Arts
10 நிமிட வாசிப்பு

பாடசாலைகளின் கட்டட மரபுரிமைகள்: பழைய மாணவர் சங்கங்களும் அபிவிருத்தி நிதிகளும்

May 24, 2022 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

பெரும்பாலும் ஆசிரியர்களின் வீட்டுத் திண்ணைகள், முற்றம், பெருமரச்சாரல்கள் சார்ந்து மிகச் சுருக்கமான ஒரு இடத்தினுள் சுழன்றுகொண்டிருந்த ஈழத்துக் பள்ளிக் கல்விப்பாரம்பரியத்தை அதன் அனைத்து அர்த்தங்களிலும் வெடித்துப் பரவச் செய்ததில் காலனியத்திற்கு மிக முக்கியமான இடமுண்டு. கிறிஸ்தவ மிஷனரிகளும் – அதற்கு எதிரிடையாக எழுந்த சைவக்கல்வி இயக்கங்களும், ஊர்கள் தோறும் ஒன்றுக்கு மேற்பட்ட கல்விச்சாலைகளைத் திறந்துவிட்டன. அவை தமது பாடத்திட்டத்தில் மட்டுமின்றி தமது பாடசாலைக் கட்டடங்களிலும் தத்தமது மதப் பண்பாட்டுக் கருத்துநிலை அடையாளத்தை பிரதிபலிக்க முயன்றன. அவற்றின் கட்டட உடல்களைப் பொறுத்தவரை கிறிஸ்தவப் பாடசாலைகள் அதிகபட்சம் மேற்கத்தைய கட்டவியற் பண்புகளை கொண்டிருக்க – சைவப்பாடசாலைகள் மேற்கத்தைய கட்டப்பாணிகளுடன் காலனிய நிலபரங்களின் கீழ் அவர்களால் மறு கண்டுபிடிப்புச்செய்யப்பட்ட (reinvented) தமது பண்பாட்டுக் கோலங்களையும் கூட்டிணைத்த அல்லது உள்ளூர்வயமாக்கப்பட்ட புதிய கலப்பொன்றையும் காட்டி நின்றன.

யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி

யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி இத்தகைய புதிய கலப்பொட்டின் மிக முக்கிய உதாரணங்களில் ஒன்று. நாற்சார வீட்டுக்கட்டங்களின் நடுமுற்றங்களை அது தன் பாடசாலையின் உட்பகுதி முழுவதும் இடைவிடாது திறந்து – அதன் பன்மடங்குகளை உற்பத்தி செய்வதன் மூலமாக அவற்றைத் தன் தளத்திட்டத்தின் பிரதான பகுதியாக்கியனூடாக உருவாகிய காற்று மற்றும் ஒளிகள் – நிழல்களின் பிரவாகம் மற்றும் பிரித்தானிய காலனியம் உற்பத்தி செய்த கட்டட வகைமைகளுடனும், கூறுகளுடனும் அதனை இணைத்தலால் உருவாகிய உருவ மற்றும் உருவவியல் அம்சங்களுடன் அதுவொரு புதிய கலப்பொட்டொன்றை பிரதிபலித்தது.
இவ்வகைப்பட்ட அளவிற் சிறியதும் – பெரியதுமான அதேசமயம் ஒரு காலகட்டத்தின் வரலாற்றுச் சின்னங்களாக அமைகின்றவையும், கட்டடவியற் சிறப்புடைமையுடையதுமான நூற்றுக் கணக்கான பாடசாலை மரபுரிமைக் கட்டடங்கள் (School heritage buildings)போருக்குள்ளும் – இயற்கை அனர்த்தங்களுக்கும், போதுமான பராமரிப்பின்மைக்குள்ளும் சிக்குண்டு அழிந்துள்ளன. எனினும் அழிந்தவை போகத் தப்பிப் பிழைத்து இன்றும் எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு தொகுதிக் கட்டடங்கள் எங்களைச் சுற்றிக் காணப்படுகின்றன என்பதும் முக்கியமான ஒரு விடயமாகும். புகையிலை வர்த்தகம், கடல் வாணிபம், மலேசியா முதலான நாடுகளிலிருந்து காலனிய அரச தொழில்களூடாக ஈட்டப்பட்ட தனியாள் உபரிகள் முதல் பிடியரிசி தெண்டல் முதலான சமூகக் பங்குகொள்ளல்களால் உருவாக்கப்பட்ட மேற்படி நூற்றாண்டுகளைக் கடந்த இந்தக் பாடசாலைக் கட்டுமானங்கள் எமது சமூகப் பண்பாட்டு வரலாற்றின் வாழும் ஆவணங்களும் சமூகப் வரலாற்றின் சாட்சியங்களுமாகும்.

ஆனால் நெருக்கீடு மிகுந்த போர்க்காலங்களிற் கூட தப்பிப்பிழைத்த இத்தகைய கட்டடங்கள்தான் இன்று ஆயுதமோதல் நிறுத்தப்பட்ட காலத்தில் மிகப் பெரியளவில் உயிராபத்தைச் சந்திக்கின்றன என்பது பண்பாட்டு வரலாற்று ரீதியாக எவ்வளவு கொடுமை மிகுந்த விடயம். அதிலும் கொடுமையானது வரலாற்றின் பரப்பிலிருந்து அவற்றைத் துடைத்தெறியும் கைங்கரியத்தை நாமே செய்து கொண்டிருக்கின்றோம் என்பதுதான். இத்தகைய செயற்பாடுகள் எமது வரலாற்று வறுமையை மட்டுமின்றி, விடுதலை – தேசியம் பற்றிய எமது உரையாடல்கள் மீதும் ஐயம் கொள்ள வைக்கிறது.

‘ஒரு மூன்றுமாடிக் கட்டடம் போட பாடசாலைக்கு நிதியிருக்கிறது’ அல்லது ‘கட்டம் கட்ட இடத்தைக் காட்டினால் கட்டடம் கட்ட NGO ஒன்று காசு தருமாம்’ முதலான சமகால நிலவரங்களுக்குள் முதற் பலிக்கு தயாராக்கப்படுபவை இந்த வரலாற்று பண்பாட்டுச் சிறப்புடைய மரபுரிமைக் கட்டுமானங்கள்தான். பழைமையானவை அல்லது ‘டச்சுக் காலத்தவை’ என்ற பெயரில் அவை அவற்றின் சமூக பண்பாட்டு வரலாற்று முக்கியத்துவம் யாவற்றையும் கருத்திற் கொள்ளாது உடைத்தெறியப்படுகின்றன. ஆனால் அதற்குப் பதிலாகக் கிடைப்பதோ எந்த விதமான தனிச் சிறப்படையாளமுமற்ற வெறும் மூச்சடைக்க வைக்கும் ஒரு கட்டடக் கூடுதான் என்பது இன்னும் பரிதாபகரமானது.

இன்றைய பாடசாலைக் கட்டடங்களின் பொது மாதிரி

உலகின் சிந்தனை பண்பாட்டெழுச்சிகளுடைய சமூகங்களிலெல்லாம் முதலாவதாக பாதுகாப்பதும் கொண்டாடுவதும் இவ்வகைப்பட்ட பண்டைய கட்டுமானங்களைத்தான். அவர்களது பெருமையினதும் வரலாற்றுத் தனித்துவத்தினதும் முதற் சின்னம் அதுதானென அவர்களுக்கு நன்கு தெரியும். உலகின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள் எல்லாம் தமது கட்டுமான மரபுரிமைகளைக் இவ்வாறு கொண்டாடிக் கொண்டிருக்கையில் இங்கோ அவற்றைத்தான் நாம் முதற்பலி கொடுக்கிறோம்.

நாம் உண்மையில் என்ன நினைக்கிறோம்? எமக்கு இதனுடைய முதன்மை தெரியாதா? எங்களிற் பலருக்கு நிறைய வெளியுலக அனுபவம் உண்டு. இன்றைய தகவல் யுகம் மேலும் உலகத்தை வீடுவரை பாய்ந்து வரச் செய்திருக்கிறது. ஆகவே எமக்குத் தெரியாது என்பது ஏற்கக் கூடிய ஒரு காரணமல்ல. அப்படியானால் நாம் ஏன் ஒருவகை குருட்டுத் தனத்தை எமது மனப்பாங்காக (attitude) ஏற்றுக் கொண்டிருக்கிறோம்?

இவ்விதமான முயற்சிகளுக்கு செல்கையில் வருகின்ற அடுத்த பிரச்சினை நிதி வழங்குனர் தாம் ஒரு கட்டுமான வடிவத்தை நிதி பெறுனரிடம் திணித்தல் அல்லது ஏற்கனவே கல்வித் திணைக்களம் உருவாக்கியுள்ள ஒரு பொது மாதிரியை பின்பற்ற வேண்டும் எனும் முன்நிபந்தனைகள் ஊடாக உருவாகும் நெருக்கீடுகள். இது தொடர்பில் நிதி வழங்குனர் – மற்றும் நிதி பெறுனரது உரையாடலில் ஒருவகை பரஸ்பர ஏற்றுக்கொள்ளல்களை வலியுறுத்த முயலுதல் வேண்டும். எமது தேவைகளுக்கும் அவர்களது தருகைகளின் நிபந்தனைகளுக்குமிடையில் ஒரு சந்திப்பு நிகழவில்லையாயின் அதற்காக வாதிடுதற்கான மனப்பாங்கை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். அவ் வளர்த்தல்களூடாகவே மரபுரிமைக் கட்டடங்களைக் காக்கவும் – அவற்றின் தொடர்ச்சிகளை உருவாக்குதற்குமான சாத்தியங்களை எம்மால் நிலைநிறுத்த முடியும்;.

இதே நிதி வழங்கும் செயற்பாட்டில் பேரளவு தாக்கஞ் செலுத்தும் ஒரு பெரிய தரப்பாக இன்று பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களும் அவற்றின் கிளைகளும் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக புலம்பெயர் நாடுகளின் பழைய மாணவர் சங்கங்கள் அவர்கள் சார்ந்த நாடுகளின் பணங்களின் வலிமை வழியாக மேலும் வலிமையுடைய ஒரு தரப்பாகியுள்ளனர். மேலும் அவர்கள் அறிந்தும் – அறியாமலும் பாடசாலைகளின் மரபுரிமைகள் காக்கப்படுதற்குப் பதிலாக அவை அழிந்து அல்லது அழிக்கப்பட்டு போவதற்கு காரணமும் ஆகிவிடுகின்றனர். அவர்கள் தரும் நிதிகள் காரணமாகியுள்ளன என்பது துரதிர்ஷ்டவசமான யதார்த்தமாக உள்ளது. யாழ்ப்பாணத்தின் பிரபலமான பாடசாலைகள் பலவற்றிலும் இந்த துரதிர்ஷ்டங்கள் கடந்த காலங்களில் நடந்தேறியுள்ளன. பழைய மாணவர்களது சேவை நோக்கு கண்டிப்பாகப் பாராட்டப்பட வேண்டியது ஆயினும் அவர்களது அறியாமைகள் அல்லது அசட்டையீனத்துள் எமது பாடசாலைகளின் பண்டைய கட்டுமான மரபுரிமைகள் பலவும் பலியாகி வருகின்றன. யாழ்ப்பாணத்தின் பிரபலமான பாடசாலையொன்றில் பிராந்திய முக்கியத்துவமுடைய நூறு வயதைக் கடந்த கட்டத்தின் ஒரு பாகம் இடிக்கப்பட்டு அவற்றோடு சம்மந்தமற்ற கட்டடமொன்றும் – வாயிலொன்றும் பழைய மாணவர் சங்க நிதிகளூடாக கட்டப்பட்டுள்ளன. இன்றுவரை எந்த ஒரு பாடசாலையும் – பழைய மாணவர் சங்கங்களும் தமது மூத்த கட்டுமான மரபுரிமைகக் கட்டுமானத்தை புதுக்கவும் – காக்கவும் பிரக்ஞை பூர்வமான ஈடுபாட்டைக் காட்டவில்லை என்பது சமூக வரலாற்று நோக்கி மிகவும் கவலைக்குரியது.

மட்டகளப்பு புனித மிக்கேல் கல்லூரி

சந்தேகமின்றி பல்வேறு காரணங்களால் பாடசாலைகளுக்கு புதிய கட்டுமானங்கள் தேவைப்படுகின்றன. அந்தத் தேவைகள் புறந்தள்ள முடியாதவையாகவும் இருக்கலாம். அது எவ்வெளவுக்கெவ்வளவு முக்கியமோ அதேயளவு முக்கியத்துவமுடையது பாடசாலையின் பண்டைய கட்டுமான மரபுரிமையை பாதுகாத்தலுமாகும் என்பதை நாம் வலியுறுத்தியே ஆகவேண்டும். அதேநேரம் எந்தவொரு காரணத்தை முன்வைத்தும் அக் கட்டுமானங்களை அழிக்க முடியாது என்பதும் புதிய தேவைகளுக்கு மாற்றுமாதிரிகளை அதற்கு பதிலாகக் கண்டடைய வேண்டும் என்பதும் மீறப்பட முடியாத ஒரு பண்பாட்டுப் பொது விதியாக்கப்படவேண்டும். அதாவது ஒரு பாடசாலையில் மரபுரிமைக் கட்டுமானம் ஒன்று இருக்கும்பட்சத்தில் அது காக்கப்படவேண்டியது என்பதை கொள்கையளவில் கல்வியுடன் சம்மந்தப்பட்ட அனைத்துத் தரப்புக்களும் ஏற்றுக்கொண்டு அதனைக் கண்காணிப்பதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த கல்வியுடன் சம்மந்தப்பட்ட அதிகாரமுடைய தரப்புக்கள் யாவும் முன்வரவேண்டும். அதாவது எந்தவொரு பாடசாலையும் தன்னிச்சையாக தனது பண்டைய கட்டுமானங்களை இடித்தழித்தல் – மாற்றுதல் தொடர்பில் தொழிற்படாதவாறான கண்காணிப்பு முறைமையொன்று அவசரமாக உருவாக்கப்படவேண்டும். அல்லது நிதி வழங்குனர்கள் தமது நிதியுடன் மரபுரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற முன் நிபந்தனையுடன் அந்நிதிகளை வழங்கலாம். மேலும், மேற்படி கட்டங்களை இலங்கையின் பிரகடனப்படுத்தப்பட்ட மரபுரிமைப் பட்டியலுக்குள் எடுத்துச் செல்வதனூடாக பாடசாலை மரபுரிமைக் கட்டுமானங்களை சட்ட ரீதியான கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரலாம் என்பதோடு அதனை உத்தியோகபூர்வமாக வரலாற்று நிலைப்படுத்தலாம். இவை பாடசாலையின் அந்தஸ்த்தையும் – வரலாற்று மதிப்பையும் மேலும் வலுப்படுத்தும்.

இன்றைய சமூக அசைவியக்கப் பின்புலத்தில் தோன்றியுள்ள படிப்பு – பாடசாலை முதலியன தொடர்பாகத் தோன்றியுள்ள புதிய நிலைப்பாடுகள் பல பாடசாலைகளை அளவுக்கதிகமான மாணவர் தொகையால் வீங்க வைத்திருக்கிறது – அவை திரட்டும் தனிப்பட்ட நிதிகள், அரச நிதிகள் உலக வங்கி உட்பட NGOக்களின் சிறப்பு நிதிகள் எனப் பல நிதி மூலங்களூடாகப் பாடசாலைகள் பலவற்றினதும் நிதி முதல்கள் அதிகரித்துள்ளன (ஆனால் அவை பங்கிடப்படும் முறை உட்பட்ட விடயங்கள் பற்றி இக் கட்டுரை எதனையும் பேச முனையவில்லை). இவ்விதமான நிதிகள் ‘அதனை – இதனை செய்யாவிட்டால் பணம் திரும்பி விடும்’, ‘அவங்கள் தாறாங்கள் ஏன் விடுவான்’ என்ற முதலான எண்ணங்களுடன் பெறப்படும் இந்நிதிகளூடாகக் கட்டடம் ஒன்றைக் கட்டலாம் எனும் சந்தர்ப்பம் கிட்டும்போது எந்தக்காரணம் கொண்டும் எம்மிடமுள்ள சமூக பண்பாட்டுத் தகைமையுடைய மரபுரிமைக் கட்டடத்தில் கை வைப்பதில்லை என்பது எமது தீர்க்கமான முதலும் கடைசியுமான முடிவாக இருக்கவேண்டும். ஆனால், நாமோ முதலில் அதிற்தான் கைவைக்கிறோம்.

புனித சம்பத்தரிசிரியார் கல்லூரி, யாழ்ப்பாணம்


அது மட்டுமின்றி மேற்படி ஒரு புதிய கட்டுமானமொன்று உருவாக்கப்படுகையில் அது ஏற்கனவே எங்களிடம் இருக்கின்ற மூத்த மரபுரிமைக் கட்டடத்தின் தொடர்ச்சியாக, அதன் பண்புகளை பகிர்ந்தொரு பொதுமைப்பாட்டைக் கொண்டு இருக்கவேண்டும் என்பதும் அதில் முக்கியமானது. இல்லாவிட்டால் அது ஒரு பிச்சைக்காரனின் வாந்தி போல ஒன்றுடன் ஒன்று சம்மந்தமற்று ஒரு சுய அடையாளம் அற்றவொன்றாகிவிடும். இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி எடுத்த கரிசனம் நல்லவொரு முன்னுதாரணமாகும். அவர்கள் தம் மூத்த கட்டுமானப் பண்புகளை தமது புதிய கட்டங்களிலும் நீட்டிக்க வைத்தல் காரணமாக கல்லூரிக்கு ஒரு கட்டுமான அடையாளத்தை (architectural identity) கொடுக்க முயற்சிக்கின்றார்கள்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4433 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (10)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)