Arts
13 நிமிட வாசிப்பு

இலங்கையின் பாலுற்பத்தியும் கால்நடை உணவுகளும்

December 14, 2022 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

Simplified schematic diagram of the ruminant digestive tract

 மாடு ஆடு போன்ற கால்நடைகள் இயற்கையில் கிடைக்கும் புற்களை செரிமானம் செய்யத் தக்க உணவுக் கால்வாய் தொகுதியை கொண்டவை. குறிப்பாக அவற்றின் அசையூன் இரப்பையில் உள்ள நுண்ணுயிர்கள் [Rumen microbes] புற்களில்  உள்ள நார்ச்சத்தையும் [fiber]  ஏனைய உயிர்ச்சத்துகளையும் சமிபாடடையச் செய்வதன் மூலம் தேவையான சத்துக்களை பெற்றுக் கொள்கின்றன.

ஆரம்ப காலத்தில் மாடுகள் முற்று முழுதாக புற்களையும் மர இலைகளையும் செடிகளையும் நம்பியே வாழ்ந்தன. மனிதனின் பயன்பாட்டுக்கு கால்நடைகள் வந்த பின் மேலதிகமாக விவசாய மீதிகளையும் வீட்டு உணவுக் கழிவுகளையும் உட்கொண்டன. இன்று அவை அவற்றின் உற்பத்திக்கு அமைய விசேடமாக தயாரிக்கப்பட்ட கால்நடை செறிவு உணவையும் [concentrates]  சேர்த்து உட்கொள்கின்றன. அதிக பாலுற்பத்திகளை தரத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள இன்றைய கால்நடைகள் அதற்கேற்ப தரமான உணவுகளை உண்ண வேண்டியது அவசியமாகும். இலங்கையின் கால்நடைகளை பொறுத்தவரையில் நவீன உணவு முறைகள் மிகக்குறைவாகவும் பாரம்பரியமான முறைகள் அதிகளவிலும் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் வருடம் முழுவதும் தேவையான பசுந்தீவனங்கள் கிடைப்பதும் இல்லை. பாலுற்பத்தியில் தன்னிறைவு காண முடியாத நிலைக்கு கால்நடைகளுக்கு வழங்கப்படும் மேற்படி பொருத்தமற்ற உணவு முறைகளும் காரணமாகும்.

மேய்ச்சல் முறை

இயற்கையில் உள்ள புல் வெளிகளிலும், காடுகளிலும், மலை அடிவாரங்களிலும் குள, ஆற்றங் கரைகளிலும் வயல் வெளிகளிலும் வீதி ஓரங்களிலும் புகையிரத வீதி ஓரங்களிலும், வெற்றுக் காணிகளிலும் உள்ள புற்களை மாடுகள் மேய்கின்றன. மேற்படி புற்கள் ஊட்டச் சத்துக் குறைந்தவை. வெறுமனே வயிற்றை மாத்திரம்  நிரப்புவை. அதிக பாலுற்பத்தி  செய்யாத நாட்டு மாடுகளுக்கு ஓரளவுக்கு பொருத்தமானவை. எனினும் அதிக பாலை தரக் கூடிய  உயர் ரக, மற்றும்  கலப்பு மாடுகளின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய  முடியாதவை. இலங்கையின் கால்நடை உணவில் 90%  அதிகமாக இந்த பாரம்பரிய இயற்கைப் புற்களை உண்பதன் மூலமே நிறைவு செய்யப்படுகிறது. இலங்கையின் மேய்ச்சல் புல் வெளிகளில் உள்ள புற்கள் அடர்த்தி, உற்பத்தி அளவு தரம் என்பன மிக மிக குறைந்தவை. [இலங்கை புல் வெளிகளின் உற்பத்தி  68-111MT/ ஹெக்டேயராக காணப்படுவதோடு இந்தியாவின் பல புல் வெளிகளின் உற்பத்தி 3810MT/ ஹெக்டேயராக காணப்படுவதை ஒப்பிடலாம்.] இந்தப் புற்களைப் பொறுத்த வரையில் மழை காலத்தின் பின் அதிக அளவிலும் ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருப்பதோடு வறட்சியான காலத்தில் ஊட்டச்சத்து பெறுமானத்தில் குறைந்ததாகவும் கிடைக்கின்றன. வீதி ஓரங்களிலும் புகையிரத பாதை ஓரங்களிலும் உள்ள புற்களை உண்ணச் செல்லும் கால்நடைகள் பல விபத்துக்குள்ளாகுவதையும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதையும் பல இடங்களில்  அவதானிக்க முடிகிறது. பெரும்போக நெற்பயிர்ச்செய்கை செய்யப்படும் காலப்பகுதி மழை காலம் என்பதால் நீர் நிரம்பிய குளங்கள் மற்றும் ஆறுகளின் ஓரங்களில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மேய்ச்சல் செய்ய முடியாது என்பதுடன் வயல்கள் பயிர்களால் நிரம்பிய காரணத்தால் அங்கும் மாடுகள் மேய முடியாது. அதிகளவு மாடுகளை அந்தப் பகுதிகளில் வளர்ப்பவர்கள் மேய்ச்சலுக்காக வேறு பகுதிக்கு கொண்டு செல்வதைக் காண முடியும். இந்த காலத்தில் மாடுகளின் உடல் நலிவடைந்து பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதோடு  மாடுகளில் பல தொற்று நோய்களும் ஏற்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது. [பரம்பிஸ்டோமியோசிஸ் போன்ற புழுத் தொற்றுகள்]

முறைமேய்ச்சல்

அண்மைக்காலத்தில் நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்களின் அளவைக் கூட்ட பல நீர்த்தேக்கங்களும் விவசாய நிலங்களும் உருவாக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இது விவசாய உற்பத்திகளை அதிகரித்தாலும் கால்நடைகளின் இயற்கையான மேய்ச்சல் நிலங்களை இல்லாமல் செய்கின்றன. இதனால் அவை உணவின்றி அழிவடைகின்றன. இலங்கையில் பெரும்பாலான அபிவிருத்தி திட்டங்கள் ஒரு சில துறைகளால் கிடைக்கும் ஆதாயத்தையே பார்க்கும் அதேவேளை ஏனைய துறைகளுக்கு அந்த திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளை கருத்திலெடுப்பதில்லை. இதனால் நெல் உற்பத்தியின் இலாபத்தை விட கால்நடைகளின் இழப்பு மற்றும் அதனால் ஏற்படும் உற்பத்தி வீழ்ச்சி, சுற்றுச்சூழல் பாதிப்பு, காட்டு விலங்குகளின் இழப்பு, மனித காட்டு விலங்குகளின் முரண்பாடு மற்றும் அதனை தீர்க்க முயலுதல் என்பவற்றால் ஏற்படும் பொருளாதார இழப்பு என்பன அதிகமாக இருக்கும் எதிர்மறை நிலையையே அவதானிக்க முடிகிறது.

தீவனப் புல் வளர்ப்பு

பொதுவாக கால்நடை வளர்ப்பாளர்களின் கூட்டங்களின் போது மிக முக்கிய பிரச்சினையாக அவர்கள் கூறுவது மேற்படி புற்கள் காணப்படும் மேய்ச்சல் தரை பிரச்சினையை [Grazing lands] பற்றியதே. அதிகமாக காணப்பட்ட இயற்கையான மேய்ச்சல் தரைகளின் அளவு குறைவடைய பாரம்பரியமாக அவற்றை நம்பி வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு உணவு இல்லாத நிலை ஏற்படுகிறது. இலங்கையில் தீவனப் புற்களை பயிர்ச்செய்து மாடுகளுக்கு உணவூட்டும் முறை 10% வரையிலேயே காணப்படுகிறது. பயிர் செய்வதில் உள்ள நேரப் பிரச்சினை, நிலப் பற்றாக்குறை, வேலையாள் கிடைப்பதிலுள்ள சிக்கல் மற்றும் புற்களை வளர்த்து மாடுகளுக்கு வழங்கி எடுக்கப்படும் பாலின் விலை குறைவாகவும் தேறிய இலாபம் குறைவாகவும் இருப்பதால் பலர் இந்த வேலையைச் செய்வதில் பின்னிற்கின்றனர். பாரம்பரியமாக மாடுகளை வளர்த்து வந்த குடும்பங்களின் இளம் தலைமுறையினர் வேறு தொழில்களுக்கு மாறி விட்டதை அவதானிக்க முடிகிறது. பல பகுதிகளில் மாடுவளர்ப்பு முதியவர்களின் தொழிலாக கருதப்படுவதோடு அவர்களின் பின் அந்த மாடுகள் விற்கப்படும் நிலையே உள்ளது. பல வருடங்களாக அரசாங்கமும் [கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் ஊடாக] பல தனியார் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளும் புல் வளர்ப்பை ஊக்குவிக்க பல செயற்பாடுகளையும் திட்டங்களையும் ஒழுங்குபடுத்திய போதும் [புற் துண்டங்கள் வழங்குதல், மானியம் வழங்குதல், புல் நறுக்கும் இயந்திரம் வழங்குதல், தண்ணீர் இறைக்கும் வசதிகள் வழங்கல், ஊறுகாய் புல் செய்ய உதவி புரிதல், பயிற்சிகளை வழங்குதல்] மக்களின் ஈடுபாடு இன்மை மற்றும் நான் மேற்கூறிய காரணங்களால் இற்றைவரையில் இந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

இலங்கையில் அதிக பால் உற்பத்தியை செய்யும் சிறு பண்ணையாளர் மற்றும் மலையக தோட்ட தொழிலாளர்கள் தமது கால்நடைகளை வளர்க்க மற்றும் அவற்றுக்கு தீவன செய்கையை செய்ய போதிய நிலமில்லாததால் தரமான உணவு அளிக்க முடியாத நிலையில் உள்ளனர். அதாவது அவர்களின் கால்நடைகள் தமது உச்ச உற்பத்தியை காட்ட முடியாது காணப்படுகின்றன. [போதிய நிலம் இருக்கும் பட்சத்தில் இன்னும் அதிக உற்பத்தியை அவை தரக் கூடும்]

சுத்தமான குடிநீர் கிடைக்காமை

கால்நடைகளின் உடலிலும் சரி உற்பத்தியாகும் பாலிலும் [87-88 %] அதிகளவில் தண்ணீரே உள்ளது. விலங்குகளின் பல உடல் செயற்பாடுகளுக்கும் அங்கங்கள் சரியாக இயங்கவும் பால் உற்பத்திக்கும் தண்ணீர் அவசியம். கட்டாயம் தேவையான தண்ணீரை தொடர்ச்சியாக வழங்க வேண்டும்.  இலங்கையில் பெரும்பாலான கால்நடைகளுக்கு போதிய சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. குறிப்பாக மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் அந்த நேரம் முழுதும் தண்ணீர் இன்றியே மேய்கின்றன. இதனால் கணிசமான உற்பத்தி கிடைக்காத அதேவேளை மாடுகளும் பாதிப்படைகின்றன. வறட்சியான காலங்களில் இலங்கையின் உலர் வலய பகுதியில் தண்ணீர் கிடைப்பது கடினம். இந்த நாட்களில் புற்களும் தரம் குறைந்து காணப்படும். இதனால் விலங்குகளின் பால் உற்பத்தி மற்றும் உடல் தொழிற்பாட்டில் எதிர்மறை விளைவுகளே ஏற்படுகின்றன. இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பலவற்றில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் வழங்கப்படும் பாத்திரங்களும் சுகாதாரமற்று இருப்பதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க சுத்தமான தண்ணீரை தொடர்ச்சியாக வழங்க வேண்டும்.

விவசாயக் கழிவுகள் மற்றும் வர்த்தக விலங்கு உணவுகள்

புற்களுக்கு மேலதிகமாக விவசாயக் கழிவுகளான வைக்கோல், கரும்புத் தோகை, உளுந்து, பயறு, கடலை பயிர்களின் கொடிகள் அவற்றின் மீதிகள், வீட்டு உணவுக் கழிவுகளை உணவாக வழங்குகின்றனர். விவசாய பொருட்களான தவிடு, எண்ணை மீதிகளான புண்ணாக்கு, கரும்பு சக்கை, மதுபான ஆலைக் கழிவுகள் போன்றவற்றை வழங்குவதோடு அண்மைக் காலத்தில் பரவலாக வர்த்தக ரீதியான உணவுப் பொருட்கள் [commercial feed] சந்தையில் கிடைகின்றன. குறிப்பிட்டளவு பாரிய நடுத்தர அளவிலான விலங்குணவுத் தொழிற்சாலைகள் [Feed processing plants] இலங்கையில் காணப்படுகின்ற அதேவேளை உள்ளூர்ப் பண்ணையாளரும் தமது சக்திக்கு ஏற்ப செறிவுணவுகளை தயாரித்துக் கொள்கின்றனர். வர்த்தக உணவுகளின் விலை அதிகரிப்பு, பாலின் விலைக் குறைவு போன்ற காரணங்களால் வர்த்தக ரீதியான உணவுகளை மிக மிக குறைவாகவே பண்ணையாளர்கள் தமது கால்நடைகளுக்கு வழங்குகின்றனர்.

சோயா, மீன் உணவுகள், சோளம் என பல மூலப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்ற அதேவேளை தவிடு, சோளம், புண்ணாக்கு போன்ற சில பொருட்கள் உள்ளூரில் பெறப்படுகின்றன. தவிடு, புண்ணாக்கு போன்ற பொருட்களை கோழி [அதிகளவில்], பன்றிகளின் உணவுக்கு பயன்படுத்துவதாலும் தரமானவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாலும் கால்நடை உணவு துறை  போட்டிகளை சந்திக்கின்றது. மேலும் கால்நடை உணவுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படுவதும் இந்தத் துறையை பாதிக்கின்றது. உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு இலங்கை அரசாங்கம் 2020ஆம் ஆண்டு முதல் சோளத்தின்  இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது.

வைக்கோலை-உணவாக-பயன்படுத்தல்-1

மனித நுகர்வுக்கு பயன்படும் அரிசியை விலங்கு உணவை காரணம் காட்டி வியாபாரிகள் பதுக்குவதை தடுக்க அரசாங்கம் அரிசியை விலங்கு உணவுக்கு பயன்படுத்துவதை தடை செய்தும் உள்ளது. பல மூலப் பொருட்களின் இறக்குமதி தீர்வை அதிகரிப்பு, உள்ளூரில் செய்கை பண்ணப்படும் சோளப் பயிர் செய்கையானது,  நிலப்பற்றாக்குறை, காடழிப்பு தொடர்பான சூழலியல் எதிர்ப்புகள் மற்றும் அண்மைக் காலத்தில் படைப் புழு தாக்கத்தால் பாதிப்பை சந்தித்து முழுத் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ள அதேவேளை, கொவிட் தொற்றின் பின்னரான பொருளாதார, வர்த்தக இறுக்க நிலை காரணமாகவும் இந்த துறை பாரிய சவால்களை இன்று எதிர்நோக்கி வருகிறது. இந்த நிலையில் டொலர் கையிருப்பு குறைவால் கால்நடைத் தீவனத்துக்கு என சோளம், சோயா என்பனவற்றை இறக்குமதி செய்வது கணிசமாக குறைந்த நிலையில் கால்நடைத் தீவனங்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால்  பாலின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதோடு பாலின் மூலம் கிடைக்கும் இலாபமும் குறைந்துள்ளது. மேலும், சோயா போன்றவற்றுக்கு மாற்றீடாக இலங்கையில் உள்ள பொருட்கள் தரம் குறைந்ததாகவும் உற்பத்தியை குறைப்பதாகவுமே உள்ளன.

வைக்கோலை உணவாகப் பயன்படுத்தல்

இலங்கை ஒரு விவசாய நாடு என்ற வகையில் தாராளமாக வைக்கோல் கிடைக்கிறது. எனினும் அதிகளவான வைக்கோல் உரமாகவே பயன்படுகிறது என்பதுடன் மிகக் குறைவாகவே விலங்கு உணவாகப் பயன்படுகிறது. அண்மைக் காலத்தில் விவசாய அறுவடையில் பாவிக்கப்படும் இயந்திரங்கள் காரணமாக வைக்கோல்,  விலங்குகள் உண்ண முடியாத வகையில் சிதைக்கப்பட்டு வீணடிக்கப்படுகிறது. இயந்திரங்களில் அறுவடை செய்யப்பட்ட வைக்கோலை பெரும்பாலான மாடுகள்  விரும்புவதும் கிடையாது. ஒப்பீட்டளவில் வைக்கோல் ஊட்டச் சத்துகள் குறைந்தது. வைக்கோலை உணவாக கொடுக்கும் பண்ணையாளர்கள் நேரடியாகவே அதனை கொடுக்கின்றனர். யூரியா செறிவூட்டும் முறை மூலம் வழங்கினால் அதிக ஊட்டச் சத்தை பெற முடியும் என்ற போதும் பலர் அதனை செய்வது கிடையாது.[தற்போது யூரியாவே கிடைப்பது சிரமம்.]

கினியா புல்

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புல் வகைகள்

கினியா புல் [Type A- panicum maximum]

இந்த வகைப்புல் 1820 ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்பட்டு பல இடங்களில் பரவலாக காணப்படுகிறது. மத்திம அளவில் பலனை தரும். [CP-7.5%,ME 6.8MJ].

Hybrid Napier/ CO3/CO4[ penisetum purpureum*penisitum americans]

தமிழ்நாடு கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட புல் ரகம் 1999 ஆண்டில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிக புரதம், அதிக உற்பத்தி, நோய் மற்றும் பீடைகளின் மீது எதிர்ப்பு தன்மை, விலங்குகளால் அதிகம் விரும்பி உண்ணும் தன்மையால் பரவலாக விரும்பி பாவிக்கப்படுகிறது. CO- 5 [super napier] போன்ற மேம்படுத்தப்பட்ட வகைகளும் தற்போது கிடைக்கின்றன. இவற்றுக்கு மேலதிகமாக brachiaria புல்லும் அசோலா பாசியும் கால்நடை வளர்ப்பில் பயன்படுகின்றன. அண்மைக் காலத்தில் மேலும் பல ஊட்டச் சத்து மிக்க புல் வகைகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் கிளிரிசிடியா, இபில் – இபில் போன்ற அதிக புரதச்சத்தை கொண்ட மர அவரைத் தாவரங்களும் கால்நடை வளர்ப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

Well-managed CO3 fodder grass

நவீன உணவூட்டல் நுட்பங்கள் மற்றும் வாய்ப்புக்கள்

இவற்றுக்கு மேலதிகமாக பாரிய பண்ணைகளில் TMR [Total mixed ration] எனப்படும் புல் மற்றும் செறிவு உணவை சரியான விகிதத்தில் கலந்து கொடுக்கும் முறையும் தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனை சிறிய மற்றும் நடுத்தர  பண்ணையாளர்களும் கடைப்பிடிக்கலாம்.

அண்மைக் காலத்தில் பல பண்ணைகளில் ஊறுகாய்ப் புல் [silage] தயாரித்து வறட்சியான காலத்தில் பயன்படுத்துவதோடு hydroponics எனும் நிலமில்லா தீவனப் பயிர் செய்கையும்  மேற்கொள்ளப்படுகிறது. ஊறுகாய்ப் புல் மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் முறைகளில் தீவனப் பயிர்களை வளர்த்து தேவைப்படும் பண்ணையாளர்களுக்கு விற்க கூடிய ஒரு தொழிலாக மாற்றி அதிக வருமானத்தை பெற முடியும். இதற்கு அரசாங்கமும் பல அமைப்புகளும் மானியங்களையும், தொழில்நுட்ப அறிவையும் வழங்குகின்றன. அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக ரீதியான விலங்கு உணவு தொழிற்சாலைகளும் [feed mills] பல உதவித் திட்டங்களும் உள்ளன. இவற்றை பண்ணையாளர்களும் வியாபாரிகளும் கருத்திற் கொண்டால் இந்த துறையில் மாபெரும் முன்னேற்றத்தை காண முடியும். எதிர்காலத்தில் பால் பண்ணை என்று இல்லாமல் பால் தரும் மாடுகளுக்கு வழங்கும் புற்களை வணிக ரீதியில் உற்பத்தி செய்வது மிகப் பெரும் தொழிலாக உருவெடுக்கும். உள்நாட்டு தேவைக்கு மாத்திரமின்றி ஏற்றுமதியும் செய்யலாம். சீனா, சவூதி போன்ற நாடுகள் அதிகளவு பதப்படுத்திய புற்களை இறக்குமதி செய்துதான் தமது பாற்பண்ணைத் துறையை நடத்துகின்றன. எல்லாவற்றுக்கும் வெளிநாடுகளில் தங்கியிராமல் எமது நாட்டிலேயே உற்பத்தி செய்து அந்நிய செலாவணி இழப்பைத் தவிர்ப்பதோடு நாமும் தன்னிறைவு காணலாம். ஏற்றுமதி செய்து வருமானத்தையும் வரவழைக்கலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

13052 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)