Arts
17 நிமிட வாசிப்பு

இலங்கையின் பாலுற்பத்தித் துறை – ஒரு பார்வை

October 21, 2022 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

[இலங்கையின்  பாலுற்பத்தி தொடர்பான இந்த கட்டுரைத் தொடர் தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதாரப் பின்னடைவுக்கு முந்தைய விடயங்களையே அதாவது சாதாரண நிலையில் உள்ள விடயங்களையே ஆராய்கிறது. அண்மைய பொருளாதார நெருக்கடி பாலுற்பத்திக் கட்டமைப்பை எந்த வகையில் பாதிக்கின்றது என்பதை இந்தத் தொடரின் பிறிதொரு கட்டுரையில் தனியாக ஆராய்வோம். இங்கு தரப்படும் புள்ளி விபரங்கள் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முந்தியவை]

இலங்கையில் 1977 ஆண்டில் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட முன்னர் அன்றைய பால் தேவையின் 80 %  உள்ளூர் உற்பத்தியில் இருந்தே நிறைவு செய்யப்பட்டிருந்தது. பல்தேசிய பால் உற்பத்தி நிறுவனங்கள் இலங்கைச் சந்தையில் தமது பாலுற்பத்திகளை குறிப்பாக பால் பவுடரை அறிமுகப்படுத்திய  பின் படிப்படியாக இலங்கை மக்களின் பால் நுகர்வு கலாசாரம் மாற்றமடையத் தொடங்கியது. ஏறக்குறைய  தன்னிறைவு என்ற நிலை படிப்படியாக குறைவடைந்து ஒரு கட்டத்தில் அதிகமாக இறக்குமதியாகும் பாலுற்பத்திகளில் தங்கியிருக்கும் நிலை ஏற்படத் தொடங்கியது. மறுபுறமாக உள்ளூர் பாலுற்பத்திக் கட்டமைப்பு பெருமளவு விருத்தியடையாது ஒரு தேங்கிய நிலையிலேயே இருந்து வந்தது. எனினும் கடந்த சில வருடங்களாக இருந்த அரசுகள் எடுத்த  தொடர் நடவடிக்கைகள் காரணமாக துறையில்  முன்னேற்றங்கள்  ஏற்பட்டு இன்றைய திகதியில் உள்நாட்டு பாலுற்பத்தி  40 %  ஆகவும்,  வெளிநாட்டு இறக்குமதி 60%  ஆகவும் உள்ளன.

2020 வருட இலங்கை மத்திய வங்கி ஆண்டறிகையின் படி இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் [GDP]  விவசாயம் 7 % அளவிலும் விவசாயத்தின் ஒரு கூறாக அமையும் கால்நடை உற்பத்தித் துறை  0.6% ஐயும் கொண்டுள்ளது. இலங்கையில் 1.1 மில்லியன் பசு மாடுகளும், 0.3  மில்லியன் எருமை மாடுகளும் உள்ளன. வருடாந்தம் பசு மாடுகளில் இருந்து 413.6 மில்லியன் லீட்டர் பாலும் எருமை மாடுகளில் இருந்து 77.9 மில்லியன் லீட்டர் பாலும் பெறப்படுகிறது. இரண்டும் சேர்த்து இலங்கையின் மொத்த பாலுற்பத்தி 491.5 மில்லியன் லீட்டர் ஆகும். வருடாந்த இலங்கையின் பால் தேவை 1200 மில்லியன் லீட்டராக காணப்படுகின்ற நிலையில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் 491.5 மில்லியன் லீட்டர் பாலைத்  தவிர்த்து மிகுதி வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த வருடம் மட்டும் 338.8 மில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 60-70 பில்லியன் இலங்கை  ரூபா,  பால் பொருள் இறக்குமதிக்கு மாத்திரம் செலவிடப்பட்டுள்ளது. இது இலங்கை இறக்குமதியில் 2.1% ஆகும். [உர இறக்குமதிக்கு செலவிட்ட பணத்தை விடவும் அதிகம்]

இலங்கையில் கால்நடை வேளாண்மை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கி.மு. 400  ஆண்டுகளுக்கு முன் இருந்த கால்நடை வளர்ப்பு தொடர்பான குறிப்புகள் மற்றும்  தொல்பொருள் பதிவுகள்  கிடைத்திருக்கின்றன. இயற்கையாக இலங்கையில் உள்ளூர் நாட்டு  இன மாடுகளும் [Sri Lankan / Lanka/ Sinhala cattle]. உள்ளூர் எருமைகளும் [Sri Lankan  buffalo]  உள்ளன. அவற்றின் பாலுற்பத்தி ஒரு லீட்டருக்கும் குறைவாகும். [சுதந்திரத்துக்கு முன் சில பிரிட்டிஷ் அதிகாரிகள் தமது பால் தேவைக்காக சில வகை உயர் ரக மாடுகளை கொண்டு வந்து மலையக பகுதிகளில் அங்குள்ள தொழிலாளிகளைக்  கொண்டு வளர்த்திருந்தனர். அவர்களின் காலனியான தென்னாபிரிக்காவின் கேப் டவுன்-  cape town துறைமுகத்தில் இருந்து இந்த மாடுகள் கப்பலேற்றப்பட்டதால் அவை ‘’கேப் மாடுகள்‘’ என அழைக்கப்பட்டு இறுதியில் இன்றளவிலும் அவற்றைப் போன்ற மாடுகள்  கேப்பை மாடுகள் என அழைக்கப்படுகின்றன. ஒழுங்கமைக்கப்படாத வளர்ப்பு முறை காரணமாக அவை பெருமளவு அழிவடைந்தன.] இலங்கை 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததன் பின் பல வகையான வெளிநாட்டு கால்நடை வகைகள் மற்றும் அவற்றின் விந்தணுக்கள் கொண்டுவரப்பட்டு பல தூய, கலப்பு இனங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக இந்தியாவிலிருந்து சாஹிவால், சிகப்பு சிந்தி பசுக்களும் ஐரோப்பிய வகையான ஜெர்சி, பிரீசியன், அய்சியார் ,அவுஸ்றேலியன் பிரிசியன் சகிவால் [AFS] பசு இனங்களும் இந்திய மூரா மற்றும் இந்தோ – பாகிஸ்தானிய நிலி ரவி  எருமை வகைகளும் இவ்வாறு கொண்டுவரப்பட்டு இனக்கலப்பு செய்யப்பட்டன. ஆரம்பத்தில் அரச பண்ணைகளில் இந்த வகை மாடுகள் உள்ளூர் இனங்களுடன் இனங்கலப்பு செய்யப்பட்டு அவற்றின் பரம்பரைகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

இன்றைய திகதியில் இலங்கை மாடுகளில் 30%  இந்திய மற்றும்  அவற்றின் கலப்பு வகைகளும் 43 % ஐரோப்பிய மற்றும் அவற்றின் கலப்பு  வகைகளும் 26% உள்ளூர் வகைகளும் உள்ளன. எருமைகளை பொறுத்த வரையில் 90% உள்ளூர் இனமாகவும்  10% இந்திய மூரா, இந்தோ – பாகிஸ்தானிய நிலிரவி கலப்புகளாக உள்ளன.

இலங்கையில் வடக்கு, கிழக்கு  மற்றும் வட மத்திய மாகாணங்களில்தான் அதிக மாட்டுப் பண்ணைகளும் மாடுகளும் உள்ளன. எனினும் கணிசமான பண்ணைகள் இன்னும் பதிவு செய்யப்படாமல் இருப்பதையும் காணமுடிகிறது. அங்குள்ள மாடுகளில் பெரும்பாலானவை உள்ளூர் வகையைச் சேர்ந்தவை. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மிக குறைந்த எண்ணிக்கையில் மாடுகள் உள்ளன. மத்திய மாகாணம் அதிகளவு ஐரோப்பிய  மற்றும் அவற்றின் கலப்பு வகை மாட்டினங்களை [பிரிசியன், அய்சியார், ஜெர்சி]  கொண்டுள்ளதோடு இலங்கையின்  பாலுற்பத்தியில் அதிக பங்களிப்பையும் வழங்குகிறது. அங்கு நிலவும் கால்நடை வளர்ப்புக்கு சாதகமான காலநிலை மற்றும் தேவையான தண்ணீர்,  புற்கள்  தாராளமாக கிடைத்தலும் அங்கு அதிகமாக வாழும் மலையக தமிழ் மக்கள் பல நூற்றாண்டுகளாக கால்நடை வளர்ப்பில் சிறப்பு அனுபவம் கொண்டிருத்தலும் அந்தப் பகுதியின் கால்நடை வளர்ப்பின் சிறப்புக்கு காரணங்களாகும். குருநாகல்,அனுராதபுரம்,மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் அதிக பசு மாடுகளும் அம்பாந்தோட்டை,மட்டக்களப்பு ,திருகோணமலை மாவட்டங்களில் அதிக எருமை மாடுகளும் உள்ளன. [தரவு- கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள கால்நடை புள்ளிவிபர வெளியீடு 2018]

பாலுற்பத்தி மாகாண ரீதியாக

இலங்கையிலுள்ள மாடுகளில் 23.8% பால் கறக்கும் நிலையில்[Milking stage]  உள்ள அதே வேளை 15.7% பால் வற்றிய [Dry period] மாடுகளாகும். அதாவது 39.5% பால் கறக்கக் கூடிய ஆற்றல் உடையவை ஆகும். [23.8%+15.7%=39.5]  மிகுதி 60.5% வயதான, மலட்டு தன்மையுள்ள, இளம் நாகுகள் / கிடேரிகள்  சிறிய கன்றுகள் மற்றும் ஆண் மாடுகள் ஆகும். [Livestock information bulletin 2019- DAPH]. அதாவது தற்போது இலங்கையிலுள்ள இந்த 23.8%  மாடுகள் தான் 4.91 மில்லியன் லீட்டர் பாலைத் தருகின்றன.

இலங்கையில் ஓரிரண்டு மாடுகளை தமது கொல்லைப் புறங்களில் வளர்த்து, ஆங்காங்கே கிடைக்கும் உணவுகளை வழங்கி,  குறைந்தளவு பாலை பெற்றுக் கொள்ளும் சிறியரக கால்நடைப் பண்ணையாளர்களே [Small scale farmers]  75% உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நெல் போன்ற ஏனைய விவசாய நடவடிக்கைகளில் மிகப் பிரதானமாக ஈடுபடுவதோடு  மேலதிகமாகவே கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். மத்திய மலை நாட்டில் வாழும்  மக்களும் தமது பணிக்கு மேலதிகமாக மிகச் சிறியளவில் மாடுகளை வளர்க்கின்றனர். வடக்கு ,கிழக்கில் உள்ள பல பண்ணையாளர்கள்  நூற்றுக்கணக்கில் உள்ளூர் மாடுகளை கொண்டுள்ளபோதும் அவற்றின் பாலுற்பத்தி மிக மிகக் குறைவு. அவர்களின் பிரதான வருமானம் இறைச்சிக்காக நாம்பன் கன்றுகளை விற்றலே ஆகும். விதிவிலக்காக யாழ். குடாநாட்டில் ஓரளவு ஜெர்சி கலப்பு இன மாடுகள் உள்ளதோடு குறிப்பிடத்தக்க பாலையும் பெற முடிகிறது. இலங்கையில் கால்நடை வளர்ப்பு 75,000 வரையான குடும்பங்களின் பிரதான தொழிலாக உள்ளது. பாரிய பண்ணைகளைப் பொறுத்தவரையில் கணிசமானவை அரச பண்ணைகளாக  காணப்படுகின்றன. அண்மைக் காலங்களில் பாலுற்பத்தியை அதிகரிக்க வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மாடுகள் மனிக்பாலம, ரிதியகம, போபத்தெலாவ போன்ற தேசிய கால்நடை அபிவிருத்திப் பண்ணைகளில் [NLDB]   வளர்க்கப்படுகின்றன. அத்துடன்  பல நடுத்தர மற்றும் பாரிய தனியார் பண்ணைகளிலும் வளர்க்கப்படுகின்றன. இலங்கையின் பிரபலமான அம்பேவலவில் உள்ள பண்ணை ஆரம்பத்தில் அரச பண்ணையாக இருந்து தற்போது தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய பண்ணையாகும். இங்கு பிரிசியன் மற்றும் அய்சியார் போன்ற ஐரோப்பிய மாடுகள்  உள்ளன. அம்பேவலவில் இருந்து பால், பால் பொருள் உற்பத்திகள் இலங்கை சந்தையில் கிடைக்கின்றன. ஆரம்ப காலங்களில் மேற்படி அரச பண்ணைகளில் தான் இந்திய மற்றும் ஐரோப்பிய மாட்டு வகைகள் வளர்க்கப்பட்டு அவற்றின் கன்றுகள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பருவ வெளியீடு

மாடு வளர்ப்பு முறைகளை பொறுத்த வரை உள்ளக / தீவிர [Intensive] முறையில் 14% மும் வெளியக முறையில் [Extensive] 52% மும் அரை உள்ளக / அரைத் தீவிர முறையில் [Semi intensive] 33% மும் மேற்கொள்ளப்படுகின்றன. உள்ளக முறையில் அதிகளவு மத்திய மாகாணத்திலேயே மேற்கொள்ளப்படுகிறது.[42%]

பால் சேகரிப்பு மற்றும் பதனிடுதல்

இலங்கையில் உற்பத்தியாகும் பாலில் 45%  ஒழுங்கமைக்கப்படாத முறைசாரா பாலாகவே [Informal / UN Organized] உள்ளது. அதாவது பண்ணையாளர்கள் தாமே நுகர்வதும் தமது அயலவர் மற்றும் உள்ளூர்க் கடைகள், உணவகங்கள் மற்றும் சிறிய ரக பால் சேகரிப்பாளருக்கு வழங்குவதாகவும் அமையும். மிகுதி 55 % முறைசார்ந்த [formal/ organized] பால் சேகரிப்பாகும். அதாவது நடுத்தர மற்றும் பாரிய பால் சேகரிப்பாளருக்கு வழங்குவதாக அமைகிறது. நெஸ்ட்லே, மில்கோ, கார்கில்ஸ், பெலவத்த போன்ற பாரிய சேகரிப்பாளர்கள் நாட்டில் பால் சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். ஆங்காங்கே உள்ள தமது தொழிற்சாலைகள் மூலம் பால் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். [இலங்கையின் பால் பவுடர் உற்பத்தியில் 20% உள்ளூர் பால் நிறுவனங்கள் வழங்குகின்றன. உதாரணம் – MILCO நிறுவனத்தின் Highland பால்] சில சிறிய ரக உள்ளூர் பால் கூட்டுறவு சங்கங்களும் பால் சேகரிப்பு, மற்றும் பால் உற்பத்திகளை செய்கின்றன.[உதாரணம் – யாழ்கோ, லிப்கோ, முல்லை]

Nestle managing director, Shivani hedge and additional government agent for the mannar district

இலங்கையில் 236  பால் குளிர்பதனிடும் [Chilling centers]  நிலையங்கள் 888,642  லீட்டர் கொள்ளளவு வசதியுடன்  காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றை  நெஸ்ட்லே, மில்கோ  நிறுவனங்கள் கொண்டிருப்பதோடு மேலும் சில தனியார் நிறுவனங்களும் குறிப்பிட்டளவு  குளிர்பதனிடும் நிலையங்களை கொண்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு கணிப்பின் படி 269,260,920  லீட்டர் பால் மேற்படி நிறுவனங்களின் ஊடாகச் சேகரிக்கப்படுகிறது.  அண்மைய நாட்களில் மேலும் பல இடங்களில் அதிகளவில் குளிர் பதனிடும் நிலையங்கள் அமைக்கப்பட்டு அதிகளவு பால் சேகரிக்கப்படுகிறது.[Formal collection] இலங்கையில் இந்த நிறுவனங்கள் சிறப்பான பால் சேகரிப்பு வலையமைப்பை கொண்டுள்ளதோடு கொழுப்பு [FAT] மற்றும் ஏனைய கொழுப்பல்லாத திடப் பொருட்களின் [SNF]அளவு பரீட்சிக்கப்பட்டு பண்ணையாளருக்கு பணம் வழங்கப்படுகிறது. இந்த பால் அவற்றின் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பலவித பால் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. பெரிய பால் நிறுவனங்களுக்கு மேலதிகமாக புதிய பல முயற்சிகளும் உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது. 

மில்கோ நிறுவனம் MILCO [The National Milk Board / Milk industries of lanka.co limited]

1956 இல் The National Milk Board எனும் தேசிய பால் சபை  அரச நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு இலங்கையின் பால் வள அபிவிருத்தி, பால் சேகரிப்பு, பால் பதனிடல், சந்தைப்படுத்தலில் ஈடுபட்டது. 1986 இல் இருந்து Milk industries of lanka.co limited [ MILCO] எனும் பெயரில் தொழிற்படுகிறது. கொழும்பு ,அம்பேவலை, திகன, பொலநறுவை ஆகிய இடங்களில் பால்  தொழிற்சாலைகளையும் நாடு முழுவதும்  72 பால் குளிர் பதன நிலையங்கள்  மற்றும் 1700 பண்ணையாளர் சங்கங்களையும்  70,000 க்கும் அதிகமான பண்ணையாளர்களையும்  கொண்டுள்ள இந்த அமைப்பு 200,000 லீட்டருக்கும் அதிகமான பாலை வருடாந்தம் சேகரிக்கின்றது. இதன் உற்பத்திகள் Highland எனும் பெயரில் நாடு முழுதும் கிடைக்கின்றன.

கால்நடைத் தீவனம்

இலங்கையின் பெரும்பாலான கால்நடைகள் மேய்ச்சலை நம்பியே உள்ளன. வீதிகளிலும், குளங்களிலும், காடுகளிலும், வயல்களிலும் உள்ள புல் வெளிகளிலே அவை மேய்கின்றன. குறிப்பிட்ட தொகையான பண்ணைகளில் தீவனப் புல் செய்கை பண்ணப்படுகிறது. C03, CO4 போன்ற புல் வகைகளுக்கு மேலதிகமாக அண்மைக் காலத்தில்  CO5 [super Napier],  தீவனச் சோளம் [sugar graze] போன்றனவும் அதிகளவில்   பயிரிடப் படுகின்றன. நிலமில்லாத புல் வளர்ப்பு [Hydroponics], ஊறுகாய் புல் [ silage] போன்ற மேம்படுத்தப்பட்ட புல் செய்கையும் பல இடங்களில் செய்யப்படுகிறது. பலர் கால்நடைகளுக்குரிய தீவனங்களை சாகுபடி செய்து பண்ணையாளருக்கு விற்பதை தொழிலாக கொண்டுள்ளனர். மேற்படி புல் வளர்ப்புக்கு அரச மற்றும் தனியார் அமைப்புகள் பல மானிய உதவிகளை வழங்கி வருகின்றன.

கால்நடைகளைப் பார்வையிடும் வைத்தியர்

இலங்கையில் மாடுகள் உட்பட கால்நடைகளுக்கு உலர்தீவனம் தயாரிக்கும் சில தொழிற்சாலைகள் உள்ளன. [Prema, Super feed, Gold coin, CIC, New Bernard]  சோளம், சோயா அவரை, புண்ணாக்குகள், மீன் உணவுகள், நெல் கோதுமை உணவு மிகுதிகள், கனியுப்புகள்  என பல பொருட்களை  கொண்டு இந்த உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு கால்நடை தீவனமாக வழங்கப்படுகின்றன. இந்த மூலப் பொருட்கள் குறிப்பிட்ட அளவில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதோடு கணிசமான அளவு வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. 2018 ஆண்டளவில் மாடுகளுக்குரிய உலர் தீவனம் 63.20 ,000 மெற்றிக் தொன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் அதிக பாலை  உற்பத்தி செய்யும் ஐரோப்பிய கலப்பு மாடுகளுக்கு  அதிகளவில் உலர் தீவனம் வழங்கப்படுவதோடு ஏனைய மாடுகள் பெரும்பாலும் புல், விவசாய உற்பத்தி மிகுதிகள், உள்ளூர் தவிடு, புண்ணாக்கு,வீட்டு மிகுதிகள் மூலம் உணவூட்டப்படுகின்றன. 2018 ஆம் ஆண்டில் கால்நடைத் தீவனத்தின் மிக முக்கிய மூலப்பொருளான சோளம், பெரும் போகத்தில் 242,935   MT அளவிலும் சிறு போகத்தில் 6969MT அளவிலும் பயிரிடப்பட்ட அதேவேளை வெளிநாடுகளில் இருந்து 98,342 MT இறக்குமதியும் செய்யப்பட்டிருந்தது. சோயா அவரை பெரும் போகத்தில் 1186MT அளவிலும் சிறுபோகத்தில் 1304MT அளவிலும் பயிரிடப்பட்ட அதேவேளை 154,585 MT அளவு இறக்குமதியும் செய்யப்பட்டது. 2020/07/23 அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியின் படி அரிசி மற்றும் நெல் போன்ற மனித உணவுகளை விலங்கு உணவில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாவிக்க முடியாது. அத்துடன் சோளத்தின்  இறக்குமதியும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடைசெய்யப்பட்டிருக்கிறது. மேற்படி இரண்டு காரணிகளும் கால்நடை தீவன உற்பத்தியில் கடும் தாக்கத்தை செலுத்துகின்றன. கொவிட் பெருந்தொற்றுக்கு பின் இலங்கையில் கால்நடை தீவனங்களுக்குரிய உற்பத்திகள் சரியாக இல்லாததாலும் சோளச் செய்கையை பாதிக்கும் படைப்புழு தாக்கத்தாலும்  இறக்குமதித் தடையாலும் சோள செய்கையை செய்யும் போது ஏற்படும் காடழிப்பு போன்ற  சூழலியல் பிரச்சினைகள் காரணமாகவும்  விலங்குணவுகளின் விலை அதிகரித்ததோடு பாலின் விலையும் அதிகரித்துள்ளது.

ஆரம்பத்தில் வருடாந்த தனிமனித  பால் நுகர்வு [per capita consumption] சர்வதேச நியமனமான  40  லீட்டரை விட  குறைவாக இருந்து படிப்படியாக அதிகரித்து 2014 ஆண்டில் 45 லீட்டராகவும் 2017ம் ஆண்டில் 56 லீட்டராகவும்  2018 ம்  ஆண்டு 58.03 லீட்டராகவும்  அதிகரித்துள்ளது.

பால் பொருள் இறக்குமதி

பால் பொருள் இறக்குமதியை பொறுத்தவரை அதிகளவில் நியுசிலாந்திலிருந்தும் [Fontera  நிறுவனம் ஊடாக] கணிசமான அளவு அவுஸ்திரேலியாவிலிருந்தும் பெறப்படுகிறது. சீஸ் போன்ற உணவுகள்  பல ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகின்றது. பால் [Milk and milk cream], முழு ஆடை பால் மா [Milk cream  powder], கொழுப்பு நீக்கிய பால் மா[Skimmed /nonfat milk powder], செறிவூட்டிய பால்மா [Condensed milk] , சீஸ் மற்றும் தயிர் [Cheese and curd], யோகட் [yoghurt], வெண்ணெய்[butter], நெய் [Ghee] ,வே புரத பால் மா [Whey protein powder] என பல வகை பால்  பொருட்கள் இறக்குமதியாகின்றன. அதிகளவில் முழு ஆடை பால் மாவை 628,044.41  [000] L அளவில் இறக்குமதி செய்கின்ற அதேவேளை கொழுப்பு நீக்கிய பால் மா 84,955.10[000]L  அளவிலும் இறக்குமதி செய்வதை காண முடியும்.இலங்கையின் மொத்த பால் பொருள் 54.002.35 பில்லியன்  இறக்குமதி ஆகும்[2018]. இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக   இறக்குமதி செய்வதால் ஏற்படும் செலவுகளை குறைக்க அதாவது பாலில் தன்னிறைவு காண பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதை காணமுடிகிறது.

கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் அமைச்சு

இலங்கையில் கால்நடைகளின் சுகாதாரம் மற்றும் ஏனைய கால்நடைகள் தொடர்பான விடயங்களை கையாளும் நிறுவனம் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் ஆகும். மத்திய,  மாகாண அரசாங்கங்களின் கீழ் வரும் இந்தத் திணைக்களத்தின் அடிப்படை அலகாக கால்நடை வைத்தியர் அலுவலகங்கள் அமைகின்றன. அங்கு கால்நடை வைத்தியர்கள், கால்நடை போதனாசிரியர்கள் போன்றவர்களால் கால்நடைகளுக்குரிய  சேவைகள் வழங்கப்படுகின்றன. கால்நடைகளுக்குரிய சிகிச்சைகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், மக்களுக்குரிய தெளிவூட்டல்கள், மக்களுக்குரிய உதவித் திட்டங்கள் வழங்குதல் மற்றும் அவற்றை மேற்பார்வை செய்தல், நல்லின விலங்குகளை வழங்குதல், சினைப்படுத்தல் நடவடிக்கைகள், கால்நடை தரவு சேகரித்தல் போன்ற பல விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கால்நடை வைத்திய நிலையங்கள் மாவட்ட பணிப்பாளர் அலுவலகம், மாகாண பணிப்பாளர் அலுவலகம் போன்றவற்றால் மேற்பார்வை செய்யப்பட்டு, இறுதியாக கண்டி கெட்டம்பேயில் உள்ள மத்திய தலைமை திணைக்களத்தால் பரிபாலிக்கப்படுகின்றன. கால்நடைகளுக்குரிய நோய்களை கண்டறியும் ஆய்வு செய்யும்  ’கால்நடை புலனாய்வு நிலையங்களும்’ மாவட்டம் தோறும் அமைந்துள்ளன.கால்நடைகளை வளர்த்து மக்களுக்கு வழங்கக் கூடிய கால்நடை இனப்பெருக்க பண்ணைகளும் நாடுமுழுதும் காணப்படுகின்றன.  இலங்கையில் கால்நடை தொடர்பான விடயங்கள் விவசாய அமைச்சின் கீழ் கால்நடை, பண்ணை ஊக்குவிப்பு மற்றும் பால், முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சால் கையாளப்படுகின்றன.

இனி வரும் வாரங்களில் இலங்கையில் கால்நடை வளர்ப்பு துறை எதிர்நோக்கும் பிரச்சனைகள் அவற்றுக்குரிய தீர்வுகளை காண்பது மூலம் அடையக் கூடிய தன்னிறைவு வழிக்குரிய சாத்தியங்களை ஆராய இருக்கிறேன். இங்குள்ள தரவுகள் அண்மைய மத்திய வங்கியின் ஆண்டறிக்கை,மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் வெளியீடுகளில் இருந்து பெறபட்டவை. அவற்றை அந்த அமைப்புகளின்  இணைய தளங்களில் பார்த்து அறிய முடியும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

20046 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)