Arts
8 நிமிட வாசிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணத்தினுடைய வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும்

August 11, 2022 | Ezhuna

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்பட்ட வளங்கள் தொடர்பாக தெளிவுடுத்துவதாகவும், அந்த வளங்களின் இப்போதைய பயன்பாடற்ற முறைமையை மாற்றியமைத்து உச்சப்பயனைப் பெறுதல், அதனூடே வடக்கு – கிழக்கின் விவசாயத்துறை, உட்கட்டமைப்பு, கடல்சார் பொருளாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியும் ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் விளக்குகின்றது.

பிரதேச அறிமுகம்

வடக்கு – கிழக்கு மாகாணங்கள்  இலங்கையின் ஒன்பது மாகாண பரப்புக்களில் அதிக நிலப்பரப்பைக் தன்னகத்தே கொண்டதும் சனத்தொகை செறிவின் அடிப்படையில் இலங்கையின் பிரதான இனங்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் ஆகிய மூவினத்தவரதும் குடியிருப்புக்களை கொண்டதோடு அதிக அளவிலான தமிழர்கள், முஸ்லீம்களின் தாயகப்பரப்பாகவும் காணப்படுகின்றது. பல்லின பன்மைச்சமூகங்கள் வாழும் பகுதியாகவுள்ளதனால் இப்பிரதேசத்தின் பண்பாட்டு மற்றும் சமூக நிலைமைகள் வேறு எந்த மாகாணங்களிலும் இல்லாத விசேட தன்மையுடைய பிராந்தியமாக இயங்கி வருகின்றது. இதில் வடமாகாணமானது, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா என்கின்ற ஐந்து மாவட்டங்களையும் 34 பிரதேச செயலாளர் பிரிவுகளை கொண்ட 921 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளடங்கிய 3570 கிராமங்களைக் கொண்டது. உள்ளூராட்சி நிர்வாக அலகு வகைப்பாட்டின் கீழ் 34 உள்ளூராட்சி அலகுகளையும்,  ஒரு மாநகர சபையும், 05 நகர சபைகளையும், 28 பிரதேச சபைகளையும் உள்ளடக்கிய, 8890.07 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பைக் கொண்டது. இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 13.54 வீதத்தை வடக்கு மாகாணம் கொண்டுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணம்

 கிழக்கு மாகாணமானது  அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய 2447 கிராமங்கள் கொண்டது.  உள்ளூராட்சி நிர்வாக அலகு வலைப்பாட்டின் கீழ் 03 மாநகர சபைகள், 05 நகரசபைகள், 37 பிரதேச சபைகளை உள்ளடக்கியது.  4361 சதுர கிலோமீற்றர் பரப்பை நிலப்பரப்பாக கொண்ட கிழக்கு மாகாணமானது,  இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 14.93 சத வீத பங்கைக் கொண்டிருக்கிறது. இந்த வகையில்இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 28.47 சத வீதமான நிலப்பரப்பை உள்ளடக்கிய, நாட்டின் கால்பங்குக்கும் சற்று அதிகமான நிலப்பரப்பைக் கொண்ட பெரும்பகுதியான வடக்கு – கிழக்கு மாகாணங்களே    எமது ஆய்வு நிலைப்பட்ட பிரதேசமாகக் கொள்ளப்படுகின்றன. வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண நிர்வாக முறைமையானது 13 ஆவது அரசியல் சீர்திருத்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட மாகாணசபைகள் சட்டத்தின் 42 ஆம் இலக்கத்தின் கீழ் 1987 இல் பிரேரிக்கப்பட்டு 5.10.1988 இல் நடாத்தப்பட்ட தேர்தல் மூலம் மாகாண நிர்வாகம் உருவாக்கப்பட்டது. இந்த மாகாண நிர்வாகம் 1990  ஜூன் மாதம் கலைக்கப்பட்டிருந்தது. பின்னர் மாகாண ஆளுநரின் வழிகாட்டலின் கீழ் வடக்கு- கிழக்கு மாகாணசபையின் நிர்வாகம் தொடரப்பட்டது. 20 வருடகாலத்தின் பின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய 16.10.2006 முதல் வடக்கு மாகாணம்,  கிழக்கு மாகாணம் என இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டதுடன் 2008 மே 10 ஆம் திகதி கிழக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட்டு தனி நிர்வாகமாகவும் செயற்படத் தொடங்கியது. இவ்விரு மாகாணங்களினதும் சனத்தொகைப் பரம்பலை கவனத்தில் கொள்ளும் போது வடக்கு மாகாணத்தில் 1,255,691 பேரும் ,கிழக்கு மாகாணத்தில் 1,898,000 பேரும் வாழ்ந்து வருகின்றனர்.இந்த சனத்தொகையில் வட மாகாணத்தில் 16.52 வீதமானவர்கள் நகர்ப்புறத்திலும் 83.48 சதவீதத்தினர் கிராமிய புறத்திலும் வாழ்ந்து வருகின்றனர். அதே போல் கிழக்கு மாகாணத்தில் நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் 28 சதவீதமாகவும் கிராமப்புறத்தில் வாழ்பவர்கள் 72 சதவீதமாகவும் காணப்படுகின்றனர். இந்த வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் மொத்த சனத்தொகையானது 3,153,691 ஆகக் காணப்படுகின்றது.

உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்தந்த பிரதேசங்களைச் சார்ந்த வளங்களை மையப்படுத்தி அவ்வளங்களின் மீது உச்சப்பயன்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் செய்து கொள்ளப்படும் திட்டமிடலே ஆகும். இத்திட்டமிடல் மூலமே சிறந்த வளர்ச்சிக்குரிய வாய்ப்பை, அந்தப்பிரதேச மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும். பிரதேச மட்ட வளங்களின் பயன்பாடு குறித்து உச்ச மட்ட கவனத்தில் கொள்ளாது தேசிய மட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார முன்மொழிவுகளினாலேயே சமமற்ற பிராந்திய வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற நியாயத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. இலங்கையின் மாகாணமட்ட அபிவிருத்தியில்,  மேல் மாகாணம் அதீத முன்னிலை பெறுவதற்கு இதுவே காரணமாகியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46 சதவீதமான பங்களிப்பை தனி ஒரு மாகாணமாக இம் மாகாணம் வழங்கி வருகின்றது. வடக்கு மாகாணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 711,459 மில்லியன் ரூபாயும் கிழக்கு மாகாணம் 866,121 மில்லியன் ரூபாயும் பங்களிப்புச் செய்து வருகின்றது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.47 சதவீதம் மட்டுமே. இதில் வடக்கு மாகாணம் 4.7 சதவீத பங்களிப்பையும் கிழக்கு மாகாணம் 5.77 சதவீத பங்களிப்பை மட்டுமே வழங்கி வருகின்றது. நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ¼ பங்கை கொண்டுள்ள இவ்விரு மாகாணங்களும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தினை மட்டுமே வழங்கி வருகின்றமை  உள்ளூர் வளங்களின் முறையற்ற பயன்பாட்டுத்தன்மையை வெளிக்காட்டும் அல்லது முழுமை பயன்பாட்டையும் பெறவில்லை என்பதனை வெளிக்காட்டும் ஒரு குறியீடாகவே கருத முடிகிறது.

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்கள் பற்றிய அறிமுகம்

மீன்பிடி

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்கள் பற்றிய பகுப்பாய்வும் பொருளாதார உந்தூக்கத்தை தரக்கூடிய நிலம், காடு, காலநிலை, சனத்தொகை, விவசாயம், கால்நடைவளர்ப்பு, மீன்பிடி, பொருளாதார உட்கட்டமைப்புக்கள்,  சமூகஉட்கட்டமைப்புக்கள், சக்திவளம், நீரும் நீர் மூலங்களும் போன்ற முக்கியமான வளங்களின் கிடைப்பனவும் பயன்பாடும் குறித்த விடயங்களை ஆய்வுக்குரியதாக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் பிரதான பொருளாதார வளங்களை நாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து கொள்வது அவசியமாகும்.

நிலமும் நிலப்பயன்பாடும்

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் நிலப்பயன்பாட்டு முறைமை பற்றி ஆராயுமிடத்து 16251.07 ஹெக்டேயர் நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மாகாணக்களுக்குரித்தான நிலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட நிலங்கள், விவசாய நிலங்கள், பாவணைக்குட்படாத விவசாய நிலங்கள், குடியிருப்பு காணிகள், காட்டு நிலங்கள், நீர் நிலங்கள், தரிசு நிலங்கள் என்ற பிரதான வகைப்பாடுகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. எனினும் பயிர்ச் செய்கை தொடர்பில் நன்மண் என்று அழைக்கப்படும் இருவாட்டி நிலம் இவ்விரு மாகாணங்களிலும் மிகப் பெரியளவில் காணப்படுவதுடன், மண்ணின் பயன்பாட்டை உச்சப் பயன்பாட்டுக்கு கொண்டுவரக்கூடிய நீர் மூலத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்ட மண் அமைப்பு இந்த மாகாணங்களின் விசேட நிலன்பயன்பாட்டை ஏற்படுத்த வாய்ப்பானதாகவுள்ளது. அத்துடன் கடல் மட்டத்திலிருந்து உயர்ந்த நிலையில் கடலை நோக்கி சாய்வை கொண்ட தன்மை காணப்படுவதுடன் தரையமைப்பின் காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கோ நீர் தேக்க  நிலைமையோ பெரிதாகக் காணப்படுவதில்லை. தேவையற்ற நீர் கடலுக்கு வழிந்தோடக்கூடிய நில அமைப்பு இந்த பிராந்தியங்களின் தரைத்தோற்ற இயல்பாக இருப்பதுடன், மண் அமைப்பின் அடிப்படையில் 6 பிரதான மண்வகைகள் இங்கு காணப்படுகின்றன.

விவசாய நடவடிக்கை

நெல் செய்கைக்கு உகந்ததான ’ரெடிஸ் பிறவுண் ஏத்’ என்ற மண்ணும் ,மஞ்சள் சிவப்பு கலந்த ’லட்ரசோல்’ என்ற மண்ணும் பெரும் பங்கை வகிக்கின்றன. நிலப்பயன்பாடு என்ற வகையில் 2 சதவீதமான நிலங்கள் கட்டட அமைப்புக்களுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட நிலங்களாகவும், 22 சதவீதமான நிலங்கள் விவசாய நிலங்களாகவும், 12 சதவீதமான நிலங்கள் வீட்டு மற்றும் வீட்டத் தோட்ட செய்கைக்கான நிலங்களாகவும் காணப்படுவதுடன், 52 சதவீதமான நிலங்கள் வனப்பகுதியாகவும் காணப்படுகின்றன. இலங்கையின் மொத்த காட்டு வளம் மற்றும் பசுமைப் போர்வை என்பன   32 சதவீதமாக இருந்தபோதும்,  தற்போதைய இலங்கையின் பசுமைப் போர்வையானது 27 சதவீதமாக மட்டுமே காணப்படுகின்றது. இந்த பசுமைப் போர்வையை 32 சதவீதத்துக்கு அதிகரிப்பது தொடர்பில் இலங்கையின் அதிக காட்டு வளம் கொண்ட மாகாணங்களாக இவ்விரு மாகாணங்களும் காணப்படுவதுடன் புதிய இலக்காக மேலும் 4 சதவீதத்தினை உத்தரவாதப்படுத்துவதிலும் இவ்விரு மாகாணங்களின் காடுகளே அதிக பங்களிப்பை வழங்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் மக்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்காக புதிய நிலங்களை மக்களுக்கு வழங்குவது தொடர்பிலும் இவ்விரு மாகாணங்களிலும் ,வனவளத்திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கும் இடையில் பாரிய தர்க்கங்கள் இடம்பெற்று வருகின்றன.

வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரித்தல்

வடக்கு-கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை உலர் வலயக் காலநிலையைக் கொண்டதாகக் காணப்படுவதுடன், வெப்பமும் உலர்வும் கொண்ட பகுதியாகவும் காணப்படுவதனால் இயற்கை இடர்களில் வரட்சி தவிர்ந்த வேறு எந்த பாரிய இடரையும் சந்திக்க வாய்ப்பின்றி காணப்படுகின்றது. வடகீழ் பருவ பெயர்ச்சிக் காற்றினால் அதிகம் மழை பெறும் பகுதிகளான இப்பிராந்தியங்கள்,  ஒக்ரோபர் முதல் ஜனவரி வரையான காலப்பகுதியில் அதீத மழையை பெற்றுக் கொள்ளும் ஈரலிப்பு காலநிலையும் பெப்ரவரி முதல் செப்ரெம்பர் வரையிலான காலப்பகுதியில் அதிக வரட்சியுடைய காலநிலையும் பெற்றிருக்கின்றன. வெப்பநிலையின் அளவானது 25’o’c யிலிருந்து 32’o’c வரை காணப்படுகின்றது. வருடாந்த மழை கிடைப்பனவு 103.6mm  ஆக காணப்படுவதுடன் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலப்பகுதியிலும் தென் மேல் பருவப் பெயர்ச்சிக் காலப்பகுதியிலுமாக இரு வேறு காலப்பகுதிகளில் மழையை பெற்றுக் கொள்கின்றது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

20319 பார்வைகள்

About the Author

அமரசிங்கம் கேதீஸ்வரன்

பொருளியல் துறையில் சிரேஷ்ட வளவாளராகவும், பயிற்றுனராகவும் செயற்பட்டு வருகின்ற அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளராவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் இளமாணி மற்றும் முதுமாணிப்பட்டம் பெற்ற இவர் 2012ஆம் ஆண்டு ‘திட்டமிடல் மூல தத்துவங்கள்’ என்ற நூலினை வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (16)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)