Arts
14 நிமிட வாசிப்பு

வாசுகி கணேசானந்தனின் ‘சகோதரனற்ற இரவு’

March 26, 2024 | Ezhuna

ஈழத்தில் போர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உக்கிரமாக நடந்திருக்கின்றது. அது அங்கிருந்த அனைத்து மக்களையும் ஏதோ ஒருவகையில் பாதித்திருக்கின்றது. இப்போது யுத்தம் முடிந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. போர் ஒரு கொடுங்கனவாய் மக்களின் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டிருந்தாலும், அதன் நிமித்தம் ஏற்பட்ட உடல்/உள வடுக்கள் இன்னும் இல்லாமல் போகவில்லை. இனங்களிடையே நல்லிணக்கம் மட்டுமில்லை, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆற்றுப்படுத்தல்கள், உதவிகள் கூட போரால் வெற்றி கொள்ளப்பட்ட அதிகாரத் தரப்பால் நிகழ்த்தப்படவில்லை. இன்னுமின்னும் இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு இனங்களும் துவிதங்களாகப் பிரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஈழத்துப் போர்ச்சூழலின் பின்னணியில் எழுதப்பட்ட பனுவல்களை முன்வைத்து வாசிப்புச் செய்யப்படுகின்ற ஒரு தொடராக ‘இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள்’ அமைகின்றது.

இலங்கை, பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து ஒரு பதற்றமான சூழ்நிலையிலேயே இருந்து வந்திருக்கின்றது. 1956 தனிச் சிங்களச் சட்டம், இன்னொரு இனத்தின், மொழியின் மீதான வெறுப்பிற்கான மிகச் சிறந்த உதாரணமாகும். அதன் நீட்சியாக 1956, 1958 இல் தமிழர் மீதான படுகொலைகள் நடந்திருக்கின்றன. ஒரு சிறிய தீவு நாட்டின் அனைத்து இனங்களையும், அவர்களின் மொழி, கலாசாரங்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்பது அரச அதிகாரத்தை எடுத்துக் கொண்டவர்களுக்குத் தெரியவில்லை. 

அதனால்தான், பின்னரான காலங்களில் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் அநியாயமாக இந்தச் சிறிய தீவு நாட்டில் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. இலங்கை சுதந்திரம் அடைந்த பின், முழுநாடும் அமைதியாக இருந்த காலங்கள் என்று பார்த்தால் அது மிக அரிதாகவே இருக்கும். தமிழர்களின் மீதான சிங்களப் பேரினவாதத்தால் 1977, 1983 காலங்களில் பல படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. பின்னர்  2009 வரை நாடு முற்றுமுழுதாக போரிற்குள் அமிழ்ந்திருக்கின்றது. 

vasuki

இவ்வாறாக பல்வேறு சூழ்நிலைகளால் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நாட்டின் யாழ்ப்பாணப் பிரதேசத்தை பின்னணியாக வைத்து வாசுகி கணேசானந்தன் ‘சகோதரனற்ற இரவு’ (Brotherless Night) எனும் நூலை எழுதியிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் 1980-1989 வரை நடந்த நிகழ்வுகள் பல இங்கே விரிவாகச் சொல்லப்படுகின்றன.

சசி என்கின்ற பெண்ணே இந்தக் கதையை நமக்குச் சொல்கின்றார். சசிக்கு நான்கு ஆண் சகோதரர்கள். அந்தக் குடும்பத்தில் எல்லோரும் வைத்தியராக வர விரும்புகின்றவர்கள். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் சசியின் மூத்த சகோதரன் நிரஞ்சன் வைத்தியராகத் தயாராகி விட்டிருந்தார். சசி அவரின் சகோதரர்கள் சீலனோடும், அவரின் நண்பரான ‘கே’யுடனும் சேர்ந்து உயர்தரப் பரீட்சைக்குப் படிக்கின்றார். அப்படிப் பழக்கமாகின்ற ‘கே’யுடன் சசிக்குக் காதல் வருகின்றது. அது ஒரு வகையான ‘யாழ்ப்பாணத்துக் காதல்’. சொல்லியும், சொல்லாமலும், தெரிந்தும், தெரியாமலுமாக முகிழ்கின்ற நேசமென எடுத்துக்கொள்ளலாம்.

Image 4

இந்தக் காலத்திலேயே இவர்கள் படிக்கச் செல்லும் யாழ். பொதுசன நூலகம் தீக்கிரையாக்கப்படுகின்றது. ஈழத்தில் தமிழர்களின் நீண்டகால வரலாற்றைச் சொல்லும் பல நூல்கள் அழிந்து போகின்றன. இந்தக் காலங்களில் யாழில் பொலிஸ் மீதான தமிழ் இளைஞர்களின் தாக்குதல்கள் நிகழ்கின்றன. இதன் நிமித்தம் பொதுசனமாக இருந்த கேயும், சசியின் சகோதரர்களும் பொலிஸால் விசாரிக்கப்படுகின்றனர், தாக்கப்படுகின்றனர்.

சுகயீனம் காரணமாக சசியால் உயர்தரப் பரீட்சையை முதற் தடவையில் சிறப்பாகச் செய்யமுடியவில்லை. மறுமுறை பரீட்சைக்குப் படிக்க அவர் அவரது மூத்த சகோதரனான நிரஞ்சனோடு கொழும்புக்குப் அனுப்பபடுகின்றனர். இப்போது நிரஞ்சன் ஒரு வைத்தியசாலையில் வேலை பார்க்கும் மருத்துவர் ஆகிவிட்டார். சசியும், நிரஞ்சனும் அவர்களின் அம்மம்மாவின் வீட்டில் தங்கியிருக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில்தான் கொழும்பில் 1983 ஜூலைக் கலவரம் தமிழர்களுக்கெதிராக நிகழ்கின்றது. கிட்டத்தட்ட 3000 இற்கு மேற்பட்ட தமிழர்கள், தமிழ் மொழி பேசுகின்றவர்கள் என்ற ஒரே காரணத்திற்காய் அடையாளமிட்டுக் கொல்லப்பட்டார்கள். 

இந்தப் படுகொலையில் ஒரு மாதிரியாக சசியும், அவரின் அம்மம்மாவும் தப்பி யாழ் வந்து சேர்கின்றார்கள். துன்பியல் நிகழ்வாக, இன்னொரு நண்பருடன் தெஹிவளைக்குச் சென்ற நிரஞ்சன் என்றென்றைக்குமாய்த் திரும்பாமல் காணாமற் போகின்றார். பிறகு சில மாதங்களுக்குப் பிறகு நிரஞ்சன் சிங்களக் காடையர்களால் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தி கொழும்பில் இருந்த வேறொரு குடும்பத்தால் உறுதிப்படுகின்றது. சசி மிக நெருக்கமான ஒருவரின் இழப்பை வாழ்வில் முதன்முதலாகச் சந்திக்கின்றார்.

மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிவரும் சசிக்கு, அவர் நேசிக்க விரும்பும் ‘கே’ மட்டுமல்ல, அவரது இரண்டு சகோதரர்களான சீலனும், தயாளனும் கூட புலிகள் இயக்கத்தில் இணைந்த செய்தி காத்திருக்கின்றது. சில வருடங்களில் மருத்துவத் துறைக்குத் தேர்வு செய்யப்பட்ட சசி, அஞ்சலி என்கின்ற அவரது பேராசிரியரைப் பல்கலைக்கழகத்தில் சந்திக்கின்றார். அஞ்சலியினதும், அவரது துணைவரான வரதனதும் நட்பானது சசியின் வாழ்க்கையை வேறொரு திசையில் அழைத்துச் செல்கின்றது. இதே காலகட்டப் பகுதியில் இந்திய இராணுவம், ‘அமைதிப்படை’ என்கின்ற பெயரில் இலங்கைக்குள் வந்து இறங்குகின்றது. 

புலிகளுக்கும், இந்திய இராணுவத்துக்கும் போர் மூளத் தொடங்குகின்றது. இந்தக் காலத்தில் புலிகள் போராட்டத்தின் பெயரில் செய்யும் கொலைகளை, அவ்வப்போது வீட்டுக்கு வரும் அவரின் சகோதரர்கள், கே உள்ளிட்டோரோடு சசி விவாதிக்கின்றார். காயமடையும் புலிகளை, ஒரு மருத்துவர் என்ற ரீதியில் சசி காப்பாற்றவும் செய்கின்றார். ஒருவகையில் இங்கே சசி இருதலைக் கொள்ளியாக, ஒரு பக்கம் சகோதரர்களையும் காதலர் கேயையும் புரிந்து கொள்கின்றவராகவும், மறுபுறத்தில் அநியாயமாக பலர் கொலை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவராகவும் தவிக்கின்றார்.

இதே காலகட்டப் பகுதியில் ‘கே’ புலிகளின் சார்பில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றார். அந்த உண்ணா விரதத்தின் ஒவ்வொரு நாள் நிகழ்வும் விபரமாக இங்கே விபரிக்கப்படுகினறது. ‘கே’யின் மீது நேசம் வைத்த சசி, அவரின் இறுதி மூச்சு வரை அந்த உண்ணா விரத மேடையில் ஒரு வைத்தியராக இருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தின் நிலைமை இன்னும் மோசமாகின்றது. இந்திய இராணுவம் உள்ளிட்ட இயக்கங்களின் பொது மக்கள் மீதான‌ வன்முறையை பேராசிரியர்களான அஞ்சலியும், வரதனும் எழுத்தில் பதிவு செய்கின்றனர். அந்த இரகசியான செயற்பாட்டில் சசி தன்னையும் இணைத்துக் கொள்கின்றார். ஒரு முறை இந்திய இராணுவத்தால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பிரியா என்கின்ற பெண்ணுக்கு சசி வைத்தியம் பார்க்க வேண்டியிருக்கின்றது. பிரியாவின் நான்கு சகோதரர்களும் பிரியா வன்புணர்வு செய்யப்பட்ட நாளில் இந்திய இராணுவத்தால் கொல்லப்படுகின்றனர். பிரியா வன்புணர்வினால் கருத்தரித்துவிட்டார் என்பதை சசி கண்டுபிடிக்கின்றார்.

இனியும் யாழ்ப்பாணத்தில் சசியை வைத்திருக்க முடியாதென, சசியையும் அவரது கடைசிச் சகோதரனான ஆர்யனையும் இங்கிலாந்துக்கு சசியின் பெற்றோர் அனுப்புகின்றனர். இதன் நிமித்தம் இவர்கள் கொழும்பிற்கு சென்ற போது புலிகளின் தற்கொலைத் தாக்குதல் ஒன்று அங்கே நடக்கின்றது. அந்த‌ தற்கொலைப் போராளி வன்புணர்வுக்குள்ளாகி கருத்தரித்திருந்த பிரியா என்பதை ஒருவகையில் சசி கண்டடைகின்றார்.

இங்கிலாந்தில் கொஞ்சக்காலம் வசித்துவிட்டு சசி மீண்டும் யாழ்ப்பாணத்துக்குத் திரும்புகின்றார். அப்போது அஞ்சலியைப் புலிகள் கடத்திக் கொண்டுபோய் காணாமற் செய்துவிடுகின்றார்கள். காணாமற் போன அஞ்சலியின் உடைமைகளைப் வந்து எடுத்துச் செல்லுமாறு புலிகள் அவரின் கணவரான வரதனிடம் சொல்கின்றார்கள். அஞ்சலியின் இருப்புக் குறித்து விசாரிக்க வரதனும், சசியும் புலிகளின் முகாமுக்கு செல்கின்றனர். அந்த முகாம் பொறுப்பாளாரான ‘ரி’ என்பவருடன் சீலனும் நிற்கின்றார்.  

காணாமற் போய்விட்ட அஞ்சலி இறந்துவிட்டார் என்பதை அறிந்து பல்கலைக்கழக மாணவர்கள், பொதுசனங்கள் அவ்வளவு அச்சத்துக்கு நடுவிலும் ஒரு பேரணியைச் செய்கின்றார்கள். அதில் முன்னே போகும் வரதன், அதுவரை எழுதப்பட்ட இரகசிய அறிக்கைகளில் ஒன்றை வெளியிடுகின்றனர். அந்த நினைவஞ்சலிக் கூட்டத்தோடு வரதனும், சசியும் தலைமறைவாகின்றனர். அதுவரை இரகசியமாக எழுதப்பட்ட இரண்டு யாழ்ப்பணத்தின் குறிப்புகளை ஒரு நூலாக சசி தன்னோடு கொண்டு வருகின்றார். அதை அவர் ஒரு நாள் நியூயோர்க்கிலிருக்கும் ஐ.நா சபையில் சமர்ப்பித்துப் பேசுகின்றார். இவ்வாறு 1980 ‍வரை யாழ்ப்பாணத்தில் நிகழும் சம்பவங்களினூடாக கதை சொல்லப்படுகின்றது. இறுதியில் அது, 2009 இற்கு, ‍ஈழத்தில் நடந்த இறுதி யுத்தத்திற்குத் தாவிவிடுகின்றது. 

Image 2

இப்போது போரில் இருந்து ஏதோ ஒருவகையில் தப்பி வந்த சீலன், அவரின் சகோதரியான சசியிடம், அங்கே அகப்பட்டிருக்கும் மக்களை காப்பாற்ற ஐ.நாவில் சென்று பேசக் கேட்கின்றார். முதலில் மறுத்தாலும், ஒரு தவறான நபர், சரியான விடயத்தைக் கேட்கும்போது அதைச் செய்யாது தட்டிக் கழிக்க முடியாதெனச் சொல்லி சசி ஐ.நாவுக்கு இறுதி யுத்தம் பற்றிப் பேசச் செல்கின்றார். அத்துடன் நாவல் முடிவடைகின்றது.

இலங்கை பற்றியோ, ஈழப்போராட்டம் பற்றியோ ஆங்கிலத்தில் எழுதப்படும் புதினங்களில் 1983 இனப்படுகொலை மையமாக இருப்பதை எளிதாக எவரும் அவதானிக்க முடியும். ஒரு வகையில் கொழும்பில் நடைபெற்ற அந்த இனவழிப்பால் சாதாரண மக்கள் மட்டுமல்ல, கொழும்பு வாழ் உயர் வர்க்க தமிழ்ச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளானது. அவர்களில் பெரும்பான்மையினரே இந்தக் கலவரத்தை முன்னிட்டு வேறு நாடுகளுக்கு முதன் முதலாகப் புலம் பெயர்ந்தவர்களாவர். அவர்கள் அதை பல்வேறு வகையில் ஆவணப்படுத்தினார்கள், பேசினார்கள் என்பதால் அடுத்து வரும் தலைமுறைக்கு இது சம்மந்தமாக அறிய பல ஆவணங்கள் கிடைத்தன. 1983, முக்கிய பேசுபொருளாக ஷியாம் செல்லத்துரை, மேரி ஆன் மோகன்ராஜ் போன்றவர்களின் புதினங்களில் மட்டுமல்ல, சிங்களப் படைப்பாளியான நயோமி முன்னவீரா போன்றோரின் படைப்புக்களிலும் இருப்பதைக் காண்கின்றோம். ஒரு வகையில் அதுவே இலங்கை அரசியலின் திருப்பு முனை. 1983 இல் நிகழ்ந்ததைப் பேசாது, இலங்கையின் அண்மைக்கால வரலாற்றை எவரும் பேசவிடவும் முடியாது.

1983 இற்குப் பிறகு போரின் ஒரு காலகட்டத்தைப் பதிவு செய்த ஆவணமாக ராஜனி திராணகம உள்ளிட்ட யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தால் பதிப்பிக்கப்பட்ட ‘முறிந்த பனை’ நூலைக் (Broken Palmyrah) கூறலாம். இது, இந்திய இராணுவம் ‘அமைதிப்படை’ என்ற பெயரில் இலங்கைக்குள் நுழைந்த காலப்பகுதியில் இந்திய இராணுவத்தாலும், விடுதலைப் புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எப் உள்ளிட்ட தமிழ் இயக்கங்களாலும் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைச் சொல்கின்றது. ஒரு வகையில் முறிந்த பனை இல்லாவிட்டால் நமக்கு இந்திய இராணுவ காலத்தின் துயரத்தைச் சொல்ல எந்த ஆவணமும் இல்லாது போயிருக்கும்.

வாசுகி கணேசானந்தன் இரண்டு முக்கிய காலப் பகுதிகளின் ஆவணங்களை உசாத்துணையாக வைத்து இந்தப் புதினத்தை எழுதியிருக்கின்றார். ஆனாலும் அவர் இதை புறவயமாக, சம்பவங்களினூடாக எழுத முயற்சித்திருப்பது ஒரு வகையில் பலவீனமாக அமைந்து விடுகின்றது. மூத்த சகோதரனான நிரஞ்சனை 1983 கலவரத்துக்கு பலி கொடுத்து, இன்னொரு சகோதரனான தயாளனை ஈழப் போராட்டத்துக்கு காவு கொடுத்து, அவரின் பிரியமான பேராசிரியரான அஞ்சலியை இயக்கத்தின் பழிவாங்கலுக்கு கொடுத்து, உறவுகளை அநியாயமாக இழந்த சசி என்கின்ற பெண்ணின் அகவுலகினூடு ஓர் அற்புதமான கதையை வாசுகி சொல்லியிருக்க முடியும். ஆனால் அவர் இந்த இழப்புக்கள் ஒவ்வொன்றையும் மிக வேகமாக தாண்டிச் செல்வதால் சசியின் பாத்திரத்தினூடாக வாசகர் நுழைந்து பார்க்க முடியாத ஒரு அவதிநிலை ஏற்படுகின்றது.

மேலும் இந்நாவல் 1980 ‍வரை நடந்த பல சம்பவங்களை விரிவாகச் சொல்லிவிட்டு, சட்டென்று 2009 இற்குப் பாய்ந்து சென்றுவிடுகின்றது. அந்த இடைவெளியுள்ள 20 ஆண்டுகளில் ஈழத்தில் யுத்தம் இன்னும் கோரமாக நிழந்திருக்கின்றது. இரண்டு தலைமுறை அதற்குள் தோன்றி போரைத் தவிர வேறு தெரிவு எதுவும் இல்லாது வளர்ந்தும் வந்திருக்கின்றது. வாசுகி, கதையை 1989 இல் முடித்திருக்கலாம். அவர் 2009 இற்குத் தாவியதால், இரண்டு தலைமுறையின் வாழ்வை வரலாற்றில் இருந்து இல்லாமற் செய்கின்றார்.

வாசுகி, 1970 களில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழ்ப் பெற்றோருக்கு 1980 இல் பிறந்தவர். அவர் இந்த நாவல் நடக்கும் காலப்பகுதியில் ஈழத்தில் இருக்கவில்லை. போரின் எந்தத் துளியாலும் தீண்டப்படவுமில்லை. படைப்பாளியாகவும், பேராசிரியாகவும் இருக்கும் வாசுகி ஒரு வெளியாளின் பார்வையில் இவை எழுதப்பட்டதென்கின்ற குறிப்புக்களை நாவலின் தொடக்கத்தில் சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் இந்த நாவல் பெரும்பாலும் நடந்த சம்பவங்களையும், அசல் மனிதர்களின் கதைகளையும் சொல்கின்றது.  

இந்த நாவலில் ‘கே’ என்கின்ற பாத்திரத்தில் வருவது புலிகள் இயக்கத்து திலீபன் என்பதும், அஞ்சலி என்ற பெயரில் வருவது ராஜனி திராணகம என்பதும் எல்லோருக்கும் எளிதில் புரியக்கூடியது. போருக்கு வெளியே, போரால் நேரடியாக பாதிக்கப்படாத ஒருவராக இருக்கின்றேன் என்றுதான் அனுக் அருட்பிரகாசம் இறுதிப் போர்க் காலத்தையும், அதன் பின்னரான காலத்தையும் வைத்து இரண்டு அருமையான நாவல்களை எழுதுகின்றபோது நமக்கு நினைவூட்டுகின்றார். அவ்வாறாக தம்மை இந்த யுத்தப் பின்னணியில் எங்கே இருக்கின்றோம் என அடையாளப்படுத்துவது – முக்கியமாக உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனைவை எழுதும் – எந்தப் படைப்பாளியும் செய்ய வேண்டிய நல்லதொரு காரியமாகும். ஆனால் துரதிஷ்டவசமாக ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் எழுதும் வாசுகி மட்டுமல்ல, தமிழில் எழுதுபவர்களும் இந்தத் தவறைத் தெரிந்தே செய்கின்றார்கள்.

Image 3

இலங்கையில் அடிப்படைப் பிரச்சினையாக இருப்பது சிங்களப் பேரினவாதமும், அவ்வப்போது தோன்றிக் கொண்டிருக்கும் இனவாத, மதவாத அரசியல் கட்சிகளுமே ஆகும். ஆகவேதான் இன்று யுத்தம் முடிந்த பின்னும் இலங்கையில் ஒரு நிரந்தரமான அமைதி ஏற்படாமல் இருக்கின்றது. அந்தப் பேரினவாதத்திற்கு காலத்துக்கு காலம் ஒரு எதிரி தேவைப்பட்டபடி இருக்கின்றது. வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பதைப் போல அந்த எதிரிகளாக சிறுபான்மை இனங்களும், அவர்களுக்குள் தோன்றும் இயக்கங்களும் அமைந்துவிடுகின்றன. சில வேளைகளில் சிறுபான்மையினர் தம்மைப் பலிகொடுக்க தயாராக இல்லாதபோது, இதே பேரினவாதப் பிசாசு தன் இருப்புக்காய், நீதி கேட்டுப் போராடும் சிங்கள இளைஞர்களையும் காவு கொள்ளத் தயங்குவதில்லை. அதற்குச் சிறந்த உதாரணங்களாக, ஜேவிபி முன்னெடுத்து, பின் அரசினால் கொடூரமான முறையில் அடக்கப்பட்ட இரண்டு புரட்சிகளும் வரலாற்றில் அழியாக் கறையாக நம் முன்னே இருக்கின்றன. இன்றைக்கும் ஏன் இலங்கையில் அனைத்து இனங்களும் சமாதானமாக இருந்து நாட்டை சுபீட்சமாக வளர்க்க முடியவில்லை என்பதை நாமனைவரும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

இந்த நாவலும் இந்தக் கேள்விகளை எளிதாகத் தவிர்த்து, யுத்ததிற்கான அடிப்படைக் காரணங்களுக்குள் செல்லாது, அதன் எதிர் வினைகளையும், பின் விளைவுகளையும் முக்கியமானதாக் காட்ட விழைகின்றது. ஒரு பேரினவாத அரசுக்கெதிராக, ஒரு கொரில்லா இயக்கமாகத் தோன்றி, பின்னர் மரபுவழி இராணுவமாக ஒரு குறிப்பிட்ட பகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த புலிகளை, அரசுக்கு நிகராக வாசுகி முன்னிறுத்த விரும்புகின்றார். அதனாலே இந்தப் புனைவு 2009 இல் புலிகள் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தனர் என்பதை முதன்மையாகச் சொல்கின்றது. புலிகள் மக்களை வெளியே செல்லவிடவில்லை என்பது உண்மை. புலிகள் பல நாடுகளால் தடை செய்யபட்ட ஓர் ‘தீவிரவாத’ இயக்கம். ஆனால் தனது சொந்த மக்களையே காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ள அரசு இவ் விடயத்தில் செய்ததுதான் என்ன? இந் நாவல் நடக்கும் 1980 களின் நடுப்பகுதியில், ஒரு அரசானது தனது சொந்த மக்களைக் கொல்ல விமானத் தாக்குதல்களையும் ஷெல் தாக்குதல்களையும் நடத்தி, எவ்வாறு சொந்த நாட்டு மக்களையே அந்நியமாகப் பார்த்தது என்பதற்கு நம்மைப் போன்ற பலர் சாட்சிகளாக இருக்கின்றோம். 

இன்றைக்கு பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்து கொண்டிருக்கும் படுகொலைகளுக்கு நாம் ஹமாஸை இஸ்ரேல் அரசுக்கு நிகராக வைத்துப் பேசுவது நியாயமாக இருக்க முடியுமா? இந்த அடிப்படைக் கேள்விகளைத்தான் ‘சகோதரனற்ற இரவு’ என்கின்ற இப் புதினத்தை முன்வைத்து வாசுகியை நோக்கி நாம் கேட்க வேண்டியவராகின்றோம்.

ஓர் அரசியல் நாவல் முடியும் போது அது பாதிப்படைந்தவர்களின் பக்கம் நம்மை அழைத்துச் செல்வதோடு, அவர்களின் பலவீனங்களையும் ஏதோ ஒருவகையில் ஏற்றுக் கொள்ள வைக்கும். அனுக் அருட்பிரகாசத்தின் நாவல்களை வாசித்தவர்கள் – அவர் எந்தத் தரப்பையும் வெளிப்படையாகச் சொல்லாமல் – கதாப்பாத்திரங்களினூடாக உள்ளிறங்கி எழுதுவதன் மூலம் நம்மை நிலைகுலையச் செய்வதை அறியலாம். வாசுகியின் இந் நாவலின் கதை சொல்லியான சசியினூடாக இந்த முயற்சியை நிகழ்த்திப் பார்த்திருக்கக்கூடிய சந்தர்ப்பம் இருந்த போதும் அது நிகழாதது ஒரு வகையில் இழப்பேயாகும். ஈழத்து அரசியல் தெரிந்த எங்களைப் போன்றவர்களுக்கு இதில் இருந்து அறிந்துகொள்ள புதிதாக அவ்வளவாக எதுவும் இல்லை. நமக்குப் பரிச்சயமான களங்கள், நபர்கள், சம்பவங்களே இதில் இருக்கின்றன. ஆனால் இது தமிழர் அல்லாதவருக்கும், புலம்பெயர்ந்தவர்களின் இங்கு பிறந்த முதல் தலைமுறையினருக்கும் வாசிக்கச் சுவாரசியமாக இருக்கும். 

2008 இல் வாசுகியின் முதல் புத்தகமான ‘Love Marriage’ இனை வாசித்து என் வாசிப்பை எழுதியிருந்தேன். அப்போது ஈழத்தில் இறுதி யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம். அதில், “இன்று மிக‌ச் சிக்க‌லாக‌வும், ப‌ல‌வீன‌மாக‌வும் போய்க்கொண்டிருக்கும் த‌மிழ‌ரின் போராட்ட‌த்தை, எல்லாத் த‌ர‌ப்புக‌ளும் பிழை செய்கின்ற‌ன‌ என்று எளிதாக‌க் கூறித் த‌ப்பியோட‌ முடியாது. தொட‌க்க‌ கால‌த்தில் த‌மிழ‌ரின் உரிமைக்காய் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ போராட்ட‌த்திற்கு எவ்வ‌ள‌வு வ‌லுவான‌ கார‌ண‌ங்க‌ளிலிருந்த‌தோ அந்த‌ப் பிர‌ச்சினைக‌ள் இன்ன‌மும் தீர்க்க‌ப்ப‌டாம‌லேயே இருக்கிறது என்பதை சிங்க‌ள‌ப் பேரின‌வாத‌த்திற்கோ, உல‌க‌ நாடுக‌ளுக்கோ ம‌ட்டுமில்லாது, வெற்றி தோல்விக‌ளின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டாடிக் குதூக‌லிக்கும் ‘புதிய‌ ச‌ன‌நாய‌க‌வாதிக‌ளுக்கும்’ நினைவுப‌டுத்த‌ வேண்டியிருக்கிற‌து. இந்நாவ‌லில் த‌மிழ‌ர் த‌ர‌ப்பின் தீர்க்க‌ப்ப‌டாத‌ பிர‌ச்சினைக‌ளின் ஆழ‌ங்க‌ளை அல‌சாம‌ல், பொதுப்ப‌டையாக‌/எளிமையாக‌ அனைவ‌ரும் த‌வ‌று செய்கின்றார்க‌ள் என்று எழுதுவ‌து/பேசுவ‌து, ஈழ‌ப் போராட்ட‌ம் குறித்து அவ்வ‌ள‌வு அறியாத‌வ‌ர்க‌ளுக்கு த‌வ‌றான‌ நிலைப்பாட்டை விதைக்க‌க் கூடியதாக‌விருக்கும். முக்கியமாய் த‌மிழ‌ல்லாத‌, ஆங்கில‌ம் போன்ற‌ பிற‌ மொழிக‌ளில் நேர‌டியாக‌ எழுதுப‌வ‌ர்க‌ள் இவை குறித்து அதிக‌ க‌வ‌ன‌த்தோடு, க‌ட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாற்றை ஆழ‌மாய் அறிந்து கொள்வ‌தினூடே நிதான‌மாய் எழுத‌ வேண்டியிருக்கிற‌து.” எனக் குறிப்பிட்டிருப்பேன்.

யுத்தம் முடிந்து 15 வருடங்களுக்குப் பிறகும் ஏன் இலங்கை இப்படி பெரும் அரசியல்/பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்றது? எதன் பொருட்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பொது மக்கள் மீது நிகழ்த்தபட்டது? இறுதி யுத்தத்தை முடித்து வைத்த வீர நாயகர்கள் எனக் கொண்டாடப்பட்ட ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரான கோத்தபாய ஏன் நாட்டின் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து அவரது சொந்த மக்களாலேயே தூக்கியெறியப்பட்டு சொந்த நாட்டைவிட்டு துரத்தப்பட்டார்? போன்ற கேள்விகளை நாம் கேட்கும்போது, தமிழ் இயக்கங்களோ, ஜேவிபியினரோ நடத்திய ஆயுதப் போராட்டம் மட்டும் இலங்கையின் சீரழிவுக்கு முக்கிய காரணமில்லை என்பது விளங்கும். அந்தப் புள்ளிகளில் முதன்மையாக கவனத்தைக் குவித்து, போராட்ட இயக்கங்களின் பலவீனங்களோடு ஒடுக்கப்பட்டவர்களின் வலிகளைப் புரிந்துகொள்ள முயன்றிருந்தால் ஓர் அசலான படைப்பாக மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களின் குரல்களையும் அடையாளப்படுத்துகின்ற ஒரு முக்கியமான வரலாற்று ஆவணமாகவும் இந்த நாவல் மாறிவிட்டிருக்கக்கூடும். ஆனால் அது வாசுகியின் ‘சகோதரனற்ற இரவில்’ முழுமையாக நிகழவில்லை என்பதுதான் துயரமானது.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

5304 பார்வைகள்

About the Author

இளங்கோ

யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். ஈழத்திலிருந்து போரின் நிமித்தம் தனது பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து தற்போது ரொறொண்டோவில் வசித்து வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், நாவல் தவிர, 'டிசே தமிழன்' என்னும் பெயரில் கட்டுரைகளும், விமர்சனங்களும், பத்திகளும் பல்வேறு இதழ்களிலும், இணையத்தளங்களிலும் எழுதி வருகின்றார். நாடற்றவனின் குறிப்புகள் (கவிதைகள் - 2007), சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (சிறுகதைகள் -2012), பேயாய் உழலும் சிறுமனமே (கட்டுரைகள் - 2016), மெக்ஸிக்கோ (நாவல் - 2019), உதிரும் நினைவின் வர்ணங்கள் (திரைப்படக்கட்டுரைகள் - 2020), ப்யூகோவ்ஸ்கி கவிதைகள் (மொழிபெயர்ப்பு -2021), தாய்லாந்து (குறுநாவல் - 2023) ஆகியவை இதுவரையில் இவர் எழுதிய பனுவல்கள் ஆகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (20)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)