Arts
17 நிமிட வாசிப்பு

விவசாயமும் சுற்றாடல்சார் பல்வகைமையும் – பகுதி 2

February 12, 2024 | Ezhuna

எமது சுற்றாடல் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இக் கூறுகளின் ஒருங்கிணைந்த மற்றும் ஒருங்கமைந்த செயற்பாடுகளே சுற்றாடலின் நிலைபேறான அபிவிருத்தியில் பங்காற்றும். மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் சுற்றாடல் பற்றி சரிவர அறிந்துகொள்ளப்படுதலும் சிறப்பான வழிமுறைகளில் பயன்படுத்தலும் இக்கூறுகளை பேணிப்பாதுகாத்தலும் முக்கியமானவைகள். அந்த வகையில் வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் உயிர்ப்பல்வகைமையின் பங்களிப்பு பற்றிய பயனுள்ள கருத்துகளை ‘வடக்கு–கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ எனும் இக் கட்டுரைத் தொடர் தாங்கிவருகின்றது.

பழப்பயிர்களின் பல்வகைமை

பனம்பழம் அரிய சொத்தாகும். வேறுபட்ட போகங்களில் பழங்களைத் தரும் பனை மரங்கள் எம் பிரதேசத்தில் பரந்து காணப்படுகின்றன. அவற்றின் கிழங்குகளின் தன்மையிலும், கள் மற்றும் கருப்பனி என்பனவற்றின் பிரிகை அளவுகளிலும் மாறுபாடு உண்டு. கற்பகத் தருவான பனைமரத்தின் பயன்பாடுகள் அநேகம். முக் கனிகளான மா, பலா, வாழை என்பனவற்றின் பயன்பாடும் எம் பிரதேசத்தில் கணிசமாக உண்டு. மா மரத்தில் ஒட்டுதல் மூலம் உருவாக்கப்படும் கன்றுகள் தாய் தாவரத்தின் இயல்புகளை ஒத்திருக்கும். இலங்கையில் 400 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒட்டுதல் பொறிமுறை வழக்கத்திற்கு வந்தது. கறுத்தக்கொழும்பான், வெள்ளைக் கொழும்பான், விளாட்டு,  சேரன், கிளிச்சொண்டன், பச்சை தின்னி, மேளம் தூக்கி, அம்பலவி, களகட்டி, பாண்டி மற்றும் செம்பாட்டான் போன்ற பல உள்ளூர் வகை மாவினங்கள் உண்டு. இவற்றில் விதையிலிருந்து உருவாக்கப்படும் கன்றுகள் பல்வேறுபட்ட சுவைகளைக் கொண்டிருக்கும். 2005 இல் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பயனாக கறுத்தக் கொழும்பானின் மூன்று வகைகளும் விளாட்டில் மூன்று வகைகளும் அம்பலவியில் ஒன்றும் மற்றும் புதிய ஒரு மா வகையும், ருசியுள்ள இனிப்பான மாம்பழங்களைக் கொடுக்கும் இனங்களாக அடையாளங் காணப்பட்டது. 2019 இல் வெளியான தின்னவேலி சிவப்பு எனும் புதிய சுவையான விசேடித்த வாசனையுள்ள மாவினமும் அறிமுகம் செய்யப்பட்டது. இதைவிட TOM E.J.C என்னும் புதிய இன மாவினமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

panam kizangu

பலாவில் கூழன், செம்பகவரியன் மற்றும் சாதாரண பலாப்பழங்களும் உண்டு. ஒரு மரம் இன்னொரு மரத்தின் குணாம்சங்களோடு சரிவரப் பொருந்தாத தன்மை பலாவினத்தின் தனிப்பட்ட இயல்பாகும். வாழையைப் பொறுத்தளவில் கதலி, கொழும்புக்கதலி, கப்பல், இதரை, சாம்பல் மொந்தன், மொந்தன், செவ்வாழை, ஆணைமாலு (யானை வாழைப்பழம்) போன்ற பலவகைப்பட்ட  வாழையினங்கள் எம் பிரதேசத்தில் உண்டு. இவற்றை விட விளா, நெல்லி, விழும்பி, பாலை, சூரை, ஈச்சை, நாவல் போன்ற பல பழவகைகளும் உண்டு. தோடையில் பிபில என்னும் இனிப்புத் தோடை வகை உண்டு. 

திராட்சையில் வட பிரதேசத்துக்கே தனித்துவமாக வளரும் இஸ்ரேல் நீலம் (Israel Blue) என்னும் இனம் 1956 அளவில் ஒரு கத்தோலிக்க குருவானவரால் வசாவிளான் பகுதியில் அறிமுகமாக்கப்பட்டது. புதிதாக பல இனங்கள் அறிமுகமாக்கப்பட்டிருந்தாலும் அவை எம் சூழலுக்கு பொருந்தாமையால் திராட்சையில் பல்வகைமையை பேணிப் பாதுகாப்பது சவாலாக அமைகிறது. 

isreal grapes

பஷன், பப்பாசி, கொய்யா, மாதுளை, யம்பு, நாவல் போன்றவற்றிலும் பரந்து வாழும் பலவகைப் பழங்களை தோற்றுவிக்கும் தான்தோன்றி இனங்கள் உண்டு. அறிமுகமாக்கப்பட்டுள்ள தாய்லாந்து கொய்யாப் பழங்கள் தற்போது கிடைக்கின்றன. மாதுளையில் நிமாலி, தயா என்னும் நடுத்தரப் பருமனுடைய பழங்களைத் தோற்றுவிக்கும் இனங்கள் உண்டு. சந்தையில் கிடைக்கும் பெரிய வகை மாதுளம் பழங்களின் கன்றுகளை உருவாக்குவது சவாலாகவே உள்ளது. மனித உணவில் அடங்க வேண்டிய 200g நிறையுடைய பழங்களின் ஊட்டச்சத்தைப் பெற நாம் பழங்களின் பல்வகைமையை பேணிப் பாதுகாத்தாக வேண்டும். 

புளி, வேம்பு, இலுப்பை, மஞ்சமுன்னா, நொச்சி, கமுகு, தேக்கு, மலைவேம்பு, காட்டு ஆமணக்கு, ஆமணக்கு போன்றன பயன்தரும் மரங்களாகும். விண்ணிலிருந்து பார்க்கையில் பரந்துபட்டுக்காணப்படும் இம் மரங்களுடன் பிரதானமாக வளர்க்கப்படும் தென்னை மரங்களும் அளப்பெரிய பொருளாதார பங்களிப்பைச் செலுத்தக் கூடியன. தற்காலத்தில் குறை வயதுடைய வீரிய இனங்கள் மற்றும் செவ்விளநீர் போன்றவை துரிதகதியில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

புல், பூண்டு வகைகளின் பல்வகைமை

மிருகங்களுக்கு மட்டுமல்லாது மனிதருக்கும் பயன்தரும் பல்வகையான புல், பூண்டு இனங்கள் எம் பிரதேசத்தில் தாராளமாக கிடைக்கின்றன. மேட்டு நிலத்தில் கிடைக்கும் புல்லினங்களும் தாழ் நிலங்களில் வளரும் புல்லினங்களும் உண்டு. அறுகு, பிரதானமான புல்லாகும். யானைப்புல், காவாய்ப்புல், புறாக்காலி, கோரை, நேப்பியர், மானா போன்ற பெரிய அளவில் பயன்தரக் கூடிய புல்வகைகள் உண்டு. மாடுகளுக்கு பயன்தரக் கூடிய இனிப்புச் சோளப் புல், சீயோ-3, சீயோ-4 வகைகள் மற்றும் கம்பு நேப்பியர் புல் பயனுள்ள விலங்குணவாகப் பயன்படுத்தப்படுகிறது. அண்மைக்காலத்தில் வலிந்து அறிமுகமாக்கப்பட்டுள்ள பார்த்தீனியம் எனும் களை கட்டுப்படுத்த முடியாத அச்சுறுத்தும் களையாகும். கோழிச்சூடன், குதிரை வாலன், சீதேவியார், செங்கழுநீர், நீர்ப்புல் மற்றும் கோரை என்பன தாழ்நிலங்களில் வளருபவை. இவற்றின் பல்வகைமை நெல் வயல்களுக்கு சவாலாக இருந்தாலும் கையினால் களை கட்டுமிடத்து இவற்றை விலங்குணவாக மாற்றமுடியும்.

Arugu

குப்பைமேனி, மூக்குத்திப் பூண்டு, தொட்டாச்சுருங்கி, நாயுருவி மற்றும் கடுவநாவல் போன்றன பூண்டு வகைகளில் பிரதானமானவை. இவை மனிதருக்கு சவாலாக அமைந்திருந்தாலும் சுற்றாடல் சமநிலையிலும் உணவுச் சங்கிலியிலும் பங்கெடுக்கும் பிரதான பூண்டு வகைகளாகும்.

மூலிகைச் செடிகளின் பல்வகைமை

எமது கலாசாரத்தோடு இணைந்த மருத்துவக் குணங்களுடைய பல்வேறு வகைப்பட்ட மூலிகைப் பயிர்கள் காணப்படுகின்றன. வீட்டு முற்றத்தில் வளரும் துளசிச்செடி, கற்பூரவள்ளி, வெற்றிலைக்கொடி, தூதுவளை, முடக்கொத்தான் போன்றன பிரபல்யமானவை. ஊமத்தை, சித்தரத்தை, நீலப்பூச்செடி, பூவரசு, வாதனாராணி, நன்னாரி, கொவ்வை, முசுக்கட்டை, பருத்தி போன்ற இன்னோரன்ன மருத்துவச் செடிகளும் எம் பிரதேசத்தில் காணப்படுகின்றன. இவற்றின் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகின்றது. 

Thoothuvazhai

விலங்கினங்களின் பல்வகைமை

எம்மோடு இணைந்து வீட்டில் வளரும் பிராணிகளான நாய், பூனை, ஆடு, மாடு, கோழி, வாத்து மற்றும் தாரா என்பனவற்றில் பல்வகைமைகள் உண்டு. அறிமுகமாக்கப்பட்ட நாயினங்கள் பலவுண்டு. அத்துடன் வீட்டில் சேதங்களை உருவாக்கும் எலிகள், சுண்டெலிகளும் உண்டு. வயல் நிலங்களில் வளரும் அகளான் போன்ற எலி வகைகளும் உண்டு. ஓணான், பல்லி, உடும்பு, அணில், மர அணில், மரநாய், கீரி, ஆமை, முயல் போன்ற விலங்கினங்களும் நத்தை, அட்டை, தேரை, நட்டுவக்காளி, பூரான், கரப்பான் போன்றனவும் எம் சுற்றாடலில் நடமாடுகின்றன. முற்றத்தில் வளரும் பூக்களில் பயன்தரும் மூன்றுவகைத் தேனீக்கள் உண்டு. சிறிய தேனீ, தேனீ மற்றும் மலைத் தேனீ என்பனவற்றின் தேன் அதிகப் பெறுமதிமிக்கவை.

காங்கேயன், ஊர் மாடு, ஜேர்சி, ஜவகால் மற்றும் Holson & Fresion போன்ற கலப்பினங்கள் மாட்டில் காணப்படுகின்றன. ஏரியுள்ள மாடுகள்  உழுதலுக்குப் பயன்படும்; ஏனையவை பால் உற்பத்திக்கு பயனுள்ளவை. ஜமுனாபாரி, சாணன், அரிக்கன் மற்றும் செம்மறியாடு போன்றன ஆடுகளி்ன் பல்வகைமையில் அடங்கும். பறவைகளைப் பொறுத்தளவில், கிளி, காகம், மைனா, வௌவால், கொக்கு, குக்குறுப்பான், மாம்பழக்குருவி, எருத்துவாலன், பருந்து, புழுனி, குயில், செண்பகம், மரங்கொத்தி, கருங்குருவி, மணிப்புறா, நிலக்கிளி என்பன வந்துபோவனவாக இருந்தாலும் கோழி மற்றும் புறா என்பன நிலையாக வீட்டில் வளருபவையாக உள்ளன. வயலையும் குளங்களையும் அண்டிய பிரதேசங்களில் நீர்க்காகம், மணல்வாரி, நத்தைகொத்தி, நாரை, அன்னம், மழைக்கன்னி, காடை, கௌதாரி, கூவை, மீன்கொத்தி, வல்லூறு போன்றனவும் காணப்படும். இவற்றின் பரம்பல் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வேறுபடும். இவை பயனுள்ள உணவுச் சங்கிலிகளின் கூறுகளாகவும் அமைவன.

விவசாயம் மற்றும் சுற்றாடல்சார் அபிவிருத்தியும் அச்சுறுத்தலும்

விவசாயம்சார் அபிவிருத்தியில் பிரதான பங்குவகிப்பவை நவீன தொழில்நுட்ப வழிமுறைகளாகும். உதாரணமாக சொட்டு நீர்ப்பாசனம், தூவல் நீர்ப்பாசனம், வானூர்தி தெளிகருவி என்பன அண்மைக்காலத்தில் பெரும் பங்காற்றும் நவீனத் தொழில்நுட்பங்களாகும். அநேக விவசாயப் பொருள்கள் அழிவுறும் தன்மை கொண்டன. இவ் அழிவுறும் தன்மையால் ஏற்படும் சேதங்களைத் தவிர்ப்பதற்காக பெறுமதிசேர் தொழில்நுட்பங்கள் மற்றும் அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பங்கள் என்பனவற்றைப் பயன்படுத்தும் தேவை எழுந்துள்ளது. ஊறுகாய், ஜாம் உற்பத்தி, வற்றலாக்கும் பொறிமுறைகள், பனாட்டு உற்பத்தி என்பன மெருகூட்டப்பட வேண்டியவை. பழச்சாறுகளின் உற்பத்தி தற்போது அபிவிருத்தியடைந்து வருகிறது. சோஸ் தயாரிப்புகள் மூலம் தக்காளி மற்றும் மிளகாயை பழுதடையாது சேமிக்கலாம். தற்போது நிலக்கடலையிலிருந்து பல்வேறுவகைப்பட்ட உற்பத்திகள் சந்தைப்படுத்தப்படுகின்றன. ‘ஜம்போ பீனட்’ இதற்கு உதாரணமாகும்.

எள்ளிலிருந்து தருவிக்கப்படும் எள்ளெண்ணெய்யை தெளிவாக பிரித்தெடுக்கும் வழிமுறைகள், நல்லெண்ணையின் பெறுமானத்தை அதிகரித்துள்ளது. மிளகாய் காயவைக்கும் இயந்திரம், மஞ்சள் மா தயாரிப்பு மற்றும்  மஞ்சள் பயிர்ச்செய்கை அபிவிருத்தி போன்றன முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெங்காயத்தில் உருவாகும் பூ மூலம் கிடைக்கப்பெறும் உண்மை விதையின் உற்பத்தி வெங்காயச் செய்கையின் உற்பத்திச் செலவைக் குறைக்க வழிவகுக்கும்.

தென்னையிலிருந்து அன்றாட சமையலுக்கு தேவையான பயன்களை எடுப்பது மட்டுமல்லாது கொப்பறாக்களை காயவைத்து தேங்காய் எண்ணெய் எடுக்கும் பொறிமுறை செக்கிலிருந்து மாறி இயற்திரப் பயன்பாட்டை அடைந்துள்ளமை தரமான கலப்படமற்ற தேங்காய் எண்ணெய்யை கணிசமான அளவு மக்களுக்கு வழங்குகிறது. சுற்றாடலிலிருந்து கிடைக்கும் புளியம்பழம் சமையலுக்குப் பயனுள்ள பொருளாக உள்ளது. அத்துடன் இலுப்பெண்ணெய், வேப்பெண்ணைய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் போன்றன மருத்துவ குணங்களோடு பிரித்தெடுக்கப்படுகின்றன.

ஒடியல், புழுக்கொடியல், பனாட்டு, பாணிப்பனாட்டு, போத்தலில் அடைக்கப்பட்ட பனங்களி, பதனீர், பனங் கள், பனங்கட்டி போன்றன பனை அபிவிருத்திச் சபையாலும், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனிப்பட்டோராலும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் உற்பத்திப் பொருட்களாகும். புலம்பெயர் முதலீட்டின் மூலம் இவற்றை ஏற்றுமதிக்கான தரத்தில் உற்பத்திசெய்து அதிக இலாபமீட்டப்படுகிறது. பனஞ்சாராய உற்பத்தியில் புதிய பரிமாணத்தில் ஏற்றுமதி செய்யப்படும் ‘யப்னா உஷார்’ எனும் சாராய வகைகளைக் இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். அன்றாடப் பயன்பாட்டிலிருக்கும் நீத்துப்பெட்டி, பாய், சுளகு, தடுக்கு, பெட்டி மற்றும் கூடைகள் உட்பட கைவினைப் பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தென்னந்தும்பு உற்பத்தி மற்றும் சிரட்டையின் கொள்வனவு அதிக லாபத்தை ஈட்டி வருகிறது.

போதுமான அளவு நெல் உற்பத்தியை அடையும் நோக்கில் நமது அபிவிருத்திப் பாதை செல்ல வேண்டும். வைக்கோல் மற்றும் உமி என்பவற்றை மூலப்பொருளாக்கி கட்டிடத்திற்குப் பயன்படும் கற்களை உற்பத்தியாக்கும் வழிமுறைகள் தற்போது உருவாகியுள்ளன. இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்குப் பதிலாக மாற்று வழிமுறையான துவரம் பருப்புச் செய்கையும் பருப்புப் பிரித்தெடுக்கும் வழிமுறைகளும் செயற்படுத்தப்பட வேண்டும். சோயா அவரை உற்பத்தியிலும் கவனஞ் செலுத்த வேண்டும். கம்புப் பயிரின் பயன்பாடு கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்திருப்பினும், இவற்றின் உற்பத்தியும் இதிலிருந்து உருவாகும் உணவு வகைகளும் பிற மாவட்டங்களுக்கும் பரவலடைய வேண்டும்.

பயிர்களிலிருந்தும் உருவாக்கப்படும் உணவுப் பயிர்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் ஐரோப்பிய சந்தைகளில் இடம்பிடிக்கும் வகையில் எம்மவரின் உற்பத்தி தரமானவையாகவும் நஞ்சற்றவையாகவும் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக Good Agricultural Practices (GAP) சேதனப் பயிர்ச் செய்கையுடன் தற்போது போட்டி போடுகின்றன. போதைப் பொருள்களின் பாவனையை குறைக்க நாட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் வட – கிழக்கு பிரதேசங்களின் விவசாயப் பொருளாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. ஏனெனில் வடக்கு – கிழக்குப் பகுதிகளில் தொன்றுதொட்டு பயிரிடப்படுவதாக புகையிலைச் செய்கை காணப்படுகின்றது. ஸ்திரமான முடிவு அரசாங்கத் தரப்பால் தெரிவிக்கப்படாவிடினும் இதற்கான மாற்று வழிகள் எம் பிரதேசத்தில் ஆங்காங்கே தலை தூக்கியுள்ளது. உதாரணமாக தீவுப் பகுதிகளில் பயிரிடப்பட்டு வருவாயை தோற்றுவிக்கும் கற்றாளைச் செய்கையைக் குறிப்பிடலாம்.

காலநிலை மாற்றத்தின் கோரத்தால் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கும் குறைவடைந்து செல்லும் மழை வீழ்ச்சிக்கும் முகம்கொடுக்கும் விதமாக டிராகன் பழ உற்பத்தி மீதும், மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி மீதும் கவனஞ் செலுத்த வேண்டும்.

தேன் மிக அரிதாகவே இங்கு கிடைக்கின்றது. மன்னாரில் குஞ்சுக்குளத்தை தவிர ஏனைய பகுதியில் கிடைக்கப்பெறும் தேன் பெரும்பாலும் சீனி கலந்து உற்பத்தியாக்கப்படுபவையாகவே காணப்படுகிறது. இதனால் விவசாய நிலங்களிலும் மற்றும் சுற்றாடலிலும் தேனிப்பெட்டிகளை வைத்தோ அல்லது மண் பானைகளை வைத்தோ சுத்தமான தேனை உற்பத்தி செய்தல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

bee keeping

மாரி காலத்தில் இடி முழக்கங்கள் ஏற்படும்போது குளக்கரை மற்றும் பெரு மரங்களின் அடியில் தோன்றும் காளான்கள் உணவாக உட்கொள்ளச் சிறந்தது. தற்போதைய சந்ததிக்கு இதனை கிடைக்கச் செய்வதன் பொருட்டு குடிசைக் கைத்தொழிலான காளான் உற்பத்தியை மேலும் அதிகரித்தல் வேண்டும்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள குழந்தைகள் மற்றும் சிறார்களின் போசாக்குத் தன்மை மோசமாகி வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அபிவிருத்தியை மட்டுமே இலக்காகக் கொண்ட நாம் இச் சிறார்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளோம். உள்ளூரில் உற்பத்தியாக்கப்படும் தானிய வகைகளான சாமை, திணை, வரகு, குரக்கன் மற்றும் கம்பு என்பவற்றின் உற்பத்தி அதிகரித்து இவர்களின் குறை போசாக்கை நிவர்த்தி செய்யலாம். உள்ளூர் நாட்டுப்புறக் கோழிகளின் முட்டை, இறைச்சி என்பனவற்றின் உற்பத்தி பல நிறுவனங்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இவற்றின் தீவனத் தேவையை குறை நிரப்பும் வகையில் பயன்படுத்தப்படும் தீவனங்களின் உற்பத்திக்கு சோளம் மற்றும் இறுங்கு என்பவை போதுமானதாக இல்லை. மானாவாரியில் வெற்றுத் தரைகளில் இவற்றை உற்பத்தி செய்து இத் தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

உள்ளூர் உற்பத்திக்கு முனைப்புடன் செயலாற்றும் இளைஞர் யுவதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்குரிய பயிற்சிகளை வழங்கும் செயற்திட்டம் யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாயம்சார் சமுதாய மேம்பாட்டுக் குழுவினரால் முன்வைக்கப்பட்டுள்ளது. தொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு தகுந்த பயிற்சி அளித்து முதலீட்டு ஏற்பாடுகளை செய்துகொடுத்து வளர்த்தெடுக்கும் நிலையும் உருவாக்கப்படவுள்ளது. குறிப்பாக விவசாயப் பட்டதாரிகள் தமக்கும் நாட்டுக்கும் பயனுள்ள இவ்வகையான சுயதொழில் முயற்சியாண்மையில் நாட்டம் கொள்ள வேண்டும். உள்ளூர் உற்பத்திகளான சத்துணவுகள், காளான், தேன், தீவனங்கள், சிறுவர்சார் பால் உற்பத்தி பொருள்கள், சவ்வரிசி உற்பத்தி, மர முந்திரிகை பதனிடல் போன்றவை மிகவும் பயனுள்ள தொழில் பிரிவுகளாகும். பசுந்தாள் பசளைகளின் உற்பத்தி குறிப்பாக பூவரசு, சணல், காட்டுச் சூரியகாந்தி, தாவுளை மற்றும் கஞ்சாந்தகரை போன்றனவற்றின் உற்பத்தி அபிவிருத்தியில் பெரும் பங்காற்றுகிறது.

அபிவிருத்தியில் மண்ணின் பங்கு

அதிகரித்து வரும் உணவுப் போக்குக்கு ஈடுகொடுக்கும் வகையில் மண்ணின் தன்மை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். முன்னோரால் வடிவமைக்கப்பட்டு வடிகாலிற்காக விடப்பட்ட நிலப்பரப்புகள் நெற்செய்கைக்கு உள்வாங்கப்பட்டுள்ளமை அண்மைக்கால ஆராய்ச்சிகளின்படி தெளிவாகியுள்ளது. இப் பகுதிகளிலுள்ள வாய்க்காலுக்கு சரியாக இடங்கொடுப்பது அபிவிருத்தியை தக்கவைக்கும். அத்துடன் நீர் விரயமாகுதலை துல்லியமான விவசாயப் பொறிமுறைகள் மூலம் குறைத்து உற்பத்தியின் அளவை அதிகரிக்க வேண்டும்.

அச்சுறுத்தல்

பசுமைப் புரட்சியோடு செயற்கைப் பசளைகளின் பாவனையும் கிருமி நாசினிகளின் பாவனைகளும் அதிகரித்துள்ளன. இவற்றின் பாவனையின்றி உணவு உற்பத்தி செய்தல் மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. அதிகரித்த நைதரசனின் பாவனை நிலத்தடி நீரில் கலந்து நீலப் பிள்ளைகளை (Blue Babies) உருவாக்குவது இவற்றின் மோசமான விளைவுகளில் ஒன்று. பொலன்னறுவை மற்றும் அனுராதபுரப் பகுதிகளில் அதிகரித்துக் காணப்படும் சிறுநீரகம் சம்பந்தமான நோய்க்கு முழுக் களைகொல்லியான ரவுண்டப் (Glyphosate) பாவனையே காரணமாக கருதப்படுகிறது. சுற்றாடலில் நிலவும் தேனிக்களின் பரம்பலை இரசாயனப் பாவனைகள் பெரிதும் பாதிக்கிறது. விவசாயிகளின் முறையற்ற தெளித்தல் முறைகளும் மீந்திருக்கும் போத்தல்களை வெளியேற்றும் பொறிமுறைகளும் தெளிகருவிகளை ஆற்றோரத்தில் கவனமின்றிக் கழுவுதலும் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலே. 

பூச்சி மற்றும் பீடைத் தாக்கங்களுக்கு கிடை எதிர்ப்புத் தன்மை மற்றும் மேல்நோக்கிய எதிர்ப்புத்தன்மையைக் (Vertical & Horizontal resistance) காட்டுவது பயிர்களின் குணாம்சம். புதிய இனங்களைக் கண்டுபிடிக்கும் பொழுது மேல்நோக்கிய முனைப்புத் தன்மைக்கு முன்னுரிமை வழங்குவதால் கிடை எதிர்ப்புக்குரிய பரம்பரை அலகுகளைக் கொண்டுள்ள கருவூலங்கள் புறக்கணிக்கப்படுதல் பயிர்களின் பல்வகைமைத் தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மொட்டைக்கறுப்பன், அணில்வரியன், பச்சைப்பெருமாள் போன்ற பழமையான நெல்லினங்கள் கொட்டுதல், சரிதல் போன்ற விரும்பத்தகாத குணாம்சங்களை கொண்டிருப்பதன் காரணமாக, இவ்வியல்புகளைத் தவிர்க்கும் பரம்பரை அலகுகள் பிரமிட்டுகள் ஆக்கப்பட்டதால், நாம் தரமான அரிசி வகைகளை இழந்திருப்பது பெரும் துரதிஷ்டமாகும்.

விவசாயச் செய்கை தற்போது வியாபாரம் ஆகிவிட்டதால் பச்சையாக உண்ணும் காய்கறிகளான கீரை வகைகளுக்கும் நஞ்சான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு இரசாயனங்களுக்கும் அவற்றின் பாவனைக்குட்பட்ட விவசாய விளை பொருள்களை அறுவடைக்கு தகுதியாக்கும் கால இடைவெளிகள் (Harvest Intervals) உண்டு. அதாவது மருந்து தெளித்த பின்பு குறித்த நாட்களுக்குப் பின்பே அறுவடை செய்யப்பட வேண்டும். வெண்டி மற்றும் கத்தரிகளைத் தாக்கும் துளைப் புழுக்களை கட்டுப்படுத்தும் இரசாயனங்கள் அதிக நஞ்சுள்ளவை. இருப்பினும் கால இடைவெளிகளை பொருட்படுத்தாது அதிக நஞ்சுள்ள இரசாயனங்களைத் தெளித்து உடனடியாக சந்தைப்படுத்தும் விவசாயிகளும் உள்ளனர். இது தவிர்க்கப்பட வேண்டியதொன்று. இடைத் தரமாகப் பழுத்த வாழைக்குலைகள் கடைகளில் தொங்குவது கனவாகிவிட்டது. எதிலீன் மற்றும் பல்வேறு வகைப்பட்ட காபைற்றின் பாவனை பழங்களை சரியான காலத்திற்கு முன்பாகவே பழுக்கவைப்பதால் தரமான பொருட்களை தக்கவைக்க முடியாதுள்ளது. மாம்பழங்களை இயற்கையான வழிகளில் பழுக்க வைக்கும் பொறிமுறை இருப்பினும் சந்தைகளில் துணிவுடன் வாங்க முடியாதுள்ளது. இவை போன்ற பொருத்தமற்ற பழக்கவழக்கங்கள் திடமான சந்ததிகளை உருவாக்குவதில் பெரும் அச்சுறுத்தல்களையும் ஐயப்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளன. வரையறையின்றிய காடழித்தல், வயல் நிலங்களை வீடுகளாக்குதல், வாய்க்கால்களை வயலாக்குதல் போன்றன பயிர் உற்பத்தியின் எதிர்காலத்தை மோசமாக்கி வருகிறது. மேய்ச்சல் தரவைகளை தம்வசப்படுத்திக் கொள்ளல் விலங்குகளுக்கு உணவளிப்பதைச் சவாலாக்கியுள்ளது. 

இரணைமடு போன்ற பெருங்குளங்களின் குளக்கட்டின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்புகளில் (பெரும்பாலும் காடுகள்) பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி மரங்களை வெட்டி வயல் நிலங்களாக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது நம் மக்களின் இருப்பை பாதிக்கும் நடவடிக்கையாகும். இதனால் நீர்த்தேக்கத்தின் வரம்புகள் உடையும் சாத்தியம் அதிகம்; பாரிய இழப்புகளைச் சந்திக்க நேரலாம்.

Iranaimadu

பல்வகைமையைக் கொண்டிருக்கும் பற்றைக் காடுகளையும் மரஞ்செடி கொடிகளையும் பாதுகாப்பது எமது கடமையாகும். இப் பகுதிகளை சுத்தமாக்கும் போது வரையறையின்றி எரித்துவிடுதல் அங்கு வாழும் உயிர்ப்பல்வகைமையை அழித்துவிடக் கூடும்.

பூகோளத்தில் ஏற்படும் காலநிலை மாற்றம் குறிப்பாக வெள்ளப்பெருக்கு, கடல் மேலெழுதல், கடல்நீர் உட்புகுதல், மண்ணரிப்பு போன்றன விவசாய நிலங்களில் நிலவும் பல்வகைமைக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்துகின்றன.

விவசாயம் என்பது பொழுதுபோக்கிற்காக செய்யப்படும் தொழில் முயற்சியிலிருந்து மாறுபட்டது. இளைஞர்களால் பிரியமுடன் செய்யப்படாத தொழிலில் ஒன்றாகவும் இருக்கின்றது. இதனால் அடுத்துவரும் சந்ததிகளுக்கு இதன் செய்கை வழிகளைக் கற்றுக் கொடுத்தலும், இதனைச் செய்வதன் மூலம் பாதுகாக்கப்படும் பெரும் தொகையான உயிரியல் பல்வகைமை தொடர்பான அறிவைக் கடத்துதலும் இயலாத காரியமாகவே உள்ளது.

இக் கட்டுரைத் தொடரில் பலவகையான பல்வகைமைத் தன்மைகளையும் அவற்றோடு தொடர்புபட்ட அங்கிகள், வாழிடங்கள், அபிவிருத்தி, அச்சுறுத்தல் சம்பந்தமான இன்னோரன்ன விடயங்களையும் வடக்கு கிழக்கு பகுதிகளுடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்துள்ளேன். பல்வகைப்பட்ட மக்களின் கல்விக்கோ வருவாய்க்கோ பாதுகாப்பிற்கோ வாழ்வியலுக்கோ பயன்படும் வகையில் இவற்றைத் தொகுத்துத் தந்துள்ளேன். இவற்றில் குறிக்கப்படவேண்டிய இன்னும் சில விடயங்கள் இருக்கலாம். அவை தவறிப்போனதாக கருதப்படட்டும். இன்னும் பல தகவல்களுடன் இனிவரும் காலங்களிலும் வாசகர்களை சந்திப்பேன் என எண்ணுகின்றேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

ஆதாரங்கள்

  1. உயிரியல் பல்வகைமை – உதயன் நாளிதழ்.
  2. Northern province biodiversity profile and conservation action plan – 2020.
  3. Eastern province biodiversity profile and conservation action plan.

ஒலிவடிவில் கேட்க

5213 பார்வைகள்

About the Author

சி. ஜேம்சன் அரசகேசரி

விவசாய விஞ்ஞானியும் சூழலியலாளருமான கலாநிதி.சி.ஜேம்சன் அரசகேசரி அவர்கள் விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் முன்னைநாள் மேலதிக பணிப்பாளர் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான இவர் விவசாயத்துறையில் மூன்று தசாப்தங்களாக பயனுள்ள பங்காற்றி வருவதுடன் மிளகாய், வெங்காயம், நிலக்கடலை, குரக்கன் மற்றும் மா போன்ற பயிர்களில் புதிய வகைகளைக் கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயம் சம்பந்தப்பட்ட அநேக பிரச்சினைகளின் தீர்வுகளுக்கு வழிவகுத்துள்ள அரசகேசரி அவர்கள், மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் விவசாய மற்றும் சுற்றாடல் சம்பந்தப்பட்ட கருத்திட்டங்களுக்கு ஆலோசகராகவுள்ளதுடன் சமூக சேவையாளராகவும் திகழ்கிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)