Arts
21 நிமிட வாசிப்பு

ஜேம்ஸ் மனர் எழுதிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்களின் அரசியல் வாழ்க்கை வரலாறு நூல் – பகுதி 1

January 17, 2024 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்று கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம் : றெஜி சிறிவர்த்தன

ஜேம்ஸ் மனர் (James Manor) என்னும் பிரித்தானியரான அரசியல், வரலாற்று அறிஞர் ‘The Expedient utopian: Bandaranaike and Ceylon’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் பற்றிய விமர்சனக் கட்டுரையொன்றை காலம் சென்ற அறிஞர் றெஜி சிறிவர்த்தன எழுதினார். அவரது கட்டுரை ‘Thatched Patio’ என்ற ஆங்கில சஞ்சிகையில் 1990 ஜனவரி-பெப்ரவரி இதழில் பிரசுரமானது. அக் கட்டுரையைத் தழுவிய மொழிபெயர்ப்பை இங்கே தந்துள்ளோம்.

bandaranayake book cover

அரசியல் வாழ்க்கை வரலாறு

அரசியல் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதென்பது ஒரு கைதேர்ந்த எழுத்தாளருக்கே வாய்க்கும் தனித்துவம் மிக்க கலை. அரசியல் வரலாற்றை எழுதப்புகும் எழுத்தாளர் / வரலாற்றாசிரியர் தாம் தேர்ந்துகொண்ட ஆளுமை ஒரு குறிப்பிட்ட காலத்தின் வரலாற்றுச் செயல்முறையில் (Historical Process) என்ன வகிபாகத்தை பெற்றார் என்பதைப் பரிசீலிப்பதற்கான முடிவை மேற்கொள்கின்றார். வரலாற்றாசிரியர் ஒருவர், தனிநபர் ஆளுமைகளுக்கு வரலாற்றில் முக்கியத்துவம் இல்லை; அத்தனிநபர்கள் ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாகவோ அல்லது சமூக இயக்கங்களின் முகவர்களாகவோ செயற்படுகின்றார் என்ற கருத்தை உடையவராக இருப்பின், வாழ்க்கை வரலாறு என்பதை எழுதுவதற்கு முன்வரமாட்டார் என்றே கருதலாம். பெருமனிதர்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்று கருதுபவர்களாக வரலாற்றாசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதில்லை. ஜேம்ஸ் மனர் அவர்கள் வெளிப்படையாகவே இக் கருத்தை நிராகரிக்கிறார். வாசகர்களாகிய நாம் ஒரு அரசியல் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது எதனை எதிர்பார்க்கின்றோம்? ஒரு தனிநபர் ஆளுமையின் சிறப்புப் பண்புகள் எவை? அவரின் ஆளுமையின் கூறுகளும் பலமும் பலவீனமும் எவ்வாறு வரலாற்று நிகழ்வுகளைப் பாதித்தன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றோம் எனலாம்.

bandaranaike parents

ஜேம்ஸ் மனர் எழுதிய நூல் அரசியல் வாழ்க்கை வரலாறு என்ற வரையறைக்குள் அமைவதாக உள்ளது. அவர் தமது நூலில் பண்டாரநாயக்கவின் தனிப்பட்ட வாழ்க்கை செய்திகள் எவையோ, அவை பற்றி மட்டுமே குறிப்பிடுகிறார். உதாரணமாக பண்டாரநாயக்கவின் சகோதரிகளுக்கும் அவருக்கும் இடையிலான உறவு, அவரது மனைவியுடனும், பிள்ளைகளுடனும் அவர் கொண்டிருந்த உறவு என்பன பற்றி இந்நூல் பேசுவதைத் தவிர்த்துள்ளது. இத் தனிப்பட்ட உறவுகளுக்கும் அவரது அரசியல் வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கவில்லை என்றே ஜேம்ஸ் மனர் கருதினார் எனலாம். ஆனால் பண்டாரநாயக்கவின் பிள்ளைப் பருவ வாழ்க்கை, அவர் இளைஞனாக இருந்த காலத்து வாழ்க்கை பற்றிய விரிவான தகவல்களை மனர் தருகிறார். இளமைக்கால வாழ்வில் பண்டாரநாயக்கவின் வாழ்க்கைச் சூழலும் பின்புலமும், பிற்காலத்தில் அவரின் அரசியல் வாழ்க்கையைப் பாதிப்பதாக அமைந்தது. அவரின் ஆளுமையின் குணப் பண்புகளும் நடத்தை முறைகளும் இளமை வாழ்க்கையால் கட்டமைக்கப்பட்டவையாகும். இக் காரணத்தினாலேயே ஜேம்ஸ் மனர் இளமை வாழ்வின் தனிப்பட்ட கூறுகளை விபரிக்கிறார் எனலாம். பண்டாரநாயக்கவின் இளமைக் காலச் சித்திரம் சிறப்பாகவே நூலில் தரப்படுகிறது. பண்டாரநாயக்கவின் சுயசரிதைப் பாங்கான குறிப்புகள், அவரது நண்பர்களதும் கூட்டாளிகளதும் நினைவுக் குறிப்புகள், பண்டாரநாயக்க குடும்பத்தின் ஆவணங்கள் என்பனவற்றை ஜேம்ஸ் மனர் நன்றாகவே பயன்படுத்தி இச் சித்திரத்தை வரைந்துள்ளார்.

பண்டாரநாயக்கவின் தந்தை சொலமன் டயஸ் பண்டாரநாயக்க ‘மகா முதலியார்’ என்ற பதவியை வகித்தவர் என்பது நாடறிந்த செய்தி. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சேர் சொலமன் டயஸ் இலங்கையில் ‘முதலாவது இடத்தைபெறும் சிங்களக் கனவான்’ (The first Sinhalese Gentleman) என்ற சிறப்பைப் பெற்றிருந்தார். பண்டாரநாயக்கவின் தாயார் ஒபயசேககர குடும்பத்தில் பிறந்தவர். ஒபயசேகர குடும்பம் ‘சிங்கள சமூகத்தின் அதி உயர்’ இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிறியதொரு உயர் குழாமினைச் (The Small Super-elite) சேர்ந்தது. ஆயினும் பண்டாரநாயக்க சிறுவனாகத் தலையெடுக்கத் தொடங்கிய காலத்திலேயே அவரது தாயாருக்கும், தந்தைக்கும் இடையே உறவுகள் கசப்பாகி முறிவடைந்திருந்தன. அவர்கள் இருவரும் பரஸ்பரம் மனவேற்றுமையை கொண்டிருந்தனர். பண்டாரநாயக்கவின் தாயார் தனது கணவரை விடத் தமது ஒபயசேகர குடும்பம் உயர்வானது என்றும், தாம் தனது கணவரை விட அறிவில் மேம்பட்டவர் என்றும் கருதினார். கணவரை விட மனைவி அதிகம் படித்தவர் என்பது உண்மைதான். அது மட்டுமல்லாமல் ‘சீமாட்டி பண்டாரநாயக்க, சேர் சொலமனை அவரது விருந்தினர்கள் முன்னிலையிலேயே கடும் சொற்களால் புண்படுத்துவதில் தயக்கம் காட்டியது கிடையாது’ எனவும் ஜேம்ஸ் மனர் எழுதுகிறார். இத்தகைய சண்டைகளின் விளைவால் பண்டாரநாயக்க எட்டு – பதினொரு வயதாக இருந்த காலத்தில், அவரது தாயார் தனது இரு சிறு பெண்பிள்ளைகளையும்  உடன் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். சிறுவன் பண்டாரநாயக்க தனது அப்பாவுடன் தமது பரம்பரையினர் வீடான ஹொரகொல்லவில் தனிமையில் வாழ நேர்ந்தது. அதன் பின்னர் சிறுவன் பண்டாரநாயக்கா எப்போதாவது இடைக்கிடை தாயாரைக் கண்டதுண்டு. அவர் வாழ்வு தாயின் தொடர்பு இன்றியே கழிந்தது. ‘இளம் சொலமன் இளமையின் பெரும்பகுதியைத் தனிமையிலேயே கழித்தார். அவருக்கு பாசத்தின் நெருக்கமும் அரவணைப்பும் கிடைக்கவில்லை’. அவரது தந்தையார், சிறுவன் சொலமன் உயர்குழாத்தின் பிற குடும்பத்து சிறுவர்களோடு கூடப் பழகக்கூடாது என்ற கட்டுப்பாட்டை விதித்தமையால் சிறுவனின் தனிமை வாழ்வு மேலும் கொடுமை மிக்கதாயிற்று. சிறுவன் சொலமனிற்கு 16 வயது ஆகும் வரை பிரித்தானியர்களான ஆசிரியர்கள், வீட்டில் வைத்தே பாடம் சொல்லிக் கொடுத்தனர். பின்னர் 16 வயதானதும் தந்தையார் அவரை சென்ற். தோமஸ் கல்லூரியில் சேர்த்தார். அங்கே, பண்டாரநாயக்கா மாணவர் விடுதியில் தங்குவதற்குப் பதிலாக, ‘வார்டன்’ (Warden) ஆகிய ஸ்ரோண் (Stone) வீட்டில் தங்கியிருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

bandaranayake family

பண்டாரநாயக்கவின் இளமைக்கால வாழ்க்கையில் அவரது தந்தையின் ஆதிக்கத்தின் பாதிப்பு இருந்தது. இதனால் சிறுவன் பண்டாரநாயக்கவின் மனதில் தந்தை மீதான ஒரு அச்சம் உருவாகியிருந்தது. அதேவேளை அவர் தந்தையின் மீது கடும் கோபத்தையும் எதிர்ப்புணர்வையும் மனதில் மறைத்து வைத்திருந்தார். தந்தையின் ஆதிக்கத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கான வழி அவருக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் அவரது தந்தை, பண்டாரநாயக்கவின் உள்ளத்தில் ஒரு நம்பிக்கையை ஆழமாக வேரூன்றச் செய்தார். ‘நான் விதிவிலக்கான ஒருவன். பிறப்பிலேயே ஒப்பற்ற எதிர்காலம் எனக்கு உள்ளது என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்டது.’ என்ற மனப்பாங்கு பண்டாரநாயக்கவின் உள்ளத்தில் உறைந்திருந்தது. அவர் பள்ளி மாணவனாக இருந்த காலத்திலேயே இப்படி எழுதினார்.  “என்னைச் சூழவுள்ள பிறரைவிட நான் மேலானவன் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. எனது மேன்மையும் மாண்பும் ஒருநாள் மலரும் என்று எண்ணினேன்.” ஆங்கிலத்தில் “I was brought up with the idea of greatness and superiority to others surrounding me and imbued with the notion of my greatness to come.”

மேற்படி கூற்று அவர் இளமைக் காலத்தில் எழுதியது. அவருக்கு முப்பது வயதானபோது அவர் எழுதியிருப்பது அவரது வீண் தற்பெருமையை வெளிப்படுத்துவது; உண்மைக்கு மாறான பீற்றுதல்; வரட்டு பெருமை என்றே கருதத்தக்கது (Posturing and Humourless, It is a deadly self – exposure of personal vanity).

“நான் பள்ளியில் படிக்கும் போதும், ஒக்ஸ்போர்ட்டில் பட்டதாரி மாணவனாக இருந்தபோதும், இப்பொழுது பொதுவாழ்வு என்ற பரந்தவெளியில் நிற்கும் போதும், நான் செய்வதற்கு மகத்தான பணிகள் காத்துக்கிடக்கின்றன என்ற உணர்வு என்னிடம் எப்போதும் மேலோங்கி இருந்தது” என்று குறிப்பிடும் பண்டாரநாயக்க கீழ்வருமாறு தொடர்ந்து எழுதுகிறார்.

“ஆயினும் எனது அகத்தின் ஒருபகுதியில் எளிமையான வாழ்க்கை குறித்த தீவிர ஏக்கமும் இருந்தது. சில வேளைகளில் ஒரு துறவியின் அமைதியான வாழ்க்கை, அதில் அவர் அடையும் திருப்தி, கோவில் என்ற மூடுண்ட உலகத்துக்குள் அவர் அனுபவிக்கும் தனிமை என்பனவற்றை நினைத்துப் பார்ப்பேன். இன்னும் சில வேளைகளில் நான் ஒரு காட்டுவாசியின் இன்ப உலகைக் கற்பனை செய்து பார்ப்பேன். அவன் தலைக்கு மேலாக நீலவானின் கீழ் இசைபாடிப் புள்ளினங்கள் பறப்பதையும் அவனுடைய ‘சோலிசுறட்டு’ இல்லாத வாழ்வையும் நினைத்துப் பார்ப்பேன். அத்தோடு சாதாரண மனிதனின் வாழ்க்கையை, அவனது சின்னச் சின்னச் சந்தோஷங்கள், சிறு சிறு தொல்லைகள் என்பனவற்றோடு அவன் காலம் ஓட்டுவதை நினைத்துப் பார்ப்பேன். ஆயினும் ஐயகோ! என்னால் அத்தகைய வாழ்க்கைக்குத் திரும்பவே முடியாது”

அவர் பிரதமாராகப் பதவி வகித்தபோதும், அவர் தனது ‘இன்டலெக்சுவல் மீதகைமையை’ (Intellectual Superiority) வெளிப்படுத்தும் கூற்றுக்களைக் கூறும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஒரு தடவை தாம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் ‘போரும் வாழ்க்கையும்’ (War and Peace) போன்றதொரு வரலாற்று நாவலை எழுதப் போவதாகக் குறிப்பிட்டார். அவரிடம் மேலோங்கியிருந்த இந்த உயர்வு மனப்பான்மைக்கு அவரைச் சூழ, அவரது வாழ்க்கையிலும் செயல்களிலும் பங்குகொண்டவர்களான அநாமதேயங்களும் காரணங்களாக, அவ் எண்ணத்தை அவர் மீது பதியச் செய்வதற்கு உதவினார்கள் என்றும் கருதலாம். ஒரு தடவை பண்டாரநாயக்கவின் மந்திரிசபையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அறிஞர் ஒருவரின் கூற்றுக்களை மேற்கோள் காட்டி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மேடையில் வீற்றிருந்த பண்டாரநாயக்க ஒரு ஊடகவியலாளரைப் பார்த்து “பாருங்கள்! எனது அமைச்சர்கள் உண்மையில் புத்தகங்களை வாசிக்கிறார்கள் அல்லவா?” என்றார்.

அரசியல் மாணவர் என்ற முறையில் நாம் கவனத்தில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய விடயம்: பண்டாரநாயக்கவின் இளமை வாழ்க்கையின் ஊடாக அவரிடத்தில் உருவான தனிநபர் நடத்தைக் கோலங்கள் பிற்காலத்தில் அரசியலில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதாகும்.

தந்தை – மகன் அதிகார உறவுகள் இளைய பண்டாரநாயக்கவின் மனோபாவத்தைப் பிற்காலத்தில் கட்டமைப்பதற்கு உதவியதாக மனர் குறிப்பிடுகிறார். பண்டாரநாயக்க 1925 இல் ஒக்ஸ்போர்ட்டில் இருந்து திரும்பிய போது அவரது தந்தை ‘வெற்றிவாகை சூடிவரும்’ வீரனிற்குரிய வரவேற்பு வைபவம் ஒன்றை ஒழுங்கு செய்தார். கொழும்பு துறைமுகத்தில் அவரை வரவேற்க ஒரு பெரும் கூட்டம் கூடியது. அங்கு கூடிய உறவினர்கள் அவரைக் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு (All Saints Church) ஊர்வலமாக அழைத்துச் சென்று வழிபாடுகளைச் செய்தனர். சிலநாட்கள் கழிந்தபின் அவர் ஹொரகொல்ல வளவுத் தோட்டத்திற்கு வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டு, அத்தோட்டத்திலிருந்து மூன்று மைல் தூரம் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அவ்வூர்வலத்தின் முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுத்துச் சென்றன. நடனம், இசை முதலிய கலைகளை நிகழ்த்திக் காட்டும் குழுக்கள் ஊர்வலத்தில் பின்தொடர்ந்தன. தோட்டத்தின் வாசலை நெருங்கிய போது ஒரு ‘பிரம்மாண்டமான’ மக்கள் கூட்டம் அவரை வரவேற்றது. அலங்காரப் பந்தல்கள் அங்கே அமைக்கப்பட்டிருந்தன. அங்கே கூடியிருந்தோர் பண்டாரநாயக்காவை தாழ்ந்து பணிந்து உபசரித்து வரவேற்றனர். அப் பகுதியின் கிராமவாசிகளின் உபசார மொழி அளவுகடந்த பணிவை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஹொரகொல்ல வளவு மாளிகை வீட்டின் முன்னுள்ள புற்தரையில் பல வேடிக்கை விளையாட்டுகள் இடம்பெற்றன; அருகே உள்ள பாடசாலையில் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. மரபுவழி நடனங்களும் வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன. அங்கு பண்டாரநாயக்க ஏற்புரையை நிகழ்த்தும்போது பின்வருமாறு குறிப்பிட்டார். “உங்கள் மத்தியில் என்னை விதி ஒரு முக்கியமான ஆளாக முன்னிறுத்தியிருக்கின்றதென்றால், நான் உங்களின் எஜமானாக இருப்பதற்கு இங்கு வரவில்லை. நான் உங்களின் சேவகனாக இருப்பேன்.” 

bandaranayake house

இளைஞரான பண்டாரநாயக்கா மக்களைப் பார்த்து ‘உங்களின் சேவகனாக’ இருப்பேன் என்று கூறியமை அவரின் தந்தைக்கு (உள்ளூர) விருப்பின்மையை உண்டாக்கியது. தன் மகனின் வாழ்க்கைச் செலவுக்காக தந்தை பணம் கொடுக்க முன்வந்தார். ஆனால் பண்டாரநாயக்க அதனை ஏற்க மறுத்துவிட்டு நகரத்திலுள்ள வீட்டில் குடியிருந்தார். சட்டவளவாளராக தொழில் செய்து தனது வாழ்க்கைக்கான வருமானத்தைத் தேடிக்கொள்ளத் தொடங்கினார். தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக அரசியலில் பிரவேசிக்கவும் முடிவுசெய்தார். 1926 இல் கொழும்பு முனிசிப்பல் சபைத் தேர்தலின் போது மருதானை வட்டாரத்தில் ஏ.ஈ குணசிங்கவுக்கு எதிராக பண்டாரநாயக்க போட்டியிட்டார். அக்காலத்தின் பலம்மிக்க அரசியல்வாதியான ஏ.ஈ குணசிங்கவுடன் மோதுவதற்கு பண்டாரநாயக்க தனது தந்தையின் உதவியை நாடவேண்டியதாயிற்று. ஏ.ஈ.டி. சில்வா என்பவர் (இவர் பின்னர் சேர். ஏர்னஸ்ட் எனப் பட்டம் சூட்டப்பட்டு அழைக்கப்பட்டவர்) மருதானை வட்டாரப் பிரதிநிதியாக இருந்து வந்தார். தந்தை சொலமன் டயஸ் செல்வாக்கை உபயோகித்து ஏ.ஈ.டி. சில்வாவைப் போட்டியிலிருந்து விலகச்செய்தார். மருதானை வட்டாரத்தில் வாக்குப் பலம்மிக்கவர்களாய் இருந்த முஸ்லீம் சமூகத்தினரது ஆதரவைத் தன் செல்வாக்கினால் பெற்றுக்கொண்டார்.

தந்தை மகன் உறவில் இங்கே தங்கியிருத்தலும் பணிந்து போதலும், பின்னர் இடையிடையே கிளர்ந்தெழுந்து போர்க்கொடி தூக்குதல் என்ற இரண்டும் மாறி மாறி இடம்பெறுவதைக் காண்கிறோம். பண்டாரநாயக்கவின் பிற்கால அரசியல் வாழ்க்கையில் அதிகாரத்தை (Authority) எதிர்கொண்டபோது இதே பாங்கிலான தங்கியிருத்தலும், கிளர்ச்சியும் (Dependence and rebellion) என்ற நடத்தை வெளிப்பட்டதை மனர் சுட்டிக் காட்டுகிறார். மனர் பண்டாரநாயக்கவின் நடத்தைக்கு அவரது அரசியல் வாழ்வில் இருந்து மூன்று நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகிறார். முதலாவது சட்டசபையில் (State Council) உறுப்பினராக பின்வரிசை ஆசனத்தில் இருந்த ‘Backbencher’ ஆன பண்டாரநாயக்க மந்திரிசபையை முதலில் கண்டனம் செய்ய ஆரம்பித்தார். ஜயதிலகவிடமும் சேனநாயக்கவிடமும் இருந்து அவருக்கு முகத்தில் அடித்தாற்போல் பதில் தாக்குதல் வந்தது. இதனால் அடங்கிப்போன பண்டாரநாயக்க மந்திரிசபைக்குப் பணிந்துபோனவராகவும் மந்திரிசபைக்கு எதிராக வெளியிலிருந்துவரும் விமர்சனத்திற்குப் பதிலளிப்பவராகவும் மாறினார்.

இரண்டாம் உலகயுத்த காலத்தில் பண்டாரநாயக்க, ஆளுநர் கல்டிகொட் (Caldecott) மீது தனிப்பட்ட தாக்குதலைத் தொடுத்தார். குடிவரவு தொடர்பான பிரச்சினையில் கல்டிகொட் மந்திரிசபைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டிப் பேசினார்; பிரித்தானியாவின் யுத்தக் கொள்கையின் இலக்குகள் பற்றிக் கேலி செய்து பேசினார். தன் கட்டுப்பாட்டில் இருந்த உள்ளூராட்சி மன்றங்களை போர் நிதிக்குப் பங்களிப்பு செய்ய வேண்டாம் என உத்தரவிட்டார். இவற்றை அவதானித்த கல்டிகொட் “இந் நடவடிக்கைகள் உங்கள் அமைச்சுப் பதவிநிலைக்கு ஏற்றவை அல்ல; முரணானவை” எனக் குறிப்பிட்டுக் கடிதம் அனுப்பினார். தனது அமைச்சர் பதவி பறிபோகப் போகிறது, பதவி நீக்கம் நடைபெறப் போகிறது என்று அச்சம் கொண்ட பண்டாரநாயக்க, பின்வாங்கிக்கொண்டார். இந்தச் சம்பவம் இன்னொரு வகையிலும் விளக்கப்படலாம். அப்போது இலங்கையில் தீவிர தேசியவாத இயக்கம் என்று ஒன்று இருக்கவில்லை. அந்நிலையில் தமக்கு ஆதரவு தரக்கூடிய மக்கள் பலம் இல்லாத நிலையில், பின்வாங்குவதைச் சரியான வழி என அவர் நினைத்திருக்கலாம். ஆனால் இந்நிகழ்வுக்குப் பின், மந்திரிசபையில் ஆளுநரின் ஆதரவாளராக பண்டாரநாயக்க மாறினார். இவ்வாறான ‘குத்துக்கரணமடித்தல்; முதலில் கிளர்ச்சி பின்னர் பணிந்துபோதல்’ என்ற மனர் (Manor) குறிப்பிடும் நடத்தைப் பாங்குக்கு சரியான உதாரணமாக விளங்குகிறது.

சுதந்திரத்திற்குப் பின்னர், 1949 – 1951 காலத்தில் பண்டாரநாயக்க மந்திரியாக இருந்தார். அப்போது பிரதமராக டி.எஸ். சேனநாயக்கவுடனான இவரது உறவுகளிலும் முதலில் கிளர்ச்சி பிறகு பணிந்துபோதல் என்ற நடத்தைப் போக்கு வெளிப்பட்டது. அக்காலத்தில் நடந்த முக்கிய சம்பவம் 1951 யூலை மாதம் அவர் இராஜினாமா செய்தமையாகும். சுதந்திரத்திற்குப் பிந்திய அமைச்சரவையில் உறுப்பினராக இருந்த பண்டாரநாயக்க பல கோரிக்கைகளையும் முன்மொழிவுகளையும் ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தார். அவற்றில் பெரும்பான்மையானவை தேசியவாதப் பிரச்சினைகளுடன் தொடர்புடையவையாக இருந்தன. இவரது கோரிக்கைகளை டி.எஸ். சேனநாயக்கவும் அமைச்சரவையும் நிராகரித்து வருதல் வழக்கமாயிற்று. இதனைவிட பண்டாரநாயக்கவை அவமானப்படுத்த வேண்டுமென்பதற்காகவே, வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்ட பல நிகழ்வுகளும் இடம்பெற்றன. அவ்வேளைகளில் பண்டாரநாயக்கவின் கூட்டாளிகள் பலர் டி.எஸ் சேனநாயக்க குழுவினருடன் மோதலுக்கு தயாராக முன்வந்த வேளையிலும், பண்டாரநாயக்க பின்வாங்கிக்கொண்டு அமைதியானார். 1951 யூலை மாதம் அவர் இராஜினாமாச் செய்தமை, வேறுவழி எதுவும் இல்லாத நிலையில் மேற்கொண்ட முடிவாகும். டி.எஸ் சேனநாயக்க மாற்று வழி எதனையும் வழங்கவில்லை. மனர் இவ்விடத்தில் உளவியலாளர் எரிக்சனின் உளவியல் கருத்துக்களை பயன்படுத்துகிறார் எனலாம். ஆனால் இவ்வாறு தனிமனித உளவியலைப் பயன்படுத்தி அரசியல் நடத்தையை விளக்குவதைப் பலர் ஏற்பதில்லை. மனர் தமது விளக்கத்திற்கு பண்டாரநாயக்கவின் வாய்ச் சொற்களையே ஆதாரம் காட்டுவது அவரது விளக்கத்திற்குப் பலம் சேர்க்கிறது. 1951 இல் பாராளுமன்றத்தில், தான் ஏன் இராஜினாமா செய்கிறேன் என்பதற்கான காரணங்களை பண்டாரநாயக்க தனது பேச்சின்போது குறிப்பிட்டார். அப்போது இளமையில் தனது தந்தையுடன் ஏற்பட்ட முரண்பாட்டை குறிப்பிடுகிறார். 1951 இல் தாம் டி.எஸ். சேனநாயக்கவுடன் உறவை முறித்துக்கொண்டு வெளியேறியதை 1926 இல் தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக அரசியலில் புகுந்ததோடு தொடர்புபடுத்திப் பேசும்போது அவர் கூறியவை;

“நான் இம் முடிவை எடுத்தபோது, என்னுடன் தனிப்பட்ட உறவுகளை வைத்திருப்பவர்களுடன் முரண்பாடு கொண்டு, நான் எவர் எவரை மனம் வருந்தச் செய்ய விரும்பமாட்டேனோ அவர்களையெல்லாம் வருந்தச் செய்யும் நிலையில் இருப்பது மட்டுமல்லாது, நான் பல தியாகங்களைச் செய்ய வேண்டியேற்படும். பல கஷ்டங்களை அடையநேரிடும் என்பதையும் உணர்ந்துகொண்டேன்.  இப்போதும் அதையொத்த முடிவு ஒன்றை எடுத்திருக்கிறேன் என்பதை உணருகிறேன்.” தனது இராஜினாமா பற்றித் தொடர்ந்து கூறிய அவர் “நான் என்னை வெற்றிகொண்டுவிட்டேன்” என்றும் குறிப்பிட்டார்.

அதிகாரத்தில் உள்ளவர்களையும் அதிகாரபீடங்களையும் எதிர்கொள்ளும்போது பண்டாரநாயக்கவின் மனப்பாங்கு எவ்விதமாக இருந்தது என்பதை ஆராயும்போது, அவர் தமது வாழ்வின் பிற்பகுதியில் நாட்டின் அரசாங்கத் தலைவராக (பிரதமராக) பதவிவகித்தபோது எவ்வாறு நடந்துகொண்டார் என்ற வினா எழுகிறது. இதுபற்றி நாம் குறிப்பிடுவதற்கு முன்னர் பண்டாரநாயக்கவின் அரசியல் தத்துவம் (Political Philosophy) யாது என்பது குறித்துப் பார்ப்பது அவசியமானது. அவரது அரசியல் தத்துவம் பற்றிய புரிதலுக்கு உதவக்கூடிய அவரது கூற்றுக்கள் இரண்டை எடுத்துக்காட்ட விரும்புகிறோம். முதலாவது கூற்று ‘உண்மை’ (Truth) பற்றிய அவரது கருத்து.

“உண்மை பற்றிய எக்காலத்துக்கும் பொதுவான விழுமியங்கள் இருக்கலாம். ஆனால் உண்மை என்பது சார்பு நிலையானது. இன்று உண்மை என்று நாம் எதனைக் கருதுகின்றோமோ, அதுவே நேற்றும் உண்மையாக இருந்ததில்லை. நாளைக்கு உண்மையெனக் கருதப்படுவது நாம் இன்று உண்மை எனக் கருதுவதைவிட வேறாக இருக்கலாம். ஒருவருக்கு உண்மையாகத் தோன்றுவது, இன்னொருவருக்கு உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. பெரும்பாலும், உண்மை முழுமையாக ஒருபக்கத்திடம் இருப்பதில்லை. அது முழுமையாக இன்னொரு பக்கத்தில் இருப்பதும் இல்லை. உண்மை என்பது புதிரான ஒரு விடயம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பலவிடயங்களின் கலப்புப்பொருளாகவே அது விளங்குகிறது.”

bandaranayake

அடுத்ததாக நாம் எடுத்துக் காட்ட விரும்புவது சமூகமாற்றம் பற்றிய அவரது கருத்துப் பற்றியது. இக் கருத்தை அவர் பாராளுமன்றத்தில் ஒரு உரையின்போது குறிப்பிட்டார். அவ்வேளை பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னிருக்கை (Front Bench) உறுப்பினராகப் பாராளுமன்றத்தில் இருந்தார். ஆகையால் அவரது உரை, தனக்கும் சேனநாயக்க அணி, ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் இடையிலான வேற்றுமை மட்டுமல்லாது, எதிர்க்கட்சியினருக்கு இடையிலான வேற்றுமை மட்டுமல்லாது, எதிர்க்கட்சியில் இருந்த இடதுசாரிகளுக்கும் தனக்கும் இடையிலான வேற்றுமையையையும் சுட்டிக்காட்டும் முறையில் அமைந்தது.

“நான் எனது சக்திக்கு உட்பட்ட வகையில் ‘நர்ஸ்’ (Nurse), மருத்துவிச்சி (Midwife) என்ற இருவகைப் பணிகளைச் செய்பவனாக இருக்க விரும்புகின்றேன். நான் உயிருக்காகப் போராடும் ஒருவரின் கட்டிலருகே ‘நர்ஸ்’ ஆக நின்று பணிசெய்ய விரும்புகிறேன். ஓர் உயிர் பிரியப்போகிறது இறுதித்தருணம் நெருங்கிவிட்டது. ஒவ்வொரு மனிதரும் இறக்கும்போது, அந்த நிகழ்வு அமைதியானதாகவும், கௌரவிப்புக்குரியதாகவும் இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கையான முறையில் இறப்பைத் தடுத்து நிறுத்துவதை நினைத்துப் பார்க்கவே எனக்கு அதிர்ச்சி உண்டாகிறது. அவ்வாறே மரணம் நெருங்கி வந்துகொண்டிருக்கும் வேளையில் ஒருவரின் உயிரைச் செயற்கையான முறையில் போக்குவதும் எனக்கு அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.”

“பிறப்பு நிகழும் வேளையில் நான் மருத்துவிச்சியின் பணியை ஆற்றுவதை விரும்புவேன். பிரசவம் இயன்றளவு வலி குறைந்ததாகவும் மங்களகரமான நிகழ்வாகவும் அமைவதை நான் விரும்புவேன். கருவில் இருக்கும் குழந்தை இயல்பாகவே வெளியே வருவதற்கு முன்பே கருவிகளை உபயோகித்து இழுத்தெடுப்பதும் ஒரு சிசுவை கருப்பையில் வைத்தே நெரித்துக் கொல்வதும் என்னால் நினைத்துப்பார்க்கவே முடியாத விடயங்கள்.”

இரண்டாவதாகத் தரப்பட்ட கூற்றில் பண்டாரநாயக்க ‘மருத்துவிச்சி’ என்ற உருவகத்தை உபயோகிக்கிறார். இவ்விடத்தில் அவர் கார்ல் மார்க்சின் புகழ்பெற்ற கூற்றை இரவல் பெற்றுக்கொள்கிறார்.

“Force is the midwife of every old society pregnant with the new” எனும் மார்க்சின் கூற்றின் பொருளைத் தமிழில் பின்வருமாறு கூறலாம்.

“பழைய சமுதாயம் ஒவ்வொன்றும் புதிய சமுதாயத்திற்கான கருவை தன் கருப்பையில் சுமந்துகொண்டே வருகிறது. கருவிலிருந்து சிசு வெளியேறும் நிலையில் பலாத்காரம் என்ற மருத்துவிச்சியின் சேவை அவசியமாகிறது.”

மேற்படி உருவகத்தை உபயோகிக்கும் பண்டாரநாயக்க, வயிற்றில் இருக்கும் சிசுவை வெளியே எடுப்பதற்கு கருவிகளை (Forceps) உபயோகித்தல் – அதாவது புரட்சி மூலம் புதிய சமூகத்தைப் பிறக்கச் செய்தலை நிராகரிக்கிறார். பழைய சமுதாயத்தின் அழிவிலும் புதிய சமுதாயத்தின் அழிவிலும் புதிய சமுதாயத்தின் உருவாக்கத்திலும் தாம் ‘நர்ஸ்’, ‘மருத்துவிச்சி’ என்ற இருவகை வகிபாகங்களையும் (Roles) ஒரே சமயத்தில் வகிக்க விரும்புவதாக கூறும் பண்டாரநாயக்க சமூகமாற்றம் என்ற செயல்முறையில் அரசியல் தலைமைத்துவம் ஆற்றவேண்டிய பணிகளின் முக்கியத்துவத்தை குறைத்துவிடுகிறார். (There is a devaluation of the tasks of political leadership) மாற்றம் ஒரு உயிரியல் செயல்முறை (Organic Process) போன்றும், அது தன்போக்கிலேயே செயற்பட்டு, தவிர்க்கமுடியாத ஒரு விடயமாக புதிய சமுதாயத்தின் தோற்றத்திற்கு வழிவிடுகின்றது என்பது போன்றும் பண்டாரநாயக்கவின் கருத்து அமைகிறது. தலைவரின் பணி புதிய சமுதாயத்தின் தோற்றத்திற்கும் மாற்றத்திற்குமான நிலைமைகளை உருவாக்கிவிடுவது மட்டுமே. அம் மாற்றம் தானாவே இயல்பாகவும், அமைதியாகவும் நடந்தேறிவிடுமென்றும் பண்டாரநாயக்க கருதுகிறார். இவ்வாறாக சமூக மாற்றம் என்ற கருத்தாக்கத்தை வரையறுத்துக்கொள்வதில் ஒரு சிக்கல் உள்ளது.

இந்த வரையறை;

அ. ஒரு சமூகம் அடைய வேண்டிய இலக்குகளைத் தெரிவு செய்தல் (Choice of goals),

ஆ. தெரிந்தெடுத்த இலக்குகளை நோக்கி சமூகத்தை நெறிப்படுத்தலும் வழிகாட்டுதலும் (Guidance and Direction), 

ஆகிய பணிகளை ஆற்றும் தேவை தலைமைத்துவத்திற்கு கிடையாது என்று கூறமுனைகிறது. இதனை சமூக மாற்றம் பற்றிய கொள்கையுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். உண்மை எது, இதுவா? அதுவா? என்று நிச்சயமற்ற நிலையான அறியொணாக் கொள்கையை (Agnosticism) உடையவர் பண்டாரநாயக்க என்பது தெளிவானது. இந்த நிலையில் சமூக சக்திகளைத் தமது போக்கில் செயல்பட அனுமதித்து. அவை தம்போக்கில் தாமே தேர்ந்துகொண்ட பாதைகளில் செல்வதைப் பார்த்து நிற்பதைவிட தலைவனால் என்ன தான் செய்துவிடமுடியும்?

சமூக மாற்றம் தொடர்பாக பண்டாரநாயக்கவின் அரசியல் நிலைப்பாடு (Political Position) ஏற்புடையதும் விரும்பத்தக்கதுமான அம்சங்களையும் கொண்டது என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அவரது அரசியல் தத்துவத்தை பொல்பொட் அல்லது ரோஹண விஜயவீரவின் அரசியல் மாதிரியுடன் (Political Model) ஒப்பிட்டுப் பார்க்கலாம். பிற்கூறிய இருவரும் தாம் நம்பிக்கை கொண்டிருந்த வழிமுறைகளை சமூகத்தின் மீது திணிக்க விரும்பினார்கள். ஆயின் பண்டாரநாயக்கவின் ஆட்சியில் நடந்தவை யாவை, அவர் பிரதமர் என்ற முறையில் என்ன செய்துகொண்டிருந்தார்?

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5928 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (10)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)