Arts
15 நிமிட வாசிப்பு

இன்னொரு உலக ஒழுக்காறு: உலக நாடுகளின் இயக்கச் செல்நெறி

September 27, 2022 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம் மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

நுழைபுலம்

இதுவரை இருந்தவாறு தொடர இயலாத நெருக்கடியான கட்டம் இன்று ஏற்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் மக்களின் வாழ்வாதாரங்கள் தகர்க்கப்படும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றங்கள் பன்மடங்காக அதிகரித்தபடி உள்ளன.

இத்தகைய பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படைக் காரணி ரஷ்ய – உக்ரேன் போர் என்பதாக ஊடகப் பரப்புரைகள் அமைந்துள்ளன. அமெரிக்காவும், ஐரோப்பாவும், நேட்டோ வாயிலாக ரஷ்யா மீது தாக்குதலை மேற்கொள்வதற்காக உக்ரேனைத் தளமாகப் பயன்படுத்தும் எத்தனங்களில் முனைந்திருந்த சூழலில் தற்காப்பு யுத்தம் ஒன்றை  மேற்கொள்ளும் நிர்ப்பந்தம் ரஷ்யாவுக்கு ஏற்பட்டிருந்தது  எனும் கருத்தொன்றும் மிகச் சிறிய அளவில் ஊடகங்களில் வெளிப்பட்டு இருந்தபோதிலும் ‘ரஷ்யா ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்துள்ளது’ என்ற பிரசார முழக்கமே ஓங்கி ஒலித்தபடி உள்ளது.

இன்றைய உலக நெருக்கடிக்குள் ரஷ்யாவை மட்டுமன்றிச் சீனாவையும் சேர்த்தே குற்றம் சாட்டுவதையும் காண்கிறோம். ரஷ்ய – உக்ரேன் யுத்தத்துக்கு முன்னரே அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்திய அணி முன்னெடுத்த உலகப் பொருளாதாரச் செயலொழுங்குகள் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்து இருந்த சூழலில்,  கொரோனாப்பெருந்தொற்று ஏற்பட்டு தனது தலைமேல் பழியை ஏற்றுக்கொண்டது. அந்தக் கொரோனாவை உருவாக்கி பரப்பியது சீனாவே எனும் பிரசாரத்தை அமெரிக்கா மேற்கொண்ட போதிலும்,  விஞ்ஞானிகளும் உலக சுகாதார அமைப்பினரும் தொடர்ந்து அவ்வகையிலான அறிவீனமான பரப்புரைக்கு இடமளிக்காது முற்றுப்புள்ளி வைத்தனர்.

மீள இயலாத நெருக்கடிக்குள் ஏகாதிபத்தியப் பொருளாதார முன்னெடுப்புத் திணறுகின்றபோது, ரஷ்யாவும் சீனாவும் துரித முன்னேற்றத்தை எட்டுவது சார்ந்த அரசியல் யுத்தம் ஒன்று அரங்கேறி வருகின்றது. மேற்குலகின் வீழ்ச்சியும் கிழக்குலகு வீறுடன் மேலெழுந்து வருவதும் பற்றி ஆய்வுலகம் தனது கணிப்பை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான்’ என்ற ‘ஆண்ட பரம்பரை ஏகாதிபத்திய அணி’ தனது அதிகார இழப்பைத் தடுக்க வல்லமை பெற்றுள்ளதா? ஏகாதிபத்திய வரலாற்றியல் விதிப் பிரகாரம் அந்த அணி  வீழ்ச்சியடைந்து புதிய சக்தியாக ரஷ்ய – சீன அணி முதல் நிலையை எட்டுமாயின் பின்னராக ஏற்படும் உலக ஒழுங்கில் மாற்றம் ஏதும் சாத்தியமா?

இலங்கையின் எதிர்காலம்

உலகப் பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடு இலங்கையில் மிக அதிகமான அதிர்வினை ஏற்படுத்தி உள்ளது. கிணற்றுத் தவளையாக இருந்துகொண்டு இங்கே தான் மிக மோசம் எனப் பலர் நம்பும்  வகையில், ஊடகப் பரப்புரைகளும் அமைந்துள்ளன. ‘உணவுப் பணவீக்கத்தில் இலங்கை மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது’ என்பது இப்போது வீசப்படுகிற பிரசார வெடிகுண்டு!

ஆட்சியாளர்களது தவறான நடைமுறைகளால் பணவீக்கப் பிரச்சினையை இலங்கை முகங்கொண்டது மெய்; அதனைத் துரிதப்படுத்தும் வகையில் உல்லாசப்பயணிகள் வருகையைத் தடுப்பற்கு ஏற்ற பரப்புரைகளை மேற்குலக ஊடகங்கள் மேற்கொண்டன. அப்போது  வீண் செலவின் அடையாளமாகத் தாமரைக் கோபுரம் காட்டப்பட்டிருந்தது; சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்த பின்னர் ஒரே நாளில் கோடிக்கணக்கான பணம் உழைக்கும் தங்கக் கோபுரமாக அது  காட்டப்படுகிறது.

1970 கள்  வரை விடுதலை பெற்ற புதிய தேசங்களில் முதல் வரிசைக்குரிய நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த இலங்கை ‘மிகக் கேவலமாக கையேந்தும் முதல்நிலை நாடு’ எனத் தரந்தாழ்ந்து போக நேர்ந்தது எதனால்? முப்பது வருட உள்நாட்டு யுத்தத்தின் போது பெறப்பட்ட கடன்களே மிக அதிக அளவான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன எனப் பேசப்பட்டு வருகிற சூழலிலும் இனங்களிடையே நல்லிணக்கம் வளர இயலாதிருப்பது ஏன்?

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையின் ஒரு ரூபாய் இந்தியாவின் இரண்டு ரூபாய்களுக்கு சமனாக இருந்த நிலை மாறி இன்று எமது நான்கரை ரூபாய்களுக்கு இந்தியாவின் ஒரு ரூபாய் சமமாகி உள்ளது. அப்போது கல்வி, மருத்துவம், சுகாதாரம், உட்கட்டமைப்பு எனப் பல துறைகளிலும் இந்தியாவை விடவும் இலங்கை மேலான நிலையில் இருந்தது. மிக ஏழ்மை மிக்க நாடு என இலங்கை வேகமாகச் சரிந்துகொண்டிருக்கும் போது உலகின் விருத்தி பெற்ற பொருளாதார நாடு என்று இந்தியா முன்னேறிவருகிறது.

தனியே இலங்கையின் சொந்தத் தவறுகள் தான் வீழ்ச்சிக்குக் காரணமா? எம்மவர்களது தவறுகளுக்குக் காரணியாக அமைந்து எமது வீழ்ச்சிக்கு வெளியே இருந்து தூண்டுதல் வழங்கும் சக்தி ஏதும் இல்லையா? ‘சீனக் கடன் பொறிக்குள் சிக்கிதவிக்க நேர்ந்தமையே இலங்கை நெருக்கடிக்குக் காரணம்’ எனக் கூறி வந்த ஊடகங்கள் இப்போது ‘கடன் வழங்கி உதவும் நாடாக சீனாவை முந்தும் அளவில் இந்தியா அதிகளவு கடனைத் தந்து காப்பாற்றி உள்ளது’ எனக் கூறுவதன் மர்மம் என்ன? இலங்கைக்கு சீனாவை விடவும் ஐரோப்பா, அமெரிக்கா, சர்வதேச நாணய நிதியம் என்பனவே (அவற்றில் இறைமையை ஈடு வைக்கும் பணமுறிகளும் அடங்கும் வகையில்) வழங்கியுள்ளன என்ற உண்மையும் இதே ஊடகங்களில் வெளிப்படாமல் இல்லை.

 மூன்றாம் உலக யுத்தம்

முப்பது வருடங்கள் நீடித்த உள்நாட்டு யுத்தம் ஆளுமையுடன் திகழ்ந்த இலங்கையைச் சிதைத்திருந்தது. இந்தியாவின் அருகே இருந்த சின்னஞ் சிறிய தீவான இலங்கை ,இந்தியாவை விடவும் வளமும் ஆளுமையும் பெற்று விளங்க இயலுமானது எப்படி?

பிரித்தானிய ஏகாதிபத்தியம் இந்தியாவை ஒட்டச் சுரண்டிய அளவுக்கு இலங்கையில் இருந்து  பெரிய ஆதாயங்களைப் பெற்றதில்லை. இந்தியாவைக் கட்டுக்குள் வைத்து ஆள, ஏற்ற பின் தளமாக இலங்கை பயன்படுத்தப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்கூறில் விஞ்ஞான – தொழில் நுட்பக் கல்வி – இந்தியாவில் வழங்கத்தடை இருந்த போது இலங்கையில் அனுமதிக்கப்பட்டது; ‘மானிப்பாய் ஆங்கில – தமிழ்’ அகராதி உருவாக காரண – காரணியாக,  தமிழில் உடற்கூற்றியல், பௌதிக,  இரசாயன நூல்கள் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னரே இங்கு வெளிவந்தன.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியபோது இலங்கையும் விடுதலை பெற்றது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் அதன் பின்னரும் நவகாலனித்துவப் பிடிக்குள் இந்தியாவைக் கட்டுப்படுத்த ஏற்ற வகையில் இலங்கையில் விருத்திபெற்ற உட்கட்டமைப்பை உருவாக்கி இருந்தது.  1960  களில் கொழும்பைப் போல விருத்திபெற்று வளரும் ஆர்வத்தில், சிங்கப்பூர் இங்கு வந்து கற்றுச் சென்று, தன்னைக் கட்டமைத்துக் கொண்டது.

இலங்கையின் இந்த ஆளுமை சுதந்திர இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்த போதிலும் 1970 கள் வரை அணிசேராக்கொள்கையை இலங்கை உறுதியாகப் பின்பற்றித் தற்காத்துக்கொள்ள இயலுமாயிற்று.  1980 களில் திறந்த பொருளாதாரக் கொள்கை அனுமதிக்கப்பட்டு அமெரிக்கா கால்பதிக்க வாய்ப்பு வளர்ந்தபோது இலங்கையைக் கையாளும் இராஜதந்திரத்துக்குப் புதிய வடிவத்தை இந்தியா உருவாக்கிக்  கொண்டது. இனப்பிரச்சினை யுத்தமான போது, போராட்டசக்திக்கான பின்தளமாக இயங்க இடமளித்த இந்தியாவின் பூரண கட்டுப்பாட்டுக்குள் அடங்க இலங்கை இணங்கிய நிலையில் யுத்தத்தை முடித்து வைக்கவும் உதவியது.

 எழுபதாம் ஆண்டுகள் வரை இடதுசாரித்துவப் போராட்டங்கள் வாயிலாகப் பொதுவுடைமை அமைப்பை வென்றெடுக்கும் நாடாக வளரும் வாய்ப்புடன் இருந்த இலங்கையைத் தொடர்ந்தும் சுரண்டும் மேலாதிக்கத் தரப்புக்கானதாகப் பேண வேண்டுமாயின் அமெரிக்கப் பிடியை இங்கே ஏற்படுத்துவது அவசியமாயிருந்தது; அதனை எண்பதாம் ஆண்டுகளில் ஜே. ஆர். ஜெயவர்த்தனா மேற்கொண்ட போது இந்தியா (முதலாளித்துவச்) சோசலிசக் அக்கறையுடன் சோவியத் யூனியனின் நட்பு நாடாகவும், அமெரிக்க எதிர்ப்புணர்வுடையதாகவும் இருந்தது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நேரடிக் காலனித்துவ ஒடுக்குமுறை சாத்தியப்படவில்லை; சுதந்திரம் பெற்ற நாடுகளாக முன்னாள் காலனித்துவப் பிடிக்குள் இருந்த தேசங்கள் ’சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப்’ பின்பற்ற இயலுமாயிற்று. முதலாம் உலகயுத்த முடிவில் உருவான சோவியத் யூனியனுடன் இணைந்து சோசலிச முகாம் தோற்றம்பெற  ஏற்றதாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மக்கள் சீனம், வட கொரியா, வியட்னாம், கியூபா போன்றன கொம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆளுகைக்குள் வந்தன. தொடர்ந்தும் முதலாளித்துவத்தைப் பின்பற்றிய ஏனைய விடுதலை பெற்ற நாடுகள் ஏகாதிபத்திய – சோசலிச முகாம் எனும், இரண்டையும் சாராத அணிசேராக் கொள்கையைப் பின்பற்றிக் கலப்புப் பொருளாதாரப் பிரயோகத்தை முன்னெடுத்தன. ‘முதலாளித்துவச் சோசலிசமான’ அந்தக் கலப்புப் பொருளாதாரப் பிரயோகம் 1991 இல் சோவியத் யூனியனின் தகர்வுடன் காணாமலாகி, அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியத்துக்கு நாடுகளைத் திறந்துவிடும் உலகமயமாதல் யுகம் மேலெழுந்தது.

மூன்று தசாப்தங்களாக நீடிக்கும் அமெரிக்கத் தலைமையிலான ஒற்றை மைய உலக ஒழுங்கு நீடிக்குமா? பனிப்போரில் இருமுனைப்பட்டிருந்த சோவியத் – அமெரிக்க மோதலில் அணிசேராக் கொள்கையை முன்னிறுத்தியபடியே சோவியத் சார்புடன் இருந்ததைப் போல இன்றைய இந்தியா இல்லை. இன்று அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்திய அணியுடன் கூடுதல் ஒட்டுறவை இந்தியா கொண்டுள்ளது.

அதேவேளை முந்திய நடைமுறைகளின் நீட்சியாக ரஷ்ய – சீன அணியுடனும் பகை பாராட்டாத நடைமுறையை இந்தியா முன்னெடுக்கிறது. ரஷ்ய – உக்ரேன் போரை வலிந்து உருவாக்கிய அமெரிக்கா, கிழக்கில் சீனா வன்முறை வாயிலாகத் ‘தனது இறைமைக்கு உட்பட்ட பிரிக்கவியலாத பிரதேசம்’ எனக்கூறுகிற தைவானை இணைக்கும் யுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் பல வகை முயற்சிகளை முன்னெடுக்கிறது. ‘தைவான் மீது சீனா தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில் ரஷ்ய – உக்ரேன் போரில் வெளியே இருந்து உதவுவது போலவன்றி நேரடியாக  தைவானை ஆதரித்து அமெரிக்கா போர் புரியும்’ என ஜனாதிபதி பைடன் சூளுரைத்துள்ளார்.

ரஷ்யாவும், சீனாவுமே யுத்த சன்னதத்தோடு  இருப்பதான தோற்றத்தைக்காட்டி மூன்றாம் உலகயுத்தம் ஒன்றை அமெரிக்கா வலிந்து உருவாக்க முனைவது ஏன்? முதலிரு உலக யுத்தங்களிலும் ஆளுகை செலுத்திய ‘நட்பு நாடுகளான’ பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா என்பற்றிடம் இருந்து தமக்கான காலனித்துவ  நாடுகளைக் கைப்பற்ற ஏற்ற வகையில்  உலகை மறுபங்கீடு செய்யும் தேவை  புதிய சக்திகளாக வளர்ந்த ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் கூட்டணிக்கு இருந்தது.

இன்று நேரடிக் காலனித்துவம் இல்லாத சூழலில் இறைமை மிக்க, சுதந்திர நாடுகளுடன் ‘புதிய பொருளாதார சக்திகளாக’ வளரும் ரஷ்யாவும், சீனாவும் வணிகத்தை மேற்கொள்ளும் போது, அது ஆளும் மேலாதிக்க மேற்குலகுடன் கொள்ளும் வர்த்தக உறவைவிட ஆதாயம்மிக்கதாக வறிய நாடுகளுக்கு அமைகிறது; கடன்பொறி போன்ற பொய்யான பரப்புரைகளால் தடுக்க இயலாத நிலையில்   சீனாவையும் வலிந்து போரிட வைத்துப் பலவீனப்படுத்த இயலும் என அமெரிக்கா திட்டமிடுகிறது.

புதிய உலக ஒழுங்கு

மூன்றாம் உலகப் போர் ஒன்று ஏற்படாமல் தவிர்க்கப்பட்டாலும் இரு அணிகள் இடையே நிகழும் சமநிலை மாற்றத்துக்கான அரசியல் போர் தனக்குரிய ஒரு மாற்றத்தை எட்டியாக வேண்டும். இரண்டாம் நிலைக்குக் கீழிறங்க விருப்பமற்று அமெரிக்கா முன்னெடுக்கும் எத்தகைய முயற்சிகளையும் முறிபடித்தபடி சீனா  தனது பொருளாதார நிலை துரிதகதியில் வளரும் வகையில் ‘சந்தை சோசலிச’ பொருளாதாரக் கொள்கையுடன்  முன்னேறி வருகிறது. ரஷ்யாவுக்கான கனிமவள வாய்ப்புகளுடன் அதற்கேயுரிய அரசியல் படைக்கல ஆற்றல்களும் அதன் துரித வளர்ச்சியை உத்தரவாதப்படுத்தியபடி உள்ளன.

இந்தியா இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பிரயோகித்து வளர்த்துவந்த மேலாதிக்கநிலை, அரசியல் செயலொழுங்குடன் இயங்குவதனால் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ பேணும் பண்பில் மோதுகின்ற இரு தரப்பாருடனும்  ஊடாடிய வண்ணம் தனது வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தனது பக்கத்தில் உறுதியாக இருப்புக்கொள்ள அமெரிக்கா மென்மையான அழுத்தங்களைக் கொடுத்த போதிலும் ரஷ்யாவுடன் மட்டுமன்றிச் சீனாவுடனும் ஏற்புடைய உறவுகளை இந்தியா பேணிவருகிறது.

இருப்பினும் உலக யுத்தமாக வெடித்தால் ஏதோவொரு தரப்பை இந்தியா சாரவேண்டும் அல்லவா? நட்பு நாடுகளின் அணியில் அமெரிக்கா இருந்த அதேவேளை இரண்டு உலக யுத்தங்களிலும் தனது சக்தியை இழக்கும் வகையில் அது ஈடுபடவில்லை. ஜப்பான் வலிந்து தாக்கியதைச் சாட்டாக்கிக் கொண்டு  அதன் மீது வீசப்பட்ட அணுகுண்டை  பரீட்சார்த்தமாக வீசியன் மூலம், முதல் நிலைக்கு அமெரிக்கா வளர இயலுமாக இருந்தது. இதற்கு  ஏனைய நாடுகள்  யுத்தத்தில் தம்மைப் பலவீனப்படுத்தியமையும் வாய்ப்பாக அமைந்தது.

 இன்றைய நிலையில் ஆளும்  ஏகாதிபத்திய அணியுடன் சார்ந்திருக்கும் அரசியல் தேவை இந்தியாவுக்கு உள்ள போதிலும் ரஷ்ய – சீன அணியை அனுசரித்துப்பெறும் வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்கிறது. சந்தைச் சோசலிசம் என்ற புதிய கோட்பாட்டு நிலையுடன் எதிர்காலத்தில் சீனபொதுவுடைமை நோக்கி உலகை மாற்றிவிடும் அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தால் இந்தியாவின் இந்தச் ‘சந்தர்ப்பவாத’ நடைமுறை பற்றி அலட்டிக்கொள்ளாமல், அதனை ஆதரித்து வளர இடங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆளும் ஏகாதிபத்திய அணிக்கு உள்ளது.

உலகச் சமநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் வாயிலாக அமெரிக்கத் தலைமையிலான மேற்குல ஏகாதிபத்தியம் இதுவரை பெற்றிருந்த ஒற்றை மைய மேலாதிக்கம் அற்றுப் போவதற்கு வாய்ப்புள்ளது. எழுச்சிபெறும் இந்தியா, சீனா, ரஷ்யா எனும் கிழக்குலகு மீண்டும் வேறொரு ஒற்றை மைய ஏகாதிபத்திய உலக ஒழுங்கை ஏற்படுத்தவும்  வாய்ப்புண்டு.  ஏற்கனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதல் நிலைப் பொருளாதார ஆதிக்கம், இராணுவ வல்லமை, விஞ்ஞான – தொழில் நுட்ப மேலாண்மை என்பவற்றுடன் ’கார்ப்பிரேட்’ மூலதனக் கட்டுப்பாட்டில் இயக்கிய ஊடகப் பரப்புரை வாய்ப்புகளே அமெரிக்க மேலாதிக்கத்தின் ஒற்றை மைய ஆளுகையைச் சாத்தியப்படுத்தியது. அதன்போதே பிராந்திய நாடுகளது அமைப்புக்களும் BRICS போன்ற பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா என்பன இணைந்து உருவாக்கிய கூட்டுறவுகளும் ஒற்றை மையத்தைக் கேள்விக்கு உட்படுத்தும் ஆளுமையுடன் வளர்ந்து வந்தன.

கிழக்குலக நாடுகள் (குறிப்பாக இந்தியாவும் சீனாவும்) வர்க்கப் பிளவுறாமல் முழுச் சமூக சக்திகளாக (திணைகளாக) மேலாதிக்கம் பெற்றுச் சாதி வடிவில் இயங்கி வந்தவை. வர்க்கங்களில் ஆதிக்க வர்க்கத்தை அழித்தொழித்து புதிய சமூக அமைப்பாக்கம் ஏற்படுவதைப் போலன்றி, மேலாதிக்கத் திணையின் அதிகாரம் கைமாற்றப்படும்போது அதனை அழித்தொழித்துப் புதிய அமைப்பாக்கம் ஏற்படுவதில்லை – வீழ்த்தப்படும் மேலாதிக்கத் திணையினுள் முரண்படும் தரப்பையும் ஐக்கியப்படுத்தி அதிகாரம் பெறும் புதிய திணை மேலாதிக்கம், பழையதை வென்றடக்கித் தனக்குக் கீழ்ப்பட்டதாக வாழ அனுமதிக்கும். இந்த மேலாதிக்கத் திணை அரசியல் அனுபவத்துடன் இந்திய அரசு இயங்குவதனாலேயே இரு அணிகளுடனான ‘வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணும்’ அணுகுமுறையைக் கையாள இயலுமாக உள்ளது.

விடுதலைத் திணை அரசியல்

இந்தியாவில் மேலாதிக்கத் திணை அரசியல் செல்நெறியே உள்ளது.  இலங்கையுடன் முரண்பாட்டை கையாள்வதில் தனக்கான மேலாண்மையை முன்னிறுத்தியே அது இயங்குகிறது. முப்பது வருட யுத்தத்தின் பெறுபேறைத் தனக்குச் சாதகமாக்கி இரு ஒப்பந்தங்களை (1987, 2010) செய்து கொண்டது. இலங்கை தனக்கான இறைமையின் பெரும்பகுதியை அந்த ஒப்பந்தங்கள் வாயிலாகத் தாரை வார்த்துவிட்டதை மறந்து, பூரண இறைமையுள்ள நாடாக எண்ணி இயங்க முற்படுகிறபோது பல்வேறு வழிமுறைகள் மூலம் தலையீடு செய்து வழிக்குக்கொண்டு வரும் கைங்கரியங்களை இந்தியா மேற்கொள்கிறது; இலங்கையில் ஒழுங்கான நிர்வாகச் செயற்பாடு சாத்தியமில்லை என   மக்களுக்கு உணர்த்தும் காரியங்களை இந்தியா இன்று கனகச்சிதமாக முன்னெடுத்து வருகிறது. இதன் வாயிலாக எமது இறைமையில் தனக்குரித்தானதாக  பங்கெடுத்துக் கொண்டதைப் போல சுதந்திரத்திலும் பகுதிப் பங்கீட்டை இந்தியா  கோருகின்றது.

இதற்கு மாறாக மக்கள் சீனம்,  வளர்ந்த நாடு, பெரிய நாடு, பின்தங்கிய நாடு, சிறிய நாடு என்ற வேறுபாடு காட்டாமல் அனைத்துடனும் சமத்துவமான உறவுக்குரிய பஞ்சசீலக் கோட்பாட்டைப் பின்பற்றுகிறது. தேசிய விடுதலை வாயிலாகச் சோசலிசத்தைக் கட்டமைக்கும் மா ஓ சேதுங்  அவர்களின் சிந்தனையை இன்றைய விருத்தியடைந்த சோசலிச முறைக்கு  பிரயோகிக்கும் சீனப் பிரயோகம், முன்னதாகப்  பேசப்பட்டு வந்த மார்க்சியத்துக்குப் புதியது. பாட்டாளி வர்க்க சோசலிச நிர்மாணத்தில் இருந்து விடுதலைத் தேசிய  சோசலிச விருத்தி வேறுபட்டுள்ளதை நடைமுறை  மூலம் புரிந்து கொண்டு சந்தைச் சோசலிசம் எனும் கோட்பாட்டை சீனக் கொம்யூனிஸ்ட் கட்சி முன்னிறுத்துகிறது.

தேசம் என்ற முழுச் சமூக சக்தி (திணை) ஏற்படுத்தும் சமூக மாற்றம் ஐரோப்பிய வர்க்க சமூகத்துக்கு உரியதினின்றும் வேறுபட்டதாகும். இவ்வகைக்குரியதான திணை அரசியல் செல்நெறி வடிவத்தை சாதியம் கட்டமைக்கப்பட்ட  வட இந்தியா வெளிப்படுத்தியிருக்கவில்லை. திணைக்கோட்பாட்டை வகுத்து வரலாற்றுத் தொடக்கத்தை ஏற்படுத்திய தமிழகத்திலும் பின்னர் இயங்கிய சாதி வாழ்முறையில் திணை அரசியல் எவ்வகையில் இயங்கி வந்துள்ளது எனும் புரிதல் இல்லை.

 திணை அரசியல் வடிவில் விளக்கம் பெறப்படாத போலும், தமிழக வரலாறு மேலாதிக்கத் திணைகளிடையேயான மோதல்கள் வாயிலாக இயக்கம் பெற்று வந்த சமூக மாற்றச் செல்நெறியைத் துலக்கமுற எடுத்துக்காட்டி வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒக்டோபர் 21 (1966) எழுச்சி மார்க்கம், விடுதலைத் திணை அரசியல் மார்க்கத்தை வடிவப்படுத்த உதவியுள்ளது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8879 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (13)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)