Arts
36 நிமிட வாசிப்பு

சாதி மறுப்பு இயக்கங்கள் : வீர சைவம், சீக்கியம்

December 28, 2023 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம் மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

‘பண்பாட்டு ஏகாதிபத்தியமாகப் பிராமணியம்’ கட்டமைத்துள்ள சமூக முறைமைக்குள் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இயங்கிக்கொண்டு வருகிறோம் எனச் சில சமூகவியலாளர்கள் வலியுறுத்துவர். ஏகாதிபத்தியம் எனும் வரலாற்றுக் கட்டம் இருபதாம் நூற்றாண்டில் இருந்து இயங்கி வருகிற ஒன்று. முன்னதாக இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியாவும் ஐந்து நூற்றாண்டுகளாக இலங்கையும் ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்பட்டதுண்டு. பிராமணிய மேலாதிக்கத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுகிற ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஏகாதிபத்திய அமைப்பு மேற்கொள்வதைப்போல ‘ஏகபோக மூலதனத்தை’ பிற திணைகள் மீது பிரயோகித்து அபகரிப்பை மேற்கொள்வதல்ல. ‘கருத்தியல்’ மேலாதிக்கமே செயலுருப்பெற்று ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உழைப்பை அபகரிக்கிறது என்ற வகையில் எம்மவரிடையே இன்று வரை காலனியக் கருத்தியல் அடிமை மனோபாவம் நிலவுவதனைக் கொண்டு பிராமணியத்தைப் ‘பண்பாட்டு ஏகாதிபத்தியம்’ எனப் புரிந்துகொள்வதில் ஒரு பகுதி (மட்டுமேயான) உண்மை உள்ளதெனலாம்!

இன்றைய நிலையில் சாதியம், காலனித்துவம் எனும் இருவகை ஒடுக்குமுறை வடிவங்கள் எமது சமூகத்தில் இயக்கம் கொண்டுள்ளன எனலாம். இரண்டாயிரத்தறுநூறு வருடங்களின் முன்னர் விவசாய வாய்ப்பில் மேலாதிக்கம்பெற்ற பிராமணர்கள் ஆதிக்க சாதியாக அமைந்ததோடு மட்டுமன்றித் தம்மைப் பூவுலகின் பிரம்மாக்களாக (கடவுளின் பிரதிநிதிகளாக) காட்டுகின்ற கருத்தியலைக் கட்டமைத்துக்கொண்டு பின்னரான சமூகமாற்றத் தளங்களில் ஏற்பட்டு வந்த மாற்றங்களின் போது ஒவ்வொரு சமூக முறைக்கும் பொருந்தும் வகைகளில் கருத்தியலைப் புதுப்பித்துக்கொண்டு இயங்க ஏற்ற வல்லமையைத் தொடக்கி வைத்துக்கொண்டனர். ஐநூறு வருடங்களின் முன்னர் ஐரோப்பாவில் தோற்றம்பெற்ற மூலதன வாய்ப்புடன் முதலாளித்துவம் எனும் புதிய சமூக உருவாக்க மாற்றம் சாத்தியப்பட்டு அதன் உந்துதல் உலகெங்கும் ஆக்கிரமிப்புக் கரங்களை விரிவுபடுத்த இடந்தந்தபோது மேலைத்தேச நாடுகள் காலனித்துவம் என்ற வடிவில் அபகரிப்பை எமது சமூகங்களின் மீது மேற்கொண்டு வருகின்றன. சென்ற நூற்றாண்டின் நடுக்கூறில் இருந்து நேரடிக் குடியேற்ற முறைமை அற்றுப்போன பின்னரும் நவகாலனித்துவம் என்ற மாற்றொழுங்குடன் செயற்பட ஏற்ற அரசியல் – பொருளாதார மேலாதிக்க வாய்ப்பு மேலைத் தேசங்களிடம் (ஏகாதிபத்தியத் திணையிடம்) உள்ளது.

அந்த வாய்ப்பை இழந்துவிடாதிருக்கும் எத்தனிப்பில் உக்ரேன் – ருஷ்யப் போரைத் தொடக்கி வைத்ததோடு பலஸ்தீனம் எனுமொரு தேசத்தையே இல்லாது ஒழித்துக்கட்ட முயலும் இஸ்ரேலின் யுத்த வெறியை ஆதரிக்கும் கபடத்தனங்களை ஏகாதிபத்தியத் திணை மேற்கொண்டு வருவது குறித்துக் கடந்த அமர்வுகளில் பார்த்து வந்துள்ளோம். விடுதலைக்காகப் போராடும் எவரும் சாதியத் தகர்ப்பையும் ஏகாதிபத்தியப் பிணைப்பை முற்றாக முறியடிப்பதையும் தமக்கான கடமையாகக் கொள்ளவில்லை எனில் முழுமையான சுதந்திரத்தை எட்டவியலாமல் அரைக்கிணறு தாண்டுதலையே சாத்தியப்படுத்திக் கொள்வர். இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தாராளவாத அரைப் பிராமணிய நிலைப்பாட்டுடன் காங்கிரஸ் கட்சியின் காந்தி – நேரு தலைமை மேற்கொண்டபோது சாதியத்தை முற்றாகத் தகர்ப்பதற்கான நடவடிக்கைகள் உரிய அளவில் கவனங்கொள்ளப்படவில்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியப் பிணைப்பை முறித்துக்கொண்ட இந்தியா 1947 இல் அரைச் சுதந்திரத்தை வெற்றிகொண்ட போதிலும் நவகாலனித்துவ அமைப்பினுள் இயங்கியவாறு இன்றைய பெருமுதலாளித்துவ – இந்துத்துவ மேலாதிக்கத்திடம் நாட்டைக் கையளித்துள்ளது நேருவின் ‘முதலாளித்துவ சோசலிச’ முன்னெடுப்பு. தேசிய முதலாளித்துவ எழுச்சிக்கான அரைப் பிராமணியத் தாராளவாதம் அன்று கனவு கண்டிருந்த மக்கள் விடுதலைக்கான அம்சங்களும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டவாறு ஏகாதிபத்தியத் திணைக்குத் தலைமை தாங்கும் நாடாக இந்தியாவை மாற்றும் மேலாதிக்க வாதக் கையாளுகைக்கு ஆட்பட்டுத் திணறுகிறது இந்தியாவுக்குரிய மக்கள் விடுதலை அபிலாசை!

இரட்டைத் தேசியங்களும் இரு பெரும் தலைவர்களும்

காந்தி – நேரு தலைமையிலான தாராளவாத அரைப் பிராமணியத் தேசிய முன்னெடுப்பின் வாயிலாக இந்திய மக்களின் வாழ்வாதாரங்களை விருத்தி செய்வதுடன் சாதியச் சழக்குகளையும் குழிதோண்டிப் புதைத்துவிட இயலும் என்றே நம்பப்பட்டிருந்தது. அன்றைய சூழலில் சாதியத் தகர்ப்புக்கான எந்த முயற்சியையும் தாராளவாத அரைப் பிராமணியத் தலைமை மேற்கொள்ளவில்லை என்று கூறிவிட இயலாது. இந்தியக் குடியரசுக்கான புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் குழுவின் தலைவராக அம்பேத்கர் தேர்வு செய்யப்பட்டமை அத்தகைய முயற்சிக்கான ஒரு முன்னெடுப்பு. ஆதிக்க சாதிகளின் தலைமைக் கேந்திரமான பிராமணத் தேசியம் சுதந்திர இந்தியாவில் பூரண அதிகாரம் பெற்றுவிடுவதனைத் தன்னளவில் தடுக்க முயற்சித்து இயங்க முனைந்த தாராளவாத அரைப் பிராமணத் தேசியத்துடன் ஐக்கியப்பட்டவாறு விடுதலைத் தேசிய முன்னெடுப்பை வளர்த்தெடுக்கும் திசை மார்க்கத்தில் இயங்குவதற்கான பொறுமையும் பொறுப்புணர்வும் ஆளுமையும் அம்பேத்கருக்கு வந்தமையவில்லை என்பது அன்றைக்கு இருந்த ஒரு வரலாற்று நெருக்கடி. பிராமண மேலாதிக்க நெருக்குவாரங்களுக்கு முகங்கொடுத்தவாறு, அதனை முறியடிக்கும் வகையில் மோதுவதை விடுத்து இடைவிலகும் அம்பேத்கரைப் பொறுமை காத்துத் தொடர்ந்து இயங்குமாறு வழிப்படுத்தும் ஆற்றலும் விருப்பமும் நேருவுக்கும் வாய்த்திருக்கவில்லை.

gandhi and nehru

நேரு கையறுநிலைக்கு ஆளாகி பிராமணத் தேசியத்திடம் விட்டுக்கொடுப்பை மேற்கொள்ளவும் தலித்தியவாத அரசியல் முன்னெடுப்புக்கு அம்பேத்கர் ஆட்படவுமான வரலாற்றுப் பின்னடைவு ஏற்படும் வகையில் ஏகாதிபத்தியச் சுயநிர்ணய இயங்குமுறை அன்றைய இந்திய வரலாற்றுப் போக்காக ஆகியிருந்தது. இரு தலைவர்களுக்கான பலவீனங்களின் பாற்பட்ட தவறுகளல்ல அவை; இந்தியச் சமூக சக்திகளை (திணைகளை) அவ்வகையில் இயக்க ஏற்ற வாய்ப்பினைக் காலனித்துவச் செயலொழுங்குகளுடன் இயங்கிய பிரித்தானிய ஏகாதிபத்தியம் பெற்றிருந்தது. இந்தியப் பிரதமர் நேரு தலித் மக்களின் தலைவர் அம்பேத்கர் ஆகிய இருபெரும் தலைவர்களும் தேசிய முதலாளித்துவக் கண்ணோட்டத்துடனேயே இயங்கினர்; மகத்துவமிக்க அவ்விரு தலைவர்களிடமும் ‘முதலாளித்துவச் சோசலிச’ (‘ஜனநாயக சோசலிச’) நாட்டம் உளப்பூர்வமாக இருந்தது. தாராளவாத அரைப் பிராமணத் தேசியத் தலைவரான நேருவோ தலித் தேசியத் தலைவரான அம்பேத்கரோ முழுமைப்பட்ட மக்கள் விடுதலைக்கான மார்க்கத்தில் இயங்க இயலாதிருந்தமைக்கு இருவரிடமும் வெவ்வேறு தளங்களுக்குரிய முதலாளித்துவ அணுகுமுறை வரம்பிடுவதாக அமைந்திருந்தது என்பதனைக் கவனங்கொள்வது அவசியம். வர்க்கங்களாகப் பிளவுபடாமல் இனமரபுக் குழுக்களாகவே ஒடுக்கும் – ஒடுக்கப்படும் திணைகளாக (சாதிகளாக மாற்றப்பட்ட வடிவில்) இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இயக்கம் பெற்று வந்த சாதியச் சமூக முறைமையில் இத்தகைய இரட்டைத் தேசிய நடைமுறை ஏற்படுவது அன்றைக்கு இருந்த ஒரு வரலாற்று நியதி!

ambedker and nehru

பிளவுபடாத பூரண விடுதலை மார்க்கத்தை முன்னெடுக்கும் பாட்டாளி வர்க்கச் சிந்தனைக்கான மார்க்சிய வழிகாட்டலைக் கையேற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரட்டைத் தேசியப் பிளவற்ற விடுதலைத் தேசிய மார்க்கத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். பாட்டாளி வர்க்க அணிதிரட்டலே கம்யூனிஸ்ட் கட்சியின் பணி என்ற புத்தகவாத நிலைப்பாடு காரணமாக “ஸ்தூல நிலை குறித்த ஸ்தூலமான ஆய்வு முறையே மார்க்சியம்” என லெனின் வலியுறுத்திய புரிதலுடன் இந்திய கம்யூனிஸ்டுகளால் செயற்பட இயலவில்லை. அன்றைய சூழலில் “வர்க்கப் போராட்டமே மார்க்சியத்தின் அடிப்படைக் போட்பாடு” என்ற மற்றொரு வறட்டுவாதப் புரிதலுடன் தொழிற்சங்கப் போராட்டங்களைக் கனகச்சிதமாக முன்னெடுத்து வந்தனர்; அதைக்கூட வெறும் பொருளாதார வாதம் என்ற எல்லைக்கப்பால் சென்று அரசியல் போராட்டக் கருவியாக வளர்த்தெடுக்கத் தவறினர். ‘விவசாயி வர்க்கத்தையும்’ மறந்துவிடாமல் (இரண்டாம் பட்சமாகவேனும்) அணி திரட்டினராயினும் அந்தச் சமூக சக்திக்கான தேசியப் பண்பைக் கவனங்கொள்ளாதிருந்தனர் (எல்லாம் ‘வர்க்க வாதப் பக்தியால்’ வந்த பித்தம்!).

விவசாயிகள் மத்தியில் களமாடிய தோழர் சீனிவாசராவ், வர்க்க அணிசேர்க்கையில் விவசாயிகள் அனைவரையும் ஒன்றுதிரட்ட இயலாதிருக்கும் தடையாகச் சாதிய ஒடுக்குமுறையை இனங்கண்டு அதற்கெதிரான விட்டுக்கொடுப்பற்ற போராட்டங்களை முன்னெடுத்தார். ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டங்களில் மார்க்சிய அணி வலுப்பெறுவதற்கு அந்தப் போராட்டங்கள் வாயிலாக ஒடுக்கப்பட்ட மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒன்றிணைக்கப்பட்டு இருந்தமையே காரணமாக அமைந்திருந்தது. அந்த வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் சாதியத்துக்கு எதிரான போராட்டத்துக்கு உரிய கோட்பாட்டு உருவாக்கத்தைக் கட்சி மேற்கொள்ளாத வகையில் அதனையும் ‘விவசாயி வர்க்கப் போராட்டம்’ எனும் வர்க்க வாதச் சொல்லாடல்களின் வரையறைக்குள் மட்டுப்படுத்தும் நிலைமையே இருந்தது!

srinavasa roa

இதனை வெறும் வர்க்கவாதமாக மட்டும் பார்க்க இயலுமா? இதன் பின்னணியில் அன்றைய கட்சித் தலைவர்களாக இருந்த பெரும்பான்மையான பார்ப்பனர்களின் பிராமணியச் சதி இருந்திருக்காதா? இந்தியாவின் முதலாவது கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான எம். என். ராய் பாட்டாளி வர்க்கத்தினரை மட்டும் அணிதிரட்டியமையின் பின்னணியில் பார்ப்பனராகிய அவரது சாதி அபிமானமே அடிப்படைக் காரணமாக அமைந்திருந்தது என்பதான கணிப்பு உள்ளது. மேற்கு வங்கத்தில் எஸ். கே. பிஸ்வாஸ் எழுதிய “பார்ப்பனிய மார்க்சியம்” எனும் நூல் இது குறித்துக் கூறும் கருத்துக் கவனிப்புக்குரியது. எம்.என். ராய் “தொழிற்துறையில் இருந்த தொழிலாளர் நலன்களைக் காப்பதற்கு மட்டுமே” முன்னுரிமை அளித்தமையானது “நகர்ப் பகுதிகளில் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பெரும்பான்மையானவர்கள் பார்ப்பனர்களாகவும் சாதி இந்துக்களாகவும் இருந்தனர்” என்பதன் காரணத்தினாலேயே என வலியுறுத்தும் எஸ்.கே. பிஸ்வாஸ் “கோடிக்கணக்கான, அறுதிப் பெரும்பான்மையினரான அடித்தட்டு, உழைக்கும் வர்க்கத்தினரான, கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்த அமைப்புச்சாரா விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கைத்தொழிலாளர்களாக இருந்த தீண்டத்தகாத மக்களும் சூத்திரர்களும் முஸ்லிம்களும் பழங்குடியினரும் இவரது கவனத்தை ஒருபோதும் பெறவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்வடிவமும் இன்றுவரை மாறவில்லை” என எடுத்துக் காட்டும் அடிப்படையின் பிரகாரம் எம்.என். ராய் தொடக்கிய பார்ப்பன நலன் பேணும் நடைமுறையை இன்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்பற்றுவதாகக் கூறுவதனைக் காணலாம் (எஸ்.கே. பிஸ்வாஸ், 2021, “பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்”, தமிழில்: பூங்குழலி, தலித் முரசு. சென்னை, ப. 54).

கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கிய ஒருசில பிராமண, ஆதிக்கசாதித் தலைவர்களிடம் தமது சொந்தச் சாதி சனத்துக்குள் சோசலிசத்தைக் காணும் நாட்டம் முனைப்படைந்து இருந்திருக்கலாம்; இன்றும் கூட அமைப்புச்சாரா அடிநிலை உழைக்கும் மக்களை அணிதிரட்ட முயற்சிக்காமலும் ஒடுக்கப்படும் இனத் தேசியங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த அக்கறை இன்றியும் ஆதிக்க சாதிகள் மத்தியில் – பெருந்தேசிய இனத்தினரிடையே முன்னதாகச் சோசலிசத்தை வெற்றிபெற்ற பின்னர் ஏனைய பிரச்சினைகளான சாதி, இனத்தேசியம், பாலினம் என்பவற்றின்பால் கவனம் செலுத்தலாம் எனக் கருதுகின்ற ‘மார்க்சியர்கள்’ இருக்கவே செய்கின்றனர். இத்தகையவர்கள் ‘இறுக்கமான வர்க்கப் போராட்டக் கோட்பாட்டுக்கு’ சாதியவாத, இனவாத, தேசியவாத கறைகள் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ‘மாறாநிலை மார்க்சியப் புனிதத்தையே’ கவசமாக்கிக் கொள்கின்றனர். அத்தகைய தலைவர்கள் சிலரிடம் ஆதிக்க சாதி மனோபாவமோ பெருந்தேசிய அபிமானமோ இருக்க இயலுமே அல்லாது அந்த ‘வர்க்கப் போராட்டக் கோட்பாட்டுப் புனிதம்’ மீதான (அதுவே மார்க்சியம் என மயங்கும்) நம்பிக்கையுடன் இயங்கும் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டுகள் எல்லோரிடமும் சாதியவாதமும் இனவாதமுமே இருப்பதாகக் கருதிவிட இயலாது.

பிராமண வர்ணம், பிராமண மதம், சாதியம்

சாதியம், இனத்தேசியம் எனும் வடிவங்களில் இடம்பெறும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட வடிவங்களுக்கு உரிய கோட்பாட்டுத் தெளிவின்றி வெறும் வர்க்க வாதமாக மார்க்சியத்தைக் குறுகத் தறிப்போர் மட்டுமே தவறிழைப்பவர்கள் என்பதற்கில்லை. எமக்குரியது சாதியச் சமூகம் என்பதனை வலியுறுத்தி இயங்குவோரில் மிகப்பலரும் பாரதூரமான தவறுகளுடன் இயங்குவதனாலேயே அர்ப்பணிப்புடன் மார்க்சியத்தை நேசித்து இயங்குகிற பல செயற்பாட்டாளர்களால் சரியான கோட்பாட்டுத் தெளிவை வந்தடைய இயலாமலுள்ளது. குறித்த வரலாற்றுக் கட்டத்தில், இரண்டாயிரத்தறுநூறு வருடங்களுக்கு முன்னர் சத்திரியர்களது யுத்த முனைப்புடன் பிராமண மேலாதிக்கம் சாத்தியப்பட்டு, வெற்றிகொள்ளப்பட்டு ஒடுக்கப்பட்டவர்களது உழைப்பைச் சுரண்டும் பொருளுற்பத்தி உறவு ஏற்பட்ட பின்னரே சாதியத்தைப் பிராமண வர்ணத்தார் வடிவப்படுத்தும் நிலை ஏற்பட்டிருந்தது.

பிராமண வர்ணம் பேசுபொருளான காலம் முதலாகவே சாதியக் கருத்தியல் ஏற்பட்டிருக்கவில்லை. சாதியம் வடிவப்படுவதற்கு முன்னதாக ஏறத்தாழ ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே பிராமணர், சத்திரியர், வைசியர் எனும் பிரிவுகளுடன் ஆரியர்கள் இந்தியாவினுள் (வெவ்வேறு குழுக்களாக ஒருசில நூற்றாண்டுகளாக) வந்தபோது விரும்பிய எவரும் அந்த மூன்று வர்ணப் பிரிவுகளில் எந்தவொன்றையும் வரித்துக்கொள்ள ஏற்றதான நெகிழ்வுப் பண்பு மூவாயிரத்தைநூறு வருடங்களுக்கு முந்திய வர்ணக் கோட்பாட்டுக்கு இருந்தது. சாதிய வடிவத்தைப் பெற்ற பின்னர் (சாதி வாழ்முறைக்கான மேலாதிக்க ஒடுக்குமுறை ஏற்பட்ட இரண்டாயிரத்தைநூறு வருடங்களுக்கு முன்னரிருந்து) வம்சாவழித் தொடர்ச்சிக்கு உரியது வர்ணம் என்று ஏற்பட்ட நிலை முற்பட்ட காலம் முதலாக இருந்துவரவில்லை. தவிர, ஆரியர்கள் அனைவரும் பிராமணர்கள் அல்ல என்பதும் சாதியத்தை வடிவப்படுத்திய பிற்காலப் பிராமணர்களில் பெரும்பாலானோர் திராவிடப் பூசகர்கள் (இருதரப்பாரது இணைவில் உருப்பெற்ற புதிய ‘பிராமண மதத்துக்கான’ பல அடிப்படைகளை வழங்கியவர்கள்) என்பதும் கவனிப்புக்குரியன.

வரலாற்றுப் பொருள்முதல் வாத அணுகு முறைக்கு மாறான சாதிய வாதப் பார்வை பிராமணர்கள் அனைவரையும் ஆரியர்களாகவும் எதிரிகளாகவும் கணிக்கும் தவறுக்கு ஆட்படுத்தி விடுகிறது. மூவாயிரத்தைநூறு வருடங்களின் முன்னர் இந்தியாவினுள் பிரவேசித்து ‘ஆக்கிரமித்த’ ஆரியர்கள் அனைவரையும் பிராமணர்கள் என்பதோடு ‘மண்ணின் மைந்தர்களாக’ இருந்தோர் அனைவரும் அடிமைப்படுத்தப்பட்டனர் என வலியுறுத்துகிறவராக எஸ்.கே. பிஸ்வாஸ் காணப்படுகிறார் (இன வேறுபடுத்தலுக்குரிய இந்தக் கோட்பாடு இன்றைய ஆய்வுலகத்தால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது) . “முதல் வெளிநாட்டு ஊடுருவலாளர்களான ஆரியப் பார்ப்பனர்களால் கிமு 1600 – 1500 காலகட்டத்தில் இந்தியா கைப்பற்றப்பட்ட போது, இவர்கள் தான் தங்கள் நிலத்தில் இருந்து விரட்டப்பட்டு, இயற்கையான அடிமைகளாக, சூத்திரர்களாக நிலை இறக்கப்பட்ட இலவச உற்பத்தியாளர்கள். ரிக் வேதம் சூத்திரர்களையும் தீண்டத்தகாதவர்களையும் ‘இரண்டு கால் மிருகங்கள்’ – ‘நிரி பசு’ என்று குறிக்கிறது. இந்தியாவின் தொல்குடி மக்களான இவர்கள் வெளிநாட்டு ஆரிய வெற்றியாளர்களின் பொதுச் சொத்தாகிப் போயினர். அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கென குறிப்பான முதலாளியோ, உரிமையாளரோ இல்லை” என்பது “பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்” எடுத்துரைக்கும் கருத்தாகும் (எஸ்.கே. பிஸ்வாஸ், ப. 61).

பிராமணக் கோத்திரங்களில் மிகப் பெரும்பான்மையானவை திராவிடர்களுக்கு உரியன என்பதனை டி.டி. கோசாம்பி எடுத்துக்காட்டி உள்ளார். ஆரிய மொழிப் பிரிவினர் சூத்திரர்களாகவும் உள்ளனர். வரலாற்றுக் காலத்தின் முதல் பேரரசினை தோற்றுவித்தவர்கள் ஆரியர் வருகைக்கு முன்னிருந்த நாக வம்சத்தினர் (திராவிட மொழிக் குடும்பத்தின் ஒரு பிரிவினர்) என வரலாறு தெளிவுபடுத்தியுள்ளது. கிமு 1600 முதல் இந்தியாவினுள் பிரவேசித்த ஆரியர்களும் முன்னதாகவே இந்தியாவினுள் வந்து வாழ்ந்தவர்களான திராவிடர்களும் வெவ்வேறு இனப் பிரிவினரல்ல – அவை வேறுபட்ட மொழிக்குடும்பப் பிரிவுகள் மட்டுமே என்பதனை ரோமிலா தாப்பர் உள்ளிட்ட பல வரலாற்றாசிரியர்களும் மானுடவியலாளர்களும் எடுத்துக்காட்டி உள்ளனர். இரு தரப்பாரிடையே கலப்பு ஏற்பட்டமையும் ஐயந்திரிபற நிரூபணமாகி உள்ளது; இன்றைய DNA ஆய்வுகள் எந்தவொரு சாதியும் ஆரிய – பூர்வ குடிகள் என்ற வேறுபாட்டுக்குரியனவாக அல்லாமல் அனைத்துச் சாதிகளிலும் இருதரப்பாரது பாரம்பரிய அலகுகள் கலந்தே உள்ளன என்பதனை மெய்ப்பித்துள்ளன. அவ்வகையில், ஆக்கிரமிப்பாளர்கள் என்பதாக அன்றி, முன்னதாகப் பல்லாயிரம் ஆண்டுகளில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து குடியேறியிருந்த ‘பூர்வ குடிகளான’ திராவிட மொழிக் குடும்பத்தினர் மூவாயிரத்தைநூறு வருடங்களுக்கு முன்னரிருந்து வந்தவர்களான ஆரிய மொழிக் குடும்பத்தினருடன் இணைந்து கலந்து ‘இந்திய மக்கள்’ என்பதாக தொடர் வரலாற்றை முன்னெடுத்துள்ளனர் என்பதே நிதர்சனம்!

வேறுபடுத்த இயலாதவாறு இந்திய மக்கள் பிரிவெனக் கலந்து வாழும் ஆரியர்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் காட்டும் எஸ்.கே. பிஸ்வாஸ், சமூக மாற்றங்களைத் தடுத்தவாறு நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டமைத்து ஒடுக்குகின்ற காலனித்துவ வாழ்முறைக்குள்ளாக்கிய பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களை “பார்ப்பனர்களின் ஆன்மீக அடிமைத் தளையிலிருந்து தீண்டத்தகாதவர்களும் சூத்திரர்களும் விடுதலை பெறுவதற்கான வழியைத் திறந்து விட்டு, இந்தியாவில் முதன் முறையாக சமூகப் புரட்சியை ஏற்படுத்த உதவிக்கொண்டிருந்த பிரிட்டிசார்” என்பதாக எடுத்துரைக்கிறார் (எஸ்.கே. பிஸ்வாஸ், ப. 54). இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது சமூகப் புரட்சி ஏற்பட வாய்ப்பளிக்கிற ஏகாதிபத்திய ‘அரவணைப்பை’ தகர்த்து பிராமணர்கள் மீளவும் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சியே எனும் தலித்தியவாத, இனவாதக் கண்ணோட்டத்தை வலியுறுத்துகிற எஸ்.கே. பிஸ்வாஸ் எந்தவொரு பார்ப்பனரும் சமூக முன்னேற்றத்துக்கோ சாதியத் தகர்ப்புக்கோ முன்முயற்சி எடுத்ததுமில்லை உதவப்போவதுமில்லை என அழுத்தி உரைக்கிறார். பாரதி முதல், சீனிவாசராவ் உள்ளிட்ட கொம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்களாக பிராமணத் தலைவர்கள் பலர் தம்மைச் சாதி நீக்கம் செய்துகொண்டு சாதி அமைப்புத் தகர்வதற்கான அர்ப்பணிப்புமிக்க பங்களிப்புகளை நல்கியுள்ளனர் என்பது வரலாறு!

இனமரபுக்குழு வாழ்முறையுடன் புராதன பொதுவுடமைச் சமூக அமைப்புச் சார்ந்த தொழில் வேறுபாட்டுக்காக பிராமணர், சத்திரியர், வைசியர் எனும் வர்ணங்களாக இயங்கிய ஆரியர்கள் சாதியத்தைத் தொடக்கி வைக்கவில்லை என்பதனை தலித்தியவாத, இனவாதப் பார்வையைக் கொண்டிருப்போர் கண்டுகொள்ள விரும்புவதில்லை. சிந்துவெளிப் பண்பாட்டுக் காலத்திலேயே (ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னரே – ஆரியர் வருகைக்கு ஆயிரத்தைநூறு வருடங்களுக்கு முன்னரே) ஏற்றத்தாழ்வு வாழ்முறை திராவிடர்களிடம் ஏற்பட்டிருந்தது; அதற்கமைவான மூர்த்தி, தலம், தீர்த்தம், தல விருட்சம் என்பவற்றை உள்ளடக்கிய கோயில், அதன் வடிவமைப்பும் செயலொழுங்குகளும் சார்ந்த ஆகம முறை, அவற்றைச் செயலுருப்படுத்தும் பூசகர்கள் (பூ கொண்டாற்றப்படும் வழிபாட்டுக்குரியோர்) என்பன திராவிடர்கள் தமக்குரியனவாக வளர்த்தெடுத்து வைத்திருந்தவை!

சிந்துவெளிப் பண்பாடு வீழ்ச்சியுற்றுச் சிதறுண்டு போன வாழ்வுக்கு ஆட்பட்டாலும் அதே தரத்துடன் இல்லாத, ஏற்கனவே நிலையான விவசாய வாழ்வைக் கொண்டிருந்தவர்களாக திராவிடர்கள் இருந்த சூழலில் ஆரியர்களது வருகை நிகழ்கிறது. விவசாயத்தை அறிந்திராமல், தமது கால்நடைகளுக்கான புல்வெளிகளை நாடிக் கிழக்கு இந்தியா வரை முன்னேறிக்கொண்டிருந்த ஆரியர்களுடன் ஆரம்பத்தில் பூசல்களைத் திராவிடர்கள் சந்தித்தனர். ரிக் வேத கால கட்டத்துக்குரிய ஆரியர் வருகையின் இறுதி நிலையில் அவர்களே நிலையான விவசாய வாழ்வுக்குப் பழக்கப்பட்டு, பின்னர் திராவிட வாழ்வியல் – பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்க வேண்டியவர்காளாயினர். இவ்வகையில், திராவிடர்களுடனான இணக்கமும் விவசாய நாட்டத்துடன் ஏற்படத் தொடங்கிய ஏற்றத்தாழ்வு வாழ்முறை மாற்றமும் ஆரிய – திராவிட கலப்புக்குரிய பிராமணச் சாதியை, அதற்குரித்தான ‘பிராமண மதத்தை’ உருவாக்கிக் கொண்டது!

ரிக் வேத இறுதிக் கட்டத்தில் இத்தகைய பரிணமிப்பைப் பெற்று உருவான பிராமண மதம் சமூகத்தில் ஏற்பட்டிருந்த ஏற்றத்தாழ்வுக்குரிய சாதி வாழ்முறையைக் கருத்தியல்படுத்த ஏற்றதாக வர்ணக் கோட்பாட்டை மாற்றிப் புனைந்தது. சாதியக் கருத்தியலின் உருவாக்கம் இவ்வகையில் தொடக்கம்பெற்றது!

பிராமணிய எதிர்ப்புக் களங்கள்

சமத்துவ வாழ்வியலுக்கு உரியதாகத் தோற்றம்பெற்ற வர்ணக் கோட்பாட்டை ஏற்றத்தாழ்வான (பழகிப்போன வரலாற்றியல் எழுத்து முறைப்படி ‘வர்க்கப் பிளவடைந்த’ அல்ல; படிநிலைப்பட்ட சாதிகளாக்கப்படும்) வாழ்முறைக்கு உரிய சாதியக் கருத்தியலாக பரிணமிப்புக்கு உள்ளாக்கும் போது இன்னமும் பழைய ‘ரிக் வேதப் பிராமணர்’ அல்ல; ‘பிராமண மதம்’ எனும் புதிய சக்தி உருப்பெற்று இருந்தது. அதன் பின்னரும் பிராமணர் அனைவரும் ஒரே கருத்தியலுடன் காலாகாலத்துக்கும் இருந்துவிடவில்லை. இனமரபுக்குழுவின் கண வாழ்வுக்கு ஏற்றதாக இயற்கை அம்சங்கள் அனைத்தையும் வழிபடுவதாக அமைந்த ரிக் வேதத்தின் பெரும்பாலான (முற்பட்ட) பகுதிக்கு மாறாக ஏற்றத்தாழ்வான வாழ்முறையும் திராவிடப் பூசகருடனான கலப்பும் ஏற்பட்ட போது இயற்கைக்கு அப்பாலான ஒரு கடவுளாக பிரஹஸ்பதி பற்றி அக்கறை செலுத்தும் ரிக் வேதப் பாடல்கள் தோற்றம்பெறலாயின. அவ்வகையில், ரிக் வேத இறுதிக் கட்டத்துக்கு உரிய பத்தாம் மண்டலத்தில் இடம்பெற்றதான இந்தப் பிரஹஸ்பதியில் இருந்தே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் நால் வர்ணங்கள் தோற்றம் பெற்றதான, சாதியத்தை வெளிப்படுத்தும் வர்ணக் கோட்பாட்டுப் பாடலும் வெளிப்படுத்தப்பட்டு இருந்தது.

விவசாயப் பெருக்கத்துடன் புதிய பகுதிகளை ஆக்கிரமித்து வென்றடக்கப்பட்டோர் சூத்திரர்களென – உடலுழைப்புக்கு மட்டுமே உரியோரென; ‘ஆடம்பர’ உரிமைகளை மறுத்து – வரையறுக்கப்பட்ட பிரிவினர் வரலாற்றரங்கில் உருப்பெற்ற பின்னர் பிராமணர்கள் மென்மேலும் உடலுழைப்பில் இருந்து தம்மை விலக்கிக்கொண்டனர் – ஆன்மத் தேடல்களுக்குள் முழுவதுமாக ஆட்படும் வாய்ப்பைப் பெற்றனர். இயற்கையை விட்டு விலகிய வாழ்நிலையின் சிந்தனைப் பேறாக இயற்கையையே கடவுளாகக் கண்ட முந்திய ரிக் வேதப் பார்வையின் போதாமை பற்றிப் பேச வேண்டி வந்தது. வேதச் சிந்தனையை நிறுத்திக்கொண்டு இயற்கையைக் கடந்து, இயற்கைக்கே காரணமாக அமையும் பிரம்மம் குறித்த புதிய ஆய்வுகளுக்கு ஆட்பட்ட புதுமைப் பிராமணப் பிரிவினர் ‘பழமைவாதப்’ பிராமணர்களுக்கு வேறானவர்களாக வெளிப்பட்டார்கள். இவ்வகையில், முந்திய பிராமணியத்தை எதிர்த்த புதிய பிராமணியம் உபநிடத (வேதாந்த) சிந்தனை மரபைத் தொடக்கி வைத்தது!

பிராமணர்களுக்குள் ஏற்பட்ட உள் முரண்பாட்டுடன் புதிய சமூக மாற்றத்துக்கு அமைவான புதிய தரப்பினர் வெளிப்பட்டதாக மட்டும் இந்த எழுச்சி அமையவில்லை. சமூக மாற்றக் கருவியாகப் பிராமணர்கள் ஒருபோதும் இருந்ததில்லை, இருக்கப்போவதில்லை என்ற கருத்தின் தவறை மட்டுமன்றிப் பிராமணரல்லாதோருடனான ஐக்கியத்தையும் இதன்போது ஏற்படுத்திக் கொண்டமையை உணர்த்துவதாக அமைந்த காலகட்டம் இது. பிராமணப் புனிதத்தை முன்னிறுத்தித் தமக்கு மட்டுமே ரிக் வேதம் ஓதும் உரிமையைத் தக்க வைப்பதற்குப் ‘பழமைவாத’ பிரிவு முயற்சித்தபோது, அத்தகைய பிராமண மேலாதிக்கத்தை நிராகரித்துச் சத்திரியர்களையும் வேத ஆய்வுக்கான வேதாந்தச் சிந்தனையாளர்கள் என அங்கீகரிக்கும் புதிய பிராமணிய எழுச்சிக்கு உரியதாகவும் உபநிடதக் காலம் அமைந்தது!

வேத – ஆகம இணைப்பின் பின்னரான இத்தகைய அக முரண்பாடு ஏற்பட்ட கிமு 6 ம் நூற்றாண்டில் வேதாகம மறுப்பு இயக்கமான ‘புறச் சமயங்களின்’ எழுச்சியும் தொடக்கம் பெற்றது (இந்தப் ‘புதிய சமயங்களும்’ சிந்துவெளிப் பண்பாட்டு வேரை உடையன). அப்போது புதிய சமூக சக்தியாக மேலாதிக்கம்பெற்று வந்த வைசியர்களை (வணிகத் திணையை) மேலாண்மைக்கு உரியோரென வெளிப்படுத்தும் கருத்தியலுக்கு உரிய பௌத்தம், சமணம் எனும் மதப் பிரிவுகள் பிராமண எதிர்ப்பு இயக்கங்களாக எழுச்சி பெற்றன. பிராமண மேலாதிக்கத்தை முழுமையாக முறியடிக்கும் வகையில் வலுவுடன் இயங்கிய வணிகக் கருத்தியலுக்கு உரிய பௌத்தம், சமணம், ஆசீவகம் என்பன கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் மேலாதிக்கமிக்க மதங்களாகத் திகழ்ந்தன (கிமு 6 ஆம் நூற்றாண்டு முதல் வணிகக் கருத்தியலுக்கு உரியதாக ஆசீவகம் இயங்கிய போதிலும் சமத்துவப் பண்புகளுடன் திகழ்ந்த அதன் இயல்பு காரணமாக ‘மேலாதிக்க’ மதத் தேவையை அதனால் நிறைவுசெய்ய இயலாமலாகி மெல்ல மெல்ல வரலாற்றரங்கிலிருந்து மறைந்து போக நேர்ந்தது; இது பற்றி முந்திய அமர்வுகளில் பேசி வந்துள்ளோம்).

வணிகத் திணை மேலாதிக்கத்துடன் திகழ்ந்த அந்த ஆறு நூற்றாண்டுகளாக ஒடுங்குதசையில் இருந்த பிராமண மதம் கிபி 4 ஆம் நூற்றாண்டு முதல் புதிய இனமரபுக் குழுக்களை உள்வாங்கி அவற்றின் கடவுளர்களுடன் இணைந்த இந்து மதமாகப் பரிணமித்துக்கொண்டது. இதன் வாயிலாக அன்றைய சமூக மாற்றப் புதிய சக்தியான நிலப்பிரபுத்துவத்துக்கு உரிய வடிவ மாற்றத்தைப் பெற்றுக்கொண்ட பின்னரே மீளெழுச்சி சாத்தியமாயிற்று (சாதிச் சமயங்களின் சமயமான இந்து மதத்துக்குள் பிராமணர்களுக்கு உரிய ஒன்றாக கரந்துறையும் பிராமண மதம் இருந்து வருகிறதே அல்லாமல் தனித்த ஆளுமையுடன் பழைய வடிவத்தில் மீட்சி பெற்றுவிடவில்லை). இந்த மாற்றத்தையும் அனைத்துப் பிராமணர்களும் ஒரு மனதாக மேற்கொண்டார்கள் என்பதற்கில்லை. பக்திப் பேரியக்கத்தின் வாயிலாக இந்த மாற்றத்தைத் தமிழகம் முன்னெடுத்த போது பிராமணியச் சிந்தனையில் புதிய மாற்றத்தின் பிரதிநிதியாக வெளிப்பட்ட எறிபத்த நாயனார், பழைய பிராமண மதக் கடவுளையன்றிச் சிவனை வழிபட முற்படுவதனை ஏற்க மறுத்து அவரது வழிபாட்டுக்குரிய லிங்கத்தைக் காலால் எற்றியுதைத்துத் துவம்சம் செய்த தனது தந்தையின் காலைத் துண்டித்தார் எனப் ‘பெரிய புராணம்’ எடுத்துக் காட்டி இருப்பதனைக் கண்டிருக்கிறோம்!

பிற்காலச் சாதி எதிர்ப்பு இயக்கங்கள்

இந்தியாவிலேயே நிலப்பிரபுத்துவம் மிக உச்ச நிலையிலும் வலுமையுடனும் இருந்த தமிழகத்தில் பக்திப் பேரியக்கம் உறுதிப்பட்ட பின்னர் கிபி 12 ஆம் நூற்றாண்டில் சமண மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த கன்னட மாநிலத்தின் சைவ மீளெழுச்சி இன்னொரு பரிமாணத்துடன் ஏற்பட்டது. கிபி 7 ஆம் நூற்றாண்டு முதல் அனைத்துச் சாதிகளையும் ஒன்றுபடுத்திப் பக்தி மார்க்கத்தைத் தமிழகம் முன்னெடுத்தது போல் ஐந்து நூற்றாண்டுகளின் பின்னரான நிலையில்லை; ஆதிக்க சாதியும் அவர்களைவிடப் புனிதர்கள் எனத் தம்மைக் காட்டும் பிராமணர்களும் சாதிய ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட ஏற்றதாக நிலப்பிரபுத்துவம் வலுப்பட்டு இருந்தது. அத்தகைய சூழலின் வெளிப்பாடகவே சித்தர் மரபின் தொடக்குனராகவும் இருந்து மேலாதிக்கப் பண்பற்றதாக திருமூலர் வெளிப்படுத்திய பதிக் கோட்பாடு, ‘தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் மேலாதிக்கம் செலுத்தும் இறை’ எனத்தக்க சைவசித்தாந்த அதியுயர் கடவுள் கோட்பாடாகப் பரிணமிக்க ஏற்ற வடிவத்துக்கு ஆட்பட்டிருந்தது. நிலப்பிரபுத்துவச் சிதைவு வெளிப்படத் தொடங்குகிற காலகட்டம் என்பதோடு சமண ஆட்சியும் நிலவிய சூழலுக்கு உரிய கன்னடத்தில் சித்தர் மரபின் இன்னொரு பரிணமிப்பாக வீர சைவம் எழுச்சி பெற்றது. ஏற்றத்தாழ்வு வாழ்முறை ஏற்பட்டதனால் தொடர்ந்து இயங்க இயலாத நிலைக்கு ஆட்பட்ட ஆசீவகம் சமயச் சடங்காசாரங்களை நிராகரிக்கும் சித்தர் மரபினூடாகத் தனக்கான இயங்கு முறையை வெளிப்படுத்தி இருந்தது என்பது குறித்து முந்திய அமர்வுகளில் பார்த்து வந்துள்ளோம். கன்னடத்திலும் பரவிய ஆசீவகத் தாக்கத்தின் பேறான சித்தர் மரபுக்குரிய தாக்கத்துடன் லிங்க வழிபாடு எனும் வடிவமாக வீர சைவத்தைக் கன்னட மாநிலத்தில் முன்னெடுத்த பசவர் மேலாதிக்க மதத்துக்குரிய அனைத்து அம்சங்களையும் நிராகரித்த தனிவகைச் சமயமாக வீர சைவத்தை வளர்த்தெடுத்தார். லிங்கம் முதன்மை பெற்ற காரணத்தால் வீர சைவர்கள் ‘லிங்காயத்துகள்’ என அழைக்கப்படும் மரபுண்டு!

ரோமிலா தாப்பரின் பெரு நூல் லிங்காயத்துகள் குறித்து மிகச் சுருக்கமாகவே கூறியிருந்த போதிலும் மிகக் காத்திரமிக்க அவரது கருத்துரைக்கு ஊடாகவே வீர சைவத்தைப் புரிந்து கொள்ள இடமேற்படுத்தி உள்ளார். அவரது வார்த்தைகள் இவை: “லிங்காயத்துகள் பக்தி மார்க்கப் பிரிவில் இருந்து வேறுபட்டார்கள். ஒரு தனித்த தெய்வத்திடம் பக்தி காட்ட வேண்டும் என்று போதிப்பதோடு மனம் நிறைவடையவில்லை. ஆனால் செயல்முறையில் மதப் பாசாங்குகளை (கபடங்களை) தாக்கினார்கள். அவர்களுடைய தொடக்கக் காலப் போதனைகள் பார்ப்பனியத்தைக் கேள்விக்குள்ளாக்கின. அதாவது மறுபிறப்புக் கொள்கை, மற்றும் பார்ப்பனிய சிந்தனையிலும் நடைமுறையிலும் பாதுகாத்துப் பராமரித்த வருணச் சட்டங்கள் ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கினார்கள். சில குழுக்கள் சமூக ரீதியாக மாசுடையவர்கள் (தீட்டு) என்ற கருத்தை ஒப்புவதற்கில்லை. லிங்காயத்துகள் சமூக விழிப்புணர்வு தேவை என்பதன் மேல் அழுத்தம் கொடுத்தார்கள். தரும சாத்திர சட்டங்களில் ஒப்புக்கொள்ளப்படாத சில சமூக நடைமுறைகளை ஊக்குவித்தார்கள். சான்றாகப் பெண்கள் வயதுக்கு வந்த பின்னர் பல காலம் கழித்து நடத்தப்படும் திருமணங்கள் மற்றும் விதவைகளின் மறுமணங்கள் ஆகியவற்றை ஊக்குவித்தனர். பெண்களின் உயர் அந்தஸ்தைப் பற்றி பிரச்சாரம் செய்தாலும் எப்படி இருந்தாலும் பெண்கள் புரோகிதராவதற்குத் தடை இருந்தது. பார்ப்பனிய நிலப்பிரபுத்துவம் பயிரிடுவோர்களை நிலப்பிரபுக்களுக்கும் அதைப்போலவே அரசுக்கும் வரியைச் செலுத்துமாறு அளவுக்கு மீறிய அழுத்தத்தைக் கொடுத்ததைக் காணமுடிகிறது. லிங்காயத்துகள் பார்ப்பனர்களிடமிருந்து தாக்குதல்களுக்கு ஆளானார்கள் என்பது ஆச்சரியப்படத்தக்கதல்ல. அப்படிப்பட்ட கருத்துகள் பாரப்பனரல்லாத குழுக்களைக் கவர்ந்தது. அவர்கள் சிரமணர்களின் சிந்தனைகளோடு சில ஒற்றுமைகளைப் பிரதிபலித்தார்கள். சிவன் லிங்க வடிவில் வணங்கப்பட்டார். அப்பிரிவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஒரு சிறிய லிங்கத்தைச் (கழுத்தில்) சுமந்தார்கள். அவர்கள் இறந்தவர்களைக் கொளுத்துவதைக் கைவிட்டு அதற்கு மாறாக மண்ணில் புதைத்தார்கள். இது பார்ப்பனியச் சடங்கினை எதிர்த்ததாகும். அவர்களுடைய சுதந்திரமான சமூக நடவடிக்கைத் தன்மைகள் கீழ் வருணத்து மக்களின் ஆதரவைச் சம்பாதித்துக் கொடுத்தன. எப்படி இருப்பினும் காலப்போக்கில் லிங்காயத்துகள் தாங்களே வருணப் பிரிவாக வெளிவந்தார்கள்” (ரோமிலா தாப்பர், 2016, “முற்கால இந்தியா – தொடக்கக் காலத்தில் இருந்து கிபி 1300 வரை” , என்.சி.பி.ஏச். , சென்னை. பக். 710-711).

lingayaths

கன்னட மாநிலத்தில் லிங்காயத்துகள் பெரும்பான்மையினராகவும் ஆதிக்கத்துடனும் உள்ள காரணத்தால் மூன்று வருடங்களின் முன்னர் ஒரு தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனர். “லிங்காயத்து என்பது ஒரு சாதி அல்ல; வீர சைவம் எனும் தனியொரு மதப் பிரிவுக்குரியோர் லிங்கத்தை அணிவதன் காரணமாக அமைந்த பெயர் அது. சாதி என்பதை அகற்றித் தனிச் சமயமாக லிங்காயத்துகளை அங்கீகரிக்க வேண்டும்” என்பதான அந்தத் தீர்மானத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. நாடு பூராவுமான இந்து சமயப் பெரும்பான்மைக்குப் பங்கம் ஏற்படும் என்ற பெரும்பான்மை வாதத்துக்குக் கட்டுப்பட்டு கர்நாடக வீர சைவர்களின் அதிகாரத்தரப்பு சமரசத்துக்கு ஆட்பட்டுள்ளது. தமது மாநிலத்தில் மிகப் பெரும்பான்மையுடன் இருக்கும் அவர்களே தனியொரு சாதி எனும் அடையாளத்தை அகற்ற இயலாத போது மிக மிகச் சிறுபான்மையினராகத் தமிழகம் உள்ளிட்ட ஏனைய மாநிலங்களிலும் இலங்கையிலும் உள்ள லிங்காயத்துகள் நிலை பற்றிப் பேச வேண்டியதில்லை; இலங்கையிலும் தமிழகத்திலும் மேலாதிக்கச் சைவ சித்தாந்தச் சைவ நெறிக்குக் கட்டுப்பட்ட ஒரு சாதியாகவே லிங்காயத்துகள் உள்ளனர். அந்தப் பெயரையும் மறந்து (மறக்கடிக்கப்பட்டு) ‘பண்டாரங்கள்’ எனும் கோயில் தொண்டூழியச் சாதியாகவே வாழ்கின்ற அவர்கள் குறித்த தனி நூலொன்றினை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இந்து நாகரிகத் துறை வெளியிட்டுள்ளது (சி. ரமணராஜா, “யாழ்ப்பாணத்தில் வீர சைவம் – வரலாறும் பண்பாடும்”, இந்து நாகரிகத் துறை, இந்துக் கற்கைகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம்-2020).

பார்ப்பனியத்தை நிராகரித்தபடி பசவர் என்கிற பிராமணர் உருவாக்கிய ஒரு மதப் பிரிவைத் தனிச் சாதியாக மாற்றும் வகையில் நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பில் சாதிமுறை வலுவுடன் இயங்கியுள்ளது. ஆயினும் நிலப்பிரபுத்துவ அமைப்பு உச்ச நிலையடைந்த காலத்தில் பலவேறு சாதிகளை இணைத்துப் பிராமணியத்துக்கு எதிராக ஒரு பார்ப்பனர் போராடித் தனது காலம் முழுமையும் தனி மதமாக அதனை வழிநடாத்தினார் என்பது கவனிப்புக்கு உரியது. நிலப்பிரபுத்துவம் அதனது உச்சத்தைக் கடந்து சிதைவுக்கு உள்ளான காலத்தில் தோற்றம்பெற்ற சீக்கிய மதம் இன்றுவரை தனியொரு சமயமாக நின்று நிலவ இயலுமாகி உள்ளது. புத்தருக்குப் பின்னர் சாதியத்தை முற்றாகவே நிராகரித்துத் தனி மதமொன்றை இந்தியாவினுள் உருவாக்கிய குருநானக் (1469 – 1539) சாதிய மறுப்புக்குரிய பௌத்தம், சமணம், இஸ்லாம் போன்ற மதக் கருத்துகளுடன் இந்து வாழ்முறைக்கு உரிய முற்போக்கான அம்சங்களையும் இணைத்துக் கொண்டு குருமார் மதமாக சீக்கியத்தை வடிவமைத்திருந்தார். சீக்கியர் என்பது சீடர் எனும் பொருளுடையது; பத்துக் குருமார்கள் முன்னிறுத்தப்படுகிற போதிலும் அவர்கள் புரோகிதர்களாகக் கொள்ளப்படுவதில்லை. இறைவன் அவதரிப்பதில்லை என்பதோடு குருமாராக ஏற்கப்பட்டவர்கள் இறைதூதர்களுமல்ல என சீக்கிய மதம் வலியுறுத்துகிறது. குரு – சீடர் முறைக்கு உரியதாக அமைந்த போதிலும் இரு தரப்பாரையும் சம நிலையிலேயே சீக்கியம் மதிக்கிறது. அடிநிலை விவசாய மக்களே அதன் அத்திவாரம்; உழைப்பைப் பெரிதும் போற்றிய சீக்கிய மத நிறுவுநரான குருநானக், தனது இறுதி மூச்சு கோதுமை வயலில் கலக்க வேண்டும் என வலியுறுத்தி அவ்வாறே இயற்கையுடன் சங்கமித்தவர்!

golden temple

மிக அதிக முற்போக்கு அம்சங்களுடன் உருவாகி வளர்ந்த சீக்கிய மதத்தின் உள்ளேயும் சாதிகள் உள்ளன. சாதியத்தைக் கோட்பாட்டு நிலையில் முற்றாக நிராகரித்த இஸ்லாம், கிருஸ்தவம் ஆகிய மதங்களை வரித்துக்கொண்டவர்களும் சாதிகளாகவே வாழுகின்ற சாதிய வாழ்முறைக்கு உரிய எமது சமூகத்தில் இது தவிர்க்கவியலாத ஒரு அம்சமே தான் (சீக்கிய மதம் குறித்து பேராசிரியர் ந. முத்துமோகன் பல நூல்களைத் தந்துள்ளார். “மதமும் மார்க்சியமும்” நூலில் சீக்கிய மத அடிப்படைகளை எழுதியுள்ள வகையில் இங்கு தொடராது அமைகிறேன். இந்த நூலின் புதிய பதிப்பு சவுத் விஷன் புக்ஸ் ஊடாக 2022 இல் வெளிவந்துள்ளது).

சாதி என்பது இந்து சமயத்தால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல என்றவகையில் இன்னொரு மதத்துக்குச் செல்வதனாலேயே சாதியிலிருந்து வெளியேறிவிட இயலாது. குறித்த பொருளுற்பத்தி முறை தோற்றுவித்து இருந்த சாதி வாழ்முறைக்கு ஆன்மீகப் புனிதக் கருத்தியலை இந்து மதம் கொடுத்துள்ளது; சாதியத்துக்குரிய அந்தக் கருத்தியலைக் கைவிட்டு வேறு மதத்துக்குச் சென்றாலும் கூட, தொடர்ந்தும் சாதி அடிப்படையிலேயே சமூக ஊடாட்டத்தை முகங்கொள்ளும் இருப்பு அற்றுப்போய்விடாது. எமக்குரிய ஏற்றத்தாழ்வான வாழ்வியல் தகர்க்கப்பட்டுச் சமத்துவ சமூகம் படைக்கப்படுகிற வரையில் சாதி இருக்கவே செய்யும் என்ற போதிலும் வீர சைவம், சீக்கியம் போன்றன பிராமணர்கள் ஆன்மீகப் புனிதம் உடையோர் என்பதனையும் தீட்டுக்குரிய சாதிகள் என உழைக்கும் மக்களை அவமதித்தமையையும் நிராகரித்துள்ளன என்பது கவனிப்புக்கு உரியன; சாதிகள் இடையே சமத்துவத்தை ஏற்படுத்த முனைந்த அவற்றின் நடைமுறைகளில் இருந்து எதிர்கால எமது இயங்காற்றலுக்கான படிப்பினைகளை நாம் பெற இயலும். உழைப்பை இழிவுபடுத்தும் பிராமணியத்துக்கான மரண அடிபோல உழைப்பைப் போற்றிய சீக்கிய மதம் நீடித்து இயங்க இயலுமான வல்லமையும் கற்றலுக்குரியது!

சாதியத்தை உறுதிப்படுத்தி இன்றைய வடிவில் வெளிப்படுத்திய இந்து மதம் கிபி 4 ஆம் நூற்றாண்டில் தோற்றம்பெற்ற ஒன்று. முன்னதாக ரிக் வேத கால முடிவில் சாதியத் தொடக்கத்துக்கான கருத்தியலைத் தொடக்கிய பிராமண மதம், தொடக்க கால இந்து மதம், இறுதி வடிவத்தை கிபி 14 ஆம் நூற்றாண்டளவில் வந்தடைந்த இந்து மத வடிவம் என்பன அனைத்தும் சாதியத்தை ஒரே வகையில் வெளிப்படுத்தியனவல்ல.

இந்து மத உயர் வடிவம் குறித்து அடுத்த அமர்வில் அலசுவோம்!

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5109 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)