Arts
5 நிமிட வாசிப்பு

விரைந்து மறையும் சுதேசிய விளையாட்டுக்கள்

July 4, 2022 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

ஆலையிலே சோலையிலே ஆலங்காடிச் சந்தையிலே

கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுகியடிக்க பாலாறு

பாலாறு பாலாறு பாலாறு.. (நாட்டர்பாடல்)

காலனிய காலத்தோடு நடந்தேறிய பண்பாட்டு மாற்றங்களில் பிரதானமானவொன்று சுதேசிய விளையாட்டுக்களின் தேய்வும் – அதனிடத்தை மேற்கத்தைய விளையாட்டுக்கள் இட்டு நிரப்பியமையுமாகும். இது விளையாட்டுக்களை மட்டுமின்றி அதன் நினைவுகளைக் கூட எங்கள் எண்ணங்களில் இருந்து பெரிதும் துடைத்தளித்து விட்டன. ஆங்காங்கு பாரம்பரியமாக தொடர்ந்த சிலவும், இன்றைய கல்வி உருவாக்கிய ‘படிப்பு’ எனும் பௌதீக – உளவியலின் சிக்கல்கள், அந்தப் படிப்புமுறை தோற்றுவித்துள்ள ‘நேரமின்மை’, இதன் பின்னணியில் மறுதலிக்கப்படும் ஓய்வு அல்லது பொழுதுபோக்குப் பண்பாடு அதன் சமூக – உளவியல் இன்றியமையாமை பற்றிய புரிதலின்மை அல்லது பொழுதுபோக்கை  வெறுமனே தொலைக்காட்சிக்களுக்கு மட்டுமே எழுதிவைத்து விட்டிருக்கும் தன்மை ஆகியவற்றால் உருவாக்கப்படும் சமயகாலப் பண்பாட்டு நெருக்கடிக்குள் அகப்பட்டு அழிவனவற்றுள் பாரம்பரிய – சுதேசிய விளையாட்டுக்களும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன.

கிட்டிப் புள்ளு விளையாடும் சிறுவர்கள்

விளையாட்டுப் பற்றிய எமது இன்யைற சிந்தனைகள் காலனியத்தோடு உருவாகிய மேற்குமையக் கல்வி கொணர்ந்த பாடவிதானத்துள் உருவாகிய PT என அழைக்கப்படும் உடற்கல்வி மற்றும் சுகாதாரமும் உடற்கல்வியும் முதலான பாடங்களும், பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் – அதற்காக மாணவர்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட விளையாட்டு இல்லங்கள் (houses) என்பனவும் அதிகமதிகம் அதிகமதிகம் மேற்கத்தையமயப்பட்ட விளையாட்டுக்களையும், விளையாட்டுப் பற்றிய சிந்தனைகளையும் பரந்தளவில் நடவு செய்தன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் இந்தக்கல்லூரிக்கான மைதான உருவாக்கம் பற்றிய விவாதங்களில் சுதேசிய விளையாட்டுக்களை நாம் புறந்தள்ளக்கூடாது என்ற வாதங்கள் இந்துசாதனம் பத்திரிகை வாயிலாக வாசகர்களால் முன்வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால் இந்த சுதேசிய விளையாட்டுக்களை தக்கவைத்தல், முன்னெடுத்தல், அதன் சமூக அடையாள முக்கியத்துவம்,  விளையாட்டுக்கும் குறித்த பண்பாட்டின் புவியல் – காலநிலை ஆகியவற்றுக்குமான இடையுறவு என்பன பற்றிய இந்தவிடயம் இன்னுமே பலவகையிலும் புறமொதுக்கப்பட்ட விடையமாகவே உள்ளது என்பது துரதிஸ்டவசமானது.

1948 இலங்கை துடுப்பாட்ட அணி

அவ்வகையில் பாடசாலைகளிலும், சமூக மட்டத்திலும் விளையாட்டு என்பது பெருமளவுக்கு கிரிக்கெட், உதைபந்தாட்டம்  முதலியவற்றைச் சுற்றியே அதிகம் காணப்படுகின்றன. சிற்றளவிலேயே தாச்சி முதலிய விளையாட்டுக்களுக்கான குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. பூகோளவயமாக்கத்தின் உடன்நிகழ்காலச் சந்தையில் கிரிக்கட் பெற்றுள்ள ஏற்றம் – அது வீடுகளில் தொலைக்காட்சிக்கு முன் நடத்தப்படும் ஒரு வீட்டுச் சடங்கு (domestic ritual) போலாகிவிட்ட தன்மை  அதனைப் பற்றிப் பேசுவோரை சந்தையில் பொருள் வாங்கும் – விற்கும் சாதாரண மனிதர்கள் வரை எடுத்துச் சென்றுள்ளது. விளையாட்டுக்கள் இன்று பணமும் – அரசியலும் புழங்கும் பெருங்களங்களாகியுள்ளன. வெவ்வேறு மட்டத்தில் அவை  ஏனையவற்றை கீழ் நிலைப்படுத்தியுள்ளன. விளையாட்டுக்கள் இன்று பல்தேசியக் கம்பனிகளது சந்தைப் பண்டங்களுள் தலையாய ஒன்றாக உள்ளது.

இந்தப் பின்னணியில் ஒரு பிராந்தியத்திலுருவாகும் விளையாட்டுக்கள் என்பது அந்தந்ந விளையாட்டுக்கள் உருவாகும் பண்பாடுகளின் புவியியல், காலநிலை, தொழில்கள், பால்நிலை உள்ளிட்ட சமூக அமைப்பு முறைகள். வரலாற்று அனுபவங்கள் – அசைவியக்கங்கள் சம்மந்தப்பட்டவொன்று. அந்த வகையில் அவை அந்தந்த சமூகங்களின் பண்பாட்டு அடையாளமாகும். அவற்றைப் பேணுவது என்பது அதனை மேற்படி சமூகத் தனியடையாளத்தைப் பெணும் முயற்சிகளில் ஒன்றாக அமையும். 

கிளிதட்டு

இவ்வாறு சுதேசிய விளையாட்டுக்களைப் பற்றிப் பேசுதலென்பது காலனிய வரலாற்றுடன் வந்து சேர்ந்த கிரிக்கெட், ரெனிஸ் போன்ற விளையாட்டுக்களைப் புறமொதுக்கல் வேண்டும் அல்லது கைவிட வேண்டுமென்பதாக அமையாது (வரலாற்று ரீதியாக பேசினால் அவை பல நூற்றாண்டு கால வாழ்தல் ஊடாக உள்ளுர் வயப்பட்டுமுள்ளன என்பதையும் இவ்விடத்தில் நாம் மறந்துவிடக்கூடாது அத்துடன் துடுப்பாட்டத்தின் இலங்கை மைய வரலாற்றில் தமிழர்களது வரலாற்று வகிபாகம் முக்கியமானது – குறிப்பாக ‘கொழும்புத் தமிழர்கள்’ – சரவணமுத்து மைதான உருவாக்கம் என்பன இவ்வகையில் கவனத்தைக் கோருவன பார்க்க : ‘Landmarks and Threads in the Cricketing Universe of Sri Lanka’ by Michael Roberts ). பதிலாக அவற்றின் மேலாதிக்கத்தின் கீழ் ஒருவகையான தாழ்வுச் சிக்கல்களுக்குள் அகப்பட்டு இல்லாதொழிந்த, ஒழிகின்ற பண்டைய சுதேசிய விளையாட்டுக்களை மீட்டெடுத்தலது முக்கியத்துவம் பற்றியே இங்கே வலியுறுத்த விரும்புகிறேன்.. அதனை ஏற்கனவே எங்களால் தகவமைக்கப்பட்டிருக்கின்ற மேற்கத்தைய மூலத்தையுடைய விளையாட்டுக்களுடன் சமாந்தரமாகப் பயிலலாம் என்பதை ஒட்டியதே இவ்வாதம். விளையாட்டுக்களது தெரிவு, நிலைநிறுத்தல என்பன நா:களது மேலாதிக்கம், பண்பாட்டு அரசியல் சம்மந்தப்பட்டனவே ஆயினும், பல சமூகங்கள் தம்மிடையே காணப்பட்ட சுதேசிய மரபுகளை சர்வதேசரீதியாகக் முன்னெடுக்க முயன்றவாறேயுள்ளன.

அதாவது ஒரு பண்பாட்டுக் குழுமம் பற்றிப் பேசும்போது அவர்களிடம் காணப்படுகின்ற தனித்துவமான சிறப்புப் பண்புகள் – வெளிப்பாடுகள் மீதே உலகம் கவனங் கொள்கிறது. எல்லோரிடமும் காணப்படுபவற்றைத்தான் குறித்த பண்பாடும் கொண்டிருக்கிறது எனும் போது அதன் மீதான பொது நாட்டம் அதிகம் இருப்பதில்லை. அவ்வாறு நோக்கும் போது எமக்கேயான தனியான அல்லது பிராந்திய தனிச்சிறப்புடைய விடயங்களை முன்னிறுத்தலூடாக – மறு கண்டுபிடிப்பதனூடாக உலகத்தின் கவனத்தை எம்மை நோக்கி திரும்ப வைக்க முடியும்.  அது சமூக பண்பாட்டு ரீதியாகவும் – பொருளாதார ரீதியாகவும் ஒரு சமூகம் மேம்பாடடைய உதவும்.

மாட்டுவண்டி சவாரி போட்டி

இந்த ‘மறுகண்டுபிடிப்பு’ அல்லது ‘முன்னிறுத்தற் செயற்பாடுகள்’ பல மட்டங்களில் அமைய வேண்டும். முதலாவதாக எமக்குள் இருக்கும் காலனிய வயப்பட்ட அல்லது மேற்குநிலைப்பட்ட மனநிலையால் எங்கள் மரபுகள் குறித்து இருக்கின்ற தாழ்வு மனப்பான்மையை பகுத்தறிவு பூர்வமான சிந்தனையூடாகக் கடக்க வேண்டும். இதன் தொடராக சுதேசிய விளையாட்டுக்களை எமது விளையாட்டுத் தொடர்பான அனைத்துக் களங்களிலும் அணைக்க வேண்டும். அந்தவகையில் எமது பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் பாரம்பரிய அல்லது சுதேசிய விளையாட்டுக்களை இணைத்தலை உறுதிப்படுத்த வேண்டும். அது வெறுமனே குறியீட்டு ரீதியாக அமையாது வலுமிக்க பிணைப்பாக்க வேண்டும்.

பல்லாங்குழி

இன்னும் மேலே சென்று பிரதேச மற்றும் மாகாண,தேசிய மட்டங்களில் தனியான சுதேசிய விளையாட்டு விழாக்களை நடாத்தலாம். இது சுதேசிய விளையாட்டுக்கள் மீதான கவனக் குவிப்பை அதிகரிக்கவும், அவற்றை மேம்பாடடையச் செய்யவும் உதவ முடியும். இதனை குறிப்பிட்ட பிராந்தியத்தின் தனிச் சிறப்படையாளம் பற்றி வெளியாட்கள்  அறிய உதவும்; இதனை உல்லாசப்பயணக் குறிப்புக்காட்டிகளிற் பதிதல் மூலமாக விளையாட்டுத் துறைசார் ஆர்வலர்களை உள்ளீர்க்க முடியும்.

அதேநேரம் மேற்படி சுதேசிய விளையாட்டுக்களை விளையாட்டுத் தொடர்பான பாடவிதானங்களுக்குள் கொண்டுவருதல் மூலமாக அது பற்றிய விழிப்புணர்வை – குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு தெரிவிக்க – பயில்விக்க உதவும். அதிலும் கண்டிப்பாக விளையாட்டுக் கல்விசார்ந்த துறையினர் சுதேசிய விளையாட்டுக்கள் தொடர்பில் துறைசார் முறையியல்களைப் (methodological) பயன்படுத்திச் செய்யும் ஆய்வுகள் ஊடாகச் அவற்றின் சிறப்புப் பண்புகளை – அதன் உடலியக்கம் சார்ந்த விடயங்களை – அவை எவ்வாறு வேறுபட்ட உடல்சார் பிணிகளுக்கு  எதிரிடையாகப் பயன்படுத்தக் கூடியன என்ற வழிகளைக் கண்டடையலாம். அல்லது வேறுவிதமாக் கூறினால் உள உடல் விருத்திக்கும், பிணிகளைக் கையாளுதற்கான பௌதீகச் செயற்பாடாகவும் அதனை முன்மொழியலாம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு, மருத்துவபீடத்தின் சமூக மருத்துவத்துறை என்பன இவைபற்றிய ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்குச் செல்லலாம்

இவற்றின் நீட்சியாக அவற்றை வரலாற்று ரீதியாகவும், அதன் விதிமுறைகள் வழியாகவும் அறியக் கூடிய நூல்களைக் கொண்டுவருதல் மூலமாக பரந்த அறிதலுக்கு கொண்டுவர முடியும். சுதேசிய விளையாட்டுக் காப்பகம் – காட்சியகம் ஒன்றை உருவாக்கல் மூலம் சுதேசிய விளையாட்டுக்களை மேம்பாடடையச் செய்யலாம். பாரம்பரியமான விளையாட்டுத்துறை ஆர்வமுடைய பிரதேசங்கள்,ர்கள் அவை பற்றிச் சிந்திப்பதன் மூலம் தமக்கும் – பொதுச் சமூக வரலாற்றுக்கும் பங்களிக்க முடியும்.

சிக்காக்கோ விளையாட்டு அரும்பொருளகம்

இதேவேளை இந்தச் செயற்பாடுகளுடாக உல்லாசப் பயணத்துறையை வளர்க்க முடியும். உல்லாசப் பயணத்துறையில் இதனை ‘விளையாட்டு உல்லாசப் பயணம்’ (sports tourism)  என்பர்.  வேறுபட்ட உள்ளுர் விளையாட்டுக்களை  உல்லாசப் பயணிகளுக்கான காட்சி மோதல்களாக்கலாம் (Show matches) உதாரணமாக மாட்டு வண்டிச் சவாரி இவ்வாறான மரபுரிமை விளையாட்டுக்கான காட்சிக்கு சிறந்த உதாரணமாகும். அல்லது அவர்கள் விளையாடுதலுக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். இப்படியான முயற்சிகள் எமது பழைய விளையாட்டுக்களை மீட்டெடுக்கவும், பொருளாதார ரீதியாகவுத் மேம்பாடடையச் செய்யும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7618 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (8)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)