Arts
12 நிமிட வாசிப்பு

எரிக்கப்பட்ட நூலகங்களும் எரிபடமுடியா நூலகக் கனவுகளும் : நூலக நிறுவனம்

April 10, 2024 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

polish ash

1

1981 இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது குடாநாட்டின் தென்மேற்குக் கரையோரமாக அமைந்திருக்கும் அராலியில் இருந்தேன். அது என்னுடைய தாயாருடைய ஊர். நூலகம் எரிந்தபோது கடலில் வீழ்ந்த தீச்சுவாலை காரணமாக அராலிக்கடல் தீப்பற்றி எரிவதாக சிறுவனான நான் நினைத்துக்கொண்டேன். அது என் முதற் பீதிகளில் ஒன்றாய் அமைந்தது. அதற்குப் பின்னால் அடுக்கடுக்காய் பல விடயங்கள் நடந்தேறின. நெருப்பு மூண்டு எரியத் தொடங்கியது. சேரன் தனது ‘இரண்டாவது சூரியோதம்’ கவிதைத் தொகுதியில், “முகில்களின் மீது நெருப்பு தன் சேதியை எழுதியாயிற்று” என இந்த நிகழ்சியை இலக்கியச் சாட்சியம் செய்தார். ஆயிரமாயிரமாய் இளைஞர்கள் ஆயுதப் போராட்டம் நோக்கித் திரும்பக் காரணமாய் அமைந்த முதன்மைச் சம்பவங்களில் இதுவும் ஒன்றாய் அமைந்தது. கடல் எரியாது நூல்களும், நகரமும் எரிந்துபோன அந்த இரவுக்குப் பின்னர் கடல் எரிந்த நாட்களும், வானம் தீப்பீடித்த நாட்களும் உருவாகின. நகரமும் நூல்களும், பின்னரும் பல தடவை எரிந்ததைக் காணவேண்டி விதிக்கப்பட்ட ஒரு துர்ப்பாக்கியமுடைய தலைமுறையிலிருந்து நான் வந்திருந்தேன். 

nadarajan

1990 களில் இன்னொரு பெரும் நூலழிவு யாரும் அறியாமல் செம்மணிவீதியில் நிகழ்ந்து முடிந்தது. அது நூல்களாற் கட்டப்பட்டது என நான் பல தடவை நினைத்த, பல்லாயிரம் நூல்கள் நிறைந்த மயிலங்கூடலூர் பி. நடராஜனின் வீடு இராணுவத்தால் அழிக்கப்பட்டபோது நடந்தேறியது. அதற்குப் பின்னால் அவரது வீடாயிருந்த மண்மேட்டிலிருந்து கிழிந்து எஞ்சியிருந்த புத்தகத்தின் பக்கங்களை அவர் சேகரித்து குறிப்புப் புத்தகத்தில் ஒட்டிக்கொண்டிருந்ததை காண நேர்ந்தமை மட்டுமின்றி, அவருக்கு நேர்ந்த நினைவுப் பிறழ்வையும் அதனைத் தொடர்ந்த அவரது நடைப் பிண வாழ்வையும் காணவேண்டிய துர்பாக்கியமுடைய மாணவனாயும் நானிருந்தேன். 2009 இல் வன்னியில் குரும்பசிட்டி கனகரத்தினத்தினதும் கலைஞானியினதும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் உள்ளிட்ட பல சேகரங்கள் அழிந்தபோது முகில்களை எரித்த நெருப்பே முடிவடையாத செய்தியானது. அது திரும்பத் திரும்ப ஒரே சேதியை மறுபடி மறுபடி எழுதிற்று. இலங்கையின் இனத்துவ அரசியல் பின்புலத்தில் இவையாவும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வடிவங்களாக இனங்காணப்படுகின்றன.

kalainjaani

இத்தகைய பகைப்புலத்தில் தான் எரிக்க முடியாத நூலகக் கனவுகள் ஈழத்தமிழர்கள் மத்தியில் உருவானது. எரிந்த நூலகத்தைக் கண்டவொரு இளைய தலைமுறை எரிக்கப்பட முடியாத ஒரு நூலகத்தை நோக்கி கனவு காணத் தொடங்கியது. அந்தக் கனவு நூலக நிறுவனம் எனும் ஒரு வடிவமாகியது. புதிய தொழில்நுட்பச் சாத்தியங்கள் எரிக்க முடியாத நூலகக் கனவை நனவாக்க முயன்றன. பூச்சிய வெளியில் நூல்களின் பெரும்பரப்பு எண்மிய அலுமாரிகளில் உட்காரத் தொடங்கியது. என்னைப் பொறுத்தவரை நூலகத்தின் வருகை என்பது ஒரு மாற்று நினைவுச் சின்ன உருவாக்கத்தையும், நினைவுகூரும் செயற்பாட்டையும் உள்ளடக்கிய ஒரு எதிர்ப்பு நிலையுமாகும் (Memorial, memorization and resistance).

அவ்வகையில் நூலக நிறுவனம் இலாப நோக்கற்ற ஒரு அறக்கட்டளையாகும்.

‘இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச் சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சி’ என தன் செயற்பாட்டு அடிப்படையை நூலக நிறுவனம் கூறுகிறது (மேலதிக விபரங்களுக்கு : https://noolaham.foundation/wiki/index.php/Main_Page).

2

நவீனத்துவத்தின் உருவாக்கத்தில் அச்சு முதலாளித்துவத்தின் பங்கு என்பது மிகப் பிரமாண்டமானது. 19 ஆம் நூற்றாண்டு தமிழ் பண்பாட்டு வெளி என்பது அச்சுடல்களால் நிரப்பப்பட்டது. அது இலட்சக்கணக்கான நூல்களை மூலைமுடுக்கெல்லாம் பல்வேறு வடிவங்களில் பெருக்கிற்று. அச்சும் அச்சுக்கூடங்களும் அச்சகர்களும் நவீனத் தமிழில் மிகப்பெரிய கருத்து முகவர்களாக மாறினர். நூல்கள், கருத்து மோதல்களின் அச்சிடப்பட்ட களங்களாயின. மதங்கள் மோதின, சாதிகள் மோதின, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நூல்கள் மேலெழுந்தன. குரலற்றவர்களின் குரலாக அச்சுடல்கள் உருவாகின. கருத்துச் சுதந்திரத்தின், ஜனநாயகத்தின் காவிகளாக அவை உலாவரத் தொடங்கின. அறிவை மக்கள் மயப்படுத்தும் பெரும்பணியை அச்சுடல்கள் செய்தன.

kanagaratnam

வேறுபட்ட சிந்தனைப் பள்ளிகள், வேறுபட்ட நிலவுருக்கள், மனித உணர்வுகளின் பலவகைக் களங்கள், அவற்றின் புதிய வடிவங்கள் என அச்சுடல்கள் தமிழை நவீனத்தை நோக்கித் திறந்துவிட்டன. தமிழின் முதல் தினசரிகள், வாராந்தப் பத்திரிகைகள், சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளில் உள்ளவர்களின் பிரதிநிதித்துவம் என அவை விரிந்தன. அச்சுடல்கள் தேச எல்லைகளைக் கடந்து பிரயாணம் செய்தன. எல்லைகளை பலபோது அழித்தன. பினாங்கு முருகனுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து பதிகம் எழுந்தது. தூத்துக்குடியிலிருந்து யாழ்ப்பாணத்து அந்தோனியாருக்கு அந்தாதி வந்தது. அலோபதி வைத்திய நூல்களை மருத்துவர் கிறீன் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழுக்கு முதலில் கொண்டு வந்தார். அவை ஒரு மொழிபெயர் உலகத்தைத் திறந்தன.

அச்சு முதலாளித்துவத்தின் இன்னொரு பரிமாணமாய் ஓலைச்சுவடிகளிலிருந்த நூல்கள் அச்சுவாகனம் ஏறின. ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை, சி.வை. தாமோதரம்பிள்ளையூடாக உ.வே. சாமிநாதையர் என விரிந்து பரந்த ஒரு தலைமுறை இலகுவில் அழியக்கூடிய, பிரதி செய்யக் கடினமான ஓலைச் சுவடிப் பிரதிகளை அச்சு வாகனமேற்றி பல்பிரதியாக்கம் செய்தது. அத்துடன் அவற்றை தமிழ் பயிலும் பல களங்களுக்கும் எடுத்துச் சென்றது. நூல்களால் ஒரு பெரும் பண்பாட்டுப் பரப்பு உருவாகிற்று. நூல்கள், வாங்கப்படும், கையளிக்கப்படும், வீடு தோறும் சேகரிக்கப்படும் அறிவுடல்களாயின. மேட்டுக்குடி வீடுகளில் படிப்பறைகள் உருவாகின.

வாசிகசாலைகளும் வாசகர்களும் பெருகினார்கள். யாழ்ப்பாணத்து அரசர்கள் ‘சரஸ்வதி மஹால்’ என்ற பெயரில் நல்லூரில் ஒரு நூலகத்தை வைத்திருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. அப்படியொரு நூலகத்தை எமக்கு உறுதிப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தாலும் கூட உ.வே சுவாமிநாதையரும் சி.வை தாமோதரம்பிள்ளையும் பல பண்டைய கால நூல்களை தேடிய காலத்தில் தமிழகத்தில் கிடைக்கப்பெறாத பல ஓலைச்சுவடிகளை யாழ்ப்பாணத்தில் கண்டெடுத்தார்கள். இது ஒரு பெரும் நூல்சேகரிப்பு இந்தப் பிராந்தியத்தில் இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்துகிறது. பழம்பெரும் ஆலயங்கள் கூட குறைந்தபட்சம் புராணம் முதலான சமயம் சம்மந்தப்பட்ட ஓலைச்சுவடிகளது மையங்களாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். இன்றும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பழமையான கந்தபுராண ஏடு பொலிகண்டி முருகன் கோயிலுக்குரியது. இவற்றுக்கெல்லாம் பின்னால் சட்டத்தரணி நாகலிங்கம் யாழ்ப்பாணத்தின் முதல் நூலகமாக கருதப்பட்ட ‘விக்டோரியா றீடிங் ஹோலை’ உருவாக்கினார். அவரது இந்திய சுதந்திரப் போராட்ட வங்காள அனுபவங்கள் அதற்குப் பின்னால் இருந்தன. பின்னர் அது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூலகமாகிற்று. இதன் பின்னர் யாழ்ப்பாண பொதுசன நூலகத்துக்கான முதலாவது அடி செல்லப்பாவினால் சிறுப்பிட்டியில் உருவாகியது. அது பின்னர் யாழ்பாணம் பெரிய கடைக்கு வந்தது. மெதுவாக விரிந்து பொதுமக்களிடமும் பணம் சேர்த்து பொதுசன நூலகம் நோக்கி அது நகரத் தொடங்கியது. அது எரிக்கப்பட்டபோது தனிநபர் சேகரிப்புகளாக இருந்த ஏறத்தாழ ஒரு இலட்சம் நூலுடல்கள் ஓர் இரவில் எரிந்து சாம்பலாகின. இந்தச் சாம்பல், பல தலைமுறையின் கோபமாக இன்னமும் பண்ணைக் கடலில் மேல் படிந்திருக்கிறது.

jaffna library

நூல்கள் என்பன ஒரு பௌதீக பொருண்மை மட்டுமல்ல அவை ஒரு சமூகத்தின் அந்தராத்மாவை, சிந்தனைகளை, நெருக்குவாரங்களை, கருத்தாக்கங்களை காவுகின்ற ஒரு அறிவு வெளியுமாகும். அவை சமூகத்தின் மேன்மையினதும் கீழ்மையினதும் சாட்சியங்களாகும் என்பதுடன் குறிப்பிட்ட சமூகத்தின்  மரபுரிமையாகவும் அறிவு வரலாற்றின் தடயங்களாகவும் திகழ்கின்றன. அவை எழுதுவதால் மட்டுமன்றி வாசிப்பதனாலும் ஒரு சமூகத்தை கட்டியமைப்பன. அறிவைப் பரவலாக்கம் செய்தல் என்ற செயற்பாட்டில் நூல்களும் நூலகங்களும் முக்கியமான பங்கை ஆற்றியுள்ளன. ஆரம்ப நவீன கால மேற்கத்தேய நாடுகளிலிலுள்ள மேட்டுக்குடி வீடுகளில் வாசிப்பு அறை எனும் நூலக அறை கட்டடக்கலையின் ஒரு பகுதியாகவும் அவர்களது அறிவியல் நாட்டத்தின் வெளிப்பாடாகவும் காணப்பட்டது. அதுவே இன்று மேற்கத்தேய நாடுகளில் உருவாகிய மாபெரும் நூலகங்களினதும் சுவடிக் கூடங்களினதும் மூலங்களாய் அமைந்தன.

இத்தகைய நூல்களாலான உலகளாவிய பண்பாட்டு நிலவுருக்களில் ஒன்றாக ஈழத் தமிழர்களது வாழிடங்களும் காணப்படுகின்றன. திண்ணைப் பள்ளிகளும், கோயில்களது புராணபடன மரபுகளும், காலனிய காலப் பள்ளிக்கூடங்களும் நூல் மாந்தும் ஒரு பெரிய சமூகத்தைக் கட்டியமைத்தன. இன்று வரைக்கும் ஒரு சிறு சமூகத்தில் வருகின்ற பல பத்திரிகைகள் இவற்றின் தொடர்ச்சிதான். அவற்றுக்கொரு பிராந்தியத் தனித்துவம் இருந்தது. இந்த நூல்கள் தமிழில் ஒரு பொதுப் பரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அதேவேளை ஈழத் தமிழின் தனி அடையாளத்தையும் வேறுபட்ட சிந்தனைப் பள்ளிகளையும் சாட்சியம் செய்தன. தமிழுக்குள் ஈழத்தமிழ் தனியொரு முகமாக மேற்கிளம்பும் படிமுறையில் 19 ஆம் நூற்றாண்டு, 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால நூல்கள் பெரும்பங்கு வகித்தன. இன்றும் ஜனரஞ்சக நுகர்வுக் கலாசாரத்தில் நிதானமின்றி தவறிச்செல்லும் ஈழத்தின் இன்றைய தலைமுறைக்கு முன் ஒரு பண்டைய வலிமையின் சாட்சியமாக இந்த நூல்கள் நிற்கின்றன. குன்றாத வலிமையும் மங்காத சிந்தனை ஓட்டத்தையும், இன்றும் காலத்தால் நொடிந்து உக்கிச் செல்லும் தம் உடல்களில் காவியபடி வீடுகளின் பழம்பெரும் அலுமாரிகளில் அவை கிடக்கின்றன. அல்லது பழைய கடதாசிகளை விற்கும் இடங்களில் தேடுவாரற்று உட்காந்திருக்கின்றன. மருத்துவமும் சோதிடமும் இலக்கியமுமாகவிருந்த ஓலைச்சுவடிகள் வெறும் காவோலைகளாகி விரைந்து மறைகின்றன.

இந்த இடத்தில் தான் நூலக நிறுவனம் முக்கியமான ஒன்றாக மாறுகிறது. அதுவெறும் எரிபடமுடியாத நூலகமாக மாத்திரமன்றி எங்கிருந்தும் வாசகன் நுழையக்கூடிய பூச்சியப் பரப்பில் உட்காந்திருக்கின்ற ஒன்றாக மாறியிருக்கிறது. இறந்து செல்லும் பண்டைய நூல்களுக்கு புது இரத்தம் பாய்ச்சி அவற்றுக்குப் புத்துடலைத் தருகின்றன. வாசகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், புலமையாளர்கள் என அதன் பயனாளர்கள் விரிகிறார்கள். நூலக நிறுவனம் அவ் வகையில் ஒரு மக்கள் இயக்கமாகவும் ஒரு வரலாற்றுத் தடய சுவடிக்கூடமாயும் ஈழத் தமிழின் அச்சு மரபுரிமையின் பாதுகாப்புக் களமாகவும் செயற்படத் தொடங்குகிறது. விரைந்து மறையும் அச்சுப் பண்பாட்டை, சுவடியெழுத்துக்களை எண்மியத் தொழில்நுட்பம் ஊடாக அது எண்மிய மரபுரிமையாக்கம் செய்கிறது. அது ஒரு வகையான கூட்டு எதிர்ப்பு (collective resistance); ஒரு வகையான கூட்டுச் சமூகத் திரள்வு. அவ்வகையிற் பொதுச் சமூகப் பங்களிப்பிற்காக அது உருவாக்கியிருக்கும் நிறுவன மாதிரி (institutional model) முக்கியமானது.

noolaham

ஒருவகையில் ஈழத்தமிழர் சார்ந்து நிறுவனங்களை கட்டமைக்க விரும்புவர்களுக்கான அல்லது அதனைப் பற்றிச் சிந்திப்பதற்கான சந்தர்ப்பத்தைத் தருகின்ற மாதிரி என்ற வகையிலும் அது முக்கிமானது. ஏற்கனவே விவசாயச் சங்கங்கள், நுகர்வாளர் சங்கங்களுக்கூடாக உருவாகிய கூட்டுறவுச்சங்க மாதிரியின் தொடர்ச்சியாக, அதிலிருந்து மாறுபட்ட தன்மைகளை உடைய ஒரு மாதிரியாக உருவாகியுள்ள இந்த அமைப்பு முறை முக்கியமானது எனக் கருதுகிறேன். குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் – அரசற்ற தரப்புக்கள் செல்லக் கூடிய வழிவரைபடம் பற்றிச் சிந்திக்கவும் நூலக நிறுவன முறைமை உதவக்கூடியதென நினைக்கிறேன். குறிப்பாக பொதுநிதி, தொண்டு நிதி உருவாக்கம், பங்குபற்றும் பங்களிப்பு முதலானவற்றுடன் கூடிய செயற்பாடுகள் பற்றிச் சிந்திக்க இவை முக்கியமானவை.

மிகவும் சுட்டிப்பாக புலம்பெயர் தமிழர்கள், உள்ளூர்வாசிகள் என பொதுத் தமிழ்ப் பரப்பை இணைக்கக்கூடிய நூலக நிறுவனத்தின் வலைப் பின்னல் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவமுடையது. குறிப்பாக அனைத்து விளிம்புநிலை தமிழ்பேசும் சமூகங்களுக்குமான பிரநிதித்துவம் என்கிற நூலகத்தின் பூச்சியப் புவியியல் (cyber geography) மிக முக்கியான ஒரு கூட்டு அரசியற் பிரதிநிதித்துவத்திற்கான ஒரு கருத்தாடல் மாதிரியாகும்.

பொது மக்கள் நிதிப் பங்களிக்க : https://www.noolahamfoundation.org/wiki/index.php?title=Contribute


ஒலிவடிவில் கேட்க

7982 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)