Arts
15 நிமிட வாசிப்பு

புலம்பெயர் தமிழர்களும், மரபுரிமையும் – I

January 12, 2023 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

ஈழத் தமிழர்களின் மரபுரிமையைப் (Heritage) பாதுகாப்பதற்கான ஒரு வழிவரைபடத்தை இந்தக் கட்டுரை உருவாக்க முயல்கிறது. இன்று, ‘ஈழத் தமிழர்கள்’ என்ற பதப் பிரயோகம் புவியியல் ரீதியாக இலங்கைத் தீவுக்குள் வாழுகின்ற சிறுபான்மைத் தமிழர்களை மட்டுமின்றி, உலகில் வேறு எந்தப் பாகத்திலும் வாழும் இலங்கைத் தீவைச் சேர்ந்த தமிழர்களையும் இணைத்துக் கொண்ட கூட்டு அடையாளத்தைக் குறிக்கிறது. இன்று  அது தன்  புவியியல் எல்லை கடந்த உணர்வுத் திரட்சி; ஒடுக்குமுறையும், மனக்காயங்களும் கட்டமைத்த ஒரு தேசம்.

இந்தப் பரந்த பார்வை அடிப்படையில் ஈழத் தமிழர் மரபுரிமை என்பது உள்நாடு மற்றும் புலம்பெயர்ந்த நிலங்கள் என்ற இருமடிப்புடைய ஒரு கூட்டுப் பிரதிநிதித்துவம் ஆகும். ஒரு தலைமுறை,  நாடு கடந்தது; இன்னொரு தலைமுறை, புதிய நிலங்களில் பிறந்தது; தமிழ் அதன் அரசியற் பண்பாட்டுத் தளத்தில் இருந்து பல மொழியாற் பேசியத் தொடங்கியது. தமிழுக்கு இன்று பல மொழிகள் கொண்ட நாவு வாய்க்கப்பெற்றிருக்கிறது. அத்தனை நாவு கொண்டும் ஈழத் தமிழர் நூறாண்டு கடந்தும் தொடரும் அவர்கள் மீதான இன்னமும் அகலாத ஒடுக்குமுறையை, அதன் இழப்பின் கதையை இதயமுடையவருக்காய் விடாதுசொல்ல வேண்டும்: கேட்கும் செவிகள் கேட்கட்டும். இன்றில்லையாயினும் இன்னொரு நாளில் அது உரத்துக் கேட்கும். நாம் பிள்ளைகளுக்குச் சொல்வோம்; அவர்கள் உலகிற்குச் சொல்லட்டும்.

இந்தச் சொல்லுதலின் வரிவடிவங்களில் மரபுரிமையும் ஒன்றாகும். ஒரு சமூகத்தின் அடையாளத்தை, அதன் கடந்த காலத்து சமூக வரலாற்று பின்னணியில் கட்டியெழுப்புவதற்கு மரபுரிமை இன்றியமையாதவொரு கருவியாக காணப்படுகிறது. அதனடிப்படையில் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கட்டமைப்புசார் பண்பாட்டு இனப்படுகொலைப் (cultural genocide) பின்னணியில் அதற்கெதிரான எதிர்ப்பு அரசியல் திட்டத்தில் – ‘மரபுரிமைப் பாதுகாப்பு’ என்பது மிக அத்தியாவசியச் செயற்பாடாக காணப்படுகிறது.

Coral-walls

ஆனால், மரபுரிமையின் முக்கியத்துவம் பற்றிய அறியாமையாலும், அதனை உதாசீனஞ் செய்தலாலும், ஈழத் தமிழர்களே இந்த மரபுரிமை அழிப்பின் பிரதானமான முகவர்களாக உள்ளனர் என்பதுதான் மிகத் துரதிர்ஷ்டவசமான வரலாற்று யதார்த்தமாகக் காணப்படுகிறது. ஈழத்தமிழர்கள் ‘தங்கள் வேர்களைத் தாங்களே அடியோடு பிடுங்கியும்’, தங்கள் தொண்டையைத் தாங்களே அறுத்தும் மகிழ்ச்சி கொள்கிறார்கள் என்பதுதான் அவர்கள் வரலாற்றிற் காணப்படும் முரண்மிகுந்த யதார்த்தமாகும். அதற்கு வரலாற்று ரீதியாகப் பல காரணங்கள் உண்டு. இந்த பல்வேறுபட்ட காரணங்களில் பிரதானமானது சமூக – பண்பாட்டு மற்றும் அரசியல் தலைமை வெற்றிடம் ஆகும்; இரண்டாவது முறைசார்ந்தும் – முறைசாராமலும் பொருத்தமற்ற கல்விப் பயில்வுகள் காணப்படுகின்றமை: கல்வியைச் சான்றிதழாக மட்டும் சுருக்கிக்கொண்ட சுய சிந்தனையும் – ஆக்கத்திறனுமற்ற பட்டங்களை பெயருக்குப் பின்னால் வால் போல நீட்டிப்போடுவதால் புலமை பெற்றதாகக் கருதும் சமூக எண்ணம் கல்வியை அதனாழத்திற் புரிந்து கொள்ளாத நிலைமைக் காட்டியபடியுள்ளது. அதற்கு ஒரு பாரம்பரிய விவசாயியுடைய வேளாண்மை அறிவோ அல்லது ஒரு மீனவனின் கடல் பற்றிய அறிவோ கல்வி அல்ல: அறிவின் பல களங்களை அது அறிவதில்லை. பட்டங்களை வாங்கி அதனை யாவரும் காணப் பட்டம்கட்டி விடுவதே கல்வியின் மாண்பென அது நினைக்கிறது. அடுத்தது இதன் தொடர்ச்சியும், விளைவுமான புலமைத்துவ வெற்றிடம் (intellectual vacuum)  என்பன இந்த நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன. இத்தகைய சூழலில் பொதுச் சமூகத்தை நோக்கி அறிவை மக்கள் மயப்படுத்தும் செயற்பாடுகள் அதிகம் தேவைப்படுகின்றன. மக்கள் மயப்படுத்தப்படாத அறிவு, அறிவின் அதிகாரிகளையே உருவாக்கும். இத்தகைய அறிவதிகாரிகள் இன்றைய பல்தேசியக் கம்பனி உலகிற்கு அவசியமான முகவர்களாக உள்ளனர். நாம் எம்மை அறியாமலே அதிகாரிகள் ஆகின்றோம்.

அரிசந்திர-புராணம்-கூத்து

இந்தச் சமூகப் பண்பாட்டுச் சூழலில், புலம்பெயர் தமிழர்கள் இரட்டைக் குழல் துப்பாக்கிகளைப் போலச் செயல்பட வேண்டும். ஒருபுறம், அவர்கள் தங்கள் தாய்நாட்டில் கவனம் செலுத்த வேண்டும்; ஏனெனில் உணர்வுரீதியாக மட்டுமின்றி, இன்னமும் அவர்கள் பௌதீக ரீதியாகவும் தமது தாய்நாட்டோடு பிணைக்கப்பட்டுள்ளனர். அவர்களது சொத்துக்கள் இன்னமும் இங்கேயுள்ளன. மறுபுறம், அவர்கள் தங்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அல்லது ‘புலம்பெயர் தாயகங்களில்’ தங்கள் மரபுரிமைகளைப் பாதுகாக்க உழைக்க வேண்டும். உண்மையில் அவர்கள் முன்னால் இரட்டைக் கடமைகள் காணப்படுகின்றன.

புலம்பெயர் தமிழர்கள் முதலில் தாயகத்தில் உள்ள அவர்களின் மரபுரிமைச் சொத்துக்களை பாதுகாக்க முன்வர வேண்டும் அல்லது அதனைச் செய்யத்தக்க உள்ளூர்த்தரப்புக்களை நிர்ப்பந்திக்க வேண்டும். அவர்களால் போசிக்கப்படும் உள்ளூர் அரசியற் தலைவர்கள் அல்லது அரசியற் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை அதனைநோக்கி நிர்ப்பந்திக்க வேண்டும்.

தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வருகின்ற ஈழத்தமிழர் மரபுரிமையின் பகுதியாக, அவர்களது தேடிய தேட்டங்களும் சொத்துக்களும் கூடக் காணப்படுகின்றன என்பதை அவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும். அது அவர்களது சொந்த வரலாறும், அவர்களது சமூகத்தின் பொது வரலாற்றின் ஒரு பகுதியுங் கூட. அவை கடந்தகால வரலாற்றின் சாட்சியமும், அதன் இன்றைய வாழும் தடயங்களுமாகும். ‘தடயங்கள் இன்றி வரலாறுகள் அமைவதில்லை’. மேடைப் பேச்சுக்களும், கூச்சல்களும் வரலாற்றைக் கட்டமைக்கா. அதற்குத் தேவை தடயங்கள் – பகுப்பாய்வுரீதியான வாத விவாதங்கள். ஆகவே தடயங்களை முடிந்தவரை பாதுகாத்தலே ஒரு சமூகத்தை பாதுகாப்பதற்கான பல வழிமுறைகளில் ஒன்றாகும். அதனை விடுத்து தமது அரசியல் இலாபங்களுக்குக் எம்மை வைத்து அரசியல் செய்யும் அயலக அரசியல்வாதிகளுக்கு பணத்தை வாரியிறைத்து ‘அண்ணன்’ கோசம் போடுவதால் எந்தப் பயனுமில்லை.

இந்தப் பின்னணியில், சமூக அரசியற் பண்பாட்டு முதன்மையுடைய மரபுரிமை அடையாளங்களைப் பாதுகாப்பதற்கான சரியான வழிமுறையை நாம் கண்டுபிடிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இந்தச் சொத்துக்கள் ஏறக்குறைய பல ஆண்டுகளாக நடைபெற்ற போர் மற்றும் இடப்பெயர்ச்சிகளின் பின்னணயில் வகைதொகையின்றி  அழிந்துபோயுள்ளன, நாம் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் எஞ்சியுள்ள சிலவும் விடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனைப் பற்றிப் பேசத்தொடங்கியும் பல தசாப்தங்கள் பயன் பெரிதுமின்றிக் கடந்து போய்விட்டன. இந்தநிலையில், இவற்றைப் பாதுகாக்க மிக அவசரமான நடடிக்கைகள் தேவைப்படுகின்றன. இதற்கான முதற்படியாக மரபுரிமைப் பொருள்கள் மற்றும் மரபுரிமைப் புலங்கள் பற்றிய பட்டியலாக்கமும், அடிப்படை ஆய்வும் தேவைப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக அவற்றைப் பாதுகாப்பதற்கான பன்முகச் செயற்பாடுகள் தேவைப்படுகின்றன.

பின்வரும் விடயங்களை உள்ளடக்கிய பண்பாட்டு மற்றும் இயற்கை மரபுரிமைப் பட்டியல் ஒன்று எமக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகிறது. அதனை எளிமையாக பின்வருமாறு அமைந்திடலாமாயினும், இது ஒரு முன்வரைபு மட்டுமே; இது மேலும் விரிவாக்கஞ் செய்ய வேண்டும்.

பண்பாட்டு மரபுரிமை (cultural heritage):

Dutch Colonial Burgermeister Chair

வீடு, வழிபாட்டிடங்கள் (மரங்கள், தெருவோர சிறுவழிபாடு இடம் தொடக்கம் கட்டுமான வழிபாட்டிடம் வரை), பந்தல்கள், சிகரங்கள், மணவறைகள், இராணுவக் காவலரண்கள் முதலான தற்காலிக கட்டுமானங்கள் அல்லது அமைவுகள், பலவகைத் தளபாடங்கள், சமையல், சடங்கு மற்றும் விழாப் பொருட்கள், பல்வேறு உலோக வார்ப்புக்கள், கல், மர அமைவுகள், அலங்கார பொருட்கள், பொழுதுபோக்கு மற்றும் போக்குவரத்துச் சாதனங்கள், விவசாயம், மீன்பிடி – பிற தொழில்துறை கருவிகள், ஒளிப்படங்கள் – கலை வெளிப்பாடுகள் மற்றும் பிற காண்பிய பிரதிநிதித்துவங்கள், கையெழுத்துப் பிரதிகள், ஓலைச் சுவடிகள் – அச்சிடப்பட்ட பொருட்கள், பாரம்பரிய அறிவு அமைப்புகள் மற்றும் பல.

தொட்டுணர முடியாத பண்பாட்டு மரபுரிமைகள் (intangible cultural heritage):

வாய்மொழி மரபுகள், இசை முதல் ஆடல்கள் உட்பட்ட பலவகைப்பட்ட ஆற்றுகைகள், மொழி வழக்காறுகள் (குழும, வட்டார, பிராந்திய, தொழில்சார், மதப் பின்னணிகளின் பரந்த வேறுபாடுகளின் அடிப்படையில்)

இயற்கை மரபுரிமை (Natural heritage):

தனிச்சிறப்புடைய நில, நீர்த் தாவர வர்க்கங்கள், பயிர்கள், மூலிகைகள், காடுகள், பற்றைகள், பாதைகள், வெளிகள், சதுப்புக்கள், பறவைகள் கூடுமிடங்கள், பாறைப் படிவுகள், சுண்ண, கருங்கற் புலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புவியியல் விவரக்குறிப்புகள், நிலவுரு அமைவுகள், குளம், கால்வாய், கிணறு, கேணி, நீர்த்தொட்டிகள் போன்ற நீர் ஆதாரங்கள் போன்றவை அடங்கலான இயற்கை இடங்கள்.

தாயக மரபுரிமைக் களத்தில் புலம்பெயர் மக்களின் பங்கு

மேற்படி இனங்காணப்பட்ட பொருட்கள், புலங்கள் சார்ந்து இரண்டு வேறுபட்ட முறைகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் செயற்பட வேண்டியிருக்கும். ஒன்று அவர்களது சொந்த மரபுரிமைச் சொத்துக்களைப் பாதுகாத்தல், இரண்டாவது அவர்களால் தாயகத்தின் மரபுரிமைக் களங்கள் மீது செய்யப்படும் நிதிமுதலீடு (funding) அல்லது போசிப்புச் (patronizing) சம்பந்தப்பட்டது.

சொந்த மரபுரிமைச் சொத்துக்களைப் பாதுகாத்தல்:

kathiraimatha

புலம்பெயர்ந்த தமிழர்களின் மரபுரிமைச் சொத்துக்கள் தாயகத்தில் அழிந்துகொண்டிருக்கின்றன (பெரும்பாலானவை அழிந்துவிட்டன); குறிப்பாக அவர்கள் வீடுகள் உட்பட்ட கட்டுமானங்கள். ஒன்றில் அவை கைவிடப்பட்டுள்ளன அல்லது ‘யாரோ’ வசிக்கிறார்கள் அல்லது அரும்பொருள் வியாபாரிகளிடம் கொடுக்கப்பட்டு அவை அவர்களால் வேரோடு கிண்டியெடுக்கப்பட்டு பெரும்பாலும் இலங்கையின் தென்பகுதி அரும்பொருட் சந்தைக்குக் கொடுக்கப்பட்டுவிட்டன. நாளை, சில தசாப்தங்களின் பின்னர் இவை தென்னிலங்கையின் வரலாற்றுச் சான்றாக வரலாற்றில் மாற்றியமைக்கப்படும்.

நடைமுறையில், சொந்த இடத்தைப் பிரிந்த பிறகு அங்குவிட்டு வந்த சொத்துக்கள் ஒரு பெருஞ்சுமையாக மாறிவிடுகின்றன. அதனைக் காத்தல் அல்லது பயன்தரும்நிலைக்கு மாற்றியமைத்தல் என்பது மிகக் கடினமானவொரு செயற்பாடாகிவிடும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஒரு அரசியல் மற்றும் பண்பாட்டுத் தலைமை தாயகத்திலோ – புலம்பெயர் சமூகத்திலோ இல்லாத ஒரு வெற்றிடத்தில் இந்தச் சுமையை நன்கு புரிந்துகொள்ள முடிகிறதேயாயினும், அது பற்றிக் கூட்டாகச் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம். உண்மையில் இதனை கையாள உள்ளூரிலிருந்தே ஒரு பொறிமுறை தேவைப்படுகிறது. அதனைச் செய்யவல்ல சூழல் எம்மிடம் இல்லை. இன்னும் , யார் யாரோடு சேர்ந்து அதிகாரக் கதிரையை பிடிப்பது? என்ற முதன்மையான ஈழச்சண்டையை தமிழரசியற் கட்சிகள் முடிக்கவில்லை. இந்த இடத்தில் பொதுமக்களாகிய நமக்கு நாம் மட்டுந்தான் துணை. நாம்தான் எமக்காக எதையாவது செய்ய வேண்டும். அதற்கான பொறிமுறையைக் கண்டுபிடித்து எமது மரபுரிமைகளைக் காக்க முயற்சிக்க வேண்டும். முதலில் முடிந்தவரை எஞ்சியிருப்பவற்றை அழியவிடாது மண்ணில் நிலைபெற வைக்க தனிப்பட்ட வகையிலும், கூட்டாகவும் முயற்சிக்க வேண்டும். அதனைச் செய்வதற்கான வழிமுறைகள் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

இதுவே அவர்கள் வசமாக இன்று அவரவர் ஊரிலுள்ள அனைத்து பண்பாட்டு – இயற்கை சார்ந்த விடயங்களையும் முடிந்தவரை காக்க உதவும். இது ஒரு சிந்திப்பதற்கான முன்வைப்பு மட்டுமே. இவற்றின் பகைப்புலத்திலிருந்து நாம் மேலும் விரிவாகச் சிந்திக்க வேண்டும். உதாரணத்திற்குச் சில மாற்று முறைகள் பற்றிச் சிந்தித்துப் பார்க்கலாம்.

  • முதலில் எது செய்ய முன்பும் அதனை எண்மியநிலைப்படுத்த வேண்டும். ஏதோவொரு காரணத்தால் அது எம்மிடையே இல்லாது போனாலும் அது பற்றிய முறையான காட்சிப் பதிவை வைத்திருத்தல்.
  • கட்டடங்களைப் பொருத்தமான காப்புச் செயற்பாடுகளோடு பேணுதல்
  • மரபுரிமைச் சிறப்பை உணர்ந்தவர்களுக்கு வாடகைக்கு  வீட்டைத் தருதல். ஆனால் கட்டடத்தில் மாற்றங்கள் முடிந்தவரையிற் செய்யக் கூடாது அல்லது பொருத்தமான நிபுணத்துவ ஆலோசனையோடும், உரிமையாளரது சம்மதத்தோடும் அதன் மரபுரிமைத் தன்மை கெடாத மாற்றங்களைச் செய்தல் முதலான நிபந்தனைகளோடு தருதல் (வீடாக, அலுவலகமாக, மரபுரிமைத் தங்குமிடமாக, உணவகமாக, அரும்பொருளகமாக, நூலகமாக, ஆவணக்காப்பகமாக மற்றும் இதையொத்த விடயங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கலாம்)
  • விற்கும் பட்சத்தில் அதன் முதன்மையும், பெறுமதியும் உணர்ந்தவர்கள், அதனை பாதுகாப்பார்கள் என்பவருக்குத் தருதல்.

(இது தொடர்பாக உள்ளூராட்சிச் சபைகள், மாநகரசபை, அரசியற் சமூகத் தலைமைகள், நிறுவனங்கள் செய்யக் கூடிய மாற்று ஏற்பாடுகள் பற்றி கட்டுரை இவ்விடத்திற் பேசவில்லை)

நிதியூட்டம் மற்றும் போசிப்பு (Funding and Patronizing):

புதிதாகக் கட்டுமானங்களை நிர்மாணித்தல் அல்லது பண்டைய கட்டடத்தைப் புனரமைத்தல் என்பதை உள்ளடக்கிய தாயகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக புலம்பெயர் தேசங்களில் இருந்து பாரியளவு பணம் உள்நாட்டிற்குள் பாய்ச்சப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, அத்தகைய பணம் பலவேளைகளில், நிதிப்பங்களிப்பு செய்பவரது அறிவுக்கு எட்டாமலே மரபுரிமைப் பெறுமானமுடைய பல கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிகள், பாடசாலைக் கட்டடங்கள் முதலான பல மரபுரிமைக் கட்டுமானங்களின் அழிவுக்குப் பிரதானமான காரணியாக அமைந்துவிடுகிறது என்பது எமது கடந்த காலத்து அனுபவமாக உள்ளது.

ஆயிலி-கேணி

புலம்பெயர் சமூகங்களிலிருந்து கிடைக்கப்பெறும் பணத்தைப் பயன்படுத்தி சமூகத்தில் எஞ்சி உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் மரபுரிமைப் பெறுமானமுடைய கட்டடங்களை அழித்து புதிய ‘கொங்கிரீட் காடுகளைக்’ கட்டி அவற்றின் மேல் வர்ணஜாலங்களை அப்பிவிடுவதன் மூலமாக அவை இருந்த தடயமே இல்லாமல் அழித்துவிடுகின்றனர். இவ்வாறு பல வேளைகளில் அவர்களது பண்பாட்டடையாளமும், தடயமும் அவர்கள் கையாலேயே அழிக்கப்படுகின்றன. அவ்வாறு அழிக்கப்படுவதற்குத் தமது நிதி உதவியுள்ளது என்பதை புலம்பெயர் சமூகமும் அறிவதில்லை அல்லது அது பற்றிக் கவனஞ் செலுத்துவதில்லை. இதுவரைக்கும் எத்தனை கட்டுமானங்கள் இவ்விதம் அகால மரணத்திற்கு அல்லது பண்பாட்டுக் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன என்று பட்டியல் போட்டால் ஈழத்தமிழரது அடையாள அரசியல் எவ்வளவு வறுமைப்பட்டது என்பதைப் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள ஊர்ச் சங்கங்கள், பழையமாணவர் சங்கங்கள் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்புக்கள் இவை பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அவர்கள் அறியாமலே அவர்களது நிதி மரபுரிமை அழிப்புக்கு பின்னணியாகிறது என்ற வாசகத்தை ஓர் எச்சரிக்கை மணியாக அவர்கள் எடுத்துக் கொள்ளவேண்டும்.

இவ்வாறான நிலைவரத்தில், நிதியளிப்பவர்கள் எந்தவொரு மரபுரிமைச் சொத்துக்களையும் அழிக்க அல்லது மாற்றியமைக்க அவர்களது பணம் காரணமாகி விடக்கூடாது என்பதில் விழிப்போடு இருக்க வேண்டும்.

  • அவ்வகையில் மரபுரிமைச் சொத்தழிப்புக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, முழுதாகவோ அல்லது பகுதியளவிலோ தமது நிதி பயன்படுத்தப்படலாகாது என்பதை ஒரு கண்டிப்பான முன்நிபந்தனையாக புலம்பெயர் சமூகங்கள் முன்வைக்கவேண்டும்
  • அதனைப் பணவழங்கலின் நிபந்தனையாக மட்டுமின்றி, அதனை உறுதிப்படுத்தும் பொறிமுறையையும் உருவாக்கவேண்டும்.
  • அதேவேளை இத்தகைய நடவடிக்கைகளை ’அமெச்சூர்’ நடைமுறைகளைப் பயன்படுத்தி சீரழிக்காமல் (அவ்வாறுதான் செய்து வருகின்றோம்), பொருத்தமான நிபுணத்துவ ஆலோசனைகளுடனும், அவர்களது நிபுணர்களது ஆற்றலை உபயோகித்தும் செய்யப்படவேண்டும் என்பதையும் முன்நிபந்தனையாக்க வேண்டும். அத்துடன் அதனைக் கண்டிப்பாக போசகருக்கு உறுதிப்படுத்தும் பட்சத்திலேயே பணம் முழுதாக விடுவிக்கப்படும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படவேண்டும்.
  • அதேவேளை உள்ளூர்வாசிகள் புதிய கட்டடம் ஒன்றைக் கட்ட விரும்பினால், நிதியளிப்பவர்கள் அதன் வடிவம் மற்றும் அக்கட்டுமானத்தைச் சுற்றியுள்ள கட்டடங்கள் குறித்தும் அறிந்திருக்க வேண்டும். இல்லாவிடில் புதிய கட்டுமானத்தால் பழைய இடத்தின் பண்பாட்டு நிலவுருவை  (Cultural landscape) அழிக்கத் துணை போனவராவோம். எவ்வாறு மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சுற்றி தமிழ் இராஜாக்களது சிலைகளை வைத்ததன் மூலம் மணிக்கூட்டுக் கோபுரத்தின் மரபுரிமை மற்றும் அழகியல் மற்றும் நிலவுருத் தன்மையைச் சிதைவுற வைத்தோமோ அவ்வாறான ஒரு நிலைவரம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
  • வெளிப்பாட்டின் பண்பாட்டுத் தொடர்ச்சி, பண்புகள் ஆகியன பற்றி விழிப்பாக இருத்தல். அல்லாதுவிடில் அலுமினியப் பொருத்து, வர்ண ஜால ஒளியிலான கொட்டகைகளே இறுதியில் எமது பண்பாட்டு அடையாளமாக எஞ்ச வைக்கப்படும்.
உடுவில்-மகளிர்-கல்லூரி

மரபுரிமை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்:

மரபுரிமைக் கல்வி, மரபுரிமை நிறுவனங்கள் மற்றும் மரபுரிமை அருங்காட்சியகம் மற்றும் காட்சிக்கூடங்கள் என்பவற்றைத் தொழில்முறைத் தன்மையோடு (professional way) உள்ளூரில் உருவாக்க உதவுதல். மேற்படி ’தொழில்முறைத் தன்மையோடு’ என்பது மிக முக்கியமானது. பாடசாலைப் பொருட்காட்சி இடம் மற்றும் படக்கடைகள் போல ’அமெச்சூர்’ தன்மையோடு அரும்பொருளகங்கள்,காட்சிக் கூடங்களை உருவாக்கி நாம் பேணி வைத்துள்ள அரும்பொருட்களது பண்பாட்டுப் பெறுமானத்தை தரம் இறக்கிவிடக் கூடாது. நாம் எப்படி விஞ்ஞான பூர்வமாயும், அழகியல் பூர்வமாயும் எமது பொருட்களை எடுத்துரைத்தோம் என்பதுதான் முக்கியமானது. இல்லாவிட்டால் எமது முயற்சிகள் அதன் இலக்கைச் சரியான வகையில் எட்டாது என்பதுடன், வெறும் கேலிக் கூத்தாகவும் ஆகிவிடும். இவற்றைச் சரியான வகையிற் செய்வதன் மூலம் சுற்றுலாத்துறை (tourism), இவற்றோடு கூட்டிணைந்த பல வகையான தொழிற்துறைகள் மற்றும் வேலைவாய்ப்புக்களை உருவாக்கலாம். அதேவேளை எதிர்காலத்தில் இளைஞர்கள் அருங்காட்சியகம் மற்றும் மரபுரிமை (Museum and heritage studies) சார்ந்த கற்கைகளில் உயர் கல்வி ஆகியவற்றை நோக்கிச் செல்லவும் இம் முயற்சிகள் உதவும்.

எண்மிய மயமாக்கல் (Digitalization):

புலம்பெயர் தமிழர்கள் ஈழத் தமிழர்களின் பரந்த எண்மிய மரபுரிமைப் (digital heritage) புலத்தை கட்டியெழுப்ப உதவவேண்டும். குறிப்பாக சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிரான இலங்கைச் சூழலில் தொடர்ச்சியான பண்பாட்டுப் படுகொலைச் சூழலுக்குள்ளும், மக்களது விழிப்பின்மை மற்றும் உதாசீனம் என்பவற்றின் மத்தியிலும், மரபுரிமையைப் பாதுகாப்பதில் எண்மிய முறை குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும். குறைந்தபட்சம் ஈழத்தமிழ் மரபுரிமைப்புலத்தை எண்மிய நிலையில் வாழவைக்க இச்செயற்பாடு அவசரமானதும், அவசியமானதுமாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

12675 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (10)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)