Arts
18 நிமிட வாசிப்பு

மையத் தகர்ப்புடன் வணிக மீளெழுச்சி

March 1, 2023 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம் மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

வீரயுக முடிவில் மூன்று பேரரசுகளையும் தகர்த்துப் பலநூறு ஆள்புலங்களாகத் தமிழகத்தை ஆக்கியவாறு களப்பிரர்களது ஆட்சி ஏற்பட்ட சூழலில் தோற்றம்பெற்ற நூல் “திருக்குறள்”. இது மிகப் பெரும் சமூக மாற்றக் காலகட்டம்; பல தசாப்தங்களாக மேலாதிக்கத்துடன் திகழ்ந்த விவசாயச் சமூக சக்தியான கிழார்களின் திணையானது தனக்குரியதான அரச அதிகாரத்தை இழந்து வரும் அதேவேளை வணிகச் சமூக சக்தியின் மேலாதிக்கத்துக்கு அனுசரணை வழங்கும் ஆட்சி முறையைச் சாத்தியப்படுத்துகிற மாற்றம் நடந்தேறி வரத் தொடங்கி இருந்தது.

திருக்குறள்

ஆதிக்கத்தை இழந்தவாறுள்ள கிழார்களின் சார்பாகப் புலம்பல்களை மேற்கொள்ளவில்லை  திருக்குறள்; மேலாதிக்கம் பெறும் வணிகர் நலனை முதன்மைப்படுத்தவும் முற்படவில்லை. மட்டுமன்றி, ஏனையவர்கள் மீதான ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகிற வகையில் அமையக்கூடிய (வணிகத் தொழிலின் புனிதம் பற்றிய) கருத்து நிலைகளையும் வெளிப்படுத்தவில்லை.

அதிகார மோதல்களில் ஈடுபட்ட விவசாய – வணிகச் சமூக சக்திகளான (திணைகளான) இரு தரப்பினரில் எந்தத் தரப்பினரையும் ஆதரிக்க அவசியமற்ற வகையில் திருக்குறள் வெளிப்பட்ட போது இரு தரப்பாரும் சமநிலையில் இருந்தனர். தவிர, மேலாதிக்கம் பெறும் வணிகச் சமூக சக்தி (திணை) புதிய வாழ்நிலைக்கு உரிய ஒன்றாக இருக்கவில்லை என்பது கவனிப்புக்கு உரியது. புதிய சக்தியொன்றாக எழுச்சி பெற்றிருப்பின் மேலெழுந்து வருகின்ற இளம் சமூகப்பிரிவை ஆதரித்து வளர்த்தெடுப்பது அவசியம் என்பதை உணர்ந்தவாறு ஆற்றல்மிகு படைப்பாளி தனது ஆக்கத்தை வெளிப்படுத்தி இருப்பார். அத்தகைய சமூகக் கடமையை மேற்கொள்ளும் படைப்பொன்றே முற்போக்கானது எனக் கொண்டாடப்பட்டு (மாறும் புதிய சமூகத் தேவைக்கு ஏற்புடையதெனப் போற்றப்பட்டு) நிலைபேறடையும் வாய்ப்பைப் பெற்றிருக்கும்.

மாறாக, முனைப்படைந்து வரும் வணிக மேலாண்மையை ஆதரிக்க மறுத்துள்ளது திருக்குறள். முன்னதாக, வரலாற்று மாற்றச் செல்நெறியை முன்னோக்கிப் பாய்ச்சல் அடையச் செய்யும் வண்ணம் மருதத் திணை மேலாதிக்கத்தின் வாயிலாக விவசாயச் சமூக சக்தி ஆட்சி அதிகாரத்தை ஏற்படுத்திக்கொண்ட (கி.மு 3 – கி.பி 1ஆம் நூற்றாண்டுகள்) அதிகாரம் செலுத்திய அளவு சமகாலத்தை அதற்கு முந்திய காலத்தில் வணிகச் சமூக சக்தி பெற்றிருந்தது. அந்தத் தொன்மைக் காலத்தில் (கிமு 7 – கிமு 3 ம் நூற்றாண்டுகள்) தமிழ் சமூகத்திலும் இலக்கிய – கருத்தியல் தளங்களிலும் வணிகச் சார்புச் சிந்தனை முறைமையே செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளது. கைத்தொழிலுற்பத்தி விருத்தி, வணிகச் செழிப்பு எனும் வாழ்வியல் வெளிப்பாட்டுக்கு ஏற்றதாக கி. மு 6ஆம் நூற்றாண்டில் வெளிப்பட்ட ஆசீவக மெய்யியலானது கிழார்களது மேலாதிக்கத்துக்குத் தமிழகம் ஆட்பட்டவாறு இருந்ததோடு நிலைபேறடைந்தும் வந்த வீரயுக உச்சக்கட்டங்களிலும் கூட ஆளுமையுடன் நீடித்து வந்த ஒன்று. ஐந்து திணைகளுக்குமான நிலக் கடவுளர்களைக் கிழார்களது மேலாதிக்கத்துக்கு அனுசரணையாகப் பேசுபொருளாக்கிய சமகாலத்திலும் கூட ஆசீவகப் பாடல்கள் வெளிப்பட்டு வந்துள்ளன என்பது அவதானத்துக்குரியது.

இரு தரப்பினரும் சமநிலையுடன் இருந்த காரணத்தாலே தான் திருக்குறள் எந்தத் தரப்புக்கும் சார்பற்றதாக இருந்தது என்றில்லை; எந்தவகை மேலாதிக்கங்களையும் ஏற்க மறுப்பதான ஆசீவகக் கருத்தியல் தளத்தில் படைக்கப்பட்டது திருக்குறள். அதன் பேறாக, மனித சமூகத்துக்கு அவசியமான அனைத்து அம்சங்களையும் சமநிலையுடன் வலியுறுத்தியதோடு ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனச் சமத்துவத்தைப் போற்றியது வள்ளுவம். அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு ஒழுகுவதை மட்டுமன்றி அறப்போதனைக்கு ஆட்பட்டு அடங்கி வாழ்வதனையும் கூடத் திருக்குறள் முதன்மைப்படுத்தவில்லை.

ஒவ்வொருவரும் சாகும் வரை கற்பது அவசியம் என்பதை வலியுறுத்தும் திருக்குறள், அறத்தின் வாயிலாக அன்றி கல்வியூடாகவே சமூக ஒழுங்குபடுத்தலை மேற்கொள்ள விழைந்து நின்றது. ‘கல்வி’ , ‘அறிவு’ எனும் இரு சொற்கள் ஒவ்வொன்றும் தலா (ஏறத்தாழ) நூறு தடவைகள் வரை இடம்பெற ‘அறம்’ மிகக் குறைந்த அளவிலேயே திருக்குறளில் கையாளப்பட்டு இருப்பது தற்செயலான ஒன்றல்ல. அதீதமான அறப் போதனை – அடங்கியொடுங்கும் பண்பாடு – அதிகாரக் கையாளுகை என்பவை அற்ற வகையில் கற்றோர் சமூகமாகவும் அனைத்துத் தரப்பாரும் சமத்துவத்துடன் வாழத்தக்கதுமான வாழ்வியல் நெறியையே வள்ளுவம் பேசுபொருளாகக் கொண்டிருந்தது.

முதன்மையாக அறநூல் பண்புடன் திருக்குறள் இல்லை என்பதனை பின்னதாக (தொடர்ந்த) அறநெறிக் காலத்தில் (கி.பி 2 – 6ஆம் நூற்றாண்டுகளில்) தோன்றிய படைப்புகளுடன் ஒப்பாய்வு செய்து கண்டறிய இயலும். இங்கு அதனை மேற்கொள்ள அவகாசம் இல்லை. வணிகத் திணை மேலாதிக்கம் நிலவிய அந்த அறநெறிக் கால வாழ்வியல் அம்சங்கள் கவனம்பெற அவசியமுள்ளது. மேலாதிக்கவாத நிராகரிப்புக்கு உரிய ஆசீவகம் முன்னிறுத்திய ‘ஊழ்’ என்பதனைக் ‘கன்மக் கோட்பாடு’ கபளீகரம் செய்வதற்கு வாய்ப்பாக அமைந்த வாழ்வியல் வேறுபாடுகளின் ஊடாக ஏற்பட்ட சமூகமாற்றப் பண்புக் கூறுகளைக் கண்டறிய முயல்வோம்.

ஊழ்வினை வந்துறுத்தூட்டும்

திருவள்ளுவர்

“ஊழிற் பெருவலி யாவுள” எனக் கேள்வி எழுப்புவதன் வாயிலாக ஊழின் ஆற்றல் நிகரற்றதென வள்ளுவம் வலியுறுத்துவதைப் போலவே அதற்கு ஓரிரு நூற்றாண்டுகள் கடந்த நிலையில் வெளிப்பட்ட சிலப்பதிகாரமும் அதனது படைப்பு நோக்கின் அடிப்படையான மூன்று குறிக்கோள்களில் ஒன்றாக “ஊழ்வினை வந்துறுத்தூட்டும்” என்பதனைச் சுட்டிக்காட்டி இருந்தது. சிலம்பு காட்டும் ஊழ்வினையை (கன்மக் கோட்பாட்டை) ஒத்ததே குறளின் ஊழ் என்பதான கருத்துப் பலரிடமும் நிலவி வருகிறது.

மணக்குடவர், பரிமேலழகர் உள்ளிட்ட பழைய உரையாசிரியர்கள் முதல் புதியவர்கள் வரை குறளின் “ஊழ்” அதிகாரம் பற்றிய முற்குறிப்பில் ‘முன்பு செய்த வினை’ என்பதாகவே எடுத்தாளுகின்றனர். “ஊழாவது முன்பு செய்த வினை பின்பு விளையும் முறை…” என்பதாக மணக்குடவர் தனது குறிப்பைத் தொடங்குவார். பரிமேலழகர் “அஃதாவது இருவினைப் பயன் செய்தவனையே சென்று அடைவதற்கு ஏதுவாகிய நியதி” எனக் கூறிய கையோடு “ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருட்கிளவி” என்பதை எடுத்துரைப்பார். அவரளவில் ‘வினை (கன்மம்)’ என்பதையும் சேர்த்துச் சொல்லி இருக்க வேண்டும் (ஒருபொருட்கிளவியாக அவர் காட்டியவை ஆசீவகச் சொற்களாக இருந்த போதிலும் உரைகள் வாயிலாக கன்மக் கோட்பாட்டையே பரிமேலழகர் பொருள் கொண்டார் என்பதனை அவதானிக்கலாம்).

ஊழ் அதிகாரத்தின் பத்துக் குறள்களில் எதுவும் ‘முன் வினைப்பயன்’ பற்றி எடுத்துரைக்கவில்லை (எழுதப்பட்ட உரைகள் பெரும்பாலும் அவ்வாறான புரிதலையே ஏற்படுத்தியுள்ளன). திருக்குறள் முழுமையிலும் (வேறெங்கும் கூட) வினை, செயல், கன்மம் எனும் மற்றொரு வகை ‘ஒருபொருட்கிளவிக்கு’ உரிய தொடர்ச்சி ஆன்மாக்களுக்கு இருப்பதாக காட்டப்படவில்லை. ‘செயல் (வினை)’ ஆன்மாவைப் பந்திப்பதில்லை என்பதே வள்ளுவர் கருத்து. ‘வினைக் (கன்மக்) கோட்பாட்டுக்கு’ உட்படாத ‘வினைசெயல் வகைகள்’ பற்றிப் பல்வேறு இடங்களில் திருக்குறள் பேசியுள்ளது. எவ்வளவுதான் கற்றாலும் அடிப்படையான அறிவுதான் நீடிப்பதாக உள்ளமைக்கும் கோடி கோடியாகச் செல்வம் சேர்த்த போதிலும் அனுபவிக்க வாய்ப்பதற்கும் அறிவிலியிடம் செல்வம் குவிந்துள்ள போது தெளிந்த அறிவினர் வறுமையில் தவிப்பதற்கும் ஏற்கனவே வகுக்கப்பட்ட ஊழின் நியதியே காரணம் என்பதே வள்ளுவக் கோட்பாடு. பிறப்பொன்றில் முன்வினைப் பயன் தாக்கம் விளைப்பதோடு இப்போதான செயல் (கன்மம், வினை) அடுத்த பிறவிக்குத் தொடரும் வண்ணம் அந்த ஆன்மாவைப் பந்திக்கும் என ஏனைய இந்திய மெய்யியல்கள் கூறுகையில், அவற்றை நிராகரித்து ‘ஒவ்வொரு ஆன்மாவுக்குமென ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ள ஊழ் தொடரும் பிறப்புகள் வாயிலாக அனுபவித்துத் தீர்க்கப்பட வேண்டியன – இடையிட்ட எந்தப் பிறப்பின் எத்தகைய செயலாலும் அதன்மீது எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்த இயலாது’ என வலியுறுத்தும் ஆசீவக நிலைப்பாட்டையே வள்ளுவம் வெளிப்படுத்துகிறது!

ஏற்றத்தாழ்வுச் சமூக நியதிகளை (ஆன்மா என்பதனையுங்கூட) நிராகரித்த உலகாயதர்களின் நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு எந்த ஒன்றும் விட்டுவைக்கப்படாததைப் போலவே ஆசீவக நூல்கள் எதுவும் இன்று கிடைப்பதில்லை. ஆன்மாவை உட்பொருளாக ஏற்பதில் சார்வாகரில் (உலகாயதரில்) இருந்து ஆசீவகம் வேறுபட்ட போதிலும் ஏனைய அம்சங்கள் பெரும்பாலானவற்றில் இருதரப்பும் ஒத்த குறிக்கோள்களையும் பொருள்முதல் வாத நோக்கையுமே உடையன. இரு தரப்பாரது கருத்துகள் செல்வாக்குடன் இருந்த காலத்தில் அவற்றுக்கு எதிராக ஏனைய (மேலாதிக்க வாத சக்திகளுக்கான சமயங்களது) படைப்புகள் நிராகரிப்பதற்கு என முன்வைத்த தர்க்கத்துக்கான தேவை சார்ந்து கையாண்ட மேற்கோள்கள் ஊடாகவே சார்வாகர்களதும் ஆசீவகர்களதும் அடிப்படைகள் சிலவற்றையேனும் இன்று அறிய இயலுமாக உள்ளது.

‘மணிமேகலை’ பௌத்த மதத்தை நிலைநிறுத்தும் பொருட்டு ஆசீவக அடிப்படைகள் பலவற்றை அதற்கே உரிய முறையில் முன்வைத்த பின்னர் அதனது எதிர்க்கருத்தாடலை வலியுறுத்தி உள்ளது. அறநெறிக்கால நடுக்கூறில், பௌத்தத்தின் தேவை வணிகச் சமூக சக்தியால் அதிகம் உணரப்பட்ட நிலையில் ஆசீவகத்தை அதற்கேயுரிய மெய்யான வடிவில் முன்வைக்க வேண்டி (அதற்கேற்ற வலுவுடன் அந்த மெய்யியல்) இருந்ததற்கும் அப்பால் மணிமேகலை ஆசிரியரான மதுரைக் கூலவாணிகர் சீத்தலைச் சாத்தனார் ஆசீவகத்தைப் பின்பற்றி வந்த தொழிற்துறை வம்சாவழியினர் என்ற வகையிலும் புதிய மாற்றத்தை உள்வாங்கிய நியாயப்பாட்டை முன்வைக்கும் கடப்பாட்டை இவ்வகையில் நிறைவேற்றினார்.

அதற்கு இரண்டொரு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் (கி.பி 6ஆம் நூற்றாண்டில்) ஆசீவகம் மிக வலுக்குன்றிய நிலையில், சமண நெறி ஆளும் திணைக்கான வலுவான கருத்தியலென வணிகச் சமூக சக்தியால் முழு அளவில் அங்கீகரிக்கப்பட்டு மேலாதிக்கத்தை நிலைநிறுத்திய காலத்தில் வெளிப்பட்ட ‘நீலகேசி’ இன்னொரு வகையில் ஆசீவகத்தை அறியத்தருகிறது. புதிய சில விடயங்களையும் அறியத்தந்த போதிலும் பல திரிபுபடுத்தல்கள் மேற்கொண்டவாறே நீலகேசி அவற்றைத் தந்துள்ளதாக ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டி உள்ளனர். இவை தொடர்பில் “இந்தியத் தத்துவக் களஞ்சியம்” எனும் சோ.ந. கந்தசாமி அவர்களது மூன்று தொகுதி நூல்கள் மிகுந்த கவனிப்புக்குரியன; இங்கு எமது அக்கறைக்குரியதாக உள்ள ‘ஆசீவகம்’ தனியொரு அத்தியாயமாக தொகுதி – 1 இல் பக்கம் 102-148 இல் விரிவாகப் பேசப்பட்டுள்ளமையைக் காணலாம்.

நிலம், நீர், தீ, காற்று எனும் நான்கு மூலப் பொருட்கள் ஏனைய அனைத்தினதும் ஆக்கங்களுக்கு அடிப்படையானவை எனக் கூறும் இந்திய மெய்யியல்கள் உள்ளன; ஐந்தாவதான ஒரு உள்பொருளாக ‘ஆகாயம்’ (வெளி) என்பதனை ஏற்பவை பற்றியும் அறிவோம். ஆகாயத்தை ஐந்தாவது உள்பொருளாக ஏற்க மறுக்கும் ஆசீவகம் ‘உயிர்’ ஐந்தாவது உள்பொருளென வலியுறுத்தும். நிலம், நீர், தீ, காற்று, உயிர் எனும் ஐந்து மூலப்பொருள்களது கலப்பு விகிதாசார வேறுபாடு பிரபஞ்சம் எங்கும் நிலவும் பல்வகைமைக்குக் காரணம்; ஏற்கனவே வகுக்கப்பட்ட ஊழை அனுபவித்துத் தீர்த்துவிட்ட உயிர் மீண்டும் பிறவா நிலையடையும். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் வானுறையும் தெய்வம் என்ற மேலுலகப் பேறினை எட்டுவர். தேவையின் நிமித்தம் அவதாரம் எடுக்கும் நியதி தெய்வத்துக்கு உள்ளது. அதேவேளை, அவற்றையும் உலகையும் ஏனைய உயிர்களையும் படைத்துக் காத்து இரட்சிக்கும் மேலான தனிக்கடவுள் நிலைக்கான ஆற்றலை ஆசீவகம் வலியுறுத்தவில்லை என்பது கவனிப்புக்குரியது.

எந்தவொன்றும் அதற்கான நியதிப்பிரகாரம் நிகழ்வன. நான்கு நியதிகளை ஆசீவகம் முன்வைக்கிறது: 1. ஆவது ஆம் (ஆகவேண்டியது ஆகும்), 2. ஆம் அங்கு ஆம் (ஆகவேண்டிய முறைப்படி ஆகும்), 3. ஆம் துணையும் ஆம் (‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்’), 4. ஆம் போழுது ஆம் (ஆகவேண்டிய வேளையில் ஆகும்).

இவற்றின் நிலைக்களமாக உள்ள பொருட்கள் நித்தியமானவை; ‘உள்ளது கெடாது, இல்லாதது தோன்றாது’ (‘பொருட்களை ஆக்கவோ அழிக்கவோ இயலாது’) என்பது பொருட்களின் சுபாவம். நூலுருண்டை ஒன்று இறுதிச் சுற்று நீங்கும் வரை உருண்டு தீர்க்க வேண்டியது அதற்கான நியதி என்றவாறு பிறப்பெடுத்தவர் ‘தாமரை இலைத் தண்ணீராக’ சம்பவங்களால் பாதிப்புறாது (பற்றற்றவராக) அனைத்தையும் அனுபவித்து வாழத்தக்க நெறிகளை ஆசீவகம் காட்டி நிற்கிறது.

பட்டினமும் பட்டணமும்

மேலான ஒரு கடவுளால் உயிர்கள் ஆட்டுவிக்கப்படுவதாக சமணமும் பௌத்தமும் கூட கருதுவதில்லை; வணிகரது வாழ்வியல் ‘உப்பு விற்கப் போனால் மழை பெய்வதாயும், பஞ்சு விற்கப் போனால் காற்றடிப்பதாயும்’ அமையும் கன்மப் பயன் மீது அந்த இரு மதங்களும் நம்பிக்கை வைத்துள்ளன. ‘போகூழ் எனில் எந்தச் செல்வமும் அழிந்துவிடும்’ என ஆசீவகமும் வலியுறுத்தும்; வேறுபாடு, மூத்த நெறியாகிய ஆசீவகம் முற்பிறவிக் கன்மத்துடன் அதனைத் தொடர்புபடுத்துவதில்லை என்பதில் உள்ளது. ஏனைய இரண்டு புதிய மதங்கள் செயல்களை முன் வினைப் பயனாகக் கருதுவதுடன் இப்போது மேற்கொள்ளப்படும் செயல்கள் அடுத்த பிறப்புகளுக்கும் தொடர்வதாகக் கன்மக் கோட்பாட்டை வடிவப்படுத்தி உள்ளன.

திணைகள் இடையே சமத்துவ ஊடாட்டத்தை வணிகர்கள் மேற்கொண்ட காலத்தில் ‘கிடைப்பதும் அழிப்பதும்’ எப்போதோ நிர்ணயிக்கப்பட்ட ஊழின் பிரகாரம் எனக் கருத இயலும் (சோதிடக் கணிப்பில் வல்லுநர்களாக ஆசீவகர்கள் திகழ்ந்தனர்). தமது வெற்றிக்காகப் பிறர் மீது மேலாண்மை செலுத்தவோ பிறரால் ஒடுக்கப்படவோ வாய்ப்பற்ற வாழ்நிலை அவர்களுக்கானது – மனிதச் செயலாலன்றி இயற்கை நியதிகளால் வாய்ப்பு வசதிகளைக் கண்டனுபவிப்பதான வாழ்வியல்; அதற்கு ஏற்புடையதாக ஆசீவக ஊழ் கோட்பாடு!

பிறர் மீது மேலாதிக்கம் புரிந்து, ஆட்சியாளரது அனுசரணையுடன் – மனிதச் செயலால் – வாய்ப்பு வசதிகளைப் பெருக்க இயலுமான போது ‘எப்பவோ முடிந்த முடிவாக’ மட்டுமன்றி மனித நடத்தைகளால் மாற்றங்கள் பலதும் சாத்தியம் என்ற (ஏற்றத்தாழ்வு வாழ்வியல் ஏற்பட்டுவிட்ட சமூகத்துக்கான) ‘கன்மக் கோட்பாடு’ மேலாதிக்கம் பெற வாய்ப்பாகியது அறநெறிக் காலத்துக்கான நியதி!

வணிகப் போக்குவரத்து மையங்களாக கொடுமணல், கீழடி போன்றன திகழ்ந்துள்ளன. தொல்பொருள் ஆய்வுகள் வாயிலாக பிற நாட்டு நாணயங்கள் கண்டறியப்பட்ட வகையில் கடல் கடந்த நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட வணிகச் செழிப்பைக் கண்டறிய இயலுமாயிற்று. கடற்கரைத் துறைமுக நகர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கன; தமிழ்நாட்டின் உள் பகுதிகளுடன் துறைமுக நகர்களை இணைக்கும் தரை வழிச்சாலைகளுடன் ஆற்றினூடாகப் பயணங்களும் வணிகர்களுக்குப் பயன்பட்டன. ஆற்றிலும் கடல் கடந்தும் வர்த்தக ஈடுபாட்டில் பயன்படும் சிறு ஓடங்கள் முதல் பெரும் கப்பல்கள் வரையான மரக்கலங்களுக்கான ஏராளமான சொற்கள் தமிழில் வழக்காறாக இருந்துள்ளன.

நாட்டினுள் அமைந்த நகர்கள் ‘பட்டணங்கள்’ எனப்பட்ட போது கடற்கரைத் துறைமுக நகர்கள் ‘பட்டினங்கள்’ எனப்படுகின்ற தமிழின் தனிச்சிறப்பான சொற்பிரயோகங்களும் கூட தூர தேசங்களுடனான வணிகத் தொடர்புக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும். பேரரசுகளுக்கான நிலப் பரப்புகள் ஒவ்வொன்றிலும் இத்தகைய இருவகை நகர்கள் முதன்மைப்பட்டு வந்துள்ளமை வரலாறு. சேர நாட்டின் கரூர் எனும் தலைநகருடன் முசிறித் துறைமுகப் பட்டினம், பாண்டியரது மதுரை – கொற்கை, சோழர்களின் உறையூர் – பூம்புகார் பட்டினம், (பின்னதாக எழுச்சி பெறும்) தொண்டை மண்டலத்தின் காஞ்சிபுரத் தலைநகரும் மாமல்லபுரமும் என பட்டணங்களும் பட்டினங்களும் வரலாற்றுச் சிறப்பு மையங்களாகத் திகழ்ந்தன.

பின்னரான இரண்டாம் சோழப் பேரரசு (கி.பி 9 – 13ஆம் நூற்றாண்டுகள்) முழுத் தமிழகத்தையும் ஒரு குடைக்கீழ் ஆட்சிப்படுத்தியதுடன் அதைக் கடந்து விரிந்த பரப்பில் அதனது ஆள்புல விரிவாக்கத்தைச் சாத்தியப்படுத்த இயலுமான வகையில் ‘சோழ நாடு சோறுடைத்து’ எனும் விவசாயப் பெருக்கத்தைப் பெற்றிருந்தது. ஆயினும், வீரயுகச் சகாப்தத்தின் முதல் பேரரசுக் காலத்தில் விவசாய எழுச்சி எட்டப்பட்டுத் திணை மேலாதிக்க ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்த நிலையிலும் காவிரிப்பூம்பட்டினத்தின் வாயிலாக மேற்கொள்ளும் வணிகத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் நிர்ப்பந்தம் ஏனைய இரு பேரரசுகளுக்கும் விதிக்கப்பட்டு இருந்ததைப் போலவே சோழப் பேரரசுக்கும் உரியதாக இருந்தது. வணிகச் சமூக சக்தியின் ஆளுமையைச் சிதைக்காமலே விவசாயத் திணை மேலாதிக்கத்தை வெற்றி கொண்ட பிரத்தியேக வரலாற்று வடிவம் அது.

விவசாயத் திணை மேலாதிக்கம் மிக அதிக உச்சநிலையில் இருந்த காலத்துக்குரியது பிந்திய சோழப் பேரரசு எழுச்சி; அப்போதும் வணிக நலனின் பொருட்டாக இலங்கை முதல் கடாரம் வரை கப்பல் படை நடத்தி ஆக்கிரமிப்பு யுத்தங்களை மேற்கொண்டிருந்தனர். அப்போது, விவசாயத் திணை மேலாதிக்கத்துக்கு முற்றிலும் கட்டுப்பட்டதான இயக்கம் வணிகத் திணைக்கானது (பல வணிகர்கள் விவசாயத் திணை மதங்களான சைவத்தையும் வைணவத்தையும் தழுவிவிட்ட பின்னர் மிகமிகக் குறைவானோரே வணிகத் திணைக்கான சமண, பௌத்த மதங்களுடன் தொடர்ந்தனர்).

பண்பாட்டு ஒருங்கிணைப்பு

அறநெறிக் காலத்தில் வணிகத் திணை மேலாதிக்கம் ஏற்பட்ட போது ஆட்சியாளரது கூடுதல் அக்கறை வர்த்தக நடவடிக்கைகளின்பால் இருந்த அதேவேளை விவசாய சக்தியின் மீது ஒடுக்குமுறைகள் திணிக்கப்பட்டதில்லை. விவசாயிகளது நலனில் போதிய அரசுக்கவனிப்பு இல்லாத காரணத்தால் பசி, பட்டினிக் கொடுமைகள் ஏற்பட்டமையை அக்காலப் படைப்புகள் வெளிப்படுத்தக் காணலாம்.

வீர யுகத்தில் (சங்க காலத்தில்) மேலாதிக்கத்தை வென்றெடுத்திருந்த மருதத் திணைக்கான (விவசாயச் சமூக சக்திக்கான) கடவுளர்களை முன்னிறுத்தும் இலக்கியம் மேலாண்மை பெற்று வந்த சூழலிலும் கூட சமத்துவக் கருத்தியலுடன் கூடிய வணிகச் சமூக சக்திக்கான (தோற்கடிக்கப்பட்ட திணைகளது வர்த்தகப் பரிவர்த்தனையை மேற்கொண்டோர் சார்பாக) ஆசீவகப் பாடல்கள் வெளிப்பட்டு வர இயலுமாக இருந்த வரலாற்றுப் பின்புலம் அதிக அழுத்தம் கொடுத்துக் கவனிக்கப்பட வேண்டிய அவசியம் உடையது. விவசாயச் சமூக சக்திக்கான மூன்று பேரரசுகளது ஆட்சியதிகாரம் தகர்க்கப்பட்டு வணிக நலன் பேணும் (புதிய மேலாதிக்கத் திணையாக வெளிப்பட்ட சமூக சக்தியின்) ஆட்சியதிகாரம் ஏற்பட்ட அறநெறிக் காலத்தில் அவர்களுக்கான பேரரசு ஏதும் எழுச்சி பெற அவசியம் இருக்கவில்லை; வணிகத் திணை மேலாதிக்கத்தைச் சாத்தியப்படுத்துவதற்கு சமண, பௌத்த மதங்களின் கருத்தியல்கள் பெற்ற வகிபாகம் பேரரசுக்கான பணியை முன்னெடுத்துள்ளது குறித்துப் பேசி வந்துள்ளோம் (அத்தகைய மேலாதிக்கவாதக் கருத்தியல் நோக்கிப் பரிணமிப்பைப் பெற இயலாமல் போன காரணத்தால் ஆசீவகம் வலுவிழக்க நேர்ந்ததையும் அலசியுள்ளோம்).

தமிழகத்தைப் ‘பண்பாட்டுப் பேரரசாக’ சமணம் ஒருமுகப்படுத்தியவாறினை ‘சிலப்பதிகாரம்’ மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. ஆசீவகம் முன்னிறுத்தும் ‘ஊழ்’ கோட்பாட்டைத் தன்வயப்படுத்தும் வகையில் சமணத்தின் வினைக் கோட்பாட்டு வடிவுக்குரிய உள்ளடக்க மாற்றத்துடன் ‘ஊழ்வினை’ என இரட்டைக் கிளவியாக்கிக்கொண்ட கருத்தியல் (சமணக் குறிக்கோள்) வெளிப்படும் வகையில் படைக்கப்பட்டதே சிலப்பதிகாரம். சோழமண்டலப் பூம்புகார் பட்டினத்தின் மிகப்பெரும் வணிகன் கோவலன்; முற்பிறப்புக்குரிய ‘ஊழ்வினைப்’ பயனால் சொத்துகள் அனைத்தையும் இழந்ததன் பின்னர் தனது மனைவி கண்ணகியுடன் புதிய வாழ்வைத் தொடங்கும் வேணவாவுடன் பாண்டிய அரசின் தலைநகரான மதுரையை அடைந்த நிலையில் தவறான தீர்ப்புக் காரணமாக மரண தண்டனைக்கு ஆளாகின்றான். நீதி தவறிய பாண்டிய மன்னன் குற்றமிழைத்ததன் பேரில் மதுரையைத் தீக்கிரை ஆக்கிய கண்ணகி சேர நாட்டினை அடைந்து, அங்கே சாந்தி பெற்றுக் கணவருடன் விண்ணுலகு அடைகிறாள். வணிகச் சமூக சக்தியின் (திணையின்) மேலாதிக்கத்துக்கான பேரரசு சாத்தியப்படாத நிலையில், பண்பாட்டு ஒருங்கிணைப்பில் தமிழகப் பேரரசுகள் மூன்றையும் இணைத்த படைப்பாக்கக் கதை நகர்வினூடாக ‘கருத்தியல் பேரரசு’ ஒன்றைச் சிலப்பதிகாரம் சாதித்துள்ளது.

கிழார்களை வரலாற்று அரங்கில் அறிமுகப்படுத்திய விவசாயச் சமூக சக்தியின் மேலாதிக்கமும் அதனை முறியடித்து வணிகச் சமூக சக்தி மேலாதிக்கத்தைப் பெற்றமையையும் இந்த முதல் பகுதியில் பேசுபொருளாக்கி இருந்தோம். இனி வரும் வரலாற்றுத் தொடர்ச்சி என்பது இந்த இரண்டு திணைகள் இடையே ஏற்பட்டவாறு அமையும் அதிகாரக் கைமாறுகைக்கான போராட்டங்கள் வாயிலாக முன்னேறி வந்தமையைத் தொடர்ந்து பார்க்க உள்ளோம்.

முன்னதாக (இதுவரை பேசுபொருளாக இருந்த அறநெறிக் காலம் வரையிலும் கூட) மிகுந்த தாக்கம் செலுத்திய ஆசீவகம் குறித்த கவனக்குவிப்பைக் கைவிடாது இருப்பது அவசியம் என்பதனை மீள வலியுறுத்த வேண்டி உள்ளது!

சமத்துவக் கருத்தியலுக்கான ஆசீவகப் படைப்பே திருக்குறள்; இந்தப் புரிதலுடன் திருக்குறளை மறுவாசிப்புக்கு உள்ளாக்கும் போது தமிழர் பண்பாட்டு உருவாக்கத் தொடக்கத்தின் வலுவான அடித்தளம் குறித்த பல தெளிவான கண்ணிகளைக் கண்டடைய இயலும்.

பாளி, பிராகிருதம், சமஸ்கிருதம் போன்றன ஏதாயினும் ஒரு மத சார்பான மொழியாக இருந்தன; அவை ‘பொது மொழி’ என்ற ஊடாட்டத்தை அதற்கு உரிய மதத்தை ஏற்ற தேசங்களில் பெற இயலுமாயிற்று. மேலாதிக்க நாட்டத்தை நிராகரித்த ஆசீவகத்தின் மொழியாக இருந்த தமிழின் வீச்சுக் காரணமாக சமணம் (பிராகிருதம்), பௌத்தம் (பாளி), பிராமண மதம் (சமஸ்கிருதம்) என்பன தத்தமது பரப்புரைகளைத் தமிழில் மேற்கொள்ளும் நிர்ப்பந்தம் இருந்தது. ஏதாயினுமொரு சமூக சக்தியின் மீதான ஆக்கிரமிப்பை மேற்கொள்ள இடந்தராத வகையில் ‘மதமல்லாத மதம்’ என இயங்கிய ஆசீவகப் பரப்புரையின் தளமாக இருந்த தமிழ் தன்னளவில் மத சார்பற்ற மொழியாகத் திகழ்ந்த (அதன் வெளிப்பாடாக உலகப் பொது நூலான திருக்குறளை வழங்க இயலுமான) அதேவேளை அன்றைய வரலாற்றுக் கட்ட ‘உலக மொழியாக’ இயலாத வரையறைக்கும் உள்ளானது!

இனி, விவசாயத் திணை மேலாதிக்கச் சமூக முறைமைக்கான “சாதிய வாழ்வியலை” இரண்டாம் பகுதியாகத் தொடர்ந்து பார்ப்போம்!

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8489 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)