Arts
14 நிமிட வாசிப்பு

ஜேம்ஸ் மனர் எழுதிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களின் அரசியல் வாழ்க்கை வரலாறு நூல் – பகுதி 2

January 24, 2024 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்று கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன

1956 ஆம் ஆண்டின் தேர்தல் வெற்றி பண்டாரநாயக்கவிற்கு நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியது. தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட பண்டாரநாயக்க செய்ய வேண்டிய சட்டப்படி நியாயமான (Legitimate) கடமைகள் பல இருந்தன. இவை அவசியமான கடமைகள் ஆகவும் இருந்தன. அவற்றைச் செய்யாமல் அப் பதவிக்குரிய பொறுப்புகளை அலட்சியமாகப் புறந்தள்ளும் அவரது நடத்தை மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தின. நாம் இங்கு ஒவ்வொரு விடயத்தையும் விபரிக்க வேண்டியதில்லை. பண்டாரநாயக்கவின் நடத்தை பற்றி மனர் பின்வருமாறு கூறுகிறார். 

“எந்தவொரு குழுவாயினும் தேவையற்ற நியாயமற்ற கோரிக்கைகளுடன் வரும்போதெல்லாம், அவற்றுக்குச் சம்மதம் தெரிவித்துச் சலுகைகளை வழங்குவதும் விட்டுக்கொடுப்பதுமான அவரது நடத்தைப் போக்கு அதிர்ச்சியளிப்பது. அவரின் இந்தப் பழக்கம் சிங்கள – தமிழ் இனத்துவ உறவுகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தின.”

1940 களின் நடுப்பகுதி முதல் இலங்கையின் அரசியல் தலைவர்களிடம் சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிகளுக்கும் உத்தியோக மொழி என்ற அந்தஸ்து வழங்குவதில் கருத்தொற்றுமை உருவாகிக்கொண்டிருந்தது. அவ்வேளை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவையில் ஒரு உறுப்பினராக இருந்த பண்டாரநாயக்க, நேர்மையாகவும் சரியாகவும் ஒரு கருத்தை எடுத்துச் சொன்னார். அதாவது சிங்களம், தமிழ் ஆகிய இரு தேசிய மொழிகளும் உத்தியோக அலுவல்களில் இடம்பிடித்துக்கொள்ள வேண்டும்; ஆங்கிலத்திற்குப் பதில் அவை அரசகரும மொழிகளாக ஆக்கப்பட வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது. 1950 களில் சிங்கள மத்திய வகுப்பினர் மத்தியில் சிங்கள மொழித் தேசியவாதம் (Linguistic Nationalism) மேற்கிளம்பியது. சிங்கள புத்திஜீவிகள் சிலரும் அதற்கு ஆதரவாகச் செயற்பட்டனர். அவ்வேளை அவர்கள் பண்டாரநாயக்க தங்கள் இயக்கத்திற்கு தலைமை வகிக்கக்கூடிய ஒருவர் என்று நினைத்துப் பார்க்கவேயில்லை. ஏனெனில் பண்டாரநாயக்க தன்னைப்பற்றி உருவாக்கி வைத்திருந்த பிம்பமும் அவரது பொதுவெளி நடத்தையும் இயல்பாகவே பண்டாரநாயக்கவின் ஆதரவைப் பெறமுடியாது என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்தியிருந்தது. சிங்கள மத்தியதர வர்க்கத் தேசியவாதிகள், சிங்களப் புத்திஜீவிகள் ஆகிய சமூகக் குழுக்களைப் பண்டாரநாயக்க 1937 முதல் ‘சிங்கள மகாசபை’ ஊடாக தன்பக்கம் ஈர்த்து வைத்திருந்தார் என்பது உண்மையே ஆயினும் அவர் தனது ‘ஆங்கில மயப்பட்ட உயர்குழாம் ஆளுமை’ (Anglicised and Elite Personality) என்ற பிம்பத்தைப் பொதுவெளியில் காட்டிக்கொண்டார். அவரது இந்த வெளித்தோற்றத்தில் ஒரு முரண்பாடு உள்ளார்ந்து இருந்தது. வாழ்வின் இறுதிநாட்கள் வரை அவரது இம் முரண்பட்ட ஆளுமைப் பண்பு தொடர்ந்திருந்தது. 1938 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க தேசிய உடையை அணிந்துகொண்டு பொதுமேடையில் ஏறி ஆங்கிலேயப் பண்பாட்டு வழமைகளைக் கண்டித்துப் பேசினார். இம் மேடைப்பேச்சு நடைபெற்று இருவாரம் கழிந்தபின்னர் அவர் மேற்கத்தைய உடையணிந்துகொண்டு Greyhound Billy Micaber என்ற செல்ல நாயுடன் செல்லும் காட்சி புகைப்படமாக வெளியாயிற்று என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இன்னொரு சம்பவத்தையும் மனர் குறிப்பிடுகிறார். பண்டாரநாயக்க பிரதமராகப் பதவியேற்ற பின் நடைபெறும் வாராந்தப் பத்திரிகையாளர் மாநாட்டின்போது இடம்பெறும் காலை உணவு விருந்தில் சிங்களப் பண்பாட்டைப் புகுத்தினார். சேர். யோன் கொத்தலாவல பிரதமராக இருந்தபோது முட்டை அப்பம் காலை உணவாக வழங்கப்பட்டு வந்தது. பண்டாரநாயக்க அதற்குப் பதில் பாற்சோறு (கிரிபத்) வழங்கினார். இந்தக் குறியீட்டு வடிவிலான மாற்றத்தின் பயனை பண்டாரநாயக்க, பாற்சோறை கரண்டியால் சாப்பிடுவது மூலம் கெடுத்துக்கொண்டார் என மனர் குறிப்பிடுகிறார். மனர் கூறும் குறுங்கதைகள் முக்கியமானவை. ஆனால் அவரால் கூறப்படாத குறுங்கதை ஒன்றை நான் இவ்விடத்தில் பதிவுசெய்ய விரும்புகிறேன். 1956 இற்குப் பிந்திய ஆண்டுகளில் நான் ஊடகவியலாளராக பாராளுமன்றத்தின் பத்திரிகையாளர் கலரியில் இருந்தபோது நான் நேரடியான கண்ட, கேட்ட விடயத்தையே இங்கு கூறுகிறேன். ஒருநாள் பிரதமர் பண்டாரநாயக்கவிற்கும் றொபர்ட் குணவர்த்தனவிற்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்துகொண்டிருந்தது. அந்த விவாதம் ஆங்கில மொழியில் நடந்துகொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் றொபேர்ட் குணவர்த்தன இலக்கண வழுவுடைய செம்மையற்ற ஆங்கிலத்தில் சில வசனங்களைப் பேசிவிட்டார். பண்டாரநாயக்க றொபர்ட் குணவர்த்தன மீது நாணிக் குறுகச் செய்யும் கேலியான பார்வையைச் செலுத்தியவாறு பின்வருமாறு கூறினார்.  

“ஏன் உங்களுக்குத் தெரிந்த புரியக்கூடிய மொழியிலிலேயே பேசக்கூடாது? சிங்களத்தில் பேசுங்கள்!” (Why don’t you speak a language you understand? Speak sinhalese.)

பண்டாரநாயக்க பேசிய தொனி, சிங்கள மொழியானது சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களுக்கு ஏற்ற மொழி என்ற கருத்தை சந்தேகத்திற்கு இடமற்ற முறையில் வெளிப்படுத்தியது. பிரதமர் தனது தவறை பின்னர் உணர்ந்தார் போலும். ‘ஹன்சார்ட்’ பத்திரிகை வெளியான போது அவரின் இந்த இகழ்ச்சி மொழிகள் அதில் காணப்படவில்லை.

Banda speech

1955 இல் சிங்களத் தேசியவாதிகளுக்கு தமக்குத் தலைமை வழங்கக்கூடிய கவர்ச்சி ஆளுமைமிக்க தலைவர் தேவைப்பட்டது. அப்போது அவர்களின் முதலாவது தெரிவாக பண்டாரநாயக்க இருக்கவில்லை. அத் தேசியவாதிகள் டட்லி சேனநாயக்கவையே முதலில் தேர்ந்துகொண்டனர். டட்லி சேனநாயக்க அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்தபின்னரே சிறீலங்கா சுதந்திரக் கட்சியிடம் சென்றனர். சிங்களத் தேசியவாதிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு சிறீலங்கா சுதந்திரக்கட்சி மொழிக்கொள்கை தொடர்பாக 1955, செப்டம்பர் மாதம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அந்தத் தீர்மான வரைவை எழுதித் தயாரித்த பண்டாரநாயக்க, தமிழுக்கு பிரதேசமொழி என்ற அந்தஸ்தை வழங்கும் முறையில் அதனை எழுதினார். அத் தீர்மானம் இவ்வாறு அமைந்தது.

“எல்லா நீதிமன்றுகளிலும் அரசாங்க அலுவலகங்களிலும் உள்ளூராட்சி சபைகளிலும் சிங்களம் உத்தியோக அலுவல் மொழியாக இருத்தல் வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இதற்கு விதிவிலக்காக அமைதல் வேண்டும். அம் மாகணங்களில் உத்தியோக அலுவல் மொழி தமிழாக இருத்தல் வேண்டும்.”

அமுக்கக் குழுக்களின் (Pressure Groups) அழுத்தங்களுக்கு வளைந்து கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்த பண்டாரநாயக்க இனவாதக் கோரிக்கையான ‘சிங்களம் மட்டும்’ கோரிக்கையை ஏற்றுச் செயற்பட்டார். அவருடைய விட்டுக் கொடுப்புகளில் மிகவும் வெட்கக் கேடானதும், இறுதியாகவும் அமைந்தது பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கியமை ஆகும். தனது றொஸ்மீட் பிளேஸ் இல்லத்தின் முன்பாக தரையில் அமர்ந்து சத்தியாக்கிரகம் செய்த பிக்குகளின் கோரிக்கைக்கு இணங்கி வெட்கப்படவேண்டிய இச் செயலைச் செய்தார். இவ்விடத்தில் மனர் (Manor) அவர்களின் கூற்றை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

Banda - selva

“பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் வலிதற்றதாக்கப்பட்டுவிட்டது என்று வானொலி மூலம் அறிவிப்புச் செய்தார். பின்னர் அவர் வீடு திரும்பி தாம் செய்த அறிவித்தல் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறினார். ஆனால் பிக்குகள் அந்த அறிவிப்புப் பற்றி எழுத்தில் தரும்படி கேட்டனர். எழுத்தில் தரவேண்டிய அவசியமில்லை எனக்கூறி அவர்கள் கோரிக்கையைப் பண்டாரநாயக்க நிராகரித்தார். ஆயினும் பிக்குகள் விடாது அக் கோரிக்கையில் உறுதியாக நின்றனர். இறுதியில் பண்டாரநாயக்க அதற்குச் சம்மதித்தார். அத்தோடு நிறுத்திவிடாது பிக்குகளின் தலைவர் பண்டாரநாயக்கவை மேலும் அவமானப்படுத்தினார். சமஷ்டிக் கட்சியை தடைசெய்ய வேண்டும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும், அரசாங்க உத்தியோகத்தர்கள் உபயோகிக்கும் உத்தியோக முத்திரைகளில் (Official Stamp) தமிழ் எழுத்துக்கள் நீக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த மூன்றில் இறுதியாகக் குறிப்பிட்ட கோரிக்கையை மட்டும் நிறைவேற்றும் அதிகாரம் தம்மிடம் உள்ளது எனக் கூறிய பிரதமர், அதனை நிறைவேற்றுவதற்கு உறுதியளித்தார்.”

ஜேம்ஸ் மனர் தமது நூலிற்கு ‘The Expedient Utopian’ எனத் தலைப்பிட்டுள்ளார் (தமிழில் இதனைச் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவகையில் செயற்படும் இலட்சியவாதி என்ற நீண்ட தொடரால் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்). பண்டாரநாயக்க ஒரு இலட்சியவாதி, பூரணமான கற்பனா உலகம் ‘உட்டோப்பிய’ மலரவேண்டும் என்ற இலட்சியமுடையவர். ஆயினும் தம் இலட்சியங்களுக்கு முரணான அறநெறிக்கு  ஒவ்வாத செயல்களையும் செய்பவர். அவரிடம் தாராண்மைவாதம், இலட்சியவாதம் என்ற இரண்டும் கலந்த சிந்தனை இருந்தது. அரசியல் தேவைகள் எழும்போதெல்லாம் அவர் தனது தாராளவாத, இலட்சியக் கொள்கைகளை விட்டுக்கொடுப்பதாக இருந்தார். அவரது இச் சந்தர்ப்பவாதப் போக்கை நாம் மேலே குறிப்பிட்ட அவரது அரசியல் தத்துவத்துடன் (Political Philosophy) இணைத்துப் புரிந்துகொள்ளவேண்டும். பண்டாரநாயக்கவின் அரசின் தத்துவமாக மக்கள் வாதம் (Populism) அமைந்தது. வெகுஜனங்கள் அழுத்தங்களைப் பிரயோகிக்கும்போது, அந்த அழுத்தங்களுக்குப் பணிந்து விட்டுக்கொடுத்தல் வேண்டும்; அதிகாரத்தில் உள்ளவர்கள் சனங்களின் சக்தியின் முன் பணிந்து போகவேண்டும் என்ற கருத்துக்குச் சார்பானதாக அவரது சிந்தனை அமைந்தது.

பண்டாரநாயக்கவிற்குப் பின்னர் உள்ள 30 ஆண்டுகாலத்தில் (1959 – 1989) இலங்கையில் பலாத்கார வன்முறைகள் தொடர்ச்சியாக நடந்து பேரழிவுகளை ஏற்படுத்தி வந்துள்ளன. இவற்றுக்கெல்லாம் பண்டாரநாயக்க எந்தளவுக்குப் பொறுப்பை ஏற்க வேண்டியவர்? சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் சிங்களவர், தமிழர் என்ற இரு இனக்குழுக்கள் மத்தியிலும் இனத்துவ உணர்வு மேற்கிளம்பியதும், அதனால் முரண்பாடுகள் கூர்மையடைந்தமையும் நிதர்சனமான உண்மையாகும். இவ்வாறான போக்கால் மோதல் நிலை (Conflict) ஏற்படுதல் உள்ளார்ந்த ஒரு செயல்முறையாக இருந்துள்ளது. ஆனால் இந்த முரண்பாடுகள் தீவிரம் பெறாமல் தவிர்க்கப்பட்டிருக்கலாம். அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள் தேசியவாத சக்திகளை உள்ளீர்த்து சமரசம் செய்துவைக்கும் தொலைநோக்குடைய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக உத்தியோக அலுவல்களில் தேசிய மொழிகளை (சிங்களமும் தமிழும்) புகுத்தும் மாற்றம், சுதந்திரத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் யாவராலும் ஏற்கப்பட்ட கொள்கையாக இருந்தது. இக் கொள்கையை அதிகாரத்திற்கு வந்த அரசியல்வாதிகள் நேர்மையோடு நிறைவேற்றத் தவறினார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை குறுகிய நோக்கம் கொண்டதாய் இருந்தது. அவர்களது உயர் வர்க்கச் சார்பும், பண்பாட்டு மதிப்பீடுகளும் அவர்களைச் சரியான திசையில் பயணிக்க அனுமதிக்கவில்லை. பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேற்றப்படாதிருந்தால், தேசியவாத அழுத்தங்கள் தணிக்கப்பட்டிருக்கலாம். பிரதமர் டி.டிஸ். சேனநாயக்க 1952 இல் இறந்த போது, பண்டாரநாயக்க பிரதமராகப் பதவி ஏற்றிருப்பார். அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் இது நடைபெறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தவாறு அவர் தலைமைத்துவத்தை ஏற்றிருந்தால் அவரது தாராண்மைவாதக் கொள்கைகள் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டிருத்தல் கூடும்.

மேற்குறித்தபடி ‘இப்படி நடந்திருந்தால்’ எனப் பல ‘ஆல்’ களை வைத்துக்கொண்டு வரலாற்றை மதிப்பீடு செய்தல் பயனற்றது. ஆகையால் ஜேம்ஸ் மனர் கூறுவது போல் இலங்கை எதிர்கொண்ட பேரழிவுக்கான பொறுப்பு பண்டாரநாயக்கவிற்கு உரியது என்பதை நான் ஏற்கவேண்டியவனாக உள்ளேன். பண்டாரநாயக்க செய்தவையும் அவர் பொறுப்பற்ற முறையில் செய்யாமல் விட்டவையும் எமது சமூகத்திற்கு பேரழிவுகளை கொண்டுவந்தன. பண்டாரநாயக்கவின் ஆளுமைக் குறைபாடுகள் அவரது தவறான நடத்தைகளுக்குக் காரணமாயின. அவர் தலைமைத்துவத்தின் வகிபாகம் (Role of Leadership) பற்றிக் கொண்டிருந்த தவறான எண்ணங்கள், பல பொறுப்பற்ற செயல்களை அவர் செய்யக் காரணமாயின. தலைவர் ஒருவர் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விடுவதற்கும் அவை காரணமாயின. 

ஜேம்ஸ் மனர், பண்டாரநாயக்கவின் ஆளுமையை உருவாக்குவதிலும் அவரது நடத்தையை தீர்மானிப்பதிலும் பங்குகொண்ட பண்பாட்டு அம்சம் ஒன்றைக் குறிப்பிடவில்லை. அதனை நான் குறிப்பிட விரும்புகிறேன். பண்டாரநாயக்க சிங்கள பௌத்த தேசியவாத உணர்வுகளைக் கொண்ட சமூகக் குழுக்களை தூண்டிவிட்டு அக் குழுக்களை அரசியல் அணிதிரட்டலுக்கு உபயோகித்தார். ஆயினும் தாம் அக் குழுக்களுக்கு ஓர் அந்நியன் (Outsider) என்னும் உணர்வு அவரிடம் தீவிரமாக வளர்ந்திருந்தது. அவர் ஆங்கில மயப்படுத்தப்பட்ட பிரபுக்குலத்தின் (Anglicised Aristocrats) குலக்கொழுந்தாக தான் எஞ்சியுள்ளேன் என்பதை நன்கு அறிந்திருந்தார். தான் பிறப்பில் கிறிஸ்தவர் என்பதும் அவரை உறுத்திக்கொண்டிருந்தது. இந்த நிலையில் மக்கள் தன்னைச் சிங்கள நலன்களுக்கு எதிராகத் துரோகம் செய்யக்கூடியவர் என்று கருதலாம் என்பதை உணர்ந்திருந்தார். அவர் சிங்கள நலன்களுக்கு மாறானவர் என்ற கறையை அவர் மீது பூசும் பிரச்சாரம் சிங்களத் தீவிரவாதிகளால் பல தடவைகள் நடத்தப்பட்டதும் உண்மை. இதனால் அவரிடம் ஒரு பண்பாட்டுப் பாதுகாப்பின்மை உணர்வு (Cultural Insecurity) இருந்து வந்தது. தாமே தூண்டி வளர்த்துவிட்ட சக்திகள் தம்மீதே பாயலாம் (“வளர்த்த கடா மார்பில் பாய்வது போல்”) என்ற அச்சவுணர்வும் தம்மை அச் சக்திகள் மிரட்டலாம் என்ற பாதுகாப்பற்ற உணர்வும் அவரிடம் இருந்து வந்தது. இல்லாவிடின் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தாராண்மைவாதக் கொள்கைகளை அலட்சியப் பாவனையுடன் தூக்கி வீசியிருப்பாரா? தானே வளர்த்துவிட்ட சக்திகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து போயிருப்பாரா?

அவரது றொஸ்மீட் பிளேஸ் இல்லத்தில் குழுமிய பிக்குகளுக்கு அவர் அடிபணிந்துபோன சம்பவத்தை மேலே குறிப்பிட்டோம். தற்போது பிறிதொரு சம்பவத்தை நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்புகிறேன். இச்சம்பவம் ஜேம்ஸ் மனரால் குறிப்பிடப்படாதது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன். ‘சிங்களம் மட்டும்’ சட்ட மசோதா கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் சமஷ்டிக் கட்சியினர், காலி முகத்திடலில் சத்தியாக்கிரகம் செய்தனர். அமைதியான முறையில் சத்தியாக்கிரகம் செய்தவர்கள் மீது அப்போது தாக்குதல் நடத்தப்பட்டது. அமைதியான முறையில் எதிர்ப்பை வெளியிட்ட தமிழர்கள் மீது மேற்கொண்ட இத் தாக்குதல் சம்பவம் பற்றி நேரில் கண்ட சாட்சியாக உள்ள ஊடகவியலாளர்கள் தரும் தகவல்களைக் கொண்டு இதனை விபரிக்கவுள்ளேன். இந்த ஊடகவியலாளர் கூறும் சான்றுகளை நான் நம்புகின்றேன். சத்தியாக்கிரகிகளை தாக்கிய காடையர்களுக்கு சத்தியாக்கிரகிகள் திருப்பித் தாக்கமாட்டார்கள் என்பது கூடிய தென்பை அளித்தது. அவர்கள் பலரை அருகேயிருந்து பெய்ரா வாய்க்காலுக்குள் தூக்கி வீசினர். அவர்களுள் சிலர் சத்தியாக்கிரகிகள் மீது மூத்திரம் பெய்தனர். ஆயினும் சிறிது நேரத்தின் பின்னர் பொலிசார் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர். பொலிசார் தமது தற்துணிவின் அடிப்படையில் அமைதியைப் பேணும் நோக்குடன் அவ்விடத்துக்கு வந்ததும் காடையர்கள் பின்வாங்கிச் சென்றனர். அவ்வேளை பாராளுமன்றத்தின் வாசற்படிகளால் பிரதமர் இறங்கி வந்தார் எனவும், அவ்விடத்துக்கு வந்த பிரதமர் பொலிஸ் குழுவின் தலைவரான உத்தியோகத்தரை தம்மிடம் வருமாறு அழைத்தார் எனவும் நேரில் கண்ட சாட்சியான ஊடகவியலாளர் கூறுகிறார். அந்த உத்தியோகத்தர் பிரதமருடன் உரையாடிய பின் திரும்பிச் சென்று தமது ஏனைய உத்தியோகத்தர்களையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு அவ்விடத்தைவிட்டு நீங்கிய உடனே காடையர்கள் மீண்டும் அவ்விடத்துக்கு வந்து தாக்குதலைத் தொடர்ந்தனர். இங்கே நியாயமான ஊகம் ஒன்று எழுகிறது. பிரதமர் பொலிசாரை அவ்விடத்தைவிட்டு போய்விடும்படி உத்தரவிட்டார் என்பதே அவ் ஊகம். சத்தியாக்கிரகிகளைக் காடையர்கள் தாக்கியமை, பொலிசார் வந்ததும் அவ்விடத்தைவிட்டு ஓடியமை ஆகிய சம்பவங்கள் வரையான நிகழ்வுகளுக்கு என்னிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளன. அவை பற்றிப் பலரும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். அதற்குப் பிந்திய கதைக்கு ஊடகவியலாளரான நண்பரையே சாட்சியமாகக் கொள்கிறேன். பல ஆண்டுகள் கழிந்த பின் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் “உமது ஆட்களைக் கூட்டிக்கொண்டு இவ்விடத்தைவிட்டு போய்விடுங்கள்” என்ற உத்தரவு விடுக்கப்பட்ட உண்மையை எனது நண்பரான ஊடகவியலாளருக்கு உறுதிப்படுத்தினார். குறித்த உத்தியோகத்தர் பொலிஸ் தலைமை அலுவலகத்திற்குத் திருப்பிச் சென்றார். மாலையானதும் பொலிஸ் மா அதிபர் (IGP) குறித்த உத்தியோகத்தரை தம்மிடம் வரும்படி அழைத்தாராம். காலிமுகத்திடலுக்குத் திரும்பிப் போகும்படி பிரதமர் கேட்டிருப்பதாக பொலிஸ்மா அதிபர் கூறினாராம் (பிரதமருக்கு பயம் பிடித்துவிட்டது போலும்). குறித்த உத்தியோகத்தர் “நான் அங்கு போனபோது பிரதமர் அவர்களே இவ்விடத்தைவிட்டுப் போகும்படி எனக்குக் கட்டளையிட்டார். ஆகையால் என்னால் இப்போது அவ்விடத்துக்குப் போக முடியாது” என்று கூறினாராம். அவ்வாறு கூறிய பின்னர் அந்த உத்தியோகத்தர் பதவி இராஜினாமாக் கடிதத்தை எழுதிச் சமர்ப்பித்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார் (பிறநாடு ஒன்றிற்கு குடியேறியாகப் போனார்).

பண்டாரநாயக்க இச்சம்பவத்தின் போது நடந்துகொண்ட விதம் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது. ஏனெனில் பண்டாரநாயக்க தனது அரசியல் எதிரிகள் மீது பழிவாங்கும் குணம் உடையவரல்ல. அவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது லேக்ஹவுஸ் பத்திரிகைகள் அவரைக் கேவலப்படுத்திச் சாடின. அவர் பிரதமரான போது அப் பத்திரிகைகள் அவரது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு முயற்சித்தன. ஆனால் பண்டாரநாயக்க லேக்ஹவுஸ் பத்திரிகைகளைத் தேசியமயமாக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. அவரது கட்சியின் பின் இருக்கை உறுப்பினர்களில் ஒருவர் லேக்ஹவுஸ் பத்திரிகைகளை தேசியமயமாக்க வேண்டும் ஒன்று ஆலோசனை வழங்கியபோதும் பண்டாரநாயக்க அதனை நிராகரித்தார். பின்னர் அவரின் விதவை மனைவி அப் பத்திரிகைகளை தேசிய மயமாக்கினார். அவர் இறப்புக்குப் பின் நிகழ்ந்த இப் பழிவாங்கும் செயலை பண்டாரநாயக்க ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார் என்றே ஜேம்ஸ் மனர் ஊகம் தெரிவிக்கின்றார். தனது எதிரியும் தன்னால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவருமான சேர்.யோன். கொத்தலாவலவிற்கு பிரதமர் பண்டாரநாயக்க செய்த உதவியொன்றைப் பற்றியும் ஜேம்ஸ் மனர் குறிப்பிடுகிறார். இங்கிலாந்தில் ‘Kent’ என்ற இடத்தில் பண்ணை மாளிகை ஒன்றைக் கொள்வனவு செய்து அங்கு போய்க் குடியேற விரும்பிய கொத்தலாவலவிற்கு ‘நாணயப் பரிமாற்றுக் கட்டுப்பாட்டு பிரமாணங்களை வளைந்துகொடுக்கச் செய்து’ பண்டாரநாயக்க உதவினார் என ஜேம்ஸ் மனர் குறிப்பிடுகிறார். இவ்வாறு இருக்க, தமிழ்ச் சத்தியாக்கிரகிகள் விடயத்தில் பண்டாரநாயக்கவின் நடத்தை அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது. சிங்கள இனவாத வன்முறையாளர்களின் நம்பிக்கைக்குரிய ஒருவராகத் தான் இருக்கவேண்டும் எனப் பண்டாரநாயக்க விரும்பியதே இதற்கான காரணம் என நான் கருதுகிறேன். இது போன்ற தருணங்களில் அவர் தனது தாராண்மைவாதத்தை மட்டுமல்ல, ஒரு அரசாங்கத்தின் தலைவர் என்ற முறையில் சரியானதான ஒழுக்க நடத்தை விதிகள் எவையோ அவற்றையும் கைவிடத் தயாராக இருந்தார் எனக் கருதத் தோன்றுகிறது.

தனிநபர் உளவியல், அரசியல் நடத்தை என்ற இரண்டிற்கும் இடையிலான தொடர்பை விளக்குவதற்கு கிறிஸ்தவராக இருந்த அவர் பௌத்தத்திற்கு மாறியதை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். அவரது மதமாற்றத்தை சந்தர்ப்பவாதம் என்று கூறுவதற்கும் அவரைக் குற்றம் சுமத்துவதற்கும் ஜேம்ஸ் மனர் தயாராக இருந்தபோதும் அவர் பண்டாரநாயக்கவை ‘டொனமூர் பௌத்தர்’ என குறிப்பிடாமைக்கான விளக்கம் தமிழ் வாசகர்களுக்கு அவசியமானது. 1931 ஆம் ஆண்டில் டொனமூர் அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. அதன்படி 21 வயதுக்கு மேற்பட்ட ஆண் – பெண் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. அதுவரை காலமும் ஆளுநர் நியமனம், மட்டுப்படுத்தப்பட்ட வாக்காளர்களின் படித்த, சொத்துரிமையுள்ள ஆண்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படல் என்ற இருவழிகளில் சட்டசபை உறுப்புரிமையை பெறக்கூடிய வாய்பை அனுபவித்த அரசியல்வாதிகள் சர்வசன வாக்குரிமையால் தங்கள் அரசியல் எதிர்காலம் சூனியமாகப் போவதைக் கண்டு கலக்கம் அடைந்தனர். இவ் அரசியல்வாதிகளுள் கிறிஸ்தவர்களாக இருந்த பலர் விரைந்து பௌத்தத்திற்கு மதம் மாறிப் பௌத்தர்களாயினர் (இவர்கள் ‘டொனமூர் பெளத்தர்’ எனக் கிண்டலாக அழைக்கப்பட்டனர், மொ-ர்). பண்டாரநாயக்கவை ‘டொனமூர் பெளத்தர்’ எனக் கூறமுடியாது என்பதற்குப் பல சான்றுகளை ஜேம்ஸ் மனர் தருகின்றார். பண்டாரநாயக்க ஒருபோதும் கிறிஸ்தவத்தில் நம்பிக்கையுள்ள விசுவாசியாக இருந்ததில்லை. பௌத்தம் ஒரு அறிவார்ந்த மதம் என்பதால் அதன் அறிவார்ந்த தன்மை (Rationality) அவரை அம் மதம் மீது மதிப்புக்கொள்ளச் செய்தது. அவர் கிறிஸ்தவத்தை விட்டு பெளத்தராக மாறியதற்கு காரணம் இதுவே என ஜேம்ஸ் மனர் வாதிடுகிறார். பண்டாரநாயக்கவின் பெளத்தம், பல மத்தியதர அறிவாளிகளால் போற்றப்பட்ட ‘புரட்டஸ்தாந்திய பௌத்தம்’ (Protestant Buddhism) ஆகும். சிங்கள பௌத்தர்களால் நம்பப்பட்டுவந்த இயற்கை கடந்த சக்திகளுக்கான வழிபாட்டுச் சடங்குகளில் பண்டாரநாயக்கவுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் அவரது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தின் போது, அவர் அரசியல் நெருக்கடிகளால் ஏற்பட்ட அழுத்தங்களால் பாதிக்கப்பட்டிருந்த போது, அவரின் நடவடிக்கைகளில் ஒரு வித்தியாசம் காணப்பட்டது. ஜேம்ஸ் மனர் பண்டாரநாயக்கவின் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற விநோதமான நிகழ்வை சிறப்பாக படம்பிடித்துக் காட்டியுள்ளார். முந்திய காலப்பகுதியில் அவரது மனைவியை லுணாவ என்ற இடத்தில் உள்ள கத்தரகம கடவுளின் கோயிலுக்கு நேர்த்திக் கடன் செய்வதற்காக அழைத்துச் சென்றார். தம் மனைவியுடன் அங்கு சென்ற பண்டாரநாயக்க அங்கு நிகழ்த்தப்பட்ட சடங்குகளில் ஒரு பார்வையாளராக விலகி நின்று அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார். 1959, யூலை மாதம் பாராளுமன்றத்தில் அவரது பெரும்பான்மைப் பலம் குறைந்து, அவர் தோற்கடிக்கப்படும் ஆபத்து உருவாகிக்கொண்டிருந்தது. அவ்வேளை தென்பகுதியின் சோதிடர் ஒருவரிடம் பண்டாரநாயக்க ஆலோசனை பெற்றார். அச் சோதிடர் (ஒரு பெண்மணி; ‘ஒளிவாசிப்பு’ என்ற சோதிடக் கலைநிபுணர்) ஆலோசனைப்படி பண்டாரநாயக்க லுணாவ கோவிலுக்கு மீண்டும் ஒருமுறை சென்றார். முந்திய தடவை விலகி நின்று பார்வையாளராக இருந்தவர், இத்தடவை கோவில் சடங்குகளில் பங்குகொண்டார். காவடி நடனமாடுவோர் சூழவர அவர் கத்தரகம கடவுளின் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட உருவச்சிலையை தேவாலயத்திலிருந்து சுமந்துசென்று தேரில் வைத்தார். அதன்பின் தேர் ஊர்வலமாக இழுத்துச்செல்லப்பட்டது. அவர் கொலை செய்யப்படுவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் நடந்த இச் சம்பவம், அவரது வாழ்க்கையின் முரண்பாடுகளைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்தது.

ஜேம்ஸ் மனரின் நூலின் அறிமுகப் பகுதியில் வரும் ஒரு கூற்றை எடுத்துக்காட்டி பண்டாரநாயக்கவின் வாழ்க்கை பற்றிய இலாப நட்டக் கணக்கை மதிப்பிடலாம் என விரும்புகிறேன். 

“பண்டாரநாயக்க இனவாதம், சீர்திருத்தம் என்ற இரு அடிப்படைக் கூறுகளை, இரண்டு முரண்பட்ட கூறுகளை இலங்கையின் அரசியலில் நிறுவனமயப்படுத்துவதற்கு (To Institutionalise), பிறர் எவரையும் விட அதிகப் பங்களிப்புச் செய்தார்.” 

ஜேம்ஸ் மனரது கூற்றின்படி பண்டாரநாயக்கவின் சீர்திருத்தம் (Reform) – சமூகநலன் விருத்தித் திட்டங்கள் – முக்கிய கூறாக இருந்ததெனக் கருதப்படுகிறது. இக் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. பண்டாரநாயக்கவை இந்த விடயத்தில் புத்தாக்கமான திட்டங்களை நடைமுறைப்படுத்திய ஒருவராகக் கொள்ள முடியாது. சுதந்திரம் பெற்ற காலம் முதல் பதவிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் சமூகநலன் (Welfare) திட்டங்களுக்கு முதன்மை அளித்தன. ஆனால் அரசியல் முறைமையில் (Political System) சீர்திருத்தம் கொண்டுவருதல் என்ற விடயத்தில் மட்டுமே பண்டாரநாயக்கவின் அக்கறை பெரிதாக இருந்தது. அரசாங்கத்தை மக்களுக்குக் கிட்டியதாக இலகுவில் அனுகக்கூடியதாக மாற்றுவதிலும் அரசாங்கம் மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் அறிந்து செயலாற்றவும் நடைமுறைகளை ஜனநாயகமயப்படுத்துவதிலும் பண்டாரநாயக்க உண்மையான அக்கறை கொண்டிருந்தார். 1959 இல் அவர் பதவியேற்றபோது, தமது நோக்கங்களில் ஒன்றாக அரசியல் முறைமையில் சீர்திருத்தம் என்பதைக் கொண்டிருந்தார். அவர் பதவியேற்ற தொடக்க விழாவில் பாராளுமன்ற அவைக்குள் திரண்ட சனக்கூட்டமும் தொடக்க மாதங்களில் அவர்கள் ‘அப்பே ஆண்டுவ’ என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறத்தொடங்கியதும் அவரது சீர்திருத்த நோக்கத்திற்குக் கிடைத்த அங்கீகாரத்தின் அடையாளங்களாகும். ஒருவகையில் அவர் தம் நோக்கத்தினை அடைவதில் வெற்றிகண்டார் என்றே கூற வேண்டும். றொஸ்மீட் பிளேஸ் இல்லத்தில் எவராயினும் தடையின்றி நுழைந்து தன்னைச் சந்திக்கலாம் என்ற நடைமுறையை அவர் புகுத்தினார். இவ்வாறு அவர் செய்திராவிட்டால் கொலையாளி அவரை எளிதில் அணுகியிருக்க முடியாது.

Bandaranayake house

அவரது கொள்கைகளின் பயனாக சிங்களத்தில் கல்வி கற்றோருக்கு சமூக நகர்வுக்கான (Social Mobility) வாய்ப்புக் கிடைத்தது. சுயமொழியில் கல்விகற்ற சிங்களவர்கள் பலர் அரசியல் அதிகாரப் பதவிகளிலும் உத்தியோக அதிகாரப் பதவிகளிலும் இடம்பிடித்துக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. ஆயினும் பண்டாரநாயக்கவின் கொள்கையான மக்கள் வாதம் சிங்களமொழி, பெளத்த சமயம் என்ற இரண்டின் அடிப்படையான ஆதிக்கத்தன்மையுள்ள இனவாதப் பெரும்பான்மைப் பிரிவினரை திருப்திப்படுத்தும் நிர்ப்பந்தத்தை பண்டாரநாயக்கவிற்கு உண்டாக்கியது. இதனால் பண்டாரநாயக்க பதவியேற்பதற்கு முன்பிருந்ததைவிட ஆழமாகப் பிளவுண்டுபோன ஒரு சமூகத்தை அவர் இறப்பின்போது விட்டுச்சென்றார். இந்த அர்த்தத்தில் அவர் இனவாதம், சீர்திருத்தம் என்ற இருவிடயங்களை மனர் கூறுவதைப் போல் நிறுவனமயப்படுத்தினார். இவை இரண்டும் ஒன்றோடொன்று முரண்பட்டவை.

பிராந்தியங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்தல் (Regional Devolution of Power), அவர் நீண்ட நாள் கனவாக இருந்த திட்டம். இதன் மூலம் ஊரக மாநாட்டில் ஜனநாயகத்தை (Locally based democracy) வளர்த்து முன்னெடுத்துச் செல்ல அவர் விரும்பினார். ஆனால் நடந்தது என்ன? இனக்குழும மோதல் (Ethnic Conflict) அதைச் சிதறடித்தது. அவர் இலங்கைச் சமூகத்தை இரண்டாக பிளவுபடுத்திய மோதல்களைக் கட்டுப்படுத்தாததன் விளைவாக கட்டுக்கடங்காத இராணுவமயமாக்கல், அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு என்பன எல்லை மீறிச் சென்றன. அவருக்கும் பின்வந்த ஆட்சியாளர்கள் இவை இரண்டையும் முழுநிறைவான வடிவில் செயற்படுத்தினர். பண்டாரநாயக்க இப்படி நிகழும் என்று நினைத்திருக்க மாட்டார். ஆனால் அது நிகழ்வதற்கான வழியை அவர் வகுத்துவிட்டுச் சென்றார்.

றெஜி சிறிவர்த்தன

Reji srivardana

றெஜி சிறிவர்த்தன இலங்கையின் மேற்கு மாகாணத்தின் இரத்மலானையில் பிறந்தவர். மத்தியதர வர்க்கப் பின்புலத்தினை உடையவரான றெஜி, இளமைக் காலக் கல்வியை சென். தோமஸ் கல்லூரியிலும் பின்னர் மருதானை ஆனந்தா கல்லூரியிலும் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் புலமைப் பரிசில் பெற்று ஆங்கில இலக்கியத்தை சிறப்புப் பாடமாகக் கற்று பட்டம் பெற்றார். இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் காலனிய அரசால் தடை செய்யப்பட்ட லங்கா சமசமாஜக் (LSSP) கட்சியின் உறுப்பினராக இணைந்து தலைமறைவுச் செயற்பாட்டாளராக இருந்த றெஜி சிறிவர்த்தன, மாணவராக இருந்த காலம் முதல் மார்க்சியத்தில் அக்கறை உடைய எழுத்தாளராகவும் செயற்பாட்டாளராகவும் இருந்து வந்தார். பல்துறை ஆற்றல்கள் மிக்க கலைஞராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய இவர், தனது வாழ்நாள் அக்கறையாக அரசியல், இலக்கியம் என்ற இரண்டு விடயங்களையும் முதன்மையானவையாகக் கொண்டிருந்தார். இரு தொகுதிகளாக வெளியிடப்பட்ட ‘Selected Writings of Regi Siriwardena (2006)’ எனும் நூலில் இவரது அரசியல் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ICES நிறுவனத்தின் வெளியிடான இவ்விரு தொகுதிகளையும் ஏ.ஜே. கனகரட்ண தொகுத்துப் பதிப்பித்தார். இலக்கியத்திலும் அரசியலிலும் ஈடுபாடு கொண்ட தமிழ் எழுத்தாளர்கள் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராகவும் இவர் விளங்கினார். இவரது ஆக்கங்கள் சில வருமாறு:

கவிதை :

  • Waiting for the Soldier (1989)
  • To the Muse of Insomnia (1990)
  • Among My Souvenirs (1997)

சுயசரிதைக் குறிப்புகள் :

  • Working Underground: The LSSP in Wartime (1999)

திரைக்கதை :

  • Gamperaliya (1965)
  • Golu Hadawatha (1969)

கட்டுரை :

  • MA de Silva & Reggie Siriwardena, Communication Policies in Sri Lanka: a Study, Paris: Unesco, 1977.
  • Reggie Siriwardena, K. Indrapala, Sunil Bastian & Sepali Kottegoda, School Text Books and Communal Relations in Sri Lanka, Council for Communal Harmony Through the Media, Colombo. 
  • Reggie Siriwardena, Equality and the religious traditions of Asia, New York: St Martin’s Press, 1987.

ஜேம்ஸ் மனர் பற்றிய விமர்சனக் கட்டுரை ‘Political Biography and The Role of Personality’ என்ற தலைப்புடையது. ‘Selected Writings of Regi Siriwardena – Volume 2’ நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. 

நன்றி

The Expedient Utopian : Bandaranaike and Ceylon by James Manor (Cambridge University Press, 1989: PP 327 + Bibliography and Index). ‘The Thatched Patio’ என்ற ஆங்கிலச் சஞ்சிகையின் 1990 ஜனவரி/பெப்ரவரி இதழில் றெஜி சிறிவர்த்தன அவர்களின் விமர்சனக் கட்டுரை வெளியானது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5395 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (10)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)