Arts
21 நிமிட வாசிப்பு

தமிழ் பண்பாட்டில் சமரச சன்மார்க்கம்

March 27, 2024 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம் மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

உலக நாடுகளின் எதிரி சீனா என அடையாளம் காட்டி அனைத்துத் தேசங்களும் அதனை நிராகரிக்க வேண்டும் என்று சொல்லி வந்த ஐக்கிய அமெரிக்கா அண்மையில் மக்கள் சீன ஜனாதிபதியைத் அதனது மண்ணுக்கே வரவேற்று உரையாட வேண்டி இருந்தது. காலனித்துவ ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டிருந்து ‘உலகின் நோய்’ என்ற அடையாளத்தை இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூறு வரை பெற்றிருந்த சீன தேசம் இன்று ‘உலகின் முதல் நிலை வல்லரசு’ எனும் அந்தஸ்துடன் திகழும் மேலாதிக்கவாத நாட்டுக்கே சவால்விடும் துரித வளர்ச்சியை எட்டியிருப்பதன் பேறானது இந்த மாற்றம். 

விடுதலைத் தேசிய அரசியல் முன்னெடுப்புக்கு உரிய மாஓ சேதுங் சிந்தனையைக் கையேற்று சோசலிச நிர்மாணத்துக்கும் ஆனதாக வளர்த்தெடுத்துப் பிரயோகிப்பதன் வாயிலாக ஏகாதிபத்திய வல்லரசையும் மேவிச்சென்று முந்துகின்ற பொருளாதார விருத்தியை எட்டும் மக்கள் சீனம், தானும் ஒரு வல்லரசாக ஆகிவிடாமல் இருப்பதுடன் ஒடுக்கப்பட்ட தேசங்கள் சுயசார்புப் பொருளாதாரத்தில் முன்னேறும் வகையிலான வழிப்படுத்தலை முன்னெடுத்து வருகிறது. அவ்வாறு சுதந்திர வளர்ச்சியை எட்டத்தக்க தேசங்கள் தமக்கு இடையே பரஸ்பரம் சமத்துவத்தை வென்றெடுப்பதன் வாயிலாகவே இருபத்தோராம் நூற்றாண்டுக்கான உலகச் சோசலிச மாற்றியமைத்தல் சித்திக்க இயலும். 

அத்தகைய மாற்றப்போக்கைத் தடுக்க முனையும் ஐக்கிய அமெரிக்காவின் முயற்சிகள் தவிடுபொடியாகச் சிதறுவதனை உக்ரேனிலும் இஸ்ரேலிலும் மட்டுமன்றி அதனது சொந்த மண்ணிலும் ஐக்கிய அமெரிக்கா உணர்வதன் காரணத்தாலேயே மக்கள் சீன ஜனாதிபதியை வரவேற்றுப் பேச வேண்டிய நிர்ப்பந்தம் பைடனுக்கு. இதுவரை காலமும் இயங்கிவந்த காலனித்துவ மேலாதிக்கவாதம் மரண அடியைச் சந்திக்கும் மாற்றப்போக்குத் துல்லியமாக வெளிப்பட்டு வருவதற்கான ஒரு அறிகுறி இந்த வரவேற்பு நிகழ்வு. இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூறில் காலனித்துவ நாடுகள் பல நேரடியான ஏகாதிபத்தியப் பிணைப்பைத் தகர்த்து அரை-சுதந்திரம் எட்டப்பட்ட போது காலனித்துவ ஒடுக்குமுறையாளர்களுக்குக் கிடைத்த பலமான அடியைக் காட்டிலும் இது பாரதூரமானது. அப்போது முன்னாள் ஏகாதிபத்தியமாக இருந்து பாட்டாளி வர்க்கப் புரட்சி வாயிலாகச் சோசலிசத்தை வரித்துக்கொண்ட சோவியத் ருஷ்யா ஒடுக்கப்பட்ட தேசங்களுக்குத் தலைமைச் சக்தியாக இருந்தது. அதுவரை தீர்மானகரமிக்க மார்க்கமாக இயங்கி வந்த வர்க்க அரசியலைத் தொடர்ந்தும் அதீத முனைப்புடன் செயலுருப்படுத்தி வந்தது சோவியத் யூனியன்; ‘விடுதலைத் தேசிய முன்னெடுப்புக்கான’ அரசியல் செல்நெறியே தீர்க்கமன பங்குப் பாத்திரம் வகிக்கத் தொடங்கிவிட்டமையைக் கவனம் கொள்ளாமல் செயற்பட்டமையினால் சோவியத் ருஷ்யாவும் வீழ்ச்சியைச் சந்தித்தது. நவகாலனித்துவச் செயலொழுங்குடன் இயங்கிவந்த ஏகாதிபத்தியம் மீண்டும் வலுப்பெற்று முன்னேற இயலுமான சூழலும் வளர்ந்து வந்தது.

ஒடுக்கப்பட்ட தேசங்களை நவகாலனித்துவ அரசியல் பிரயோகம் வாயிலாகப் பெற்ற மேலாதிக்க வாய்ப்புடன் ஐக்கிய அமெரிக்கா சுரண்டி வந்த ஏகபோகம் இழக்கப்பட்டு வரும் இன்றைய மாற்றப்போக்கில் முன்னாள் காலனித்துவச் சீனா மட்டும் முன்னிலைக்கு வரவில்லை. சோசலிச முன்னெடுப்புத் தகர்ந்ததைத் தொடர்ந்து ஒட்டாண்டி நிலைக்குத் தள்ளப்பட்டு இருந்த ருஷ்யா மீளெழுச்சி பெற்று ஆளுமையுடன் தனக்கான வர்த்தகத் தொடர்பாடல்களை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. அண்மைக் காலம் வரை வறிய நாடாக இனங்காணப்பட்டு வந்த முன்னாள் காலனித்துவ நாடான இந்தியா பிரத்தியேகமான வரலாற்று – புவியரசியல் காரணிகளால் ஏகாதிபத்தியத் திணைக்கான தலைமைக் கேந்திரமாக மாற்றம்பெற்று வருகிறது. கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் தலைமைப் பண்பை வெளிப்படுத்தவல்ல வலுமைமிக்க நாடுகள் பலவும் வெளிப்பட்டு வருவதோடு நாடுகளது கூட்டுறவுடன் பிராந்திய அமைப்புகள் உருவாகி மிகுந்த ஆளுமையுடன் செயலாற்றத் தொடங்கி உள்ளன.

பிரித்தானியா, அமெரிக்கா எனுமிரு ஏகாதிபத்திய வல்லரசுகள் இருபதாம் நூற்றாண்டின் முன்-பின் என்ற இரு கூறுகளுட்பட 21 ஆம் நூற்றாண்டின் இரு தசாப்தங்கள் வரை ஒற்றை மைய மேலாதிக்கத்தைச் செயற்படுத்தி வந்தது போன்ற வாய்ப்பு இனி எந்தவொரு தனியான வல்லரசுக்கும் சாத்தியப்படப் போவதில்லை. அதிகாரம் பெறத்தக்க பலவேறு வல்லரசுகளில் ஒன்றெனும் தகுதியையே எந்தவொரு மேலாதிக்க நாட்டினாலும் எட்ட வாய்ப்புள்ள வகையில் அரசியல் – சமூக – பொருளாதார – பண்பாட்டு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

உலகளவில் அதிகார மைய நீக்கம் ஏற்பட்டு வரும் இத்தகைய மாற்றப்போக்கை ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முந்திய தமிழகம் தன்னளவில் தரிசித்திருந்தது. மூலதனம் உலகனைத்தையும் வெற்றிகொண்டது போன்றதல்ல நிலப்பிரபுத்துவக் கால கட்டத்துக்கான உச்சம். நிலப்பிரபுத்துவத்தின் இயல்பே பிராந்தியப் பண்புடையது தான். நிலப்பிரபுத்துவ வரலாற்றுக் கட்டத்தின் உலகளவிலான அதியுச்ச விருத்தியின் முதல் நிலைக்கு உரியதாகச் சோழப் பேரரசு திகழ்ந்தது. அதன் தத்துவார்த்த வெளிப்பாடு, உலக மதங்கள் எவற்றிலும் கண்டு காட்டப்பட்ட கடவுளுக்கான வியாபிதங்கள் எவற்றை விடவும் சைவ சித்தாந்தத்தின் பதிக் கோட்பாடு அதியுச்சமாக அமைந்துள்ளமை பற்றிப் பார்த்து வந்திருக்கிறோம். சோழப் பேரரசின் இராணுவ வல்லாண்மை கடாரம் வரை (இன்றைய இந்தோனேசியா, மலேசியா) கடற்படையுடன் சென்று யுத்த வெற்றியைப் பெற்ற இராஜேந்திர சோழனின் படையெழுச்சியில் வெளிப்பட்டு இருந்தது. 

chola dynasty

மருதத் திணை மேலாதிக்கத்தின் வாயிலாக ஒடுக்குமுறை வரலாற்றைத் தொடக்கிய கிமு 3 ஆம் நூற்றாண்டு முதலாக ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் முன்னேற்றகரமான படையெடுப்புகளில் அபகரிப்புகளைப் பெற்று அதிகார உச்சங்களைத் தொட்ட நிலவுடமைச் சாதி கிபி 13 ஆம் நூற்றாண்டுகள் வரை பாரதூரமான நெருக்கடிகளைச் சந்தித்ததில்லை. கிபி 2 ஆம் நூற்றாண்டு நூற்றாண்டு முதல் நான்கு நூற்றாண்டுகள் நிலவுடமைச் சாதியின் மேலாதிக்கம் இழக்கப்பட்ட போதிலும் தனிப் பேரரசுகளுக்கு உரியனவாய் அல்லாத களப்பிரர்கள் எனப்படும் பல நூறு குறுநில மன்னர்களது ஆட்சி நிலவிய அக்காலத்தில், வீரயுக எழுச்சி வாயிலாக ஏற்பட்டிருந்த சமூக உருவாக்கம் தகர்க்கப்படும் செயலொழுங்கு எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. அந்தக் காலத்தில் வணிக நலன் மேலோங்க இடமேற்பட்ட அதேவேளை வீரயுகத்தில் கிழார்கள் என மருதத் திணை மேலாதிக்கத்தின் ஊடாக நிலவுடமையாளர்களாக மாறியவர்கள் வெள்ளாளர் எனும் சாதியாகக் கட்டமைக்கப்படும் விருத்தி தடுக்கப்படவில்லை. வேறு நிலவுடமைச் சாதி எதனையும் ஆதிக்கப் போட்டிக்கு உரியோராக நிலைநிறுத்தவும் இல்லை. விஜயநகரப் பேரரசர் ஆட்சி ஏற்பட்ட பின்னர் பின்னடைவுகளைச் சந்தித்த போது தெலுங்கு நிலப்பிரபுக்களது பிரசன்னம் காரணமாக தனித்த அதிகார மையம் என்ற தகைமையை வெள்ளாளர்கள் இழந்தனர். அதன்போதான சமூக அசைவியக்கங்கள் பற்றிய தெளிவுகள் இன்றைய செல்நெறியைப் புரிந்துகொள்ள உதவ இயலும்!

நிலப்பிரபுத்துவத் திணைகள் இடையேயான முரண்பாடுகள்

களப்பிரர் ஆட்சியை முடிவுக்கு ஆட்படுத்தி பல்லவர்களும் பாண்டியர்களும் (முறையே வட – தென் தமிழகப் பகுதிகளில்) பேரரசுகளை உருவாக்கிக்கொண்ட ஆரம்பத்தின் போது அவ்விரு பேரரசுகளும் சரி, முன்னதாகக் குறுநிலப் பரப்புகளை ஆட்சி செய்த களப்பிரர்களும் சரி, வணிக நலன் பேணும் அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்கு அப்பால் வெள்ளாளர்களது நிலவுடமைக்குப் பங்கம் ஏற்படுத்தவோ அவர்களது நிலங்களை அபகரிக்கவோ முற்பட்டார்களில்லை. ஆயினும் அக்காலத்திலேயே (முன்னதாக வீரயுகக் காலம் தொட்டே) வேறொரு ‘ஆக்கிரமிப்பு’ தமிழகத்தில் தொடக்கம் பெற்று வளர்ந்ததான ‘வரலாறு’ ஒன்றும் பேசுபொருளாக நிலவி வருகிறது. குறிப்பாக பல்லவ, பாண்டிய பேரரசர்கள் பக்தி இயக்கத் தொடக்குனர்களான நாவுக்கரசராலும் ஞானசம்பந்தராலும் சைவ சமயத்துக்கு மாற்றப்பட்டதில் இருந்து ‘ஆரியப் பிராமணர்களது மேலாதிக்கம்’ இடம்பெறத் தொடங்கியதாக அந்த ‘வரலாற்று வாசிப்பு’ அமையும்.

வீரயுகத்ததில் நில ஆக்கிரமிப்பைப் பெற்ற போதிலும் சரி, பின்னதாகப் பக்திப் பேரியக்கத்தில் நிலப்பிரபுத்துவ அதிகாரத்தை வெற்றிகொண்டு முன்னேறிய போதும் சரி மருதத் திணை மேலாதிக்கச் சமூக சக்தியான வெள்ளாளர் தீர்மானகரமான சக்தியாகத் திகழ்ந்து பிராமணர்களை அரவணைப்புடன் நிலக்கொடை அளித்துத் தமக்கான துணைச் சக்தியாக வரித்தவாறு வளர்ந்தனர் என்பதே இயக்கம்பெற்று வந்த வரலாறு என்பதனைப் பார்த்து வந்துள்ளோம். விஜயநகரப் பேரரசர் ஆட்சி ஏற்பட்ட பின்னர் அரவணைக்கும் ஆட்சியுரிமை வெள்ளாளர் கையைவிட்டு நீங்கி வேறு தளத்துக்கு மாறியமையால் வெள்ளாளர் – பிராமணர் முரண் வேறொரு பரிமாணத்தைப் பெற்றது; அதன் பேறாக வெள்ளாளர்களுக்கான சைவசித்தாந்தம் ஆளுமையுடன் வெளிப்பட இயலுமான அளவில் முன்னதாகப் பிராமணர் அப்படியொன்றும் ஆக்கிரமிப்புப் பேராற்றல் பெற்றில்லை என்பது வெள்ளிடை மலை!

அடுத்து வந்த நூற்றாண்டுகள் வெள்ளாளர்களது மேலாதிக்கத்தை மேவிய பல பண்புக்கூறுகள் பிராமண நிலப்பிரபுத்துவத்துக்கு வாய்ப்பளிப்பதாக அமையலாயிற்று. மருதத் திணை மேலாதிக்கத்தைத் தொடர்ந்த வரலாற்றில் தமக்கான ஒடுக்கும் அதிகாரத்தைப் புனித அந்தஸ்தாகக் காட்டுவதன் பொருட்டு சுரண்டலுக்கான கூட்டாளிகளாக ஆக்கப்பட்டவர்கள் வேறு மேலாதிக்க சக்திகளுக்கும் நெருக்கமான நட்பு சக்திகளான பின்னரே அந்தப் பண்பு மாற்றம் சாத்தியப்பட்டது. அத்தகைய வரலாற்றுக்கட்ட நகர்வின் போதுகூட பிராமணிய எதிர்ப்பைச் சைவசித்தாந்த வெள்ளாளர்கள் வெளிப்படுத்தியதில்லை. பிந்திய வரலாற்று நகர்வில் தமது மேலாதிக்கத் தனியுரிமையை நிராகரித்துப் புதிய நட்பில் கலந்த பிராமண நிலப்பிரபுத்துவ சக்தி (திணை) மட்டுமன்றி அந்தப் புதிய மேலாதிக்கத்துக்கு உரிய தெலுங்கு நிலப்பிரபுக்கள் எனும் மற்றொரு திணையின் போட்டிக்கும் முகங்கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் வெள்ளாள நிலப்பிரபுக்கள் எனும் சமூக சக்திக்கு (திணைக்கு) உண்டு!

தெலுங்குப் பெரு நிலப்பிரபுக்களுக்கான முழுமுதல் கடவுளாக சிவன் அன்றி விஷ்ணுவே போற்றப்படுபவர் என்ற வகையில் விஜயநகரப் பேரரசர் காலத்தில் சாத்தியப்பட்ட அவர்களது தமிழக இருப்பின் வாயிலாகச் சிவனது மேலாதிக்கம் கேள்விக்குட்படும் நிலை வளர்ந்தது (வாழ்வியலில் வெள்ளாள நிலப்பிரபுத்துவத் தனி மேலாதிக்கத்தின் போட்டியாளர்கள் உருவாகிவிட்டதற்கான ஆன்மிகத் தளத்தின் பிரதிபலிப்பாக). சிவனுடைய மேலாதிக்கம் தெலுங்கு வைணவர்களது உருவாக்கத்தின் பின்னராக மட்டுமே சவாலுக்கு ஆட்பட்டது என்றில்லை; அவைதிக மதங்களை வீழ்த்துவதில் ஒன்றுபட்டு இயங்கத் தொடங்கிய ஆரம்பத்தில் தமிழர் வழிபாட்டில் இடம்பெற்றிருந்த திருமாலை இணைத்துக்கொண்ட தமிழ் வைணவப் பரப்புரையாளர்களான ஆழ்வார்களே கூட விஷ்ணுவின் மேலாண்மையை வலியுறுத்தும் நிர்ப்பந்தத்தை உணர்ந்து செயற்பட்டிருந்தனர். பக்திப் பேரியக்கத் தொடக்க நிலையில் பல்லவ, பாண்டிய மன்னர்கள் சைவத்துக்கு மாற்றப்பட்டு இருந்தனர். பெரு நிலப்பிரபுக்களுக்கான சிவன் இதனூடாக ஆட்சியாளர்களது கடவுளான போது இலக்கியத் தளத்திலேனும் விஷ்ணுவை அரச அந்தஸ்த்துக்கு உயர்த்த வேண்டிய தேவை ஆழ்வார்களுக்கு முன்னால் எழுந்தது. வால்மீகி இராமாயணத்தின் வீர நாயகனான ராமனை விஷ்ணுவின் அவதாரங்களில் ஒரு நிலைக்கு உரிய வழிபாட்டுத் தலைவராக ஆழ்வார்கள் வெளிப்படுத்திக் கொண்டனர் (முன்னதாக வடக்கில் வழிபாட்டுக்கு உரியவராக இராமர் வரவில்லை என்பதனை சுவீரா ஜெய்ஸ்வால் காட்டி இருப்பது குறித்து முன்னர் பார்த்துள்ளோம்). சோழப் பேரரசு சைவ மேலாதிக்கத்தை உலகறிய ஏற்றிப்போற்றிய போது சிவ பக்தனான இராவணனை வதம் செய்தடக்கிய இராமரை அதியுச்ச நிலையில் பாடிப்பரவிய கம்பராமாயணம் தமிழுக்கான பெருங்கொடையாக வெளிப்பட்டது. விஷ்ணுவைத் தத்துவத் தளத்தில் முன்னிறுத்திய இராமானுஜர் சோழப் பேரரசின் எல்லையைக் கடந்து தூர தேசத்துக்குத் தப்பிச்சென்று தஞ்சம் புகுந்ததைப் போலக் கம்பரும் நாடு கடந்துபோக நேர்ந்ததான நாட்டார் கதைகளின் அனைத்து அம்சங்களும் நிராகரிக்கத் தக்கனவல்ல!

rajendra cholan

சிறிய, பெரிய நிலப்பிரபுத்துவ சக்திகள் இடையேயும் தமிழியல் வரலாற்றுத் தொடர்ச்சிக்கு அப்பாலிருந்து பிரவேசித்த புதிய நிலப்பிரபுத்துவ சக்தியுடனுமான முரண்பாடுகள் ஒரே உற்பத்தி உறவுத் தளத்துக்கு உரியன. சைவ மேலாண்மையானது தனக்குரிய அரச ஆதரவை இழந்த 13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரான வணிக சக்தியுடனான முரண்பாடும் இன்னொரு வகைப் பரிமாணத்தைப் பெறத் தொடங்கியது. விவசாய எழுச்சிக்கு முன்னரான வணிக விருத்தியைப் பெற்று வணிக – கைத்தொழிற்துறை வளர்ச்சியின் வெளிப்பாடான பண்பாட்டு உருவாக்கம் தமிழர் வரலாற்றுத் தொடர்ச்சிக்கான தனித்துவத்தை கிமு 6 ஆம் நூற்றாண்டில் இருந்து வழங்கி வந்தமை பற்றி முன்னதாகப் பார்த்து வந்துள்ளோம். சைவ மேலாதிக்க உச்சத்துக்குரிய சோழப் பேரரசில் இராஜேந்திர சோழனின் கடாரத்துக்கான கப்பல் படை முன்னெடுப்பும் கூட தமிழ் வணிகர்களது நலன்களை அந்தப் பிராந்தியத்தில் உறுதிப்படுத்துவதற்கானதாகவே அமைந்திருந்தது. அப்போதெல்லாம் சிவனது மேலாதிக்கத்துக்கு உட்பட்டதாக வணிகத் திணையின் ஆன்மிக ஊடாட்டம் அமைந்து இயங்கி வரலாயிற்று. நிலப்பிரபுத்துவ மேலாண்மை சக்திகள் தமக்குள் திணைப் பிளவுற்ற உள் முரணுக்கு ஆட்படுதல் வலுப்படுவதனைத் தொடர்ந்து வணிகத் திணை தனக்கான தனித்துவ முன்னெடுப்பை மேலெழச் செய்வது தவிர்க்கவியலாத ஒன்றாக அரங்கேறத் தொடங்கியது!

நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தில் நகர்மயம்

உலகளவில் நிலப்பிரபுத்துவ உச்சத்தின் முதல்நிலை நாடாக இருந்த தமிழகத்தில் அந்தப் பொருளுற்பத்தி முறையின் அனுசரணையுடன் அதற்கானதாக இயங்கிய வணிகமும் உயர் விருத்தியுடன் அமைந்திருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை. ஆயினும், மூலதனக் குவிப்பின் உச்சத்தை எட்டிய மேலைத்தேச நோக்குநிலை மேவியிருந்த இருபதாம் நூற்றாண்டில் கீழைத்தேசம் முழுமையும் வரலாறற்ற – பின்தங்கிய பிரதேசங்கள் என்ற மனப்பாங்கை விதைக்கும் ‘ஆய்வு முடிவுகள்’ தலைதூக்கி இருந்தன. ‘நகரம்’ பற்றிய ஐரோப்பிய எண்ணப்பாங்கின் அடிப்படையில் தமிழகத்தில் இயங்கிய முற்பட்ட கால நகரங்களை மதிப்பிட முனைந்த அக்கால ஆய்வுகள் இங்கு நகரங்களே இருந்ததில்லை என்ற கருத்தை உருவாக்கி ஏற்புடையதாக்கி வந்தன. அதற்கு மாறாக, நகருக்குரிய இந்தியப் பண்பை வெளிப்படுத்திய ஆர். சம்பகலக்‌ஷ்மியின் “வணிகம் கருத்தியல் நகர்மயம் – தென் இந்தியா: கிமு 300 முதல் கிபி 1300 வரை” எனும் நூல் தமிழகத்தின் புராதன நகரங்கள் குறித்த தெளிவை வழங்கி உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரையிலான தொல்லியல் – இலக்கிய ஆதாரங்களில் அதிகூடிய முக்கியத்துவத்தை காவிரிப்பூம் பட்டினம் (பூம்புகார்) பெற்றிருந்த வகையிலும் கீழடி ஆதாரங்கள் கண்டறியப்படாத சூழலிலும் சம்பகலக்‌ஷ்மி வெளியிட்டிருந்த மேல்வரும் கருத்துக் கவனிப்புக்கு உரியது: 

Image 3

“புகார் போன்ற இடங்களில் யவனர்களுக்கான தனிப்பட்ட தங்குமிடங்கள் அறியப்பட்டுள்ள நிலையில், அரிக்கமேடு ரோமானியர்களின் வர்த்தக நிலையமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் இத்தகைய தங்குமிடங்கள் பின்னாளைய ஐரோப்பிய தொழிற்சாலைகளை (factories) போலவே சுயேச்சைச் சலுகை பெற்றன அல்ல. ‘காலனிகள்’ அல்லது இதேபோல, இச்சமகால வர்த்தக நடவடிக்கைகளில், இந்த யவன வியாபாரிகளின் பங்கு மிகை மதிப்பிடப்படுகிறது. கிரேக்க வியாபாரிகளின் நடவடிக்கைகள் பொதுவாகப் பிரதான வர்த்தக மையங்களில் கட்டுண்டு இருந்த நிலையில், உட்புற நிலங்களில் பல்வேறு சரக்குகளின் உற்பத்தி மேலாண்மையும், அவற்றின் போக்குவரத்தும் தமிழர்களின் கைகளில் தான் இருந்தது என்று ஃபில்லியோஜட் (Filliojat) மற்றும் மலோனி (Maloney) ஆகியோர் சுட்டிக்காட்டுகிறார்கள். வெளிநாட்டு வர்த்தகர்களுக்குத் தேவையான மிளகு உள்ளூர் படகுகளில் பகேர் (Bacare) துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு அதன்பின் கிரேக்கக் கப்பலில் ஏற்றப்பட்டது குறித்த பிளினியின் கூற்றும், அத்துடன் ஒரு தமிழ் வணிகருக்கும் அலெக்சாண்ட்ரியாவின் கிரேக்கர் ஒருவருக்கும் ஒரு பெரிய சரக்குக் கப்பல் அலெக்சாண்ட்ரியாவிற்கு அனுப்பட்டது குறித்த ஒப்பந்தம் ஒன்று வியன்னாவின் பாப்ரிசில் (Vienna Papyrus) பதியப்பட்டுள்ளதும் தமிழ் வணிகர்கள் வெளிநாட்டு வணிகர்களோடு சரிக்குச் சரியாக வணிகம் செய்துள்ளதைக் காட்டுகிறது” (ஆர். சம்பகலக்‌ஷ்மி, “வணிகம் கருத்தியல் நகர்மயம் – தென் இந்தியா: கிமு 300 – கிபி 1300 வரை”, 2021. தமிழில்: வேட்டை S. கண்ணன், பாரதி புத்தகாலயம், சென்னை. ப. 146).

கிமு 3 ஆம் நூற்றாண்டில் மூவேந்தர்களது எழுச்சிக்கு உரிய வீரயுகம் தொடக்கம் பெற்றது (கிமு நாலாம் நூற்றாண்டில் வடக்கில் இருந்து சமண, பௌத்த துறவிகள் தெற்கு நோக்கி வந்தார்கள்) எனும் கால எல்லை தொட்டு தமிழகத்தில் களப்பிரர்களது ஆட்சி ஏற்பட்ட இடைக்கட்டம் வரையான இலக்கியங்களின் தொகுப்பு “சங்ககாலப் பாடல்கள்” என அறியப்பட்டு வருகிறது. அவ்வாறு தொகுக்கப்பட்டுள்ள சங்க இலக்கியம் வெளிப்படுத்துவதான நகரங்கள் கூட வட தேசங்களுக்கு உரிய வேறு நகரங்களின் சாயலில் கற்பனையாகப் புனையப்பட்டவை தாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதும் வகையில் அக்காலத்துக்கு உரியதான கட்டுமானங்கள் எவையும் கண்டறியப்பட்டு இருக்கவில்லை. பிந்திய வரலாற்றுக்கால நகரங்கள் பற்றிய சம்பகலக்‌ஷ்மியின் கருத்துக் கனதி காரணமாக வெவ்வேறு தேவைகளின் பொருட்டு அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளாக இருந்தவை அனைத்தையும் தொகுத்துத் தனி நூலாக உருவாக்கும் உத்வேகத்தை ரோமிலாதாப்பர் ஊட்டியதன் பேரிலேயே மேற்படி நூல் வெளிப்பட்டு இருப்பதாக நூலாசிரியர் பதிவு செய்துள்ளார் என்பது கவனிப்புக்கு உரியது (ப. 10). கைத்தொழிற்பேட்டைகளும் வணிகச் செழிப்புக்கான  நகர் கட்டுமானங்களும் கிமு 6 ஆம் நூற்றாண்டு முதல் கீழடியில் இருந்துள்ளமையை 2015 இற்குப் பின்னரான தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்திய சூழலில் ‘இந்திய வரலாறு தமிழகத்தை மையமாக வைத்து மறுவரைவு செய்யப்பட வேண்டும்’ எனக் கூறியிருந்தார் ரோமிலாதாப்பர். ஏற்கனவே, பிற்கால (மத்தியகால) தமிழக வரலாறு குறித்துப் புதிய தெளிவுகளைச் சென்ற நூற்றாண்டின் கடைக்கூறில் ரோமிலாதாப்பர் வெளிப்படுத்தி உள்ளமையை அறிவோம். அதற்கு செம்பகலக்‌ஷ்மியின் இந்த ஆய்வுகளும் தூண்டுகோலாக அமைந்திருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை என்ற வகையில் அவரது “வணிகம் கருத்தியல் நகர்மயம்” எனும் நூல் மிகுந்த கவனிப்புக்கு உரியது. 

விவசாய விரிவாக்கத்தில் சத்திரியர் துணையுடன் பிராமண வர்ணம் நில ஆக்கிரமிப்பை வலுவுடன் நிறைவாக்கிய நிலையில் வணிக (வைசிய) வர்ணத்தார் மேலாண்மை பெறத் தொடங்கும் கிமு 6 ஆம் நூற்றாண்டில் புதிய திணைக்கான (வைசியருக்கான) கருத்தியல்களாகச் சமணமும் பௌத்தமும் எழுச்சி பெறுவதுடன் இணைந்ததாகவே வட இந்தியாவுக்கான நகருருவாக்கம் சாத்தியப்பட்டு இருந்தது; அத்தகைய நகர்க் கட்டுமானத்தை தொல்லியல் ஆய்வுகள் ஏற்கனவே அங்கே கண்டறிந்த காரணத்தால், தமிழகம் வரலாற்று உருவாக்கத்தைத்  தொடங்க முன்னரே வடக்கில் வரலாற்று வளர்ச்சி துரிதப்பட்டதான கருத்து பல தரப்பாரிடையேயும் நிலவி வந்தது. வடக்கின் நகருருவாக்கத்துக்கு முன்னரே தமிழகத்தின் நகர எழுச்சி மிகுந்த விருத்தியுடன் இருந்தமையைக் கீழடி உட்படப் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகள் எடுத்துக்காட்டி வருகின்றன. விவசாயச் செழிப்புக்கு முன்னரான வணிக – கைத்தொழில் துறை விருத்தி தமிழகத்தில் சாத்தியப்பட்ட காரணத்தால் நான்கு திணைகள் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாகச் சமத்துவ ஊடாட்டத்துடன் இங்கே இயங்க இயலுமாக இருந்தன. பின்னரான மருதத் திணை மேலாதிக்கம் வாயிலாக ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுச் சமூக வாழ்முறைக்கு உரிய சாதியத்தை வடக்கிலிருந்து பெற்றுத் தமிழகம் இயங்கி வந்ததாகிய தனித்துவமிக்க வரலாற்றுச் செல்நெறியின் ஒழுங்கு முறை காரணமாகவே வர்க்கங்கள் பெற்று வந்த இயக்கப் போக்குக்கு அப்பால் முழுச் சமூக சக்திகளிடையேயான ஊடாட்டங்களின் செயற்பாங்குகளை “திணை அரசியல்” என வரையறைப்படுத்த இயலுமாக இருந்தது. இவை ஏற்கனவே பேசப்பட்டு வந்த விடயங்கள். விவசாய – வணிக திணைகள் இடையேயான மோதல்கள் வாயிலாக ஏற்படும் மேலாதிக்கக் கைமாறுதலே எமக்கான சமூக அமைப்பில் மாற்றத்தை நிகழ்த்தும் செயலொழுங்கு என்பதனைப் பார்த்து வந்துள்ளோம். இங்கு எமக்கு அவசியப்படுவது, பக்திப் பேரியக்கத்தைத் தொடர்ந்து கீழடக்கப்பட்டவாறு இயங்க அனுமதிக்கப்பட்ட வணிகத் திணையானது நிலப்பிரபுத்துவ மேலாதிக்க அணிகளுக்குள் இடம்மெறும் உள்-திணை (பெரிய – சிறிய – புதிய நிலப்பிரபுத்துவ சக்திகளிடையேயான) முரண்பாட்டு மோதல்களை எவ்வாறு கையாண்டு வந்தது என்பது தான்!

நிலப்பிரபுத்துவக் காலச் சமூகத்தின் மையமகக் கோயில்களே விளங்கின என்ற வகையில் வணிக நகரங்களும் கோயில் பிரகாரங்களுடன் இணைந்தே அமைவன என்பதனை சம்பகலக்‌ஷ்மி எடுத்துரைத்துள்ளார். சமூக முரண் இயக்கங்களும் கருத்தியல் தளச் செயலொழுங்குகள் ஊடாகவே வெளிப்பட்டு வந்தன. அந்தவகையில், மேலாதிக்கத் தரப்புத் தமக்குள் இயங்கும் உள் மோதல்கள் முனைப்படைந்து சிக்கலில் உழலும்போது வணிகத் திணை தனக்கான தனித்துவ எழுச்சி வாய்ப்பினை எத்தகைய வடிவத்தினூடாக வெளிப்படுத்த முற்பட்டது என்ற தேடலை மேற்கொள்வதன் வாயிலாக இன்றைய வரலாற்றுக் கடமையைக் கையேற்கும் மார்க்கத்துக்கான திறவுகோலைக் கண்டடைய இயலும்!

முருகனில் சிவன்

உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவன் சிவன் மட்டுமே என வலியுறுத்த முனைந்த தொடர் பாய்ச்சலைத் தமிழக மேலாதிக்கச் சமூக சக்தி விஷ்ணுவை முன்னிறுத்தும் போட்டியாளருடன் மல்லுக்கட்ட வேண்டிய வரலாற்றுக் கட்டம் ஏற்பட்ட பின்னர் வணிகத் திணை தனக்கான தனித்துவக் கடவுளை மேலெழச் செய்யும் வாய்ப்பினைப் பெற்றது. சைவ – வைணவ மோதல் ஒரு எல்லையைக் கடந்துவிட இயலாத வகையில் அக, புறக் காரணிகள் உறுத்திக்கொண்டே இருந்தன. தமக்கான சாதிய மேலாதிக்கத்தை நிலப்பிரபுத்துவ சக்திகளனைத்தும் தொடர்ந்து பேணும் வகையில் ‘இந்து சமயமாக’ (அன்றைய உரையாடலில் ‘சனாதன தர்மம்’, ‘வைதிக நெறி’ என்பனவாக) இணைந்து இயங்கியாக வேண்டி இருந்தது. இந்த அகக் காரணிக்கு அப்பால் இஸ்லாமியத் தாக்கத்தினால் வைதிக நெறிக்கு விரோதமாக மக்கள் சென்றுவிடாமல் தடுக்க வேண்டிய தேவையும் இருந்தது.

தமிழகத்தில் குறுகிய காலம் மதுரை உள்ளிட்ட சில இடங்களில் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி நிலவிய போதிலும் நேரடி ஆட்சி எல்லைக்கு உட்பட்டிராத ஏனைய பகுதிகளில் ஏராளமான மக்கள் இஸ்லாத்தைத் தழுவும் நிலை இருந்து வந்துள்ளது. சாதி ரீதியிலான வலுமையான ஒடுக்குமுறையை அனுபவித்த தரப்பினர் மட்டுமன்றி சமூக மேலாண்மையுடன் இருந்த வணிகத் திணைக்குரிய பலரும் இஸ்லாத்துக்கு மாறியிருந்தனர். குறிப்பாகப் பக்தி இயக்கத்தில் பௌத்த – சமணம் வீழ்த்தப்பட்ட போது அந்த மார்க்கங்களைப் பின்பற்றியோரில் ஒரு தரப்பினர் மட்டும் வைதிக மதங்களைத் தழுவினர். ஏராளமானோர் இஸ்லாத்தை வரித்துக்கொள்ளும் வகையில் அவர்களுக்கான வணிகக் கருத்தியலுடன் அந்தப் புதிய மதம் திகழ்ந்திருந்தது. மிக அதிக வீரயுகக் காலத் தமிழ் சொற்கள் முஸ்லிம் மக்களிடையே இன்றுவரை புழக்கத்தில் தொடர்வதற்கு இவ்வகையில் உட்பிரவேசித்த தமிழ் மக்களே காரணமாயிருந்தனர்.

வைதிக சமயங்களை வரித்துக்கொண்ட வணிகர்கள் ஆரம்பத்தில் சிவனுடைய மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட போதிலும் அவரது முதன்மைப் பீடம் ஆட்டங்காணத் தொடங்கிய பின்னர் தமக்கான கடவுளாகக் குன்றத்துக் குமரனான ‘தமிழ்க் கடவுள் முருகனை’ முன்னிறுத்தும் போக்கு வளரலாயிற்று. அக – புறக் காரணிகளால் வைதிக சமயம் அச்சுறுத்தலைச் சந்தித்த பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர் வருகையும் அவர்களூடாகக் கிறிஸ்தவத்தின் ஊடுருவலும் அறிமுகப்பட்டு வலுவடையத் தொடங்கிவிட்ட காரணத்தால் இரண்டாவது பக்தி இயக்கத்துக்கான அவசியம் ஏற்படலாயிற்று. இந்த எழுச்சியில் கடல் வழி வாணிகத்தில் பெரும் பொருளீட்டியவரான பட்டினத்தடிகள் 17 ஆம் நூற்றாண்டில் தலைமைப் பண்பு மிக்கவராகத் திகழ்ந்தார். அருணகிரிநாதர் (1370 – 1450), குமரகுருபரர் (1625 – 1688) போன்றோர் முருக வழிபாட்டினை வலுப்படுத்துவோராக அமைந்தனர்.

இவ்வகையில் வணிகத் திணை தனி வழித்தடத்தில் முன்னேறுவது விவசாயத் திணைக்கு உகந்ததுமல்ல, அவர்கள் அனுமதிக்க ஏற்றதுமல்ல. நிலப்பிரபுத்துவ நலனுக்கு உட்பட்ட அளவில் வணிகப் பெருக்கத்தை அனுமதிப்பதனைக் கடந்து தனிப்போக்கு வலுப்பது என்பது மூலதனத் திரட்சியைப் பெருக்கி விவசாயத் தேவையைக் கடந்த தொழிற்துறை விருத்தியில் சுயமாக வளர வணிகத் திணைக்கு வாய்ப்பளித்து விடவும் இடமளிக்கும். எமக்கேயான மூலதனத் திரட்சிக்கு உரிய திசையில் வரலாறு தொடரவில்லை என்பதோடு பகை முரணாக வளரத்தக்க தமது போட்டியாளர்களான வணிகத் திணையினர் இவ்வகையில் தனியான கடவுளை முன்னிறுத்திய பக்தி இயக்கம் ஒன்றை முன்னெடுப்பதனை நிலப்பிரபுத்துவத் திணை எவ்வாறு அனுமதித்தது என்பது தான் இங்கு அவசியமான விடயமாகிறது!

சிவன் – விஷ்ணு எனும் மேலாதிக்கக் கடவுளர்கள் இடையேயான முரண் என்பது தமிழர் சமூகத்தின் பெரு நிலப்பிரபுக்களில் மிகப் பெரும்பான்மையினராயுள்ள வெள்ளாளர்களது சமூகத் தளத்தில் ‘ஆளும் மதமான’ சைவத்துக்கும் மிகச் சிறுபான்மையினராயுள்ள புதிய நிலப்பிரபுத்துவ சக்தியின் (ஆட்சியாளர் மதமான) வைணவத்துக்கும் இடையிலானது. இரு தரப்பினரும் சமநிலையுடன் மேலாதிக்கத்தைச் செயற்படுத்துகிறவர்கள்; “ஒரு முழு முதல் கடவுளாகிய பரம்பொருள் ஏனைய கடவுளர்களை மேலாண்மை செய்யும்” ஒரே கோட்பாட்டுக்கு உரிய வைதிக நெறியினர். இரு மதங்களும் ‘தொன்றுதொட்டு’ குடும்ப உறவுடன் ஊடாடும் கடவுளர்கள் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகளை ஒரேவகையில் பேணி வருவன (ஒரே கதையில் எவர் முழுமுதல் கடவுள் என்பதற்கு ஏற்பச் சிறிய அளவிலான பாடபேதம் இன்று வழக்கிலுள்ள இந்து மதங்களான சைவம், சாக்தம், வைணவம் என்பவற்றில் ஏற்பட்டிருக்கும்). அதனடிப்படையில் விஷ்ணுவின் தங்கையான சக்தி (சாக்தத்தின் முழு முதல் கடவுளான உமை, பார்வதி, கொற்றவை, அம்மன்) சிவனது மனைவி; சிவ – சக்தி மகனான முருகன் விஷ்ணுவின் மருமகன் என்ற வகையில் ‘பகைநிலைக்கு வளரத்தக்க திணைக்கு உரிய’ வைசியர்கள் முருக வழிபாட்டை முன்னிறுத்துவதான புதிய பக்தி இயக்கத்தை ஏற்றாக வேண்டிய நிர்ப்பந்தம் விவசாயத் திணைக்கு ஏற்பட்டிருந்தது.

விஜயநகரப் பேரரசர்களது ஆட்சியுடன் அறிமுகப்பட்ட தெலுங்கு வம்சாவழி – தமிழ் நிலப்பிரபுக்களுக்கு இடையிலான வைணவ – சைவப் பிரிவுகளுக்கு மட்டுமன்றி வணிகத் திணையாகிய வைசியர்களால் ‘முழு முதல் கடவுளாக்கப்படுகிற’ முருக வழிபாட்டுக்கும் வேதாகம – வேதாந்தப் பிராமணர்களே ஆன்மீகத் தலைவர்களாக (பூசகர்களாக) அங்கீகரிக்கப்பட்டு இருந்தனர். ‘பிராமணர்’ எனும் திணையுடன் ஓரிரு நூற்றாண்டுகளின் முன்னர் வெள்ளாளர்களுக்கு ‘உள் – பகை முரண்’ ஏற்பட்ட கையோடு சைவ சித்தாந்தத்தை உருவாக்கி இருந்த வெள்ளாளர்கள் சைவ – வைணவச் சமரசத்துக்கு ஆட்பட்ட பின்னணியில் இடை சக்தியான வேத – வேதாந்தப் பிராமணத் திணையுடனும் (சமூக சக்தியுடனும்) சமரசத்துக்கு வந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் வெள்ளாளர் திணைக்கு (மருதத் திணை மேலாதிக்கம் வாயிலாகத் தமிழகத்தின் சாதிய வாழ்வை ஏற்படுத்திக்கொண்ட சமூக சக்திக்கு) உருவாகியது. திணை மேலாதிக்கப் போட்டி காரணமாகப் பிராமணரது பிரமம் பற்றிய கருதுகோளில் இருந்து அடிப்படையான கோட்பாட்டு வேறுபாட்டுடன் வெள்ளாளர்கள் வெளிப்படுத்தி இருந்த சைவசித்தாந்தம் தொடர்ந்தும் அதனது தனித்துவ மேலாதிக்கத்தை நிலைநிறுத்த இயலாமலாயிற்று (சமூகத் தளத்தில் மேலாதிக்க சக்திகள் பரவலாக்கமடைந்ததன் பேறாக).

வேதாந்த – சைவசித்தாந்தத் தத்துவங்கள் இடையே ‘சமரச சன்மார்க்க’ உறவை ஏற்படுத்தியவர் ‘பிராமணச் சதிக்கு’ உரிய பணியை மேற்கொள்ளவில்லை; தவிர்க்கவியலாத அந்த உடன்போக்கு பிராமணரல்லாதவரான தாயுமான சுவாமிகளால் (1705 – 1742) மேற்கொள்ளப்பட்டது. வேதாரண்யத்தைச் சேர்ந்த கேடிலியப்பா – கஜவல்லி அம்மை ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவரான தாயுமானவர் திருமூலரின் மரபைச் சேர்ந்த மௌனகுருவிடம் உபதேசம் பெற்று துறவு வாழ்வை மேற்கொண்டார். மிக எளிய பாடல்கள் வாயிலாகக் கடவுளை மனித உணர்வுக்கு நெருக்கமாக வருவித்த தாயுமானவரின் மேலாதிக்க நிராகரிப்புடனான ஜனநாயக மனப்பாங்கு அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் வள்ளலார், பாரதி போன்றோரில் மென்மேலும் சமத்துவ நெறி நோக்கிய நகர்வைச் சாத்தியமாக்கி வந்தது!

மேலாதிக்கச் சிவனை நீங்கிச் சமத்துவத் திணை வாழ்வுக் காலத்துக் குறிஞ்சிக் கடவுளான முருகன் முன்னிறுத்தப்பட்ட போதே கடவுளர் தளத்தில் மூலதனம் விருப்புக் கொள்ளக்கூடிய ஜனநாயக வாழ்வியல் அறிமுகப்பட்டிருந்தது. “கந்தபுராணம்” வாயிலாக முருகனைச் சிவனின் ஒரு மூர்த்தமாக வலியுறுத்த வேண்டிய வகையில் மேலாதிக்கத் தளம் பன்முகப்பட்டுப் போயிருந்தது. சமூகத் தளத்தில் ஒற்றைக் கடவுள் மேலாதிக்கத்துக்கு அப்பாலான வழிபாட்டுச் சுதந்திர உணர்வோட்டங்கள் மேலெழுந்து வருவதனைப் பள்ளு, குறவஞ்சி போன்ற இலக்கிய வடிவங்கள் வெளிப்படுத்தலாயின. இத்தகைய மாற்றங்கள் மதங்களைக் கடந்த ஆன்மீகத் தேடலுக்கு ஆற்றுப்படுத்தும் வளர்ச்சி நிலையைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சாத்தியப்படுத்தியது. அதுபற்றி அடுத்த அமர்வில் உரையாட இயலும்!

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4641 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (21)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)