Arts
12 நிமிட வாசிப்பு

கடும்புப் பால் என்னும் திரவ நிலைத் தங்கம்

January 17, 2024 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

அண்மையில் ஒரு பண்ணையாளர் தனது 2 மாத பசுக்கன்று சுவாசிக்க கஷ்டப்படுவதாகவும் மூச்செடுக்கும் போது மூக்கில் இருந்து கடும் சத்தத்துடன் மஞ்சள் நிறச் சளி போன்ற திரவம் வருவதாகவும் என்னிடம் வந்திருந்தார். அவரது கன்று செயற்கை சினைப்படுத்தல் மூலம் பிறப்பிக்கப்பட்ட ஜெசி இனத்தைச் சார்ந்தது. சில நிமிட விசாரணையின் பின் அவரது கன்றின் நிலையையும் அதற்குரிய காரணத்தையும் உணரமுடிந்தது. கன்று பிறந்ததும் தாயிலிருந்து சுரக்கும் கடும்புப் பால் எனப்படும் colostrum இனை கறந்து வெளியே ஊற்றி இருக்கிறார். கடும்புப் பால் கன்றுக்கு ஆபத்தை தரக் கூடியது எனும் ஐதீகத்தை அந்த பண்ணையாளர் பல வருடங்களாக கொண்டிருக்கிறார். அதுவரை வேறு ஒரு மாட்டிடம் இருந்து பால் கறந்து கொடுத்திருக்கிறார். இரண்டு மூன்று நாட்களின் பின் தான் தாயிடம் இருந்து கன்றினை பால் குடிக்க விட்டிருக்கிறார்.

calf

இதனைப் போல முன்பும் இவரது பல கன்றுக் குட்டிகள் கழிச்சல் [diarrhoea] நிலைக்கும் சுவாசிக்க முடியாத நிலைக்கும் ஆளாகி இருந்திருக்கின்றன. கழிச்சல் நோய்க்கு சில மருந்துக் குளிசைகளை கடைகளில் வாங்கி பாவித்திருக்கிறார் [கால்நடை வைத்தியரின் பரிந்துரை இன்றி சில மருந்துக் கடைகள் மருந்துகளை வழங்குகின்றன என்பது வேறு கதை]. சில கன்றுகள் அதுவும் நாட்டு இனக்கன்றுகள் தப்பியிருந்தாலும் பெரும்பாலான நல்ல இனக் கன்றுகள் இறந்து போயிருக்கின்றன.

உண்மையில் இந்த மாதிரியான நிலையை பெரும்பாலான பண்ணையாளர்களிடம் அவதானிக்க முடியும். கழிச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனைகளை கன்றுகளின் பெரும்பாலான மரணத்துக்கு காரணமாகக் கூறமுடியும். இலங்கை போன்ற நாடுகளில் மட்டுமல்ல வசதி படைத்த நாடுகளின் மிகப் பெரிய பண்ணைகளிலும் இந்த நிலைமையை அவதானிக்க முடியும். மனிதர்களுக்கு சிசு மரண வீதம் எப்படியோ அது போல கன்றுகளுக்கும் பிறந்து சில மாத காலத்தில் அதிக மரண வீதம் ஏற்படுகிறது. ஆடுகள் மற்றும் இதர கால்நடை வகைகளுக்கும் இது பொருந்தும்.

உண்மையில் மேலே கூறப்பட்ட நிலைமைக்கு முகாமைத்துவக் குறைபாட்டைத்தான் பிரதான காரணமாகக் கூறலாம். கன்று வளர்ப்பின் மிகப் பிரதானமான அம்சமாக கடும்புப் பால்/சீம் பால் எனும் colostrum ஊட்டலை கூறமுடியும். கன்று பிறந்த முதல் சில நாட்களுக்கு தாயின் முலையில் இருந்து சுரக்கும் கடும் மஞ்சள் நிறமான தடித்த பதார்த்தம் தான் கடும்புப் பால். இந்தப் பதார்த்தம் கன்றின் எதிர்காலத்தை, அதன் வளர்ச்சியை, பால் உற்பத்தி போன்ற இதர பல செயற்பாடுகளை தீர்மானிக்கும் முக்கியமான விடயமாகும்.

chart

கன்று பிறந்த முதல் இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் அதன் வாழ்க்கையின் மிக முக்கியமான காலப்பகுதியாகும். அந்த நேரத்தில் கன்று குடிக்கும் கடும்புப் பாலின் அளவு மிக மிக முக்கியமானது. மனிதர்களைப் போல் அல்லாது ஆடு, மாடு போன்ற விலங்குகளின் குட்டிகள் நோய் எதிர் சக்தியை கொண்டு பிறக்கமாட்டாது. ஏனெனில் தாயின் கருப்பைக்கும் குட்டிக்கும் நேரடியான இரத்தத் தொடர்பு இருக்காது. நோய் எதிர் சூழலை கொண்டமைந்த தாயின் கருப்பையை விட்டு வெளிச் சூழலுக்கு வரும் மேற்படி இளம் பருவ விலங்குகள் நோய் காரணிகளின் தாக்கத்துக்கு இலகுவில் உட்படக் கூடியன. எனினும் இந்த நிலைமையை தவிர்க்கும் விதமாக கடும்புப் பாலில், மேற்படி நோய்க் காரணிகளுக்கு பாதுகாப்பை அளிக்கும் பிறபொருள் எதிரிகள் [Anti bodies], ஏனைய நோய் எதிர்ப் பதார்த்தங்கள், சக்தி மூலங்கள், விற்றமின்கள் எல்லாம் இருக்கின்றன. பிறந்த சில மணி நேரங்களில் மேற்படி கடும்புப் பாலை கன்றுகள் குடிப்பதன் மூலம் இந்த நோய் எதிர் பதார்த்தங்கள், சக்தி மூலங்கள், விற்றமின்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

immune lever of cow

பசுவின் கடும்புப் பால் நேரம் செல்லச் செல்ல அதன் சிறப்புத் தன்மையை இழக்கும். கடும்புப் பாலில் மிக முக்கிய IgG எனும் பிறபொருள் எதிரிப் பதார்த்தம், நேரம் செல்லச் செல்ல அதன் செறிவில் குறைவடையும். மேற்படி IgG, நோய் நிலைமைகள் பலவற்றில் இருந்து கன்றை பாதுகாக்கிற அதேவேளை மிகப் பெரும் பருமனை கொண்டதாகவும் உள்ளது. கன்றின் சிறுகுடல், பருமனான IgG இனை ஒரு குறித்த நேர அளவுக்கு தான் அகத்துறிஞ்சும் ஆற்றலைக் கொண்டிருக்கும். நேரம் செல்லச் செல்ல மேற்படி பதார்த்தத்தை அகத்துறிஞ்ச முடியாத நிலை ஏற்படும். எனவே, கன்று பிறந்து குறித்த மணி நேரத்திலேயே கடும்புப் பாலைக் குடிக்க விட வேண்டும். தாமதித்துக் கொடுக்கும் கடும்புப் பால் உண்மையில் பயனற்றது.

உண்மையில் எமது பல பண்ணையாளர்கள் இந்த விகித்தை சரியாகச் செய்வது கிடையாது. சிலர் அதனை கறந்து ஊற்றுகின்றனர். மேலும் சிலர் மனிதர்களின் உணவாக கடும்புப் பாலை உண்பதும் அவதானிக்கப்படுகிறது. மேற்படி முதல் நாளில் சரியாக கடும்புப் பால் கொடுக்கப்படும் கன்றுகளில் கழிச்சல் மற்றும் சுவாச நோய் நிலைமைகள் பெரும்பாலும் அவதானிக்கப்படுவதில்லை. அந்த நிலைமைகளுக்குரிய பிறபொருள் எதிரிகள் கடும்புப் பாலில் இருப்பதுதான் இதற்குரிய காரணமாகும்.

வளர்ச்சியடைந்த பல நாடுகளிலும் இலங்கையின் அம்பேவல போன்ற பெரிய பண்ணைகளிலும் கன்று பிறந்தவுடன் தாயிடம் இருந்து பிரிக்கப்படும். கன்றின் உடல் நிறைக்கு ஏற்ப கடும்புப்பால் சரியான விகிதத்தில் சரியான நேரத்தில் கொடுக்கப்படும். தாயிடம் இருந்து நேரடியாக கன்று பால் குடிக்கும் போது முதல் இரண்டு மூன்று மணித்தியாலங்களில் சரியான அளவில் கடும்புப் பாலை குடிக்க முடியாத நிலை ஏற்படுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் பெரும்பாலான பசுக்களும் அவை காணப்படும் பட்டிகளும் சுகாதாரத் தன்மை குறைவாக இருப்பதால் கன்றுக்கு நோய் நிலைமைகள் தோன்றலாம். நேரடியாகத் தாயிடம் இருந்து பாலைக் கொடுப்பதை விட, கறந்து தேவையான அளவில் போத்தல் மூலம் ஊட்டுவது சர்வதேச அளவில் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஊட்டல் முறை சரியான பயனைத் தருவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. நாட்டு இன மாடுகளுக்கு இந்தமுறை கொஞ்சம் கஷ்டமானது எனினும் உயர் ரக மாடுகளுக்கு இந்த முறையை பயன்படுத்தலாம். இதற்கென தயாரிக்கப்பட்ட பிரத்தியேக பால் போத்தல்களும் உள்ளன.

bottle feeding

உண்மையில் தாயிடம் இருந்துதான் கடும்புப் பாலையோ சாதாரண பாலையோ கொடுக்க வேண்டும் என்று இல்லை. மிகச் சிறந்த கடும்புப் பாலைக் கொண்ட வேறு பசுக்களின் கடும்புப் பாலையும் கொடுக்கலாம். சிறந்த கடும்புப் பால் கொண்ட பசுக்களில் இருந்து பெறப்படும் கடும்புப் பாலை பல மாதங்களுக்கு சரியாகச் சேமித்தால் அதன் சிறப்புக் குன்றாமல் இருக்கும். இளம் பசுக்களின் கடும்புப் பாலை விட மூன்றாவது மற்றும் நான்காவது ஈற்றுப் பசுக்களின் கடும்புப் பால் சிறப்பானது. ஏனெனில் அவை நோய் நிலைமைகளை அதிகம் சந்தித்திருப்பதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பிறபொருள் எதிரிகளை கொண்டிருக்கும். அதிக வயதான பசுக்களின் பாலை புறக்கணிக்கலாம். அவை அதிக பிறபொருள் எதிரிகளைக் கொண்டிருந்தாலும் பிற முக்கியமான பதார்த்தங்கள் வயது போகப் போக அவற்றின் பாலில் குறைவடையும். மேலும் வெளிநாட்டு மாடுகளின் கடும்புப் பாலை விட நாட்டு மாடுகளின் பால் சிறந்தது. அதனை விட, அதிக பாலைச் சுரக்கும் மாடுகளை விட குறைந்த அளவு பால் சுரக்கும் மாடுகளின் பால் சிறப்பானது. குறைந்த பாற் கனவளவில் முக்கியமான பதார்த்தங்கள் செறிந்திருக்கும். தடுப்பூசி போடப்படும் மாடுகளின் கடும்புப் பால், போடப்படும் தடுப்பூசிக்குரிய பிறபொருள் எதிரிகளை அதிகம் கொண்டிருப்பதால் மிகச் சிறப்பானது. சரியான கால அளவில் பால் வற்றுக் காலத்தை [Dry period] பேணும் மாடுகளும் சிறப்பான கடும்புப் பாலை கொண்டிருக்கும்.

எமது பழக்கவழக்கங்களின் அடிப்படையில், பசுவையும் கன்றையும் பிரிப்பதை எமது மக்கள் அதிகம் விரும்ப மாட்டார்கள். மேலும் எமது மாடுகளும் கன்றின் தூண்டுதல் இல்லாமல் பாலைச் சுரக்காது என்ற நிலையும் உள்ளது. உதாரணமாக கன்று இறந்தால் நம்மவர்கள் பசுவில் பாலைக் கறப்பது கிடையாது. உண்மையில் இது தவறான கருதுகோள் ஆகும். பாலை கன்று இல்லாமலும் கறக்க முடியும். அம்பேவல போன்ற பண்ணைகளில் இந்த நிலையை அவதானிக்க முடியும். அங்கு ஒலிக்கும் சங்கீதச் சத்தத்துக்கே பசுக்கள் பாலைச் சுரக்கின்றன. சில இடங்களில் பால் வாளியின் சத்தத்துக்கே பசுக்கள் பாலைச் சுரக்கின்றன. 

Colostro meter

வெளிநாடுகளில் பக்கற்றில் அடைத்த கடும்புப் பால் விற்பனையில் உள்ளது. சிலவேளைகளில் கன்று ஈன்றவுடன் தாய்ப் பசு இறந்தால் முட்டை மஞ்சள் கரு, தேசிப்புளி மற்றும் வேறு பசுக்களின் பாலைக் கொண்டு செயற்கைக் கடும்புப் பாலைத் தயாரிக்க முடியும். எனினும் IgG போன்ற பிறபொருள் எதிரிப் பதார்த்தம் அந்தச் செயற்கைப் பாலில் இருக்காது. வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் அதிக சக்தியை விரைவாக பெறும் பொருட்டு கடும்புப் பால் அடங்கிய உணவுகள் சந்தையில் கிடைக்கிறது. மேலும் கன்றுக்கு பழுதடைந்த அல்லது மடியழற்சி [mastitis] ஏற்பட்ட பசுவின் தரமற்ற கடும்புப் பாலை கொடுக்கக் கூடாது. கடும்புப் பாலின் தரத்தை colostrometer மூலம் அளவிடலாம். கடும்புப் பாலை கன்றுக்கு கொடுக்கும் போது எவ்வளவு விரைவாக கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக தகுந்த அளவில் தரமான சுத்தமான கடும்புப் பாலாக கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

replacer

நவீனக் கால்நடை வளர்ப்பில் வளர்ச்சியடைந்த நாடுகளில் உணவூட்டல், கடும்புப் பால் ஊட்டல் போன்ற முகாமைத்துவச் செயற்பாடுகளை முதன்மைப் படுத்துகின்றனர். நோய்க்கு சிகிச்சை அளிப்பதை விட நோய் வருமுன் காக்கும் செயன்முறைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இதன் காரணமாகத் தான் அவர்களுடைய கால்நடை உற்பத்தித் துறை சிறப்பாக இயங்குகிறது. எமது நாடுகளிலும் மேற்படி உணவூட்டல் முறைகளையும் தடுப்பூசி [vaccination] ஏற்றுதல் போன்ற நோய் வருமுன் தடுக்கும் முறைகளை தகுந்த வைத்திய ஆலோசனையுடன் செய்யும் போது விலங்குகளின் இழப்பை தடுப்பதோடு உற்பத்தியையும் பெருக்கிக் கொள்ள முடியும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5798 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)