Arts
7 நிமிட வாசிப்பு

திணை வாழ்வியலைத் தகர்த்து உருவாகிய அரசு

November 1, 2022 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம் மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

 மகத்தான ஒக்ரோபர் புரட்சி (1917) ருஷ்யாவை “சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்” என மாற்றிப் புனைந்து முழு உலக நாடுகளது மக்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தது. எழுபதாம் ஆண்டுகள் வரை விடுதலை நாடும் மக்களுக்குச் ‘சோசலிசம்’ என்ற கருத்தியல் உத்வேகமூட்டும் நிவாரணியாக இருந்தது. அநேகமான நாடுகள் ‘ஜனநாய சோசலிச’, ‘சோசலிச ஜனநாயக’ என்பதான அடைமொழிகளை ஒட்டி தம்மை அழகுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆட்பட்டிருந்தன.

சோவியத் யூனியன் கொடி

சோவியத் யூனியன் 1991 இல் தகர்ந்து ருஷ்யாவும் பதினைந்து நாடுகளுமென ஆகின: முதலாளித்துவ ஜனநாயக மீட்டெடுப்புக்கு அந்த நாடுகள் முற்பட்டதில் இருந்து சோசலிசக் கனவு “பொய்யாய் பழங் கதையாய்”, போயொழிந்ததாகப் பரப்புரைகள் மேலெழுந்தன.

மிகப் பின்தங்கிய பொருளாதார விருத்தியுடன் இருந்த மக்கள் சீனக் குடியரசு எண்பதாம் ஆண்டுகளின் பின்னர் வேகமாக வளர்ந்து வந்து முதல் நிலை வல்லரசான ஐக்கிய அமெரிக்கா இராச்சியத்தையும் தாண்டி முன்னேறும் நிலைக்கு இன்று வளர்ந்துள்ளது. இத்தகைய வளர்ச்சியை எட்டுவதற்கு சோசலிசப் பொருளுற்பத்தி முறையுடன் முதலாளித்துவத்தை உள்வாங்கி ஏற்படுத்தி இருந்த ‘சந்தை – சோசலிச’ உற்பத்தி முறை வழிவகுத்திருந்தது. 

சந்தையின் தேவையை நிறைவுசெய்யும் வகையில் உற்பத்தியை முன்னெடுக்கும் முதலாளித்துவம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யவில்லை என்ற வகையில் திட்டமிட்ட பொருளுற்பத்தி முறையை மேற்கொள்ளும் சோசலிச கட்டமைப்பை முன்னெடுத்தவாறு சோவியத் யூனியன் அமெரிக்காவுக்கு நிகரான வளர்ச்சியை எட்டியிருந்தது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் முதலாளித்துவம் முற்றாகத் துடைத்தழிக்கப்பட்டு அத்தகைய வளர்ச்சியை சோவியத் யூனியனால் முன்னெடுக்க இயலுமாக இருந்ததாயின் மக்கள் சீனத்தால் ஏன் சாத்தியமற்றதாகிறது? 

விடுதலைத் தேசியச் சோசலிசம் 

மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளின் நீடிப்பாக ருஷ்யப் புரட்சி அமைந்திருந்தது. வளர்ச்சி பெற்று முதலாளித்துவத்தின் முதிர் நிலைக்கு உரிய மேற்குலகம் போன்று ருஷ்யப் புரட்சி அமைந்திருந்தது. வளர்ச்சி பெற்று முதலாளித்துவத்தின் முதிர்நிலைக்கு உரிய மேற்குலகம் போன்று ருஷ்ய நிலவரம்  இல்லை என்ற போதிலும் சோவியத் யூனியனால் கட்டியெழுப்பப்பட்ட அந்தப் பாட்டாளி வர்க்கச் சோசலிசம் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுக்கு விருத்தி பெற்று முன்னேற இயலுமாக இருந்தது. புரட்சிக்கு முந்திய ருஷ்யா முதலாளித்துவ விருத்தியை மேற்கு ஐரோப்பா போல எட்டியிருக்காத போதிலும் ஏகாதிபத்தியமாகச் செயற்பட்டு ஒடுக்கப்பட்ட தேசங்களைச் சுரண்டியது மட்டுமன்றி அந்தத் தேசங்களைத் தன்னுடன் வலுக்கட்டாயமாக இணைத்தும் இருந்தது.  அவ்வாறு இணைக்கப்பட்டிருந்த தேசங்கள் ஒக்டோபர் புரட்சியுடன் கைகோர்த்துச் செயற்பட்டதன் வாயிலாகக் குடியரசுகளாக வடிவம் பெற்று சோவியத் ஒன்றியத்தில் விருப்புறுதியுடன் இணைந்திருந்தன; சோவியத் தகர்வு 1991 இல் ஏற்பட்ட போது 15 நாடுகள் தனியாகப் பிரிந்து சென்றன. (அவற்றில் ஒன்றான உக்ரேன் இன்று ருஷ்யாவுடன் மோதலில் இறங்கியுள்ளது) 

மா- ஓ- சேதுங்

சீன நிலை இதற்கு எதிர்மாறானது ஏகாதிபத்திய நாடுகளால் துண்டப்பட்டுச் சுரண்டப்படும் தேசமாக அது இருந்தது. ருஷ்யாவின் பாட்டாளி வர்க்கப் புரட்சி போல அன்றி, விவசாயிகளின் தேசிய விடுதலைப் புரட்சி ஊடாக சோசலிசத்தை நோக்கிக் செல்ல ஏற்றதாக மார்க்சிஸ – லெனினிசத்தை விருத்தி செய்து பிரயோகிக்க வேண்டிய வரலாற்றுக் கட்டம் சீனாவுக்கு உரியது. அத்தகைய மாறுபட்ட வரலாற்றுச் சூழலுக்கு ஏற்றதாக மா – ஓ சேதுங் சிந்தனை அமைந்திருந்தது.

 முதலாளித்துவ மாற்றியமைத்தலை விடுதலை பெற்ற சீனா நிறைவு செய்து விட்ட பின்னர்  சோசலிச  நிர்மாணத்தை முன்னெடுக்க வேண்டியிருந்த நிலையில் மார்க்சிஸ – லெனினிசக் பிரயோகமே அதற்கு உரியதென்ற கருத்துநிலவியது; மார்க்சிஸம் – லெனினிசம் முன்னுணர்ந்து வெளிப்படுத்திய பாட்டாளி வர்க்க சோசலிசத்தில் இருந்து விடுதலை பெற்ற தேசியம் கட்டமைக்க வேண்டிய சமத்துவப் பொருளுற்பத்தி முறை வேறுபட்டது மட்டுமல்ல  விடுதலைத் தேசியச் சோசலிசக் கட்டுமானமும் பாட்டாளி வர்க்கம் வென்றெடுக்க முனைந்த சமத்துவத்துவத்துக்கான பாதையினின்றும் வேறுபட்டது; தேசிய விடுதலைக்கான மார்க்சிச – லெனினிசமாகக் கருதப்பட்ட மா – ஓ சேதுங் சிந்தனையை விடுதலைத் தேசியச் சோசலிஸ நிர்மாணத்துக்குமானதாக விருத்தி செய்ய முற்பட்டபோதே சந்தை சோசலிசக் கருத்தியல் முகிழ்த்து எழுந்தது . 

முழுச் சமூக சக்தியின் தனித்துவமான வரலாற்று இயங்கு முறை

 சோவியத் யூனியன் கட்டியெழுப்பிய பாட்டாளி வர்க்க சோசலிசம் உலகுக்கு கலங்கரை விளக்காக ஒளி பாய்ச்சியதைப் போல மக்கள் சீனத்தின் இன்றைய ‘சந்தை சோசலிச முறைமை’ உத்வேகம் ஊட்டுவதாக இல்லை. தமக்குரிய வரலாற்று நிர்ப்பந்தம் காரணமாகச் சோசலிசத்தைப் பாதுகாத்து முன் நோக்கி எழுத்துச் செல்வதற்கு முதலாளித்துவத்தை உள்வாங்க வேண்டியிருப்பதாகச் சீனா சொல்கிறது; இதன்வாயிலாக சோசலிசத்தைக் கைவிட்டு முதலாளித்துவ நாடாகச் சீனா மாறிவிட்டதாகவே பலரும் கருதுகிற நிலை உள்ளது. 

எதிர்காலத்தில் சீனா தொடர்ந்தும் சோசலிச முறைமையைப் பாதுகாத்துப் புதிய தளத்துக்கான வளர்ச்சியை எட்டும் பட்சத்தில் ஐக்கியப்படுத்தப்பட்ட முதலாளித்துவத்தால் அதனை வீழ்த்தி அழிக்க இயலவில்லை எனும் உண்மை நிரூபணம் ஆகலாம். இன்றைய நிலையில் சோசலிச மாற்றியமைத்தல் உறுதிப்பட்ட பின்னர் ஒரு தசாப்தத்துக்கு மேலாகக் காணாமலாக்கப்பட்ட முதலாளித்துவத்தை மீள உள்வாங்க நேர்ந்தமைக்கான காரணத்தை சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியால் தெளியுறுத்த இயலாமலே உள்ளது. சீனப் பிரத்தியேக நிலைக்கு உரிய மார்க்சியப் பிரயோகம்’ எனச் சொல்லப்படுகிற போது பாட்டாளி வர்க்கச் சிந்தனை முறைமை சீன நிலவரத்துக்கு ஏன் பொருத்தி வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. வர்க்கச் சமுக இயங்கு முறையில் பாட்டாளி வர்க்கமே சோசலிசத்தைக் கட்டியெழுப்ப வல்லமை உடையது என மார்க்சியம் கண்டறிந்து வெளிப்படுத்தி இருந்தது; பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்கூறில் இருந்து இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதி வரையில் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளின் சகாப்தம் நிலவியது. பின்னர் தேசிய விடுதலைப் புரட்சிகளின் சகாப்தம் – மக்கள் சீனம், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், வியட்னாம், வடகொரியா, கியூபா போன்றன விடுதலைத் தேசிய சக்தியே சோசலிசத்தை வென்றெடுக்கும் வகையிலான வரலாற்றுச் செல்நெறி மாற்றத்தின் புதிய சக்தி என எடுத்துக் காட்டி இருந்தன.

இந்த மாற்றப் போக்கு உரிய வகையில் கணிப்பிடப்படவில்லை. வெறும் ‘சீனப் பிரத்தியேக நிலையினால்’ அல்ல, முதலாளித்துவத்துடன் ஐக்கியப்பட்டுச் சோசலிசத்தைக் கட்டியெழுப்ப வேண்டி இருப்பது: விடுதலைத் தேசியம் எனும் முழுச் சமூக சக்தியின் வரலாற்று இயங்குமுறை வர்க்கச்  சமூகத்துக்கு உரியதினின்றும் வேறுபட்டது என்ற காரணமே இந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

வர்க்கங்கள் இடையேயான மோதலாக அன்றி முழுச் சமூக சக்திகளது போராட்டங்கள் வாயிலாக வரலாற்று இயக்கம் நடந்தேறுவதை இந்தியாவின் சாதியக் கட்டமைப்பில் காண இயலும்.  “வர்க்கப் பிளவு ஏற்படவில்லை என்ற வகையில் இந்தியாவுக்கு என வரலாறு கிடையாது” என்ற கண்ணோட்டத்தை மறுத்தவர்கள் கூட சாதிகளின் இயங்காற்றல் பற்றிய தேடல்களில் முனையாமல் எமது சமூகங்களில் இடம்பெற்ற வர்க்கப் போராட்டங்களைத் தேடிக் கண்டறியவே முற்பட்டனர். அவ்வகையிலான வரலாற்று இயங்கு முறையை வட இந்தியா வெளிப்படுத்தவில்லை என்ற காரணத்தால், அதனை மையப்படுத்தி இந்திய வரலாற்றைத் தேடுவோருக்கு சாதிகள் இடையேயான மோதல்கள் ஊடாக வரலாற்று மாற்றப் போக்குகள் நடந்தேறியமையைக் கண்டு காட்டவியலவில்லை . 

முழுச் சமூக சக்தியாக (திணை) மேலாதிக்கம் ஏற்பட்டு வரலாற்றுத் தொடக்கத்தை ஏற்படுத்தி இருந்த தமிழகமே சமுக மாற்றத்தில் முழுச் சமூக சக்தி (சாதி) எத்தகைய பங்குப் பாத்திரத்தை வகித்தது என்பதையும் தெளிவுற எடுத்துக் காட்டியிருந்தது. 

அவ்வகையிலான பிரத்தியேக வரலாற்றுத் தொடக்கம் தமிழகத்தில் ஏற்பட இயலுமாக இருந்ததற்கான அடிப்படைகளைத் ‘திணை வாழ்வியலைத் தகர்த்து உருவாகிய அரசு’ எனும் இந்த முதல்பகுதி பேசுபொருளாகக் கொண்டுள்ளது. முழுச் சமூக சக்தியான திணை வாழ்வியல், அதற்கான கோட்பாட்டு உருவாக்கம் ஏற்பட அடித்தளமிட்ட சமூக – பொருளியல் கட்டமைப்பு என்பன குறித்த தெளிவை எட்டும்போது தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவக் குணாம்சம் குறித்த புரிதலை எட்ட இயலும். திணை வாழ்வியலைத் தகர்த்து அரசு உருவாக்கம் பெற்ற பின்னர் ஏற்பட்ட சாதிய வாழ்வியல் குறித்து பகுதி இரண்டில் பேசுவோம். இந்த முதல் பகுதி பின்வரும் நான்கு தலைப்புக்களைக் கொண்டிருக்கும்.

1. வணிக எழுச்சி தொடக்கி வைத்த சமூக முறைமை

2. கிழார்களின் வம்ப வேந்தர்.

3. மத சார்பில்லாக் கருத்தியல்

4. மையத் தகர்ப்புடன் வணிக மீளெழுச்சி 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9854 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (13)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)