Arts
19 நிமிட வாசிப்பு

பூதாகாரமாகும் மேய்ச்சல் தரைப்பிரச்சினை

January 20, 2023 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

கடந்த சில வருடங்களாக  கால்நடைகள் மற்றும் மேய்ச்சல் தரை தொடர்பான பல செய்திகளை ஊடகங்கள் வழியாக அவதானிக்க முடிகிறது.

  • செய்தி 1 – மட்டக்களப்பின் எல்லைப் பகுதியில் கால்நடைகளின் மேய்ச்சல் தரைகள் அபகரிக்கப்படுவதாக அங்குள்ள கால்நடை வளர்ப்பாளர்களும் அரசியல்வாதிகளும் அரசுடன் போராடுவதை காண முடிகிறது.
  • செய்தி 2 – கிளிநொச்சி மாடுகள் முறிகண்டிப் பகுதியில் கூட்டம் கூட்டமாக மேய்க்கப்படுவதாகவும் அவை முறிகண்டிப் பகுதி விவசாய நிலங்களில் மேய்ந்து நாசமாக்குவதாகவும்  முறைப்பாடு செய்யப்படுகிறது.
  • செய்தி 3 – கிளிநொச்சியில் மேய்ச்சல் தரையின்றி  மாடுகள் மெலிந்து இறக்கின்றன.
  • செய்தி 4 – முருங்கன்= நானாட்டான் மாடுகளை வவுனியா செட்டிகுளத்தின் பெரிய கட்டுப் பகுதியில் மேய்க்க பெரிய கட்டு மக்கள் எதிர்ப்பு.
  • செய்தி 5 – கிண்ணியா மாடுகளை கந்தளாய் பகுதியில் மேய்க்க கந்தளாய் மக்கள் எதிர்ப்பு.
  • செய்தி 6 – மல்லாவி மாடுகள் மடுவின் சின்னவலயன் கட்டு மற்றும் பண்டி விரிச்சான் பகுதிகளில் மேய்க்க அந்தந்த பகுதி மக்கள் எதிர்ப்பு.
  • செய்தி 7 – வடமராட்சி கிழக்கு பகுதியில் கிளிநொச்சி பகுதி மாடுகளை மேய்க்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு.
  • செய்தி 8 – மல்லாவி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மாடுகள் வவுனியாவில் பிடிபட்டன.
  • செய்தி 9 – வவுனியாவில் வீதியில் திரிந்த நூற்றுக்கணக்கான மாடுகள் நகரசபையால் பிடிக்கப்பட்டு தண்டம் அறவிடப்பட்டது.
  • செய்தி 1௦ – மண்டூஸ் புயல் ஏற்பட்ட காலத்தில் நிலவிய கடும்குளிர் காரணமாக பல கால்நடைகள் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இறந்துள்ளன. இந்த இறப்புகளுக்கு அதிக குளிரை தாங்க முடியாத நிலையே காரணம் என கண்டறியப்பட்டது. அதாவது மேய்ச்சலை பெருமளவு நம்பிய மாடுகள் மேய்ச்சலின்றி தோலின் கீழான கொழுப்புப்படை குறைந்து மெலிந்து இருந்த நிலையில் ஏற்பட்ட திடீர் குளிர் நிலையைத் தாங்க முடியாது இறந்துள்ளன.
முல்லைத்தீவு-மேய்ச்சல்-தரை

மேற்படி செய்திகள் ஒரே விடயத்தைத்தான் சொல்கின்றன. விவசாயம் செய்கின்ற காலத்தில் மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லை. மாடுகள் விவசாய நிலத்தில் மேய்வதால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுகிறது. மேய்ச்சல் தரை இல்லாததால் பண்ணையாளர்கள் குறைந்த விலைக்கு அதாவது இறைச்சிக்கு மாடுகளை விற்கிறார்கள்.

இந்த கட்டுரை   அண்மைய நாட்களில் இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளில் மேய்ச்சல் தரை குறைவடைந்ததால் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள விளைவுகளையும் அவற்றை எதிர்கொள்வதற்கான சாத்தியமான தீர்வுகளையும் ஆராய்கிறது.

மனித நாகரிகத்தின் வளர்ச்சிப் படியில் ஆடு ,மாடு வளர்ப்பு மிக முக்கியமானது. கற்காலத்து வேட்டை மனிதன் காலப்போக்கில் மந்தைகளை வளர்ப்பதிலும் விவசாயம் செய்வதிலும் தன்னை மாற்றிக் கொண்டான். மந்தை வளர்ப்பாக ஆடு, மாடு, எருமை, செம்மறி ஆடு, பன்றி, கோழி என உணவு உற்பத்தி செய்யும் கால்நடைகளின்  வளர்ப்பை குறிப்பிடலாம். நாடோடிகளாக அலைந்து அவற்றை மேய்த்த மனிதன் சில குறித்த பருவ நிலைமைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட பிரதேசங்களில் கால்நடைகளை நிறுத்தி புற்களை மேய வழிசமைத்துக் கொடுக்கத் தொடங்கினான்.

உதாரணமாக, சில பகுதிகளில் மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதால் கால்நடைகளை வளர்ப்பது மிகக் கடினமாகிறது. மேலும் வறட்சிக் காலத்தில் சில இடங்களில் புற்கள் மற்றும் பச்சை இலைகள் தேவையான அளவில் கிடைக்கமாட்டாது என்பதால் இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த இடங்களில் கால்நடைகளை வைத்திருப்பது சாத்தியமாகாது. காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் கூட மேற்படி சாதகமற்ற நிலை வரும் போது உணவுப் பொருட்கள் கிடைக்கும் இடங்களை நோக்கி பல கண்டங்கள் வரை இடம்பெயர்கின்றன.

கிளிநொச்சி-மேய்ச்சல்-தரை

பொதுவாக மந்தை மேய்ப்பாளர்கள் இந்த உசிதமற்ற காலங்களில் பல நூறு கிலோமீற்றர் வரை தமது மந்தைகளுடன் இடம்பெயர்வார்கள். ஆபிரிக்க நாடுகளில் பல ஆயிரம் கிலோ மீட்டர் வரை இடம்பெயர்ந்து கூடாரம் அடித்து பல மாதங்கள் தமது மந்தைகளுக்கு உணவளிப்பார்கள். [இவ்வாறு இடம்பெயரும் மந்தை மேய்ப்பாளர்கள் இலங்கையில் இன்றும் உள்ளனர்]

முன்னைய காலங்களில் மனித சனத்தொகை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. மனித தேவைகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவே காணப்பட்டன. நகரமயமாக்கம் என்பது மிக மிகக் குறைவாகவே நடைபெற்றது. ஆறுகள், குளங்கள் மனித ஆக்கிரமிப்புகளற்று அவற்றின் உச்சக்கொள்ளவை கொண்டிருந்தன. இவை எல்லாவற்றையும் விட நீர்நிலைகளை அண்டி ஏராளமான புல்வெளிகள் இருந்தன. மந்தை மேய்ப்பாளர்கள் தமது கால்நடைகளை அந்தந்த இடங்களில் மேய்த்துக்கொள்வார்கள். பல நூறு கால்நடைகள் குறித்த சில மணி நேரத்தில் மிகப் பெரிய புல்வெளிகளை காலி செய்யக் கூடியதாக இருந்தபோதும் அவற்றுக்கு தாராளமாக புல்வெளிகள் கிடைத்திருந்தன.

காலப்போக்கில் மனித குடித்தொகைப் பெருக்கத்தால் புதிய மனிதக் குடியேற்றங்கள் அதிகரித்து மனித உணவுத் தேவையை நிறைவு செய்ய விவசாய நிலங்களும் ஏனைய தேவைகளை நிறைவேற்ற தொழிற்சாலைகளும் கட்டடங்களும் இயற்கையான காடுகளையும் புல்வெளிகளையும் அழித்து உருவாக்கப்பட்டன. அதாவது கால்நடைகளின் மேய்ச்சலுக்கு பயன்பட்ட இயற்கையான மேய்ச்சல் பகுதிகள் குறுகிப்போயின.

இலங்கையின் வடக்கு – கிழக்குப் பகுதியில் பெரும்பாலும் உள்ளூர் ஆடு, மாடுகளே வளர்க்கப்படுகின்றன. அவற்றில் அதிகளவானவை வகைப்படுத்தப்படாதவை [non descriptive].  ஓரிரண்டு மாடுகளை வளர்க்கும் சிறு பண்ணைகள் முதல் சில ஆயிரம் மாடுகளை வளர்க்கும் மிகப்பெரும் பட்டிகளும் இந்த பகுதிகளில் உள்ளன. இங்குள்ள மாடுகளைப் பொறுத்தவரை அவை சராசரியாக ஒரு லீட்டருக்கும் குறைவான தினசரி உற்பத்தியை கொண்டவை. பெரும்பாலும் எரு, கன்று மற்றும் நாம்பன் மாடுகளின் விற்பனையே இந்த மிகப் பெரும் மந்தைக்கூட்டங்கள் மூலம் கிடைக்கும் வருமான வழிகளாக உள்ளன. இலங்கையின் மாட்டிறைச்சித் தேவையை வடக்கு கிழக்கில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் மாடுகளே பெரும்பாலும் பூர்த்தி செய்கின்றன. அத்துடன் ஆடுகள் பெரும்பாலும் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. அதிக பால் உற்பத்தியை உள்ளூர் ஆடுகள் கொடுப்பதில்லை.

மட்டகளப்பு-கால்நடைகளின்-மேய்ச்சல்-நிலம்

நல்லின மற்றும் கலப்பு மாடுகளின் அறிமுகம் உள்ளூர் மாடுகளின் எண்ணிக்கையைக் கணிசமான அளவு குறைத்த போதும் வடக்கு – கிழக்கு பகுதியில் இன்றைய அளவில் கூட மிகப் பெருமளவு கால்நடைகள் நாட்டு மாடுகளாகவே உள்ளன. விதி விலக்காக யாழ் குடாநாட்டில் ஓரளவு நல்லின மற்றும் கலப்பு இன மாடுகள் வளர்க்கப்படுகின்றன. மேய்ச்சல் தரைகள் அங்கு மிக மிகக் குறைவு என்றபடியால் யாழ்ப்பாணத்துக்கே உரித்தான அரை உள்ளக வளர்ப்பு முறை [semi intensive] அங்கு பரந்தளவு கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் வடக்கு – கிழக்கின் ஏனைய பகுதிகளைப் பொறுத்தவரை வெளியே விட்டு வளர்க்கும் முறையே [extensive management] அதிகளவில் உள்ளது. உள்ளக மற்றும் அரை உள்ளக வளர்ப்பு முறைக்கு பெரும்பாலான மந்தை மேய்ப்பாளர்கள் மாறவில்லை என்பதுடன் அந்தக் கால்நடைகளும் அந்த முறைக்கு உகந்தவை கிடையாது. மாடுகளைப் பொறுத்தவரை தினமும் குறைந்தபட்சம் அவற்றின் உடல் நிறையில் பத்து சதவீதம் வரை உணவு கொடுக்கப்படவேண்டும். அதில் பெருமளவு புல், இலைகள் போன்ற தாவர உணவுகளே அமைய வேண்டும். வடக்கு மாகாணத்தில் நான்கு இலட்சம் வரையும் கிழக்கில் ஐந்து இலட்சம் வரையும் மாடுகள் உள்ளன என கணக்கிடப்படுள்ள போதும் [  இலங்கை முழுதும் மொத்தம் 13 இலட்சம் மாடுகள்] அவை சரியான தரவுகளாக உறுதிப்படுத்துவதற்கு முறையான சனத்தொகை கணிப்பீடு அண்மைக் காலத்தில் செய்யப்பட்டிருக்கவில்லை. இங்கு இந்தத் தரவுகளை தரும் கால்நடை வைத்திய நிலையங்கள் சரியான தகவலைக் கணக்கிடும் ஆள் மற்றும் ஆளணி வசதியைக் கொண்டிராத அதேவேளை கால்நடைப் பண்ணையாளரும் தமது உண்மையான கால்நடைகளை வெளிப்படுத்துவதும் கிடையாது. பல கோடி பெறுமதியான கால்நடைகளை வைத்திருப்பவரும் சமுர்த்தி போன்ற வறிய குடும்பங்களுக்கு கிடைக்கும் அரச உதவிகளைப் பெறுவதையும் காணமுடிகிறது. மேற்படி இலட்சக்கணக்கில் உள்ள மாடுகளுக்கு பெரும்போக பயிர்ச்செய்கைக் காலத்தில் உணவுக்கு மேய்ச்சல் தரை இல்லாத நிலையே ஏற்படுகிறது.

மிக அண்மைக் காலத்தில் தான் [10- 15 வருடங்களாக] மேற்படி கால்நடைகளின் மேய்ச்சல் தரைப் பிரச்சினை பூதாகாரம் எடுத்துள்ளது. விவசாயம் செய்யப்படும் காலப்பகுதிகளில் வயல் நிலங்களில் கால்நடைகள் மேயமுடியாது. கால்நடைகள் வயல் வெளிகளில் மேயும் சந்தர்ப்பங்களில் வயல் உரிமையாளர்களால் அவை கட்டி வைக்கப்பட்டு உரிமையாளர்கள் மீது தண்டம் விதிக்கப்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் அத்துமீறும் கால்நடைகள் கத்தி, கோடரி போன்ற கூரிய ஆயுதங்களால் தாக்கப்படுகின்றன. அறுவடைக் காலங்களில் ஆயுதங்களால் வெட்டப்பட்ட கால்நடைகளுக்கு பல முறை கால்நடை வைத்தியர் என்ற வகையில் நான் சிகிச்சை அளித்திருக்கிறேன். குறைந்த விளைச்சலுடைய விவசாயிகள் வேண்டுமென்று தமது விளை நிலங்களை திறந்து கால்நடை உரிமையாளர்களிடம் தண்டப் பணம் பெறும் நிலையையும் நான் அவதானித்திருக்கிறேன்.

கமநல சேவைகள் திணைக்களம், விவசாய அமைப்புகள் போன்றவை உயிர்ப்பாக உள்ள இடங்களில் ஓரளவு மேற்படி கால்நடைகளின் எல்லை மீறுதல்கள் கட்டுக்குள் உள்ளன. மேலும் நகர, மாநகர, பிரதேச சபைகள் வீதிகளில் கட்டாக்காலிகளாக திரியும் ஆடு, மாடுகளை பிடித்து தண்டப் பணம் அறவிடுகின்றன. நகரங்களில் மேய்ச்சலுக்கு இடம் இல்லாதமையால் வீதி ஓரங்களில் உள்ள நீர்ப் பாதைகளை அண்மித்து வளரும் புற்களை மேய்வதற்கு மேற்படி கால்நடைகள் வீதிக்கு செல்கின்றன. வவுனியா நகர சபையால் அடிக்கடி மேற்படி கட்டாக்காலிகளாகத் திரியும் கால்நடைகள் பிடிக்கப்படுவதை அவதானித்திருக்கிறேன். எனது உள்ளகப் பயிற்சியின் [internship] போது இதே நிலைமையை அனுராதபுரம் நகரத்திலும் அவதானித்திருந்தேன். கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லாததன் எதிர்மறை விளைவுகள்தான் இவை. இந்தக் கால்நடைகள் வீதி விபத்துக்களுக்குள் அகப்படுகின்றன. சில ஊர்களில் மாலை நேரங்களில் வீதியால் பயணிப்பது கடினம். நூற்றுக்கணக்கில் மாடுகள் வீதியின் குறுக்காக படுத்திருக்கும். எவ்வளவு பெரிய ஒலியை எழுப்பினாலும் அவை அசைய மாட்டாது. இரவு நேரங்களில் மாடுகளுடன் தொடர்புபட்ட பல விபத்துகள் நிகழ்கின்றன. மேய்ச்சலுக்காக செல்லும் கால்நடைகள் புகையிரதங்களில் மோதுண்டு கூட்டம் கூட்டமாக இறந்து போகும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. இதனால் தேவையற்ற, கால்நடைகள் மற்றும் மனித இழப்புகள் ஏற்படுகின்றன.

யுத்தத்தின் பின் வடக்கு – கிழக்கில் கைவிடப்பட்ட ஏராளமான நீர்ப்பாசனக் குளங்கள் திருத்தப்பட்டும் பல புதிய குளங்கள் அமைக்கப்பட்டும் செய்கை பண்ணப்படாத பயிர் செய்யத்தக்க நிலங்கள் தயார் செய்யப்பட்டும் பாரிய அளவில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்போது நெல் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகள் அதிகரித்திருந்தாலும் அந்தப் பகுதிகள் கால்நடைகள் பாவித்த மேய்ச்சல் நிலங்களே என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி குளங்கள் மற்றும் வயல் நிலங்களில் மேய்ந்து பல்லாயிரக்கணக்கில் அவை பெருகியுள்ள அதேவேளை  மேற்படி விவசாய நடவடிக்கைகள் காரணமாக கால்நடைகள் மேய்ச்சல் தரை நெருக்கடியையும் சந்திக்கின்றன . பயிர்ச்செய்கை தொடர்பான பாரிய திட்டங்களைச் செய்யும் போது கால்நடைகள் தொடர்பான கரிசனைகளை யாரும் பார்ப்பது கிடையாது. பெரும்பாலும் கால்நடைகளை வைத்திருக்கும் பண்ணையாளர்களே பயிர் செய்யும் விவசாயிகளாக இருப்பதும் முரண் விடயமாகும். கால்நடைகள் பாதிப்படைவதால் அல்லது இறப்பதால் ஏற்படும் இழப்புடன் ஒப்பிடும் போது ஏனைய பயிர்ச்செய்கைகளால் ஏற்படும் தேறிய வருமானம் எந்தளவுக்கு இருக்கும் என்பது எனது கேள்வியாகும். ஒரு தடவை, செட்டிகுளத்தில் ஆயிரக்கணக்கான மாடுகளை வைத்திருந்த ஒரு பண்ணையாளர் நூறு ஏக்கர் வரை நெல், கணிசமான அளவு உளுந்து என்பவற்றைச் செய்திருந்தார். தனது மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு வழியின்றி பல மைல் தூரத்துக்கு கொண்டு சென்று [பாவற்குள அலைகரை] வைத்திருந்தார். அந்தவருடம் மட்டும் மாடுகளை பல மைல் தூரம் கொண்டு சென்ற அலைச்சல் மற்றும் குளக்கரைகளில் மேய்க்கும் போது ஏற்படும் பல குடல், இரைப்பை புழுத் தாக்கம் காரணமாக சிறிய கன்றுகள் இளம் மாடுகள் என நூற்றுக்கணக்கில் இழந்திருந்தார். அவரின் நெல் வருமானம், கால்நடைகளின் அந்த வருட இழப்பு, இளம் கன்றுகள் இறப்பதால் ஏற்படும் அடுத்த வருட இழப்புகளை பார்த்தால் அவர் தேறிய நட்டதையே அடைந்திருந்தார். இதில் கவலையான விடயம் அதை அவர் அறிந்திருக்கவில்லை என்பதுதான். நெல் பயிர்ச் செய்கையில் ஏற்படும் இலாப நட்டங்களை இலகுவாகக் கணக்கிட முடியும் என்ற போதும் கால்நடை வளர்ப்பு,  குறிப்பாக இந்த மாதிரியான மேய்ச்சல் முறையில் உள்ள இலாப நட்டங்களை யாரும் இலகுவில் கணக்கிட முடியாது. கணக்கிடுவதும் இல்லை.

எனது கால்நடை மருத்துவ அவதானிப்பில் பெரும்போக பயிர்ச்செய்கைக் காலமான ஒக்டோபர் தொடக்கம் பெப்ரவரி மார்ச் வரையான காலத்தில்தான் கால்நடைகள் அதிக நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இறக்கின்றன. ஏனெனில் இந்தக் காலப்பகுதியில் மேய்ச்சல் தரை இன்றி சரியான உணவு கிடைக்காது. கால்நடைகள் உணவு தேடி பல நூறு கிலோமீற்றர்கள் அலைய வேண்டி ஏற்படுகிறது. இந்த காரணங்களால் அவற்றின் உடல் மெலிந்து நோய் எதிர்ப்புசக்தியும் குறைந்து போகின்றது [low immunity and negative energy balance]. நோயெதிர்ப்புசக்தி குறைந்த நிலையிலுள்ள பலவீனமான கால்நடைகளை கடும் உயிரிழப்பை ஏற்படுத்தவல்ல பரம்பிஸ்டோம் போன்ற ஒட்டுண்ணிகளும் மழை காலத்துக்கே உரித்தான பல பக்றீரியா வைரஸ் நோய்களும் தாக்குகின்றன. அண்மையில் மண்டூஸ் புயலில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் கிழக்கில் ஆயிரக்கணக்கில் மாடுகள் இறக்க நேரிட்டமையுடன் இந்தக் காரணத்தை தொடர்புபடுத்தலாம். அந்தப் பகுதியில் பெரும்போக நெற்செய்கை தொடங்கியதன் காரணமாக மாடுகள் மேய உணவின்றி மெலிந்து காணப்பட்டன. உடலின் தோலின் கீழான கொழுப்புப் படை குறைந்த நிலையில் திடீரென தோன்றிய குளிர் மற்றும் தொடர்ச்சியான மழையால் குளிர் அதிர்ச்சிக்கு உள்ளாகி அவை இறந்துள்ளன. பெரும்பாலும் திறந்த வெளியில் நின்ற அதாவது நேரடியாக மழையையும் குளிரையும் எதிர்கொண்ட மாடுகளே இவ்வாறு இறந்துள்ளன. இதே குளிரையும் மழையையும் எதிர்கொண்ட வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட திறந்தவெளி மாடுகள் இறந்திருக்கவில்லை. அங்கு போதிய மழை கிடைக்காத காரணமாக குளங்கள் நிரம்பியிருக்கவில்லை, வயல் செய்கை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மாடுகள் மேய்வதற்கு அந்த இடங்கள் பயன்பட்டன. இந்த மேய்ச்சல் காரணமாக அந்தப் பகுதி மாடுகள் ஓரளவு கொழுப்புப் படைகளைக் கொண்டிருந்தன எனலாம். இது அவற்றை காப்பாற்றியிருக்கலாம் என்பது எனது கருத்து.

புற்களின் குறைவு கால்நடைகளை வேறு உணவு மூலங்களை தேடச் செய்துள்ளன. குறிப்பாக மனிதனின் உணவுக் கழிவுகள், பொலித்தீன் பிளாஸ்டிக் பொருட்களை உண்ண முயல்கின்றன. இதனால் அவை ஏராளமான உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றன. ஏராளமான விலங்குகள் இறந்து போகின்றன.

வனஉயிர் [wildlife department] திணைக்களம் காட்டிலாகா [forest department] திணைக்களம் என்பன அண்மைக் காலத்தில் மிக கடுமையாக காடுகளில் கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டத்தை தடுப்பதை காணலாம். இதற்கு சட்டவிரோத மரம் வெட்டுபவர்கள்,  வேட்டைக்காரர்களை இவர்கள் காரணம் காட்டுகின்றனர். மேலும் உள்ளூர் கால்நடைகளால் மித மிஞ்சிய மேய்ச்சல் செய்யப்படுவதாக காரணங்களை கூறுகின்றனர். காடுகளை அண்மித்து கால்நடைகளை வளர்க்கும் மக்கள் இந்த நடவடிக்கைகளால் அவற்றை வளர்க்க முடியாத நிலை தோன்றியுள்ளது. அவர்கள் அரசியல் ரீதியாகவே இந்த பிரச்சினையை அணுகுவதாக மேற்படி திணைக்களங்கள் மீது கடுமையான விமர்சனங்களை மந்தை மேய்ப்பாளர்கள் முன்வைக்கின்றனர்.

அரசியல் காரணிகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு பொதுவாக கால்நடைகள் என்று பார்த்தால் காடுகளில் உள்ள சில குறித்த புற்களை மட்டுமே கால்நடைகள் விரும்பி உண்கின்றன. எனவே பல நூறு கால்நடைகள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் மிதமிஞ்சிய அளவில் மேயவிடப்படும்போது மேற்படி குறித்த புல் வகைகள் முற்றாக அழிவடைகின்றன. மான், காட்டெருமை, மரை, யானை போன்ற தாவர உணவு உண்ணும் காட்டு விலங்குகள்,  புற்களின் அழிவு காரணமாக உண்ண உணவின்றி கிராமங்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் நுழைய வேண்டி ஏற்படுகிறது. இதனால் அவை வேட்டையாட மனிதர்களால் குறிவைக்கப்படுகின்றன. மனிதனுடன் நேரடியாக மோத வேண்டியும் ஏற்படுகின்றது. மனித உயிரிழப்பும் ஏற்படுகிறது. மான், மரை போன்ற காட்டு விலங்குகள் குறைவடைய இவற்றை உண்ணும் சிறுத்தை போன்ற உச்சபட்ச வேட்டை விலங்குகளும் அழிவடைகின்றன. மண்ணில் கவசம் போல காணப்படும் சில புல் இனங்கள் தலை தூக்க முடியாமல் அடியோடு மேயப்படுவதால் மண் அரிப்பு ஏற்பட்டு மண்ணின் உறுதிப்பாடு குலைகிறது. இதனால் எதிர்காலத்தில் எந்தவிதத் தாவர இனங்களும் வளர முடியாத மலட்டு மண்ணாக மாற்றமுறுகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன என்பது பல மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வி. உண்மையில் இந்தத் தீர்வு மிகச் சிக்கலானது. நீண்ட நிலைத்திருக்கக் கூடிய விதத்தில் அது அமைய வேண்டும். இந்தப் பிரச்சினை தோன்றும் போது தொடர்புடைய மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டங்களில் இவை காரசாரமாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. மழை முடிந்து அடுத்த பயிர்ச்செய்கை வரை இந்தப் பேச்சுக்கள் எழாது. சில பகுதிகளில் சில இடங்கள் பிரத்தியேக மேய்ச்சல் இடங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளன. இது ஓரளவுக்கு தற்காலிகத் தீர்வு தரக்கூடியது எனினும் இந்த நடவடிக்கை மட்டும் போதாது. நிரந்தரத் தீர்வுகள் காணப்பட வேண்டும். கணிசமாக அதிகரித்துள்ள மாடுகளுக்கு உணவளிக்க இந்த மேய்ச்சல் தரை போதாது. தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி காரணமாக பயிர்ச்செய்கையை அதிகரிக்க அரசு முயல்கிறது. பயிர் செய்யப்படாத நிலம் கையகப்படுத்தப்பட யோசனை முன் வைக்கப்படுகிறது. பெரும்போகம் ,சிறுபோகம் தவிர இடைப்போகமும் செய்ய முயற்சி இடம்பெறுகிறது. இது கால்நடை வளர்ப்பை குறிப்பாக மேய்ச்சல் கால்நடைகளை மேலும் பாதிக்கப்போகிறது.

கால்நடைகள் குறித்த வகைப் புற்களை மட்டும் உண்பதால் அந்தப் புற்கள் தொடர்பான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவை மேய்ச்சல் இடங்களிலும் காடுகளிலும் தொடர்ச்சியாக பயிரிடப்படவேண்டும். இதற்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் வனவள சுற்றாடல் திணைக்களம் போன்றன கூட்டாகச் செயற்பட வேண்டும். பருவம், புவியியல், சூழல் அமைப்பு போன்றவற்றை சரியாக ஆய்வு செய்தல் வேண்டும். கால்நடைகள் உண்ணக்கூடிய புற்கள் விஞ்ஞான ஆய்வுக்கு பின் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நல்லின மற்றும் உள்ளக வளர்ப்புக்குத் தகுந்த கால்நடைகளை புதிதாகத் தெரிவு செய்யலாம், எனினும் உள்ளூர் இனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். அத்துடன் ஆயிரக்கணக்கில் உள்ள கால்நடைகளின் மேய்ச்சல் முறையை ஓரிரு நாளில் மாற்ற முடியாது. அது நடைமுறைச் சாத்தியம் அற்றது. பண்ணையாளர்களுக்கு மித மிஞ்சிய மேய்ச்சலை பற்றி அறிவுறுத்துவதோடு சுழற்சி முறை மேய்ச்சலை ஊக்குவிக்கலாம். மேலும் குறித்த கிராம சபைகள், கால்நடை அமைப்புகள் என்பன மேய்ச்சல் நிலங்களை பரிபாலனம் செய்யலாம்.

குளங்கள், மேய்ச்சல் நிலைகளை அண்மித்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் போன்ற  நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். காடுகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மரம் வெட்டுதல், வேட்டை மற்றும் காட்டை எரித்துச் செய்யப்படும் சேனைப் பயிர்ச்செய்கையையும் கட்டுப்படுத்த வேண்டும். நகர்ப்புறங்களில் முடிந்த வரை உள்ளூர் விலங்குகளை வளர்ப்பதை நிறுத்தி உள்ளக வளர்ப்புக்கு உகந்த கால்நடைகளைத் தெரிதல் சிறந்தது. அவற்றுக்கு சிறிய அளவு இடத்தில் புற்களை வளர்த்து உணவூட்டலாம். அசோலா போன்ற பாசிகளை உணவாக வழங்கலாம். இவை குறித்த சிறிய இடத்திற்குள் வளரக் கூடியன. அண்மையில் வீடுகளுக்குள் தீவனப் பயிர் வளர்க்கும் ஹைட்ரோபோனிக்ஸ் முறை மிகப்பிரபலமாகி வருகிறது என்பதையும் கருத்தில் கொள்க. அரசாங்கமும் அண்மைய நாட்களில் அதிகளவில் விலங்கு உணவுப் பயிர்கள் தொடர்பான பல செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளதைக் காணமுடிகிறது. அத்துடன் பயிர்ச்செய்கைக் காலத்தில் கிடைக்கும் முழு நிலத்தையும் பயிர்ச்செய்கைக்கு மட்டுமே  பயன்படுத்தாமல் மாடுகளுக்கும் குறித்த அளவை ஒதுக்கவேண்டும். விவசாயக் கழிவுகளான வைக்கோல் போன்றவற்றை சேமித்து மேற்படி சிக்கலான காலப்பகுதியில் குறை நிரப்பி உணவுகளாக வழங்கும் போது மாடுகள் முற்று முழுதாகப் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும். நவீன வெட்டும் இயந்திரம் மூலம் வெட்டப்படும் வைக்கோலை மாடுகள் அதிகம் விரும்புவதில்லை என்றபடியால் அதனையும் கருத்திற்கொண்டு புதிய சாத்தியமான இயந்திரங்களைக் கண்டுபிடிக்கலாம்.

மேய்ச்சல் நிலம் கிடைத்ததும் அத்தோடு நிறுத்தாமல் அடிக்கடி அவற்றில் ஆய்வுகளைச் செய்ய வேண்டும். இதற்கு விவசாய, கால்நடை உற்பத்தி திணைக்கள, நிலப் பயன்பாடு தொடர்பான திணைக்களம் மற்றும் பல்கலைக்கழகங்களை பயன்படுத்தலாம். புதிய குடியேற்றங்கள் செய்யும் போதும் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களை முன்னெடுக்கும்போதும் மேற்படி மேய்ச்சல் தரைகளைத் தவிர்க்கலாம். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புல்வெளிகளை அடையாளப்படுத்தல் [mapping] இந்தப் பிரச்சினைக்கு மேலும் தீர்வாக அமையும். எதிர்காலத்தில் மேய்ச்சல் தரைப் பிரச்சினை இன்னும் பல பரிமாணங்களை எடுக்கலாம். பல மந்தை மேய்ப்பாளர்கள் மந்தை மேய்ப்பை கைவிடக் கூடிய நிலை ஏற்படலாம். இதனால் மனிதனின் மிக முக்கிய உணவுத் தேவையான பாலையும் இறைச்சியையும் பெறக் கடுமையாகப் போராடவேண்டி வரலாம். எனவே இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

12779 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)