Arts
18 நிமிட வாசிப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் 1971 ஏப்ரல் கிளர்ச்சி – பகுதி 2

February 20, 2024 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்று கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம் : G.B கீரவல்ல

கிராமத்துத் தொழிலாளர்களையும் விவசாயக் குடியான்களையும் விட உயர் வருமானத்தைப் பெறும் வர்க்கமான கிராமத்துக் குட்டி முதலாளித்துவ வர்க்கம், நகரத் தொழிலாளர் வர்க்கத்தோடு கொண்டுள்ள பிணைப்புகள் கிராம, நகர உறவுகளில் முக்கியத்துவம் பெற்றன. கிராமத்தில் சொத்துக்களை வைத்துக் கொண்டு நகரத்தில் தொழில் செய்யும் தொழிலாளர்களின் வர்க்க உணர்வு நிலை மட்டுப்பாடுடையதாக விளங்கியது. இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பகுதியினர் குட்டி முதலாளித்துவ உணர்வு நிலையை உடையவர்களாகக் காணப்பட்டனர்.

பெருந்தோட்ட விவசாயம்

இலங்கையின் முதலாளித்துவ வளர்ச்சியில் பெருந்தோட்ட உற்பத்தி முக்கிய இடத்தைப் பெற்றது. பெருந்தோட்டங்களுக்கான முதலீடு பிரித்தானிய முதலாளிகளால் வழங்கப்பட்டது. வங்கிகளில் அவர்கள் கடன்களைப் பெற்றார்கள். பிரித்தானியக் கம்பனிகள் தோட்டங்களை நிர்வகித்தன. இத்தோட்டங்களில் வேலை செய்வதற்கு கிராமத்து விவசாயக் குடியான்கள் விரும்பவில்லை. இதனால் வெளியில் இருந்து உழைப்பாளர்கள் கொண்டு வரப்பட்டனர். இறப்பர் தோட்டங்களிலும், தென்னைத் தோட்டங்களிலும் விவசாயக் குடியான்கள் வேலை செய்வதற்கு முன்வந்தனரேனும், பெருந்தோட்டத் துறையின் மொத்தத் தொழிலாளர் தொகையில் இந்தியத் தொழிலாளர்களே பெரும் தொகையினராக இருந்தனர். இந்நிலையில் இந்தியத் தொழிலாளர் வர்க்கம் உள்ளூர் மக்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டது. பெருந்தோட்டத்தின் உற்பத்தியுடன் நேரடியாக பிணைக்கப்பட்ட இந்தியத் தொழிலாளரில் இருந்து வேறுபட்டதான தொழிலாளர் வர்க்கம் நகரப்புறச் சேவைத் தொழில்களைச் சார்ந்து உருவாகியது. இச்சேவைத் துறைகளில் கொழும்புத் துறைமுகம், புகைவண்டி போக்குவரத்து என்ற இரு துறைகள் முக்கியம் பெற்றன. சேவைத் துறைகளில் வேலை செய்த உள்ளூர் தொழிலாளர்கள் தொழிற்திறன் மிக்கவர்கள் (Skilled), தொழில்திறன் அற்றவர்கள் என இரு பிரிவினராய் இருந்தனர். மேற்குறிப்பிட்ட துறைமுகம், புகைவண்டிப் போக்குவரத்து என்பவற்றில் கொழும்பிலும் பிற நகரங்களிலும் வேலை செய்த தொழிலாளர்கள், பெருந்தோட்ட உற்பத்தியின் மேன்மிகையின் ஒரு பகுதியைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களை விட உயர்ந்த வாழ்க்கைத்தரம் உடையவர்களாய் விளங்கினர். 20 ஆம் நூற்றாண்டில் அரசாங்கத்தின் சமூகநலன் சேவைகள் (WELFARE SERVICES) அதிகரித்த போது உள்ளூர் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத்தரம் ஒப்பீட்டளவில் அதிகரித்தது. அரசாங்கத்திடம் இருந்து மேலும் மேலும் அதிகரித்த நன்மைகளைப் பெறுவதோடு, தமது கிராமத்து உடைமைகளையும் விடாமல் பற்றிக் கொண்டு கிராமத்துடன் பரம்பரை உறவுகளை வளர்த்துக் கொண்டிருந்த  உள்ளூர் தொழிலாளர் வர்க்கம் (INDIGENOUS WORKING CLASS) குட்டி முதலாளித்துவ கருத்தியலை உடையதாய் இருந்தது. பொருளாதார நெருக்கீடுகள் ஏற்பட்ட சமயங்களில் மேலதிக சமூகநலன் சேவைகளைத் தருமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் போக்கும் இத்தொழிலாளர் வர்க்கத்திடம் காணப்பட்டது.

Rubber Plantation

கிராமப் புறத்தில் உருவான குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு சிலர் மட்டுமே பெரு முதலாளிகளாக வளர முடிந்தது. நகரம் சார் பெரு முதலாளித்துவத்தின் வளர்ச்சியும், அதன் மேலாதிக்கமும் 20 ஆம் நூற்றாண்டில் கிராமத்துக் குட்டி முதலாளிகள் பெரு முதலாளிகளாக உயர்வதற்கு தடையாக அமைந்தன. அத்தோடு முதலாளித்துவ வளர்ச்சியில் ஏற்பட்ட தேக்க நிலையும் குட்டி முதலாளித்துவம் பெரு முதலாளித்துவமாக மாறுவதற்கு தடையாக அமைந்தது. இப் பின்னணியில் கிராமத்துக் குட்டி முதலாளித்துவ வர்க்கம் தனது உயர்ச்சிக்கான வேறு வழிகளைத் தேடியது. உயர் கல்வியைப் பெற்று உயர்தொழில்களில் இடம் பிடித்தல், வெண்சட்டை உத்தியோகங்களைப் பெறுதல், திருமண ஒப்பந்தங்கள் மூலம் பணக்கார வகுப்பிற்குத் தாவுதல் ஆகியன குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் இலக்குகளாக அமைந்தன. இப் போக்கினை 1911 சனத்தொகை மதிப்பீட்டு அறிக்கையில் டென்ஹாம் (DENHAM) மிகத் தெளிவாக விளக்கியிருந்தார்.

முதிய தலைமுறையினரான பெற்றோர், இளம் தலைமுறையினரான தமது பிள்ளைகளின் கல்வியில் முதலீடு செய்வதற்கு விரும்பினர். தமக்குக் கிடைத்த செல்வம் கல்வியைப் பெற்று உயர்ச்சி அடையும் உரிமையை அளித்துள்ளதாக அவர்கள் கருதினர். காணிகளின் சிற்றுடமையாளர்களான விவசாயிகள் பொருளாதார நிலையில் தம்மை உயர்த்திக் கொண்ட போது தமது மகன் ஒரு நாள் எழுதுவினைஞர் ஆவான் என்றும் அல்லது அதனையும் விட உயர்ந்த கல்வித்தகைமை சார் தொழிலை (LEARNED PROFESSION) பெறுவான் என்றும் ஆசைப்பட்டனர். தந்தையை விட மகன் உயர் நிலையைப் பெறுதல், அதன் மூலம் செல்வ நிலையில் உயர்வடைதல், குறிப்பாக குடும்பத்தின் சமூக அந்தஸ்து உயர்வடைதல் என்பன இளம் சந்ததியின் இலக்குகளாயின. இளம் தலைமுறை கிராம வாழ்க்கையில் இருந்து விடுதலை பெறத் துடிக்கிறது. உடல் உழைப்பை இளம் தலைமுறை விரும்பாது ஒதுக்குகிறது. கல்வி கற்றால் பரீட்சைகளில் சித்தியடையலாம், உத்தியோகங்களைப் பெறலாம், தமது நிலையை மாற்றி வேறொரு சமூகப் பிரிவின் உறுப்பினராகலாம், தமக்கு விடுதலையைத் தேடலாம், வாழ்க்கையில் உயரலாம் என இளம் தலைமுறையினர் அவாவுகின்றனர் (DENHAM 1911: பக் 398). 

மேற்குறிப்பிட்ட வகையான சமூக உயர்ச்சி உந்தல்கள், 20 ஆம் நூற்றாண்டில் குட்டி முதலாளி வர்க்க கிராமச் சமுதாயத்தில் முன்னிலையில் இருந்தது. கள ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட தரவுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. 1958 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகம் சமூக – பொருளாதார மதிப்பீட்டு ஆய்வை நடத்தியது (சர்க்கார் மற்றும் தம்பையா 1958). அவ் ஆய்வு பெறுமதிமிக்க தகவல்களை வழங்குகிறது. 

பாததும்பற கிராமப் பகுதியில் விவசாயம் அல்லாத பிற தொழில்களில் உழைப்பனவான குடும்பங்கள் பற்றிய விபரம் வருமாறு:

ds_page-

மேலே தரப்பட்ட பட்டியலில்; 

இல 2 : வியாபாரம்,

இல 3 : சம்பளம் பெறும் தொழில்,

இல 8 : சிறு வர்த்தகம்,

ஆகிய வகைத் தொழில்களில் உயர் வருமானம் பெறுவோர் குட்டி முதலாளி வர்க்கத்தினராவர்.

இல 1 பெருந்தோட்ட உரிமையாளர்கள் என்ற வகையில் சிற்றளவு பெருந்தோட்டங்களை உடைமை கொண்டுள்ள பிரிவினரும் குட்டி முதலாளிகளாவார். 

சர்க்கார் மற்றும் தம்பையா ஆய்வுக்கு (1958) பின்னர் நியூட்டன் குணசிங்க கண்டியின் தெலும்கொட என்ற கிராமத்தில் கள ஆய்வு நிகழ்த்தினார். அவர் கிராமத்தின் குட்டி முலாளி வகுப்பின் பின்னணியையும், அதன் குண இயல்புகளையும் பின்வருமாறு விபரித்துக் கூறினார். 

“குட்டி முதலாளித்துவ வர்க்கம் என்பது அடிப்படையில் சிற்றளவு உற்பத்தியையும் சிற்றளவு பரிவர்த்தனையையும் (PETTY PRODUCTION AND EXCHANGE) தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வர்க்கமாகும். ஒரு புறத்தில் குட்டி முதலாளிகளை மேலெழும்ப விடாமல் அரைகுறை நிலமானிய உடமை வர்க்கம் (SEMI – FEUDALS) தடுத்தபடி இருக்கிறது. இன்னொரு புறத்தில் நடுத்தர முதலாளி வர்க்கம் (MIDDLE BOURGEOIS) அதனைச் சுரண்டிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் குட்டி முதலாளிகள் ஏழைக் குடியான்களுடனும், கிராமத்துத் தொழிலாளர்களோடும் முரண்பட்டு நிற்கும் சந்தர்ப்பங்களை எதிர்கொள்கிறது. இக்காரணங்களால் அவ்வர்க்கம் ஒரு நிலையற்று ஊசலாடும் வர்க்கமாகும். விவசாய உறவுகள் தொடர்பான மாற்றங்களை நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் கொணர்ந்த போது குட்டி முதலாளி வர்க்கம் அதனை ஆதரித்தது. ஆயினும் அது நெற்காணிச் சட்டத்தை (Paddy Lands Act) எதிர்த்தது. குட்டி முதலாளிகளின் வேணவா தம்மை நடுத்தர முதலாளிகளாக மாற்றிக் கொண்டு சமூகப்படியில் உயர்வதாகும். ஆயினும் பொருளாதார யதார்த்தம் அவர்களின் முயற்சிகளுக்குத் தடை போடுகிறது. இந்த வர்க்கத்தை ஒரு நண்டுக்கு உவமிக்கலாம். எட்டுக் கால்களையுடைய நண்டு தனது உடலை அசைப்பது போல் குட்டி முதலாளி வர்க்கம் கிராமியப் பொருளாதார நடவடிக்கைகள் பலவற்றிலும் ஒரே சமயத்தில் கால் பதித்து நகருகிறது. அது முரண்பன்மைத்துவப் பண்புகளுடைய வர்க்கமாகும் (It is a heterogeneous class).”

நியூட்டன் குணசிங்கவின் மேற்காட்டிய மேற்காளின் துணையுடன் கிராமச் சமுதாயத்தில் குட்டி முதலாளி வர்க்கத்தின் நிலையையும் வகிபாகத்தையும் புரிந்து கொள்ளலாம். அதன் பொருளாதாரச் சமூக அந்தஸ்து அபிலாசைகள் காலனித்துவத்திற்குப் பிந்திய இலங்கையின் அரசியலில் (POST COLONIAL POLITICS) முக்கியமான செல்வாக்கைச் செலுத்தின. 1950 களில் முதலாளி வர்க்கம் ஐக்கிய தேசியக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் என்ற இரு தரப்புகளுடன் பல முரண்பாடுகளை கொண்டிருந்தது. இலங்கையின் உயர் வர்க்கங்களின் பிரதிநிதியாகவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளும் அதன் பண்பாட்டு மதிப்புகளும் (CULTURAL VALUES) குட்டி முதலாளிகளுக்கு ஏற்புடையவனவாக இருக்கவில்லை.  அதனால் அவ்வர்க்கம் ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்த்தது. மறுபுறத்தில் மார்க்சிஸ்டுகள் ஏற்படுத்தக்கூடிய புரட்சிகர மாற்றங்கள், அவ்வர்க்கத்திற்கு அச்சம் தருவனவாய் அமைந்தன. இந்த வர்க்கத்தின் குண இயல்புகளுக்கும் அபிலாசைகளுக்கும் ஏற்புடையதொரு இயக்கமும், தலைவரும் அவ்வேளை தேவைப்பட்டார். 

Bandaranayake

குட்டி முதலாளி வர்க்கத்தின் தேவையை நிறைவேற்றும் ஒருவராக எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க அரசியல் அரங்கில் தோன்றினார். அவர் கிராமத்துக் குட்டி முதலாளிகளை தனது ‘சிங்கள மகா சபை’ ஊடாக அணி திரட்டினார். அவரது அரசியல் ஆதாரமாக (POLITICAL BASE) சிங்கள மகாசபை அமைந்தது. உள்ளூராட்சி அமைச்சராக இருந்த அவர் தனது அரசியல் அதிகாரத்தை உபயோகித்து தன்னை உள்ளூர் மட்டத்தில் பலப்படுத்திக் கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியில் மேற்குமயப்பட்ட செல்வந்த வகுப்பு மேலாதிக்கம் செலுத்தியது. இவ்வுயர் வகுப்பிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் அரசியல் அதிகாரம் குவிந்திருந்தது. மரபுவழிப் பண்பாட்டு மரபுடைய குட்டி முதலாளிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மேற்குமயப் பண்பாட்டுச் சார்பு ஏற்புடையதாக இருக்கவில்லை. பண்டாரநாயக்க குட்டி முதலாளிகளின் அபிலாசைகளுக்கு ஏற்ற கட்சியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியை (SLFP) கட்டமைத்தார். 

philip Kunawardane

அவர் ‘மகாஜன எக்சத் பெரமுன’ (MEP) என்னும் கூட்டணியை உருவாக்கினார். ‘மக்கள் ஐக்கிய முன்னணி’ எனத் தமிழில் அழைக்கப்படும் இக்கூட்டணியில் இணைந்த தலைவர்களும் கட்சிகளும் பின்வருமாறு: 

அ) பிலிப் குணவர்த்தன – அவரின் ‘VLSSP’ என்ற விப்பிளவக்கார லங்கா சமசமாஜக் கட்சி, LSSP யில் இருந்து பிரிந்து ‘புரட்சிகர’ (விப்பிளவக்கார) என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்ட கட்சி.

ஆ) டபிள்யு. தகநாயக்கவின் பாஷா பெரமுன – பாஷா என்றால் ‘மொழி’. ‘பெரமுன’ என்றால் முன்னணி. அதாவது ‘சிங்கள மொழி முன்னணி’. 

இ) கே.எம்.பி. ராஜரட்ண – ஜாதிக விமுக்தி பெரமுன (தேசிய விடுதலை முன்னணி) 

ஈ) ஐ.எம்.ஆர்.ஏ. இரிய கொல்ல – குடியரசுக் கட்சி (REPUBLICAN PARTY) 

Iriya Kolla

மேற்குறித்தவற்றோடு கூட்டணி அமைத்த சிறிலாங்கா சுதந்திரக்கட்சி அக்கூட்டணியின் பிரதான பங்காளியாக விளங்கியது. இலங்கையின் இடது சாரிக் கட்சிகள் யாவற்றுள்ளும் கிராமப் புறங்களில் அதிகளவு ஆதரவுத்தளத்தைக் கொண்டதாக பிலிப் குணவர்த்தனவின் கட்சியே விளங்கியது. (சிங்கள) பாஷா பெரமுன, ஜாதிக விமுக்தி பெரமுன, குடியரசுக்கட்சி ஆகிய கட்சிகள் குட்டி பூஷ்வா வர்க்கத்தின் பண்பாட்டு விழுமியங்களை மிகச்சிறப்பாகப் பிரதிபலிப்பனவாக இருந்தன. 

Thahanayake

1956 தேர்தலில் பண்டாரநாயக்கவின் கூட்டணி பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றி வாகை சூடியது. இக்கூட்டணி மொழி, சமயம் என்ற இரு துறைகளிலும் மாற்றங்களைப் புகுத்தியது. பொருளாதார வர்த்தகத் துறையில் தேசியமயமாக்கலை நடைமுறைப்படுத்தி குட்டி முதலாளி வர்க்கத்தின் சில பிரிவினரின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்தது. ஆயினும் புதிய அரசாங்கம் காலனியம் விட்டுச் சென்ற சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வர விரும்பவில்லை. அது மட்டுமல்லாமல் ஆங்கிலம் கற்ற உயர் குழாத்தின் மேலாதிக்கத்திற்கு முடிவு கட்ட வேண்டும் எண்ணமும் அரசாங்கத்திடம் இருக்கவில்லை. இதனால் வரலாற்றில் முதல் தடவையாக கிராமத்து அரசியலில் தனது பிரவேசத்தையும், பலத்தையும் எடுத்துக் காட்டிய குட்டி முதலாளி வகுப்பிற்கு நன்மைகள் பெரியதாகக் கிடைக்கவில்லை. அவ் வர்க்கத்தின் ஆண், பெண் பிள்ளைகளின் அபிலாசைகளை புதிய அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியவில்லை. 

நிலைமை இவ்வாறாக இருந்த போதும் குட்டி முதலாளித்துவ வர்க்கம் பண்டார நாயக்கவுடனான உறவை முறித்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அவ்வர்க்கம் உண்மையில் சமூகப் பொருளாதார அமைப்பினைப் புரட்டிப் போடும் மாற்றங்களை எதிர்பார்க்கவோ விரும்பவோ இல்லை. குட்டிப் பூஷ்வா வர்க்கம் மேம்போக்கான சில மாற்றங்களையே எதிர்பார்த்தது. அத்தகைய மாற்றங்களை பிலிப் குணவர்த்தனவின் கட்சியான மகாஜன எக்சத் பெரமுன முயற்சித்தது. ஆனால் அம்முயற்சி தோல்வியுற்றது. இதனால் குட்டி முதலாளி வர்க்கத்திற்கும் பண்டார நாயக்கவிற்கும் இடையிலான உறவு நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருந்தது. பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் மேலோட்டமானவை. அவற்றுக்கு சிறந்த உதாரணம் அவ்வரசாங்கம் ‘சிங்களத்தை உத்தியோக மொழி’ என உடனடியாகவே அறிவித்தமையாகும். ஆனால் அந்த முடிவைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை.

சிங்களம் உத்தியோக மொழியென்றால் நிர்வாகத்தை, சிங்கள மொழியில் படித்த புத்திஜீவிகளிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். அது செயற்படுத்தப்படவில்லை. 

1956 தொடக்கம் குட்டி முதலாளி வர்க்கத்தின் செயற்பாடுகளில் இரு போக்குகள் வெளிப்பட்டன. பழைய தலைமுறையினரும் பழமைவாதிகளுமான குட்டி முதலாளித்துவப் பிரிவினர் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாயத் தொடங்கினர். இளைய தலைமுறையினரான குட்டி முதலாளிகள் பிரிவு மேலும் மேலும் கிளர்ச்சி மார்க்கத்தை நோக்கி ஈர்க்கப்பட்டனர். 1956 இன் தோல்வி மூலம் ஐக்கிய தேசியக் கட்சி பாடம் ஒன்றைக் கற்றுக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சி, குட்டி முதலாளித்துவ வகுப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள விரும்பியது. 1956 இன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ‘மறு சீரமைக்கப்பட்டது’. இதனை விட 1956 இன் பின்னர் பாராளுமன்ற நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் நிகழ்ந்தன. பாராளுமன்ற உறுப்பினர் தனது தொகுதியின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர். அவர் அரச அதிகாரத்தை (STATE POWER) தொகுதி மட்டத்திற்கு எடுத்துச் செல்பவர். அவர் ஒரு அதிகாரமிக்க முக்கியமான நபர் என்ற  சிந்தனை மேற்கிளம்பியது. இதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் 1956 இற்கும் பிந்திய காலத்தில் அதிகாரம் மிக்கவர்களாக மாறினர். அவர்கள் கிராமப்புறத்துப் பழைமவாதக் குட்டி முதலாளிகளின் அபிலாசைகளை நிறைவேற்றினார்கள். அவர்களின் ஆதரவைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர். இதன் விளைவாக, இருந்து வரும் சமூக ஒழுங்கமைப்பை மாற்றமுறாமல் காப்பாற்றுவதில் விருப்புடைய பழமைவாதக் குட்டி முதலாளித்துவப் பிரிவு தோற்றம் பெற்றது.

மேற்குறித்தவாறு பழமைவாதிகள் வலதுசாரிகள் பக்கம் சாயத் தொடங்கிய வேளை, படித்த கிராமத்து இளைஞர்களான குட்டி முதலாளி வர்க்கம் தமது தந்தையர்களதும் பாட்டன்களதும் வழியில் செல்வதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் நாட்டின் சமூகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மைய நீரோட்ட அரசியலில் இருந்து தாம் அந்நியப்பட்டவர்களாய் ஆகியிருப்பதை உணர்ந்தனர். 1960 களில் இலங்கையின் இளைஞர்களை பின்வரும் உலக நிகழ்வுகள் கவர்ந்திழுத்தன.

1. கியூபாவின் புரட்சி

2. வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய இந்தோ-சீன நாடுகளில் எழுச்சி பெற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள்

3. மேற்கு நாடுகளில் தோன்றிய மாணவர்களின் கிளர்ச்சி வாதம்

இவற்றைவிட சமகால சர்வதேச நிகழ்வுகளும் இளைஞர்கள் மீது செல்வாக்கை செலுத்தின. அவர்கள் பழைய தலைமுறையில் இருந்து மாறுபட்ட அரசியல் கருத்தியலை (POLITICAL IDEOLOGY) ஏற்றுக் கொண்டனர். 

இலங்கையின் சமூகப் பொருளாதார முறைமையில் அடிப்படையான குறைகள் உள்ளன. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என எண்ணிய இளந் தலைமுறையினரில் ஒரு பிரிவினர் ஒன்றிணைந்து கூட்டாக அவ்வமைப்பை மாற்ற வேண்டும் எனத் துணிந்தனர். 1960 களின் பிற்பகுதியில் இலங்கையில் தோன்றிய கிளர்ச்சிவாத அமைப்புக்களின் பின்புலம் இதுவேயாகும்.

பொருளாதார, அரசியல் கருத்தியல்

கிளரச்சிவாத இளைஞர்களின் பொருளாதார, அரசியல் கருத்தியலில் பின்வரும் நான்கு கூறுகள் வெளிப்பட்டுத் தெரிந்தன. 

அ) அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்ற இரு கட்சிகளும் இலங்கையின் சமூகப் பொருளாதார அமைப்பை மாற்றியமைப்பதற்குத் தயாராக இல்லை என்பதை உணர்ந்தனர். அவ்விரு கட்சிகளையும் அவர்கள் நிராகரித்தனர்.

ஆ) மரபுவழி இடதுசாரிக் கட்சிகளையும் அவற்றின் தலைமைகளையும் இளைஞர்கள் நிராகரித்தனர். 

இ) பாராளுமன்ற ஜனநாயகம் என்ற செயல்முறையில் நம்பிக்கை இழந்தவர்களாக இக்குட்டி முதலாளி வர்க்கப் பின்புலத்தையுடைய இளைஞர்கள் காணப்பட்டனர். மோசமடைந்து வரும் சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு பாராளுமன்ற ஜனநாயகம் ஒரு தீர்வாக அமைய மாட்டாது எனக் கருதினர். 

பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது ஏற்பட்ட அவநம்பிக்கைக்கு பலாத்காரப் புரட்சித் தீர்வு தான் வழியெனச் சிந்திக்கும் போக்கு ஏற்பட்டது. புரட்சி ஒன்று விரைவில் வெடிக்கப் போகின்றது எனவும், அதற்கான தயாரிப்பு வேலைகளைத் துரிதமாகச் செய்ய வேண்டும் எனவும் கிளர்ச்சிவாத இளைஞர்கள் நம்பத் தொடங்கினர். இந் நம்பிக்கை காரணமாக அவ்விளைஞர்கள் ‘பெரும் போராட்டம்’ ஒன்று உடனடியாகவே தோன்றுவதற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட வேண்டும் எனக் கருதினர். தொழிலாளர்களுடனும், விவசாயிகளுடனும் இணைந்து நீண்ட காலப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. 

ஈ) கிளர்ச்சி இயக்கம், இருந்து வரும் சமூகப் பொருளாதார அமைப்பை மாற்றுவதில் தொழிலாளி வர்க்கம் பிரதான வகிபாகத்தைப் பெறுகிறது என்பதையும் கவனிக்கத் தவறியது. தொழிலாளர் வர்க்கத்தின் வகிபாகத்தை அது குறைத்து மதிப்பிட்டது. 

நான்காவதாக குறிப்பிட்ட விடயம் குறித்து விரிவாகக் கூறுதல் அவசியம். ‘தொழிலாளர் வர்க்கம்’ என்பதற்குப் பதிலாக கிளர்ச்சிவாத இயக்கங்கள் ‘ஒடுக்கப்படும் வர்க்கம்’ (OPPRESSED CLASS) என்ற எண்ணக் கருத்தை முன்வைத்தன. இது தொழிலாளர் வர்க்கம் என்பதை விட விரிவான வகைப்பாடு ஆகும். ‘ஒடுக்கப்பட்ட வர்க்கம்’ என்பது சொத்துக்கள் அற்றது (PROPERTYLESS) என்றும் வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டது. இவ் வரைவிலக்கணம், பாட்டாளி வர்க்கத்திற்குள் சொத்துக்கள் எதனையும் உடமையாக வைத்திருக்காத இளைஞர்களாகிய தாமும் அடங்குகிறோம் என்ற முடிவை அடைவதற்கு அவர்களைத் தூண்டியது. இச் சிந்தனைப்போக்கு இவ் இளைஞர் குழுக்களின் குட்டி முதலாளித்துவக் கருத்தியலைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. ரோஹண விஜேவீரவின் பின்வரும் கூற்று இதற்குச் சான்றாகும். 

“தொழிலாளர் வர்க்கம் என்பதன் பொருள் யாது? அது பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதி அல்லவா? பாட்டாளிகள் நாடு முழுவதும் பரவி உள்ளனர். தமது உழைப்பை விற்பனை செய்பவர்கள், இன்று நாட்டில் தம் உழைப்பை விற்று சீவிக்க முடியாத நிலையில் எங்கும் பரவி உள்ளனர். வேலையற்றவர்களான கிராமத்து இளைஞர்கள், சேனைப் பயிர்  செய்வோர், குத்தகைக்குப் பயிர் செய்வோர் என்ற வகையினரான பலர் தம் உழைப்பை விற்க முடியாதவர்களாய் வேலையற்றவர்களாய் இருக்கின்றனர். இவர்கள் எந்த வகைக்குள் சேர்க்கப்பட வேண்டியவர்கள்? தொழிலாளி வர்க்கத்தை, மேற்குறித்தவர்களை உள்ளடக்காத தனிப்பிரிவாக வகைப்படுத்த முடியாது. அப்படி வகைப்படுத்தினால் மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் என்று பலவகையான வர்க்கப் பிரிவுகள் இருக்கின்றன என்றல்லவா கூற வேண்டி ஏற்படும்?”

(1970 ஆம் ஆண்டு செப்டெம்பர் 13 ஆம் திகதி புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விஜேவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது ‘ரத்துலங்கா’ – சிவப்பு லங்கா – 1971 மார்ச் இதழ், பக். 4 இல் குறிப்பிட்டிருந்தது.)

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கருத்தியலின் பிரதான கூறுகளை மேலே எடுத்துக் காட்டினோம். இவ் அரசியல் கருத்தியலுக்கு அமைவாகவே அக்கட்சியின் ஒழுங்கமைப்பு முறைகள் அமைந்தன. மக்கள் விடுதலை முன்னணி குட்டி முதலாளித்துவ வர்க்கம் எதிர்நோக்கிய நெருக்கடிகளின் பின்னணியில் தோன்றியது. 1971 ஏப்ரல் கிளர்ச்சி, இடதுசாரி இயக்கம் இளைய தலைமுறையினரிடமிருந்து எதிர்நோக்கிய அறைகூவல் ஆகும். மக்கள் விடுதலை முன்னணியை இந்த நோக்கில் ஆய்வு செய்வது பயன் தருவது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5070 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (10)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)