Arts
18 நிமிட வாசிப்பு

சாதிய வாழ்வியல்

April 17, 2023 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம் மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

தமிழ்ப் பண்பாட்டுத் தொடக்கம் வேறெந்தச் சமூகத்தினதையும் விட தனித்துவம்மிக்கது. வரலாற்றுத் தொடக்கத்துக்குரிய கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் வணிகச் செழிப்புடன் நகர்ப் பண்பாட்டு விருத்தியைப் பெற்றிருந்த அதேவேளை அதற்கான வர்த்தகப் பரிமாற்றத்தை ஏற்றத்தாழ்வற்ற வகையில் சமூகங்கள் இடையே மேற்கொள்ள இயலுமாக இருந்தது. ஏனைய சமூகங்களில் நகர்ப் பண்பாட்டு எழுச்சி ஏற்பட முன்னர் ஏற்றத்தாழ்வான வாழ்முறை உருவாகி ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுகிற உழைப்பாளர்களது கடின வாழ்வுக்குரிய அடிமைத்தனம் ஏற்பட்டிருந்தது. அவ்வாறன்றித் தமிழக நகர்ப் பண்பாட்டு எழுச்சி, திணைகள் இடையேயும் திணைகளின் உள்ளேயும் சமத்துவ ஊடாட்டம் நிலவிய சூழலில் சாத்தியப்பட்டு இருந்தது. அவ்வாறு சமத்துவ வாழ்வியல் தகர்ந்து போக அவசியமில்லாமலே நகர உருவாக்கம் சாத்தியப்பட்டதில் தமிழகத்துக்கான புவியியல்-வரலாற்றியல் காரணிகள் எவ்வாறு அமைந்தன என்பது பற்றி முதல் பகுதியில் பார்த்திருந்தோம்.

kalapirar tamilnaadu

அதனைத் தகர்த்து மருதத் திணை மேலாதிக்கம் ஏற்பட்ட வரலாற்றுச் செல்நெறியே கி. மு 3 ஆம் நூற்றாண்டில் எமக்கான ஏற்றத்தாழ்வு சமூக முறைமையை உருவாக்கி இருந்தது; அவ்வாறு மேலாதிக்கத்தை ஏற்படுத்தியதன் வாயிலாக நிலவுடைமையைப் பெற்றிருந்த கிழார்கள் ஏனைய திணைகளுக்குரிய மக்கள் சக்தியைச் சுரண்டும் வகையில் அமைந்த உற்பத்தி  உறவைத் தகர்க்கும் வண்ணம் வரலாற்று மாற்றம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது. அந்த மாற்றத்தில் வணிக நலன் பேணும் அரசு முறை சாத்தியப்படுவதற்கு சமண-பௌத்த மதங்கள் வகித்த பங்கு பாத்திரம் பற்றியும் அலசி இருந்தோம். முன்னதாகச் சமத்துவ ஊடாட்டம் நிலவிய காலத்தின் தமிழ் வணிகர்களது மதமாக இருந்த ஆசீவகம் மற்றும் ஏற்றத்தாழ்வான காலத்தில் வலுப்பட்ட பௌத்தம் ஆகியவற்றைவிடவும் கூடுதல் ஆதரவைப் புதிய மாற்றக் காலகட்டத்தின் பிற்கூறில் வணிக மேலாதிக்கச் சக்திக்கான அங்கீகாரத்தை சமண மதம் பெற்றுக்கொண்டது. சமணம் ஏனைய இரு அவைதிக மதங்கள் போலவே பிராமணப் புனிதத்தை ஏற்காத போதிலும் அவற்றைவிடவும் அதிகளவில் வர்ணாசிரமக் கோட்பாட்டு அடிப்படையில் சமூகத்தை விளக்கும் கண்ணோட்டத்தைப் பெற்றிருந்தது.

களப்பிரர்களது ஆட்சிக் காலத்தின் இறுதிக் கட்டங்களிலேயே ஆசீவகம், பௌத்தம் ஆகியவற்றைவிடவும் சமணம் மேலாண்மையைப் பெற்றுவிட்டது. கி.பி. 5 ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து வட தமிழகத்தில் பல்லவர்கள் என்ற  புதிய ஆட்சியாளர்களது பேரரசு எழுச்சி பெறத் தொடங்கியது – தென் தமிழகத்தில் பாண்டியப் பேரரசின் மீளெழுச்சியும் விருத்தியடையத் தொடங்கியது. அவ்விரு பேரரச வம்சத்தினரும் கூட வணிகச் சமூக சக்தியின் மேலாண்மைக்குரிய சமண மத ஆதரவாளர்களாக இருந்த நிலையில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பக்திப் பேரியக்க எழுச்சி உருப்பெற்று வளரத் தொடங்கி இருந்தது; சமூக மாற்றத்துக்கான அந்தப் போராட்டம் வணிக மேலாதிக்கத்தை முறியடித்து நிலப்பிரபுத்துவச் சாதிகளது அரசதிகாரம் கோலோச்ச வழிசமைத்திருந்தது. பல்லவ மன்னனும் பாண்டிய மன்னனும் அந்தப் பக்திப் பேரியக்கத் தொடக்குநர்களான ஞானசம்பந்தராலும் நாவுக்கரசராலும் சைவ சமயத்துக்கு மாற்றப்பட்ட பின்னர் 19 ஆம் நூற்றாண்டு வரை நிலப்பிரபுத்துவச் சமூகத்துக்கான வைதிக நெறியே ஆட்சியுரிமை பெற்றுத் திகழும் வரலாறு தொடர்ந்தது.

இன்றுவரையான சமூக முறைமை மீது அதிக தாக்கம் செலுத்துவதான சாதிபேதம் வலுப்பட்டதில்,  நிலப்பிரபுத்துவ மேலாதிக்கம் ஏற்பட்ட பின்னரான கால வளர்ச்சியின் மாற்றப்போக்குக்குரிய தொடர்பின் நீடிப்பை அவதானிக்க இயலும். வரலாற்றுத் தொடக்க ஆரம்ப நிலையில் இருந்து சமத்துவ ஊடாட்டத்துடனேயே அக்காலத்துக்குரிய உயர் பண்பாட்டு விருத்தியைப் பெற்று முன்னேற இயலுமாக இருந்த தமிழர் வாழ்வியலில்,  படி நிலை இறக்கத்துடன் மக்களைப் பேதப்படுத்தும் சாதியம் ஊடுருவியது எப்படி? வெளியே இருந்து வந்த பிராமணச் சதிதான் சாதியம் மேலோங்க இடமளித்ததா? சாதி அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பு வேறு எத்தகைய மாற்றங்களுக்கு அடிகோலியது?

I. ஆணாதிக்கம்

origins of caste

சாதியத்தின் கருத்தியலை வடிவமைக்கும் பிராமணியம் பிராமணரை அதியுச்சப் புனிதத்தில் வைத்துத் தமக்கான பாதுகாப்பை வழங்கும் சத்திரியர்களையும் பொருட்களைப் பரிமாறும் வணிகத்துக்குரிய வைசியர்களையும் உழைப்பாளர்களான சூத்திரர்களையும், படி வரிசைப்படி இறங்கு வரிசையில் உரிமை மறுப்புகளுக்கும் கடின உழைப்புக்கும் உரியவர்களாக வகைப்படுத்தி உள்ளது; இந்த வர்ணப் படிநிலைக்கும் அப்பாலான அவர்ணர்களாக பஞ்சமர் எனும் தீண்டாமைக்கு ஆட்படுத்தப்பட்டவர்களாக கணிசமான தொகை மக்களை (ஐந்திலொன்று அல்லது ஆறிலொரு பங்கு விகிதாசாரத்தினரை) ஆக்கிவைத்துள்ளது.

பிராமணப் பெண்கள் பெற்றெடுக்கும் ஆண் மகனுக்கு இரு பிறப்புகள் உள்ளன; ஆண்களுக்கு மட்டுமேயான அந்த இரண்டாம் பிறப்பில் தீட்சை பெற்றுப் பூணூல் தரித்து பிராமண வர்ணக் கடமையைப் பொறுப்பேற்பர். இத்தகைய இரண்டாம் பிறப்பு பிராமணப் பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அடுத்தவொரு பிறப்பில் ஆணாகப் பிறந்து கதி மோட்சம் காணும்பொருட்டு இந்தப் பிறப்பில் மாடாக உழைத்து விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும்; அந்தவகையில் பெண்ணாகப் பிறந்த பிராமணப் பிறவியும் சூத்திர நிலையில் அணுகப்படும் (மிகமிகக் கடின உழைப்பும் உரிமை மறுப்புக்கும் உரிய) ‘இழி பிறப்புக்கு’ உரியவள் தான். ‘மாதத் தீட்டுக்கு’ உரிய மூன்று நாட்களில் ‘வீட்டுக்கு விலக்காக’ தனியிடத்தில் இருந்து தீண்டாமைக் கொடுமையை அனுபவிக்கும் அவர்ணர்களுக்கு உரிய அனுபவமும் பிராமணப் பெண்களுக்கு விதிக்கப்பட்டு இருந்தது (வீட்டுக்கு விலக்காகும் இந்த ‘மாதவிடாய்’ காலம் அனைத்துப் பெண்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு ‘பெண்மைக்கான சாதி கடந்த சமத்துவம்’ அனுமதிக்கப்பட்டது).

bramin-husband-and-wife

வீரயுகத்தின் மேலாதிக்கத் திணை உருவாக்கித் தந்த சமூக சக்தி கிழார்கள்,  தாம் வென்றெடுத்திருந்த மேலாதிக்கம் காலாகாலத்துக்கும் ஏற்புடையதாக்கப்படும் பொருட்டே வடக்கில் இருந்து வந்த பிராமணர்களுக்கு நிலம் வழங்கி ஆதிக்கச் சாதிப் படிநிலைக்குரிய உயர் பீடம் தமக்கானது என்ற தகுதி நிலையைக் கருத்தியல் வடிவில் வருவித்துக் கொண்டனர். சில நூற்றாண்டுகளின் பின்னர் நிலவுடைமையினதும் ஆட்சியுரிமையினதும் ஆதிக்க உச்சம் பெற்று வெள்ளாளர் என மாற்றம்பெற்ற கிழார்கள் அவ்வகையிலான சாதிப் பிரிவாக சமூக மேலாண்மையைப் பெறுவதற்காகவே தம்முடன் சரியாசனம் வழங்கப்பட்டவர்களாக பிராமணர்களைத் தொடர்ந்தும் அனுசரித்து வளர்த்து வந்தனர். தமிழின் மேலாதிக்கத் திணையாக வீரயுக யுத்த களத்தின் வாயிலாகத் தாம் இரத்தம் சிந்திப் பெற்ற வள வாழ்வில் பிராமணர்களைப் பங்குதாரர்களாக வரவேற்றுக் குடியமர்த்திக் கொண்ட எமது ஆதிக்க சாதிக்குரியோரது நலன் எவ்வகையில் பேணப்பட்டது என்பது எமக்கான சுவாரசியமிக்க தனிவகை வரலாறாகும். கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட வெள்ளாளர்களை மேவிவிடாதவர்களாகவே பிராமணர்கள் இயங்கி வந்தனர். பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்கூறில் வெள்ளாளர்-பிராமணர் முரண் வெளிப்பட்டதற்கான வரலாற்றுக் காரணி கவனங்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. இத்தகைய மாற்றப் போக்குகளை இந்த இரண்டாம் பகுதியில் அலசுவோம்!

கிழார்கள்-பிராமணர் எனும் சமூக சக்திகள் இடையே கூட்டு உருவாகும்போதே தமிழின் இயற்கை வழிபாடும் பிராமண மதமும் கலப்படைந்த வடிவில் வர்ணபேதம் பேசுபொருளாக ஆகியிருந்தது. அது வலுப்பெறு முன்னர் வணிகத் திணை மேலாதிக்கம் (கி.பி. 2 – கி.பி. 7 ஆம் நூற்றாண்டுகள்) ஏற்பட்டிருந்தது. இந்த மாற்றக் காலத்தில் பிராமணியம் ஆதிக்க நிலையை இழந்திருந்த போதிலும் சமண, பௌத்த மதங்கள் எம்மிடையே வலுப்பட்டு வந்த ஏற்றத்தாழ்வு வாழ்வியலை விளக்குவதற்கு வர்ணக் கோட்பாட்டை பயன்படுத்தும் நிர்ப்பந்தம் இருந்தது. வெள்ளாளர்-பிராமணர் ஒன்றுபட்ட தலைமையில் அனைத்துச் சாதிப் பிரிவினைரையும் அணிதிரட்டி வணிகத் திணை மேலாதிக்கத்தைத் தகர்க்கும் பக்திப் பேரியக்கம் முன்னெடுக்கப்பட்ட போது ‘சாதிச் சழக்குகளுக்கு’ எதிரான போர்க்குரல் முன்வைக்கப்பட்டது. வர்ண பேதத்தை வலுவுடையதாக்கிச் சுரண்டலை மோசமாக்கப் போகும் பிற்கால நிலையை அந்தக் கால உழைக்கும் மக்கள் கற்பனையிலும் கண்டிருக்க மாட்டார்கள்.

நிலவுடைமைத் திணை அதனது அதிகாரத்தை இழந்திருந்த காலத்தின் (கி.பி. 2 – 7 ஆம் நூற்றாண்டுகள்) வணிக மேலாண்மைக்கான அரசு, விவசாய விருத்திக்கான ஈடுபாடுகளைத் தவிர்த்து வணிகர்களுக்கான அரசியலில் அக்கறை கொண்டிருந்தது. அதன்பேறாக விவசாயம் நலிந்து பஞ்சம், பட்டினி, நோய் என்பன பல்கிப்பெருகி அழிவுக்காலம் வலுத்தபோது வணிகத் திணை மேலாதிக்கத்தை முறியடிப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட வேண்டியிருந்தது. விவசாய நலனை மேன்மைபெறச் செய்யும் ‘சிவன் மீதான பக்தி’ எனும் பதாகையின் கீழ் அத்தகைய  ஒன்றுபடலுக்கான வித்து கி.பி. 5 ஆம் நாற்றாண்டில் ஊன்றப்படுவதற்குக் காரணியாக இருந்தவர் வணிகச் சாதியைச் சேர்ந்த காரைக்காலம்மையார் எனப்படும் பெண் ஆளுமையாகிய புனிதவதியார் என்பதான நகை முரண்,  மிகுந்த கவனிப்புக்கு உரியது.

கொற்றவையை முதல் நிலையில் வைத்தும் கொற்றவை மைந்தனாகவே முருகனை வழிபடுவதாகவும் இருந்த தமிழின் ஆரம்பக் கட்ட (வீர யுக) இயற்கை வழிபாட்டின் விருத்திக்கு உரிய மதம் ‘பேய் மகளிர்’ எனப்படும் பெண் பூசகர்களின் சடங்குகள் ஊடாகவே இயங்கியது. அத்தகைய தாய்வழிச் சமூக – பண்பாட்டு வரலாற்றுத் தடத்தை மாற்றி சிவன் எனும் நிலப்பிரபுத்துவச் சமூக முறைக்குரிய ஆண் தெய்வத்தின் பூசகர்களாக, பெண்மையைப் புனிதக் கேடாகக் கருதும் பிராமணர்களிடம் கையளிக்கும் கைங்கரியத்தைப் புனிதவதியார் எனும் வணிகச் சாதிக்குரிய பெண் தொடக்கிவைத்த வரலாற்றுப் பின்னணியை எவ்வாறு விளங்கிக்கொள்வது? அது பற்றி இந்த இரண்டாம் பகுதியில் தேடுதலை மேற்கொள்வோம்!

II . சற்சூத்திரர்களது பதி

வணிக மேலாதிக்கச் சமூக முறைமையானது வாழ்வியல் சிதைவுகளை ஏற்படுத்திய போது அன்றைய அந்த ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவரான காரைக்காலம்மையார் முற்போக்கான திசை வழியில் சமூக மாற்றம் ஏற்படுவதனைத் தொடக்கி வைத்தார். அதன் வாயிலாக சாத்தியப்பட்ட மாற்றச் செல்நெறியில் உலகின் முதல் நிலை நாட்டுக்கான உச்சத்தைத் தமிழகம் பெற இயலுமாயிற்று. வணிகச் சாதியின் மேலாதிக்கத்தைத் தகர்த்து அரசதிகாரத்தைக் கையகப்படுத்திய நிலப்பிரபுத்துவச் சாதிப் பிரிவினர்க்கும் வணிகத் தரப்பாருக்கும் இடையேயான உறவு தொடர்ந்தும் பகை முரணுக்குரியதாக இயங்கி வரவில்லை. இந்தோனேசியா, வியட்நாம், மலேசியா போன்ற தூர தேசங்களுடனான வர்த்தக ஊடாட்டத்தில் தமிழ் வணிகர்களது நலனைப் பேணும் பொருட்டாகவே சோழப் பேரரசு அந்தப்பகுதிகள் மீதான பெரும் கப்பல் படையெடுப்பை மேற்கொண்டிருந்தது.

ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவச் சமூக எழுச்சிக்கான ஆட்சி மாற்றத்தை சாத்தியப்படுத்திய அடிமைப் புரட்சி ஆண்டான்கள் – அடிமைகள் என்ற இரு தரப்பாரையும் இல்லாமலாக்கிப் புதிய சமூக முறைமைக்கான நிலப்பிரபுத்துவ – பண்ணையடிமை (விவசாய) வர்க்கங்கள் எனும் வேறு பிரிவினரை வரலாற்று அரங்குக்கு வழங்கியிருந்தது. தமிழர் வீர யுகத்தில் கிழார்களிடம் நிலங்களை இழந்து உருவான இடைநிலை, கைத்தொழில், அடிநிலை எனப் பல்வேறு தொழிற்பிரிவுகளுக்கான சாதிகள் என்பவை பின்னதாக வணிகச் சாதி மேலாதிக்கம் பெற்ற அறநெறிக் காலத்திலும் நீடித்தன; மீண்டும் நிலவுடைமைச் சாதிகள் நிலப்பிரபுத்துவப் பொருளுற்பத்தி உறவுக்குரிய பிரமாண்டமான விருத்தியுடன் எழுச்சியுற்ற போதும் முந்திய சாதிகள் நீடித்தன. ஐரோப்பாவில் பழைய வர்க்கங்கள் அழிந்து சமூக மாற்றத்துடன் புதிய வர்க்கங்கள் தோன்றுவதைப் போலத் திணை மேலாதிக்கச் சமூக சக்தியின் மாற்றத்தோடு சமூக அமைப்பு மாற்றத்துக்கு ஆட்பட்ட போதிலும் வேறான புதிய சாதிகள் தோன்றுவதில்லை!

அந்தவகையில், காரைக்காலம்மையாரது பணி வணிகச் சாதிக்குத் துரோகமிழைப்பதாக அமையவில்லை – நிலப்பிரபுத்துவ ஆட்சிக் காலம் ஏற்படுத்தித் தந்த வாய்ப்புடன் வணிகச் சாதியினரில் கணிசமானோர் சைவ சமயத்தைத் தழுவியும் இருந்தனர். அதேவேளை, ஒரு பெண் ஆளுமையால் ஏற்பட்ட மாற்றம் என்ற போர்வைக்குள் பெண்களுக்கு எதிரான புதிய மேலாதிக்க ஒடுக்குமுறைகள் வளர்ந்தமையும் கவனிப்புக்கு உரியது.

அவ்வாறேதான், சோழப் பேரரசர் காலம் வரை (13 ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரை) தமிழ் நிலப்பிரபுத்துவச் சாதியின் மேலாதிக்கத்துக்குத் துணைச் சக்தியாக இயங்கி வந்த பிராமணர் தரப்பு ஆந்திரப் பிரதேச விரிவாக்கமாகப் படர்ந்த விஜயநகரப் பேரரசுக் காலத்தைத் தொடர்ந்து சூத்திரர்களை இழிவுபடுத்தியவாறு தமக்கான ஆன்மீகப் புனிதங்களை முனைப்பாக்கித் தமது மேலாதிக்கம் நோக்கிய கருத்தியல் வீச்சுகளை வளர்க்க முற்பட்டனர்.

தமிழ் நிலப்பிரபுத்துவச் சாதியானது ‘பிந்தி வந்த கொம்பு செவியை மேவி வளர முற்பட்ட போது’ விழிப்படைந்து அதனது ஆன்மீக மேலாண்மையை நிலைநிறுத்தும் பொருட்டு தனக்கேயான மடங்களை விரிவுபடுத்தியதோடு திராவிடத் தொன்மையில் இருந்து (ஆகமங்கள் ஊடாக) தமக்குரிய தனித்துவத் தத்துவமான சைவசித்தாந்தத்தை 13 ஆம் நூற்றாண்டிலிருந்து வெளிப்படுத்தி விருத்தியுறச் செய்தது. சூத்திரர்களில் உடலுழைப்பில் ஈடுபடுவோரை விடவும் மேலானவர்களாக ஆதிக்கச் சாதியின் நிலவுடைமையைப் பெற்றிருந்த தரப்பினர் தம்மை வேறுபடுத்தும் வகையில் ‘சற்சூத்திரர்’ எனப் புனிதப்படுத்திக் கொண்டனர்.

பிராமணர்களைப் போலவே உடலுழைப்பை இழிவானதாகக் கருதிய சைவமட ஆதீனங்களின் பிரபுக்களும் சாதியத்துக்கான அடித்தளத்திலேயே இயங்கினர். பிராமணர்கள் முன்னிறுத்திய வேத-வேதாந்தம் மற்றும் பிராமணியத் தரிசனங்களைக் காட்டிலும் முந்திய திராவிட மூலங்களாகவுள்ள ஆகமம், ஆசீவகம், சாங்கியம் போன்ற தத்துவ வீச்சுகளை உள்வாங்கி விருத்தி செய்த வடிவில் முன்வைக்கப்பட்ட சைவசித்தாந்தத்தின் பதிக் கோட்பாடு கடவுள் பற்றிய கருத்துருக்களில் மிக உச்சமான தெளிவை எட்டியிருந்தது!

பலதரப்பட்டோரையும் ஒன்றுபடுத்திப் போராடியவாறு வளர்ந்து வந்த தமிழர் வரலாறு சோழப் பேரரசர் ஆட்சியின் உச்ச நிலையுடன் முடிவுக்கு வந்துவிட்டது. சாதிய மேலாதிக்கம் அதனது புனிதத்தை முன்னிறுத்தி ஒடுக்குமுறையை வலுப்படுத்திய பின்னர் அனைவரையும் ஒன்றிணைத்து முன்னேறும் வரலாறு படைத்தல் சாத்தியமற்றதாகியது. சற்சூத்திரர்களது பதியானது தனித்துவமானதும் உச்ச வடிவிலான கடவுள் கோட்பாடு என்பதும் கவனங்கொள்ளப்படும் அதேவேளை அவர்களது மேலாதிக்கத்தின் சமூக அங்கீகாரத்துக்கான அடையாளம் அது என்பதும் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. வேதாந்தத்தின் பிரமம்,  பிராமண மேலாதிக்கத்தின் அடையாளமாக இருப்பதனை வைத்து ஆன்மிகத் தளத்தில் சற்சூத்திரர்களும் இரண்டாம் நிலைக்கு ஆட்படுத்தப்பட்டனர்; அதனை முறியடிக்கும் வகையில் தன்னிகரில்லா சக்தியாக முன்னிறுத்தப்பட்ட பதி இவர்களது ஆன்மிக உயர்பீடத்தை உத்தரவாதப்படுத்திய போது சாதிய வடிவத்தினூடாகவே அந்த மேலாதிக்கத்தைத் தக்கவைக்க முயன்றனர். சாதியப் புனிதம் சார்ந்த இந்த இடைவெளிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவிய பிரமணத் தரப்பால் மேலாதிக்கப் புனிதப் பீடத்தில் உச்ச இடம் நோக்கி முன்னேற இயலுமாயிற்று!

III. சமரச முரண்

பெரிய புராணம், சைவசித்தாந்தம் என்பன தொட்டு,  தமிழிசை, நடனக்கலை வரையான தமிழகச் செழுமைகள் அனைத்தும் சமஸ்கிருதத்துக்கு மடைமாற்றப்பட்டன. காலப்போக்கில் சமஸ்கிருதத்தில் இருந்தே அவையனைத்தும் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டன என்பதாக நம்பவைக்கப்பட்டன. பதினேழாம் நூற்றாண்டில் சைவசித்தாந்தத்துக்கு விருத்தியுரையை “சிவஞான மாபாடியம்” என விளக்கியுரைத்த சிவஞான முனிவர், ‘சமஸ்கிருதத்தில் இருந்து மெய்கண்டதேவர் முதலியோரால் தமிழ்ப்படுத்தப்பட்ட சைவசித்தாந்தம்’ என்பதாகவே கருத்துரைத்திருப்பதனைக் காணலாம். இருபதாம் நூற்றாண்டின் பிற்கூறிலேயே, ’தமிழின் ஆக்கமாகத்தான் சைவசித்தாந்தம் உருவாக்கம்பெற்றது, பின்னரே சமஸ்கிருத மொழிபெயர்ப்பு ஏற்பட்டது’ எனும் உண்மை வெளிக்கொணரப்பட்டது!

சாதிய மேலாதிக்கத்தின் வாயிலாக தமிழின் ஆதிக்க சாதியானது சுரண்டலைத் தொடர்ந்து மேற்கொள்ளும்போது சாதியப் புனிதத்தில் தமக்கான அதியுச்சத்தைக் கட்டமைத்து வைத்திருக்கும் பிராமணரை ஓரங்கட்டிவிட இயலுவதில்லை. வேத-வேதாந்தத்துக்கும் மேலானது சைவசித்தாந்தம் என்று தமது மேலாதிக்கத்தைச் சற்சூத்திரர்கள் நிலைநிறுத்த முற்பட்டபோது ஓரிரு நூற்றாண்டுகளுக்குள்ளாக சமஸ்கிருத மூலமாகவே சைவசித்தாந்தங்கூட வெளிப்பட்டது என மாற்றிப் புனைந்துரைகளைக் கட்டமைப்பதற்கு பிராமண மேலாதிக்கத்தால் இயலுமாகிவிட்டது. இந்த மாற்றத்தைச் செய்த வண்ணம் வேதாந்த-சித்தாந்த சமரச சன்மார்க்கத்தை ஏற்படுத்தும் வரலாற்று இயக்கமும் சாத்தியமாகியது. தாயுமான சுவாமிகளது சமரச சன்மார்க்க நெறி இந்து மதத்தினுள் பேதங்களைக் களையும் பெருமுயற்சி; தமிழியலின் மீது அது ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, இரண்டு நூற்றாண்டுகளில் வள்ளலார் வாயிலாக மதங்கள் கடந்த பெரு நெறியாக ‘சுத்த சமரச சன்மார்க்கம்’ எனப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்கூறில் விரிவாக்கம் பெற்றிருந்தது!

பிராமண மேலாதிக்கம் அதனை நிலைநிறுத்துவதற்கான தனி முயற்சியே சமரச சன்மார்க்கம் எனக் கருதிவிட இயலாது. கூடவே தமிழின் ஆதிக்கச் சாதி நலனைப் பேணும் பொருட்டு மேலாதிக்கத்துக்குரிய அவ்விரு தரப்பாரும் ஒன்றிணைந்து மேற்கொண்ட முயற்சியே சமரச சன்மார்க்க இயக்கம். இவ்வகையிலான வேதாந்த-சித்தாந்த இணக்கப்பாட்டு முயற்சி மேற்கிளர்ந்த சமகாலத்தில் (முன் பின்னாகவும்) அருணகிரிநாதர், குமரகுருபரர் ஆகியோரது முருக வழிபாட்டை முன்னிறுத்திய இரண்டாம் பக்தி இயக்க எழுச்சியும் இயங்கு நிலையைப் பெற்றிருந்தது.

விஜயநகரப் பேரரசின் ஆட்சி மதமாக வைணவமே இருந்தது; தொடர்ந்த நாயக்கராட்சிக் காலத்திலும் வைணவமே ஆட்சியாளரால் முன்னிலைப்படுத்தப்பட்ட போது தமது நலிவடைதலைத் தவிர்க்கும் பொருட்டாக வெள்ளாள – தமிழ்ப் பிராமண மேலாதிக்கத்துக்கான சைவ சமயிகள் முருகனை முன்னிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். வெகுஜனத் தளத்தில் சிவனது மைந்தனாக வழிபடப்படும் முருகன் தத்துவார்த்தத் தளத்தில் சிவனின் மூர்த்தமாகக் காட்டப்படுபவர். வைணவ மதப் பரம்பொருளான (முழுமுதற் கடவுளான) விஷ்ணு முருகனது தாய் மாமாவெனப் புராணங்கள் முன்னிறுத்துகிற நிலையில் ஆட்சியாளர்களது மதத்துடன் தமிழர் சமூக மேலாதிக்க சக்தியான சைவ-நிலப்பிரபுத்துவத் திணை பதினேழாம் நூற்றாண்டில் முன்னெடுத்த சமரச முயற்சியே முருக வழிபாட்டு (இரண்டாம்) பக்தி இயக்கம்.

வைணவ – சைவ முரண்பாடாயினும் பிராமண-வெள்ளாளர் எனும் நிலப்பிரபுத்துவச் சாதிகள் இடையேயான பிணக்குகளாயினும் சரி, அவை ஒரே உற்பத்தியுறவுக்குரிய மேலாதிக்கத் திணையின் இரு தரப்பார்களுக்கு இடையிலானவை. விஜயநகரப் பேரரசு தமிழகத்தில் ஆட்சி மேற்கொண்ட போது தமிழ் நிலப்பிரபுக்களது நிலங்களை அபகரித்ததில்லை; ஆட்சியாளருடன் வந்து நிலப்பிரபுக்களாகப் பரிணமித்தோர் தமக்கான நிலங்களைக் காடழித்துப் பெற்றுக்கொள்வதில் ஆட்சியாளரின் அனுசரணைக்கு உரியோராக இருந்தனர். தமிழ் நிலப்பிரபுக்கள் ஆட்சியாளரின் நேரடி ஆதரவை இழந்திருந்த நிலையில் தமிழிலக்கியம் குறவஞ்சி – பள்ளு இலக்கிய வடிவங்கள் வாயிலாக அடிநிலை மக்களைப் பேசுபொருளாக்கியதைப் போலவே இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட தமிழ்க் கடவுளான முருகனும் ஆதிக்கச் சாதிப் பரம்பொருளின் மூர்த்தமெனப் பதவியுயர்வு பெற வாய்த்தது.

முன்னதாகப் பக்திப் பேரியக்கத்தில், சமண – சைவ மோதல் என்பது வணிக ஆதிக்கத்துக்கானதாக இயங்கி வந்த உறவைத் தகர்த்து நிலவுடைமையாளரின் மேலாண்மைக்குரிய புதிய உற்பத்தி உறவை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டது; பகை முரணுக்குரிய அந்தப் போராட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட சமணர்கள் கழுவேற்றப்பட்டனர். வணிக – நிலப்பிரபுத்துவத் திணைகள் இடையேயான மேலாதிக்கத்தைத் தக்கவைக்கவும் – வென்றெடுக்கவுமான மோதலின் கருத்தியல் தள வெளிப்பாடாக அந்தப் பண்பாட்டுப் புரட்சி அமைந்திருந்தது. வெற்றி பெறுவதற்காக நிலப்பிரபுத்துவக் கருத்தியலுக்குரிய சைவமும் வைணவமும் தமக்குள்ளேயுள்ள முரண்களை ஓரங்கட்டி வைத்து ஒன்றுபட்டு போராடின; பல்வேறு சாதிப் பிரிவுகளையும் ஒன்றிணைத்த வெள்ளாள – பிராமண தலைமைச் சாதிகள் இடையே சில நூற்றாண்டுகளின் பின்னர் ஏற்பட்ட முரண்,  முந்திய நிலவுடைமை – வணிகத் திணைகள் இடையே இருந்த பகை முரண்பாடு போன்றதல்ல. இது நேச முரண்; இலகுவில் சமரசங்களைக் கண்டடைந்த பிணக்கு. ஒரே வாழ்வியல் மேலாண்மையின் இரு ஆதிக்கத் தரப்பாளர்களது நலனைப் பங்கிடுவதில் வந்தமைந்த சர்ச்சை.

தமக்குள் சமத்துவத்துடன் இயங்கிய திணை வாழ்வைத் தகர்த்துக் கொண்டு மருதத் திணை மேலாதிக்கம்பெற இயலுமாகியது என்பது பிறர் எவரதும் சதியால் அல்ல; யுத்த சன்னதத்தோடு முன்னேறித் தாக்கி, ஏனைய திணைகளை ஆக்கிரமிக்க ஏற்ற பெரும் படைக்கு உணவளிக்க ஏற்ற அளவில் நெல்லுற்பத்தி விரிவாக்கம் மருதத்திணைக்கு வாய்த்த போது வரலாற்று இயக்குவிசை உந்தலுடன் அந்த மேலாதிக்கம் ஏற்பட்டது. வேளாண்மைத் திணையாகப் பிறர் மீது ஆதிக்கம் செலுத்தும் வல்லமையுடன் வெள்ளாளர் சாதியெனப் பரிணமிப்பதற்கான கருத்தியலை வழங்க முன்வந்த பிராமணருடன் காலப்போக்கில் முரண்பாடு தோன்றிய போதிலும், அவ்வப்போது கூர்மைப்பட்டாலும் தவிர்க்கவியலாத ஒத்த நலனைப் பேணும் பொருட்டு உடன்பாட்டுக்கு வருவதுமான வாழ்வியலைக் கொண்டிருந்தது அந்த ஆதிக்கச் சாதியப் பிணைப்பு!

இந்த இரண்டாம் பகுதி அத்தகைய சாதிய வாழ்வியலின் தொடக்கத்தையும் வளர்ச்சிகளையும் ஒன்பது தலைப்புகளின் கீழ் பேசும். பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளுக்கு உரிய “சாதியத் தகர்ப்புக் கருத்தியல்கள்” பற்றிப் பின்னர் மூன்றாம் பகுதியில் அலச இயலும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8996 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)