Arts
23 நிமிட வாசிப்பு

எருமை வளர்ப்பு – ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை

September 21, 2023 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

இந்த கட்டுரையில் எருமை வளர்ப்புத் தொடர்பான பல விடயங்களை ஆராயப் போகிறேன். இதற்கு இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியீடுகளையும் பயன்படுத்தியுள்ளேன். பசு மாடுகளைப் போல எருமை மாடுகளிலிருந்தும்  மனித தேவைகளுக்கு கணிசமான அளவில் பால் மற்றும் இறைச்சி பெறப்படுகிறது. இன்று உலகில் அதிக பால் உற்பத்தியாகும் நாடான இந்தியாவில் பசுப் பாலை விட எருமைப் பாலே அதிகம் பெறப்படுகிறது. இந்தியாவைத் தவிர பாக்கிஸ்தான், சீனா, எகிப்து, நேபாளம் போன்ற ஆசிய நாடுகளிலும் இத்தாலி போன்ற மத்திய தரைக் கடலை அண்மித்த ஐரோப்பிய நாடுகளிலும் அதிக எருமைகள் உள்ளன. உலக எருமைப்பால் உற்பத்தியில் இந்தியா 70% உம் பாக்கிஸ்தான் 25% உம் பங்களிக்கின்றன. இத்தாலிய Mediterranean எருமைகளில் இருந்து Mozzarella  சீஸ் வகை உற்பத்தியாகிறது. இலங்கையை பொறுத்தவரை கணக்கெடுப்பின் படி 476,050 எருமை மாடுகள் உள்ளன. (2022 ஆண்டு கால்நடை உற்பத்திச் சுகாதார திணைக்கள புள்ளிவிபரம்) கிழக்கு மாகாணத்தில் 234,782 எருமைகள் உள்ளன. வடக்கில் 24,104. மேற்படி எண்ணிக்கையான எருமைகளில் இருந்து 2022 தரவின்படி 53.88 மில்லியன் லீட்டர் பால் கிடைத்திருந்தது. இதே காலப் பகுதியில் 1,612,714 பசு மாடுகளில் இருந்து  326.12 மில்லியன் லீட்டர் பசும் பாலும் கிடைத்திருந்தது. (எருமை, பசு சேர்த்து மொத்தம் 380 மில்லியன் லீட்டர் பால்) 2021 இல் இதைவிட பால் அதிகம் உற்பத்தியாகியிருந்தது. 356.11 மில்லியன் லீட்டர் பசுப்பாலும் 55.95 மில்லியன் லீட்டர் எருமைப்பாலும் கிடைத்திருந்தது. (412.05 மில்லியன் லீட்டர் மொத்தப் பால்) இலங்கையின் பொருளாதார நெருக்கடி இந்த உற்பத்திக் குறைவுக்கு காரணமாக அமைந்திருந்தது.

எருமைகள் இரண்டு வகை. ஒன்று River type எனும் வகை. இவை அதிக பாலைத் தரும் வகையின. இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் இவை அதிகளவில் உள்ளன. மற்றையது Swam type. இவை இழுவைக்கு பயன்படும் வகையாகும். சில கிழக்காசிய நாடுகளிலும் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலும் இவை உள்ளன.இலங்கையில் உள்ள எருமைகள் River type வகையின. இலங்கையில் இயற்கையாகவே உள்ள எருமைகளை இலங்கை எருமைகள் என்பார்கள். அதற்கு மேலதிகமாக இந்திய,பாகிஸ்தானிய வகை மூரா, நிலிரவி, சூர்தி இன கலப்பு எருமைகளும் உள்ளன. சில தசாப்தங்களுக்கு முன் NLDB பண்ணைகளில் இலங்கையிலுள்ள உள்ளூர் எருமைகளை இந்திய வகை எருமைகளுடன் கலந்து கலப்பின எருமைகள் உருவாக்கப்பட்டு பண்ணையாளர்களுக்கு வழங்கப்பட்டன. இன்று அந்த எருமை வகைகளின் சந்ததிகள் கணிசமான அளவு உள்ளூர் எருமைக் குடித்தொகையில் உள்ளன.

 இந்திய உபகண்டத்து எருமைகள் 

kind of Buffalo

உலகில் இந்திய உபகண்டத்து நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம், பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் தான் உலகின் 90-95% இற்கு அதிகமான எருமைகள் உள்ளன. இந்த நாடுகளில் இருந்துதான் உலகின் 95% இற்கு அதிகமான எருமைப் பாலின் உற்பத்தி நிகழ்கிறது. இந்தியா உபகண்டம் முழுவதும் பல்வேறு வகையான எருமை இனங்கள் இருந்தாலும் இந்தியாவின் வடக்கு, வடமேற்கு, பாக்கிஸ்தான் பகுதிகளில் தான் அதிக பால் உற்பத்தி செய்யும் எருமைகள் உள்ளன. ஏனைய இந்தியப் பகுதிகளை விட இந்த இடங்களில் எருமை மற்றும் பசு மாடு வளர்ப்புக்கு ஏற்ற காலநிலை மற்றும் ஏனைய காரணிகள் சிறப்பாக அமைந்துள்ளன. இந்தியாவின் மூரா, சூர்தி, ஜப்ரபாதி, இந்திய-பாகிஸ்தானின் நிலிரவி, பாகிஸ்தானின் குந்தி போன்ற இனங்கள் கணிசமான அளவு பாலைத் தரக் கூடியன. மூரா, நிலிரவி போன்ற இனங்கள் பொருத்தமான சீதோஷண நிலை மற்றும் தரமான மேலாண்மை கிடைக்கும் போது 15 லீட்டர் வரை பாலைத் தரக் கூடியன. தமிழக பகுதிகளில் தோடா, பர்கூர் போன்ற பாலுற்பத்தி குறைந்த எருமை இனங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் எருமைகளை கொண்டு நடத்தப்படும் ‘கம்பாலா’ போட்டி மிகப் பிரபலமானது. அண்மையில் வெளிவந்த ‘காந்தாரா’ படத்தில் இது தொடர்பான காட்சிகள் வருகின்றன. இந்த வகை எருமைகளும் பாலுற்பத்தி குறைந்தவை. பாலுற்பத்தி குறைந்த எருமைகள் விவசாய தேவைகளுக்கும், போக்குவரத்துக்கும், இறைச்சிக்கும் பயன்படுகின்றன. இலங்கையின் உள்ளூர் எருமைகளும் பாலுற்பத்தி குறைந்தவையே. எழுபதுகளில் உள்ளூர் எருமைகளை மல்சிரிபுர போன்ற தேசிய கால்நடைச் சபைப் பண்ணைகளில் ( NLDB farms) வைத்து இந்திய மூரா, நிலிரவி, சூர்தி இனங்களைக் கொண்டு தரமுயர்த்தியிருந்தனர். இன்றும் அந்த எருமைகளின் பரம்பரைகள் இலங்கையில் உள்ளன. இன்றைய திகதியில் பசுக்களை போலல்லாதுவிடினும் மூரா,நிலிரவி இனங்களின் விந்தணுக் குச்சிகளின் மூலம் குறிப்பிடத்தக்க அளவு செயற்கை முறைச் சினைப்படுத்தல் நிகழ்கிறது. எனினும் வெற்றிவீதம் மிக மிகக் குறைவு.

buffalo race

2017 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் உலகின் மொத்த எருமைப்பால் உற்பத்தியில் (100 மில்லியன் மெற்றிக் தொன்) இந்தியா 70 மில்லியன் மெற்றிக் தொன்னும் பாக்கிஸ்தான் 25 மில்லியன் மெற்றிக் தொன்னையும் வருடாந்தம் உற்பத்தி செய்கின்றன. இந்தியாவில் 113 மில்லியன் எருமைகளும் பாக்கிஸ்தானில் 43.7 மில்லியன் எருமைகளும் சீனாவில் 23 மில்லியன் எருமைகளும் உள்ளன. ( உலகின் மொத்த எருமைகள் 201 மில்லியன்) பாகிஸ்தானின் மொத்த பால் உற்பத்தியில் 60% வரை எருமைகளில் இருந்தே கிடைக்கிறது. இந்தியாவின் பாலுற்பத்தியில் கிட்டத்தட்ட 50% எருமைப் பாலில் இருந்தே பெறப்படுகிறது.

அறுபதுகளில் இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை வர்க்கீஸ் குரியன் குழுவின் மிகப் பெரிய கண்டுபிடிப்பான எருமைப் பாலில் இருந்து பால் மா தயாரித்தல், இந்திய பால் பண்ணைத்துறையை ஒரு படி உயர்த்தியது எனலாம். இன்று இந்தியாவின் பால்ப்பண்ணைத் துறை உலகில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அத்திவாரமிட்ட முக்கிய காரணிகளில் ஒன்றாக இந்த எருமைப் பால் மா புரட்சியை சொல்ல முடியும். உற்பத்தியாகும் எருமைப் பாலை நீண்டநாட்களுக்கு கெடாமல் வைத்திருக்க வேண்டுமெனில் அதனை மாவாக்க வேண்டும் என்ற நிலையில், அதற்குரிய தொழில் நுட்பம் அன்றைய நாளில் இருந்திருக்கவில்லை. உலகளாவிய ரீதியில் பசும் பாலுக்கே மாவாக்கும் தொழில் நுட்பம் இருந்தது. எருமைப்பாலிலுள்ள அதிகளவான கொழுப்பு வீதம் இதற்கு இடையூறாக இருந்தது. பல உள்ளூர், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இது தொடர்பாக தொழில்நுட்ப உதவிகளை குரியன் கேட்டபோதும் பலன் பூச்சியமாகவே இருந்தது. இறுதியில் பல தோல்விகளுக்கு பிறகு அதற்குரிய நுட்பத்தை கண்டறிந்தனர். பாலின் கொழுப்பை பிரித்தெடுத்து இந்த வெற்றியை கண்டனர். இந்தப் புள்ளிதான் இந்திய-பாக்கிஸ்தான் நாடுகளின் பால் பண்ணைத்துறையை உயர்த்தியது எனலாம். நெஸ்லே போன்ற பல்தேசிய கம்பனிகள் இன்று வரைக்கும் இந்திய சந்தையை நெருங்க முடியாமல் இருக்க, இந்திய பால் கூட்டுறவுத்துறை மட்டுமல்ல, இந்திய எருமைகளும் அவற்றின் மூலம் உருவாகிய பால் உற்பத்தித் தொழிநுட்பமும்தான் காரணம்.

இத்தாலிய எருமைகளின் கதை

Italian Buffaloes

உலகெங்கிலும் தயாரிக்கப்படும் பீட்சா உணவுகளில் பாவிக்கப்படும் முதன்மையான cheese வகை Mozzarella cheese ஆகும். பலவகை Cheese பயன்பட்டாலும் Mozzarella வகை பயன்படுத்தும் போது அதன் சுவையும் தரமும் சிறப்பானது. விலையும் அதிகம். இந்த வகை Cheese இற்கு இத்தாலி மிகப் பிரசித்தம். ஏனைய நாடுகளின் Mozzarella வகையை விட இத்தாலியில் தயாரிக்கப்படுவது சுவைமிக்கது. தரம் வாய்ந்தது. இத்தாலியிலுள்ள Mediterranean எருமைகளில் இருந்தே இந்த வகை Cheese தயாரிக்கப்படுகிறது.

இத்தாலியில் 400,000  வரையிலான எருமைகள் உள்ளன. உரோம பேரரசு காலத்தில் சில ஆக்கிரமிப்புகளின் போது ( Barbarian invasion) இந்த எருமைகள் கொண்டுவரப்பட்டனவாம். ஆரம்ப காலங்களில் வண்டி இழுத்தலுக்கும் பொதி சுமத்தலுக்கும் இறைச்சிக்கும் பயன்பட்ட மேற்படி எருமைகள் கடந்த நூற்றாண்டில் Mozzarella cheese தயாரிக்கப் பயன்படுகின்றன. இந்த இத்தாலிய Mediterranean வகை எருமைகளும் கரிய நிறமுடையன. ஆண் எருமை 500-600 Kg வரையும் பெண் எருமைகள் 300-450 Kg வரையும் சராசரி நிறையை உடையன. 1600-1800 Kg வரையான வருடாந்த பாலுற்பத்தியைத் தர வல்லன. பாலில் உள்ள் 7-8% வரையான கொழுப்பு மேற்படி Cheese செய்ய காரணமாக அமைகிறது. சிறியது முதல் பெரியது வரையான பல Cheese உற்பத்திக் கூடங்களில் Mozzarella தயாரிக்கப்பட்டு உலகெங்கிலும் ஏற்றுமதியாகிறது. வவுனியா, செட்டிகுளத்தில் பால் பொருள் உற்பத்தி செய்யும் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் பரீட்சார்த்தமாக Mozzarella cheese தயாரித்திருந்தார். பொருளாதார நெருக்கடியும் எருமைப்பால் கிடைப்பதில் இருந்த சிரமமும் அவரின் முயற்சிக்கு தற்காலிகமாக தடைபோட்டுள்ளது.

Mozzarella Cheese

பொதுவாக எருமைப்பாலில் பசுப்பாலை விட சில முக்கிய மூலக்கூறுகள் அதிகளவில் உள்ளமை தயிர், வெண்ணை, ச்சீஸ், பன்னீர் போன்ற பால் உற்பத்திப் பொருட்களை செய்ய காரணமாக அமைகின்றன. குறிப்பாக கொழுப்பு ( பசுப்பால்- 3-4%, எருமைப்பால் – 6-8%), புரதம் (பசுப்பால்- 3.2%, எருமைப்பால் 3.7%) போன்றவை அதிகம் உள்ளமையும் சில நொதியங்களின் சாதகமான செயற்பாடுகளும் கட்டமைப்பின் சாதகத் தன்மையும் மேற்படி தரமான பால் பொருட்களின் உற்பத்திக்கு காரணமாக அமைகின்றன. இந்தியாவில் எருமைப்பாலில் இருந்து பல்வேறுபட்ட பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இலங்கையின் கிழக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களில் உள்ள எருமைப் பண்ணைகளில் இருந்து தயிர், நெய் போன்றன உற்பத்தியாகி நாடு முழுதும் விற்பனையாகிறது. அந்தப் பகுதிகளுக்கு கணிசமான பொருளாதார விருத்தியை இந்த தொழில் தருகிறது.

எருமைப் பாலும் பசும்பாலும்

என்னதான் எருமை கருமையான நிறமாக இருந்தாலும் அதன் பால் பசுப்பாலை விட வெண்மையானது. பீற்றா கரோட்டின் எனும் நிறப்பொருள் தான் பசும் பாலுக்கு மெல்லிய மஞ்சள் நிறத்தைத் தருகிறது. விற்றமின் A உருவாகுவதற்கு இந்த பீற்றா கரோட்டின் பயன்படுகிறது. எருமைகளில் பீற்றா கரோட்டின் அதிகளவில் விற்றமின் A ஆக மாற்றமடைகிறது. இதனால் பால் வெள்ளையாகவே இருக்கும். எருமைப்பாலில் விற்றமின் A உம் அதிகளவில் இருக்கும்.

எருமைப்பாலில் கொழுப்பு, புரதம், கல்சியம், முக்கியமான விற்றமின்களின் சதவீதம் அதிகம். ஒரு கப் பாலை எடுத்தால் (244 ml) பசுப்பாலில் 8 g உம் எருமைப்பாலில் 17 g  கொழுப்பும் காணப்படும். எருமைப் பாலில் 237 கலோரியும் பசுப்பால் 149 கலோரியும் இருக்கும். புரதமும், குறிப்பாக கேசின் புரதமும் அதிகளவில் இருக்கும். பசுப்பாலில் தண்ணீர் 88% உம் எருமைப் பாலில் 83% உம் இருக்கும். என்னதான் கொழுப்புச்சத்து அதிகம் எருமைப்பாலில் இருந்தாலும் கொலஸ்ரோல் பசும் பாலைவிட குறைவுதான். இது ஒரு முக்கியமான சுகாதார அனுகூலமாகும். கொழுப்பின் அளவு அதிகம் இருப்பதால் கிறீம் போன்ற இயல்பும் அதிக சுவையும் எருமைப்பாலுக்கு உண்டு. நெய், வெண்ணை, ச்சீஸ் போன்ற பால் பொருட்கள் இலகுவில் செய்ய முடிவதோடு பசுப் பாலைவிட அதிகமாக, மேற்படி பொருட்களின்  உற்பத்தியையும் பெற முடியும். எருமைப் பாலில் அதிகமாக உள்ள கேசின் புரதத்தின் நுண் துணிக்கைகள் (Micelles) மற்றும் கல்சியம் பொஸ்பரஸ் மூலகங்களின் காரணமாக திரளும் ( coagulation) தன்மை அதிகமாக இருக்கும். இதனால் பால் பொருட்களை இலகுவாகச் செய்ய முடியும். இலங்கையில் எருமைத் தயிரை பல ஆயிரம் வருடங்களாக கிராம மட்டங்களிலேயே இலகுவாகச் செய்ய இந்த இயல்பே காரணம்.

buffalo curt

பொதுவாகவே எந்த வகையான பால் என்றாலும் கல்சியச் சத்தை அதிகம் கொண்டிருக்கும். எலும்பு வளர்ச்சிக்கும் எலும்பு உருவாக்கத்துக்கும் கல்சியம் அவசியம். எருமைப்பாலில் உள்ள கல்சியம் பசும்பாலை விட அதிகமாதலால் அது அனுகூலமானது. கல்சியத்துக்கு மேலதிகமாக எருமைப்பாலில் அதிகளவில் கேசின் புரதம் இருக்கிறது. இந்த வகை புரதம் எலும்பு விருத்திக்கு அவசியமானது. இந்த இரண்டு மூலக்கூறுகள் அதிகமுள்ள எருமைப் பால் Osteoporosis போன்ற நோய்கள் வராமல் தடுப்பதில் உதவக்கூடியது. இது தொடர்பாக எலிகளை கொண்டு செய்த சில ஆய்வுகளில், எருமைப்பாலைக் குடித்த எலிகளின் எலும்பு உருவாக்கமும் அதன் உறுதியும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டதை உறுதி செய்துள்ளனர்.

எருமைப் பாலில் அதிகமாக Antioxidant மூலக்கூறுகள் உள்ளன. இவை சிதைவடைந்த கலங்களை புதுப்பிக்கத்தக்கன. குறிப்பாக அனுசேபத்தில் உருவாகும் free radicals எனும் கூறுகளை இல்லாமல் செய்யக்கூடியன. இதனால் வயதாதல் தள்ளிப்போகும். பசும் பாலில் 40- 42% உம் எருமைப் பாலில் 56-58% Antioxidants உள்ளன.எருமைப்பாலில் beta-lactoglobulin, விற்றமின் k போன்றன அதிகமாக இருத்தலும் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவிகரமாக இருக்கும்.

peroxidase நொதியம் அதிகளவில் இருப்பதால் பசுப்பாலை விட ஓரிரு நாட்கள் கெடாமல் எருமைப்பாலை வைத்திருக்கமுடியும். பண்ணையாளர்களின் பாலை கொள்வனவு செய்யும் போது பாலிலுள்ள கொழுப்பு (Fat%), கொழுப்பல்லாத திடப் பொருட்களின் ( SNF) அடிப்படையிலேயே விலை தீர்மானிக்கப்படும். இந்த இரண்டு இயல்புகளும் அதிகமாகவுள்ள  எருமைப்பாலின் விலை அதிகம். மேலும் நீடின் சதவீதமும் குறைவு என்பதால் எருமைப்பாலுக்கு கேள்வி அதிகம்.

எனினும், எருமைப்பாலை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கூடிய கவனம் எடுக்க வேண்டும். அதிக கொழுப்பு மற்றும் ஏனைய திடப் பொருட்களின் அளவு அதிகம் இருப்பதால் வயிற்றுக் கோளாறுகளை சில குழந்தைகளுக்கு ஏற்படுத்தலாம். மனிதர்களில் கணிசமானோருக்கு பாலை அருந்தும் போது  lactose in tolerance எனும் ஒவ்வாமை ஏற்படும். பசும்பாலை விட எருமைப்பாலில் lactose அதிகமென்பதால், அந்தச் சந்தர்ப்பமும் அதிகம்.

இலங்கையில் எருமை வளர்பின் சவால்களும் தீர்வுகளும்

1. உணவு சார்ந்த பிரச்சனைகள்: எருமைகள் பசு மாடுகளை விட பருமனானவை. அதிகளவு உணவை எடுப்பவை. இலங்கை எருமைகள் மேய்சலையே பிரதானமாக நம்பியிருப்பவை. தினசரி கணிசமான புற்களை உண்பவை. ஏனைய வர்த்தக தீவனங்களை எருமைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இல்லாததால் குறைவடைந்து வரும் மேய்ச்சல் நிலங்கள் காரணமாக மேய புற்கள் இல்லாது அவை பாதிக்கப்படுகின்றன. வறட்சிக் காலத்தில் எருமைகள் புற்கள் இல்லாமல் பாதிக்கப்படுகின்றன. கிடைக்கும் புற்கள் கூட ஊட்டச் சத்துக் குறைவான தரமற்ற புற்களே. பசுக்களைப் போன்று மேம்படுத்தப்பட்ட விஞ்ஞான பூர்வமான உணவு ஊட்டல் முறைகளை செய்தால் இந்தச் சவாலை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். இத்தாலியில் பசுக்களைப் போல எருமைகளுக்கும் நவீன உணவூட்டல் முறைகளை செய்கின்றனர் ( TMR, silage). மேலும் மேய்சல் நிலங்களை முறையாக பராமரிக்கலாம். தரமான ஊட்டச்சத்து மிக்க மேய்ச்சல் புற்களை நடவு செய்து மேய்சல் நிலங்களின் தரத்தை மேம்படுத்தலாம். இளம் கன்றுகளுக்கு அடர் தீவனத்தை வழங்கி அவற்றின் ஆரம்ப கால வளர்ச்சி சிறப்புற அமைய வகைசெய்ய முடியும் (இறக்குமதியாகும் அடர்வுத் தீவன விலை அதிகம் என்பதால் உள்ளூரில் கிடைக்கும் மாற்று உணவு மூலங்களை தேடலாம்).

buffalos in agriculture

2. இனப்பெருக்கம் சார்ந்த பிரச்சனைகள்: எருமைகள் இலகுவில் சினைப்படாதவை. சினைப்பட்டாலும் கருத்தங்குவதும் குறைவு. இலகுவில் கருச்சிதைவுக்கு உட்படுபவை. ஏராளமான இனப்பெருக்கம் சார்ந்த பிரச்சனைகளைக் கொண்டவை. இலங்கையில் எருமைகளுக்கு செயற்கைச் சினைப்படுத்துதல் செய்வது மிகமிகக் குறைவு. எருமைகளில் சினைப்பருவ  வேட்கை அறிகுறி தெளிவாகத் தெரியாது. செயற்கைச் சினைப்படுத்தலின் வெற்றி வீதமும் மிகக் குறைவு. வெப்ப அயர்ச்சி போன்ற காரணிகள் எருமைகளை இலகுவில் பாதிப்பதால் இனப்பெருக்க செயன்முறைகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றன.

இயற்கை முறை சினைப்படுத்தலுக்கு பயன்படும் தரமான காளைகளும் இலங்கையில் குறைவு. இதனால் கருத்தங்கல் வீதம் பாதிக்கப்படுகிறது.தரமான கன்றுகள் கிடைப்பதில்லை. தரமான காளைகளை இறக்குமதி செய்து பண்ணைகளில் பாவிக்கும் போது இந்தச் சிக்கலை ஓரளவுக்கு தீர்க்கலாம். மேலும், எருமைகளைச் சினைப்படுத்தும் நுட்பங்களை சினைப்படுத்துனர்களுக்கும், சினை அறிகுறிகளை சரிவர அடையாளம் காணுதல் மற்றும் சினைக்கு முன்னர் பின்னரான மேலாண்மை முறைகளை பண்ணையாளர்களுக்கும் பயிற்சிகள் மூலம் வழங்கலாம். வெப்ப அயர்ச்சிப் பராமரிப்புகளை முறையாக கடைப்பிடிக்க ஊக்குவிக்கலாம்.

3. கொட்டகை/இருப்பிடம் சார்ந்த பிரச்சினைகள்: இலங்கையிலிருக்கும் பெரும்பாலான எருமைகளுக்கு முறையான கொட்டகைகள் கிடையாது. திறந்த வெளிகளில் வளர்க்கப்படுபவை. சில இடங்களில் தடி தண்டுகளால் சுற்றி அடைக்கப்படும்; அவ்வளவுதான். மழையானாலும் சரி வெய்யிலானாலும் சரி அவை அங்குதான். இதன் காரணமாக அவை பல பாதிப்புக்களைச் சந்திக்கின்றன; நோய்ப்படுகின்றன. வேட்டை விலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பால் கறக்கும் போது பாலின் சுத்தத்தை பேணமுடிவதில்லை. பல இடங்களில் எருமை வளர்ப்பு காடுகளுக்குள்ளும்  குளக்கரைகளிலும்தான் இடம்பெறுகிறது. முற்றுமுழுதாக என்று இல்லை; குறித்த சதவிகிதத்தில், அதாவது மழை வெய்யிலுக்கு பாதுகாப்பு தரும் வகையில், கொட்டகைகளை அமைத்தால் இளங்கன்றுகளின் இழப்பு மற்றும் காலநிலையால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்கலாம்.

4. நோய்கள்: எருமைகளுக்கு கால்வாய் நோய் ( foot and mouth disease), கருங்காலி நோய்( black quarter), தொண்டையடைப்பான்நோய் (Hemorrhagic septicemia) போன்றன அதிகளவில் ஏற்படுகின்றன. இவற்றுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்ற போதும் பெரும்பாலான எருமைகள் காடுகளுக்குள்ளும், நீர் நிலைகளுக்கு அண்மையிலும் வாழ்வதால் தடுப்பூசியை வழங்குவதில் சிரமம் காணப்படுகிறது. நோய்ச் சிகிச்சையும் கடினம். எருமைகளின் உடல் நிறை அதிகம் என்பதால் சிகிச்சைச் செலவும் அதிகம். இதனால் பல பண்ணையாளர்கள் எருமைகளுக்கு நோய் ஆரம்பத்தில் சிகிச்சை தருவதில்லை. 

மேலும், அண்மைக் காலத்தில் பரம்பிஸ்டோம் ( Immature Paramphistomiasis) போன்ற புழு பூச்சிகளின் தாக்கம் காரணமாக இளம் எருமைகள் இறக்கின்றன. இந்தப் புழுக்கள் நீர் நிலைகளை அண்மித்த புற்களில்தான் அதிகம் உருவாகினறன. நீர்நிலைகளை அண்மித்த பகுதிகளில்தான் அதிகமாக எருமைகள் இருப்பதால் இவை இலகுவான இலக்காக மாறுகின்றன. பருவத்துக்கேற்ற குடற்புழுச் சிகிச்சைகளை செய்வதன் மூலம் இதனை தடுக்கலாம். தடுப்பூசி வழங்குதலை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். தேவையான தடுப்பூசிகள் தடையின்றிக் கிடைக்க வழி செய்ய வேண்டும். நோய் கிளர்ச்சிகளின் போது குறைந்தபட்சம் மானிய அடிப்படையிலாவது மருந்துகளை வழங்க வேணடும்.

5. தண்ணீர் கிடைப்பதிலுள்ள சிரமங்கள்: எருமைகளுக்கு அதிகளவு குடி தண்ணீர் தேவை என்பதோடு உடல் வெப்பநிலையை பேண நீர்நிலைகள் அவசியம். வறட்சிக் காலத்தில் நீர்நிலைகள் வற்றிவிடும். இதனால் அந்தந்த காலங்களில் பாலுற்பத்தி கணிசமாக குறைந்துவிடும். மேலும், இலங்கையில் பசுமாடுகளுக்கும், எருமைகளுக்கும் தண்ணீர் வைக்கும் நடைமுறை குறைவாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏற்படும் உற்பத்திக் குறைவை பண்ணையாளர்கள் அறிவதில்லை. மேலே கூறிய காரணங்களை களைய தொடர்ச்சியான தண்ணீர் வழங்கலை உறுதிப்படுத்தினால் உற்பத்திகள் பெருகும்.

6. மரபியல் ரீதியில் தரமுயர்த்தப்படாமை: இலங்கையில் உள்ள அதிகமான  எருமைகள் பல வருடங்களாக தரமுயர்த்தப்படவில்லை. தொடர்ச்சியான உள் முகக்கலப்பு (inbreeding) காரணமாக அவற்றின் மரபுக் கூறுகளும் பெரிதாக மாற்றமடையவில்லை. மாடுகளைப் போல் உற்பத்தித் திறனும் கூடவில்லை. எதிர்காலத்தில் தரமான மூரா, நிலிரவி போன்ற இந்திய வகை எருமைகளைக் கொண்டு தரமுயர்த்தினால் சிறப்பாகும்.

7. சூழலியல் கரிசனைகள் மற்றும் பிரச்சனைகள்: எருமைகள் கணிசமாக கழிவகற்றும் என்பதால் அவற்றை சூழலில் இருந்து அகற்றுவது சிரமம். அவை நீர்நிலைகளை மாசுபடுத்துவதும் நிகழ்கிறது. நகரப் புறங்களில் எருமைகளின் கழிவுகளால் பாதிப்பு ஏற்படுவதால் பலர் அதனை வளர்ப்பதில்லை. எருமை எருவை பயன்படுத்தி ஏனைய வேளாண் நடவடிக்கைகளை ஊக்குவிக்கலாம். 

8. பால், இறைச்சிகளுக்கான பொருத்தமான விலை கிடைக்காமை: எருமைப் பாலுக்கும் இறைச்சிக்கும் கிடைக்கும் விலை மிகக்  குறைவு. இடைத்தரகர்கள் காரணமாக பண்ணையாளர்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. பாலாக விற்பதைவிட பெறுமதிசேர் பால் பொருட்களாக விற்பது இலாபகரமானது. பசுப்பாலை விட எருமைப் பாலிலிருந்து பால்  பொருட்களை இலகுவாகச் செய்ய முடியும்

9. மிதமிஞ்சிய வகையில் இறைச்சிக்கு பயன்படுத்தல்: பல இடங்களில் பால் உற்பத்தி செய்யத்தக்க பெண் எருமைகளும் இறைச்சிக்கு வெட்டப் படுகின்றன. இலங்கையில் எருமைகளின் எண்ணிக்கை குறைவு என்ற காரணத்தால் முடிந்தவரை உற்பத்தி கூடியதும் இளமையானதுமான எருமைகளை கொல்வதை தவிர்த்தால் சிறப்பாகும்.

10. பசு மாடு வளர்ப்பைப் போல் எருமை வளரப்பு தொடர்பாக முறையான ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் இல்லாமை: எருமைகளின் பாலுற்பத்தியை கூட்டுதல், பால் உற்பத்திகள், எருமைகளின் உணவு, புற்கள் வளர்த்தல், மேய்சல் நில மேம்பாடு, ஏனைய உணவுமுறைகள், எருமைகளை மரபு ரீதியாக தரமுயர்த்துதல், சிகிச்சைகள், நோய்கள், பண்ணையாளர்  மேலாண்மைப் பயிற்சிகள் என பல ஆய்வுகள் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு இந்த துறை மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கு அரசு, அரச திணைக்களங்கள், பல்கலைக் கழகங்கள், தனியார், கூட்டுறவு அமைப்புகள், பண்ணையாளர் அமைப்புகள், பண்ணையாளர்கள், பங்குதாரராக  வேண்டும். இந்தியா, பாகிஸ்தான், சீனா, எகிப்து, இத்தாலி போன்ற எருமை வளர்ப்பின் முன்னோடி நாடுகளின் அறிஞர்கள், ஆய்வாளர்களை வரவழைத்து அனுபவங்களை ஆலோசனைகளைப் பெறலாம். அந்தந்த நாடுகளுக்கு இலங்கையின் துறைசார் தரப்புக்களை அழைத்துச்சென்று கள அனுபவங்களை பெற வழிசெய்யலாம். சர்வதேச எருமை ஆய்வு மாநாடுகளை நடத்தலாம்.

இப்படியாக பல சவால்கள் இலங்கையின் எருமை வளர்ப்பில் காணப்படுகின்றன. நான் கூறியது போல, அவற்றை சாத்தியமான முறையில் தீர்த்தால் இலங்கையின் பாலுற்பத்தியில் எருமைகளின் பங்களிப்பை அதிகரிக்க முடியும். பாலுற்பத்தியில் தன்னிறைவு காண முடியும்.

 தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

7969 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)