Arts
15 நிமிட வாசிப்பு

வணிக எழுச்சி தொடக்கி வைத்த சமூகமுறைமை

December 8, 2022 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம் மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

“தமிழ்ப் பண்பாடு: ஊற்றுக்களும் ஓட்டங்களும்” எனும் பேசுபொருளின் முதல் தளமாக “திணை வாழ்வியலைத் தகர்த்து உருவாகிய அரசு” பற்றிப் பேசி வருகிறோம். இதுவரை பேசப்பட்டு வரும் ‘வர்க்கங்கள் உருவாகிய போது ஏற்பட்ட அவசியம் காரணமாக அரசு தோற்றம் பெற்றது’ என்பதற்கு மாறுபட்ட விடயமாக இங்குள்ள பேசு பொருள் அமைந்துள்ளது. இவ்வகையிலான புதிய தொடக்கம் ஒன்றையும் அதன் தொடர்ச்சியாக மாற்று வடிவிலான இயக்கப் போக்கையும் தமிழ்ப் பண்பாடு வெளிப்படுத்த ஏற்றதான அடித்தளம் எவ்வகையில் அமைந்திருந்தது என்பது பற்றி இங்கு அலசுவோம்.

ஏனைய சமூகங்களில் விவசாய எழுச்சி ஏற்பட்டதன் பேறாக சொத்துடைமை சாத்தியப்பட்டு இருந்தது; உடைமையாளர்களும், அவர்களுக்கான உற்பத்திச் சாதனங்களை இயக்குவதன் வாயிலாக பொருளுற்பத்தியை மேற்கொள்கின்ற உழைப்பாளர்களும் எனச் சமூகம் இரு வேறுபட்ட வர்க்கங்களாகப் பிளவுற்ற போது உடைமையாளர்களைப் பாதுகாக்கும் கருவியாக அரசு தோன்றியது என்பதையே சமூகவியல் – அரசியல் நோக்காக இதுவரை கவனம் கொண்டுள்ளோம். வர்க்கங்களாகப் பிளவுறாமலே மேலாதிக்கம் பெற்ற முழுச் சமூகம் ஏனையவற்றை முழுதாக வென்றடக்கியதன் வாயிலாக வரலாற்றுத் தொடக்கத்தை ஏற்படுத்திய தமிழ்ச் சமூக இயங்கு முறையின் பிரத்தியேகத் தன்மை அதற்கே உரித்தான அரசியல் முக்கியத்துவத்துடன் கவனம் கொள்ளப்படுவதில்லை.

Mao Zedong and Karl Marx

சமூகப் பிரச்சினைகளின் தீர்வுக்கு வர்க்கப் போராட்டக் கோட்பாட்டை முன்னிறுத்தி இயங்கிய மார்க்சியம் வர்க்கங்கள் ஒழிந்து அனைத்து உற்பத்திச் சாதனங்களும் பொதுவுடைமை ஆகும்போது ஒவ்வொரு நாடும் எதிர்நோக்குகின்ற அனைத்து நெருக்கடிகளும் தீர்வுகளைக் கண்டுவிடும் என நம்பப்பட்டு வந்தது. இன்று வர்க்க அரசியல் பின்னடைந்து ஒடுக்கப்படுகிற – புறக்கணிக்கப்படுகிற சாதிகள், இனத் தேசியங்கள், பாலினங்கள் எனும் முழுச் சமூக சக்திகள் தத்தமது பிரச்சினைகளின் தீர்வுக்காகப் போராட முற்படுகின்ற சூழலில் வர்க்கப் போராட்டக் கோட்பாடு மட்டுமே பிரதானமானது என முன்னிறுத்தி இயங்குகிற மார்க்சியத்தால் வழிகாட்ட இயலாதுள்ளது. முழுச் சமூக சக்திகளான தேசியம் உட்பட ஏனையவற்றை வர்க்க விரிவாக்கமாக கருதிவிட இயலாது.

வர்க்கங்கள் இடையேயான மோதல்கள் சார்ந்த இயக்கப் போக்குகளினின்றும் வேறுபட்ட பண்பை முழுச் சமூக சக்திகள் கொண்டுள்ளன. தமிழ் வாழ்வியல் வெளிப்படுத்திய முழுச் சமூக சக்தியாகிய ‘திணை மேலாதிக்க அரசு வடிவம்’ – அதன் வரலாற்றுச் செல்நெறிப் பாங்கு – என்பவற்றை உள்வாங்குகின்ற மார்க்சிய முறையியல் மட்டுமே இன்றைய வரலாற்று நெருக்கடிகளின் தீர்வுக்கு வழிகாட்டவல்லது. இது குறித்த தெளிவினை எட்டுவதற்கு முன் தேவையாக இத்தகைய திணை வாழ்வியல் என்ற தனித்துவப் போக்கு உருவாக இயலுமாக இருந்த அடிப்படைக் காரணி பற்றிப் பார்ப்பது அவசியமாகிறது.

இத்தகைய தனித்துவப் பண்பை உருவாக்கிய காரணியானது உலகின் ஏனைய பண்பாடுகளினின்றும் தமிழுக்கு விசேடித்த குணாம்சங்களை நல்கியுள்ளது; அதன் தாற்பரியங்கள் பற்றி ஆழ்ந்த தேடல் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இன்றைய நெருக்கடிகளின் தீர்வுக்கான மார்க்கத்தைக் கண்டடைய இயலுமாகும். இது தொடர்பில் இரண்டு விடயங்களை இங்கு பார்க்கலாம்:

1.திணை எனும் பேசுபொருள் வெளிப்பட இயலுமான அடித்தளம்.

2. முதல் மதமாக ஆசீவகம்.

திணை எனும் பேசுபொருள் வெளிப்பட இயலுமான அடித்தளம்

இன்றைய உலக ஒழுங்கு மாற்றம் பெறும் சமநிலைக் குலைவு ஒன்று ஏற்பட்டவாறு உள்ளமை பட்டவர்த்தனமான நிதர்சனம். ஏற்கனவே பொருளியல் தளத்தில் மேற்குலகம் வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில் அரசியல் ரீதியாகவும் இரண்டாம் நிலை அடைவதனை அனுமதிக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்தமாக ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுக்காறு என்பது மாற்றம் பெற்றுவிடும் என்பதனை உலகின் ஆளுந்தரப்பான மேற்குலக ஏகாதிபத்திய அணி நன்கு உணர்ந்துள்ளது.

பிரிக்ஸ்

மேற்குலக வீழ்ச்சியின் மறுதலையாக கிழக்குலகும் தெற்கு நாடுகளும் பொருளாதார – அரசியல் எழுச்சியை எட்டி வருகின்றன. ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் போன்ற (BRICS அமைப்பாக இணைந்து இயங்குகின்ற) நாடுகள் ஐக்கிய அமெரிக்காவையும் மேவக்கூடியதான வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. இந்த நாடுகளை விடவும் பின்தங்கிய நிலையை ஏற்கனவே அடைந்துவிட்ட (அடைந்து வருகின்ற) ஐரோப்பிய நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியா, ஜப்பான், கனடா போன்ற ஆளும் ஏகாதிபத்திய அணிக்கு உரியன தங்களது பின்னடைவைத் தடுக்கவியலாத நிலையில் ருஷ்யாவை யுத்தத்துக்குள் இழுத்து வீழ்த்தி அழித்துவிட இயலுமென்ற தப்புக் கணக்கில் உக்ரேனைப் பலிக் களமாக ஆக்கி வருகின்றன; முட்டாள் ஒருவன் பாறாங்கல்லைத் தூக்குவது தனது காலைச் சேதமாக்குவதற்கு வழிகோலவே என்றவாறு மென்மேலும் தங்களது அழிவைத் துரிதப்படுத்தும் கைங்கரியங்களையே ரஷ்ய – உக்ரேன் போர்க் களத்தில் கண்டு வருகின்றனர்.

ரஷ்யாவை யுத்தத்தில் வலிந்து இழுத்ததைப் போலவே சீனாவைத் தைவான் யுத்தக் களத்தில் ஈடுபட வைத்துக் குளிர்காய நினைத்த ஐக்கிய அமெரிக்கத் திட்டம் கைகூடவில்லை. ‘சீனாவின் பிரிக்கவியலாத ஒரு மாநிலம் தைவான் என்ற வகையில் பேச்சுவார்த்தை வாயிலாக அதனை இணைப்போம்; இதுவரை தனியொரு நாடாக அது எந்தவொரு நாட்டினாலும் அங்கீகரிக்கப்படவில்லை. இனியும் சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்த முற்படாதவரை யுத்தத்தின் வாயிலாகத் தைவானை வலிந்து இணைக்கச் சீனா முயற்சிக்கப்போவதில்லை’ என்று மக்கள் சீனத்தை ஆளும் கொம்யூனிஸ்ட் கட்சி திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது.

சோவியத் யூனியனது சோசலிச முன்னெடுப்பை வீழ்ச்சியடையச் செய்ததைப்போல மக்கள் சீனத்தின் சோசலிச விருத்தியைத் தடுத்துவிட இயலும் என்ற மேற்குலக எத்தனங்கள் எதுவும் பலிக்கவில்லை. பல நாடுகளுடன் எல்லைப் பிரச்சினைகளைச் சீனா கொண்டிருக்கும் நிலையில் அயல் நாடுகளுடன் யுத்தத்தில் மூழ்கடிக்க முனைவதையும் தவிர்த்துப் பேச்சுவார்த்தை வாயிலாக அவற்றைத் தீர்ப்போம் என இயங்குவதைப் போலவே தைவான் பிரச்சினையையும் சீனா கையாளுகின்றது.

Russia-Ukraine war

‘சீனா ஒருபோதும் சோவியத் யூனியனைப் போல நடந்து கொள்ளாது’ என்று சொல்லும்போது சோவியத் யூனியனின் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு சீனச் சோசலிசத்தை எவ்வாறு பாதுகாத்து முன்னோக்கிக் கொண்டு செல்வது என்ற எச்சரிக்கை உணர்வையே சீனக் கொம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படுத்துவதாகக் கருதலாம். சோவியத் யூனியனும் அதன் தகர்வுடன் தலைமை நாடாக வெளிப்பட்ட ரஷ்யாவும் யுத்தங்களுக்குப் பின்னிற்காத நடைமுறையைக் கொண்டிருந்ததிலும் சோவியத் சோசலிசம் வீழ்ச்சியடைய இயலுமானதிலும் ஏதும் பொதுத் தன்மை உள்ளதா? அந்தப் பொதுத் தன்மையில் இருந்து வேறுபட்ட குணாம்சக் கூறு சீனத் தன்மைக்குக் காரணமாக இருக்க இடமுண்டா?

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கான அடிப்படையில் இருந்து சீனாவுக்கான வேறுபாடு என்ன என்ற தெளிவு எட்டப்படவில்லை. ஏகாதிபத்திய நாடுகளால் ஒடுக்கப்பட்டு இருந்த சூழலில் மாஓ சேதுங் சிந்தனை நெறியில் போராடி 1949 இல் பெற்ற தேசிய விடுதலை வாயிலாகச் சீனா சோசலிசத்தை நோக்கி முன்னேற இயலுமாயிற்று; ரஷ்யாவில் 1917 இன் பாட்டாளி வர்க்கப் புரட்சி சோவியத் யூனியனை உருவாக்கி சோசலிசம் நோக்கி வளர்த்தெடுத்தது. சோவியத் யூனியனும் சீனாவும் எதிர்நோக்கிய நெருக்கடிகளைக் கவனத்தில் எடுத்த சீனா எழுபதாம் ஆண்டுகளின் பிற்கூறில் ‘சந்தை சோசலிச’ முறையை உள்வாங்கிய போது தேச விடுதலை ஊடாக சமூக மாற்றத்தை வென்றெடுக்கக் கையாண்ட மாஓ சேதுங் சிந்தனை முறையைச் சோசலிச நிர்மாணத்துக்கும் உரியதாக வரித்தெடுத்து வளர்திசைப்படுத்தியது.

சோவியத் யூனியனில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலவியமை தனியொரு வர்க்கத்தின் மேலாதிக்கத்துக்கு வழிகோலியது; சீனத்தின் மா – ஓ சேதுங் சிந்தனையில் வீழ்த்தப்பட வேண்டிய முதலாளி வர்க்கத்துடன் ஐக்கியப்பட்டு விடுதலையை (புரட்சியை) வென்றெடுப்பது மட்டுமன்றி சோசலிச நிர்மாணத்தையும் சாத்தியப்படுத்துவது என்ற குணாம்ச வேறுபாடு ‘சீனத்தின் பிரத்தியேக நிலை’ எனச் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியால் அடையாளப்படுத்தப்படுகிறது.

இது சீனாவுக்கான பிரத்தியேக நிலை மட்டுமல்ல; உலகளவில் மார்க்சிய விருத்திக்கு அவசியமானது. இதனைக் கையேற்காத நிலை காரணமாகவே விடுதலை பெறாத ஏனைய நாடுகளில் மார்க்சியர்கள் தலைமைப் பாத்திரத்தைக் கையேற்க இயலாதவர்களாக தடுமாற நேர்கிறது. இன்று ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்படும் தேசங்களின் உள்ளே உள்ள முரண்பாடுகளுக்கான அடிப்படையே ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு இன்னமும் ஆட்பட்டபடி இருப்பது தான். அந்தச் சுரண்டலை நீடிப்பதற்காகவே மேற்குலகம் அதனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த ரஷ்ய – சீன எதிரிகளை வீழ்த்தும் தந்திரோபாயத்தைக் கையாளுகிறது!

வீழ்த்தப்பட வேண்டிய முதலாளித்துவத்துடன் ஐக்கியப்பட்டு சோசலிசத்தை வென்றெடுத்தல் மார்க்சின் பாட்டாளி வர்க்கச் சிந்தனைக்கு மாறுபட்டது தான். உலக இயக்கம் (சமூக மாற்றங்கள்) வர்க்கங்கள் இடையேயான மோதல்கள் வாயிலாக மட்டுமே நடந்தேறுவதாயின் மார்க்சின் எதிர்பார்ப்பு மாற்றப்பட இயலாததுதான். நிதர்சனம் வேறு வகை – இதனை மார்க்ஸ் அறிந்திருக்காதது அவரது குற்றமும் அல்ல. சோவியத் வீழ்ச்சிக்குப் பின் வர்க்கப் போராட்டம் பின்னடைந்து அடையாள அரசியல் மேலோங்கிய பின்னரும் வரலாற்று மாற்றப்போக்கை மார்க்சியர்கள் காணத் தவறுவதே பாரதூரமான தவறாகும்.

இனத் தேசியங்கள், சாதிகள் போன்ற முழுச் சமூக சக்திகள் பிறரை எதிரிகளாகக் கணித்து மோதும் அடையாள அரசியலும் தீர்வை எட்ட வழிகோலவில்லை என்பதனால் மீண்டும் பாட்டாளி வர்க்க எழுச்சி வருமென இலவுகாத்த கிளியாக ஏங்கும் மார்க்சியர்கள் உள்ளனர். முதலாளித்துவத்துடன் ஐக்கியப்படும் சீனச் சோசலிசக் கையாளுகை அடையாள அரசியல் வகைப்பட்டது அல்ல, ‘பிறருடன்’ ஒன்றுபட்டு இயங்குதல் எனும் வேறுபட்ட தனிவகை அது!

இது தமிழர் வரலாற்றில் திணை மேலாதிக்கமாக வெளிப்பட்டுத் தொடர்ந்த சமூக மாற்ற இயங்கு நிலை பெற்ற ‘திணை மேலாதிக்க அரசியல்’ செல்நெறியில் ஊடாடிய ஒன்று. வர்க்க சக்திகள் இடையே மட்டுமன்றி முழுச் சமூக சக்திகள் எனப்படும் சாதி, தேசங்களாகிய திணைகள் இடையேயான மோதல்கள் ஊடாகவும் வரலாற்று இயக்கம் நடந்தேறுவதனைக் கண்டு தெளிவு பெறும்போது மட்டுமே வர்க்க, அடையாள அரசியல்கள் என்பவற்றுக்கு அப்பால், மாற்றான – இன்று அவசியப்படுகிற – திணை அரசியல் கையேற்கப்படுதல் அவசியம் என்பது உணரப்படும்!

வேறெங்கும் இயக்கம் பெறாத திணை என்ற அமைப்புத் தமிழுக்கு மட்டும் சாத்தியப்பட்டது எப்படி? குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் எனும் நான்கு திணைகள் (காலநிலைப் பாதிப்பால் குறிஞ்சியும் முல்லையும் திரிந்து பாலைத் திணை தோன்றுதலும்) தமிழ் இலக்கிய வரலாற்றில் தோற்றம்பெற இயலுமான பின்னணி எத்தகையது? வேறெந்தச் சமூகத்தின் வரலாற்றுத் தொடக்கத்தில் – பண்பாட்டு உருவாக்க அடித்தளமாக – இது போன்ற திணைகள் சாத்தியப்படாத போது தமிழுக்கு மட்டும் நிலவியல் பேதங்கள் பேசுபொருளாக இயலுமானது எதனால்? இந்தத் தனித்துவமிக்க தொடக்கம் தமிழின வளர்திசையில் எத்தகைய தாக்குறவை ஏற்படுத்தி இருந்தது?

முதல் மதமாக ஆசீவகம்

ஏனைய சமூகங்களில் வரலாற்று எழுச்சி விவசாய வாய்ப்புடன் அடுத்துள்ள நிலப் பரப்புகளில் வாழ்ந்த இனமரபுக் குழுக்களை வென்றடக்கி அடிமைப்படுத்துவதோடு தொடக்கம் பெறுவதாக இருந்தது. வெற்றி பெற்ற இனமரபுக் குழுவில் அடிமைகளைச் சொந்தமாக்கியவர்கள் ஆண்டான்களாகவும் அதே குழுவின் ஏனையவர்கள் அடிமைகள் ஆக்கப்படுவதுமான வர்க்கப் பிளவு தோற்றம்பெற்றது. வட இந்தியாவில் வெற்றிபெற்ற இனமரபுக்குழுக்கள் வர்க்கப் பிளவுறாமல் ஒட்டுமொத்தமாக ஆதிக்க சாதியான போது வென்றடக்கப்பட்டவை ஒடுக்கப்படும் சாதிகளான வரலாற்றுத் தொடக்கம் ஏற்பட்டு இருந்ததாயினும் அங்கே விவசாய எழுச்சி ஏற்பட்டு அதன் வாய்ப்புடன் வெற்றிபெற்ற இனமரபுக் குழுக்களே அவ்வகையான ஆதிக்க சாதிகளாக ஆகின.

ஆதிக்க சாதிகளது நலனைப் பேணும் அரச அதிகாரம்பெற்ற இனமரபுக் குழுக்கள் சத்திரிய வர்ணமாகினர்; மேலாதிக்கம் பெற்று நிலவுரிமை பெற்ற பிராமண வர்ணப் பிரிவினர் சாதி முறைமைக்கான கருத்தியலை ஏற்படுத்தி விருத்தி செய்கிற வகையில் வம்சாவழித் தொடர்பைப் பேணும் வாழ்முறையை வகுத்தனர். ஏற்றத் தாழ்வுச் சுரண்டல் ஏற்படும் முன்னரே வர்ணங்களாக இயக்கம் பெறுவது தொடங்கிய போதிலும் ஒரே இனமரபுக் குழுவின் (ஒரு குடும்பத்தைச் சேர்ந்த) இரத்த உறவினர் எவரும் விரும்பிய தொழிலை ஏற்கும் பிராமண, சத்திரிய, வைசியராகத் தமது தெரிவை மேற்கொள்ள இயலுமாக இருந்தது. சாதிய வாழ்முறை வம்சாவழியாகத் தொடரும் வர்ணக் கோட்பாட்டை முன்னிறுத்தியது. அவ்வகை அதிகாரம் பெற்ற தரப்பினரது தேவைகளை நிறைவு செய்யும் வணிகத்தை மேற்கொண்ட வைசியர்கள் செல்வச் செழிப்பை எட்டிய கி.மு 6ஆம் நூற்றாண்டில் நகரங்கள் எழுச்சி பெற்றன. வைசியச் சாதியைப் புனிதமானதாகக் காட்டிய பௌத்தமும் சமணமும் எழுச்சி பெற்று பிராமண மதத்தைப் பின்னடையச் செய்யும் வரலாறு கி.மு 6 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்தது.

இத்தகைய வட இந்திய நகருருவாக்கத்துக்கு முன்னரே தமிழகத்தில் விருத்தி பெற்ற நகரங்கள் இருந்தமையைக் கீழடி அகழ்வாய்வுகள் எடுத்துக்காட்டி வருகின்றன. கி. மு 7ஆம் நூற்றாண்டில் இருந்து வணிக எழுச்சி தமிழகத்தில் இருந்ததன் வெளிப்பாடு கீழடி நகர் கட்டுமானங்கள் – இதனைக் கண்டறிவதற்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே கொடுமணல் ஆய்வுகள் வாயிலாக வணிக எழுச்சிக்கான பொருட்கள் கி. மு 7 ஆம், 6 ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியனவாக கிடைத்திருந்தன. அவை அக்காலத் தமிழகத்தின் வணிகப் பெருக்கத்தை வெளிப்படுத்துவனவாக அமைந்தவை. கொடுமணலின் பல நூற்றுக் கணக்கான பொருட்கள், கீழடியின் நகரக் கட்டுமானங்களும் அங்கே கண்டறியப்பட்ட ஏராளமான பொருட்களும் எனக் கிடைக்கப்பெற்ற எவற்றிலும் முன்னதான விவசாய எழுச்சிக்கு உரிய வள வழிபாட்டுச் சின்னங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

சிந்துவெளிப் பண்பாட்டுத் தொடர்ச்சிக்கு உரிய கட்டுமான முறைமை, எழுத்து வடிவம், அளவுப் பிரமாணங்கள், விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட வாழ்வியல் தேவைகளுக்கானவை என ஏராளமான ஆதாரங்கள் கிடைத்த போதிலும்  வழிபாட்டுச் சின்னம் எதுவும் கிடைக்காது இருப்பது சிந்தைக்கு உரியது. வணிக எழுச்சிக்கு முன்னதாக தமிழகத்தில் பேரளவான விவசாய எழுச்சி ஏற்பட்டு இருக்கவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. அந்தக் காலத்துத் தமிழகத்தின் வணிகப் பொருட்களாக இருந்தவை இயற்கை விளைபொருட்கள்; நெய்தலின் முத்தும் உப்பும், குறிஞ்சி-முல்லைத் திணைகளுக்கு உரிய ஏலம், கறுவா, கராம்பு, மிளகு, மயிலிறகு, யானைத் தந்தம், வைரம், மணிக்கற்கள் போன்றனவே வணிகத்துக்கு உரியனவாய்த் திகழ்ந்தன. கி. மு 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மருதத் திணைக்கு உரிய விவசாய உற்பத்திப் பொருட்கள் வர்த்தகத்துக்கான பண்டங்களாகவில்லை என்பது கவனிப்புக்கு உரியது.

விவசாய எழுச்சி வாயிலாக மருதத் திணைக்குரிய சேர, பாண்டிய, சோழ வம்சங்களுக்கான பேரரசுகள் கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் எழுச்சி பெறுவதற்கு முன்னர் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக பல நூறு சிற்றரசுகள் வேளிர்களது ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளன. தமிழகத்துக்கு உரிய வேறுபட்ட நிலவியல் அமைப்புகளில் நீடித்துள்ள வேளிர்களது நீண்ட கால ஆட்சியானது மருதத்தைவிடவும் நெய்தல், குறிஞ்சி, முல்லைத் திணைகள் வணிக வாய்ப்பு வாயிலாக வலுவுடன் இருந்ததை வெளிப்படுத்துகின்றது . அவற்றில் எதுவும் ஏனைய திணைகளை வென்றடக்க இயலாதன. பெரும்படை நடாத்திப் பிற திணைகளை ஆக்கிரமிக்க ஏற்ற பாரியளவான நெல்லுற்பத்தி மருதத் திணைக்கு கி. மு 3 ஆம் நூற்றாண்டில் சாத்தியப்பட்டது. அவ்வாறு மருதம் ஆக்கிரமிப்பதற்கு முன்னர் பெரும் நகர விருத்திகளுடன் ஏனைய திணைகள் ஆளுமையுடன் திகழ்ந்த காரணத்தாலேயே தமிழில் திணை வாழ்வியலும் அதற்கான இலக்கியம் மற்றும் கோட்பாடும் எழுச்சிபெற இயலுமாயிற்று.

மருதத்திணை எழுச்சி பெறுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே (கி. மு 4 ஆம் நூற்றாண்டில்) பௌத்தமும் சமணமும் தமிழகத்தினுள் பிரவேசித்து இருந்தன. மருத எழுச்சியுடனான பேரரசுகள் கி. பி 1 ஆம் நூற்றாண்டின் பின்னர் வீழ்த்தப்பட்டு தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான சிற்றரசுகளாகச் சிதறிக் களப்பிரர்கள் ஆட்சி ஏற்பட்டது. கிழார்களுக்கான பேரரசுகள் அற்றுப்போய் களப்பிரராட்சி சாத்தியப்பட்ட போது மீண்டும் தமிழகத்தில் வணிக எழுச்சி ஆளுகை செலுத்தியது. அக்காலத்து மதங்களாக பௌத்தமும் சமணமும் வீறுபெற்று எழுந்த காரணத்தால் சங்க இலக்கியத்தின் கணியன்களும் அவர்களது பாடல்களும் இந்த இரு மதங்களுக்கு உரியன என்ற கருத்து நிலவி வருகிறது. தொழில் நுட்பத் திறன் விருத்தி கி.மு 7 ஆம் நூற்றாண்டு முதலாக இருந்து வந்துள்ளதைக் கீழடி காட்டுகிறது – கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் வணிகப் பண்டங்களாக இருந்தன என்ற வகையில் அவற்றுடன் தொடர்புடைய கணியன் போன்ற கைத்தொழிற் சமூகத்தவரை இந்த இரண்டு மதங்களுக்கு உரியவர்கள் எனக் கருத இயலுமா?

பௌத்த, சமண வருகைக்கு முன்னரே தொழிற்திறன் மிக்கோரதும் வணிகர்களதும் மதமாக ஆசீவகமே தமிழகத்தில் நிலவி வந்துள்ளது. பௌத்தத்துக்கு உரியதாகக் கருதப்பட்டு வந்த கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்…” எனும் பாடல் ஆசீவகத்துக்கு உரியது என்பதனை ஏ. எல். பசாம் எடுத்துக்காட்டி இருந்தார். பௌத்த, சமண மதங்களால் உள்வாங்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட ஆசீவக மதத்தை ஏ. எல். பசாம் தமிழின் வாயிலாகவே மீளக் கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்.

அண்மையில் மறைந்த பேராசிரியர் க. நெடுமாறன் ஐயனார் வழிபாடாக ஆசீவகமே எம்மத்தியில் நிலவியது என்பதனை எடுத்துக்காட்டி இருந்தார். மட்டுமன்றி, கி. பி 14 ஆம் நூற்றாண்டு வரை ஆளுமையுடன் ஆசீவகம் இயங்கி வந்ததையும் முன்னதாக நிலவிய அதன் இருப்பை சமணமாகவோ பௌத்தமாகவோ மயங்க இடம் ஏற்பட்டமையை க. நெடுமாறன் காட்டியதோடு எவையெல்லாம் ஆசீவகத்துக்கு உரியன – எவ்வகையில் மற்றிரு மதங்களில் இருந்து அதனை வேறுபடுத்திக் கண்டறிவது என்பவை சார்ந்த பல நூல்களை வெளிப்படுத்தி உள்ளார்.

தமிழின் ஆளுமைமிக்க முதல் தடங்கள் காலவோட்டத்தில் மறைக்கப்பட்டது ஏன்? தொடர்ந்த அந்த வரலாறு தேடலுக்கு உரியது!

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6552 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (13)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)