Arts
13 நிமிட வாசிப்பு

கறவை மாடுகளின் இனப்பெருக்கப் பிரச்சினைகளைக் களைதல்

April 18, 2024 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

கடந்த கட்டுரையில் கறவை மாடு வளர்ப்பின் போது தோன்றும் இனப்பெருக்கம் சார்ந்த பல பிரச்சனைகளை ஆராய்ந்திருந்தேன். இந்தக் கட்டுரையும் அதன் நீட்சியே. எனினும் தீர்வுகளை மையப்படுத்திய கட்டுரையாக அமைகிறது.

கறவை மாடுகள் சினை பிடிக்காமைக்கும் ஏனைய இனப்பெருக்கம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கும் வெப்ப அயர்ச்சி (Heat stress) மிக முக்கியமான ஒரு காரணியாகும். அண்மைக் காலங்களில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முன்பு இருந்ததை விட அதிக வெப்பநிலை நிலவுகிறது. உலக வெப்பமுறல் (Global warming) இதற்குப் பிரதான காரணமாக விளங்குகிறது. மனிதர்களைப் போல கறவை மாடுகளுக்கும் உலக வெப்பமுறலால் பல பாதிப்புகள் நிகழ்வதுண்டு. இது குறிப்பாக கருவுறுதல் தொடர்பான பல ஓமோன்களின் செயற்பாட்டைப் பாதித்து, கருச்சிதைவை – கருத்தங்காமையை ஏற்படுத்துகிறது. இதனால் மாடுகளை வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாத்தல் அவசியமாகிறது.

heat stress cattle

வெப்ப காலங்களில் மதிய நேரங்களில் கறவை மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கலாம். வெப்பப் பாதிப்புக்கு உள்ளாகாமல் தவிர்க்க, பொருத்தமான கொட்டகைகளை அமைக்கலாம். அதிக வெப்பம் நிறைந்த உலர் வலயங்களுக்குப் பொருத்தமான கால்நடைகளைத் தெரிவு செய்யலாம். மாடுகளுக்கு எப்போதும் சுத்தமான குளிர்ந்த தண்ணீர் கிடைக்க வகை செய்தல் வேண்டும் (இலங்கையில் பொதுவாக மாடுகளுக்கு நாள் முழுவதும் தண்ணீர் கிடைக்கச் செய்வது அரிதிலும் அரிது). அடிக்கடி மாடுகளைக் குளிப்பாட்டலாம். கொட்டகைகளை வெப்பம் தாக்காத வகையில் அமைக்கலாம் (விசிறிகள், குளிர்மையான கூரைகள், சுற்றுப்புறமாக மரங்களை அமைத்தல்). அத்துடன் இலங்கையின் இனப்பெருக்கக் கொள்கைக்கு (Breeding policy) அமைவாகவே மாடுகளை வளர்க்க பண்ணையாளர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். குறிப்பாக உலர் வலயப் பகுதிகளில் வறட்சியை தாங்கும் இந்திய, உள்ளூர்க் கலப்பு மாடுகளையும், குளிர்ப் பகுதிகளில் ஐரோப்பியக் கலப்பு மாடுகளையும் வளர்க்கப் பரிந்துரைக்க வேண்டும். இதன் மூலம் வெப்பம் மற்றும் ஏனைய காலநிலையால் தோன்றும் இனப்பெருக்கப் பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.

silage feed

இலங்கையின் மாடுகளுக்கு வருடம் முழுதும் தேவையான சமச்சீர் உணவு (Balanced nutrition) கிடைப்பதில்லை என்பது பாரிய சவாலாகும். நெற்பயிர் செய்யப்படும் காலங்களில், மாடுகள் மேய இடமின்றி அடைத்து வைக்கப்படுகின்றன. பயிர் செய்யப்படாத வயல்களும் நீர் குறைந்த குளங்களில் வளரும் புற்களுமே கால்நடைகளின் பிரதான உணவு மூலங்களாக அமைகின்றன. இவை தடைப்படும் காலங்களில் மாடுகள் பட்டினி கிடக்கின்றன. இதனால் பண்ணையாளர்கள் மேய்ச்சல் நிலங்களைத் தேடிச் சிரமப்படுவதைக் காண முடிகிறது. பலர் மாடு வளர்ப்பையே கை விடுகின்ற நிலை தோன்றுகிறது. முறையாக உணவு கிடைக்காத மாடுகளின் வளர்ச்சி குறைகிறது. இனப்பெருக்க ஓமோன்களின் சுரப்புக் குறைகிறது. மாடுகள் மெலிகின்றன; நலிவடைகின்றன. கருவைத் தங்கச் செய்யும் வகையான உடல் நிலைச் சுட்டியும் (Body condition score) மாடுகளுக்குக் கிடைப்பதில்லை. இதனால் கருச்சிதைவு ஏற்படுகிறது. கன்று ஈன முடியாத நிலை (Dystocia) தோன்றுகிறது. கருப்பை வெளித்தள்ளல் (Uterine prolapse), நஞ்சுக் கொடி விழாமை (Retained placenta) போன்ற நிலைகளும்  ஏற்படுகின்றன. இந்த உணவுப் பற்றாக்குறையைப் போக்க ஊட்டச்சத்து மிக்க தீவனப் புற்களை வளர்க்கலாம். பொருத்தமற்ற காலத்துக்கும் கிடைக்கத் தக்கவாறு ஊறுகாய்ப் புற்களைச் (silage) செய்யலாம். நவீன TMR உணவூட்டலைச் செய்யலாம் (பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனத்தைக் கலந்து வழங்கும் முறை). புற்கள் விரயமாகாமல் தவிர்க்க புல் வெட்டும் இயந்திரம் மூலம் புற்களை வெட்டி வழங்கலாம். அசோலா போன்ற தீவனங்களை வழங்கலாம். இவை அனைத்தும் அரச மற்றும் தனியார் அமைப்புகளால் பண்ணையாளர்களுக்கு மானிய முறையில் வழங்கப்படுகின்ற போதும் பெருமளவில் நிலைத்து நிற்கும் (sustainable) வகையில் இவை அமைவதில்லை. ஒரு சில பண்ணையாளர்களைத் தவிர ஏனையோர் இந்த முறைகளைச் சிறிது காலத்தின் பின் கை விடுகின்றனர்.

minarals pakage

இலங்கையின் கறவை மாடுகள் அதிகளவில் விற்றமின் கனியுப்புக் குறைவை (vitamins and minerals) கொண்டிருப்பவை. அடைத்து வளர்க்கும் உள்ளக முறை (intensive) தவிர்ந்த ஏனைய வளர்ப்பு முறைகளின் போது தேவையான மேற்படிச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இனப் பெருக்கத்துக்கு அத்தியாவசியமான விற்றமின் கனியுப்புச் சத்துக்களை வெளியிலிருந்த வழங்குவது அவசியமாகிறது. கனியுப்புக் கட்டிகளும், மாப் பொருட்களும், விற்றமின் திரவங்களும் சந்தையில் தாராளமாகக் கிடைப்பதால் பொருத்தமானதை கால்நடை வைத்தியரின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கலாம். மேலும், குடற்புழுத் தாக்கமும் சத்துக்களின் இழப்புக்கான முக்கிய காரணமாக அமைவதால் அவற்றை அழிக்கும் குடற்புழு நீக்க மருந்துகளை (dewormers) கால்நடை வைத்தியர் பரிந்துரையில் வழங்கலாம். மேற்படி மருந்துகள் மற்றும் சத்து மருந்துகளின் விலை அதிகமென்பதால் பல பண்ணையாளர்கள் அவற்றைத் தொடர்ச்சியாக வழங்குவதில் பின்னடிக்கின்றனர். அரசாங்கத்தால், மேற்கூறிய விற்றமின், கனியுப்புகள் போன்றவற்றுடன் குடற்புழு நீக்க பூச்சி மருந்துகளும் குறித்த அளவில் வருடாந்தம் வழங்கப்படுகின்ற போதும் அது பண்ணையாளருக்குப் போதியதாக இருப்பதில்லை. எனவே அவற்றின் அளவை அதிகரிக்க வழி செய்யலாம். இதனை அரச சார்பற்ற நிறுவனங்களும் வலுப்படுத்த வேண்டும்.

இலங்கையில் காணப்படும் மாடுகளில் கணிசமானவை தற்காலிக அல்லது நிரந்தர மலட்டுத் தன்மையானவை (infertile). தொடர்ச்சியாகக் கன்றீனாத மாடுகள் ஏனைய கன்றீனும் மாடுகளுடன் உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடத்துக்கு போட்டி போடத்தக்கன. இதனால் பண்ணைகளில் அதிக செலவு ஏற்படுவதோடு உற்பத்தியும் குறைகிறது. இந்த மாடுகளை மலடு நீக்கச் சிகிச்சை செய்ய வேண்டும் அல்லது நிரந்தரமாகப் பண்ணையிலிருந்து அகற்ற வேண்டும்.

அண்மைக் காலத்தில் பல நவீன மலடு நீக்கச் சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கால்நடை வைத்தியர்களால் நடத்தப்படும் சினைப் பருவ ஒருங்கிணைத்தல் (Oestrus synchronisation) எனும் வெளியிலிருந்து வழங்கப்படும் ஓமோன் சிகிச்சை, தற்காலிக மலட்டுத் தன்மையை பெருமளவு நீக்குகின்றன. எனினும்  ஓமோன் மருந்துகளின் விலை அதிகம் என்பது ஒரு குறைபாடே. அரசாங்க அலுவலகங்களால் சில வேளைகளில் இலவசமான ஓமோன்கள் வழங்கப்பட்டு குறித்தளவான கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்ற போதும் அது போதுமானதாக இல்லை. அத்துடன் ஓமோன் மூலமான சினைப்பருவ ஒருங்கிணைத்தலின் செலவு மற்றும் நீண்ட காலத் தன்மை காரணமாக பல பண்ணையாளர்கள் இந்தச் சிகிச்சையை மாடுகளுக்குச் செய்வதில் பின்னடிக்கின்றனர். தமது கால்நடைகள் நீண்ட நாட்கள் மலடாக இருப்பதால் ஏற்படும் உற்பத்திக் குறைவுச் செலவுடன் ஒப்பிடும் போது மேற்படி சிகிச்சையின் செலவு குறைவானது என்பதைப் பண்ணையாளர்கள் உணர வேண்டும். மேலும் அரச மற்றும் தனியார் அமைப்புகள் அடிக்கடி மலடு நீக்கச் சிகிச்சை முகாம்களை (infertility clinics) கிராமங்கள் தோறும் செய்யும் போது விழிப்புணர்வு ஏற்படுவதுடன், கால்நடைகள் உற்பத்தியுடையதாகவும் மாற்றமடையும்.

பல பண்ணையாளர்கள் தங்களது கறவைப் பசுக்கள் சினைப்பட்டிருக்கிறதா இல்லையா என்று அறியாது பண்ணைகளில் வைத்திருக்கிறார்கள். சினைப்படாத மாடுகளை  அவற்றின் நிலையறியாது வைத்திருந்து நட்டப்படுகின்றனர். கால்நடை வைத்தியர்களால் நடத்தப்படும் சினைப் பரிசோதனைச் (pregnancy diagnosis) செய்து அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராக வேண்டும். சினைப்படுத்தப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் சினை நிலையை அறிய வேண்டும்.

இலங்கையில் தனியார் செயற்கை முறைச் சினைப்படுத்துநர்களே அதிகளவில் மாடுகளைச் சினைப்படுத்தும் சிகிச்சையைச் செய்கின்றனர். அரச சினைப்படுத்துநர்களின் அளவு குறைவடைந்து போகிறது. மேலும் சினைப்படுத்துநர்களின் வெற்றி வீதமும் (success rate) குறைவாகவே உள்ளது. அலுவலக நேரம் தவிர்ந்த நேரங்களில்  மாடுகளுக்குச் சினைப்படுத்த வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படின் அவை தட்டிக் கழிக்கப்படுகின்றன. பண்ணையாளர்களும் சினைப் பருவ அறிகுறிகளைச் சரிவரக் கவனிக்காத காரணத்தால் அதனைத் தவறவிடுகின்றனர். இந்த மாதிரியான நிலையைத் தடுக்க, முறையான செயற்கை முறைச் சினைப்படுத்தல் பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். குறைந்தளவு எண்ணிக்கையிலான பண்ணைகள் வரும்படியாக செயற்கைமுறைச் சினைப்படுத்துநர்களின் எல்லைகள் வகுக்கப்பட வேண்டும். பொருத்தமான சம்பளத்துடனும் மேற்பார்வைக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டும் அவர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும். இது அரச துறையாகவோ தனியார் துறையாகவோ  கூட்டுறவாகவோ அமையலாம். ஆனால் தருணம் பிழைக்காது சினைப்படுத்தல் சிகிச்சை மேற்கொள்ள வழி செய்யப்பட வேண்டும். அதற்குரிய தகவல்களைச் சினைப்படுத்துநருக்கு அறிவிப்பதை பயிற்சிகளினூடாகப் பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இதற்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக Uber, Pickme போன்ற பயண மற்றும் உணவு விநியோக முறைகளைப் போல் ஒரு நவீன முறையை உருவாக்கலாம்.

cattle clinic

மேலும், செயற்கை முறைச் சினைப்படுத்தலைச் செய்ய முடியாத பண்ணைகளுக்கு வீரியமிக்க நல்லினக் காளைகளை வழங்கும் செயற்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். தற்போது இது அரச செயற்திட்டங்கள் மூலம் செய்யப்படுகின்ற போதும் அது பரந்துபட்டு இடம் பெறுவதில்லை. தேவைப்படின் மேற்படி காளை வகைகளை வெளிநாடுகளில் இருந்தும் வழங்கலாம். இலங்கையில் பரவலாக, உள்முக இனக்கலப்பு (inbreeding) நிகழ்ந்து நெருங்கிய தொடர்புடைய காளைகளே பரவலாகப் பாவிக்கப்படுகின்றன. இதனால் பரம்பரையலகு தொடர்பான (genetic disorders) குறைபாடுகள் புதிய சந்ததிகளில்  தோன்றுகின்றன. வெளிநாட்டுக் காளைகளில் இருந்து விந்தணுக்கள் பெறப்படும் போதோ, வெளிநாட்டுக் காளைகளை நேரடியாகப் பாவிக்கும் போதோ, அவற்றின் பரம்பரை விபரங்கள் (progeny testing details) காட்சிப்படுத்தப்படுகின்றன; ஆய்வுகூடங்களில் அடிக்கடி பரிசோதிக்கவும் படுகின்றன. இந்த மாதிரி ஆய்வுகூடங்கள் இலங்கையிலும் அமைக்கப்பட வேண்டும்.

கால்வாய்நோய், புருசலோசிஸ் நோய் காரணமாக இலங்கையில் அடிக்கடி மாடுகளில் கருச்சிதைவு மற்றும் ஏனைய சினைப் பிடிக்காத நிலைகள் தோன்றுகின்றன. இதற்குரிய தடுப்பூசிகளும் முற்றுமுழுதாக வழங்கப்படுவதில்லை என்பதுடன் கணிசமான தடுப்பூசிகள் இந்தியா போன்ற நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும் மேற்படி நோய்களுக்குரிய இலங்கைசார் ஆய்வுகள் குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன. பொருத்தமான ஆய்வுகளையும் தடுப்பூசி உற்பத்திகளையும் இலங்கைச் சூழலுக்கு ஏற்ப உற்பத்தி செய்யும்  வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

3211 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)