Arts
17 நிமிட வாசிப்பு

கால்நடைகளில் குடற்புழுக்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகளும் தீர்வுகளும்

February 25, 2023 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

இலங்கையின் பாலுற்பத்திக் குறைவில், கால்நடைகளில் ஏற்படும் குடற்புழுக்களின் தாக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது. குடற்புழுக்கள் கால்நடைகளின் குடல், இரப்பை போன்ற உறுப்புகளில் இருந்துகொண்டு ஊட்டச்சத்துகளையும் இரத்தத்தையும் உறிஞ்சுவதுடன் ஏராளமான நோய்கள் ஏற்படுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் அழிக்கும் முறையான நீக்க மருந்துகளை எமது பண்ணையாளர்கள் வழங்குவதில்லை. குடற்புழு நீக்கம் என்னும் மிக முக்கியமான முகாமைத்துவ நடவடிக்கையை புறக்கணிப்பதால் பல கால்நடைகள் உற்பத்தி மட்டத்தில் குறைவடைவதுடன் கணிசமான அளவில் இறந்தும் போகின்றன. கால்நடை உற்பத்தியில் முன்னணியில் உள்ள பல நாடுகளில்  இந்த குடற்புழு நீக்கம் தொடர்பாக பல முக்கியமான ஆய்வுகள் செய்யப்பட்டு காலத்துக்கு ஏற்ப முறையான மருத்துவ முறைகள், உணவூட்டல் மற்றும் ஏனைய முகாமைத்துவ முறைகளை மேம்படுத்தி குடற்புழுத்தாக்கத்தில் இருந்து தமது கால்நடைகளின் இழப்பை குறைகின்றனர். இந்த கட்டுரை குடற்புழுக்களின் தாக்கம் அவற்றின் பொருளாதாரம் மற்றும் அவற்றை கட்டுப்படுத்துதல் போன்றவற்றை  ஆராய்கிறது.

குடற்புழு-தாக்கத்திற்கு-உள்ளாகியிருக்கும்-கால்நடை-2-1

ஒவ்வொரு வருடமும் மாரி மழையின் பின்னரான காலப்பகுதியில் ஆடு, மாடு எருமை போன்ற கால்நடைகளில் கடும் வயிற்றோட்டம் மற்றும் பலவீனமான உடல் நிலையை அவதானிக்க முடியும். இது பெரும்பாலும் குடற்புழுக்களின்  தாக்கத்தின் காரணமாகவே ஏற்படுகிறது. [இங்கு நான் குடற்புழு  குறிப்பிடுவது  வட்டப் புழுக்கள் [roundworms],கொக்கிப் புழுக்கள் [whipworm], நாடாப் புழுக்கள் [tapeworms], தட்டைப் புழுக்கள் [flatworms] போன்ற அக ஒட்டுண்ணிகளையே]

கால்நடைகளில்  மேற்படி குடற்புழுத் தாக்கம் வருடம் முழுவதும் காணப்படுகின்ற பொழுதிலும் மழைக்காலத்தின் பின்னரான காலப்பகுதியில் தான் அதிக அளவு அவதானிக்கப்படுகிறது. மழைக்காலத்தில் நிலவும் ஈரலிப்பான சூழல் குடற்புழுக்கள் பெருகுவதற்கு சாதகமானது என்பதுடன் குடற்புழுக்களின் வாழ்க்கை வட்டம் பூர்த்தியாகக் கூடிய இடை நிலைக்காவிகளான [intermediate host] நத்தைகளின் பெருக்கமும் நிகழும் காலம் என்பதாலும் மழைக்கு  பின்னரான மாதங்களில் அதிகளவில் குடற்புழு நோய் தாக்கத்தையும் இழப்புகளையும் அவதானிக்க முடிகிறது.

குடற்புழு தாக்கத்தின் அறிகுறிகள்

Common-internal-parasites
  • கால்நடைகளின் உடல் கடுமையாக  மெலிவடையும்
  • வயிறு பானை போல திரவம் நிறைந்து காணப்படும் [Ascitis]
  • உரோமம் சிலிர்த்து காணப்படும். சிலவேளைகளில் உரோமம் வரண்டும் காணப்படும்
  • கழுத்துப் பகுதி வீங்கியது போல காணப்படும். இதனை தந்தம் வீங்கியது என்றும் சொல்வார்கள் [bottle jaw]
  • கால்நடைகளின் கண் மடல், முரசு பகுதிகள் வெளிறிய இரத்தச் சோகை நிலமை அவதானிக்கப்படும் [Anemia]
  • கழிச்சல் அவதானிக்கப்படும். சில வேளைகளில் இரத்தத்துடன் கூடியதான கழிச்சலை காண முடியும். தொடர்ச்சியான கழிச்சல் காரணமாக கால்நடைகளின் பின்புறம் எப்போதுமே ஈரமாகவும் சாணம்/புழுக்கை ஒட்டியபடி இருக்கும். ஆடுகளில் புழுக்கை சாணம் போலவும், கழிச்சலாகவும் காணப்படும். தொடர்ச்சியான கழிச்சல் மற்றும் இரத்த சோகை காரணமாக கால்நடைகள் பலவீனமாகி விழுந்தும் காணப்படும். இறுதி விளைவாக இறப்பு நிகழும். அதிகளவில் இளம் பராயத்து விலங்குகளில் இறப்பு அதிகளவில் நிகழும்.

பொதுவாக கழிச்சல் காரணமாக நீர்ச்சத்து மற்றும் கனியுப்புக்களின் இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக கால்நடைகள் இறக்கின்றன. சிலவகை புழுக்கள் தமது கொக்கி போன்ற உறுப்பினால் கடித்து   இரத்தத்தை அதிகளவில் உறிஞ்சுவதன் காரணமாக இரத்தசோகை நிலைமை ஏற்படுகிறது. குடல் போன்ற உறுப்புகளில் கடிப்பதன் காரணமாகவும் நச்சுப் பொருட்களை சுரப்பதன் காரணமாகவும் கடி காயங்களில் ஏற்படுகின்ற இரண்டாம் நிலை நுண்ணயிர்களின் தொற்று காரணமாகவும் கால்நடைகளில் கழிச்சல் நிலைமை ஏற்படுகின்றது. இந்த காரணிகளை ஒன்று சேர்த்து அழிக்காத வரையில் மேற்படி கழிச்சல் நிலை தொடர்வதோடு விலங்குகள் பாதிப்படைகின்றன. பல இடங்களில் சிகிச்சைகள் வெறுமனே ஒரு காரணியை மாத்திரம் கருதி வழங்கப்படுவதால் குடற்புழு தாக்கத்தின் கழிச்சல் இலகுவில் குணமடைவதில்லை. குடற்புழு தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கால்நடைகளை மீட்டெடுக்க கடுமையான சிகிச்சை தேவை. அதற்கு அதிக செலவும் சிரமும் அவசியம்.

சில புழுக்கள் நுரையீரலை தாக்குகின்றன. இவற்றின் தாக்கம் காரணமாக கால்நடைகள் இருமும், சளி போன்ற திரவங்கள் வடியும். சுவாசிக்க சிரமப்படும். இவற்றின் நீட்சியாக நியுமோனியா நிலை தோன்றி இறப்பு வரை செல்லக் கூடும். சில புழுக்கள் கால்களைத் துளைத்துக் கொண்டு சென்று அரிப்பு நிலையை தோற்றுவிக்கும்.  சில புழுக்கள் கால்நடைகளின் கண் பகுதிக்குள் பாதிப்பை தரவல்லன. மேலும் கால்நடைகளில் ஏற்படும் சில குடற்புழுக்கள் மனிதனையும் பாதித்து நோய்களை ஏற்படுத்தக்கூடியன. அதாவது கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வது அவற்றை மாத்திரமல்ல அவற்றுடன் தொடர்புடைய மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும் முக்கியமான நடவடிக்கையாகும்.

குடற்புழு-தாக்கத்திற்கு-உள்ளாகியிருக்கும்-கால்நடை-3-1

குடற்புழுத் தாக்கத்தின் காரணமாக கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற எதிர்மறை விளைவுகள்

  • கால்நடைகளை உற்பத்தித்திறன் பாதிக்கப்படுகிறது. [productivity]
  • உணவு உட்கொள்ளுகின்ற ஆற்றல் குறைவடைகின்றது.
  • உணவு மாற்றுத்திறன் குறைவடைகிறது.[Feed conversion ratio] கால்நடைகளில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது அதாவது வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இருக்காது.
  • கால்நடைகளின் இனப்பெருக்க ஆற்றல் பாதிக்கப்படும் குறிப்பாக சினை வேட்கைக்கு வருகின்ற அளவு குறைவடையும். வேட்கை அறிகுறிகளை [Heat signs] தெளிவாக அவதானிக்க முடியாத நிலை தோன்றுகிறது. மேலும் குடற்புழு தாக்கம் காரணமாக கால்நடைகள் சினைக்கு வருவதும் சினைப்படுதலும் குறைவடையும்.
  • சில புழுக்கள் குடலில் முடிச்சுக்களை [pimply gut] ஏற்படுத்தி உணவு அகத்துறிஞ்சலை பாதிக்கின்றன. முக்கிய சுரப்புகளை சுரக்கும்  இரப்பைப் கலங்கள் பாதிப்படைவதால் அவை சுரக்கும் அவசியமான சுரப்புகள் குறைவடைந்து உணவு செரிமானமும் பாதிக்கப்படுகிறது.
  • தொடர்ச்சியான குடற்புழு தாக்கம் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி [immune suppression] குறைவடைந்து பல்வேறு நோய்களுக்கு இந்த கால்நடைகள் உட்படுகின்றன.
Stomach-Worm-life-Cycle-1

கால்நடைகளுக்கு குடற்புழுத் தாக்கம் எப்படி ஏற்படுகிறது ?

கால்நடைகள் அதிகளவில் குடற்புழுக்களை மேய்ச்சலின் போதே பெற்றுக் கொள்கின்றன. குறிப்பாக நீர்நிலைகளை அண்டிய மேய்ச்சல் தரைகளில் இளம் பராயத்து புழுக்கள் அதிகம் இருக்கும். அதுவும் வெயில் வர முன்னரும் மாலை நேரத்திலும் புற்களின் நுனிப்பகுதியில் அவை காணப்படும். அவற்றை உண்ணும் உண்ணும் கால்நடைகள் தொற்றுக்கு உள்ளாகின்றன. மேலும் வயதான கால்நடைகளுடன் ஒன்றாக வளர்க்கப்படும் இளம்பராயத்துக் கால்நடைகள் தொற்றுக்கு உள்ளாகின்றன. சுகாதாரமில்லாத கால்நடைக் கொட்டகைகளின் காரணமாகவும் பொதுவான மேய்ச்சல் தரைகளினாலும் தொற்றுக்கள் ஏற்படுகின்றன. யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கு கிழக்கின் ஏனைய மாவட்டங்களில் எரு விற்பனை செய்வதற்காக கால்நடைகளின் சாணம் அப்படியே பட்டிகளில் பல நாட்கள் விடப்படுகின்றன. இதனால் பல கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக இளம் கால்நடைகள் அதாவது எரு விற்று பெறும் வருமானத்தை விட அந்த எருக்களால் பரவும்  குடற்புழுக்களின்  தாக்கம் காரணமாக ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம். இதனை பல பண்ணையாளர்கள் உணர்வது கிடையாது.

குடற் புழுக்களைக் கட்டுப்படுத்துதல்

மருத்துவத்தில்  எப்பொழுதுமே வருமுன் காப்பதுதான் சிறந்தது. நடைமுறையில் கால்நடைப் பண்ணையாளர்கள் கால்நடைகள் பாதிக்கப்பட்ட பிறகு அதாவது கழிச்சல் அல்லது கால்நடைகள் விழுந்த பிறகுதான் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்தைக்  கொடுக்க வேண்டும் என்று கால்நடை வைத்தியரிடம் வருவார்கள். அவர்கள் அப்படி வரும்பொழுது அவர்களுடைய பண்ணையில் ஏராளமான கால்நடைகள் மீள முடியாத நோய் நிலையோ அதிகளவில் மரணமடைந்த நிலையோ தான் காணப்படும். பெரும்பாலானவர்களுக்கு தங்களுடைய கால்நடைகள் இந்த குடற்புழுக்களின் தாக்கத்தின் காரணமாகத்தான் இறந்தன என்பது தெரியாமல் இருக்கும். வைத்தியரிடம் வேறு வேறு துணைக்காரணிகளைச் சொல்லி சிகிச்சையை செய்யக் கேட்பார்கள். வைத்தியரல்லாத சட்ட விரோத சிகிச்சையாளர்கள் மற்றும் பண்ணைக் பொருள் விற்கும் கடைக்காரர்கள்  பண்ணையாளர்கள் கூறும் துணைக் காரணிகளுக்கு சிகிச்சையை வழங்கச் சென்று கால்நடைகள் மேலும் இறக்கின்றன.

குடற்புழு-தாக்கத்திற்கு-உள்ளாகியிருக்கும்-கால்நடை-1-1

நடைமுறையில் கால்நடைகளுக்கு குடற்புழு மருந்துகள் கால்நடைகளின் உடல் நிறைக்கு ஏற்பவே வழங்கப்படும். எனினும் பெரும்பாலான பண்ணையாளர்கள் உடல் நிலையை சரியாக கணிப்பது கிடையாது. உண்மையான நிறையை விட குறைந்த அளவு நிறையே அவர்கள் அனுமானிப்பதன் காரணமாக தேவைக்கும் குறைந்த அதாவது புழுக்களை முற்றிலும் அழிக்க முடியாத அளவிலேயே வழங்கப்படுகிறது. இதனால் குடற்புழுக்கள் தப்பிப் பிழைத்து அந்த மருந்துக்கு எதிரான எதிர்ப்பு நிலையை தோற்றுவிக்கின்றன. மேலும் தொடர்ச்சியாக ஒரே மருந்தை வழங்குவதாலும் இந்த மாதிரியான எதிர்ப்பு நிலை தோன்றுகிறது. எனது அனுபவத்தில் சில குறித்த பண்ணையாளர்கள் கால்நடைகளின் இறைச்சி நிறையை மாத்திரமே அதாவது கிட்டத்தட்ட உண்மை நிறையின் அரைவாசியையே அவர்கள் கால்நடைகளின் நிறையாக கருதுவார்கள். வைத்தியரிடம் சொல்லுவார்கள். மேலும் குடற்புழு மருந்துகளை ஆங்காங்கே காணப்படுகின்ற பண்ணைக் கடைகளிலேயே வாங்குவார்கள். அந்தக் குடற்புழு மருந்துகள் காலத்துக்கு பொருத்தமற்றதாகவும் பெரும்பாலான குடற்புழுக்களை நீக்க முடியாததாகவும் காணப்படுகின்ற சூழ்நிலையில் இந்த குடற்புழு மருந்துகளை கொடுப்பது வீண். ஒவ்வொரு புழுவும் ஒவ்வொரு காலத்தில் காணப்படும். அதற்கு பிரத்தியேகமான மருந்துகளை கொடுக்க வேண்டும். சில வேலைகளில் குடற்புழு மருந்துகளை நீண்ட காலம் வாங்கி வைத்திருப்பார்கள் இதனால் அவை காலாவதியாகியும் காணப்படும். வெயில் மழையில் காணப்படும். அந்த மருந்துகளையும் கொடுத்து விடுவார்கள். அவை முறையாக வேலை செய்யாது.

திரவமாக  மாத்திரையாக தூளாக என பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. அந்தந்த குடற்புழு மருந்துகளை அந்தந்த முறையில் தான் கொடுக்க வேண்டும் சிலவேளைகளில் மாத்திரைகளை இடித்துக் கொடுப்பார்கள். அது பிரயோசனம் கிடையாது. சில குடற்புழு மருந்துகள் மாத்திரையாக இருக்கும் பொழுது நீண்ட நேரத்துக்கு உடலில் தங்கி கரைந்து கொஞ்சம் கொஞ்சமாக அவை வேலை செய்யும். அவற்றை தூளாக்கிக் கொடுக்கும் பொழுது அவை உடலில் தங்காது உடனடியாகவே வெளியேறிவிடும் இதன் காரணமாக அந்த குடற்புழுக்களுக்கு எதிராக அந்த மருந்து தொழிற்பட முடியாத நிலைமை ஏற்படுகிறது. எனவே அந்தந்த வடிவத்தில் இருக்கின்ற குடற்புழு மருந்துகளை அந்தந்த வடிவத்திலேயே நீங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். நாங்கள் பொதுவாக குடற்புழு மருந்துகளை ஓரளவு வெறும் வயிறாக  காணப்படுகின்ற காலை நேரங்களிலேயே கொடுக்கச் சொல்லுவோம் இதன் காரணமாக உச்சபட்ச பயனை பெற்றுக் கொள்ள முடியும். சில வேலைகளில் உணவு கால்வாய் தொகுதியில் குடற்புழு மருந்தை கொடுப்பதற்கு பதிலாக பிரக்கடிப்பது மூலம் சுவாச பகுதிக்குள் குடற்புழு மருந்து சென்றால் அந்த கால்நடைகள் பிரக்கடிப்பு  காரணமாக இறக்க வாய்ப்பிருக்கிறது. சிலவேளைகளில் மிதமிஞ்சிய  அளவில் குடற்புழு மருந்துகளை கொடுத்தாலும் குறிப்பாக இளம் கால்நடைகளுக்கு பாதிப்பினையே தரக்கூடியது..

குடற்புழு மருந்துகள் பரந்த வீச்சினை கொண்டிருக்க வேண்டும் அவை முதிர்ந்த, இளம் புழுக்கள் மற்றும் குடம்பி, முட்டைகளை அழிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதுடன் கால்நடைகளுக்கு இலகுவாக வழங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். விலை கட்டுப்படக் கூடியதாக இருக்க வேண்டும். அத்துடன் மனித பாதுகாப்பு இங்கே மிக முக்கியமான விடயமாக கருதப்பட வேண்டும். சில குடற்புழு மருந்துகள் பால், இறைச்சியினூடாக, விலங்குகளின் கழிவின் ஊடாக ஏனைய கால்நடைகள் மற்றும்  மனிதர்களுக்கு செல்லக் கூடியன. அதனையும் கவனமாக பரிசீலிக்க வேண்டும். முடிந்தவரை பக்க விளைவற்ற / பக்க விளைவு குறைந்த மருந்துகளை கொடுக்க வேண்டும். நான் முன்பு கூறியது போல ஒரே மருந்தினை தொடர்ச்சியாக கொடுப்பதும் பிரயோசனம் கிடையாது. குடற்புழுக்கள் அந்த மருந்துக்கு இயைபாக்கம் அடைந்து விடும். எனவே கால்நடை வைத்தியரின் பரிந்துரைக்க அமைய மாறுபட்ட மருந்துகளை பொருத்தமான மருந்துகளை கொடுக்க வேண்டும்

பெரும்பாலும் குடற்புழு நோய்த் தாக்கம் இளம் கன்றுகள்,  குட்டிகளையே பாதிக்கின்றன. அதிக அளவில் இறக்கின்றன. ஏனெனில் அவை குடற்புழுக்களுக்கு அவற்றின் நச்சுகளுக்கு இயைபாக்கம் அடைந்திருக்காது. ஓரளவு பெரிய மாடுகள் குடற்புழுவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியினை [immunity] பெற்றிருக்கின்றன. அவை மெதுவாக நோய் எதிர்ப்பு சக்தியினை அடைந்திருக்கும். வெளிநாட்டு இன மாடுகள் மற்றும் கலப்பு இன மாடுகளை விட உள்ளூர் இன மாடுகள் குறிப்பாக நாட்டு மாடுகள் அந்தந்த ஊர்களில் உள்ள குடற்புழுத் தாக்கத்திற்கு எதிரான இயைபாக்கத்தினையும் எதிர்ப்பு சக்தியினையும் பெற்றிருக்கும். இளம் பராயத்து விலங்குகளின் இழப்பு அன்றைய பண்ணையின் வருமானத்தை பாதிப்பதுடன் எதிர்காலத்தின் பண்ணையின் இருப்பையும் கேள்விக்கு உட்படுத்தும் இழப்பாகும். எனவே முடிந்தவரை இளம் விலங்குகளுக்கு குடற்புழு வரக் கூடிய சாத்தியங்களை குறைப்பதுடன் முறையான மருந்துகளை கிரமமாக வழங்க வேண்டும்.

பொதுவாகப் பண்ணையாளர்கள் சினைப்பட்ட மாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து கொடுக்கத் தயங்குவதை காண முடிகின்றது. ஆரம்ப காலத்தில் இருந்த குடற்புழு மருந்துகள் சிலவேளைகளில் அவற்றுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி இருந்தாலும் தற்காலத்தில் இது தொடர்பாக செய்யப்பட்ட பல விஞ்ஞான ஆய்வுகளிடம் அடிப்படையில்  சினைக்காலத்திலும் பாதுகாப்பாக பாவிக்கத்தக்க மருந்துகள் தற்பொழுது சந்தையில் இருக்கின்றன. அதனை நீங்கள் பொருத்தமான கால்நடை வைத்தியரிடம் பரிந்துரையைக் கேட்டு அவரிடம் இருந்து பெற்றுக் கொள்வது சிறப்பானது. பொதுவாக மாடுகளுக்கு முன் சினை காலத்திலும் பின் சினை காலத்திலும் கொடுக்காமல் இடைப்பட்ட காலத்தில் [between 4-7 months] வழங்கலாம். முன் சினைக் காலம் கருவின் உடல் கட்டமைப்புகள் தோற்றம் பெறுகின்ற காலம் என்பதுடன் அப்போது ஏற்படும் சிறிய அழுத்தமும் கருவை பாதிக்ககூடும். பின் சினைக் காலப்பகுதியிலும் மாடுகளுக்கு அழுத்தம் தரக் கூடாது என்பதால் குடற்புழு நீக்க மருந்துகளை நாங்கள் பரிந்துரைப்பது கிடையாது. எனினும் சில மேம்படுத்தப்பட்ட மருந்துகள் அந்தக் காலத்திலும் பாவிக்கக் கூடியதாக தற்பொழுது காணப்படுகின்றன.

மேலும் மக்கள் மழைக்காலத்தில் குடற்புழு நீக்க மருந்துகளை கொடுப்பதனை தவிர்க்கின்றனர்.  இதுவும் தவறான ஒரு நடைமுறை. எங்களுடைய நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர்- நவம்பர்- டிசம்பர் மாதங்களில் பெய்கிறது. இந்த காலத்தில் தான் நீர்நிலைகள் நிரம்புகின்றன. ஏராளமான நத்தைகள் பெருகின்றன. பெரும்பாலான குடற்புழுக்கள் நத்தைகளின் மூலமே பரவல் அடைகின்றன. இந்த நேரத்தில் கால்நடைகள் அந்தந்த பகுதியில் மேய்ச்சல்  செய்கின்ற பொழுது இந்த குடற்புழு இலகுவில் கால்நடைகளுக்கு  தொற்றுகிறது. எனவே மழை காலத்துக்கு முன்னரும் மழைக்காலத்திலும் மழைக்காலத்தின் பின்னரும் கட்டாயம் இந்த குடற்புழு நீக்க மருந்துகளை கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் இந்த நத்தைகள் மூலம் பரவுகின்ற குடற்புழுக்களின் பாதிப்பினை நாங்கள் குறைத்துக் கொள்ள முடியும். மேற்படி காலத்தில் தான் அதிகளவில் ஆடுகள் குட்டி ஈனுகின்றன. மாடுகள் கன்று ஈனுகின்றன. இந்த இளம்பராயத்து கால்நடைகளுக்கு கட்டாயம் குடற்புழு நீக்க மருந்தினை கொடுத்தே ஆகவேண்டும். அது மழை காலமாக இருந்தாலும் இல்லையெனினும்  பரவாயில்லை.

மழை காலத்தின் பின்னர் பொதுவாக கால்நடைகள், குளங்களை அண்மித்த பகுதிகளில் மேய்ச்சலில் ஈடுபடும்போது பெரும்பாலானவை குடற்புழுத் தாக்கத்துக்கு உள்ளாவதோடு வறட்சியான காலப்பகுதில் செறிவாக எஞ்சிய நீர்நிலைகளின் தண்ணீரை அருந்துவது மூலமும் சில வகையான புழுக்களின் தொற்றுகைக்கு உள்ளாகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குடற்புழு நீக்க மருந்தினை பொறுத்தவரையில் கன்றுகள் பிறந்து மூன்று கிழமைகளில் முதலாவது தடவை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும் அதன் பின் ஒவ்வொரு மாதமும் ஆறு மாதம் வரையில் கொடுக்க வேண்டும். அதன்பின் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை ஒரு வருடம் வரை கொடுக்க வேண்டும். அதன் பின் ஆறு மாதத்திற்கு ஒரு தடவை கொடுக்க வேண்டும் அந்தந்த பகுதியில் தன்மைக்கு ஏற்ப கால்நடை வைத்தியரின் பரிந்துரைக்கு அமைய  ஏற்ப மாற்றம் செய்யலாம். ஒரே மருந்தை தொடர்ச்சியாக கொடுக்காமல் மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும். ஆடுகளைப் பொறுத்தவரையில் மூன்று கிழமைகளில் குடற்புழு மருந்தினை தொடங்க வேண்டும். அதன் பின் ஒவ்வொரு மாதமும் 3 மாதம் வரையில் மருந்துகளை கொடுக்க வேண்டும். அதன்பின் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு தடவை மருந்தினை கொடுக்க வேண்டும் எருமை மாடுகளை பொறுத்தவரை அவை தாயின் கருப்பையில் இருந்தே குடற்புழுக்களை பெற்றுக் கொள்கின்றன. இதன் காரணமாக முதற் கிழமையிலேயே நாங்கள் அவற்றிற்கு குடற்புழு நீக்க மருந்தினை கொடுக்க பரிந்துரைக்கிறோம். அதேபோன்று எருமை மாடுகளின் தாய் மாடுகளுக்கும் இறுதிச் சினைக் காலத்திலும் குடற்புழு நீக்க மருந்துகளை கொடுக்க வேண்டும்.

இலங்கையில் உலர்  வலயத்தில் மழைக்காலத்தின் பின்  பரம்பிஸ்ட்ரோம் என்று சொல்லப்படுகின்ற ஒருவித தட்டைப்புழு அதிகளவு பாதிப்பினை ஏற்படுத்தி கால்நடைகளின் பெரும் இறப்புக்கு காரணமாக அமைகிறது. அது தொடர்பாக கூடிய கவனத்தை செலுத்துதல் வேண்டும். ஒரே நேரத்தில் பல புழுக்கள் கால்நடைகளை பாதிப்பதால் வீரியம் மிக்க புதிய கூட்டிணைவுடன் கூடிய நவீன மருந்துகளை கொடுப்பது சாலச் சிறந்தது.

நான் முன்பு கூறியதைப் போல குடற்புழுக்களின் பாதிப்பை முறையான கொட்டகை சுத்தம், மேய்ச்சல் முகாமைத்துவம், பருவத்துக்கு ஏற்ற குடற்புழு மருந்துகளை வழங்குவதன் மூலம் குறைக்க முடியும். பண்ணையாளர்களுக்கு தெரியாத வகையில் குடற்புழுத் தாக்கம் கால்நடைகளைப் பாதிப்பதோடு வருடாந்தம் கணிசமான பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகின்றது. மேலை நாடுகளில் இது தொடர்பாக பல ஆய்வுகள் பொருளாதார ரீதியாக செய்யப்படுகின்ற போதும் இலங்கையில் இவ்வாறான நடவடிக்கைகள் மிக மிகக் குறைவு என்பது முக்கிய குறைபாடு ஆகும். குடற்புழுத் தாக்கத்தால் ஏற்படும் கால்நடைகளின் வளர்ச்சிக் குறைவு அவற்றின் பருவமடைதலை தாமதப்படுத்துகின்றது, அவை சினைப்பட்டு கன்றை ஈனுவது தாமதமடைகிறது. இதனால் பால் உற்பத்தி செய்யத் தொடங்குவதும் தாமதமடைகிறது. இது மேலதிக பாரமரிப்பு செலவை ஏற்படுத்துகிறது. குடற்புழுத் தாக்கத்துக்கு உட்படும் மாடுகள் பொதுவாக குறைவான பாலையே உற்பத்தி செய்கின்றன. கால்நடைகள் கன்றை ஈனும் போது மறை சக்தி இழப்பு காரணமாக உடல் நிறை கணிசமாக குறைகின்றன. மேலதிகமாக குடல் புழுக்களின் தாக்கமும் ஒன்று சேர்வது மூலம் மேலும் மேலும் பாதிப்பையே தருகின்றன. அடுத்த முறை சினைப்படுதலும் பாதிக்கப்படும். கால்நடைகளில் உற்பத்தி தொடர்பான பல நோய்களும் ஏற்பட ஏதுவாகின்றன. அத்துடன் உடல் வளர்ச்சி குறைவதால் இறைச்சிக்கு விற்கும் மாடுகளின் நிறை குறைந்து பெறுமதியும் குறைகிறது. கன்றுகளின் இழப்பு எதிர்கால மாடுகளுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. சிகிச்சையின் செலவு மேலதிக பொருளாதார நட்டத்தை தருகின்றது. இப்படியாக பார்ப்பதற்கு சாதாரண விடயம் போல் தெரியும் குடற்புழுக்கள் கணிசமான பொருளாதார வீழ்ச்சியை இலங்கையின் கால்நடைத் துறைக்கு தருகின்றன. எனவே இதனை முறையாக கையாள்வதன் மூலம் இந்த இழப்புகளை தவிர்க்க முடியும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

15275 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)