காவல் தெய்வம் சேவகர்
Arts
16 நிமிட வாசிப்பு

காவல் தெய்வம் சேவகர்

July 10, 2024 | Ezhuna

பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது.

மனிதர் ஆதிகாலத்தில் நாகரிகமுற்று நிலையான குடியிருப்புகளை அமைத்து வாழத்தலைப்பட்ட காலத்தில் அவர்களது வாழ்வு இரு அடிப்படைகளைக் கொண்டமைந்தது. ஒன்று காதல்; காமம் உள்ளிட்ட உணர்வுகளைச் சார்ந்த அகவியல் அம்சங்கள். மற்றையது வீரம்; கொடை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட புறவியல் அம்சங்கள். வீரம் என்பது பகை வெல்லல், தலைமை தாங்குதல், வேட்டையாடுதல், உடலுள வலிமை போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டிருந்தது. இனக் குழுத்தலைவன் அல்லது வீரன் தன் இனத்திற்காக உயிர் துறக்கும் போது தெய்வமாக மதிக்கப்பட்டான். நீத்தார் பெருமை பேசப்பட்டது. முன்னோர் வழிபாட்டில் அதுவும் ஓரங்கமாயிற்று.

இயற்கையின் இயல்பிறந்த ஆற்றல்களால் நிகழும் ஆபத்துகளில் இருந்து தம்மைக் காப்பாற்றிய வீரனை மக்கள் கொண்டாடினர். அவனைத் தலைவனாக்கினர் அல்லது தலைவனுக்குச் சமமாகவோ அடுத்த தரத்திலோ வைத்து மரியாதை தந்தனர். அவன் இறந்தானாகில் அது நினைவு நாளாயிற்று; அவன் வழிபடப்பட்டான்.

தமிழகத்தில் இவ்வழிபாடு கல்லாக, நடுகல்லாக, வீரக்கல்லாக, கற்திட்டையாக, கற்பதுக்கையாக, பள்ளிப்படையாக பல்பரிமாணமுற்றுக் காணப்படுகின்றது. மனிதர்கள், தெய்வங்களை உருவகம் செய்த பொருட்களில் ‘கல்’ பிரதானமானது என்பது குறிப்பிடத்தக்கது. ‘நடுகல் வழிபாடு’ இன்றும் ஈழத்துப்புலத்தில் சிறப்புற்றுக் காணப்படுகின்றது. வீரர்களைக் கொண்டாடும் மரபு ஈழத்திலும் காணப்பட்டுள்ளது. அண்ணமார், கூட்டத்தார், முதலி உள்ளிட்ட தெய்வங்கள் இதற்கு உதாரணங்களாகின்றன. ஈழத்துப்புலத்தில் இவ்வாறான கிராமியத் தெய்வங்கள் பல காணப்பட்டுள்ள போதும் சில இற்றைவரை உரிய வகையில் அடையாளப்படுத்தப்படவோ, ஆய்வுக்கு உட்படுத்தப்படவோ இல்லை. அந்த வகையில் ‘சேவகர்’ தெய்வமும் அவற்றுள் ஒன்றாக விளங்குகின்றது.

சேவகர்

யாழ்ப்பாணத்தோடு இணைந்துள்ள தீவுகளில் ஒன்று காரைநகர் ஆகும். இலங்கையில் காரைதீவு என்ற பெயர் மூன்று இடங்களில் வழங்கப்படுதலால் யாழ்ப்பாணத்துடன் இணைந்துள்ள இத்தீவு காரைநகராயிற்று. ‘திண்ணைப்புரத் திரியந்தாதி’ தந்த கார்த்திகேய ஐயரே நூற்காப்பில் காரைநகர் என்னும் சொல்லை முதன்முதலில் கையாண்டுள்ளார். 1887 இல் தட்சிண கைலாசபுராணத்தைப் பதிப்பித்தவரான சிவசிதம்பர ஐயர் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றார். 1923.9.12 இல் இப்பெயர் அரசு அங்கீகாரம் பெற்றது. இந்த ஊரில் தான் ‘சேவகர்’ எனும் தெய்வம் வழிபடப்பட்டு வருகிறது. இப்பெயரிலான தெய்வம் வேறெங்கும் இருப்பதாக அறிய முடியவில்லை.

தமிழ் அகராதிகள் ‘சேவகம்’ என்ற சொல்லுக்கு சேவகத்தொழில், சோம்பு, துயில், பேயுள்ளி, யானைத் துயிலிடம், வணக்கம், வீரம், வேலை எனவும் ‘சேவகனார்’ என்பதற்கு ஐயனார் எனவும் ‘சேவகன்’ என்பதற்கு ஐயன், சிற்றாமுட்டி, பணிவிடைக்காரன, பேயுள்ளி, வீரன் எனவும் பொருள் சுட்டுகின்றன. இங்கு சேவகனார் என்பது ஐயனார் எனவும், சேவகன் என்பது ஐயன் எனவும் வருதல் கொண்டு இது ஐயனார் வழிபாடு எனக் கொள்ளலாமா எனின், ஐயனார் வழிபாடு இவ்வூரில் தனித்துக் காணப்படுகின்றமை சுட்டதக்கது. ஆக, இங்கு ஐயன் (தலைவன்), பணிவிடைக்காரன், வேலைக்காரன், வீரன் என்பனவே பொதுநிலையில் நிற்கின்றன.

சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தைப் பதிப்பித்து அடிக்குறிப்பும் எழுதியவரான உ.வே. சாமிநாதையர், வீரர்களைச் சான்றோர் எனக் கூறும் மரபு உண்டு எனக் கூறி ‘தானைச் சான்றோர்’ (பதிற்றுப்பத்து – 82,13) என்பதனை எடுத்துக்காட்டுகின்றார். சான்றோர் என்பது போரிடுவதில் சிறந்தவர் என்றாகின்றது. பதிற்றுப்பத்தில் சேரமன்னர்கள் ‘சான்றோர் மெய்ம்மறை’ (பதிற்றுப்பத்தில் – 14,12; 52,11) எனப்படுகின்றனர். போர் வீரருக்குக் கவசம் போல சேரன் முன்னால் நின்றான் என இது விளக்கப்படுகிறது. புறநானூறும் போர்வீரரை ‘தேர் தர சான்றோர்’ (63;5) என்கின்றது. பல்வேறு குடிகளைச் சேர்ந்தவர்களும் போர்வீரர்களாக இருந்துள்ளனர். ஆக, பல குடிகளின் கூட்டாகப் போர்ப்படை இருந்துள்ளமை கவனத்திற்குரியது.

கேரளதேசத்தின் (சேரநாடு) ‘சோகன், சோகொன், சேகுவன்’ எனும் பெயர்கள் ஈழவர் என்னும் ஜாதியினருக்கு வழங்கப்படுவதாகவும், இவர்கள் ஈழதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது. சான்றோர் எனும் சொல்லின் வழிவந்த சொல்லே சேவகன் என்றும், சேவகன் எனும் சொல்லின் திரிபே ‘சோகன், சோகொன், சேகுவன்’ என்றும் பி.எல். சாமி குறிப்பிடுகின்றார்(சாமி,பி.எல்.,1982, 87).

சேவகன் என்னும் சொல் பல்லவர் கால, சோழர் காலக் கல்வெட்டுகள், நடுகற்கள் பலவற்றிலும் காணப்படுகின்றது. சடையவர்மன் சுந்தரச் சோழ பாண்டியன் 19 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டில் “திருவொற்றைச் சேவக மாயலட்டியோன்” எனும் சொற்றொடர் காணப்படுகிறது. பாண்டியர் கல்வெட்டுகளிலும் ‘ஒற்றைச் சேவகன்’ எனும் சொற்றொடர் காணப்படுகிறது. இதே போல அட்டாலைச் சேவகன் (சமையற்காரனாகவும் போர் வீரனாகவும் இருப்பவன்) முதலான சேவகர் பற்றிய குறிப்புகள் உண்டு. போர்வீரர்கள், நடுகற்கள் வைத்து வழிபடப்பட்டனர். சங்கம் தொட்டு நடுகற்கள் மக்களால் மலரிட்டு விளக்கேற்றி வழிபடப்பட்டன. அதேவேளை நடுகற்கள் போர் வீரருக்கு மட்டுமானவையல்ல.

போர் வீரருக்கான முக்கிய வழிபாட்டுக் கட்டுமானம் ‘பள்ளிப்படை’ ஆகும். போரில் வீரத்துடன் ஈடுபட்டு மரணித்த மன்னருக்குக் கட்டப்படுவதே பள்ளிப்படை என்று ஒரு சாரார் கூறினாலும் படைத்தலைவர்களுக்கும் பள்ளிப்படை அமைக்கப்படுகிறது என்பதை ஆய்வாளர்கள் சான்றுபடுத்துகின்றனர். தமிழகத்தில் கி.பி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் நடுகற்களும், சமாதியமைத்து வழிபடும் வழிபாட்டு முறைகளுமே காணப்பட்டுள்ளன. வீரருக்கான சமாதிக் கோயில்களே பள்ளிப்படைக் கோயில்களாகப் பரிணமித்ததாக அறியமுடிகிறது. முன்னோர் வழிபாட்டின் வழி தோற்றம் பெற்ற கோயிலின் ஒரு கட்ட அல்லது ஆரம்பகட்ட நிலையாகப் பள்ளிப்படை அமைந்துள்ளது என்பர். திருவாசகத்திலும் ‘சேவகன்’, ‘அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க’ (திருவண்டப் பகுதி,20), ‘சேவகனாகித் திண் சிலையேந்தி’ (போற்றித் திருவாகவல், 2.81) எனும் வரிகள் வீரமுடையானைக் குறித்தே பயன்படுத்தப்படுகின்றன.

எது எவ்வாறு இருப்பினும் ‘சேவகன்’ என்ற பெயரிலான தெய்வ வழிபாட்டு முறை பெருமெடுப்பில் இருந்ததாக அறியமுடியவில்லை. சோழராட்சியின் முடிவில் அல்லது அதற்குப் பின் தோன்றிய கந்தபுராணத்தில்,

“எய்யும் வார்சிலை யெயினர் மாதராள்

உய்யுமாறு தன்னருவ நீத்தெழீஇச்

செய்ய பேரருள் செய்து சேவகன்

மையன் மானுட வடிவந் தாங்கினான்”        

(வள்ளி திருமணப்படலம், 65)

என முருகனைப் போர்வீரனாக, சேவகனாகக் கச்சியப்பர் சுட்டுகின்றார்.

தமிழகப்புலத்தில் இவ்வாறு இருக்க, ஈழத்தில் சேவகன் எனும் சொல் கொண்ட கல்வெட்டுகளையோ, நடுகற்களையோ, காரைநகர் தவிர்ந்த இடங்களில் கோயில்களையோ காணமுடியவில்லை.

காரைநகரில் சேவகர் கோயில்கள்

காரைநகரில் வலந்தலை, களபூமி, பலிகாடு, கருங்காலி, தங்கோடை, கோவளம் எனும் பெருங்குறிச்சிகள் உள்ளன. இவற்றுள் வலந்தலைக் குறிச்சியிலும் அதனை ஒட்டிய ஊர்களிலுமே சேவகர் வழிபாடு காணப்படுகின்றது.

வலந்தலைப் பகுதியில் காரைநகர் தியாகராசா மகாவித்தியாலயம் என முன்னர் குறிப்பிடப்பட்ட காரைநகர் இந்துக் கல்லூரியை அண்மித்து, சேவகர் கோயில் ஒன்று உண்டு. அது சிறுகோயில்; அரசமரத்தின் கீழ் உள்ள சமாதியின் மீது கட்டப்பட்டதாக அக்கோயிலை ஆதரித்து வருகின்றவர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல ‘மாப்பாண ஊரி’யில் (இது சோனகடைப்பள்ளி என்று முன்பு கூறப்பட்டது) இரு சேவகர் கோயில்கள் உள்ளன. வெறுங்காணி ஒன்றில் பனைமரத்தின் கீழ் இத்தெய்வம் இருந்ததாகவும், அது வேளாளர் ஒருவரின் காணி எனவும், அக்காணியில் முக்குவர் குலத்தவரான தம்மை உட்செல்லவிடாது வேலியடைத்ததாகவும், அதனால் தனது தமையனார் அதற்கு எதிரேயுள்ள தனது காணியில் புதுக்கோயில் ஒன்றை உருவாக்கியதாகவும், தற்போது இரு கோயில்களையும் பராமரித்துவரும் திரு.க. நவரத்தினராசா (வயது 65) தெரிவித்தார்.

sevakar 1

வெடியரசன் வீதியை அண்மித்துள்ள ‘ஆயிலி’ எனும் இடத்தில் சேவகர் கோயில் ஒன்று உண்டு. கொல்ல(ர)டைப்பு, வேரப்பிட்டி, மல்லிகை போன்ற குறிச்சிகளிலும் சேவகர் கோயில்கள் காணப்படுகின்றன. வேரப்பிட்டி, மல்லிகை எனும் இரு இடங்களிலும் ‘சேவகர் வீதி’ என கோயிலுக்கான வீதிக்குப் பெயர்ப்பலகை இடப்பட்டுள்ளது. இவ் ஏழு கோயில்களையுமே எம்மால் அடையாளப்படுத்த முடிந்தன.

இந்தக் களவாய்வுக்கு உதவிபுரிந்த திருமதி மகிழினி கோடீஸ்வரன் மற்றும் சுவிந்தன்,  நவிசா ஆகியோரின் உதவியோடு இக்கோயில்கள் இருக்கின்ற சமூகங்கள் பற்றி ஆராய்ந்தோம். இதில் இரு கோயில்கள் வேளாளருடையது; இரு கோயில்கள் முக்குவருடையவை; மேலும் இரு கோயில்கள் பள்ளர் சமூகத்திற்குரியவை; மிகுதி ஒன்று கொல்லர் சமூகத்திற்குரியது என்பதும் கவனத்திற்குரியது. ஆகவே இத்தெய்வம் பல்சமூக வழிபாட்டுக்குரியது என்பது தெளிவாகின்றது.

தமிழக அறிஞர் பி.எல். சாமி ‘சான்றான், சேகுவர், சோகன, சேகொன், சாணார்’ எனும் சொற்கள் கேரள ‘ஈழவர்’ சமூகத்தைக் குறிப்பதாகப் பல ஆதாரங்கள் வழி எடுத்துரைக்கின்றார். பல்லவர் காலத்தில் தமிழகம் வந்த ஈழத்தவர்களே தென்னைகளை, அவற்றிலிருந்து கள் இறக்குதலை அறிமுகம் செய்தவர்கள் என்றும் இவர்கள் போர்வீரர்களாக இருந்தமையையும் ஆதாரப்படுத்துகிறார். போரற்றுப் போன காலத்தில் கள்ளிறக்குபவர்களாக மட்டும் இருந்ததனால் ஈழவர் சாதி, சாணார் சாதியாகக் கீழ்நிலைப்படுத்தப்பட்டது என்கிறார். ஈழத்தில் சாணாரை ஒத்த நளவர் சமூகத்தின் தெய்வமா சேவகர்? எனும் வினா எழுகிறது. இக்கருத்துரு, சீவல் தொழிலாளர்களின் (நளவர் சமூகத்தின்) தெய்வமாகிய கூட்டத்தாரைக் குறிக்க வாய்ப்புண்டு.

காரைநகரில் நிலவும் சேவகர் தெய்வத்தை பல்சமூகத்தினர் வழிபடுகின்றனர். இங்கிருக்கும் சீவல் தொழிலாளர்கள் (கள் இறக்குபவர்கள்) பள்ளர் சமூகத்தவரே என்பதும், சேவகர் வழிபாடு நிகழும் இவ்வேழு கோயில்களும் உள்ள குறிச்சிகளில் நளவர் சமூகத்தினர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்வழி கூட்டத்தார் தெய்வம் வேறு, சேவகர் வேறு என்பது தெளிவாகின்றது.

சேவகர் தெய்வம் பற்றிய கதையாடல்

சேவகர் கோயில்களைப் பராமரித்து வரும் நபர்களோடு உரையாடிய போது, சேவகர் யார் என்பதையோ அத்தெய்வ வழிபாடு எப்படி வந்தது என்பதையோ அவ்வழிபாட்டின் தொடக்ககாலம் பற்றியோ அவர்களால் உறுதிப்பட எந்தத் தகவலையும் தர முடியவில்லை. அப்பா, தாத்தா, அம்மா, அப்பம்மா, சித்தப்பா ஆதரித்தார்கள் எனத் தாமறிந்த ஒருவரை சுட்டமுடிகின்றதேயன்றி பிறிதொரு தகவலையும் தரமுடியவில்லை. இதற்கு அடிப்படைக் காரணங்களாக,

1. 1990 இல் உள்நாட்டு யுத்தத்தால் இம்மக்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்தமையும் அதனால் இளைய தலைமுறைக்கு உரிய வகையில் பாரம்பரியங்கள் கடத்தப்படாமையும்;

2. பூர்வகுடிகள் பலர் காரைநகரில் இன்று இல்லை; முதிய தலைமுறையும் இல்லை. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு முப்பத்தைந்து வயதுக்குட்பட்ட தலைமுறையே இன்றைய முதிய தலைமுறையாக அங்கு உள்ளனர்; 

என்பவற்றைக் குறிப்பிடலாம்.

அதனால்தானோ என்னவோ சேவகர் கோயிலை அறிந்திருப்போரும் இன்று அரிதாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயில்கள் அமைந்திருக்கும் பெரிய குறிச்சி, வலந்தலை என்பதாகும். வலந்தலை என்பதன் பொருள் என்ன? வலம் தரும் தலை – ஆரம்ப இடம் – வெற்றியைப் பிரகடனப்படுத்தும் இடம் –  கடற்பற்றில் வரும் எல்லைத் தலைமுகப்பு என விளங்கப்படுகிறது (சிவப்பிரகாசம்.மு.சு, 1988, விக்ஷ்ணுபுத்திரர் வெடியரசன் வரலாறு, மத்திய சனசமூகநிலையம், தொல்புரம், ப.135). இந்தப் பிராந்தியத்தில் முக்கிய சம்பவங்கள் இரண்டு நடைபெற்றதை ஐதீகக் கதைகளின் வழியும் சிவப்பிரகாசத்தின் நூலின் வழியும் அறிய முடிகின்றது.

1. முருகப்பெருமான், கைலாயமாகிய இந்தத் தீவுப் பகுதிகளில் சூரபத்மனோடு யுத்தம் புரிந்து பெற்ற வெற்றியைப் பிரகடனம் செய்த இடம் இது.

2. முக்குவர் குலத்தலைவனும், தீவுப்பகுதியை ஆண்டவனுமான வெடியரசன் தனது ஒவ்வொரு யுத்தத்திலும் பெற்ற வெற்றியை, தன் சகவீரர்களுடன் வந்து பிரகடனம் செய்த இடம் இது.

ஆகவே போர் வெற்றியைப் பிரகடனம் செய்யும் வலந்தலையில் தொன்மையான இரு சேவகர் கோயில் இருப்பது வியப்பன்று. அதிலும் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் உள்ள சேவகர் கோயில் சமாதியோடு இணைந்தது என்பது போர்வீரருக்கான பள்ளிப்படைக் கோயிலை ஒத்துள்ளது என்பதோடு, மலரிட்டு விளக்கு வைக்கும் முறைமையே இங்கு காணப்படுவதும், சேவகர் வழிபாடு போர்வீரர் சார்ந்த வழிபாடு என்றே கருத வைக்கிறது.

அதேவேளை கந்தபுராணக் கதையோடு வலந்தலை இணைக்கப்பட்டு இருப்பதும், யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராணக் கலாசாரத்தோடு இணைந்திருப்பதும், கந்தபுராணம் முருகனை ‘சேவகன்’ என போர்வீரனாகச் சுட்டி நிற்பதும் (வள்ளி., 65), மல்லிகைக் குறிச்சிக் கோயில் மணியக்காரரான கனகு, ‘சேவகரை சிவனின் ஒரு அம்சம்’ எனக் கூறுவதும், முருக வழிபாட்டோடு இவ் வீரவழிபாட்டை இணைத்துச் சிந்திக்க வைக்கின்றது.

sevakar 5

சேவகர் பற்றி ‘மாப்பாண ஊரி’ க. நவரத்தினராசா, தனது தாயார் சுருட்டைப் பற்றி விட்டு குறைச்சுருட்டை வைப்பதாகவும், அது காணாமற் போவதாகவும், பின்பு ஒருநாள் ஒரு மனித உருவம் நடுச்சாமத்தில் அதனை எடுத்துப் போவதைக் கண்டதாகவும், அதன்பின் அக்கோயிலை ஆதரிக்கத் தொடங்கியதாகவும், அதன்பின் தம் வளம் பெருகியதாகவும், இன்றும் அவரை வழிபாட்டே நற்காரியங்களைத் தொடங்குவதாகவும் கூறினார்.

இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள ஆலய அறங்காவலர்களும் மீன்பிடிக்கச் செல்வோரும் இத்தெய்வத்தை வழிபட்டே செல்வர் என்றும், யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் கடற்படையினர் சிலர் வந்து சுருட்டுப் பற்றியபடி வந்த மனிதர் யார்? அவர் எங்கே என விசாரித்ததாகவும், அப்படி ஒருவர் வரவில்லை என்றும், அது இச்சேவகர் தெய்வமாக இருக்கலாம் எனத் தாம் கூறியதாகவும், பின் அக் கடற்படையினர் பொங்கலுக்கு உரிய பொருட்களைப் பயபக்தியோடு தந்து வணங்கிச் சென்றதாகவும் கூறுகின்றனர்.

கொல்லடைப்பு – ஆயிலி சேவகராலயப் பரிபாலனத்தினைச் செய்து வருவோர், தாம் யுத்தத்தால் இடம்பெயர்ந்து வவுனியா போனதாகவும், அங்கு பிள்ளையார் கோயிலைக் கட்டி வழிபட்டதாகவும், இத்தெய்வம் தங்களை இருக்கவிடாது பல சிக்கல்களைத் தந்ததாகவும், தாம் மீள இங்கு வந்து இத்தெய்வத்தை ஆதரிக்கத் தொடங்கிய பின் அச் சிக்கல்கள் நீங்கியதாகவும் கூறுகின்றனர். சேவகரின் உருவம் என்பது வெள்ளை வேட்டி கட்டிய முதியமனிதர், மேலாடை அணியாதவர், சுருட்டுக் குடிப்பவர் என வலந்தலை ஆலயங்களின் பரிபாலகர்கள் கூறினர்.

சேவகர் வழிபாட்டு முறைகள்

sevakar 3

சேவகரை வழிபடும் முறை ‘கல்’ ரூபமாகவே இருந்தது. வெள்ளைக்கல்; அது அளவுகளில் வேறுபடுகின்றது. இன்று வழிபடும் கற்களோடு அருகில் உருவங்கள் (செப்பு, சீமெந்து, இரும்பு, சூலம்) வைத்து வழிபடப்படுகின்றன. பனை, ஆல், வேம்பு ஆகிய மரங்களை ஒட்டியவையாகவே சேவகர் வழிபாடு இடம் பெறுகின்றது. சேவகருக்குப் பொங்கல் பொங்கி, மடைபரவி, சைவமரபு வழிநின்றே வழிபாடு இயற்றுகின்றனர். இங்கு பலியிடலோ மச்சப் படையலோ இல்லை. மாப்பாண ஊரியில் உள்ள இரு கோயில்களிலும் சுருட்டு வைத்து வழிபடும் மரபு காணப்படுகின்றது. நேர்த்திக் கடன்கள் வைத்து, அது நிறைவேறியவுடன் பொங்கிப் படைத்தல் நடைபெறுகிறது. இதைத் தவிர தைப்பொங்கல், சித்திரவருடப் பிறப்பு போன்ற விக்ஷேட தினங்களில் இங்கு சிறப்பாக வழிபாடுகள் இயற்றப்படுகின்றன. பொதுவில் அவரவர் நீராட்டி, விளக்கு வைத்து, பூச்சூடி வழிபடும் முறையே காணப்பட்டு வருகின்றது. குறைந்தது ஒரு நேரமேனும் ஒவ்வொரு நாளும் விளக்கு வைக்கப்படுகின்றது.

sevakar 4

சமகாலப் பயில்வு

கொல்லடைப்பு, மாப்பாண ஊரி கோயில்கள் கற்கோயில்கள் ஆக்கப்பட்டு, வேறு எந்தவித மாற்றமும் இன்றி அவ்வச் சமூகத்தவர்களாலேயே விளக்கு வைத்து வழிபடப்படுகின்றது. மல்லிகைக் குறிச்சி சேவகராலயத்திற்கு கருவறை, முன்மண்டபம், மடப்பள்ளி என்பன கட்டப்பட்டு பிராமணரை அழைத்து கும்பாபிக்ஷேகம் நிகழ்த்தப்பட்டது. ஆயினும் நித்திய பூசையை மணியக்காரர் ‘கனகு’ அவர்களே செய்து வருகின்றார். இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள சமாதிக்கோயில், சேவகர் கல்லோடு ஐயனார் உருவமும் வைத்து வழிபடப்படுகிறது. பூசை, ஆலயப் பரிபாலகராலேயே நிகழ்த்தப்படுகின்றது.

ஆனால் வேரப்பிட்டி, ஆயிலி ஆகிய குறிச்சிகளில் உள்ள சேவகர் ஆலயங்கள் முற்றுமுழுதாக பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. மூலஸ்தானத்தில் வைரவர் சூலம் வைக்கப்பட்டுள்ளது. வேரப்பிட்டி ஆலயத்தில் விநாயகர் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அங்கு பத்து நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெறுகின்றது. முந்திய பூசகர், ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆயிலி – ஆத்தியடி சேவகராலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு 15 நாட்கள் அலங்கார உற்சவம் இடம்பெறுகிறது. அங்கும் பிராமணர் மட்டுமே பூசை செய்கின்றனர்.

முடிவுரை

sevakar 2

தமிழ்ச் சமூகத்தில் அதிகம் அறியப்படாத தெய்வங்களுள் ஒன்றாகவும் காரைநகரில் வாழும் தெய்வமாகவும் ‘சேவகர்’ காணப்படுகின்றார். சேவகர் பற்றிய அறிவு, பரிபாலகருக்கோ காரைநகர் மக்களுக்கோ இல்லை என்பது துக்கம் தரும் செய்தியாகும். சேவகர் பற்றிய ஊகமே இந்த ஆய்வில் விரவிக்கிடக்கிறது. தொன்மை சார்ந்த விடயங்கள் எதையும் அறிய முடியவில்லை. சேவகன் என்ற சொல் சிவன் – முருகனோடும், போர் வீரரோடும் இணைக்கப்படுவதும், அதையொட்டிய உரையாடலுக்கு வலந்தலைக் குறிச்சி பற்றிய விளக்கம் இடம் தருவதும் சிறப்பித்துச் சொல்லத்தக்கது. பன்முகச் சமூகத்தின் தெய்வம் இளையதலைமுறையிடம் கையளிக்கப்பட வேண்டும். கொல்லடைப்புக் கோயிலில் 14 வயதுச் சிறுவனே பூசாரியாக இருப்பது சமூகக் கையளிப்பாகவே நோக்க வைக்கின்றது. மேனிலையாக்க முயற்சிகள், ஈழத்திலேயே காணப்படும் ஆனால் மக்களால் அதிகம் அறியப்படாததுமான சேவகரை மேலும் அறியவிடாது தடுக்கும் செயலாகவே அமைந்துவிடும். பொருளாதார – சமூக வளர்ச்சி என்பன, குறித்த இனத்தின் அடையாளங்களை வளர்க்கவும் மீட்டுருவாக்கம் செய்யவும் உதவ வேண்டுமேயன்றி அழிப்பதற்கானதாக இருக்கக் கூடாது.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

7852 பார்வைகள்

About the Author

தி. செல்வமனோகரன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் சைவசித்தாந்த துறையின் முதுநிலை விரிவுரையாளராக தி. செல்வமனோகரன் திகழ்கிறார் . இந்திய மெய்யியல் கற்கை புலத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றுள்ளார். இந்துக்கற்கை புலம் சார்ந்து காஷ்மீர சைவமும் சைவ சித்தாந்தமும், இலங்கையில் சைவத்தமிழ் பண்பாட்டு வளர்ச்சியில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, நாயன்மார் பாடல்கள், தமிழில் மெய்யியல் எனும் நூல்களை எழுதியுள்ளார். பெறுதற்கரிதான இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மீள்பதிப்புச் செய்துள்ளார். 'சொற்களால் அமையுலகு' என்னும் இவரது நூல் கலை, இலக்கியம் சார்ந்த விமர்சன நூலாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • September 2024 (11)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)