Arts
10 நிமிட வாசிப்பு

அமுல் எனும் வெண்மைப்புரட்சியின் தாரக மந்திரம்

August 25, 2023 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

கூட்டுறவு மூலம் பாலுற்பத்தியில் தன்னிறைவு கண்ட ஒரு மக்கள் அமைப்பின் பெயர்தான் அமுல். இந்தியாவில் அமுல் என்ற பெயரும் அதன் விளம்பரச் சுட்டியான ஒரு குழந்தையும் மிகவும் பிரபலமானவை. அமுல் என்ற பெயரைக் கேட்டவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  வாயில் எச்சில் ஊறும். அமுல் என்றால் இந்தியாவின் பாற் பொருட்கள் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கேடா மாவட்டத்தின் ஆனந்த் நகரினை தலைமை இடமாக கொண்டு செயற்படும் இந்தியாவின் மிகப் பெரிய கால்நடைக் கூட்டுறவு அமைப்புதான் இந்த அமுல் (Anand Milk Union Limited). அமுல் என்றால் சமஸ்கிருதத்தில் விலைமதிப்பற்றது என்று பொருள்படும். இந்த நிறுவனம் தோன்றி வளர்ந்த மற்றும் வெற்றிகரமாக செயற்படுகின்ற கதை மிக மிகச் சுவையானது. இலங்கை போன்ற பால் உற்பத்தியில் முன்னேறத் துடிக்கும் நாட்டுக்கு மிக அவசியமான கதை.

Amul butter

ஒரு பெண் இந்தியாவின் குஜராத் மாநில கிராமத்தில் எருமை  ஒன்றை வளர்க்கிறார். தினமும் மூன்று லீட்டர் பாலைக் கறந்து கிராமத்தில் பால் சேகரிக்கும் நிலையத்துக்கு சென்று கொடுக்கிறார். அங்கு அவருடைய பாலின் தரத்துக்கு அமைவாக உடனடியாகப் பணம் கொடுக்கப்படுகிறது. அங்கு கொடுக்கப்படும் பணத்தைக் கொண்டு அவரின் அன்றாடத் தேவைகளுக்கு வேண்டிய காய்கறி, அரிசி, பருப்பை வாங்கிக் கொண்டு செல்வதோடு மேலதிக பணத்தை சேமிக்கிறார். மாத முடிவில் போனஸ் பணம் மற்றும் கால்நடைகளுக்கு உரிய தீவனம், தாது உப்பு மற்றும் இதர மருந்துகளை இலவசமாகவும் குறைந்த விலையிலும் பெற்றுக் கொண்டு அவருடைய அந்த எருமைக்கு கொடுப்பார். இந்த செயற்பாட்டை அவரைப் போன்ற ஏராளமான கிராமத்து மக்கள் செய்கின்றனர். ஏறக்குறைய மூன்று மில்லியனுக்கும் அதிகமான சிறிய, பெரிய  கால்நடை வளர்ப்பாளர்கள் மேற்படி செயற்பாட்டை ஒரு அமைப்பாகச் செய்கிறர்கள். அந்த அமைப்பின் பெயர்தான் அமுல்.

இன்று இந்தியாவில் மட்டுமல்ல தென் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க  பகுதிகளின் நாற்பதுக்கு மேற்பட்ட  நாடுகளில் அமுல் நிறுவனம் தயாரிக்கும் சீஸ், தயிர், நெய், ஐஸ் கிறீம், வெண்ணெய், லசி, பன்னீர் போன்றவற்றை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். அதன் தரமும் சுவையும் தனித்துவமானது.

இந்திய சுதந்திரத்துக்கு முன், பம்பாய் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இன்றைய குஜராத் இருந்தது. குஜராத்தின் கேடா மாவட்டத்தின் பாற் பண்ணையாளர்களின் ஒன்றிணைவே இன்றைய அமுல் நிறுவனம். பம்பாய் நகரத்தின் பால் தேவையை நிறைவு செய்ய இந்த அமுல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது கேடா மாவட்ட பால் பண்ணையாளர்கள் தமது அன்றாடப் பாலைச் சேகரித்து பம்பாய்க்கு வழங்கினர்.

பம்பாய் பால் கழகம் கேடா மாவட்டத்தின் பாலை கொள்வனவு செய்தது. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடையத் தொடங்கிய அமுல், குறித்த காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டது. திரிபுவன் தாஸ் எனப்படும் செல்வாக்கு மிக்க பண்ணையாளரின் தலைமையில் இயங்கிய மேற்படி கூட்டுறவு அமைப்பு வர்கீஸ் குரியன் எனப்படும் கேரளப் பொறியியலாளரின் வருகையுடன் மிகப் பிரமாண்டமாக வளரத் தொடங்கியது. அமெரிக்காவில் பாற்பண்ணைத் தொழில்நுட்ப பொறியியலைப் படித்த குரியன் சாதாரண அரச பாற்பண்ணை ஒன்றில் வேலை செய்யவே அந்தப் பகுதிக்கு வந்தார். விதியின் வசத்தால் மேற்படி அமுலின் தொழிற்சாலைக்கு சென்று பணிபுரிந்தார். நாள் செல்லச் செல்ல அமுலை அதிநவீன யுக்திகளுடன் கூடிய அமைப்பாக வளர்க்கத் தொடங்கினார். இதற்கு இந்திய மத்திய அரசும் பம்பாய் மாநில அரசும் பக்கத் துணையாக இருந்தன. குறிப்பாக வல்லபாய் பட்டேல், மொரார்ஜி தேசாய், நேரு போன்ற இந்திய தலைவர்களின் அனுக்கிரகம் அமுலுக்கு இருந்தது.

Jawaharlal Nehru inspects AMUL plant in 1955.

வெளிநாட்டு பல்தேசிய நிறுவனங்களின் வியாபார சூழ்ச்சிகளை இந்திய மத்திய அரசு புறம்தள்ளி உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தது. குறிப்பாக நியூசிலாந்து நாட்டின் நிறுவனங்கள் இலவசமாக பால் பவுடரை இந்தியாவுக்குள் கொண்டுவந்து அந்த சந்தையை ஆக்கிரமிக்க முயன்ற போது அதனை அரசு அதிக வரியைப் போட்டு தவிர்த்திருந்தது. உள்நாட்டு  பால் உற்பத்தியை மேம்படுத்த மேற்படி முடிவு உதவியாக இருந்தது எனலாம். இலங்கையிலும் மேற்படி பல்தேசிய நிறுவனங்கள் அன்றைய நாட்களில் தமது பால் பவுடரை இலவசமாக வழங்கி இருந்தன. எனினும் இலங்கை அரசு அந்தச் சதிவலையில் விழுந்து விட, இன்று வரைக்கும் நாம் அவர்களின் பால் பவுடரை நம்பி எமது பாலுற்பத்தியை கோட்டை விட்டுவிட்டோம். பல மில்லியன் டொலரை வெளிநாட்டு பாற் பொருட்களை வாங்க செலவிடுகிறோம்.

இன்று உலகில் அதிக பாலுற்பத்தியைச் செய்கின்ற நாடாக இந்தியா விளங்குகிறது. இதற்கு, முதல் விதையைப் போட்டது அமுல் அமைப்புதான். அதை அடியாக கொண்டுதான் இந்தியா தனது பால் கொள்கையை திட்டமிட்டது. மேலும் உலகில் எருமை மாடுகளின் தொகையும் அவற்றின் பாலுற்பத்தியும் இந்தியாவில்தான் அதிகம். பொதுவாக உலகெங்கிலும் பசுமாடுகளின் பாலில் இருந்துதான் பால் பவுடர் உற்பத்தியாகி வந்தது. எனினும் அமுல் நிறுவனத்தின் அயராத முயற்சி காரணமாக எருமைப் பாலில் இருந்தும் பால் பவுடர் உற்பத்தி செய்யப்பட்டது. இதற்கு வர்கீஸ் குரியனும் அவர் நண்பர் தலாயும் அயராது உழைத்திருந்தனர்.

Verghese Kurien

அமுல் நிறுவனத்துக்கு இலாபமீட்டும் எல்லை மிக குறைவு. எனவே முடிந்தவரை பங்குதாரர்களான பாற்பண்ணையாளர்களுக்கு அதிக கொள்முதல் விலையை கொடுக்கின்றனர். அமுல் பால் சேகரிப்பில் இடைத்தரகர்கள் கிடையாது. மிகச் சிறந்த பால் கொள்வனவு மற்றும் களஞ்சிய வலையமைப்பு உண்டு. இன்றைய நாட்களில் குஜராத் மட்டுமின்றி மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் இதர வட மாநிலங்களிலும் அமுலின் வலையமைப்பு உள்ளது. தினமும் லட்சக் கணக்கான லீட்டர் பால் சேகரிக்கப்படுகிறது. உலகின் அதிநவீன தொழில்நுட்பங்கள் அமுல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுவது மேலும் சிறப்பு. மிகப் பிரமாண்டமாக அதிக அளவில்  உற்பத்திகள் அமுலின் தொழிற்சாலைகளில் செய்யப்படுவதால் உற்பத்திச் செலவு குறைவு. ஏனைய தனியார் நிறுவனங்களின் செலவை விட அமுலின் செலவு 2௦ சதவீதம் குறைவு. வருடம் தோறும் 2௦,௦௦௦ கோடி இந்திய ரூபா வருமானமாக ஈட்டப்படுகிறது. இந்த வருமானம் பங்குதாரர்களான பண்ணையாளர்களின் நலனுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இதர விரிவாக்கத்துக்கும் செலவிடப்படுகிறது.

அமுல் தொழிற்சாலை

Amul Factory

இந்தியாவின் அரசுகள் மாறும் போது பொதுவாக அவற்றின் மாற்றமுறும் கொள்கைகள் அமுல் போன்ற நிறுவனங்களைப் பாதிப்பதில்லை. வேறுபட்ட அரசியல் பின்னணி கொண்ட பல நபர்கள் அமுலில் இருக்கிறார்கள். எனினும் அமுல் எனும் போது அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்டுச் செயற்படுகின்றனர். காலை, மாலை என இரண்டு முறை பால் சேகரிக்கப்படுகிறது. அமுல் நிறுவனத்தால் பண்ணையாளர்களுக்கு இலாப போனஸ் வழங்கப்படுவதோடு அவர்களுக்கு மானிய மருந்துகள், இலவச உதவிப்பொருட்கள், தீவனங்கள்,  இலவச மருத்துவம், நவீன கால்நடை வளர்ப்பு, தீவன மேலாண்மை போன்றவை தொடர்பான பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகின்றன. நடமாடும் மிருக வைத்தியசேவை கூட அமுல் நிறுவனத்துக்கு உள்ளது. மேலும் பண்ணையாளர் காப்புறுதிகள், கால்நடைக் காப்புறுதிகள் மற்றும் இதர மனிதவள மேம்பாட்டு உதவிகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனைவிட கிராமங்களின் உட்கட்டமைப்பு மற்றும் வீதி அபிவிருத்திக்கும் ஏராளமான நிதியை அமுல் வழங்குகிறது. 

அமுல் உற்பத்திகள்

‘’Manthan’’ எனும் திரைப்படம் அமுலின் வளர்ச்சியை காட்டும் விதமாக 1976 இல் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அமுலை போல கர்நாடகாவில் ‘’நந்தினி’’ தமிழகத்தில் ‘’ஆவின்’’ என மாநிலத்துக்கு மாநிலம் கூட்டுறவு அமைப்புகள் இன்று இந்தியாவில் தொழிற்படுகின்றன. இலங்கையில் கூட Milco, Lifco, Yalko போன்ற கூட்டுறவு மற்றும் அரச அமைப்புகளும் அமுலை பின்பற்றும் அமைப்புகளே. Nestle போன்ற சர்வதேச நிறுவனங்களின் போட்டியையும் சமாளித்து இந்தியாவின் முதல்தர பால் உற்பத்தி நிறுவனமாக அமுல் இன்று விளங்குகிறது. இந்தியாவைச் சுற்றி உள்ள இலங்கை, பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளில் எல்லாம் பால் உற்பத்தியில் தன்னிறைவு காணப்படவில்லை. எனினும் இந்தியாவில் தன்னிறைவு காணப்பட்டுள்ளது. அறுபதுகளில் இந்திய பாற்சபை உருவாக்கப்பட்டு அதன் தலைவராக வர்க்கீஸ் குரியன் நியமிக்கப்பட்டிருந்தார். அவரின் தூர தரிசனமான திட்டங்கள் தான் இன்றைய இந்தியாவின் பால் வளத் தன்னிறைவுக்கும் உலகின் முதற்தர பால் உற்பத்தியாளர் என்ற நிலைக்கும் காரணம். அதாவது அமுலில் அவர் பெற்ற அனுபவம் முழுத் தேசத்துக்கும் பயனாய் அமைந்தது எனலாம் .

AMUL products

Operation flood எனும் இந்திய பால் உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்தை தீட்டி வர்கீஸ் குரியன் இந்தியாவை பால் வளத்தில் முன்னேற்றியதல் இந்தியாவின் பால் வளத்தின் தந்தை எனப்படுகிறார். அமுல் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் இதர பால் தொடர்பான அமைப்புகளுக்கு முன்மாதிரியாக இருப்பதோடு அந்த நிறுவங்களுடன் இணைந்து அவர்களையும் முன்னேற்றிக் கொண்டிருக்கிறது. சர்வதேச நிறுவனங்களுடன் ஆரோக்கியமான போட்டியில் ஈடுபடுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒழுங்கமைக்கப்படாத பால் விநியோகம் தான் இன்று வரை அதிகம் காணப்படுகிறது. அதனைச் சீர்செய்யும் விதமாக அவர்கள் செயற்படுகின்றனர். அப்படி நடந்தால், இன்று அதிகளவில் உள்ளூர்ச் சந்தையின் தேவையை  மாத்திரம் நிறைவு செய்யும் அவர்கள் உலக பால் சந்தையை மிக விரைவாக பிடிக்கக்கூடிய சாத்தியமும் இருக்கிறது. அமுலின் வளர்ச்சிப் பாதை இலங்கைக்கு ஒரு படிப்பினை. மக்கள் சக்தியை சரியாகப் பயன்படுத்தும் விதமான உறுதியான அரச கொள்கைகளே, எங்கள் நாட்டின் பால் உற்பத்தியை தன்னிறைவு காணச் செய்வதோடு மட்டுமின்றி பாற் பொருட்களின்  தேவையற்ற இறக்குமதிச் செலவையும் தடுக்க உதவும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5538 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)