Arts
15 நிமிட வாசிப்பு

கறவை மாடுகளின் இனப்பெருக்கச் சிக்கல்களும் பொருளாதாரத் தாக்கமும்

March 14, 2024 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

கறவை மாடு வளர்ப்பில் இனப்பெருக்க முகாமைத்துவம் மிக முக்கியமானது. ஒரு மாடு சினைப்பட்டு கன்றை ஈனும் போதுதான் பால் கிடைக்கும். வளர்ப்பதற்கு கன்றுகள் கிடைக்கும். எனவே கறவை மாடு வளர்ப்பின் முக்கிய அடிப்படையே மாடுகள் சினைப்படுவது தான். இயற்கையில் மாடுகள் சினைப்படுதல் அவ்வளவு இலகுவானது கிடையாது. பல காரணிகளால் அச் செயற்பாடு தடைப்படுகின்றது; தாமதமடைகிறது.

முன்னைய காலத்தில் இயற்கையில் பசுமாடுகளும் காளைகளும் ஒருங்கே காணப்பட்டு ஒரு விகிதத்தில் கன்றுகள் பிறந்தன. அன்றைய மாடுகளில் அவ்வளவாக பாலுற்பத்தி கிடைத்திருக்கவில்லை. எம் சூழலில் வாழ்ந்த நாட்டு மாடுகள் பாலுற்பத்தி குறைந்தவை என்பதுடன் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறைதான் கன்றையும் ஈன்றன. மனிதர்களுக்கு பால் தேவையும் அதிகமாக இருந்திராத அன்றைய சூழலில் மனித குடித்தொகையும் மிகக் குறைவாகவே இருந்தது. தற்போது அப்படியா? இன்றைய உலக மனித குடித்தொகை 8 பில்லியனையும் கடந்துள்ளது. மனித உணவுத் தேவையின் மிக முக்கிய பண்டமாகிய பாலின் தேவையும் அதிகரித்துளளது. சோயா, ஓட்ஸ் போன்ற மாற்றுப் பால் உற்பத்தி மூலங்களின் கண்டுபிடிப்பும் ஆடு, லாமா, ஒட்டகம் போன்ற ஏனைய விலங்குகளின் பாலுற்பத்தியும் சேர்ந்துள்ள நிலையில் இன்னும் கறவை மாடுகளின் பாலும் எருமைகளின் பாலுமே மனித பால் நுகர்வின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

cow

அதிக பாலுற்பத்தி தரும் இயந்திரங்களாக நவீன பசுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மிகச்சிறந்த ஊட்டச்சத்து வழங்கலும் செயற்கைமுறைச் சினைப்படுத்தலுடன் கூடிய நவீன தேர்வு மூலமான கறவை மாட்டு இன உருவாக்கமும் இன்றைய பாலுற்பத்தியை அதிகரித்துள்ளன. எனினும் பாலுற்பத்தி அதிகரித்த அளவுக்கு ஏனைய காரணிகள் வளர்ச்சியடையவில்லை; குறிப்பாக இனப்பெருக்க ஆற்றல் வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னைய காலத்தில் தன் வாழ்நாளில் எட்டு, பத்து கன்றுகளை மாடுகள் ஈன்றிருந்தன. எனினும் பாலுற்பத்தி இயந்திரங்களான நவீன பசுக்கள் மூன்று, நான்கு கன்றுகளுக்கு மேல் ஈனவே முடியாத நிலை தோன்றியுள்ளது. அதன் பிறகு அவை சினைப்பட சிரமப்படுகின்றன. சினை அறிகுறிகளை காட்டாமல் இருக்கின்றன. ஆரம்பநிலை கருச்சிதைவு ஏற்படுகிறது. கன்றைத் தாங்க முடியாத பலவீனமான கருப்பை உருவாகிறது. பல உற்பத்தி நோய்கள் தோன்றுகின்றன. 

நவீன கால்நடை வளர்ப்பில் கொடிகட்டிப் பறக்கும் பல மேலைநாடுகளில் மூன்று கன்று ஈன்ற மாடுகள் இறைச்சிக்கு வழங்கப்படுகின்றன (மூன்று கன்றுகளுக்கு மேல் மாடுகளில் இனப்பெருக்க ஆற்றல் குறைவதோடு பால் காய்ச்சல், கீட்டோசிஸ் போன்ற பல உற்பத்தி நோய்களும் தோன்றுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன). மேலைநாட்டுப் பண்ணைகள் உற்பத்தி வருமானம் மற்றும் செலவு போன்றவற்றை மாத்திரமே கருத்திற் கொள்கின்றனர். அவர்களுக்கு மாடு வளர்ப்பு ஒரு வருமானம் தரும் தொழில். மாடு ஒரு இயந்திரம். பயன் குறையத் தொடங்கினால் தூக்கி எறிந்துவிட்டு அடுத்த வலுவுடைய இயந்திரத்தைத் தேடுகின்றனர். இலங்கை, இந்தியாவில் அப்படி இலகுவில் செய்துவிட முடியாது. சமயமும் கலாசாரமும் மாடுகளுடன் பின்னிப் பிணைந்தவை. மக்களும் அவற்றுக்கு பழக்கப்பட்டுள்ளனர். வளர்ப்பு பசுக்களை இலகுவில் கொல்ல முடியாது. விபத்தில் சிக்கி  நடக்கவே சிரமப்படும் மாடுகளை கருணைக் கொலை செய்யவே மறுக்கும் நிலையை பல இடங்களில் சந்தித்திருக்கிறேன். இலங்கையின் 1958 ஆம் ஆண்டின் விலங்குச் சட்டத்தின் (Animal act) படி 12 வயதுக்கு உட்பட்ட பெண் விலங்கை கால்நடை வைத்தியரின் பொருத்தமான பரிந்துரை இல்லாமல் கொல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

calf and cattle

இந்த நிலையில் கறவை மாடுகளுக்கு ஏற்படும் சினைப்படுத்தலில் உள்ள சிக்கல்களை தீர்த்துக்கொண்டு அதனை பாலுற்பத்தியுடன் சமாந்தரமாக கொண்டு செல்லுதல் அவசியமாகிறது. இலங்கையின் கால்நடைகளுக்கு அவை வாழும் பகுதிகளின் அடிப்படையில் இனப்பெருக்க கொள்கை (Breeding policy) தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலநிலை வலயத்துக்கும் (Agro climatic zone) பொருத்தமான கால்நடைகள் தொடர்பாக இதில் தெளிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைக்கு பொருத்தமற்ற வகையில் கறவை மாடுகளை வளர்க்கும் போது அவை பல சிக்கல்களைச் சந்திக்கின்றன. அவற்றில் முக்கியமானவை இனப்பெருக்கம் சார்ந்தவை. உதாரணமாக உலர் வலயத்துக்கு பொருத்தமற்ற பிரீசியன் போன்ற தூய ஐரோப்பிய இனங்களை வளர்க்கத் தொடங்கும் போது அவை சினைப் பிடிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளத் தொடங்கும். வெப்ப அயர்ச்சி காரணமாக கருத்தங்குவது சவாலுக்கு உட்படுகிறது. உலர் வலயத்தில் இந்த வகை அதியுற்பத்தியுடைய மாடுகளின் அடிப்படைச் சுகாதார மற்றும் இனப்பெருக்க விடயங்களை பேணுவது சிரமமாகும். மேலும் அண்மைக் காலத்தில் சராசரியாக குளிர் காலநிலைக்கு வகைப்படுத்தப்பட்ட இடங்களின் சராசரி வெப்பநிலை கூட கணிசமாக உயர்ந்துள்ளது. உலக வெப்பமயமாதல் இதற்கு காரணமாக அமைகிறது என்பது காலநிலையாளர்களின் கருத்தாகும். இங்கு வளர்க்கப்படும் ஐரோப்பிய வகை மாடுகளும் சினைப்படுதலுக்கு சிரமப்படுகின்றன.

பொதுவாக கறவை மாடுகளில் சிலவற்றுக்கு நோய்நிலைமைகள் ஏற்படும் போது கருப்பை பாதிக்கப்படுகிறது. சில நுண்ணுயிர்கள் கன்று ஈன்ற சில நாட்களில் கருப்பைக்குள் சென்று தொற்றை ஏற்படுத்துகின்றன. நஞ்சுக் கொடி விழாமை கருப்பைத் தொற்றை ஏற்படுத்தும் முக்கிய காரணியாகும். ஊட்டச் சத்துக் குறைவு, ஓமோன் பற்றாக்குறை, இரட்டைக் கன்று, கன்று ஈனச் சிரமப் படல், c – section சத்திரசிகிச்சை, கருச்சிதைவு போன்ற காரணிகளால் நஞ்சுக்கொடி விழாத நிலை தோன்றுகிறது. விழாமல் இருக்கும் நஞ்சுக்கொடி நுண்ணங்கித் தொற்றால் அழுகலடைந்து கருப்பையையும் பாதிக்கிறது. பல ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் நஞ்சுக்கொடி தங்கும் கால்நடைகளின் கருப்பை பாதிக்கப்பட்டு அடுத்தமுறை சினைப்படுதல் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ பாதிக்கப்படுகிறது. ஆரம்பநிலையில் கருப்பைத் தொற்றைச் சரிப்படுத்தாவிட்டால் அது மாட்டை மலடாக்குவதோடு அதிக செலவையும் ஏற்படுத்துகிறது. இதற்கு நீண்ட கால மற்றும் கடுமையான சிகிச்சை தேவை. 

milking

மேலும், இலங்கையின் பல கால்நடைகள் சினைப்பருவ அறிகுறிகளை காட்டாத நிலையே காணப்படுகிறது. குறிப்பாக அவற்றின் சூலக சுழற்சி தடைப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றபோதும் நுண் ஊட்டச்சத்துக் குறைவு மற்றும் வெப்ப அயர்ச்சியுமே பிரதான காரணிகளாகும். இலங்கையிலுள்ள பெரும்பாலான மாடுகளுக்கு பொருத்தமான உணவு கிடைப்பதில்லை. இதனை இன்னும் விரிவாக சொல்வதாயின் சரியான ஊட்டப் பெறுமானமுள்ள உணவு கிடைப்பதில்லை என்பதுடன் சரியான அளவிலும் கிடைப்பதில்லை. உலர் வலயத்தில் வாழும் மேய்ச்சலை நம்பிய மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் வருடா வருடம் குறைவடைகிறது. திட்டமிடப்படாத விவசாய மற்றும் நீர்ப்பாசன கொள்கைகள் இதற்கு பிரதான காரணிகளாகும். நெல் உற்பத்தியை மாத்திரம் அடிப்படையாக கொண்டு பல நீர்ப்பாசன மற்றும் விவசாய வேலைத்திட்டங்கள் செய்யப்படும் போது அங்கு இயற்கையாக மேய்ந்த மாடுகளுக்கு மேய்ச்சல் தடைப்படுகிறது. தினமும் பல இடங்களில் மேய்ப்பதற்காக பல நூறு கிலோமீட்டர் பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் மாடுகள் மெலிவதோடு மிகக் கடுமையான அழுத்தத்துக்கும் உள்ளாகின்றன. அத்துடன் வாழ்வதற்கான மிகக் குறைந்த ஊட்டமே கிடைக்கிறது. இனப்பெருக்கத்துக்கு தேவையான நுண் ஊட்டங்களை நினைத்தும் பார்க்க முடியாது. ஊட்டச்சத்துக் குறைவால் மிக முக்கியமான இனப்பெருக்கம் சார்ந்த உடற் திரவங்களின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. இதனால் இனப்பெருக்கம் சார்ந்த பல பிரச்சனைகள் தோன்றுகின்றன. இலங்கையில் உள்ள மாடுகளில் அதிகளவானவை இனப்பெருக்க ஆற்றல் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ பாதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. முறையான இனப்பெருக்க சுழற்சியில் உள்ளவை மிக மிகக் குறைவானவையே. இவற்றை உற்பத்தியற்ற விலங்குகளாகவே கருதமுடியும். இந்த வகை விலங்குகள் பாலையும் கன்றுகளையும் தராத அதேவேளை உணவுக்காக உற்பத்தி  விலங்குகளுடன் போட்டி போடுகின்றன. அண்மைக் காலத்தில் மேய்ச்சல் தொடர்பான பிரச்சினைகளால் பல பண்ணையாளர்கள் தம் மாடுகளை இறைச்சிக்கு விற்கும் நிலை அதிகரித்துள்ளது.

இலங்கையில் வெப்ப அயர்ச்சி கால்நடைகளின் இனப்பெருக்க ஆற்றலை கடுமையாக பாதிக்கும் ஒரு காரணியாகும். வெப்ப அயர்ச்சிக்கு உட்படும் கால்நடைகளின் உடல் தொழிற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக இனப்பெருக்கத்துக்கு தேவையான ஓமோன்களின் செயற்பாடு பாதிக்கப்படுகின்றது. இதனால் சினை அறிகுறிகள் உருவாகாது; கருத்தங்க முடியாது; கருச்சிதைவு தோன்றுகிறது. (பல இடங்களில் ஆரம்ப நிலைக் கருச்சிதைவை பண்ணையாளர்கள் கண்டுபிடிக்காது விடுகின்றனர். கடைசிவரை மாடுகள் சினைப்பட்டதாகவே கருதி காத்திருப்பார்கள். சினைப்பட்ட மாடுகளும் சினைப்பருவ வேட்கை அறிகுறிகளை காட்டாது என்பதால் இந்தக் குழப்பநிலை உருவாகிறது. கால்நடை வைத்தியரால் சினைப் பரிசோதனை செய்யாத மாடுகள் கடைசிவரை இப்படியாக இருந்து கடும் பொருளாதார செலவைத் தருகின்றன. சினைப்படாத ஒவ்வொரு நாளும் பொருளாதார ரீதியான சுமையே.)

இதனைவிட அண்மைக் காலத்தில் அதிகளவில் குடற்புழுக்கள் மற்றும் ஏனைய ஒட்டுண்ணிகளின் தாக்கம் கால்நடைகளில் அவதானிக்கப்பட்டுள்ளது. இவை கால்நடைகளின் உணவு மாற்று திறன், வளர்ச்சி வீதம், ஏனைய நோய்களின் தொற்று ஆகியவற்றில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இந்த விடயங்கள் ஒன்றாகச் சேர்ந்து இனப்பெருக்க திறனை கடுமையாகப் பாதிக்கின்றன. மேலும் அதிகரித்த கால்வாய் நோய், புருசலோசிஸ் போன்ற நோய்களும் மாடுகளின் இனப்பெருக்க ஆற்றலை கடுமையாக பாதிக்கின்றன. 

மேற்படி காரணங்களுக்கு மேலதிகமாக பல முகாமைத்துவ காரணிகளும் கறவை மாடுகளின் இனப்பெருக்க ஆற்றலைக் கடுமையாகப் பாதிக்கின்றன. இவற்றின் கூட்டு விளைவுகள் கறவை மாடுகள் சினைப்படுவதை பாதிக்கின்றன. அடுத்த கட்டுரைகளில் இந்த தலைப்பில் இன்னும் பல விடயங்களை ஆராயலாம்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

3536 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)