Arts
10 நிமிட வாசிப்பு

தவக்காலச் சிந்தனைகள்: உடக்கு பாஸ்க்கும் பஸாமும் உயிர்த்த ஆண்டவர் நிகழ்வும்

May 19, 2022 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

உடக்கு

தமிழ் கிறிஸ்தவத்திற்கு ஒரு ஈழ மரபுண்டு. அது ரோமின் திருச்சபை ஆளுகைக்குட்பட்டதாயினும், தமிழ் கிறிஸ்தவத்தின் உலகளாவிய தன்மைகளைப் பகிர்ந்து கொண்டதாயினும், அதன் அமைவிடம் – சமூக பண்பாட்டு வரலாறு – அதன் வரலாற்று உருவாக்கத்தில் மேலாதிக்கஞ் செலுத்திய காரணிகள் – அதன் உள்ளூர் பண்பாட்டுக் களங்கள் மற்றும் அவற்றின் மோதல்கள் என்பனவற்றினால் அதன் சிறப்புப் பண்புகள் உருவாகின எனச் சுருக்கமாகக் கூறலாம். அதற்கு அதற்கான தனிமுகம் உண்டு. ஆனால், அந்தத் தனியடையாளச் சிறப்பினை இனங்காணவும், அதனைப் பாதுகாக்கவும் எம்மிடையே முயற்சிகள் இன்றுவரை இல்லை என்பதுதான் எமது துரதிர்ஷ்டம். பெரும்பாலான மரபுரிமைகள் – பண்பாட்டுத் தனியடையாளங்கள் தொடர்பான ஆய்வுகள் பல்கலைக்கழகங்களில் அவற்றைப் பற்றி எழுதி பட்டங்கள் வாங்கி அவற்றைப் பறக்கவிட்டுக் குதூகலிப்பதோடு சரி. அறிவையும் – புலமை மரபினையும் மக்கள் மயப்படுத்தாத கல்வியும் – கல்வியாளர்கள் என்போரும் வேறென்ன செய்ய முடியும்? அவரெவரும் அதனை செயற்பாட்டுநிலையில் பாதுகாக்க எந்தச் செயற்பாட்டிலும் ஈடுபடத் தயாராயில்லை. வெற்றுச் சடங்காசாரத் தேசியத்தின் துதிகளை மேடைக்கும் – தேர்தல் ஓட்டுக்கும் பாவிக்கும் அறிவியல் மற்றும் அரசியல் களத்தில் வேறெதையும் நாம் எதிர்பார்த்தல் என்பது எமது முட்டாள்தனமாகவே இருக்கும்.

உடக்கு - மன்னார்

இந்தக் குருட்டுத்தனங்களின் பின்னணியில் தான் எமது தேவாலயங்களது பழைய நெடுத்த மரத்தூண்களை தென்னிலங்கை வியாபாரிகளை தேடி அழைத்து மகிழ்ச்சியாக விற்றுக்கொண்டிருக்கும் வரலாற்று அறிவீனத்துக்குக் காரணம். இதுதான் காலனிய காலத்து கட்டடச் சிறப்புடைய முக்கியமான குருமனைகள் வேரோடு பிடுங்கி எறியப்படவும், அவ்விடத்திற் பண்பாட்டு சிறப்போ – கட்டடவியற் தனித்துவமோ இல்லாத கொங்கிறீற் கட்டிகள் மிதக்கவும் காரணமாய் உள்ளன. இந்த மனநிலைதான் ஊர்காவற்துறை கத்தோலிக்க தேவாலயங்களது காலத்தாற் பழைய உடக்குபாஸ்க்கு பொம்மைகளது சிரசுகள் தென்னிலங்கை அரும்பொருளகச் சந்தை வியாபாரிகள் கூட்டியள்ளிச் சென்று விற்கும் வரை பாராமுகமாய் இருந்தது. அல்லது அதன் சமய பண்பாட்டு முதன்மை தெரியாது அதனை மரபுரிமை சின்னமாகப் பார்க்காமல், பழையதாய் அதனால் கழிக்கப்பட வேண்டியதாய்ப் பார்த்தது. அதுவேதான் பழைய மரத்தாலான சிம்மாசனங்களை தேவாலயங்களில் இருந்து பிடுங்கி வீசவும் காரணமாகி இருக்கிறது.

இந்த கிறிஸ்தவ மரபுரிமை இழப்பில் தவக்காலம் சார்ந்த சிறப்பு வழக்காறுகளும் மெல்ல மறைவடைந்து செல்வதை அல்லது வலுக்குன்றி விரும்பத்தகாத மாற்றங்கள் அடைவதைக் காண்கின்றோம். யுத்தம், இடப்பெயர்வுகள், சாதி முறைமை உள்ளிட்ட சமூக அமைவு மற்றும் பொருளாதார நிலவரங்களும், நிலைமாற்றங்களும் இந்த ‘மெல்ல இனிச் சாகும்..’ என்ற நிலவரத்துக்குப் பெரியளவிற் பங்களிப்புச் செய்துள்ளன. ஆயினும், இதில் பெரும் பொறுப்பேற்க வேண்டிய திருச்சபை, கிறிஸ்தவ சமூகத்தலைவர்கள், மரபுரிமையாளர்கள் முதலானோர்கள் இதற்கான பரிகாரத்தைத் தேடுதல், அதனைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கைமாற்றுதல் என்பன பற்றிச் சிந்தியாமல் இருத்தல் என்பனதுதான் இதன் கவலைக்குரிய விடயம் ஆகும். இது எமது அடையாள அரசியலின் சிந்தனை வறுமை – அடிப்படையற்ற வெற்றுக் கோசமாய் மட்டுமே இனத்துவம் – பண்பாடு ஆகியவற்றை காவிச் செல்லும் பண்புகளை மறுபடியும் உறுதி செய்வது போலுள்ளது.

இந்தவகையில், உடக்கு பாஸ்க் எனும் தவக்காலத்தை முன்னிட்டு இயேசுபிரானின் திருப்பாடுகளை மரப் பொம்மைகளைக் கொண்டு ஆட்டுவித்துக் காட்டும் பழம்பெரும் வடிவம் தன் முன்னைய சோபையைப் பெருமளவுக்கு இன்று இழந்துள்ள முக்கியமான தவக்காலகட்டத்து வடிவமாகும். அதற்கு ஒரு சடங்கு நிலைப்பட்ட பரந்த பின்புலமும் உண்டு. ஏறத்தாழ யாழ்.குடாநாட்டின் பிரதானமான கத்தோலிக்கத் தேவாலயங்கள் சார்ந்து, அவ்விடத்திற்கேயான தனி வேறுபாடுகள் மற்றும் பிராந்தியப் பண்பாட்டுப் பொதுமைகளோடு அவை ஆற்றப்பட்டுள்ளன. இன்று பெரும்பாலான தேவாலயங்களில், அவை ஆற்றப்படுவதில்லை. பல உடக்குகளை இன்று காணவில்லை என்றும் சொல்கிறார்கள். இறுதியாக இன்று உடக்கு ஆற்றுகையில் மிஞ்சியிருப்பது யேசுவை சிலுவையில் அறைதல் – இறக்குதல் மட்டும்தான். கேள்வி என்னவென்றால், உடக்கு பாஸ்க்கை மறுபடி நிலைநிறுத்த முயற்சிக்காமல் நாம் இருப்பதன் பின்னணி என்ன? அதனை இக்காலகட்டத்திற்கு தேவையற்ற ஒன்று என நம்புகிறோமா?. பேசாலையிற் கூட பல ஆண்டுகள் ஆற்றுகை செய்யாது விட்ட பின்தானே மறுபடி அதனை சமீப ஆண்டுகளில் மறுபடி மீள ஆற்றுகை நிலைக்குக் கொண்டுவந்தார்கள். ஆனால், மீள் ஆற்றுகைக்குக் கொண்டுவந்தபோது நிகழ்த்தப்பட்ட, வைபர் முதலியவற்றால் உடக்கை தயாரித்தல் முதலியன தொடர்பான அவர்களது செயற்பாடுகள் தொடர்பில் தனியாக விவாதிக்க வேண்டும். ஆனால், மீள ஆற்றுகைக்கு கொண்டு வந்தமை என்பது முக்கியமான ஒரு முடிவும் செயற்பாடும் ஆகும்.

இதனைப் போலவே பெரியவெள்ளியை முன்னிட்டுப் பாடப்படும், பஸாமைப் பாடும் முறையும் – செயற்பாடுங் கூட நலிவடையத் தொடங்கியிருக்கிறது. ஒருபுறம் அதனைப் பாடுதல் குறைவடைந்து செல்லுதல் நிகழும் அதேவேளை, அதனுடைய ஒலிப்பதிவை ஒலிபரப்பும் பெரும்போக்கும் உருவாகிறது. அது இயந்திரத்துக்கும் – மனித உடனிருப்புக்கும் இடையிலான வேறுபாடு முதற்கொண்டு அதனை நுகர்வோரது, நுகர்வு வேறுபாடு வரை செல்வாக்குச் செலுத்தி அதன் ஆற்றுகை மற்றும் மதரீதியான பெறுமானங்களைக் கீழிறக்குகிறது. அதுமட்டுமின்றி அடுத்தலைமுறையினரிடையே பஸாமைப் பாடுவோர் ‘இல்லை’ என்று கூறக்கூடிய அளவிற்கு அதனைப் பாடத்தக்க இளையோர் இல்லை என்பதுடன், அதனை உருவாக்குவதற்கான எந்தவிதமான எத்தனிப்புக்களும் இல்லை என்பதுதான் மிகவும் கவலைக்குரிய அம்சம். “ஐயோ கிறிஸ்தவர்களே” என பஸாமில் இடம்பெறும் வார்த்தைகளது அர்த்தம் மேலும் விரிவடைந்து விட்டது போலத் தோன்றுகிறது.

இந்த வரிசையில் ஏறத்தாழ இழக்கப்பட்டே விட்டது என்ற நிலையில் இருப்பது உயிர்த்த ஆண்டவர் சொரூபத் திருஉலா நிகழ்வு. ஏறத்தாழ ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அதன் உலாவும் – உயிர்த்த ஆண்டவர் பாடல் பாடும் மரபும் பின் தள்ளப்பட்டிருக்கிறது என அறிய முடிகிறது. உயிர்த்த ஞாயிறன்று ஊர் முழுதும் காவிச்செல்லப்படும் ஆண்டவரது திருச்சொரூபங்கள் இன்று வெளிச் செல்வதுமில்லை. அதற்கான பாடல்கள் பாடப்படுவதும் இல்லை. யாழ்ப்பாணப் பட்டினத்தின் கடற்கரைத் தெருக்களில் ,குருநகரில் இருந்து புறப்பட்டு வரும் யேசுநாதரும், பாசையூரில் இருந்து புறப்பட்டு வரும் யேசுநாதரும் சந்திக்காமற் போய் பலவருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் அதைப்பாடுவோரும் – அந்த நிகழ்ச்சியை செய்வோரும் பாடிப்பரவி அதனைச் செய்யத் தயாராக இருந்தும் ஏன் அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட கிறிஸ்தவத் தரப்புக்கள் செய்வதில்லை? என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. ஒன்றைக் ‘கண்டும் காணாமல் விடுதல்’ என்பது அதனை மெல்ல அழியவிடும் தந்திரோபாயம் என்று சொல்வார்கள். அப்படியானால் ஆண்டவர் உயிர்த்தெழுந்த இந்த நிகழ்ச்சி முக்கியமற்றது என நாம் கருதுகிறோமா? அல்லது ஆண்டவரை நினைவு கூர குறிப்பிட்ட சிலருக்கே அனுமதிக்கப்பட்டுள்ளதாக நினைக்கின்றோமா? “வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள்” என்று யேசுபிரான் அழைத்தாரே – அதன் அர்த்தம் ஆதிக்கம் உடையவர்களுக்கு மட்டும்தான் மதப் பயில்வுகளும்,
கடவுளும் என்றாகுமா?


இந்தவகையான உள்ளார்ந்த பிரச்சினைகளைச் சீரமைத்து கிறிஸ்தவ மரபுரிமைகளைப் பேணுவதும், பாதுகாப்பதுவும் எமது கடமையல்லவா? சமூகம் என்பது எப்போதும் ஏற்றத்தாழ்வுகளது மோதற் களந்தான். முரண்பாடுகளுக்கு நடுவிலும் – அதிகாரப் போட்டிகளுக்கும் நடுவிலும் நீதியின் பாற்பட்டதும் சமூகத்தின் ஒட்டுமொத்தத் நலன்களுக்கு சேவை செய்வதும், அனைத்துத் தரப்புக்களது நியாயபூர்வமான நடத்தைகளுக்கும் இடம்கொடுப்பதுமான பரந்த செயற்பாடு எமக்கு அவசியம். எந்தவொரு மதமும் அதனை நோக்கித்தான் பயணஞ் செய்ய வேண்டும். இந்தப் பின்னணியில் உயிர்த்த ஆண்டவருக்கான சிறப்பு வழிபாட்டு மரபுகள் மறுபடியும் வெளிக்கொணரப்பட வேண்டும். எங்கோ ஒரு மூலையில் யாரொருவர் தமது வழிபாட்டு முறைகளை ஒளித்து நிறைவேற்றுதலோ அல்லது அதனைக் கூடச் செய்ய முடியாது மனம் வெம்புதலோ நடக்கக் கூடாது. அத்துடன் அவ்வாறு நாம் செய்யத் தவறின் அது ஒருவகையான சமய வழிபாட்டு உரிமை மறுப்புத்தான் – அவ்வகையில் பரந்துபட்ட அளவில் அது மனித உரிமை மீறலும் கூட.

ஒருவகையில் ஆக்கபூர்வமான சடங்குகள் ,சம்பிரதாயங்கள், விழாக்கள் என்பன ஒரு சமூகத்தை இறுகப் பிணைப்பதும், ஒன்றிணைப்பதும் தான். மரபுரிமை, இன்னொரு வகையில் வரலாற்றின் சுவடு. அது மக்களை சுட்டு பிணிநீக்கஞ் (heeling) செய்வன. எமது பண்பாட்டுப் பெருமையும் – சுய அடையாளத்தின் பலவகைக் கூறுகளில் ஒன்றுமாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4329 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (10)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)