Arts
18 நிமிட வாசிப்பு

கிழார்களின் வம்ப வேந்தர்

January 16, 2023 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம் மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

தமிழர் வரலாற்றுத் தொடக்கத்தை ‘சங்க கால இலக்கியத் தொகுப்புகளின்’ அடிப்படையில் வைத்து ஆய்வுக்குட்படுத்தும் மரபு இருந்து வந்தது; கல்வெட்டுப் படிகள், பண்டைக்கால நாணயங்கள், அதுவரை கண்டறியப்பட்ட தொல்பொருட் சின்னங்கள் ஆகியன அதற்கு உதவியாக அமைந்திருந்தன. இலக்கியங்கள் வெளிப்படுத்திய பண்டைக்கால நகரங்கள் எனப் பேசப்படுவன புலவர்களது கற்பனைகள் என கருதப்படும் நிலை இருந்தது. விஞ்ஞானபூர்வமற்ற அதீதப் புனைவுகளைத் தமிழ் ஆர்வலர்கள் ‘வரலாற்று’ முன்வைப்புகளாக வெளிப்படுத்திய நிலையில் அன்றைய நகரங்களும் அத்தகையன என வரலாற்று ஆய்வாளர்களால் புறக்கணிக்கப்படலாயின.

சேரர், பாண்டியர், சோழர் எனும் முடிவேந்தர்கள்

அந்தவகையில் கி. மு. 3ஆம் நூற்றாண்டில் எழுச்சியுற்ற சேரர், பாண்டியர், சோழர் எனும் முடிவேந்தர்கள் மூவரது பேரரசு எழுச்சிகளுடனேயே தமிழர் வரலாற்றுத் தொடக்கம் ஏற்பட்டதான ஆய்வு முடிவுகள் நிலைபேறுடையனவாக நிலவிவந்தன. மூவேந்தர் எழுச்சியுடன் பேரரசுகள் தோன்றுவதில் வாய்மொழி இலக்கியத்தின் பங்குப் பாத்திரம் குறித்த பேராசிரியர் க. கைலாசபதியின் ‘வீரயுகப் பாடல்கள்’ என்ற முனைவர் பட்ட ஆய்வேடு பெரும் தாக்கத்தை விளைவித்தது. மூவேந்தர்கள் பற்றி அசோகனின் கல்வெட்டுகள் குறிப்பிட்ட நிலையில் இங்கு கண்டறியப்பட்ட எழுத்துகளும் அசோகச் சக்கரவர்த்திக்குப் பின்னரானது என்ற கருத்தும் வலுத்திருந்தது. மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அசோகனுக்கு முந்திய ‘தமிழி எழுத்துகள்’ தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் கிடைத்த பல்வேறு கல்வெட்டுகள் வாயிலாக கண்டறியப்பட்ட பின்னர் புதிய சிந்தனைகள் எழுந்தன.

கல்வெட்டுகளுக்கு அப்பால் பானையோடுகளில் தமிழ்ப் பிராமி எழுத்துகள் கண்டறியப்பட்ட போது வரலாற்றுத் தொடக்கம் பற்றிய மறுவாசிப்புகள் அவசியப்பட்டன. கைத்தொழில் விருத்திப் பொருட்கள் உட்பட கி.மு. 6ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழி எழுத்தில் பானையோடுகளைத் தமிழர் சமூகம் கொண்டிருந்தமையைக் கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் வெளிப்படுத்தியதனை பேராசிரியர் க. ராசன் பேசுபொருளாக்கி இருந்தார். கி.மு. 3ஆம் நூற்றாண்டின் மூவேந்தர் எழுச்சிக்கான மருதத் திணை மேலாதிக்கத்துக்கு முன்னரே மூன்று நூற்றாண்டுகள் நீடித்து வளர்ந்ததாக முல்லைத் திணையில் அரசுகள் ஏற்பட்டு நிலவிவந்தன என்பதை ராசன் எடுத்துக்காட்டினார் (குறிஞ்சியிலும் நெய்தலிலும் அத்தகைய அரசுகள் தோன்றியிருந்தன). அப்போது பல நூறு சிற்றரசுகளாக வேளிர்கள் ஆட்சி நிலவிவந்தமையை ர. பூங்குன்றன் வெளிப்படுத்தினார். வாய்மொழி இலக்கியத்துடன் வரலாற்றுத் தொடக்கம் என்ற கருத்துக்கு மாற்றாக, மூன்று பேரரசுகளின் எழுச்சிக்கு முன்னரே எழுத்துப் பயன்பாடும் வணிக விருத்தியும் நிலவின என்பதனைக் கவனத்தில் கொள்ளும் அவசியத்தை அவர்கள் இருவரும் வலியுறுத்தினர்.

ஐந்திணை வகைகள்

வாய்மொழி இலக்கிய எழுச்சி வாயிலாக வரலாற்றுத் தொடக்கம் – முன்னரே புழக்கத்தில் இருந்த எழுத்துப் பயன்பாடு என்ற இரு முனை விவகாரங்களுக்கு உரிய முரண் பற்றிய தெளிவை எட்டும் போது தமிழர் தனித்துவத்துக்கான அடிப்படையை விளங்கிக்கொள்வோம்; மட்டுமல்லாமல் உலக மனிதகுல வரலாற்று இயங்குமுறையின் மற்றொரு செல்நெறி குறித்த புரிதலையும் வந்தடைவோம். மறுக்கவியலாத தொல்லியல் சான்றாக கி. மு. 7ஆம் நூற்றாண்டு முதல் தமிழி எழுத்தாக்கம் உருவாகத் தொடங்கி விருத்திபெற்று வந்ததனை வைத்து ’வீரயுக இலக்கியம்’ வாய்மொழிப் பண்புடையது என்ற கருத்தாக்கத்தை மறுப்பவர்களது வாதம் வலுப்படுவதாக எண்ணுகிறவர்களும் உள்ளனர்.

மூவேந்தர்களுக்கு முந்திய வேளிர்களது அரசு எத்தகையது? நீடித்த வேளிர் ஆட்சியைக் கொண்டிருக்க ஏற்றவாறு தமிழர் சமூக உருவாக்கம் ஏற்பட இயலுமான காரணிகள் எவை? முன்னதாகப் பயன்பாட்டில் புழங்கிய எழுத்தறிவு மூவேந்தர்களது பேரரசு உருவாக்க எழுச்சிக்கு உதவவில்லையா? முந்திய சமூக முறைமைக்கு வேறுபட்ட எத்தகைய தொடக்கங்களை மூவேந்தர்களது பேரரசுக் கட்டமைப்பு ஏற்படுத்தியது? அன்றைய கால மக்களது வாழ்வியலிலும் சிந்தனை முறைமையிலும் எவ்வகைப்பட்ட பண்பு மாற்றங்கள் ஏற்பட்டன? இவை குறித்த தொடர் தேடல் அவசியம்!

தமிழர் சமூக உருவாக்கம்

கொடுமணல்-அகழாய்வின்போது

கொடுமணலில் கிடைத்த பொருட்கள் கி.மு. 7ஆம் நூற்றாண்டு முதல் வீறுடன் தமிழக வரலாற்று எழுச்சி ஏறுதிசையில் வேகமாக இயங்கி வந்தமையைக் காட்டியிருந்த போதிலும் அவற்றுக்குத் தளமாக அமையத்தக்க கட்டுமானங்கள் போதியளவில் கண்டறியப்படவில்லை. வைகைக் கரை நகரப் பண்பாட்டை வெளிப்படுத்திய கீழடி அகழ்வாய்வுகள் பலவகைத் தெளிவுகளை வந்தடைய உதவின. கி.மு. 7ஆம் நூற்றாண்டு எழுச்சியுறத் தொடங்கிய நகரக் கட்டுமானமும் எழுத்துருவாக்கமும் ஒரு நூற்றாண்டின் பின்னர் செழுமையுடன் விருத்திபெற்று அமைந்தமையைக் கீழடியில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களும் அங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களும் எடுத்துக் காட்டுகின்றன. நுட்பத்திறன் மிக்க கைத்தொழிற்பேட்டைக்கு உரிய கட்டுமானங்கள், நீர் முகாமைத்துவம், கழிவு நீரை வெளியேற்றும் வடிகாலமைப்பு உட்பட்ட விருத்திகளுடன் காணப்பட்டுள்ளன. மணிக்கற்களைச் செப்பனிட்டு மிகமிக நுண்ணிய துளைகளை ஏற்படுத்தி மாலைகளாகத் தொடுப்பதன் வாயிலாக உருவாக்கப்படும் அழகுசாதன உற்பத்திச் சாதனங்களாக ஆக்கும் கற்கள் உள்நாட்டில் இருந்து மட்டுமன்றி ஆப்கானிஸ்தானின் நீலமணிக்கல் போன்றன கொண்டுவரப்பட்டு செய்பொருட்களாக மாற்றப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளன.

தொழிற்திறனுடன் செழிப்பான வணிகத்தை மேற்கொள்ள ஏற்ற கணித்தல் திறன்மிக்கோரும் காணப்பட்டுள்ளனர்; கூடவே தமக்கான பதிவுகளை ஏற்படுத்திப் பாதுகாக்கும் வல்லமையைப் பலரும் பெற்று இருக்கவல்லதான சமூக நிலைப்பட்ட (பரவலான) எழுத்தறிவு கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்தே நிலவி வந்துள்ளமையைப் பானையோடுகளில் காணப்படும் எழுத்துப் பதிவுகள் காட்டுகின்றன. இத்தகைய கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள் தூரதேசங்களுக்கு வணிகப் பண்டங்களாக கொண்டு செல்லப்பட்டன. அவற்றின் எச்சங்கள் பல்வேறு நாடுகளில் கிடைக்கப்பெற்றுள்ளமையும் அத்தகைய நாடுகளின் பொருட்களுடன் காசுகளையும் தமிழகம் எங்கும் கண்டறிந்ததில் இருந்தும் அன்றைய வணிக விருத்தி எத்தகைய செழிப்புடன் திகழ்ந்துள்ளது என்பதை விளங்கிக்கொள்ள இயலுமாகிறது.

கொடுமணலில்-கண்டுபிடிக்கப்பட்ட-வரலாற்று-சிறப்பு-மிக்க-பொருட்கள்-1
கொடுமணல்-அகழாய்வின்போது-1

இத்தகைய வணிக விருத்தி எட்டப்பட்ட வகையில் முன்னதாக விவசாய எழுச்சி ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற எடுகோளுடன் கருத்துரைக்கும் – தேடலில் ஈடுபடும் – நிலையைக் காண்கிறோம். அதற்கு ஓரிரு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே ஆதிச்ச நல்லூரின் புதைகுழிகளில் கண்டறியப்பட்ட ஈமத் தாழிகளினுள் நெல்மணிகள் இருந்தமையை வைத்து விவசாய விருத்தி தமிழகத்தில் அப்போதிருந்தே நிலவிவந்ததாகக் கருதுவோருளர். கண்டறியப்பட்ட அந்த ஈமத்தாழிகளின் DNA பரிசோதனைகள் பல்வேறு நாட்டவர்கள் அங்கே புதைக்கப்பட்டு இருந்தமையை எடுத்துக்காட்டியுள்ளன. தமிழகத்துக்கு உரிய ஈமத் தாழிகள் அவற்றிடையே மிகமிகக் குறைவாகவே உள்ளன என்பதும் வேறு தேசத்தவரது ஈமத் தாழிகளினுள் நெல்மணிகள் கண்டறியப்பட்டமையும் எதனை உணர்த்துகின்றன?

கி.மு. ஆயிரமாம் ஆண்டில் இரும்புப் பயன்பாடு பரவலானதுடன் தமிழகத்திலேயே வலுவான உருக்கு உற்பத்தி சாத்தியப்பட்டதன் விளைவாகத் தான் தமிழகத்தின் எழுச்சி வீறுகொள்ளத் தொடங்கியது. பின்னரான நாலைந்து நூற்றாண்டுகளில் ஏற்பட்டு வந்த விருத்தியையே கொடுமணல், கீழடி, சிவகளை போன்ற பல்வேறு இடங்களிலான தொல்லியல் சின்னங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஓரிரு ஆயிரம் வருடங்களுக்கு முந்திய தொல்பொருட் சின்னங்கள் ஏனைய நாடுகளில் இருந்து தமிழகம் நோக்கி வருகை தந்த வணிகத் தொடர்புடனான வாழ்வியலையே அதிகம் எடுத்துக்காட்டுவன.

சிவகளை-அகழாய்வில்-கண்டுபிடிக்கப்பட்ட-16-முதுமக்கள்-தாழிகள்

இந்த அம்சம் மிகுந்த கவனிப்புக்கு உரியது. இரண்டு பிரதான விடயங்கள் இவற்றில் அடங்கி உள்ளமையை அவதானிக்கலாம். ஒன்று, தமிழக மக்களது சமூக உருவாக்கம் குறித்தது; மற்றையது, விவசாய எழுச்சிக்கு முன்னரே வணிக – கைத்தொழில் விருத்தி சாத்தியப்பட்ட காரணிகளை விளக்கவல்லது. முன்னதாக வாழ்வியல்-பண்பாட்டு விருத்திகளை எட்டிய சுமேரியா முதல் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுச்சியுற்ற மொசபெத்தேமியா, சிந்துவெளிப் பண்பாட்டினர் வரையானோர் தமிழகத்தில் குடியேறிக் கலப்படைந்து ‘தமிழ் மக்கள்’ என உருப்பெற்றமையை இன்றைய DNA ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. சுமேரிய – தமிழக வாழ்வியல் தொடர்புகளை க. தங்கவேல் தெளிவுபடுத்தி உள்ளார் (ஏற்கனவே பேராசிரியர் சதாசிவம் இன்றைய சிவா தியாகராஜா வரையான பலரும் இது தொடர்பில் தத்தமது ஆய்வுக் கருத்துகளை வெளிப்படுத்திய போதிலும் தங்கவேல் விரிவான தளங்களில் இதனை விளக்குகிறார்). சிந்துவெளிப் பண்பாட்டின் வீழ்ச்சிக்குப் பின்னர் புலச்சிதறலுக்கு உள்ளாகிப் பல்வேறு இடங்களுக்கு பரந்துபட்டுச் சென்றவர்களில் கணிசமானோர் தமிழகம் நோக்கி வந்தனர்; வேறிடங்களில் உள்ளதைக் காட்டிலும் இங்கே சிந்துவெளியின் ஊர்ப் பெயர்கள் அதிகம் காணப்படுவதுடன் சிந்துவெளிப் பண்பாட்டின் வாழ்க்கைக் கோலங்களையும் சிந்தனைத் தொடர்ச்சிகளையும் தமிழகமே அதிகம் வெளிப்படுத்தி உள்ளது. இந்த அம்சங்களை ஆர். பாலகிருஷ்ணன் ‘சிந்துவெளி விட்ட இடமும் சங்க காலம் தொட்ட இடமும்’ என்பதாக விரிவாகப் பேசிவருவதுடன் அது தொடர்பிலான ஆய்வு நூல்களையும் வெளிப்படுத்தி உள்ளார்.

வேளிர்களின் ‘அரசு’

தமிழர் சமூகத்தில் சுமேரியத் தொடர்பை (அதனது தாக்குறவை) அழுத்தி வலியுறுத்தும் தங்கவேல், சிந்துவெளியின் தொடர்ச்சி இங்கு காணப்படுவதனை அதிகம் கவனங்கொள்ளாது விடுகிறார்; சிந்துவெளிக்கு உரியதாக மட்டுமன்றி சுமேரிய – மொசபொத்தேமிய ஊர்ப் பெயர்களும் தமிழகத்தில் காணப்படுவதனை பாலகிருஷ்ணன் எடுத்துக்காட்டிய போதிலும் சுமேரியத் தாக்குறவின் வலுமையைப் போதியளவு கவனங்கொள்ளத் தவறுகிறார். இன்றைய DNA ஆய்வுகள் முப்பத்தையாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய ஆபிரிக்க, எட்டாயிரம் வருடங்களுக்கு முந்திய சுமேரிய, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மொசபெத்தேமிய-சிந்துவெளி மக்கள் வந்து குடியேறிக் கலப்புற்று உருவானதே தமிழ் மொழியும் தமிழ் சமூக உருவாக்கமும் என்பதனை எடுத்துக்காட்டி உள்ளன. உலகின் ‘மூத்த மொழி தமிழ்’ எனச் சொல்லக்கூடியதாக இருப்பதற்கான அடிப்படை பூர்வத் தொட்டிலான ஆபிரிக்கா – வாழ்வியல் விருத்தியுடன் பண்பாட்டு எழுச்சியை முன்னதாக வந்தடைந்த சுமேரியா என்பவற்றின் மொழிக் கூறுகளை உள்வாங்கித் தமிழக மண்ணில் தொடர்ந்த வாழ்க்கைக்கோல மாற்றங்களினூடாக அடிப்படை மொழிக் கூறுகளைத் தற்காத்தவாறே புதிய வளர்ச்சிகளை எட்டத்தக்க பரிணமிப்புகளை வந்தடைய இயலுமாக உள்ளதில் அடங்கி உள்ளது.

பண்பாட்டு விருத்திபெற்ற சுமேரியா முதல் சிந்துவெளியினர் வரை பல்வேறு காரணங்களால் புலப்பெயர்வடைந்து குடியேறும் இடமாகத் தமிழகம் நோக்கி வருவதற்கு ஏற்ற புவியியல் அமைவு இருந்ததைப் போலவே அந்த இடங்களில் இருந்து வர்த்தகத்தின் பொருட்டு இங்கு வந்து பொருட்களைப் பெற்றுத் திரும்புகிற வணிகக் குழாத்தினரும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரிருந்தே தனிவகை வாழ்வியலுக்கான காரணிகளாக இருந்துள்ளனர். தமிழகத்தின் விவசாய உற்பத்திகளாக அன்றி இயற்கையான விளைபொருட்களாக இருந்த ஏலம், கறுவா, கராம்பு, மிளகு போன்ற வாசனைத் திரவியங்களையும் முத்து, மாணிக்கம், வைரம், இரத்தினக்கல் போன்ற ஆடம்பரப் பொருட்களையும் பெற்றுச் செல்லும் பொருட்டு ‘சர்வதேச வணிகர்கள்’ வந்து வர்த்தகத்தில் ஈடுபடுகிற அவசியம் இருந்தது. அந்தப் பண்பாடுகளின் வீழ்ச்சிகளுக்குப் பின்னர் சீனா, கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளின் வணிகர்கள் தொடர்ந்தும் அதே பொருட்களை (மயிலிறகு, யானை, பருத்தி என்பனவும் புதிதாக) பெறும் பொருட்டு வந்து வணிகத் தலமாகத் தொடர்ந்தும் தமிழகம் நிலவுவதற்கு வழிசமைத்தனர்.

இந்த வாய்ப்பை முன்னிறுத்தித் தமிழகத்தில் இருந்தே வணிகச் சமூகம் உருவாக இயலுமாயிற்று. கி. மு. ஆயிரமாம் ஆண்டுமுதல் இரும்புப் பயன்பாடு எழுச்சிபெற்ற நிலையில் பலநூறு சிற்றரசுகளைக் கொண்ட வேளிர்களின் அரசுகள் தோற்றம்பெற்று விருத்தி பெறும் அவசியம் வலுப்பட்டு வந்தது. வணிகப் பொருட்களுடன் கைத்தொழில் விருத்தியும் மேலோங்கத் தொடங்கிய சூழலில் கணித்தல், பதிவிடல், ஆட்சியியல் ஒழுங்கமைப்பு என்பவை சார்ந்த எண், எழுத்து, விஞ்ஞான-தொழில்நுட்பச் சிந்தனை முறைமை சார்ந்த அறிவு வளர்ச்சி தமிழகப் பண்பாட்டு எழுச்சியைத் துரிதப்படுத்திற்று; இதன் காரணமாக ஆசீவக மதப் பரப்புரை உருவாகி வளர்ந்து வரலாயிற்று. வீர யுக இலக்கியப் பதிவில் இடம்பெறும் கணியன் பூங்குன்றன், சங்கறுக்கும் தொழில்நுட்ப வல்லுநர் நக்கீரர், அவ்வையார் போன்றோர் ஆசீவகச் சிந்தனையாளர்களாகவே திகழ்ந்தனர். வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த நக்கீரன்கள், அவ்வையார்கள் போன்றோரை ஒன்றாகக் கருதும் குழப்ப நிலை காணப்படுகிறது. வீர யுகக் கணியன்கள் முதல் அவ்வை போன்றோர் வெளிப்படுத்திய பாடல்களை பௌத்த-சமணச் சார்பானவையாக மயங்குவதனை மறுதலித்து அவையனைத்தும் உண்மையில் ஆசீவகச் சிந்தனையின் பாற்பட்டவை என்று இன்றைய ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தி வருகின்றனர்.

இத்தகைய சமூக-பண்பாட்டு விருத்தியுடன் எழுச்சி பெற்று வலுப்பட்ட வேளிர்களது அரசு தத்தமது திணைகளின் எல்லைகளுக்குள் மட்டுப்பட்ட ஆட்சியையே முன்னெடுத்தன; அருகிலுள்ள ஏனைய திணைகளைச் சேர்ந்தோர் பசுநிரை கவர்ந்த போது மீட்டு வரவோ, தாமே மற்றையவரது திணைகளில் இருந்து மாடுகளைக் கவர்ந்து வர முற்பட்ட நிலையிலோ ஏற்படும் யுத்தங்களில் வீழ்ந்துபட்டு இறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கும் மரபு இருந்துள்ளது (பலர் இணைந்த வணிகக் குழு நடமாட்டத்தில் தற்பாதுகாப்புக்கான சிறியளவிலான யுத்த வீரர்களும் உடன் சென்றுள்ளனர்; அத்தகைய குழுவினர் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்ட இடத்தில் அமைக்கப்பட்ட கற்பதுக்கை எனும் புதைகுழிகளும் கண்டறியப்பட்டுள்ளன). இத்தகைய படை வீரர்கள் ஏனைய திணைகளை வென்றடக்கி ஆட்சிப்பரப்பை விரிவுபடுத்த ஏற்ற வகையில் பெரும்படை நடாத்த வாய்ப்பான அளவில் நெல்லுற்பத்தி அப்போது எவருக்கும் சாத்தியப்பட்டு இருக்கவில்லை; இவ்வண்ணம் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக வேளிர்களின் ஆட்சி தமிழகத்தில் திகழ இயலுமாயிருந்த காரணத்தாலேயே திணைக் கோட்பாடு தமிழில் மட்டும் வெளிப்பட வாய்ப்பாயிற்று. ஏனையவரை ஆக்கிரமித்து ஒடுக்குமுறைக் கருவியாக வளர்ச்சி பெறாத வகையில் வேளிர்களினது ஆட்சிக்குரிய அமைப்பு ’அரை-அரசு’ எனும் நிலைக்குரியது என்பதனைக் கவனங்கொள்வது அவசியம்!

வள வழிபாட்டின் மேலாதிக்கம்

குறிஞ்சித் திணையின் ஆளுமையை வெளிப்படுத்திய பாரி உள்ளிட்ட குறுநில மன்னர்கள் அனைவரும் வேளிர்கள்; அரை-அரசுக்கு உரியோர். அரச ஆதரவு பெற்ற வள வழிபாட்டு எழுச்சி ஏற்படுவதற்கு முன்னர் தமிழகத்தின் விசேடித்த வரலாற்றுச் சூழலினால் வணிக விருத்தி வெளிப்படுத்திய சமூகத் தலைவர்களாக அந்தக் குறுநில மன்னர்கள் (வேளிர்கள்) திகழ்ந்த காரணத்தாலேயே கீழடியின் நகர்ப் பண்பாட்டுக் களம், கொடுமணலில் கண்டறியப்பட்ட ஏராளமான பொருட்கள் என்பவற்றிடையே வள வழிபாட்டுக் கடவுட் சின்னங்கள் ஏதும் இடம்பெறவில்லை. குறிஞ்சிக் குமரனான முருகன் படைத் தலைவன் எனும் வகிபாகத்துக்கு உரிய வீரனாகக் கருதப்பட்ட ஆரம்ப நிலையில் அந்த மக்களால் எவ்வாறு பார்க்கப்பட்டு இருப்பார் என்பதனைப் பிற்காலத்தில் எழுந்த பாடல்களில் இருந்து கண்டறிய இயலாது; மருதத் திணை மேலாதிக்கத்துக்குப் பின்னர் வள வழிபாட்டுக் கூறுகளை உள்வாங்கி வெளிப்படுத்துபவராக முருகன் பரிணமித்துள்ளார். முன்னதாகவே குறிஞ்சிக் குமரன் முருகன் அங்கு வள வழிபாட்டுக் கடவுளாக இருந்திருப்பின் சிந்துவெளிப் பண்பாட்டில் கண்டறியப்பட்ட முருக வழிபாட்டு முன்னடையாளங்களைக் கீழடி, கொடுமணல் போன்றவற்றிலும் கண்டிருக்க வேண்டும் (அக்காலத்தில் அனைத்துத் திணைகளைச் சேர்ந்த மக்களின் உணவாகத் தினை, வரகு, சாமி, குரக்கன் போன்ற சிறு தானியங்கள் காணப்பட்டன. பெரும் ‘விவசாயச்’ செயல் ஒழுங்குகள் தேவைப்படாத நிலையில் வீரத்தின் கடவுளான முருகனை இந்த உற்பத்திக்கான கடவுளாக முன்னிறுத்தும் அவசியம் ஏற்பட்டு இருக்கவில்லை; அவனது காதல் மனைவி வள்ளியே வளத்துடன் தொடர்புறுத்தப்படும் நிலை இருந்தது – ஆரம்பகாலத் தாய்த் தெய்வ வழிபாட்டின் நீடிப்பு அது).

இவ்வகையில் ஆளுமையுடன் இருந்த ஒரு குறிஞ்சி நிலப்பரப்பான பறம்பு மலையை, மகட்கொடை வாயிலாக (பாரி மகளிரை மணமுடித்து) அபகரிக்க சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்களும் தனித் தனியே முயன்றனர்; பேரரசு மேலாதிக்கத்தினுள் தமது குடிமக்கள் அனைவரையும் ஆட்படுத்த விரும்பாத பாரி மன்னன் தனது மகளிரை அவர்களுக்கு மணமுடித்துக்கொடுக்க மறுத்த நிலையில் மூவேந்தர்களும் ஒன்றாக இணைந்து சில நாட்கள் யுத்தம் புரிந்த பின்னர் பறம்புமலையை ஆக்கிரமிக்க இயலுமாயிற்று. பெரும்படை நடாத்திக் குறிஞ்சித் திணையை ஆக்கிரமித்த மருதத் திணையின் வேந்தர்கள் அந்தக் குறிஞ்சியின் குமரனான முருகனைத் தமக்குமான தெய்வமாக (பொதுவான ‘தமிழ்க் கடவுளாக’) வரித்து வழிபட்டதன் வாயிலாக குறிஞ்சி மக்களை ஆத்மார்த்தமாகவும் வெற்றிகொண்டனர். சிந்துவெளிப் பண்பாட்டில் இருந்து வழிவழியாக வந்த சிந்தனைகளை அந்தக் குறிஞ்சி முருகனுடன் இணைப்பதற்கும் இருந்த வாய்ப்பு மனங்கொள்ளத்தக்கது.

எழுச்சிபெறத் தொடங்கிய வள வழிபாட்டுக் கடவுளில் மட்டுமன்றி, முன்னரான மூன்று நூற்றாண்டுகளின் வணிகச் செழிப்புச் சார்ந்து எழுச்சியுடன் நீடித்த ஆசீவகச் சிந்தனையிலும் சிந்துவெளிப் பண்பாட்டுத் தொடர்ச்சி உள்ளது. சிந்துவெளி முத்திரையிலுள்ள யோக நிலைக் கடவுள் பின்னரான இந்திய மதச் சிந்தனைகள் அனைத்தினதும் முன்னோடியாகக் கருதப்படுகிற ஒன்று. அவரைச் சமண மதத்தின் முதலாவது தீர்த்தங்கரரான ரிசபதேவராகக் காட்டுகின்ற சமண அறிஞர்கள் உள்ளனர்; அந்த ரிசபதேவரே விவசாயத்தையும் வணிகத்தையும் தோற்றுவித்தவராக சமண மதம் வலியுறுத்துகிறது. பின்னரான (சிந்துவெளிக் காலத்தில் விவசாய, வணிக அடையாளங்களின் பிரதிநிதியாக இருந்து) மீண்டும் கி.மு. ஆயிரமாம் ஆண்டின் விவசாய எழுச்சியின் வள வழிபாட்டுக்கு உரிய சிவனாக கருதும் நிலை விவசாயச் சமூக மேலாதிக்கம் ஏற்படுகிறபோது ஏற்பட்டது. கி.மு .6ஆம் நூற்றாண்டின் சமணம் வணிகக் கருத்தியல் மேலாண்மைக்கு உரியதாகக் கிளை பிரிந்தது (ரிசபம் – எருது, சிவனின் வாகனம் எருது எனும் பொதுக்கூறு மனங்கொள்ளத்தக்கது). சமணத்தை கி.மு. 6ஆம் நூற்றாண்டில் வடிவப்படுத்திய மகாவீரர் தன்னை 24 ஆவது தீர்த்தங்கரராக வெளிப்படுத்தினார். இவருக்கு மூத்தவரான மற்கலிகோசர் ரிசபதேவரின் தொடர்ச்சியாக (வணிகக் கருத்தியல் சார்ந்து) தானே 24 ஆவது தீர்த்தங்கரர் எனப் பிரகடனப்படுத்தி ஆசீவக மதத்தைப் பரப்புரை செய்தார். மற்கலிகோசரது சிந்தனைவீச்சு மகாவீரரதைக் காட்டிலும் விஞ்ஞானபூர்வமானது. அதன் தீவிர விஞ்ஞான அடிப்படை சார்ந்த நிலைப்பாடு தமிழகத்தின் வள வழிபாட்டுக்கு (விவசாய எழுச்சிக்கு) முந்திய வணிக வீச்சின் வெளிப்பாட்டினால் சாத்தியமானது.

கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வணிக எழுச்சித் திணைகளான குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகியன விவசாய எழுச்சி பெற்ற மருதத் திணையால் வென்றடக்கப்பட்டு அதன் பேரரசு எல்லைகளுக்குள் அந்த நிலப்பரப்புகள் ஆக்கிரமிப்புக்குள்ளான போது விவசாய எழுச்சிக்கு உரிய வள வழிபாட்டுக் கடவுளால் ஆசீவகச் சிந்தனை தோற்கடிக்கப்படுவதற்கான தொடக்கம் ஏற்பட்டது. வெற்றிபெற்ற மூவேந்தர்களுக்கான பேரரசுகள் வென்றடக்கப்பட்ட நிலங்களைத் தமது வீரர்களுக்குப் பகிர்ந்தளித்தன . இவ்வாறு நில உடைமையாளர்களாகிவிட்ட கிழார்கள் சமூகத்தின் மேலாதிக்க சக்தியாக அதிகாரம் செலுத்துவதற்கான பாதுகாப்பை ஆட்சியாளர்களான ‘வேந்தர்கள்’ வழங்கினர்; வேளிர்களென முன்னர் இருந்த குறுநில மன்னர்களினின்றும் வேறுபட்ட புதிய (வம்ப) வகையினராக இந்த வேந்தர்கள் அமைந்தனர். ‘வம்ப வேந்தரே’ ஆளும் கிழார்களைப் பாதுகாத்து வென்றடக்கப்பட்டுச் சுரண்டப்படுகிற உழைக்கும் மக்களை ஒடுக்கும் கருவியாகச் செயற்படும் ‘அரசு’ உருவாக்கப் பிரதிநிதிகள்!

நடுகல் வழிபாட்டு வளர்ச்சிக்கான வரலாற்றை மறுவாசிப்புக்கு உட்படுத்துகையில் வணிகச் சமூக வாழ்வியலுக்கு உரிய காலத்தின் பசுநிரை கவரும்/மீட்கும் போரில் படுகளம் கண்ட முன்-வீரயுகக் கால (வேளிர் ஆட்சிக்கால) முதலாக வம்ப வேந்தர் மருதத் திணை மேலாதிக்கத்தின் பொருட்டுப் பெரும்படை நடாத்தி ஆக்கிரமிப்பு யுத்தங்களை மேற்கொண்டது வரையான வரலாற்று வளர்ச்சிகளைக் காண இயலும். முன் வீரயுகக் காலம் பாணர், விறலியர்க்கானது; இறுதிக்கட்ட வீர யுகத்தின் நிலவுடைமையாளரான கிழார்கள் கற்றறிந்த புலவர்களாக இருந்தனர். முன் வீரயுகத்தின் எழுத்தறிவைப் பெற்ற வணிகச் சமூகத்தாரிடமும் குறுநில மன்னர்களிடமும் தமக்கான வாய்மொழிப் பாட்டுக்கட்டும் ஆற்றலை வெளிப்படுத்திப் பரிசில் பெறும் வாழ்வியலுக்கு உரியோர் பாணர், விறலியர் போன்றோர். கற்றறிந்த புலவர்களான கிழார்கள் வீறுகொண்டு எழும் ஆக்கிரமிப்பு யுத்த காலத்துக்கு உரியதாக, ‘வீரமே சான்றாண்மை’ எனத் தூண்டுவதன் வாயிலாகப் போராற்றல் மிக்கோரைக் களமாட ஆற்றுப்படுத்துகிறவர்களாக இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உரியவர்கள்; அவ்வகையில், கற்றறிந்த மேட்டிமைப் பண்பு வாய்த்த புலவர்களே ஆயினும் வாய்மொழிப் பண்புடைய பாடல்களை வெளிப்படுத்தி உணர்ச்சியூட்டும் (செயல்வேகம் கொள்ளத் தூண்டும்) பாடல்களையே படைப்பாக்க வேண்டிய வரலாற்றுச் சூழலுக்குக் கட்டுப்பட்டவர்கள். முன்னதாக வணிகச் சமூக எழுத்துப் பயன்பாடு பரவலாக இருந்தபோதிலும் விவசாய விருத்தியின் பேறான வீரயுக எழுச்சிக்கு உரிய இலக்கிய வெளிப்பாட்டில் தாக்கம் செலுத்த ஏற்ற சமூக – வரலாற்றுக் காரணிகள் வந்தமையவில்லை என்பது கவனிப்புக்கு உரியது!

மருதத் திணை மேலாதிக்கத்தின் வாயிலாக கிழார்கள் எனும் விவசாயச் சமூக சக்தி (திணை) ஆளும் தரப்பாக கி.பி. 1ஆம் நூற்றாண்டு வரையே நீடித்து இருக்க இயலுமாக இருந்தது. மீண்டும் கி.பி. 1ஆம் நூற்றாண்டுப் பிற்கூறில் வணிகச் சமூக சக்தி (திணை) ஆளும் தரப்பாக மாறியிருந்தது. அவ்வாறான நிலையில் வள வழிபாட்டுக் கடவுளர்களது மேலாதிக்கத்தை முறியடித்து ஆசீவகம் மீளெழுச்சி பெற்றிருக்க வேண்டுமல்லவா? அது பற்றித் தொடர்ந்து தேடுவோம்!

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9425 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (13)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)