Arts
10 நிமிட வாசிப்பு

சமணப் பள்ளிப் படிதாண்டி பக்தி இயக்கத்துக்கு

June 21, 2023 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம் மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

ஏகாதிபத்தியப் பிணைப்பைப் பூரணமாகத் தகர்த்து விடுதலைத் தேசிய அரசியல் முன்னெடுப்பு வாயிலாகப் புத்துலகப் பொதுவுடைமையை வென்றெடுப்பதாக இன்றைய வரலாற்று மாற்றம்; அத்தகைய மார்க்கத்தைக் கண்டறிவதற்குத் தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கமும் தொடர் விருத்தியிலான மாற்றச் செல்நெறிகளும் வழிகாட்ட இயலும் வகையில் முழுச் சமூக சக்திக்கான இயங்கு முறையை தமிழர் வரலாறு மட்டுமே எடுத்துக்காட்டி வந்துள்ளது என்ற உண்மையை வெளிப்படுத்தும் தேடலுக்கு உரியது இந்தத் தொடர்.

ஏற்றத்தாழ்வுச் சமூக உருவாக்கத்தில் கிரேக்க, ரோம அடிமைச் சமூகங்களை முன் மாதிரிகளாகக் காண்பதும் அவை நிலப்பிரபுத்துவ அமைப்பு மாற்றத்தை எட்டியதில் அடிமைப் புரட்சி வகித்த பாத்திரம் ஊடாக வர்க்கப் போராட்டக் கோட்பாட்டை வந்தடைவதையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மார்க்சியம் கண்டுகாட்ட ஏற்றதாக கூர்மையான வர்க்கப் போராட்டங்கள் ஐரோப்பிய நாடுகளில் நடந்தேறி வந்தன. முழுச் சமூக சக்திகள் (திணைகள்) இடையேயான தீர்க்கமான மோதல்களையும் அவற்றின் வாயிலாக ஏற்பட்ட சமூக அமைப்பு மாற்றங்களையும் தமிழர் வரலாறே எடுத்துக்காட்டி இருந்தது. அந்த அனுபவங்களைத் தொகுப்பதன் வாயிலாக விடுதலையை நாடும் சாதி, இனத்தேசியங்கள் என்பன தமக்கான வழிகாட்டு நெறியாக்கத்தைக் கண்டறிய இயலுமெனப் பேசி வருகிறோம்.

ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்படுகிற தேசங்களுக்கான தேசிய வடிவங்கள் ஏகாதிபத்தியத்தாலேயே நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. எதிரியால் கட்டமைக்கப்பட்ட அமைப்புக்குள் இருந்து இயங்கும் நிர்ப்பந்தம் எமக்கானது. பிரித்தானியாவை வெளியேற்றும் போராட்டத்தை ‘இந்தியத் தேசிய உணர்வுடன்’ அனைத்து இனத் தேசியங்களும் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய வரலாற்று நியதி இருந்தது. இன்றைய இனத்தேசியக் குரோதங்கள் வளர ஏற்ற இந்துத்துவ – ஹிந்திப் பேரினவாத மேலாதிக்கம் வலுத்துவரும் சூழலில் அப்போதைய நிதர்சனமாக இனத்தேசிய உணர்வையும் மேவியதாக அமைந்து செயற்பட்டிருந்த ‘இந்தியத் தேசிய எழுச்சியையே’ பொய்யான ஒரு புனைந்துரையெனக் கருதும் அவலம் இன்று நேர்ந்துள்ளது.

gandhi-protest

இனத்தேசியங்கள் மட்டும் பிளவுபட்டனவாக இல்லை; நாடு பூராவுமுள்ள பல நூறு சாதிகள் ஒவ்வொன்றுமே தமக்கேயான பண்பாட்டுக் கோலங்கள் – வரலாறு என்பவற்றுடன் தனித்தனித் தேசங்களாக இயங்குவன என்ற கருத்து நிலையும் வலுப்பட்டு வருகிறது. காந்தி தலைமையில் இந்தியத் தேசிய எழுச்சி தாராளவாத அரைப் பிராமணத் தேசியம் எனும் அரசியல் வடிவத்தைப் பெற்றுக்கொண்டிருந்த போது சாதித் தேசங்களாகப் பிளவுபட்டுள்ள இந்திய உபகண்டத்தை ஒரு தேசமாக ஒன்றிணைக்க இயலாதென அம்பேத்கர் கூறி வந்தார். குறிப்பாக, அதிபுனிதம் பேசி ஏனைய சாதிப்பிரிவினரிடம் இருந்து ஒதுங்கி நிற்கும் பிராமணரும் கடும் உழைப்பால் வாடி வதங்கித் தீண்டாமைக் கொடுமையை அனுபவிக்கும் தலித் மக்களும் எதிரெதிர்த் தேசங்கள் என வலியுறுத்திய அம்பேத்கர் நாடு பூராவுமான ஒரே சாதியாகிய பிராமணரின் நலனுக்காக கட்டியெழுப்ப எத்தனிக்கப்படும் இந்தியத் தேசியத்தை நிராகரிக்கும் எதிர்த் தேசிய இயக்கமான தலித் அரசியலை வடிவப்படுத்தி இயக்கி வரலானார்.

அம்பேத்கரின் எதிர்வுகூறலையும் மீறி தலித் மக்கள் காந்தி தலைமையிலான சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். தீண்டாமையை ஒழிப்பதாயின் இந்து மதத்தை விட்டு நீங்கித் தலித் மக்கள் பௌத்தத்தைத் தழுவ வேண்டும் எனக் கூறி அம்பேத்கர் தன்னை ஏற்றுக்கொண்ட பல்லாயிரக் கணக்கானோருடன் பௌத்த மதத்துக்கு மாறியிருந்த போதிலும் ‘ஹரிஜனங்கள்’ என ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்து, இந்து மதத்துக்கு உள்ளேயே தீண்டாமையை ஒழிக்க இயலும் என்ற காந்தியின் தர்க்கத்தை நியாயப்படுத்தும் வகையில் பலகோடித் தலித் மக்கள் தொடர்ந்தும் இந்துக்களாகவே நீடிக்கின்றனர்.

மருதத் திணை மேலாதிக்கத்தின் வாயிலாக விவசாயப் பெருக்கம் பெற்ற இன மரபுக் குழுக்கள் வெள்ளாளரென ஆகினர். வெற்றிகொள்ளப்பட்ட திணைகளுக்குரிய இன மரபுக் குழுக்கள் இடைநிலை, ஒடுக்கப்பட்ட சாதிகளெனக் கட்டமைக்கப்பட்டனர். வாழ்நிலையில் இந்த ஏற்றத்தாழ்வு சாத்தியப்பட்ட கிமு 3 – கிபி 2 ஆம் நூற்றாண்டுகளில் சாதி என்பது பேசுபொருளாகவில்லை. சமூகப் பிளவாக்கத்தை வர்ணபேதமாக அணுகும் கருத்தியல் அறிமுகமாகி இருந்தது. சாதியத்தைக் கருத்தியல்படுத்திய வர்ணாசிரமத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளாத சமண, பௌத்த மதங்கள் பின்னரான கி.பி. 3 ஆம் நாற்றாண்டில் இருந்து மேலாண்மை பெற்று அன்றைய வாழ்நிலையாக சாதிபேதம் ஏற்பட்டிருந்தமையைக் கவனங்கொண்டு இயங்கிய போதிலும் சாதி முறைமையை வடிவப்படுத்த முற்படவில்லை.

dalit

காரைக்காலம்மையார் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் பலவேறு சிவ வழிபாடுகளை ஒன்றிணைத்து உருவாக்கிய சைவநெறி இரண்டு நூற்றாண்டுக்குள் பக்திப் பேரியக்கமாக விருத்தியடையத் தொடங்கி அனைத்துச் சாதிகளையும் ஒன்றிணைத்து உருவாக்கிய இந்து சமயத்துக்கான அடித்தளமே சாதியக் கட்டமைப்புக்கான வடிவத்தை ஏற்படுத்தி இருந்தது. இன்று பேசப்படுவது போல சாதிப் பிளவுடனுள்ள சமூக முறைமையில் வாழ்வியலை மேம்படுத்த இயலாது என்பதாக வரலாறு அமைந்திருக்கவில்லை. தேசிய உணர்வுக்குரிய நவீன முதலாளித்துவ எழுச்சி அவசியப்பட்ட போது ‘சாதித் தேசங்களாகப் பிளவுண்டு இருக்கின்ற சமூகத்தில் இந்தியத் தேசம் என்பதான தேசிய எழுச்சிக்கு வாய்ப்பில்லை’ என்ற ஆரூடத்தை அனைத்துச் சாதிப் பிரிவுகளையும் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் பொய்யாக்கியதைப்போல நிலப்பிரபுத்துவ அமைப்பில் சாதிகளாக இயங்கிய சமூகம் உலகின் முதல்நிலை வாழ்வியலைக் கொண்டதாகவும் திகழ இயலுமாக இருந்தது. அத்தகைய வரலாற்று இயங்குமுறை எவ்வாறு நிகழ்ந்தது?

அறிவியக்கத்தில் இருந்து பக்தி இயக்கத்துக்கு

இன்று பிராமண மேலாதிக்கம் பல தளங்களிலும் செயலாற்றுவதன் பேரில் ஆரம்பந்தொட்டு எல்லாக் காலங்களிலும் அவர்களது ஆக்கிரமிப்பும் ஆதிக்கமும் நிலவிவந்ததான எண்ணம் பலரிடம் உள்ளது; பிராமணரல்லாதோரின் இன்றைய பிரச்சினைகள் அனைத்துக்கும் அவர்களே அடிப்படைக் காரணி எனும் கருத்தும் வலுப்பட்டு வருகிறது. சாதி முறை பிராமணர்களால் வலிந்து திணிக்கப்பட்டதான தர்க்கங்களும் முன்வைக்கப்படுகின்றன.   சாதி வாழ்முறைக்கான கருத்தியலை வடிவப்படுத்தித் தமக்கு வாய்ப்பாக அவற்றைப் பிராமணர்கள் பயன்படுத்திக் கொண்ட வரலாறு தெளிவாக்கப்படுவது அவசியம்.

origins-of-caste-1

பிராமணியக் கருத்தியலை முன்னிறுத்திப் பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வந்த தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கொச்சைப்படுத்தும் கருத்துக்களை வெளிப்படுத்துகிற பிராமணிய உணர்வுகளையும் காண்கிறோம். வேதக் கல்வி பிராமணர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது எனும் கருத்தையும் நடைமுறையையும் வைத்து ஆளும் சாதியினரான வெள்ளாளர்களும் சூத்திரர்களாகக் கணிக்கப்பட்டு கல்வி மறுப்புக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர் எனும் கருத்தும் நிலவுகிறது.

பிராமணக் கல்வி மொழியாக முன்னிறுத்தப்படும் சமஸ்கிருதத்தை விடவும் தமிழானது அறிவறிவை (அறிவைப் பற்றிய அறிவை) உடைய மொழியாகவும் பல நூற்றாண்டுக்கு முன்னரே எழுத்து வடிவம் பெற்றதாகவும் அறிவியல், மெய்யியல் தேடல்களை அதிகம் பொதிந்து வைத்திருந்ததாகவும் மதச் சார்பற்ற வாழ்வியல் நெறிகளை வகுத்திருந்ததாகவும் மேன்மைப்பட்டிருந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை சமஸ்கிருதத்தை விடவும் தமிழே செழுமை பலதுமுடையதாகத் திகழ்ந்தது. பின்னரான தமிழின் பின்னடைவுக்கான காரணங்களைத் தொடர்ந்தும் தேடும் அவசியமுள்ளது. இங்கு ஒரு அம்சத்தை மட்டும் கவனங்கொள்வோம்!

ஏற்கனவே ஆசீவகச் சிந்தனைப்பள்ளி தமிழினூடாக அறிவறிவு, அறிவியல் தேடல்கள் என்பவற்றை வளர்த்திருந்த சூழல் காரணமாக வடக்கில் இருந்து வந்த பௌத்தமும் சமணமும் தத்தமது பரப்புரை மொழிகளான பிராகிருதம், பாளி என்பவற்றைக் கைவிட்டு தமிழகத்தில் மட்டும் தமிழினூடாகவே தமது மதப் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. ஆசீவகச் சிந்தனையாளராகத் தனது சமகால வளர்ச்சிகளை உள்வாங்கி வள்ளுவர் வெளிப்படுத்திய திருக்குறள் தமிழர் சமூகத்தின் அனைத்துத் தரப்பினர் மீதும் தொடர்ச்சியான தாக்கத்தை விளைவிக்க ஆற்றல் பெற்றிருந்தது. ஆசீவகத்துக்குரிய சமத்துவச் சிந்தனையின் பாற்பட்டதாக சமூக நிலையில்லாமலாகி மேலாதிக்க ஒடுக்குமுறை வலுப்பட்டு வந்த சூழலிலும் விடாப்பிடியாக ஆசீவக அடிப்படைகளில் இறுக்கமாக இருந்த இன்னொரு பிரிவினர் மெல்ல மெல்ல வலுக்குன்றிக் காணாமலாகினர். மூன்றாந் தரப்பினர் பௌத்தம், சமணம், சைவம், வைணவம் என்பவற்றில் கரந்துறைந்தவர்களாகத் தன் நாமம் இழந்து கரைந்தனர்; அவற்றினூடாக ஆசீவகக் கூறுகளை வெளிப்படுத்த முயன்றனர். வைதிகத்தால் உள்வாங்கப்பட்ட சித்தர் மரபினர் வைதிகம் ஆராதிக்கும் பூசை, புனஸ்காரங்கள் உள்ளிட்ட மேலாதிக்க அடையாளங்கள் அனைத்தையும் நிராகரிப்பவர்கள் – ஆசீவக கருத்து நிலைகள் சித்தர் மரபில் தொடர்ந்து நீடித்திருந்தமையை அவதானிக்க இயலும்!

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் சமணம் ஆட்சியாளர்களது மதமாக இருந்த சூழலில் அறிவுத் தேடல் மிக்க எவரும் சமணப் பள்ளி ஊடாக வளரும் வாய்ப்பிருந்தது. அவ்வகையில் தனது முதிர்ச்சியை சமணத் துறவியாக வாழ்ந்து சமணப் பரப்புரைக்காகப் பல நூல்களைப் படைத்தவர் தான் பின்னாலே பக்திப் பேரியக்கத்தைத் தொடக்கி வைத்த திருநாவுக்கரசர்; அவருடைய அக்கா, திலகவதியாரது இடைவிடாத தவத்தால் சைவத்தைத் தழுவியவர் அதன் பரப்புரைக்கான வரலாற்றுக் கடமையைக் கையேற்பவரானார். திலகவதியாரது கணவர் போர்க்களத்தில் மாண்டவர். வீர யுகக் காலந்தொட்டு நிலப்பிரபுத்துவ வளர்ச்சி பெற்றுவந்த காலத் தொடர்ச்சியிலும் வெள்ளாளர்கள் போர் வீரர்களாகக் களமாடி வந்துள்ளனர்.

சமண மத எழுச்சியில் பங்கேற்றிருந்த நாவுக்கரசருக்கு வேளாண்மைச் செழிப்புக்கான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் சமூகப் பொறுப்பைக் கையேற்றாக வேண்டிய கட்டாயம் வலுத்தது. அப்போதைய அவருக்குரிய பல்லவ நாட்டு மன்னன் சமண சமயி. மத மாற்றத்தால் துரோகமிழைத்ததாகக் கணிக்கப்பெற்ற நாவுக்கரசரைத் தண்டிக்கும் பொறுப்பு அவருக்கானது. நாவுக்கரசரின் மனவுறுதியும் தர்க்கத் திறனும் பக்தி உணர்வும் மன்னரையே மதம்மாறத் தூண்டியது. ஏற்கனவே பக்தி இயக்க வீச்சில் விவசாயத் தரப்பினர் நாவுக்கரசருடன் அணிதிரண்டிருந்தமையும் அரசனின் மாற்றத்துக்கான காரணி. இரும்புக் கொழுவியுடன் ஏர் கலப்பை, மண்வெட்டிகள் என்பவற்றை பல்லாயிரம் வடித்துப் பரவலாக்கும் பணியைப் பல்லவர் ஆட்சி பின்னரும் தொடர்ந்து மேற்கொண்டது.

வணிகச் செழிப்பில் முன்னதாகப் பல்லவ நாடு (வட தமிழகம் – தொண்டை மண்டலம்) மேலாண்மை பெற்றிருந்தது. அதன் துறைமுகப் பட்டினமான மாமல்லபுரம் உலக வர்த்தகத்துக்கான ஒரு மையமாகத் துலங்கியது. அரேபிய, தமிழ் வணிகர்கள் போலவே சீன வணிகர்களது பட்டுப் பாதையும் அன்றைய உலக வர்த்தகச் செழிப்பின் அடையாளமாக இருந்தது. அண்மையில் சீன ஜனாதிபதி இந்தியாவுக்கான தனது முதல் பயணத்தை மேற்கொண்ட போது இந்தியப் பிரதமரை மாமல்லபுரத்தில் சந்திக்க விரும்பி ஏற்பாடு செய்துகொண்டதில் இந்த வரலாற்று முக்கியத்துவத்தை இனங்காண இயலும். இந்த வணிகச் செழிப்பின் வெளிப்பாடாக அறிவாராய்ச்சியும் வலுத்திருந்தது; அறிவுத் தேடலுக்கான மையங்களில் ஒன்றாக ’நாளந்தா’ போன்று பல்லவ நாடும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. பல்லவர் தலைநகரமான காஞ்சியின் பௌத்தப் பல்கலைக்கழகம் சீனப் பௌத்தத் துறவிகள் உள்ளிட்ட பலரையும் ஈர்த்து அறிவைப் பகிரும் இடமாக இருந்துள்ளது.

இத்தகைய அறிவுப் பெருக்கத்தில் சாதனைகளை வெளிப்படுத்தியவரான நாவுக்கரசர் அனைத்தையும் சிவனிடம் அர்ப்பணம் செய்யும் பக்தி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தமை அன்றைய வரலாற்று மாற்றப்போக்கின் அவசியத் தேவை சார்ந்த ஓரம்சம். வணிக எழுச்சியுடன் அவைதிக மதங்கள் மேலோங்கி இருந்தபோது வர்த்தகத் தோல்வி ஏற்படின் ‘பஞ்சு விற்கப்போனால் காற்றடிப்பதும் உப்பு விற்கப் போனால் மழை பொழிவதும்’ என்பதான தமது முற்பிறப்புக் கன்மப் பயன் மீது பழியைப்போட்டு ஆறுதல் காண வேண்டி இருந்தது.

குளங்களைப் பெருக்குவதோடு நீர்ப்பாசன வழிமுறைகளை விருத்தி செய்து, விவசாய உற்பத்திக் கருவிகளை உருவாக்கும் கைவினைஞர்களை இடம்பெயர அனுமதியாது விவசாய நலன் பேணும் அரசியலை வெற்றி கொள்ளவும் வலுப்படுத்தவும் பக்தி இயக்கம் அவசியப்பட்டது. அரசு ஏற்படுத்தித்தரும் இந்த ஏற்பாடுகள் இருக்கும்போது இயற்கை ஒரு போகத்தில் அழிவை ஏற்படுத்தினாலும் அடுத்த போகத்தில் மீட்சிபெற ஏற்றதாக நிலமெனும் நல்லாளும் ஆட்சிப்பலமும் கைகொடுக்கும்; அவற்றை உறுதிப்படுத்தும் இறை மீது பக்தி செலுத்தும் முழு நம்பிக்கை விவசாய வாழ்முறை சார்ந்தது. கப்பல் தடம்புரண்டு கடலில் மூழ்கி மூலதனம் அழிந்துவிட்டால் கையறு நிலைக்கு ஆளாகும் வணிகர் கன்மப் பயனில் நம்பிக்கை கொள்வதினின்றும் வேறுபட்டது நிலம், இயற்கை, ஆட்சி என்பவை சார்ந்து கடவுளில் பாரத்தைப் போடும் விவசாயிக்குரிய வாழ்வியல் நம்பிக்கை!

வணிகச் சமூக சக்தியை வீழ்த்துவதாயின் அதன் கருத்தியலான அவைதிக மதங்களைத் தோற்கடிப்பது முன் தேவை. அதன்பொருட்டு பக்தி இயக்கத்தின் வாயிலாக விவசாயப் பெருந்திரள் மக்களைத் தம்பால்ஈர்ப்பதற்கான கருவியாக வேளாண்மைச் சமூகப் பிரதிநிதிகளான நாவுக்கரசர் தலைமையிலான அணியினர் பக்திப் பேரியக்கத்தை கையேற்று முன்னெடுத்தனர்!

வர்க்கமும் சாதியும்

மருதத் திணை மேலாதிக்கத்தின் வாயிலாக நிலவுடைமையாளர்களான வெள்ளாளர்கள் தமது மேலான வாழ்நிலை கடவுளால் அருளப்பட்டது என எடுத்தோதும் வர்ணாசிரமக் கோட்பாட்டை ஆதரிக்க வேண்டி இருந்தது. அந்தக் கருத்தியலுடன் வட இந்தியாவில் இருந்து வந்த பிராமணர்களையும் நிலவுடைமையாளர்களாக ஆக்கி (நில தானம் செய்து) அரவணைத்திருந்த வெள்ளாளர்கள் தமக்கான ஆகமமுறைப் பிரகாரம் அமைந்த கோயிலில் வேத மந்திரப் பூசைகளைக் கருவறையில் இருந்து மேற்கொள்ளும் சாதியாகப் பிராமணரை அங்கீகரிக்க வேண்டியிருந்தது. தமிழ்கூறும் நல்லுலகெங்கும் உள்ள அனைத்துச் சாதியினரும் வெள்ளாள மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு பிராமணருக்கு இச்சலுகை கருவறைக்குள் நுழைய இயலாத சூத்திரர்கள் தாம் எனும் வர்ண தர்மத்துக்கு இணங்கிப்பெற்ற வாழ்வியல் மேலாண்மை இது. வாழ்வியலில் தம்மளவுக்கு வலுவற்றவர்கள் என்ற நம்பிக்கையில் கருத்தியல் ரீதியிலான இந்த மேலாண்மையை வழங்கிய தவறைப் புரிந்து கொள்ள ஐந்தாறு நூற்றாண்டுகள் கடக்க வேண்டி இருந்தது. காரைக்காலம்மையார் எனும் வணிகச்சாதிப் பெண் நிலப்பிரபுத்துவ மேலாதிக்க அடையாளமான ஆணாதிக்கத் தெய்வத்தை மேலெழச் செய்து பெண்ணடிமைத்தனத்துக்கு வழிகோலியதைப் போன்றது தான் இதுவும்!

பெரு நிலவுடைமையாளராக விரிவாக்கம் பெற்று சமூக மேலாண்மையையும் அரசியல் அதிகாரத்தையும் தம்வசம் கொண்டிருக்கும் நிலையில் கோயில் பூசகர்களான பிராமணர்களின் ஆன்மீகப் புனிதம் மேலோங்கியதாக இருப்பதில் ஆட்சேபம் இருந்ததில்லை. வடக்கில் இருந்து வரும் பிராமணர்கள் போதுமான அளவில் இல்லாத நிலையில் தமிழ் மண்ணில் இருந்தும் பிராமணக் கோத்திரங்கள் உருவாக்கப்பட்டன. கோயில் குருக்களில் பெரும்பாலானோர் தமிழ்ப் பிராமணக் கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள். வடக்கில் இருந்து வந்த பிராமணர்களில் கணிசமானோர் அதிக நிலமானியங்களைப் பெற்றதோடு அரச பதவிகளில் இருந்து மேலாதிக்க ஒடுக்குமுறைக் கருத்தியல்களை வடிவப்படுத்துகிறவர்களாகவும் செயற்படுத்துகிறவர்களாகவும் விளங்கினர்.

நாவுக்கரசர் ஏற்கனவே அறிவுச் செழுமை பெற்றிருந்து பக்தி இயக்கத்துக்கு மதம் மாறியவர். தமிழகத்தின் வட பகுதியான பல்லவ நாடு, தென் பகுதியான பாண்டிய நாடு என்பன பேரரசுகளாக விரிவாக்கம் பெற்று வந்த நிலையில் சமணச் செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்தன. இரண்டுக்கும் இடையே சிற்றரசாக அப்போதிருந்த சோழ நாட்டின் அரசர்கள் தொடர்ந்தும் சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்களாக இருந்தனர். பிற்காலச் சோழப் பேரரசர்களும் சைவத்தின் காவலர்களாக வெளிப்பட்ட அளவுக்கு தமிழ் அபிமானிகளாகக் காட்டிக் கொண்டதில்லை. சமணத்தில் இருந்து சைவத்துக்கு மாறியிருந்த பல்லவர்களும் நீண்டகாலம் ஆட்சி செலுத்தும் பாண்டியர்களும் தொடர்ச்சியான சைவப் பாதுகாவலர்கள் எனத் துலங்காத காரணத்தால் தமிழ்ப் பற்றை அதிகம் வெளிப்படுத்துகிறவர்களாக இருந்தனர்.

என்றென்றும் சைவம் தழைத்தோங்கிய காவிரிக் கரையின் சோறுடைத்தான சோழ நாட்டில் இருந்து வந்த ஞானசம்பந்தர் தமிழ்ப் பிராமணக் கோத்திரத்தைச் சேர்ந்தவர். அறிவிலும் வயதிலும் முதிர்ச்சி பெற்ற நாவுக்கரசரே சிறு வயதினரான ஞானசம்பந்தரின் சிவ பக்திக்குத் தலைசாய்ப்பவராக இருந்தார். சமணத்தில் ‘உழன்ற’ உளவியல் சிக்கலை விடவும் பிராமண குலத்தின் புனிதத்தை வலியுறுத்தும் அவசியத்தாலும் இந்த மேலாண்மையை வழங்குபவராக நாவுக்கரசர் செயற்பட்டிருந்தமையைத் தொடர்ந்த சமூக அசைவியக்கங்களில் இருந்தும் புரிந்துகொள்ள இயலும்.

பக்திப் பேரியக்கத்தைப் “பெரிய புராணம்” எனக் காவியமாக்கிய சேக்கிழார் சோழப் பேரரசு உச்சநிலையில் இருந்த காலத்துக்கு உரியவர் சோழப் பேரரசின் அமைச்சர். ஞானசம்பந்தர் சோழ நாட்டுக்குரியவர் என்பதற்காக நாவுக்கரசரைவிடவும் மேலான புனிதத்தை அவருக்கு வழங்கிவிடவில்லை. பிராமணியத்தை ஏற்கவைக்கும் கருத்தியல் தேவை உந்தியமையாலேயே ஞானசம்பந்தருக்கான அதீத புனிதம் சேக்கிழாராலும் வழங்கப்பட்டது. பெரிய புராணத்தின் காவிய நாயகரே சிவப் பிராமணரான சுந்தரர் என்பது கவனிப்புக்கு உரியது. நாவுக்கரசர் போலவே வெள்ளாளரான சேக்கிழாரும் சமூக – வரலாற்று அவசியம் காரணமாக பிராமணருக்கான ஆன்மீக மேலாண்மையை வலியுறுத்துகிறவராக இருந்தார். அதிகாரத் தரப்பால் உவந்தளிக்கப்பட்டதே அல்லாமல் பிராமணச் சதியால் அபகரிக்கப்பட்டதல்ல ஞானசம்பந்தருக்கான மேலாதிக்கம்.

தமக்கான சமூக மேலாதிக்கம் நிலைநிறுத்தப்படுவதற்கு பிராமணருக்கான ஆன்மீகப் புனித மேலாண்மையை அங்கீகரித்து அனைத்துச் சாதியினரையும் அதன்பால் ஆற்றுப்படுத்தும் அவசிய நிலை. வெள்ளாள – பிராமண நிலவுடைமைச் சாதிகளின் கூட்டுத் தலைமையில் அனைத்துச் சாதியினரையும் ஒன்றிணைத்து இயங்க வேண்டியிருந்த வரலாற்றுத் தேவையை நாவுக்கரசர் சிறப்புறத் தொடக்கிவைத்த போது சுயசாதி ஆதிக்கத்தை வலியுறுத்துவதை விடவும் நட்புச் சாதிக்கு முன்னுரிமையை வழங்கும் தாராள வாதத்தைக் கையாண்டுள்ளார். ‘ஆவுரித்துத் தின்றுழலும் புலையராக’ இருந்தால் கூட, சிவனை வணங்குபவராயின் அவரே தான் வணங்கும் கடவுள் எனப் பிரகடனப்படுத்தியவர் நாவுக்கரசர்.

முழுச் சமூக சக்தியாக இயங்கும் ஆளும் சாதிகள் மேற்கொள்ளும் சுரண்டலைக் கருத்தியல் – அரசியல் மேலாதிக்கத்தை வசப்படுத்திக் கொண்டு முன்னெடுப்பதாக எமது சாதிய வாழ்வியல் அமைந்துள்ளது. ஆளும் சாதியின் பொருளாதார – சமூக – பண்பாட்டு மேலாதிக்கத்தில் கருத்தியல் வகிக்கும் அதீத முக்கியத்துவம் காரணமாக பண்பாட்டுப் புரட்சி வாயிலாக ஆதிக்க சாதிக் கருத்தியல் வீழ்த்தப்பட்ட பின்னரே ஆட்சி அதிகாரத்தை வெற்றிகொள்ள இயலும். இந்தத் தேவை காரணமாக தாமே களமாடி மேலாதிக்கத்தைப் பெற்ற வெள்ளாளர்கள் தமது சகபாடிகளாக அரவணைத்த பிராமணருக்கு அதீத முக்கியத்துவம் வழங்க நேர்ந்தது.

வர்க்க சமூகத்தில் இருந்து வேறுபட்டுள்ள இந்தப் பண்பைக் கவனங்கொள்ளும் அதேவேளை ஆதிக்க சாதி முழுமையாகப் பொருளுற்பத்தி உறவில் அதிகார நிலையில் இருப்பதற்காக அதன் உறுப்பினர்கள் அனைவருமே பூரண உடைமை பெற்ற வர்க்கத்தினர் அல்ல என்பதனையும் அவதானிப்பது அவசியம். பக்திப் பேரியக்கம் வணிகச் சாதி அதிகாரத்தை இழக்க வைப்பதற்கானதாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் இந்த வர்க்க மோதல் உள்ளூர இடம்பெற்ற காரணத்தாலேயே காரைக்காலம்மையார், அப்பூதி அடிகள் போன்றோர் அதனை வழிமொழிபவர்களாகவும் ஆதரித்துச் சேர்ந்து இயங்குபவராகவும் வகிபாகம் பெற்றிருந்தனர். நிலவுடைமை பெற்றிராத போதிலும் ஆதிக்கச் சாதிக்குரிய வாய்ப்புகள் அனுமதிக்கப்படுகிற நிலை நிலவுடைமை பெறாத ஆதிக்கச் சாதியினருக்கு உள்ள காரணத்தால் சாதி உணர்வு வலுவுடன் இயங்க இடமுள்ளதனையும் நினைவில் கொள்ளுதல் அவசியம்!

அதிகாரப் பங்கீடு

பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி அதிகாரத்துக்கு உரிய வெள்ளாளர்களது தயவுடன் தமக்கான வாய்ப்பு வசதிகளைப் பெருக்குகிறவர்களாக இருந்த பிராமணர்கள் விஜயநகரப் பேரரசு ஏற்பட்டு வெள்ளாளர்கள் ஆளும் முதல் நிலையை இழந்த பின்னர் புதிய ஆட்சியாளர்களது அரவணைப்பை நாடுகிறவர்களாயினர். அதற்கமைவான ஆன்மீகப் புனித மேலாண்மையை நாவுக்கரசரில் இருந்து பெரிய புராணத்தின் சேக்கிழார் வரையான வெள்ளாளக் கருத்தியல் ஆளுமைகள் தாமாகவே விருப்புறுதியுடன் வழங்கினர் என்ற வரலாற்று உண்மையை மறந்துவிட இயலாது.

தெலுங்கு நிலவுடைமையாளரும் தெலுங்குப் பிராமணரும் (ஐயங்கார்) விஜயநகரப் பேரரசைத் தொடர்ந்து மேலாண்மையைப் பெற்று வந்த போதிலும் வெள்ளாளரின் நிலவுடைமையோ சமூக மேலாதிக்கமோ தளர்ந்துவிடவில்லை. கருத்தியல் தளத்தில் பிராமணியம் தனது சமூக – பண்பாட்டு மேலாதிக்கத்தையும் விஞ்சியதாக மேலோங்கக் கண்டபோது வேத-வேதாந்தத்துக்குப் போட்டியாக ஆகமத்தை அடிப்படையாகக் கொண்ட சைவசித்தாந்தத்தை வெளிப்படுத்தி முன்னிறுத்திய வெள்ளாளர்கள் அதனைக் காத்துப் பரப்புரை செய்யும் மடங்களையும் உருவாக்கிப் பேணி வளர்த்தனர். ஆளுந்தரப்பினர் சிற்சில முரண்களைத் தமக்குள் கண்டுணர்ந்த போது நிலவுடைமை மேலாதிக்கத்துக்குப் பங்கம் விளைக்காத மோதல்களினூடாக முன்னிலையைத் தக்கவைக்க முயன்றனர். நட்பு முரணுடன் மோதலும் ஒன்றுபடலும் என ஊடாடி வந்த வகையிலேயே அவர்கள் இடையேயான அதிகாரப் பங்கீடு அமைந்திருந்தது.

அனைத்துச் சாதிகளையும் ஒன்றுபடுத்திப் போராடிய தமிழர் சமூகத்தால் சோழப் பேரரசின் உச்ச நிலை வரை வரலாறு படைக்க இயலுமாயிற்று. நிலவுடைமை அமைப்புக் கட்டிறுக்கமாகிச் சாதிச்சழக்குகளில் சமூகப் பிளவாக்கம் வலுப்பட்ட பின்னர் தமிழரல்லாதோரின் ஆளுகைக்குள் ஆட்பட நேர்ந்தது. அவை பற்றிப் பின்னர் பார்க்க இயலும்.

வர்க்க சமூகமாக அமைந்து வரலாற்று நிர்ப்பந்தத்ததுடன் மூலதனப் பெருக்க வாய்ப்பைப்பெற்ற ஐரோப்பாவால் காலனித்துவப்படுத்தப்பட்டு கொள்ளையிடலால் ஒட்டாண்டி ஆக்கப்பட்ட இந்தியச் சமூகத்தின் ‘பின்னடைவுக்கு’ சாதிகளது இருப்பே காரணம் என்ற ஏகாதிபத்தியப் புனைந்துரைகளை நம்புகிறவர்கள் உள்ளனர். உண்மை நிலை இதற்கு மாறானது. அனைத்துச் சாதிகளையும் ஐக்கியப்படுத்திப் பக்திப் பேரியக்கத்தின் தொடர் வீச்சில் சோழப் பேரரசு மேலெழுகைபெற இயலுமாயிற்று. பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகளில் உலகின் முதல்நிலை நாடாகச் சோழப் பேரரசுத் தமிழகம் திகழ்ந்துள்ளது.

வரலாறு படைக்கும் உந்துதலுடன், மேலாதிக்க நாட்டத்துக்காக அனைத்துச் சாதிகளையும் ஒன்றுபடுத்த இயலுமாக இருந்ததெனின் ஏற்றத்தாழ்வுகளைத் தகர்த்தெறியும் புதிய வரலாறு படைத்தலிலும் அனைத்துச் சாதிகளையும் ஐக்கியப்படுத்தல் சாத்தியமே. மீண்டும் அனைத்துச் சாதிகளும் சமத்துவம் பெறும் புதிய கருத்தியல் வீச்சுடன் ஐக்கியப்படுத்தல் அவசியம் – அதன் வாயிலாகவே சமூக – பொருளாதார சமத்துவத்தை வெற்றி கொள்ள இயலும்.

சாதிகளை இணைத்து உருவான இந்து சமயத்தைப் பிராமண மத நீட்சியாக கருதுவதை விடவும் இன்னொரு வடிவம் என்ற தெளிவைப் பெறுதல் அவசியம். இன்றைய வரலாற்றுக் கடமையைக் கையேற்க இயலாமல் சாதி மோதல்களில் உழல்வதற்கு இந்தப் புரிதலின்மையே அடிப்படைக் காரணம். அதுபற்றித் தொடர்ந்து தேடுவோம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6786 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)