Arts
18 நிமிட வாசிப்பு

இலங்கையின் சிங்களச் சமூகத்தில் சாதியின் வகிபாகம் : ஜனநாயகமும் சாதியும் அரசியலும் – பகுதி 3

March 30, 2024 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்று கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம் : பிரசன்ன டி சொய்சா

விகிதாசாரத் தேர்தல் முறையும் சாதி வாக்குகளும்

1978 ஆம் ஆண்டின் அரசியல் திட்டம் முன்பிருந்த தேர்தல் முறையை மாற்றி விகிதாசார முறையைப் புகுத்தியது. முந்திய முறையில் பல வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் போட்டியிடுவர். அவ் வேட்பாளர்களுள் ஆகக் கூடிய வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெற்றவராகத் தெரிவு செய்யப்படுவார். இதனை ‘FIRST-PAST–THE-POST’ தேர்தல் முறைமை என அழைப்பர். 

முன்னைய முறையில் தேர்தல் தொகுதி சிறியதாக இருக்கும். விகிதாசார முறையில் முழு மாவட்டமும் ஒரு தொகுதியாக அமையும். உள்ளூராட்சி மன்றங்களில் வட்டாரத்திற்குப் பதில் முழுப் பகுதியும் தேர்தல் தொகுதியாகக் கொள்ளப்பட்டது. பின்னர் வட்டாரம், விகிதாசார முறை என்ற இரண்டினதும் கலப்பான முறை கொண்டுவரப்பட்டது. விகிதாசார முறையுடன் விருப்பு வாக்கும் சேர்க்கப்பட்ட போது வேட்பாளர்கள் எதிர்க்கட்சி வேட்பாளர்களுடனும் தனி அங்கத்தவர்களுடனும் அல்லாமல் தமது கட்சியின் வேட்பாளர்களுடனும் போட்டியிட்டு தேர்தலில் வெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

விகிதாசார தேர்தல் முறை தேர்தல் அரசியலில் முன்னில்லாத அளவு பெருமாற்றங்களைப் புகுத்தியுள்ளது. முன்னைய தேர்தல் முறையில் ஒரு வேட்பாளர் தான் போட்டியிடும் தொகுதிக்குள் வாக்காளரின் வாக்குகளைத் தனக்குப் போடும்படி பிரச்சாரம் செய்யலாம். விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை மாவட்டம் முழுவதற்கும், தனது தொகுதிக்கு அப்பாலும் சென்று வாக்குகளைக் கேட்கலாம். இதனால் தேர்தல் பிரச்சாரம் மிகுந்த செலவை ஏற்படுத்தும் விடயமாகிவிட்டது. பணக்காரர்களான வேட்பாளர்களே புதிய முறையின் கீழ் மாவட்டம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யலாம். இக் காரணத்தால் வேட்பாளர்கள் மாவட்டத்தின் சில பகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவ்வப்பகுதிகளில் மட்டும் தமது முழுக் கவனத்தையும் செலுத்திப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் தெரிந்தெடுக்கும் பகுதிகள் ஒரு குறிப்பிட்ட சாதி (வேட்பாளரின் சாதி) செறிவாக வாழும் பகுதிகளாக இருக்கும். 2009 இல் மாகாண சபைத் தேர்தலில் துராவ சாதி வேட்பாளர் ஒருவர் தமது தேர்தல் பிரச்சாரத்தை எவ்வாறு நடத்தினார் என்பதை உதாரணமாகக் குறிப்பிடலாம். துராவ சாதியினை சேர்ந்த அவ் வேட்பாளர் தென் மாகாணத்தில் துராவ சாதியினர் செறிந்து வாழும் தெவிநுவர, மாத்தறை, வெலிகம தொகுதிகளிலும், கம்புறுப்பிட்டியவின் திஹாகொட பகுதியிலும் தனது பிரச்சார வேலைகளைத் தொடர்ந்தார். கொவிகம சாதியினர் பெரும்பான்மையினராக வாழும் தெனியாயத் தொகுதிக்கு குறித்த வாக்காளர் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு தடவை கூடச் செல்லவில்லை (டி சொய்சா 2012:91-92).

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட கராவ சாதியினரான வேட்பாளர் தமக்கு வெலிகம, மாத்தறை, தெவிநுவர தொகுதிகளிலிருந்து பெரும்பகுதி வாக்குகள் கிடைத்ததாக கூறினார். அவர் குறிப்பிட்ட இப்பகுதிகள் கராவ சாதியினர் பெருந்தொகையினராகச் செறிந்து வாழும் இடங்களாகும். 

விருப்பு வாக்குகளிற்கான போட்டி காரணமாக வேட்பாளர்கள் தாம் எதிராளிகளை விடக்கூடிய வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக, என்னென்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்வதற்குத் தயாராக உள்ளனர். ‘உங்கள் ஆளுக்கு வாக்களியுங்கள்‘ என்பது தேர்தலின் போது உபயோகிக்கப்படும் பிரபலமான வசனங்களில் ஒன்று. 1980 களின் பிற்பகுதியில் அனுராதபுர மாவட்டத்தில் ராமண்ய நிகாயவின் அனுநாயக்க தேரர் (அனுநாயக்க – பிரதிச் சமயகுரு) அம்மாவட்டத்தில் பத்கம சாதி வேட்பாளருக்கு ஆதரவாகச் செயற்பட்டார். அத்தேரருக்கு, ராமண்ய நிகாயவின் கோவில்கள் அனுராதபுர மாவட்டத்தில் எங்கெங்கு உள்ளனவோ அவ்விடங்களில் நெருக்கமான தொடர்புகள் இருந்தன. குறிப்பாக பத்கம சாதியினர் செறிந்து வாழும் பகுதிகளின் கோவில்களில் வழிபடுவோர் மத்தியில் அவருக்கு செல்வாக்கிருந்தது. அவர் பத்கம சாதிக் கோவில்களின் வலையமைப்பை ஒழுங்கமைத்திருந்தார். பத்கம சாதி வேட்பாளரை இவ்வலையமைப்பின் மூலம் அத்தேரர் அறிமுகப்படுத்தி அவருக்கு ஆதரவு தரும்படி பிரச்சாரம் செய்தார். ‘தாயக்க சபா‘ (பக்தர்கள் சபை) என்னும் சமய பக்தர்களின் சபைகள் ஒவ்வொரு கோவிலுக்கும் இருக்கும். இத் தேரர் தாயக்க சபாக்களின் முன் பிரசார உரையாற்றும் போது பத்கம சாதியைச் சேர்ந்த ஆளுமை என்ற வகையிலேயே பேசுவார். கோவில்களின் பத்கம சாதிப் பக்தர்கள் முன்பாக நின்று அவர் ‘அப்பே மினிஹாட்ட சந்த தென்ன‘ (எமது ஆளுக்கு உங்கள் வாக்கைக் கொடுங்கள்) என்று அவர் கேட்பார் ( டி சொய்சா 2012:93). 

1996 செப்டெம்பர் 28 ஆம் திகதி நாரம்மல சீலாவதி பிரிவேனவில் ஒரு முக்கியமான கூட்டம் நடைபெற்றது. அரசியல் கட்சிகள் என்ற எல்லைக் கோடுகளையும் கட்சி விசுவாசத்தையும் கடந்து ஒரு குறிப்பிட்ட சாதியினரை ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு அக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டம் ராமண்ய நிகாயவின் அனுநாயக்க தேரர் தலைமையில் நடைபெற்றது. பிரதான இரண்டு அரசியல் கட்சிகளின் பத்கம சாதி அரசியல்வாதிகளும் இக்கூட்டத்தில் பங்குபற்றினர். பத்கம சாதியினரின் உரிமைகளுக்காகப் போராடுவதற்காக ஒரு அமைப்பை உருவாக்குவதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும். பத்கம சாதியினரில் இரண்டு மில்லியன் வாக்காளர்கள் இருப்பதாகவும் இவ்வாக்குகள் யாவற்றையும் சரியான முறையில் ஒன்று திரட்டினால் பத்கம சாதிச் சமூகம் இலங்கையின் மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக விளங்க முடியும் எனவும் இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது ( விஜேதுங்க, 1996:7).

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு கட்சி குறிப்பிட்டதொரு சாதி வாக்குகளைத் திரட்டுவதற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டால் அவர்களிற்கு எதிரான கட்சி இன்னொரு சாதிக்குழுவின் அடையாளத்தையும் நலன்களையும் முன்னிறுத்திப் பிரச்சாரத்தை செய்வது இயல்பாகிவிடும். தாழ் நிலையில் உள்ள சாதியொன்று ‘எங்கள் சாதி ஆளுக்கு வாக்குப் போடுங்கள்‘ என்று பிரச்சாரம் செய்யும் போது அதற்கு மேல்நிலையில் உள்ள சாதி கொவிகம வேட்பாளரை உயர்த்தியும் தாழ்நிலை சாதி வேட்பாளரை இழிவுபடுத்தியும் பிரச்சாரம் செய்வதைக் காணலாம். 

வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவராயினும் அவர் பத்கம சாதியினராயின் அக்கட்சியைச் சேர்ந்தவர்களே அவரை இழிவுபடுத்திப் பேசுவதற்கு தயங்குவதில்லை. அனுராதபுரம் கிழக்குத் தொகுதியில்  இந் நிலை காணப்பட்டது. இதே போன்றதொரு நிலை மாகாணசபைத் தேர்தலின் போது அனுராதபுரவின் தலாவ பகுதியில் நிகழ்ந்தது. ரஜக்க சாதியைச் சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரும், அதே சாதியைச் சேர்ந்த (ரஜக்க சாதி) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (UPFA) வேட்பாளரும் இவ்வாறான பிரச்சாரத்தை எதிர்கொண்டனர் (டி சொய்சா 2012:93).

இலங்கையின் அரசியல் கட்சிகள் எவையும் சாதி அடையாளத்தை முதன்மைப்படுத்துவனவாக இருந்ததில்லை. ஆனால் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் கொவிகம சாதியினர் மேலாதிக்கம் செலுத்தும் கட்சிகள் ஆகும். 1978 களிற்கு முன்பும், விகிதாசார முறை நடைமுறைக்கு வந்த பின்பும் இதே நிலையே நீடித்தது. இதன் விளைவாக தாழ்நிலைச் சாதிகள் எந்தெந்தப் பகுதியில் சனத்தொகையில் கூடிய எண்ணிக்கையினராக உள்ளனவோ அப்பகுதிகளில் குறித்த சாதிகளுக்கு தேர்தலில் பிரதிநிதித்துவம் வழங்கும் முறை இருந்தது. ஒரு குறிப்பிட்ட சாதி ஒரு கிராமத்தில் பெரும்பான்மையாக இருக்கும் போது, அச்சாதியைச் சார்ந்தவர்களை பிறசாதிகளைச் சேர்ந்தவர்கள் இழிவுபடுத்துவதோ, சுரண்டுவதோ நிகழ்வதில்லை என எம்.என். சிறினிவாஸ் குறிப்பிட்டார் (சிறிநிவாஸ் 2010:79).

இலங்கையில் தாழ்நிலை சாதிகளின் சனத்தொகை எண்ணிக்கை குறைவாக உள்ள இடங்களில், அச் சாதிகளுக்கு தேர்தலில் பிரதிநிதித்துவம் வழங்கும் வாய்ப்புகள் குறைவு. ஒருவர் கட்சியின் முதுநிலை உறுப்பினராகவும், தகுதிகள் உடையவராகவும் இருந்த போதும் அவரது தாழ்நிலை சாதி சனத்தொகையில் சிறுபான்மையாக இருப்பின் அந்நபருக்கு தேர்தலில் வேட்பாளராக நியமிக்கப்படும் வாய்ப்பு கிடைப்பதில்லை. இது கொவிகம சாதியினால் பின்பற்றப்படும் சமூகப் பெரும்பான்மை வாதம் (SOCIAL MAJORITARIANISM) என்பதற்கு உதாரணமாகும்.

இலங்கையின் பிரதான கட்சிகள் யாவற்றினதும் கொள்கை வகுக்கும் அதிகாரமுடைய அமைப்புக்களில், கொவிகம சாதியின் சமூகப் பெரும்பான்மைவாதம் கோலோச்சுவதைக் காணலாம். 

இதுவரை கூறியவற்றில் இருந்து சாதி அடையாளத்தை முதன்மைப்படுத்தும் அரசியல் கட்சிகள் இலங்கையில் கிடையாது என்பதைக் கொண்டு, இலங்கையின் அரசியல் ஜனநாயக முறையில் சாதி அடையாள அரசியல் இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது என்பது தெளிவு. விகிதாசார தேர்தல் முறை சாதி அடையாள அரசியலுக்கான வெளியை அகலப்படுத்தியுள்ளது. அத்தோடு மேலாதிக்கமுடைய சாதிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சமூகப் பெரும்பான்மை வாதத்திற்கு எதிராக அணி திரள்வதற்கான வாய்ப்புக்களையும் அதிகரித்துள்ளது. விகிதாசார முறையின் விருப்பு வாக்குமுறை வாக்காளர்களின் தெரிவுக்கு இடமளிப்பதாகவும் உள்ளது. இதனால் ஒரு வாக்காளர் தன் வாக்கைப் பிரயோகித்து தமது சாதி வேட்பாளரை தேர்தலில் வெற்றி பெற வைக்கவும், தான் விரும்பும் கட்சியின் வேட்பாளர்களுள், முழு மாவட்டத்திற்குள்ளும் தன் சாதியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரை வெற்றி பெற வைப்பதற்கும் வாய்ப்பைப் பெறுகிறார். விகிதாசார தேர்தல் முறை வழங்கும் இவ்வாய்ப்பு ஒரு குறிப்பிட்ட சாதியினரை தமது சாதி வேட்பாளருக்கு ஆதரவாக ஒன்று திரளும் சாத்தியப்பாட்டை உருவாக்குகிறது. 

விகிதாசார தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டதன் காரணமாக சாதி அடையாளம் அரசியலில் குறிப்பிட்டதொரு விசேட இயல்புடன் வெளிப்படுவதை மேலே குறிப்பிட்டோம். இவ்வாறு தேர்தல் அரசியலில் சாதி அடையாளம் மேற்கிளர்ந்த போது, சாதி அடையாளத்தை வலியுறுத்தும் சமூக நடவடிக்கைகளும், முன்பிருந்த சாதி அமைப்புக்களுக்குப் புத்துயிர் அளிப்பதுமான நிகழ்வுகளும் இடம்பெறலாயின. இந்நடவடிக்கைகளின் போது பலர் நூல்களையும் இலக்கிய படைப்புக்களையும் வெளியிட்டு அடையாள வலியுறுத்தலுக்கு உரமூட்டினர். சாதிகளின் நலன்களுக்கு ஆதரவான நூல்களை எழுதி வெளியிடுதல் இலங்கைக்குப் புதியதோர் விடயமன்று. 1890 ஆம் ஆண்டில் G.A தர்மரட்ண என்பவர் கராவ – கொவிகம சாதி முரண்பாடுகள் குறித்து நூல் ஒன்றை எழுதினார். இந்நூலின் தலைப்பு “THE KARA – GOI CONTEST WITH AN APPEAL TO THE HOUSE OF COMMONS” என்பதாகும். 1912 இல் சாம்சன் ராஜபக்ச என்பவர் சிங்கள சலாகம சாதியினரின் தலைவர்களையும், குடும்பங்களையும் பற்றிய விபரங்கள் கொண்ட நூல் ஒன்றை “A MEMOIR, WITH A SKETCH OF THE SALAGAMA SINHALESE,THEIR CHIEFS AND CLANS” என்ற தலைப்பிட்டு வெளியிட்டார். ஆயினும் 1978 இல் விகிதாசார தேர்தல் முறை அறிமுகமாக முன் உள்ள காலத்தில் இவை போன்ற சாதி அபிமானத்தை வெளியிடும் நூல்கள் மிக அரிதாகவே தோன்றின. T.S. தர்மபந்து என்பவர் ‘கவுரவ வம்ச கதாவ‘ (KAURAVA WAMSA KATHAWA) என்னும் நூலை 1962 இல் எழுதினார். இந்நூலின் தலைப்பு ‘கராவ சாதியின் வரலாறு‘ என்ற பொருள் உடையது. 

C.De.Z. குணரத்தின என்பவர் சலாகம சாதியின் வரலாற்றைக் கூறும் ‘VISH VAYAHI OBATH MAMATH‘ என்ற  நூலை வெளியிட்டார். இவையிரண்டும் விகிதாசார முறை அறிமுகமானதற்கு முன்பு எழுதப்பட்ட நூல்களுக்கு உதாரணங்களாகும். 

விகிதாசார முறை அறிமுகமாகிய பின்னர் எழுதப்பட்ட நூல்கள் நான்கை குறிப்பிடலாம். 

  1. கருணாமுனி என்ற எழுத்தாளர் ‘அமுனு தொலக‘ என்ற நாவலை 1991 ஆம் ஆண்டு வெளியிட்டார். 
  2. றிச்சார்ட் D.V.de. சில்வா ‘லமனி ரஜகுலய (லமனி ரஜ குலம்) என்ற நூலை 1995 இல் வெளியிட்டார். 
  3. குமாரணதுங்க ‘லங்காவே சைத்திரயோ பிரமாணயோ‘ (இலங்கையின் சத்திரியர்களும் பிராமணர்களும்) என்ற நூலை 2017 இல் வெளியிட்டார். 
  4. ‘கும்பல் சமுதாயமும் மட்பாண்ட உற்பத்தித் தொழிலும்’ என்னும் நூலை 2010 இல் பெர்னாண்டோ எழுதி வெளியிட்டார். 

இந்நூல்களுள் சவ்லியாஸ் கருணாமுனி  (SAWLIYAS KARUNAMUNI)  எழுதிய ‘அமுனு டொலக’ சலாகம சாதியைச் சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்ட நாவல் ஆகும். இந்நாவலின் கதாநாயகன் பிரிவுக்காரியாதிகாரி என்னும் பதவியை (D.R.O) வகிக்கும் நிர்வாக சேவை அதிகாரியாக சித்தரிக்கப்படுகிறார். இக்கதை சலாகம சாதியின் மூதாதையர் பிராமணர்களென்றும், அச்சாதி உயர்ந்த குலம் என்றும் கூறுகிறது (கருணாமுனி,1991:121).

 D.V. றிச்சார்ட் டி சில்வா எழுதிய ‘லமனி றஜ குலய‘ துராவ சாதிச் சமூகத்தின் வரலாற்றைக் கூறுகிறது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘LAMANI ROYAL CLAN’  என்னும் நூல் 1998 இல் பிரசுரிக்கப்பட்டது. இந்நூல் பல வரலாற்று ஆதாரங்களைக் காட்டி துராவ சாதியினர் சத்திரியர்கள் எனக் கூறுகிறது (டி சில்வா 1995:30:32). குமாரணதுங்க எழுதிய ‘லங்காவே சைத்திரயோ பிரமாணயோ‘ நூல் கராவ, துராவ, சலாகம, வகும்புர ஆகிய சாதிகள் சத்திரிய குலத்தில் இருந்து தோன்றியவை எனக் கூறுகிறது. இந்நூல் நவண்டன, சலாகம ஆகிய இரு சாதிகளும் பிராமணர் குல மூலத்தைக் கொண்டவை எனக் கூறுகிறது. ‘கும்பல் பிரஜாவ சக மட்டி கர்மாந்தய‘ நூல் ‘கும்பல்’ (குயவர்) சாதி அந்தஸ்தில் உயர்ந்தது எனக் கூறவில்லை. ‘கும்பல்’ சாதிக்கு வரலாற்று ரீதியாக இழைக்கப்பட்ட அநீதிகளை இந்நூல் எடுத்துக் கூறுகிறது. இந்நூலை எழுதிய ரோஹண பி. பெர்ணாண்டோ இச்சாதியைச் சேர்ந்தவரல்ல. கும்பல் சாதியைச் சேர்ந்த இன்னொருவர் இவருக்கு வேண்டிய தகவல்களை வழங்கி இந்நூலை எழுதும்படி தூண்டுதலை வழங்கினார். கும்பல் சாதி கலைத்திறன் மிக்கவர்களைக் கொண்டதும் இயலுமைகள் உடையதுமான சமூகக் குழு என இந்நூல் குறிப்பிடுகிறது. 

கும்பல் சாதி ஆக்கத்திறன் மிக்கதாக இருந்தது எனவும் இந்நூல் குறிப்பிடுகிறது. அச்சாதியின் ஆக்கத்திறன் சிறப்பை சோஷலிசம், ஜனநாயகம் ஆகிய எண்ணக்கருக்களுடன் தொடர்புபடுத்தி இந்நூல் விளக்குகிறது. 

‘ஜய ஹண்ட‘ என்னும் நூல் திலகவர்த்தன என்பவரால் 1992 இல் எழுதப்பட்டது. இந்நூலை துராவ சாதிச் சங்கமான ‘சுப சாதக பதனம‘ (சமூகநல நிறுவனம்) வெளியிட்டது. இந்நூல் அடிப்படை உரிமைகள் வழக்கு (S.C.APPLICATION NO 98/82) ஒன்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. நீதிமன்றத்தின் முன் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரே ஒரு வழக்காக அமையும். இவ்வழக்கு ஹேவவலாகே ஜில்பேர்ட் டி சில்வா என்பவரால் தொடரப்பட்டது. தனது விண்ணப்பத்தில் மனுதாரர் தாம் துராவ சாதியைச் சேர்ந்தவர் என வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார் (திலகவர்த்தன 1992:20). அவருடைய முறைப்பாடு, ஹரிஸ் சந்திர விஜயதுங்க என்பவரால் பதிப்பிக்கப்பட்ட பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட ‘சிங்கள அகராதி‘ (THE PRACTICAL SINHALA DICTIONARY) என்னும் அகராதியில் துராவ சாதி பற்றி இழிவுபடுத்தும் முறையில் இரு சொற்களுக்கு வரைவிலக்கணம் தரப்பட்டுள்ளது என்பதாகும். ‘தகதுற‘ (DAHA DURA),  துராவ (DURAWA)  என்ற இரு சொற்களுக்கும் தவறானதும், அவதூறானதுமான வரைவிலக்கணம் தரப்பட்டுள்ளதாகவும் அச்சொற்களை நீக்கும்படி உத்தரவிடும்படியும் மனுதாரர் தனது விண்ணப்பத்தில் கோரியிருந்தார். பதிப்பாசியரியர் விஜயதுங்கவும், பண்பாட்டு அலுவல்கள் அமைச்சும் அவ்விரு சொற்களையும் நீக்குவதற்கு சம்மதம் தெரிவித்தன. நீதிமன்று இவ்வழக்கை இணக்கமாக முடிவுக்குக் கொண்டு வந்தது. இச்சம்பவம் 1982 இல் நிகழ்ந்தது. ஆனால் திலகவர்த்தனவின் நூல் 1992 இல் வெளியிடப்பட்டது. 

இலங்கையில் விகிதாசார முறை அறிமுகம் செய்யப்பட்டதும் சாதியடிப்படையில் வாக்கு வேட்டை நடத்தப்படுவது இடம்பெறுகிறது. புவியியல் ரீதியாக சிதறிக் கிடக்கும் சமூகக் குழுக்களை சாதி விசுவாசத்தின் அடிப்படையில் அணி திரட்டும் போக்கு, முன்னர் இல்லாத வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விகிதாசார முறையின் கீழ் பரந்த புவியியல் பிரதேசமான மாவட்டம் ஒரு தொகுதியாகக் கருதப்படுவதால், சாதியடிப்படையிலான வாக்குகள் முக்கியம் பெறுகின்றன. எமது சாதியினர் வாக்குகள் எவ்வளவு உள்ளன? என்னும் ‘எண்கள்‘ சார்ந்த வினா முக்கியத்துவம் பெறுகிறது. சுடிதிப்கவிராஜ் என்பவர் இந்தியாவில் சாதியடிப்படையில் வாக்குகளை அணி திரட்டல் பற்றிக் கூறும் போது “ELECTORAL POLITICS TURNS BASICALLY ON NUMBERS” என்று குறிப்பிட்டார். இலங்கையிலும் அவ்வாறான நிலையே ஏற்பட்டுள்ளது.

அக்குரஸ தேர்தல் தொகுதியில் பிரபலமான ஒரு அரசியல் தலைவருக்கும் கும்பல் சாதியினருக்கும் இடையே பிணக்கு ஒன்று தோன்றியது. கும்பல் சாதியினருக்கு மட்பாண்டம் செய்வதற்கான களி மண்ணை அகழ்ந்து எடுப்பது சம்மந்தமானதாக இப் பிணக்கு இருந்தது. இப்பிரச்சினை பின்னர் ஒரு அரசியல் பிரச்சினையாகியது. கும்பல் சாதியினர் அக்குரஸவில் மட்டுமல்லாது அருகே உள்ள தெவி நுவர தேர்தல் தொகுதியிலும் வாழும் கும்பல் சாதி மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி குறித்த அரசியல்வாதிக்கு தமது சாதியினர் மத்தியில் இருந்த ஆதரவை விலக்கிக் கொள்ளச் செய்தனர். இந்தச் சம்பவம் எவ்வாறு புவியியல் ரீதியாகச் சிதறிக் கிடக்கும் குறிப்பிட்டதொரு சாதி ஒன்றுபட்டு கூட்டாக அரசியல் முடிவை எடுக்க முனைகிறது என்பதற்கு உதாரணமாகும். தமது குழுவின் பொதுவான குறைகளுக்கு ஐக்கியப்பட்டு நிவாரணம் தேட விகிதாசார தேர்தல் முறை வாய்ப்பளித்துள்ளதெனலாம். பஹல கொஸ்கம என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் தென்னைத் தோட்டங்களில் இருந்து பெறப்படும் சிரட்டைகளை உபயோகித்து பல்வேறு கலைப்பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபடுகின்றனர். இத்தொழிலைச் செய்வோர் அனைவரும் பத்கம சாதியினராகவும் உள்ளனர். இத்தொழிலைச் செய்யும் இம்மக்கள் தமக்கென ஒரு சங்கம் ஒன்றை உருவாக்கினர்.

ஐக்கியப்பட்ட ஒரு அரசியல் குழுவாக இச்சமூகம் அரசியல் செயல் முறையில் இணைந்து கொள்வதைக் காண முடிகிறது. 

அரசியல் அரங்கில், சாதி பேரம் பேசலுக்கான சாதனமாக ஓரளவிற்குப் பயன்படுகிறது.  ஆயினும் சாதி சமூக அரங்கில் பேரம் பேசும் சாதனமாக இயங்கும் வலுவற்றதாக உள்ளது. இதன் பொருள் யாதெனில் அரசியல் ஜனநாயகத்திற்கும் சமூக நிலைப்பட்ட ஜனநாயகத்திற்கும் நேரடித் தொடர்பு கிடையாது. ஜனநாயகத்தின் இவ்விரு பரிமாணங்களின் உள்ளக இயங்கியல் வெவ்வேறானவை.

சாதி, சமூக விலக்கல், ஜனநாயகப்படுத்தல்

“தாழ்த்தப்பட்ட நிலையில் சமூகப் பிரிவுகள் சில தொடர்ந்து இருந்து வருகின்றன; அவை சாதியின் அடிப்படையிலான பாரபட்சம் காட்டுதலுக்கு ஆளாகி வருகின்றன. அச்சமூகப் பிரிவினர் கல்வி வாய்ப்புக்களைப் பெறுதல், காணிகளை விலைக்குப் பெற்றுக் கொண்டு காணிகளின் உடைமையாளர்களாதல், பொருளாதார வளங்களைப் பெறுதல், சமூகப் படிநிலையில் மேல்நோக்கி உயருவதற்கான வழிகளைப் பெறுதல் என்பனவற்றில் தடைகளை எதிர்நோக்கி வருகின்றனர்” (சில்வாவும் பிறரும் 2009b:14).

சில்வாவும் பிறரும் இணைந்து எழுதிய ஆய்வில் இருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ள மேற்குறித்த கூற்று ‘சமூக விலக்கல்‘ (SOCIAL EXCLUSION) என்னும் எண்ணக் கருவை மிகத் தெளிவாக விளக்கி நிற்கும் கூற்றாகும். ‘சமூக விலக்கல்‘ என்ற சொல்லை வெளிப்படையாக அக்கூற்று உள்ளடக்கவில்லை எனினும் அவ் எண்ணக்கருவையே அது குறிப்பிடுகிறது. ஜயதேவ உயன் கொட இலங்கையில் ஜனநாயகச் செயன்முறையின் பிரத்தியேக இயல்புகளின் வெளிப்பாடாகவே தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ளோரது சமூக விலக்கல் அமைகிறது என்று கூறுகிறார். விளிம்பு நிலைச் சமூகங்களினால் அரசியல் உரிமைகளையும், சமூக ஜனநாயகத்தையும் அனுபவிக்க முடியவில்லை. சமூக வாழ்வில் உள்ள இந்த இடைவெளியை அரசு, ஜனநாயக நிறுவனங்கள், சிவில் சமூகம் என்பன நீக்குவதற்குத் தவறி விட்டன (உயன் கொட 2012:31) என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உயன் கொட அவர்கள் ”சமூக விலக்கலையும் பிரஜா அந்தஸ்தையும் ஒன்றிணைத்துப் பார்ப்பதோடு சமூக விலக்கலுக்கு உள்ளாகும் சமூகப் பிரிவினர் பிரஜா அந்தஸ்தை முழுமையாக அனுபவிப்பதில்லை” என்றும் கூறுகிறார் (உயன்கொட 2012:79-80).

“சமூக விலக்கல் சக்தி வாய்ந்த பாரபட்ச நடவடிக்கையாகும். மனிதவள அபிவிருத்திப் பாதையில் சமூகம் பயணிக்கும் போது, சில சமூகப் பிரிவினரை, ஒரு குழுவாகப் பிரித்து அப்பாதையில் செல்ல விடாமல் ஒதுக்கி விடும் வேலையைச் சமூக விலக்கல் செய்கிறது. சில சமூகங்கள் சமூக, அரசியல், பொருளாதாரம், பண்பாடு, கல்வி, சமயம் ஆகிய சமூக வாழ்வின் பல விடயங்களில் இருந்து விலக்கி வைக்கப்படுகின்றன. ஒரே சமூகத்தில் வாழும் சில பிரிவினர் உயர்ந்தோராகவும், இன்னொரு பிரிவினர் தாழ்ந்தோராகவும் நடத்தப்படுவதற்கு சமூக விலக்கல் உதவுகிறது. அது சமூக வாழ்விலும், பண்பாட்டு வாழ்விலும் மேலாதிக்கம் (DOMINATION), கீழ்ப்பணிந்து போதல் (SUBJUGATION) ஆகிய அமைப்பு முறையை உருவாக்கி விடுகிறது” (லூயிஸ் 2007:3). பிரகாஷ் லூயிஸ் (PRAKASH LOUIS) அவர்களின் மேற்கூறிய கூற்று சமூக விலக்கலின் விளைவுகளை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. புறந்தள்ளி ஒதுக்கி வைத்தல், தனிமைப்படுத்துதல், கீழ்ப்பணிந்து போகச் செய்தல் என்பன பாரபட்ச நடவடிக்கைகளின் விளைவாகும். இவை சமூகக் கட்டமைப்புக்களின் ஊடாக நிகழ்த்தப்படும் அரசியலின் விளைவுகளாகும். இதனால் ஜனநாயகத்தின் பயனான விடுதலை சில சமூகப் பிரிவினருக்குக் கிடைப்பதில்லை. சமூக விலக்கல் ஒரு கருத்தியல் மட்டுமல்ல. அது சமூகக் கட்டமைப்புக்களுடன் இணைந்து செயற்படும் கருத்தியல் ஆகும். சமூக விலக்கல் மனப்பாங்குகள் சமூகக் கட்டமைப்புக்களில் இணைக்கப்படுகின்ற போது கருத்தியலும், கட்டமைப்புகளும் ஒன்று சேர்வதைக் காணலாம். சமூக விலக்கி வைத்தல் கருத்தியலும், விலக்கி வைக்கும் சமூகக் கட்டமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. 

சாதி முறையின் முக்கிய இயல்புகளில் ஒன்று அதிகார வரன்முறை (HIERARCHY) ஆகும். அதிகார வரன்முறை சாதியடிப்படையிலான சமத்துவமின்மையை நியாயப்படுத்தும் கருத்தியலை உருவாக்குகிறது. சமூகத்தால் விளிம்பு நிலையில் விலக்கி வைக்கப்பட்டோரும் இக் கருத்தியலை உள்வாங்கிக் கொண்டு செயற்படுகின்றனர். இவ்வாறான கருத்தியலின் உள்வாங்கல் (INTERNALISATION) சாதி முறையை ஒழிப்பதற்குத் தடையாக அமைகிறது (லூயிஸ் 2007:10). சாதியின் அதிகார வன்முறைக்கு பின்னால் சமூக உயர்வு, தாழ்வு பற்றிய கருத்தியல் மறைந்துள்ளது. இந்த மறைந்திருக்கும் கருத்தியல் சாதி அடிப்படையிலான சமூக விலக்கலுக்கு உதவும் நிலையை இலங்கையில் காணலாம். இலங்கையில் சமூகத்தின் அடி நிலையில் உள்ளவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு கிடைப்பதில்லை. அவர்களால் காணிகளை உடமை கொள்ள முடிவதில்லை. அவர்களுக்குக் கௌரவமும் மதிப்பும் வழங்கப்படுவதில்லை. சமூக நல அரசு (WELFARE STATE) வசதி குறைந்த பல சமூகப் பிரிவினர்களுக்கு நன்மைகளைப் பகிர்ந்தளித்துள்ளது உண்மையே. ஆயினும் அடி நிலைச் சாதிகளுக்கு சமூக நல அரசின் நன்மைகள் சமத்துவமான முறையில் பங்கிடப்பட்டன என்று கூற முடியாது (சில்வாவும் பிறரும் 2009 b : 4-5,14).

அரசியல் யாப்பு வழங்கியுள்ள மனித உரிமைகளைக் கிடைக்கச் செய்யாது தடுத்தல், பொருளாதார வளங்களைப் பெற்று அனுபவிக்க முடியாத நிலை என்பன சமூக விலக்கலை உருவாக்குகின்றன. இதனை விட சமூக இடையுறவுகளில் இருந்து விலக்கி வைத்தல் மனிதரின் கௌரவத்தைப் பாதிப்பதாக அமைகிறது. சமூகத்தில் உள்ள அனைத்துச் சமூகப் பிரிவினரும் அரசியல் பங்கேற்பில் (POLITICAL PARTICIPATION) பங்கு கொள்வதன் மூலம் ஜனநாயகம் மேலோங்கும். ஆகையால் சில சமூகக் குழுக்கள் தொடர்ச்சியாக அரசியல் பங்கேற்பு இல்லாது ஒதுங்கி இருந்தால் ஜனநாயகத்தை அது வளர விடாது தடுக்கும். அரசியல் பங்கேற்பு மூலம் மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தலாம், குறைகளை எடுத்துச் சொல்லி நிவாரணம் கேட்கலாம், தமது பிரதிநிதிகளைத் தெரிந்தெடுக்கலாம். இவை மட்டும் தான் அரசியல் பங்கேற்பின் நன்மைகள் அல்ல. இவற்றைவிட இன்னொரு முக்கியமான நன்மை பொருளாதார நன்மைகளும், பொருளாதார நன்மைகள் மூலம் சமூக அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வதுமாகும்.

“தேர்தல் என்பது வெறுமனே ஒரு பிரதிநிதியை தெரிவு செய்வது மட்டுமன்று; அது ஒரு அரசாங்கத்தை தெரிவு செய்வதும் அன்று; அது ஒரு சூதாட்டம் ஆகும். இச் சூதாட்டத்தில் ஒருவரின் புரவலர் (PATRON) வெற்றி பெறலாம். அப் புரவலரின் கட்சி ஆட்சியைக் கைப்பற்றலாம். அப்போது அப் புரவலரை ஆதரித்து வாக்களித்தவருக்குப் பொருளாதார நன்மைகள் கிடைக்கின்றன. இங்கே அரசியல், பகுதியளவில் பொருளாதாரம் என்ற பரிமாணத்தை பெறுவதைக் காண்கிறோம்” (குணசிங்க 2007:145). நியூட்டன் குணசிங்க அவர்களின் மேற்காட்டிய கூற்று அரசியல் பங்கேற்பின் பொருளாதாரப் பரிமாணத்தை எடுத்துக் கூறுகிறது. 

அரசியல் பங்கேற்பு (POLITICAL PARTICIPATION) மற்றும் பிரதிநிதித்துவம் (REPRESENTATION) என்ற இரண்டு விடயங்களும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இவற்றின் மூலம் கீழ் நிலையில் உள்ள சாதிக் குழுக்கள் சமூக அசைவியக்கம் (SOCIAL MOBILITY) மூலம் மேல் நிலைக்கு உயரலாம். இலங்கையில் ஜனநாயகம் புகுத்தப்பட்ட தொடக்க காலத்தில் அரசியல் பங்கேற்பும், பிரதிநிதித்துவமும் உயர் சாதியினருக்கே கிடைத்தன. காரணம் சொத்துடமையும், ஆங்கிலக் கல்வியும் வாக்குரிமைக்கான முன் நிபந்தனையாக அமைந்தமையாகும். இதனால் சொத்துக்களும் ஆங்கிலக் கல்வியும் இல்லாத தாழ்நிலைச் சாதிகளால் அரசியலில் பங்கேற்க முடியவில்லை. தரா குமாரசுவாமி (TARA COOMARASWAMY) குறிப்பிட்டுள்ளது போன்று, முதலாவது சட்ட சபையில் கொவிகம சாதி மேலாதிக்கம் பெற்றிருந்தது. அச் சட்ட சபையில் கராவ, சலாகம என்ற இரு சாதிகளை தவிர்ந்த ஏனைய சாதிகளின் பிரதிநிதிகளுக்கு இடம் கிடைக்கவில்லை. கண்டிப் பிரதேசத்தில் பத்கம, வகும்புர என்னும் இரு சாதிகளின் எண்ணிக்கையில் பெரும் தொகையினராக இருந்த போதும், தொடக்க கால சட்டசபைகளில் அச்சாதிகளுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை (குமாரசுவாமி 1988:98). 1947 தேர்தலில் இவ்விரு சாதிகளுக்கும் பிரதிநிதித்துவம் கிடைத்த போதும், சனத்தொகை விகிதாசாரப்படி நோக்கினால் அப்பிரதிநிதித்துவத்தின் போதாமை வெளிப்படும். பத்கம, வகும்புர இரண்டும் சேர்த்து கண்டிப் பிராந்தியத்தின் சனத்தொகையில் 33% வீதமாக இருந்தன. ஆயின் 1947 இல் அச்சாதிகளுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் 4% வீதம் ஆகும் என தரா குமாரசுவாமி குறிப்பிடுகிறார். வாக்குரிமை விஸ்தரிக்கப்பட்ட பின்னர் ‘சிங்கள பௌத்த கொவிகம சாதியின் ஆதிக்கம் நிறுவன மயப்படுத்தப்பட்டது‘ என்று சிறுபான்மைச் சாதியினர் பலர் கருத்துத் தெரிவித்தனர் (குமாரசுவாமி 1988:243).

தாழ்நிலைச் சாதிகளின் வாக்குகளை அரசியல் வாதிகள் அணி திரட்டினர். தாழ்நிலைச் சாதிகளில் இருந்து கட்சிக்கு உறுப்பினர்களையும் சேர்த்தனர். ஆயினும் எந்த அரசியல் கட்சியினதும் அரசியல்வாதிகளும் தாழ் நிலைச் சாதிகளின் பொதுவான குறைகளின் அடிப்படையிலான வெகுஜன இயக்கத்தை (MASS MOVEMENT) கட்டமைப்பதற்கு முன் வரவில்லை. இந்தியாவில் சாதி அடிப்படையிலான அரசியல் கட்சிகள் உள்ளன. இலங்கையில் சாதி அடிப்படையிலான அரசியல் கட்சிகள் இல்லை என்பது இலங்கை அரசியலில் முக்கியமான இயல்புகளில் ஒன்று. இந்தியாவின் சாதி அடிப்படையிலான அரசியல் கட்சிகள் சாதிகளின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்களை முன் வைத்து, அதன்படியான சுலோகங்களையும் முன்வைத்து சாதி வாக்குகளை அணி திரட்டுகின்றன. இந்தியாவின் பகுஜன் சமாஜ் கட்சி (BSP) இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டாகும். இக் கட்சியின் தலைவர் கான்சிராம் (KHANSIRAM) பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் ஆவர். அத்தோடு அவர் ’பிற்பட்ட சிறுபான்மைச் சமூகத் தொழிலாளர் சமாஜம்‘ (BACKWARD AND MINORITY COMMUNITY EMPLOYEES FEDERATION)  என்ற தொழிற்சங்க அமைப்பினை 1973 இல் நிறுவியவர். அவரது பகுஜன சமாஜ் கட்சி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக 1984 இல் தொடங்கப்பட்டது என்பது கவனத்திற்குரியது (சந்திரா, 2004:144-145).

இலங்கையில் தாழ்நிலையில் உள்ள சமூகக் குழுக்கள் அரசியல் அணிசேர்ப்பின் மூலம் அரசியலில் இணைக்கப்படுவதில்லை. இது அவர்கள் விளிம்பு நிலையில் இருப்பதற்குப் பிரதான காரணம் ஆகும் என ஜயதேவ உயன் கொட (2012:30) குறிப்பிடுகின்றார். கண்டிப் பிரதேசத்தின் தாழ்நிலைச் சாதியாகிய கின்னர சமூகக் குழுவின் நிலை பற்றி உயன்கொட கூறியிருப்பது வருமாறு.

“கின்னர சமூகத்தை சேர்ந்த எந்தப் பிரஜையும் இதுவரை, இலங்கையின் எந்த அரசியல் கட்சிகளாலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக தெரிவு செய்யப்படவில்லை. ஊரக மட்டத்தில் கின்னர சமூக நபர் கட்சி உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. அவர்களுள் எவராவது இதுவரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை. எந்தவொரு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரைக் கொண்ட சபைகளிலும் அவர்களுக்கு இதுவரை பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை (உயன்கொட 2012:80). 

அடிநிலைச் சாதிகளுக்கு இலங்கையில் போதிய சட்டப் பாதுகாப்பு இல்லை என்பதை அடுத்த பகுதியில் விளக்கிக் கூறவுள்ளோம். 

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

3614 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (10)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)