Arts
15 நிமிட வாசிப்பு

கால்நடைகளைக் கொல்லும் சட்ட விரோத சிகிச்சையாளர்கள்

April 20, 2023 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

அண்மைக் காலமாக மனித மருத்துவம் சார்ந்த போலி மருத்துவர்கள், போலி சிகிச்சை நிலையங்கள் தொடர்பாகக் கரிசனை வெளியிடப்படுகிறது. ஊடகங்கள் அது தொடர்பான செய்திகளை முன்னுரிமைப்படுத்துகின்றன. மனித மருத்துவத்தைப் போல விலங்கு மருத்துவத்தில் ஏராளமான போலி மருத்துவர்கள், போலி சிகிச்சை நிலையங்கள் உள்ளமையும் அதனால் ஏற்படும் மனித மற்றும் விலங்குகளில் ஆரோக்கியத்தில் ஏற்படும் சவால்களையும் இந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகின்றேன்.

vaccination campaign


இலங்கையைப் பொறுத்தவரை விலங்கு மருத்துவ விஞ்ஞானக் கற்கைநெறி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விலங்கு மருத்துவ பீடத்தால் மட்டுமே வழங்கப்படுகிறது. [BVSc- Bachelor of Veterinary Science] விலங்கு மருத்துவராக இலங்கையில் செயற்பட இலங்கை விலங்கு மருத்துவ சபை [Veterinary Council of Sri Lanka] அனுமதியை வழங்குகிறது. இந்த சபையால் பதிவு செய்த வைத்தியர்களே கால்நடை வைத்தியர்களாகக் கருதப்படுவார்கள். மேற்படி பதிவு இல்லாமல் இலங்கையில் விலங்கு மருத்துவ சிகிச்சை செய்ய முடியாது.அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தனியார் அமைப்பு ஒரு சட்ட விரோத சிகிச்சையாளருக்கு கால்நடை மருத்துவத்தில் கலாநிதிப் பட்டம் [PhD] வழங்கியிருந்தது. அவர் வவுனியா வடக்கு, முல்லைத்தீவு பகுதிகளில் சட்ட விரோதமாக விலங்குகளுக்கு சிகிச்சை வழங்குபவர்.

இலங்கையில் முன்பு, பொதுவாக கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு கிராமத்தில் உள்ள சில கால்நடை வளர்ப்பாளர்கள் தமது அனுபவத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்திருந்தனர். உள்ளூர் மூலிகைகள் மற்றும் கம்பிகளால் சுடுதல் [குறி சுடுதல்] போன்ற பழைய முறைகளை பயன்படுத்தியிருப்பார்கள். பாரம்பரிய சிகிச்சை வாகடங்களும் இருக்கின்றன. எனினும் இன்று விலங்கு மருத்துவத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றமும் அதிகரித்த மேம்படுத்தபட்ட மருந்துகளின் பாவனையும் விலங்கு மருத்துவத்தை அடுத்த பரிமாணத்தை நோக்கி கொண்டு சென்றுள்ளது. இலங்கையில் நடைமுறையில் பாரம்பரிய கால்நடை மருத்துவம் கிடையாது. மனித மருத்துவத்தில் உள்ளது போல சித்த ஆயுர் வேத கால்நடை வைத்தியர்கள் கிடையாது. சில பண்ணையாளர்கள் தமது அனுபவ அடிப்படையில் மனிதர்கள் பாவிக்கும் சித்த மற்றும் ஏனைய சுதேச மருந்துகளை தமது விலங்குகளுக்கும் வழங்குகின்றனர். இவை சிறிய நோய்களைக் குணப்படுத்தும் அதேவேளை பாரிய நோய்களுக்கு முறையான கால்நடை வைத்திய வழிகாட்டுதல் அவசியம்.

நவீன கால்நடை மருத்துவத்தில் முன்னைய காலம் போல் இல்லாது மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் மாற்றம் கண்டுள்ளன. இவை முறையாகப் பயிற்சி பெற்ற வைத்தியர்களுக்கு தெரியும். அரசாங்கத்தால் அவர்களுக்குத் தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்படுகின்றன. எனினும் சட்ட விரோதப் பயிற்சியாளர்களுக்கு இது தெரியாது. தமக்கு தெரிந்த பழைய முறைகள் மூலமே அவர்களின் சிகிச்சை அமைவதோடு பழைய மருந்துளையே அவர்கள் பாவிக்கின்றனர். சில பழைய முறை மருந்துகள் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டவை. மனித மற்றும் விலங்குகளின் பாவனைக்குத் தடுக்கபட்டவை. பக்க விளைவு கொண்டவை. முறையான மருந்துகள் இல்லாத காலத்தில் அவை பாவிக்கப்பட்டவை. [எனினும் அண்மைக் காலத்தில் சில மருந்து நிறுவனங்கள் தமது விற்பனையை அதிகரிக்க முக்கியமான மருந்துகளை யாருக்கும் விற்கும் நிலையை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக மனித சுகாதாரத்தை பாதிக்கும் கடும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளும் இவற்றுள் அடங்குவது ஆபத்தானது.]
விலங்கு மருத்துவத்தில் புதிதாகப் பாவிக்கப்படும் பல மருந்துகள் மிகவும் சிக்கலானவை. அவற்றின் செயற்பாடுகள் நுண்ணியவை.தவறாகப் பாவிக்கும் போது பல பக்க விளைவுகளைத் தர வல்லன.உதாரணமாக சில மருந்துகள் சினைப்பட்ட விலங்குகளுக்கு பாவிக்கும் போது அவற்றில் கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடியன. சில மருந்துகள் மிகப் பாரதூரமான குடல், மற்றும் இரப்பை புண்ணை, கடுமையான வாந்தியை, மயக்க நிலையை ஏற்படுத்த வல்லன. மனிதனுக்கு பாதிப்பைத் தரக் கூடியன. எனவே மருந்துகளின் பாவனையின் போது மருந்தின் இயல்பு, அதன் பக்க விளைவைக் கருத்தில் கொள்ள வேண்டும்.இலங்கையில் விலங்கு மருந்துவத்தை பொறுத்தவரை கால்நடை மருந்தாளர் [Veterinary Pharmacist] எனும் பதவி, படிப்பு கிடையாது. விலங்கு வைத்தியர்களே அந்தப் படிப்பையும், விஞ்ஞானப் பின்புலத்தையும் கொண்டவர்கள்.எனவே அவர்கள்தான் மருந்தாளர்கள். அவர்களின் பரிந்துரை இன்றி மருந்துகளை வழங்க முடியாது.

விலங்கின் உடல் இரசாயனப் பதார்த்தங்கள், உடற் தொழிற்பாடுகள் [Physiology], கட்டமைப்பு [Anatomy] மனிதரில் இருந்து வேறுபட்டவை. உதாரணமாக மனிதருக்கு பயன்படும் பரசிட்டமோல் [Paracetamol] போன்ற மருந்துகள் பூனை போன்ற விலங்குகளுக்கு நச்சு விளைவுகளை ஏற்படுத்துவதோடு உயிராபத்தையும் தரக் கூடியன. எனவே விலங்கு மருந்துகளை மனித மருந்தாளர்கள் விலங்கு மருத்துவரின் ஆலோசனை இன்றி வழங்குவது மிகவும் ஆபத்தானது.

எனது அனுபவத்தில் மிக அண்மையில் கூட கால்நடை ஒன்றின் வயிற்றோட்ட நிலைமைக்கு சட்டவிரோத பயிற்சியாளர் கொடுத்த, மிக சக்தி வாய்ந்த அன்டி பயோடிக் மருந்தை அதிக அளவில் கொடுத்ததே காரணமாக இருந்தது. அதனால் வயிற்றோட்டம் நின்று விட்டது. எனினும் அந்தக் கால்நடை உணவு உண்பதையும் நிறுத்திவிட்டது. சில நாட்களில் அந்தக் கால்நடை இறந்து விட்டது. தினமும் பத்து லீற்றர் கறக்கக் கூடிய உயர் ரக கால்நடை அது. உண்மையில் இந்த இடத்தில ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஆடு, மாடு போன்ற கால்நடைகள் எமது இரப்பையை போல் அன்றி இரப்பைகளின் தொகுதியை [Complex Stomach] கொண்டவை. அவற்றின் சமிபாட்டில் நுண்ணுயிர்ச் சமிபாடும் முக்கியமானது. அசையூன் இரப்பை [Rumen] எனும் முன் இரப்பையில் புரட்டோசோவா மற்றும் பக்டீரியாக்களின் செயற்பாடு மூலம் ஆரம்ப நிலைச் சமிபாடு நிகழ்கிறது. அதன்பிறகே மேலதிக சமிபாட்டுச் செயற்பாடு ஏனைய பகுதிகளில் நிகழும். அதாவது ஆடு, மாடுகளின் உயிர் வாழ்வுகைக்கு இந்த நுண்ணுயிரிகள் அவசியம். கால்நடைகளுக்கு வாய் வழியாக அண்டிபயொட்டிக், அன்டி புரோட்டோசோவா மருந்துகளை வழங்கும் போது தீமையான நுண் உயிர்களுடன் மேற்படி அவசியமான நுண் உயிர்களும் இறந்துவிடுகின்றன. மேற்படி சம்பவத்திலும் இதுதான் நிகழ்ந்தது. மருந்துகளைச் செலுத்தும் போது விலங்கின் உடல் தொழிலியல், உடற்கூறியலை சரியாக கவனிக்க வேண்டும்.ஒரு நோயை நிறுத்தி இன்னொரு நோயை கொண்டு வரக்கூடாது.

அண்மையில் வவுனியாவில் ஒரு பிரபல மனித மருந்தகம் கேட்டுக் கேள்வியில்லாமல் எந்த வித கால்நடை வைத்தியரின் பரிந்துரையும் இல்லாமல் கேட்கும் சகலருக்கும் கடுமையான நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள், தடுப்பூசிகள் என சகலதையும் வழங்கி வருவதை அவதானிக்க முடிந்தது. பண்ணையாளர்கள் அங்கு நேரடியாகச் சென்று அவற்றைப் பெற்று வருவதையும் காண முடிந்தது. இது தொடர்பாக சம்பந்தபட்ட மருந்து நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த மழுப்பலான பதிலையே தந்திருந்தனர். ஒரு நிறுவனம் மருந்தை வழங்குவதை நிறுத்தினால் இன்னொரு நிறுவனம் வழங்கத் தயாராகவே உள்ளதை அவதானிக்க முடிகிறது. இல்லாது போனால் மருந்துகளை வாங்கி விற்கும் விநியோகஸ்தர்கள் வழங்குகின்றனர். இவர்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி சுயமாக இயங்குகிறவர்கள். வெளிப்படையாகச் சொல்வதாயின் அந்த மருந்தகம் ஒரு கால்நடை வைத்திய நிலையமாகவே செயற்படுகிறது. அங்கு பணி புரிபவர்கள் கால்நடை வைத்தியர்களாகவே தம்மை கருதி இயங்குகின்றனர். இலங்கை அரச கால்நடை வைத்திய நிலையங்களில் மருந்து இல்லாத காரணத்தால் இந்த மாதிரியான மருந்தகங்களுக்கே சில கால்நடை வைத்தியர்கள் பரிந்துரைக்கின்ற காரணத்தால் இந்த நிலை தோன்றுகிறது. பண்ணையாளர்களும் கால்நடை வைத்தியசாலையும் இங்கேதான் மருந்துக்கு அனுப்புகிறார்கள், எனவே நேரடியாக அங்கேயே போனால் நேரம் மிச்சம் எனக் கருதி மருந்துகளை மளிகைப் பொருள் போல வாங்குகிறார்கள். இதற்கு அந்தந்த அலுவலகங்களில் உள்ள செயற்கை சினைப்படுத்துனர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் உடந்தையாக உள்ளனர். பல இடங்களில் அவர்கள்தான் வைத்தியர்கள், சிகிச்சையாளர்கள். அவர்களும் அந்த மருந்தகங்களில் தங்கு தடையின்றி மருந்துகளைப் பெற முடிகிறது. இதை விட அவர்களுக்கு என்ன வேண்டும்? அண்மையில் கூட முல்லைத்தீவில் சட்ட விரோதமாக சிகிச்சை செய்த சிற்றூழியர் அரச வேலையில் இருந்து நிறுத்தப்பட்டிருக்கிறார். இப்போது அவர் தனிப்பட்ட முறையில் சிகிச்சைகளைச் செய்து வருகிறார். (இனி யாரும் அவரது சட்டவிரோத சிகிச்சையைக் கட்டுப்படுத்த முடியாது போலும்) செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி வழங்குதல், தோல் வியாதிகளுக்கு சிகிச்சை வழங்குதல், கருத்தடை மருந்துகளை வழங்குதல்,கால்நடைகளின் சத்திரசிகிச்சைகள் போன்ற மிகப் பாரதூரமான சிகிச்சைகளைக் கூட மேற்படி போலி முகவர்கள் செய்கின்றனர். அதாவது மிகப் பாரதூரமான பக்க விளைவுகளை தரும் மேற்படி சிகிச்சைகளை அவர்கள் செய்வது அந்தப் பிராணிகளின் உயிரிழப்புக்கும் வழி வகுக்கிறது.

மிக அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருக்கும் புதிய சவாலாக விலங்குகளின் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் [Farm shops] உருவெடுத்துள்ளன. உண்மையில் அதிகரித்த விலங்குகளின் உணவுத் தேவை காரணமாக அந்தக் கடைகள் மிக அவசியமானவை எனினும் மேற்படி கடைகள் விலங்குகளின் உணவுப் பொருட்களை விற்பதோடு மட்டுமின்றி அதி சக்தி வாய்ந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளையும் விற்கின்றன. மேலும் சிறிது காலத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, மருத்துவ சிகிச்சையையும் செய்யத் தொடங்குகின்றன. அங்கு பதிவு செய்த கால்நடை வைத்தியர் இருப்பதில்லை. சக்தி வாய்ந்த மருந்துகள் வைத்திய ஆலோசனை இன்றி வழங்கப்படுகின்றன. மேற்படி கடைக்காரர்கள் பாமர மக்களை ஏமாற்றும் விதமாக கால்நடை [Veterinary] மருத்துவ சிகிச்சை நிலையம் என்ற ரீதியில் விளம்பரப்பலகையையும் காட்சிப் படுத்தியிருக்கிறார். இது சட்ட விரோதமானது. இலங்கை மிருக வைத்திய சபையால் பதிவு செய்யாத யாரும் மேற்படி பெயரைப் பயன்படுத்த முடியாது. இதற்கு சில மருந்துக் கம்பனிகளும் உதவி செய்கின்றன. இலவச விளம்பரப் பதாகைகளைக் கொடுப்பதோடு சக்திவாய்ந்த மருந்துகளையும் தயவு தாட்சண்யம் இன்றி வழங்குகின்றன. இலங்கை முழுவதும் இந்த நிலை புற்றுநோய் போல உருவெடுத்துள்ளது. இலங்கை விலங்கு உணவு மற்றும் மருந்துச் சட்டத்தின் படி உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்த நிறுவனங்கள் மட்டுமே விலங்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்ய முடியும். அந்த உணவுகளால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு அவர்களே பொறுப்புக் கூறவேண்டும். தவறாகத் துஷ்பிரயோகம் செய்யும் நிறுவனங்களில் அனுமதியை இரத்துச் செய்யலாம். அதே போல அவர்கள் நுண்ணுயிர் கொல்லிகளை விலங்கு மருத்துவரின் பரிந்துரை இன்றி விற்க முடியாது. எனினும் மேற்படி கடைகள் இந்த விதிமுறையைக் கருதுவதில்லை. உண்மையில் இப்படி ஒரு சட்டம் இருக்கிறதா என்று அவர்களுக்குத் தெரியுமோ தெரியாது. தமது கடைகளின் மூலம் அவர்கள் மிருக வைத்தியர்களாகவே செயற்படுகின்றனர். அதாவது விலங்கு உணவுக் கடை திறந்தால் விலங்கு மருத்துவர் ஆகலாம் என்பதைப் போன்ற ஒரு நிலை. இந்தப் பாரதுரமான நிலைமைக்கு மேற்படி மருந்துகள் மற்றும் விலங்கு உணவுகளை விற்பனை வழங்கும் நிறுவனங்களே பொறுப்புக் கூற வேண்டும். இந்தக் கடைகளுக்கு தயவு தாட்சண்யம் இன்றி சில மருந்து நிறுவனங்கள் மருந்துகளை வழங்குகின்றன.

எனக்குத் தெரிந்த வகையில் ஒரு விலங்கு உணவுக் கடை உரிமையாளர் கோழிக் குஞ்சுகளைக் கொடுக்கும் போது அவற்றுடன் ஒரு தொகை நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை நான்கு – ஐந்து கிழமை வரைக்கும் கொடுத்திருந்தார். அது மிகவும் சக்தி வாய்ந்த மருந்து. அந்த மருந்தின் பாவனை மனித மருத்துவத்திலும் உள்ளது. உண்மையில் அந்த மருந்தின் பாரதூரத்தை அறியாத பண்ணையாளர்களும் தொடர்ச்சியாகக் கோழிக் குஞ்சுகளுக்கு கொடுப்பார்கள். ஒருதடவை ஒரு சிறிய நோய் நிலைமை அந்தக் கோழிக் குஞ்சுகளுக்கு தோன்றியபோது இலங்கையில் உள்ள எந்த வித மருந்தும் வேலை செய்யவில்லை. அதாவது நோய் நுண்ணுயிர்கள் மேற்படி நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளுக்கு இசைவாக்கம் அடைந்திருந்தன. மேலும் ஒரு புறோயிலர் (கறிக்கோழி) நாற்பது தொடக்கம் நாற்பத்தைந்து நாட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு கொடுக்கப்படும் மருந்துகள் அந்தக் கோழிகளின் உடலில் காணப்படும் நிலைமை உள்ளது. மருந்துகள் குறித்த காலத்துக்கு விலங்கு உடலில் நிலைத்திருக்கக் கூடியன. இறைச்சி மட்டுமின்றி பாலிலும் முட்டைகளிலும் இதுதான் நிலை.

பிறந்தது முதல் இறைச்சியாகப் பயன்படும் நாள் வரைக்கும் மருந்தேற்றப்படும் மேற்படி கோழிகள் உயிர் வாழும் மருந்துக் களஞ்சியம் போன்றவை. மனிதருக்கு மிகவும் ஆபத்தானவை. மனிதர்களுக்கு நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு நிலை அதாவது மருந்துகள் செயலிழந்து போகும் நிலைமை ஏற்படுகிறது.சிறுகச் சிறுக விலங்கு உணவுகள் மூலம் மனித உடலில் சேரும் இவை ஒரு கட்டத்தில் மிகப் பெரும் அளவில் மனித உடலில் தேங்கி விடுகின்றன. நோய் நுண்ணுயிரிகள் அந்த மருந்துகளுக்குப் பழக்கம் அடைகின்றன.இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் சிறிய சளி, காய்ச்சல் போன்ற நிலைமைகளுக்கு மிகப் பெரிய நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை பாவிக்கும் நிலை ஏற்படுகிறது. சூப்பர் பக்ஸ் எனப்படும் மருந்துகளுக்கு எதிரான நுண்ணுயிர்கள் மனித உடலில் அதிகரிப்பதால் அமெரிக்காவில் மட்டும் பல ஆயிரக்கணக்கான மனித மரணங்கள் நிகழ்கின்றன. உலகத்தில் உயர் மருத்துவ வசதி கொண்ட சிறந்த மருந்துக் கட்டுப்பாடுகள் கொண்ட அந்த நாட்டில் இந்த நிலை என்றால் மிகவும் பின் தங்கிய சுகாதார வசதிகள் கொண்ட எங்கள் நாடுகளின் நிலையை ஒருதரம் யோசித்துப் பார்க்க வேண்டும். உலகில் கால்நடைகளுக்கு பாவிக்கப்படும் எண்பது சதவீதமான அண்டிபயொட்டிக்ஸ் மருந்துகள், Therapeutic அதாவது நோய் நிலைமைக்கு பாவிக்கப்படுவதில்லை. விலங்குகளின் வளர்ச்சிக்கும் செலவைக் குறைக்கும் விதமாகவே பாவிக்கப்படுகின்றன. பண்ணைகளின் தரத்தை மேம்படுத்தாது இந்த மருந்துகளின் மூலம் நோய்த் தொற்றுகளை தடுக்க முயல்கின்றனர். இதனால் மனிதர்களுக்கு தேவையற்ற உயிர் இழப்புகளும், அதிக செலவும் ஏற்படுகிறது. மிக முக்கியமாக வைத்தியர்களால் கொடுக்கப்படும் மருந்துகள் செயல் இழந்து போகும் நிலை தோன்றியுள்ளது. ஒரு மருந்துக்கு மீள் பெறுகைக் காலம் [Withdrawal period] உள்ளது. எந்த உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளுக்கு செலுத்தப்படும் மருந்துகள் குறித்த மீள்பெறுகைக் காலம் கொண்டவை. அதாவது மேற்படி மருந்துகளை பாவித்த விலங்குகளின் உற்பத்திகளான பால், முட்டை, இறைச்சியை குறித்த காலத்துக்கு பாவிக்க முடியாது. அந்த உணவுகளில் அந்த மருந்துகள் குறித்த காலத்துக்கு தேங்கி இருக்கும். அவற்றை உண்ணும் போது அவை மனித உடலுக்கும் செல்கின்றன. ஆனால் இங்கு அப்படி யாரும் நடப்பதில்லை. இலாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மருந்துகளை பாவிகின்றனர். விற்கின்றனர்.

எனவே, இந்த மாதிரியான விலங்கு உணவுக் கடைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். தேவையற்ற மருந்துப் பாவனையை ஒழுங்கு படுத்தவேண்டும். சரியான தரவுகள் உள்ள நிறுவனங்களுக்கே விற்பனை உரிமையை தரவேண்டும். அடிக்கடி அந்த நிறுவனங்களை, கடைகளை பரீட்சிக்க வேண்டும். இல்லாது போனால் மனிதர்களில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

உலகில் எண்பது சதவீதத்துக்கு அதிகமான நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் விலங்குகளுக்கே பாவிக்கப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலான சக்தி வாய்ந்த மருந்துகளை விலங்குகளுக்கு எழுந்தமானமாக, தேவையின்றிப் பாவிப்பது சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் அங்குள்ள விலங்கு வளர்ப்பாளர்களும் தமது சமூகப் பொறுப்பைச் சரிவர உணர்ந்து செயற்படுகின்றனர். எனினும் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இந்த நிலை கிடையாது. போதிய விழிப்புணர்ச்சி கொடுக்கப்படுவதில்லை. தாவர உணவுகளில் களைகொல்லி மற்றும் கிருமிநாசினி பாவனைக்கு எதிராக கவனம் செலுத்தும் நாம், இந்த விடயத்தை புறக்கணித்து விடுகிறோம். இது ஆரம்ப நிலை புற்று நோய் போல இன்று உருவெடுத்துள்ளது. எனினும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனை ஆரம்பத்தில் குணப்படுத்தாதுவிடின் மிக ஆபத்தான மீளமுடியாத நிலைக்கு எம்மை இழுத்துச் சென்றுவிடும்.

மேலும், கால்நடைகளை சினைப்படுத்தும் சினைப்படுத்துநர்கள் தமது சினைப்படுத்தல் வேலையை விட விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதையே முக்கிய கருமமாகச் செய்கின்றனர். இதனால் அவர்களின் உண்மையான சினைப்படுத்தும் பணிகள் சரிவர இடம்பெறுவது கிடையாது. பண்ணையாளர்கள் அழைக்கும் நேரத்தைத் தவற விடுகின்றனர். சினைப்பருவம் தவறுகிறது. நீண்ட நாள் சினைப் படாத கால்நடைகளை கருணைக் கொலை செய்யவும் சினைப்படுத்துநர்கள் நேரடியாகப் பரிந்துரைக்கின்றனர். வைத்தியரிடம் அந்தப் பண்ணையாளர்கள் செல்வதைத் தடுக்கின்ற நிலைதான் உள்ளது. இதில் வேடிக்கையான விடயம் பல பண்ணையாளர்கள் கால்நடை வைத்தியர்களை சந்திப்பதில்லை. மேற்படி சினைப்படுத்துநர்கள், ஏனைய சிற்றூழியர்களை கால்நடை வைத்தியராகவே அவர்கள் கருதுகின்றனர். இவர்களும் அதனை மறுப்பதில்லை.


இவர்களை விட சுகாதார அமைச்சில் பணி புரியும் தடுப்பூசிக்காரர்களும் கால்நடை வைத்தியராகவே தம்மைக் கருதி சிகிச்சை செய்கின்றனர். சிலர் சத்திர சிகிச்சை செய்யும் அளவுக்கு களத்தில் இறங்கியும் உள்ளனர். இந்த மாதிரி நபர்களால் தவறாக சிகிச்சை வழங்கி பாதிக்கப்பட்ட பல விலங்குகளைப் பார்த்திருக்கின்றேன். டிஸ்டெம்பர் போன்ற தொற்று நோய்களைப் பரப்பும் காவிகளாகவும் செயற்படுகின்றனர். இந்த மாதிரியான தவறான சிகிச்சையாளருக்கு மருந்துகளை வழங்கும், ஆலோசனை வழங்கும் கால்நடை வைத்தியர்களும் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது. தமது மருந்து விற்பனைக்காகவும் பழகிய முகத்துக்காகவும் அவர்கள் இந்த உதவிகளைச் செய்கின்றனர். இப்படியாக சகலதும் சேர்ந்து கால்நடைகளையும் செல்லப்பிராணிகளையும் பாதிக்கின்றன, பாலுற்பத்தியைக் குறைக்கின்றன. விலங்குகளின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைகின்றன. குறைந்த செலவு, அவசரத்துக்கு உதவும் தன்மை, அறியாமை என பண்ணையாளர்கள் செய்யும் தவறுகள் மற்றும் கால்நடை வைத்தியர் பற்றாக்குறை சில கால்நடை வைத்தியர்களின் அசமந்தம் என்பன ஒன்று சேர்ந்து கால்நடைகளைப் பாதிக்கின்றன. இவைகள் சீர் செய்யப்படாத வரையில் இந்தப் பாதிப்புகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6409 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)