செய்தது. இத்தீர்ப்பு ஏற்படுத்திய தலைகுனிவை விட இன்னொரு சட்டப் பிரச்சினையையும் ஆளுநர் எதிர்நோக்கினார். உயர்நீதிமன்றம் பிறேஸ் கேர்டிலை விடுதலை செய்த பின்னர், ஆளுநர் மீதும் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதும் நட்டஈடு கோரி சிவில் வழக்கைத் தொடரலாம் என்ற ஆபத்து இருந்தது. இதனால் ஆளுநர் காலனிகளுக்குப் பொறுப்பான அமைச்சு அலுவலகத்திற்கு (COLONIAL OFFICE) ஒரு வேண்டுகோளை விடுத்தார். பிரித்தானியா ‘ORDER IN COUNCIL’ என்ற வகையில் இலங்கைக்கான சட்டங்களை இயற்றும் அதிகாரம் உடையதாய் இருந்தது. அந்தச் சட்டவாக்க அதிகாரத்தை உபயோகித்து, ஆளுநர் மீதும் நிர்வாகத்துறை உத்தியோகத்தர்கள் மீதும் நட்ட ஈடு கோருவதற்கான உரிமையை இல்லாமல் செய்யும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதே ஆளுநரின் வேண்டுகோள் ஆகும். ஆளுநரின் வேண்டுகோளைப் பரிசீலனை செய்த காலனிகளுக்கான அமைச்சு அலுவலகம் (COLONIAL OFFICE) என்ன முடிவை எடுத்தது என்பது பற்றி றெஜி சிறிவர்த்தன இதுவரை அறியப்படாத தகவல்களைத் தருவதோடு, உள்ளொளி பாய்ச்சும் விமர்சனக் குறிப்புக்களையும் பதிவிடுகிறார். 

ஆளுநருக்கும் காலனிய அமைச்சு அலுவலகத்திற்கும் இடையிலான கடிதத் தொடர்புகள் இரகசியக் கோப்புக்களில் கோவையிடப்பட்டிருந்தன. “அண்மையில் லண்டனின் பொது ஆவணங்களின் காப்பகம் (PUBLIC RECORD OFFICE) இவற்றை யாவரும் படிக்கக் கூடியதாக ஆக்கியது” எனக் கூறும் றெஜி சிறிவர்த்தன, அமைச்சின் சட்ட ஆலோசகர் (LEGAL OFFICER) ஒருவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனை அறிக்கையை மேற்கோள் காட்டி அருமையான விமர்சனக் குறிப்புக்களை தமது கட்டுரையில் பதிவிடுகிறார். 

பிரித்தானியாவின் ஜனநாயக மரபில் தேர்ச்சி பெற்றவரான இச்சட்ட ஆலோசகர் வழங்கிய ஆலோசனைகள் ஆச்சரியம் அளிப்பன. 

“இலங்கையின் சட்ட சபையின் அதிகாரத்தை மதியாது, நபர் ஒருவரின் சிவில் உரிமைகளைப் பறித்த செயலானது அரசியல் யாப்புக்கு மாறானது (UN-CONSTITUTIONAL) என்பதோடு, அதிகாரத்தின் முறைப்படியான பிரயோகமும் அன்று (NOT A PROPER EXERCISE OF THE POWER) என்றே எனக்குத் தோன்றுகிறது.” 

பெயரிடப்படாத அச்சட்ட ஆலோசகரின் கூற்று துணிச்சல் மிக்க அதிகாரி ஒருவரின் கூற்றாகும். தொடர்ந்து அச்சட்ட ஆலோசகர் கூறுவதாவது;

“மேலும் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நீதிமன்றினை நாடி நட்ட ஈடு கோரும் உரிமையை பறிக்க வேண்டும் என்பதில் நியாயம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவ்வுரிமையைப் பறிப்பதற்கான சாத்தியம் எதுவும் கிடையாது. எந்தத் தத்துவம் (PRINCIPLE), அல்லது சுதந்திரமும் உரிமைகளும் பற்றிய எந்தக் கொள்கையின்படி இலங்கையின் பிரஜை ஒருவரின் உரிமைகளுக்கு குறைந்தளவு மதிப்பைக் கொடுக்க வேண்டும்? பிறேஸ் கேர்டில் ஒரு விரும்பத்தகாத ஆளாக (UNPLEASANT PERSON) இருக்கலாம். அது இந்த விடயத்தில் பொருத்தமற்ற ஒன்று. இங்கே கவனிக்கப்பட வேண்டியவை, உயர்ந்த அரசியல் யாப்புத் தத்துவங்களாகும் (HIGH CONSTITUTIONAL PRINCIPLES). இத் தத்துவங்களின் அடிப்படையிலேயே இப்பிரச்சினை பற்றிய தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.“

இக்கூற்றில் காணப்படும் ‘UNPLEASANT PERSON’ என்ற தொடர் பிறேஸ் கேர்டில் ஒரு ‘கம்யூனிஸ்ட்‘ என்பதையே குறிக்கிறது. கம்யூனிச/சோஷலிச கொள்கைகளை உடைய விரும்பத்தகாத ஆளாக இருப்பினும் தமக்கு இழைக்கப்பட்ட தீங்கிற்கான இழப்பீட்டு உரிமையை ஒரு நபரிடமிருந்து பறிக்கக் கூடாது என்ற கருத்தையே சட்ட ஆலோசகர் பதிவிடுகிறார். ஆளுநர், உயர் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரைப் பாதுகாப்பதை விட இலங்கையில் தனிநபர் உரிமையையும், இலங்கைச் சட்ட சபையின் கௌரவத்தையும் மேலானதாக காலனிய அமைச்சு அலுவலகமும், பிரித்தானிய மந்திரி சபையும் கருதின. ஆளுநரின் வேண்டுகோளை நிராகரிப்பதென மந்திரிசபை முடிவு செய்தது.

பிறேஸ் கேர்டிலுக்கு இழப்பீடு வழங்கும் தேவையேற்பட்டால், ஆளுநர் உட்பட்ட உத்தியோகத்தர்கள் சிலர் இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது என்ன செய்வது பற்றிய பிரச்சினைக்குரிய தீர்வையும் மந்திரிசபை முடிவு செய்தது. இழப்பீடு வழங்க வேண்டி ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகையை ஆளுநரதும், பொலிஸ் உத்தியோகத்தர்களதும் சார்பில் இலங்கை அரசாங்கம் செலுத்தலாம் என மந்திரிசபை முடிவு செய்தது. 

பிரித்தானியா முன்மாதிரியான காலனியாகக் கருதிய இலங்கையில் தாராண்மை ஜனநாயகம் வளர்ச்சி பெறுவதற்குத் தேவயைான நிறுவனங்களைப் பாதுகாப்பதிலும் தனிநபர் உரிமைகளுக்கு மதிப்புக் கொடுப்பதிலும் அக்கறை கொண்டிருந்தமை, பிரித்தானியாவின் ’தாராண்மை முகம்’ என்ற ஒரு பக்கத்தைப் பிரகாசம் மிக்கதாகக் காட்டுகிறது. 

பிரித்தானியாவிற்கு ஒடுக்குமுறை (REPRESSION) என்ற இன்னொரு முகமும் இருந்ததெனவும் றெஜி சிறிவர்த்தன குறிப்பிடுகிறார். இதனையே ஏகாதிபத்தியத்தின் முரண்பட்ட கொள்கைகள் எனவும் குறிப்பிடுகிறார். 

இத் தமிழ்க் கட்டுரை ‘THE BRACE GIRDLE AFFAIR IN RETROSPECT: CONTRADICTIONS OF IMPERIALISM, OF THE POST COLONIAL STATE AND OF THE LEFT’ என்ற தலைப்பில் றெஜி சிறிவர்த்தன எழுதிய ஆங்கிலக் கட்டுரையினைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. 

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4225 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)