Arts
7 நிமிட வாசிப்பு

உள்ளூரை இரண்டும் கெட்டதாக்கல்: அபிவிருத்தித் திட்டங்களும் மரபுரிமையும்

May 12, 2022 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

‘ஒரே நாடு ஒரே தேசம்’ என்ற சொற்றொடரைக் கேட்டால் எம்மிற் பலர் வெகுண்டு எழுந்துவிடுகிறோம். அதனை ஒரு ஜனநாயக விரோத அறைகூவலாகவும் பன்மைத் தன்மைகள் பண்பாட்டு வேறுபாடுகளை மறுதலிக்கும், அதேநேரம் அதனை ஒற்றைப்படையாக்கஞ் செய்யும் மேலாதிக்கச் செயற்பாடாகவும் கருதி பெருங்குரல் எடுத்து அதனை எதிர்க்கும் குரல்களை பதிவிடுகிறோம். “அந்நியன்  கரங்கள் எம் குரல்வளை நெரிப்பினும், பாடுவோம் உயர்த்திய குரல்களில்”  என்று எண்பதுகளில் தமிழ்ப் பகுதிகளில் ஒலித்தடங்கிய இளைஞர் குரல்கள் இக்கட்டுரையை எழுதும் நள்ளிரவில் எனக்குத் துயரத்தைத் தருகிறது. உண்மையில் இவ்விரண்டு பற்றியும் பேசக் கூடத் தகுதியல்லாத ஒரு நிகழ்கால நாடகத்தில் நாங்களும் எங்கள் அரசியற் தலைவர்கள் எனும் பெருங் கூட்டமும் பாத்திரங்களாய் உள்ளோம்.

மேற்குறிப்பிட்ட விடயத்தை மேலும் விபரிப்பதானால், அரசியல் மேலாதிக்க சக்திகள் சிறுபான்மைச் சமூகங்களது சிறப்படையாளங்களை விளிம்புநிலைப்படுத்தவும் அழித்தொழிக்க முயலுவதன் ஒரு கோட்பாட்டு நிலைப்படுத்தப்பட்ட கோசமாக ‘ஒரே நாடு: ஒரே தேசம்’ என்ற சொற்றொடரைப் முன்வைத்தாலும் அது எதிர்க்கப்படவேண்டிய சனநாய விரோதச் செயற்பாடே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் இந்த அழித்தொழிப்பில் முக்கிய பங்கை விடாது ஆற்றிக் கொண்டிருப்பவர்கள் யார்? யாருடைய பங்களிப்பு இந்த ஒற்றைப்படையாக்கஞ் செய்யும் தந்திரோபாயத்திற்குப் பெரியளவிற் பங்களிப்புச் செய்கிறது? இந்தக் கேள்விக்கான பதில் மிகப் பெரிய கவலையையும், தோல்வி மனப்பான்மையையும், எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

யாழ்ப்பாண கடைத்தொகுதிகள்

நடைமுறையில் அந்த கோசம் அடைய விரும்பும் இலக்கான பிறரது தனித்துவங்கள் வேறுபட்ட தன்மைகளை உள்ளடக்கிய நாட்டின் பன்மைத் தன்மையை அழிப்பது  என்ற செயற்பாட்டுக்கு முனைப்பான பங்களிப்பை வழங்குகிறது. அது அறியாமை – பொறுப்பீனம் – அடையாள அரசியலை ஒரு உள்ளீடற்ற வெற்றுவடிவமாக்கல், வாக்குச் சீட்டு அரசியற் சூதாட்டத்தில் எல்லாவற்றையும் பகடைக்காயாக நகர்த்துதல் என்ற வகையில் இந்த நிலவரங்கள் இலகுவாகத் தம்முடைய இலக்கைச் சென்றடைய வைப்பதிற் பங்காற்றுவது சிறுபான்மைச் சமூகங்களே என்பது அவர்களது உரிமைக்காக அரசியலில் எவ்வளவு பெரிய முரணாக உள்ளது.

ஆயுத மோதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின் சிறுபான்மைச் சமூகங்கள் செறிவாக வாழும் அவர்களது ‘மரபு வழியான தாயகப் பகுதியில்’ அநேக அபிவிருத்தித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றின் பெரும்பான்மையானவை திட்டமிடுவதோடு முடிவுக்கு வந்தன. அவற்றில் சில பகுதியளவில் அல்லது முழுமையாக நிறைவேறின. வேறு சில திட்டங்கள் நடைபெறப்போவதாகப் பல வருடங்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இத்தகைய அபிவிருத்தித் திட்டங்களுக்கு நேரடியாக அரசு, பல்தேச அரசுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் முழு அளவில் அல்லது பகுதி அளவிற் பங்களிப்புச் செய்தன. எப்போதுமே ஒரு சமூகத்திற்கான நிதியுதவிகள் என்பன அப்பாவித்தனமாக குறிப்பிட்ட சமூகம் மீது கொண்ட  இதயசுத்தியுடன் கூடிய உறவினால் விளைவனவல்ல. அவற்றுக்கு உள்நோக்கங்களும் எதிர்பார்ப்புக்களும் இலக்கு நிர்ணயிப்புக்களும் உண்டு. அவை விகிதாசார ரீதியாக வேறுபடலாம் அல்லது சிலவற்றில் இனிப்புத் தடவப்பட்ட கசப்பு  மாத்திரைகள் போல அவை மறைத்து வைக்கப்படலாம். ஆனால், எந்த எதிப்பார்ப்புமற்ற பெருங்கருணைப் பேராறுகள் அல்ல அத்தகைய ‘உதவிகள்’. அவ்வாறாயின் எல்லாவிதமான ‘நிதியுதவிகளையும்’ மறுதலிக்கும் கறாரான ‘தூய’ நிலைப்பாட்டை எடுக்கும் ஒரு தரப்பாகத் தமிழர் தரப்பு இருக்கவேண்டுமா? அல்லது பிச்சைப்பாத்திரம் ஏந்தியபடி வீழும் எல்லாச் சில்லறைகளையும் பொறுக்கியெடுத்தபடி முன்னேற வேண்டுமா? இந்த இரண்டு நிலைப்பாடுகளும் சரியானவை அல்ல. ஆகவே, இங்குதான் தெளிவான எமது தேவைகள், நிலைப்பாடுகள் சம்பந்தப்பட்ட தெளிவான புரிதல் எமக்கு அவசியம். அத்துடன்  எம்மை சிறுசிறுகச் அழிக்கும் அல்லது எமது சமூக அடையாளத்தை மாற்றும் தந்திரோபாயங்களுக்குள் ஆட்படாது,  நிதியைக் கொடுப்போனுக்கும் நிதியை வாங்குவோனுக்குமிடையில் மதிப்பான அவரவருக்கான தேவைகள், நலன்களை சமன்செய்யும் உடன்பாட்டோடு கூடியதாக நிதியுதவிகளை கையிறுக்கத்தக்க பரந்த தீர்க்கதரிசனத்துடன் கூடிய பொறிமுறையொன்று அவசியமாகிறது.

பெரும்பாலும் நாம் ஒரு  இரண்டக நிலைக்குப் பலியான வகையிற்தான் இந்த அபிவிருத்திச் செயற்பாட்டுள் அகப்படுகிறோம். ஒரு புறம் இனத்துவம் – இனத்துவ அடையாளம் எனப் பேசிக்கொண்டே எமது தனிப்பட்ட (அரசியற் கட்சி அல்லது தலைவர்களது) குறுகிய அரசியல் இலாபம் அல்லது அதிகாரிகளது பதவி மோகம் மற்றும் விடயரீதியான தெளிவான பார்வை இன்மை காரணமாக நாமே எமக்குப் பாதகமான  அபிவிருத்திச் செயற்பாட்டின் முகவராகி அதனை இலகுவாக நடைமுறைப்படுத்திக் கொடுப்பவராக இருப்போம்.

மேற்படி, எண்ணங்கள் யாழ்ப்பாண அபிவிருத்தி தொடர்பான சில ஆவணங்களை பார்த்தபோது ஏற்பட்டது. ‘வடக்கின் வசந்தத்தின்’ போது சில சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியதை செவிமடுக்க மறுத்து மிகப் பெரியளவில் ‘தெரு விஸ்தரிப்பு’ என்ற பெயரில் நடைபெற்ற தமிழ் மக்களது  மரபுரிமை இட அழிப்புக்கள் உட்பட – இன்றுவரை அதன் கட்சித் தலைவர்கள், தமிழ் அதிகாரிகளது கதிரை மோகம் மற்றும் பயனற்ற பல்கலைக்கழகக் கல்வியால் கொடுக்கப்பட்ட உள்ளூரை நோக்கிக் குவியாத – வேற்றாருக்கே சேவகம் புரியக் கூடிய பெரும்பாலும் மேற்கத்தையவருக்கான நவீன கூலிகளை உற்பத்தி செய்யும் பட்டங்கள் பட்டமேற்படிப்புக்கள் ஊடாகப் பெறப்பட்ட  அறிவியற் குருட்டுத்தனம் என்பனவற்றால் தொடரும் சிறுபான்மைச் சமூகங்களது இருப்பு, அடையாளம் என்பவற்றை பெருகவும் – சிறுகவும் அழிக்கும் செயற்பாடுகள் இந்த அபிவிருத்தித் திட்டங்களுள் தொடர்வதனை அவை எடுத்துக்காட்டுகின்றன.

இவற்றில் முக்கியமானது மரபுரிமையை புறந்தள்ளிய அல்லது சரியாக நிலைநிறுத்தாத அபிவிருத்தித் திட்டவரைபுகள் முன்னர் ஒருதரம் உலக வங்கியானது,  அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளது அபிவிருத்திட்டங்கள் பற்றிச் சுட்டிக் காட்டியதுபோல ‘அவை அபிவிருத்தியின் பெயரால் தமது மரபுரிமையை தாமே அழிப்பதன் ஊடாக தமது சிறப்படையாளங்களை அழிக்கும் வேலையை தாமே செய்கின்றன’ என்பது இலங்கைத் தீவின் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் பொருத்தப்பாடுடையது. அந்தக் கூற்றை விகிதாசார ரீதியான வேறுபாடுகளோடு நிரூபிப்பது போலவே எமது அபிவிருத்தி ஆவணங்கள் உள்ளன.

இது இரண்டு வகையில் இடம்பெறுகின்றன. அவற்றில் மரபுரிமை இடங்கள் மற்றும் கட்டுமானங்களைப் பாதுகாக்கும்  அல்லது அவற்றை உள்ளீர்த்த அபிவிருத்திச் செயற்பாடுகள் காணப்படாமை. இரண்டாவது, மரபுரிமை ரீதியான விடயங்கள் ஊடாகக் கண்டுபிடிக்கப்படாத நிலவுருவாக்கம், கட்டுமான முறைகள் – பாணிகள், தாவரங்கள் மற்றும் நந்தவன அமைப்புக்கள், கடைகள் – கட்டுமானத் தொகுதிகள் உட்பட்ட பொதுக்கட்டடங்கள், நீர் மையங்கள், வாகனத்தரிப்பிடங்கள், தெரு அமைப்பு முறைகள் என்பனவற்றை விடுத்து ஒரு பொருத்தமற்ற மேற்கத்தேய நகர ஆக்கமுறையை இறக்குமதி செய்தலாகவே அவையுள்ளன. அல்லது மேற்கத்தேய கண்ணால் கீழைத்தேயத்தை பார்க்கும் வழிப்பட்ட உள்ளூரை உற்பத்தி செய்தலாகவே மிக மிகப் பெரும்பாலும் அவையுள்ளன . இன்னும் பண்பாட்டுத் தனித்துவமற்ற – தோல்வியடைந்த ஒரு நகரத்திட்டமிடல் முறையாகக் கொள்ளப்படும் சிங்கப்பூர் முறை பற்றிப் பேசும் அறிவாளிகள் பலர் இன்னும் எம் மத்தியில் உள்ளனர் என்பது அதிசயமானது அல்ல.

அபிவிருத்தியின் மரபுரிமை சார்ந்த விடய விழிப்பின்மை என்பது சிறுபான்மையினர் பேசும் தேசியத்தின் குறைநிலையை தெளிவாகச் சுட்டும் அதேநேரம் மிகக் குறைந்தளவில் மிஞ்சியிருக்கும் சிறுபான்மையினரது வரலாற்றுப் பண்பாட்டுச் சுவடுகளை அழித்துக் கொடுக்கும் செயற்பாடுகளை எமது புலமையாளர்களும் – அதிகாரிகளும் அவர் அவருக்காக ஒதுக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து செய்யப்போகிறார்கள் என்பதையும் இந்த யாழ்ப்பாண அபிவிருத்தி ஆவணங்கள் யாவும் விகிதாசார வேறுபாட்டோடு கட்டியம் கூறுகின்றன. அவை  கூடவே உள்ளுர் பொருளாதார எழுச்சியையும், தொழில் விருத்தியையும் கூடவே ஒழித்து சிறுபான்மையினரை நிரந்தர வெண்பட்டிக் கூலிகளாக்கவுள்ளன.

இவ்விதமாக நாமே நமக்கான சிறப்படையாளங்கள் – அதன் மூலமாகவுள்ள மரபுரிமை என்பவற்றை அழித்து சமூக பண்பாட்டு வேறுபாட்டினை இல்லாது ஒழிக்கும் கைங்கரியத்தை நேரடியாகவும் மறைமுகமான முகவர்களாகவும் நின்று செய்துகொண்டு ‘ஒரே நாடு : ஒரே தேசம் என்பதை எதிபார்ப்பது என்பது நாடகமா? அல்லது அறியாமையா? அல்லது ஏனைய எவரையும் காது கொடுத்துக் கேட்கமாட்டோம் என்ற எமது அதிகார, அகங்கார மமதையா?. ஆனால் இறுதியாகப் பாதிக்கப்படப்போவது முழுச் சமூகமும் அவர்களது வருங்காலமுமே.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

2405 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (10)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)