Arts
12 நிமிட வாசிப்பு

புலம்பெயர் தமிழர்களும், மரபுரிமையும் – II

January 23, 2023 | Ezhuna

மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது. வெறுமனே மரபுரிமைப் பொருட்களை அடையாளப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அகழ்வாய்வுகளின் தன்மைகள், மரபுரிமை பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதிய நோக்குகள், மரபுரிமைச் சின்னங்களை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் , அவற்றின் தொடர் பேணுகையும் அதற்கான வழிமுறைகளும், சமயங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தக் கட்டுரைத்தொடர் மரபுரிமைசார் விடயங்களை வெளிப்படுத்தும். கள ஆய்வினையே பிரதான ஆய்வுமூலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைத்தொடரில், நூல்களில் இடம்பெற்றுள்ள மரபுரிமைசார் விடயங்கள், செவிவழிக்கதைகள், மக்களுடனான உரையாடல்கள், நம்பிக்கைகள், ஐதீகங்கள், ஊடகச் செய்திகள் மற்றும் கட்டுரைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு, விஞ்ஞானபூர்வமான நோக்குநிலையில் இந்தக் கட்டுரைத்தொடர் அமைகின்றது.

புலம்பெயர் மரபுரிமை என்பது தமது தாயகங்களை விட்டு, பிற தேசங்களில் வாழ்பவர்கள் காவிச் சென்றதும், நினைவு கூர்வதும், புலம்பெயர்ந்த நிலங்களில் உருவாக்கிக் கொண்டதும், பிற பண்பாடுகளிலிருந்து உள்வாங்கிக் கொண்டதுமான ஒரு கலப்பொட்டான மரபுரிமையை (hybrid heritage) எடுத்துக்காட்டுவது. இதிற் பெரும்பகுதியாக அவர்களோடு கூடவே புலம்பெயர்ந்த அவர்களது முன்னோர்கள் வழிவந்த பரம்பியப் பயில்வுகள் அவற்றின் முக்கியமான பகுதியாக இருக்கும். இன்னொருவகையில் அவர்கள் காவிச்சென்று அவர்களது தலைமுறைகள்தோறும் கடத்தப்பட்டு வந்த மரபுரிமை புலம்பெயர் மரபுரிமையின் முதுகெலும்பாக அமையும். யதார்த்தத்தில் புலம்பெயர் பண்பாடு என்பது ஒற்றைப் பிரயோகமாக அல்லாது பன்மையாக பல புலம்பெயர் சமூகங்களினதும் என்ற வகையில் ‘புலம்பெயர் மரபுரிமைகள்’ (Diaspora heritages) என்று பன்மைநிலையில் அழைக்கப்பட வேண்டும்.

ஆனால், பூகோளமயமாக்கம் – பல்பண்பாட்டுக்கலப்புறுநிலை (cross culture), பல்தேசியக் கம்பனிகள் தோற்றுவிக்க விரும்பும் நுகர்வுமைய ஒற்றைப்பண்பாட்டாக்கம், எம்மவர்களிடம் காணப்படுகின்ற காலனிய காலத்திலிருந்து இன்றுவரையான சுய பண்பாடு தொடர்பிலான தாழ்வுச் சிக்கல், தென்னிந்திய ஜனரஞ்சகப் பண்பாட்டுள் அள்ளுண்டு செல்லும் ‘பரிதாப நிலை – இதனை ‘சன் ரீவி’ மயமாக்கம் எனப் பெயரிட விரும்புகிறேன். இது ஈழப் பறையை பின்தள்ளி தமிழகப் தப்பு வாத்தியம் அல்லது பறையை அறைதல் தொடக்கம் சினிமா நாயக – அரசியல் மற்றும் ‘காவி’ பிம்பங்களின் வழிபாடு வரை நீண்டுள்ளது (இதற்குள் இருக்கும் நுட்பமான அரசியல், அடையாளம், பொருளாதாரச் சந்தை வியூகங்கள் தொடர்பில் பேச மக்கள் மையப் புலமையாளர்கள் ஈழத்தமிழர்களிடம் இல்லை என்பது அடுத்த மிகப் பெரிய சோகம்). அதேவேளை, குடியேறிய நாடுகளது பண்பாட்டு மேலாதிக்கம் தொடக்கம் புலம்பெயர்ந்தவர்களது பண்பாடுகள் உட்பட சிறுபான்மைப் பண்பாடுகளை ஒடுக்குதல் வரையுள்ள சாதகமற்ற நிலைமைக்குள்ளும் ஈழத்து மரபுரிமையை புலம்பெயர் தேசங்களில் அர்த்தபூர்வமாகப் பேணுதல் என்பது மிகப் பெரிய சவாலாகும்.

குறிப்பாக மரபுரிமை என்பது தேசியத்தின் அடையாளமாக மிகப்பெரியளவிற் கருதப்படுகிற பூகோளச் சூழலில் பாரம்பரியமான இனம் – மதம் முதலான மேலாதிக்கச் சிந்தனை முதலிடப்பட்டுள்ள நாடுகளில் புலம்பெயர் மரபுரிமைகளை அனுமதித்தலானது முதன்மைத் தேசியத்தில் வெடிப்புக்களை உள்ளாக்கத்தக்கது; மரபுரீதியான சிந்தனைப்படி தேசத்துக்குள் ஒரு இடைமாறு தேசியத்தினை (transnational) பேணுதலாகும். இது மெதுவாக நாடுகள் யாவற்றையும் பலதேசங்களது கூட்டமைப்பாக மாற்றுகிறது எனவும் வாதிடலாம். அதனாற்றான் லென் ஆங் (unsettling the national: Heritage and Diaspora by Len Ang) தேசங்களுக்கும், மரபுரிமைகளுக்கும் இடையில் சிக்கலான ஒரு உறவுமுறை காணப்படுவதாகக் கருதுகிறார். அதேசமயம் பல்தேசியக் கம்பனியின் நுகர்வுப்பண்பாட்டு மையத்திலிருந்து நோக்கும்போது பல்வகைமைப் பண்பாடு என்பது அவர்களுக்கு வாய்ப்பானவொரு சந்தை முதலீடாகக் காணப்படுகிறது. இந்தப் பல் பண்பாடுகளைச் சந்தைக்கு முதலீடு செய்தல் என்ற பல்தேசியக் கம்பனிகளது முயற்சி புலம்பெயர் பண்பாடுகளை உலகரீதியாக நிலைநிறுத்த வாய்ப்புடையவொரு சூழலாகும். ஆனால் அங்குதான் அதற்கான வீழ்த்து பொறியும் காணப்படுகிறது. அதாவது மேற்படி சந்தை மைய வாய்ப்பைக் கெட்டிக்காரத்தனமான அர்த்தபூர்வமான மரபுரிமைப் பயில்வாக மாற்றத்தக்க புலமையுடைய செயற்பாட்டாளர்கள் அதனைக் கையாளாதுவிடின், பல்தேசியக் கம்பனிகள் புலம்பெயர் மரபுரிமைகளை தனது தேவைக்குரிய முறையில் பொதிசெய்து – அதனை எமது பெயரிலேயே சந்தைக்குக் கொண்டு வந்துவிடும். அதற்கான புதிய முகவர்களையும் உற்பத்தி செய்துவிடும். இது மிக மிக ஆபத்தான ஒரு பண்பாட்டு நிலைவரமாகும்.

புலம்பெயர்ந்த மண்ணில் தமிழர் மரபுரிமையைப் பாதுகாத்தல்

Tamil-Heritage-Month-poster

புலம்பெயர் தமிழர் மரபுரிமையைக் காப்பதற்கான புதிய வழிகளைக் கண்டறிந்து கட்டமைக்க விரிவான திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தேவை, இது ஈழத் தமிழர் பாரம்பரியத்தை அதன் தனித்துவத்துடன் பரந்த தமிழ்ப் பண்பாட்டுப் பின்னணியின் ஒரு பகுதியாக நிறுவுவதற்கான முயற்சியாகவும் அமைதல் வேண்டும். பின்வரும் பரிந்துரைகள் மேலும் இது தொடர்பில் சிந்திப்பதற்கும், செயற்படுவதற்குமான திட்டங்களை முன்மொழிகின்றன – மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான விரிவானதொரு கட்டமைப்பினை நோக்கிச் செல்வதற்கான சுருக்கமான ஒரு முன்வைப்பாக இதனை எடுத்துக் கொண்டு, மேலும் விரிவாகவும் – ஆழமாகவும் சிந்திக்க வேண்டும்.

  • பரந்த பொருளில் மரபுரிமையைப் பாதுகாத்தல், அதற்கான வேலைத் திட்டத்தை உருவாக்குதலுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளை நடத்துதல் முதற் தேவையாகும். இன்று எம்மிடையே காணப்படும் ‘மரபுத் திங்கள்’ (Heritage என்ற சொல்லைக் கூட எந்தவிதமான சிந்தனையுமற்று புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சமூகங்கள் பயன்படுத்துகின்றன. ஏனெனில் ‘மரபு’ என்பது ‘tradition’ என்ற பொருளையுடையது, ஆனால் மரபுரிமை என்பதன் பொருள், ‘மரபு’ என்ற பொருளையும் விட ஆழமானது. அவ்வகையில் ஈழத்தமிழின் தாயகப் பரப்பிற் பயன்படுத்தப்படும் மரபுரிமை என்ற பதமே (அதாவது மரபுரீதியாக வருகின்ற உரித்துடமை [rights] என்ற பதமே அதிகம் பொருத்தப்பாடானது. ஏனெனில் அதனுள் இருக்கும் உரித்தைக் கோருதல் [Claiming the rights] அல்லது நிலைநிறுத்தல்தான் [declaration of their rights] அதன் முக்கிய பண்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது) முக்கியமானதாயினும், எமது செயற்றிட்டம் மரபுரிமைச் செயற்பாட்டில் இன்னும் மேலோட்டமான பரப்பிலேயே உள்ளது. ஆகவே அதனை ஆழப்படுத்துவதற்கான இன்னும் வலிதான உரையாடல்கள் தேவைப்படுகின்றன. துறைசார் கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்புக்கள் இவற்றில் ஈடுபடவேண்டும். உரையாடல்கள் எமது அரசியற் கட்சிகள் செய்வதுபோல ‘நான் பெரியவன் – நீ சிறியவன்’ அல்லது ‘நான் தேசபக்தன் – நீ துரோகி’ என்றோ, ‘உனக்கென்ன தெரியும்?’ என்றோ அல்லது சொந்த நலன்களுக்காக செத்த பாம்படிக்கும் ‘முற்போக்கான’ செயற்பாடாகவோ’ அல்லது திடீர் சேகுவேராக்களது ‘புரட்சிகரத்’ தற்காலிகக் குரல்களாகவோ அமையாது, நிதானமான, இதயசுத்தியுடைய ஜனநாயகமும், ஆக்கபூர்வமான செயற்பாட்டிற்கான, பொதுச் சமூக எதிர்கால நலன் நோக்கியதாகவும் அமைய வேண்டும்.
தாபனக்கலை-தா.சனாதனன்-Museum-of-Anthropology-Vancouver-Canada-2009.
  • இவ்வகையில் இதனை வெவ்வேறு வயதுக் குழுக்களிடம், அவரவருக்கான அனுபவம் செயற்பாட்டுத் திறன், செயற்படுதற்கான வாய்ப்புக்கள் என்பவற்றின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக புதியதலைமுறையினரது மொழி, கல்விப்புலச் சூழல் அதன் தர்க்கங்களினடியான அறிவுபூர்வமான அடிப்படை கொண்டதாக எமது மரபுரிமை பற்றிய கருத்தாடல்கள் முன்னிறுத்தப்பட வேண்டும். ஒரு தளத்தில் கோட்பாட்டுநிலையிலும், மறுபுறத்தில் செயற்பாட்டுக்கான பயிற்சிநிலையிலும் அது மேற்கொள்ளப்பட வேண்டும். சிறுவர்களும், இளைஞர்களும் இதன் முக்கியமான இலக்குக் குழாமாக இருப்பது எப்போதும் ஒரு சமூக வளர்ச்சிக்கு முக்கியமானது; அடுத்த தலைமுறையிடம் சரியான வகையிற் கைமாற்றாத எதுவும் விரைவிற் காணாமற் போய்விடும் என்பதை நாம் மறக்கக் கூடாது. இதனை ஈழத்தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்தோர்கள், முன்னோடிகள், புலமையாளர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். ‘நாம் மட்டுமே’ எல்லாவிடத்திலும் எப்போதும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்க வேண்டும்’ என நினைப்பதோ அல்லது ‘யாவும் நம்மோடு தொடங்கி நம்மோடே முடிந்துவிட வேண்டும்’ என்று நினைப்பதோ ஆரோக்கியமற்றது. ஈழத்தமிழ் புலம்பெயர் சமூகங்களிடையே காணப்படும் தலைமுறை இடைவெளி ஆரோக்கிமற்றது. இதனை அனைத்துத் துறைகளிலும் ஏறத்தாழ அவதானிக்க முடிகிறது. இதனைக் கடக்காதவரை இன்று போடப்படுகின்ற எந்த விதையும் இலேசில் முளைவிடாது – வளராது. இளைய தலைமுறையைச் சென்றடையத் தடையாக இருக்கும் விடயங்களைக் கண்டடைந்து ஈழத்தமிழர்கள் செயற்பாடாவிடில் எதிர்பார்க்கப்படும் அனைத்தும் அதிக தூரம் செல்லாது.
சக்திதரனின்-‘காடும்-கடலும்-நாடகம்
  • ஆகவே, மேற்படி மரபுரிமைச் செயற்பாடுகளை வெறுமனே செயலாக (activities) முன்னெடுக்காமல் ஒரு செயற்பாடாக (activism) முன்னெடுக்க வேண்டும். இளந் தலைமுறையை ஒரு செயற்பாட்டு இயக்கம் நோக்கி ஜனநாயக முறையில் வழிநடத்த வேண்டும்.
  • இரண்டாவது முக்கியமான விடயம், ஒரு தனித்தீவு போல இயங்காமல், தாயகம் மற்றும் சர்வதேச மரபுரிமைச் செயற்பாட்டு அமைப்புகள் மற்றும் செயலூக்கமுடைய தரப்புக்களோடு இணை வேலைத் திட்டங்களை உருவாக்க வேண்டும். அது எமது செயற்பாடுகளைப் பலப்படுத்துவதோடு, இன்னொருவகையில் சர்வதேச நிலைப்படுத்தவும் உதவும்.
  • இதன் தொடர்ச்சியாக அவசரமான மற்றும் அவசியமான செயற்பாடாக ஆவணப்படுத்தும் முயற்சிகள் அமையும். அவ்வகையில்

வாய்மொழி மற்றும் நிகழ்த்தும் பாரம்பரியத்தை பதிவு செய்தல்: குறிப்பாக தாயகத்தில் இருந்து அவர்கள் எடுத்துச் சென்ற கதைகள் மற்றும் நினைவுகள், பல்வேறு வகையான பாடல்கள், ஆடல்கள், கூத்துக்கள் மற்றும் புலம்பெயர்ந்து வந்த கதைகள் – அடையாளச் சிக்கல்கள், ‘புலம்பெயர் சடங்குகள்’ (diasporic rituals), அடங்கலாக அவர்கள் நினைவிலிருக்கும் புலப்பெயர்வின் ஆரம்பநாட்களைப் பதிவு செய்ய வேண்டும்.

இதேநேரம் தாயகக் களத்திலிருந்தும் அவற்றைப் பதிவுசெய்ய வேண்டும்: அது, அவர்களுக்கு அல்லது எதிர்காலச் செயற்பாடுகளுக்கான விரிவான அடித்தளத்தை உருவாக்கும். அவ்வகையில் நாட்டார் பாடல்கள் முதல் சமய, விடுதலைப் பாடல்கள். தொல்சீர் இசை, மெல்லிசை முதல் ‘பொப் இசை’ வரை அல்லது மியாவின் (மாயா அருளர்) பாடல்கள் உட்பட புலம்பெயர் தேசத்தின் புதிய மொழி பெயர் தேச இசைமரபுகள் வரை நீண்டிருக்க வேண்டும்.நினைவுகளைக் காவும் பொருட்களை காத்தல்: ஒளிப்படங்கள், அன்றாடப் புழங்கு பொருட்கள்,ஆடைகள், சான்றிதழ்கள், சுவடிகள், செய்தித்தாள் துணுக்குகள் மற்றும் மரபுரிமைப் பெறுமானமுடைய அனைத்து அச்சுப் பொருட்கள் முதலியவற்றை சேகரித்து ஆவணமாக்கல் மற்றும் காட்சிப்படுத்துதல்.

சீன-மரபுரிமை-மையம்-சிங்கப்பூர்

வெவ்வேறுபட்ட மரபுரிமை காட்சிவிதானிப்பு நடைமுறைகளை பயிலுதல்: உதாரணமாக ‘ஈழத் தமிழர்களின் நினைவு அருங்காட்சியகங்கள் (memory museum)’ அல்லது ‘ஈழ மக்களின் இருண்ட அருங்காட்சியகம் (dark museum)’, என்பது போன்ற குறிப்பிட்ட கருப்பொருள்கள் மையமான அருங்காட்சியங்களை, அல்லது தற்காலிக உடனடி அருங்காட்சியகங்களை (Popup museums) அமைத்தல், பாரம்பரிய நடைகள் (heritage walks) மற்றும் மரபுரிமை வாரங்கள் அல்லது நாட்களை (heritage weeks or days) ஒழுங்குசெய்தல், கொண்டாடுதல்.

புதிய ஆக்க எடுத்துரைப்பு முறைகளை வளர்த்தல்: (promoting the new creative innovative modes of expressions) கதை சொல்லுதலின் பல முறைகள் முதல் உடல், பொருள், காட்சித்தாபனங்கள் முதலானவற்றை முன்னிறுத்தும் செயற்பாடுகள் வரை கண்டுபிடிக்கலாம். இதற்காக பொதுவாக மக்கள் கூடும் வெளிகளை பயன்படுத்தலாம்.

மரபுரிமைச் சிறப்புமிக்க ஈழத் தமிழர்களின் பழமையான பிரதிகளை மறுபதிப்பு செய்தல், மொழிபெயர்த்தல்

கலை – கைவினைச் சந்தைகளைக் கட்டமைத்தல்: ஈழத்தமிழர்களது பாரம்பரிய ஆக்க வெளிப்பாடுகளுக்கான சந்தைகளை உருவாக்குதல் (பனை ஓலைப் பொருட்கள், மரச் செதுக்குகள் முதல் கைத்தறி ஆடைகள், கைவினை பொருட்கள் இன்னோரன்னவை)

மரபுரிமை உணவகங்களை கட்டமைத்தல்: வெறுமனே பெயருக்கு ஈழத்துணவு என்று சொல்லிக்கொள்ளாமல், அதன் தனித்துவம், பிராந்திய, இனத்துவ மற்றும் பிற தேச வேறுபாடுகளோடு அதனைக் கட்டமைக்கவேண்டும். இவற்றில் உணவுத் திருவிழாக்களை ஆக்கச் சிறப்புகளோடு ஒழுங்கமைக்கலாம். அந்தந்த நாட்டின் பண்பாட்டு நிறுவனங்கள், சுற்றுலாத் துறைகளோடு இணைந்து வேலை செய்தல்.

பதிப்பகங்கள், ஆவணக்காப்பகங்கள், மரபுரிமை மன்றுகளை உருவாக்குதல்:

மரபுரிமை வானொலி, தொலைக்காட்சிச் சேவைகளை ஆரம்பித்தல் அல்லது ஏற்கனவே செயற்பட்டுக்கொண்டிருக்கும் மேற்படி ஊடகங்களில் குறிப்பிட்ட தினங்களில் மரபுரிமை பாதுகாப்பு – ஆவணமாக்கலுக்கான நிகழ்ச்சிகளை வடிவமைத்தல். அந்தந்த நாட்டு தேசிய ஊடகங்களை இதற்காகப் பண்படுத்தவும் முயற்சிக்க வேண்டும். ஏனெனில் எமக்குள் நாமே பேசுதல் சர்வதேச மயப்படுத்தலாகாது. ஆகவே எம்மவரிடம் பேசுவது போல பிற பண்பாட்டுக் குழுக்களிடம் எமது பண்பாட்டு – மரபுரிமைப் புலங்கள் சென்றடைய வேண்டும். அது ஒரு பரந்துபட்ட அரசியற் செயற்பாடும் கூட. ஏனெனில் யார் இவர்கள்?, எங்கிருந்து வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? எனும் கேள்வி இதன்தொடராக வருகையில் யார் எம்மை துரத்தினார்கள்? அழித்தார்கள்? என்ற கதையும் கூடவே பகிரப்படும்.

மரபுரிமை எண்மிய நிலையாக்கம்: ஈழத்தமிழ் மரபுரிமைகளை எண்மியப்படுத்தும் பெரும் பூச்சியப் பரப்பை உருவாக்குதல்

தமிழ் பாடசாலைகளது கல்வித்திட்டத்தில் மரபுரிமை பற்றிய விடயத்தை புகுத்தல், அரும்பொருளக விஜயத்தைக் பாடசாலைக்குள் கொண்டுவருதல், மரபுரிமைக்கான பயிற்சிப்பாசறைகளை நடாத்துதல், பாடசாலை அரும்பொருளகத்தை உருவாக்குதல்

மரபுரிமையை ஒரு கல்வியை ஒரு கற்கை ஒழுக்கமாக படிக்க இளைய தலைமுறையை ஊக்குவித்தல்.

ஆபிரிக்க-புலம்பெயர்ந்தர்-ஆவணக்காப்பகம்

இதேவேளை இதையெல்லாம் செய்வதற்கு பணமும், நேரமும், ஆளணியும் வேண்டும். ஆயினும் அடிப்படையான அறிவும், மேலான ஆர்வமும் எம்மிடையே உண்டாயின் நாம்தான் அந்த ஆள். யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்க வேண்டாம். காலத்தை நாம் கனிய வைப்போம். உங்கள் கைபேசி, கமெரா, மடிக்கணனி என்பன உங்களின் பணியின் அடிப்படைத் தூதுவர்களாக்கிக் கொள்ளலாம். சற்று அதிகபட்ச தொழில்நுட்பம் நாம் செய்வதன் விளைவை மிகவும் வலிமையுற வைக்கும். ஆனால் எதுக்கும் காத்திருக்க வேண்டாம்; இனி காத்திருக்க நேரமும் இல்லை. இந்தக் கணமே இவற்றில் உங்களால் எது முடியுமோ, எதனைச் செய்ய விரும்புகிறீர்களோ அதனைச் செய்யத் தொடங்குங்கள். உங்கள் சுற்றாடலில் தொடங்குங்கள், ஊருக்கு விடுமுறையிற் செல்லும்போது அங்கு செல்லும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொன்றிற் கவனம் செலுத்தி ஆவணமாக்கல் உட்பட்ட பணியில் ஈடுபடுங்கள். உங்கள் உழைப்பை இலகுவாக எவரும் திருடாவண்ணம் மக்கள் மயப்படுத்துங்கள். மெதுவாக ஒவ்வொரு அடியையும் தனியாகவும், கூட்டாகவும் எடுத்து வையுங்கள். இவற்றையெல்லாம் செய்வதற்கு இந்த உலகம் உங்களைத்தான் நம்பியுள்ளது என்று திடமாக நம்புங்கள். நீங்கள் மட்டுமே உங்கள் முன்னோர்கள் சிந்திய குருதியை மகிமைப்படுத்துபவர் என்று உணருங்கள். அவர்களது கண்ணீருக்கும், செந்நீருக்கும், வலிக்கும், நாடுநாடாய் சிதறிப்போனதுமான அவர்களது வாழ்க்கைக்கு நீங்கள்தான் அர்த்தம் தேடித் தரவேண்டும். இன்றே இக்கணமே அப்பணி தொடங்கட்டும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

12636 பார்வைகள்

About the Author

பாக்கியநாதன் அகிலன்

பாக்கியநாதன் அகிலன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும் (கலை வரலாறு), பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் (கலை விமர்சனம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளாகப் பணிபுரியும் அகிலன் தனது கலாநிதிப்பட்ட ஆய்வை புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுவருகின்றார்.

'பதுங்குகுழி நாட்கள்', 'சரமகவிகள்', 'அம்மை', 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்பன இவரது கவிதைத் தொகுப்புகளாகும்.

இவரின் ஏனைய நூல்களாகக் 'காலத்தின் விளிம்பு' என்ற மரபுரிமை சார்ந்த நூலும் 'குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடகங்கள் ஐந்து' ஆகியவை அமைவதுடன் 'வெங்கட்சாமிநாதன் – வாதங்களும், விவாதங்களும்' என்ற நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (8)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)