Arts
26 நிமிட வாசிப்பு

பிரதேசம் சாராத மக்களுக்குரிய பொருளாதாரப் பரிமாணங்கள் : இலங்கைப் பெருந்தோட்டத் தமிழர்களின் விவகாரம்

February 18, 2023 | Ezhuna

மலையக சமூகத்தினரது சமூகநல விடயங்களையும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும், தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமை பிரச்சினைகளையும், தோட்ட தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், அது குறித்த கொள்கைகள், கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும், வீட்டுரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்தியதாக ‘மலையகம் : சமூக – பொருளாதார அரசியல் பரிமாணங்கள்’ இந்தத்தொடர் அமைகின்றது. அத்தோடு இந்தத்தொடர் மலையத்தில் தேயிலை கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கொள்கை முன்மொழிவுகள், தொழிலாளர்களின் வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்களையும்  வளர்ச்சிப் போக்கு கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகள் எவ்வாறு அமையலாம் என்பதற்கான பொறிமுறைகளையும் முன்வைக்கின்றது.

அறிமுகம்

இலங்கையில் பிரதேசம் சாராத சமூகங்களில் பெருந்தோட்டத் தமிழ்ச் சமூகமும் ஒன்று. இந்தச் சமூகத்தின் ஒட்டு மொத்தமான பொருளாதாரப் பரிமாணங்களை இந்தக் கட்டுரை ஆராய முற்படுகின்றது. இந்தச் சமூகம் உற்பத்தி செய்யும் நிதி எவ்வளவு, அபிவிருத்தி நோக்கங்களுக்காக அது முதலீடுகளின் வடிவத்தில் அரசிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றுக்கொள்கின்றது என்பதை இந்தக்கட்டுரை ஆராய முற்படுகின்றது. இந்த அம்சங்களை சரிவரப் புரிந்து கொள்வதற்கு முதலில் இந்தச் சமூகத்தின் மானுட, சமூக, அபிவிருத்தியை வரலாற்று ரீதியில் தடங்காண வேண்டும். இரண்டாவதாக இந்தத்துறையில் உருவாக்கப்படும் நிதிபற்றியும் அதற்காக மேற்கொள்ளப்படும் முதலீடுகள், நிதி ஒதுக்கீடுகள் பற்றியும் சுருக்கமாக ஆராயப்பட இருக்கின்றது. இறுதியில், இவற்றின் அடிப்படையில் சில முடிவுகள் பெறப்பட்டு அதற்கமைய யோசனைகள் தெரிவிக்கப்படும்.

பின்னணி

நவீன உலகில், மானுட அபிவிருத்தி பொருளாதாரக் கொள்கையின் மையக்கருத்தமைப்பாக ஏற்கப்பட்டுள்ளது. பொருளாதாரச் செயற்பாடுகளின் பாரிய நோக்கமாக, சமூக முதலீட்டின் முக்கிய குறிக்கோளாக அது மாறியிருக்கின்றது. ஒரு நாட்டினதும், அது போலவே ஒரு இனப்பிரிவினதும் சமூக அபிவிருத்தியில், முதலீட்டுப் போக்கு ஒரு திட்டவட்டமான, சக்தி வாய்ந்த அம்சமாகும். இலங்கை சமூகத்துறையில் 1930ஆம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து பாரியளவு முதலீடுகளைச் செய்திருக்கின்றது. இந்த அம்சமே சமூக, மானுட அபிவிருத்தித் துறையில் நாடு கணிசமான முன்னேற்றத்தை அடைவதற்கு உதவியுள்ளது. நாட்டில் ஆள் ஒருவருக்கான வருமானம் குறைவாக இருந்த போதிலும், சர்வதேச அடிப்படையில் பார்க்கும் போது சமூக மானுட அபிவிருத்தித் துறையில் நாடு உயர்ந்த நிலையில் உள்ளது. துருக்கியின் மானுட அபிவிருத்திச் சாதனைகளின் அளவைப் போல இலங்கையினது சாதனைகளும் சிறப்பாக உள்ளன. துருக்கியின் ஆள் ஒருவருக்கான வருமானம் இலங்கையைப் போல ஏறக்குறைய இரண்டு மடங்காகும். இலங்கையின் மானுட அபிவிருத்தி குறிகாட்டியானது, சீனா, இந்தியா, இந்தோனேசியா போன்ற ஒரேயளவு வருமானமுள்ள ஏனைய ஆசிய நாடுகளை விட உயர்வானது. மேலும், தெற்காசிய நாடுகள் மத்தியில் இலங்கை உச்சநிலையில் உள்ளது பெருமைக்குரியது என அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் இந்தச் சாதனைகள் நாட்டில் வாழும் பல்வேறு சமூகங்கள் மத்தியில் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்க உண்மையாகும். இந்திய வம்சாவளித் தமிழ்ச் சமூகத்தின் பெரும் பகுதியினரைக் கொண்ட பெருந்தோட்ட தமிழ் மக்கள், ஏனையோரைவிட பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இவர்கள் எந்த சமூக குறியிலக்குகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தாலும் எல்லா வகையிலும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றனர். இந்த ஆய்வுக்கட்டுரை குறிப்பாக தனியார் மயமாக்கத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் பெருந்தோட்டத்துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் சமூகத்தின் சமூக அபிவிருத்தியுடன் அதற்குள்ள பிணைப்புகள் ஆகியன பற்றி அக்கறை செலுத்துகின்றது.

தோட்டத்தொழிலாளி

நாட்டில் திறந்த பொருளாதாரக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பாரியளவிலான சமூக, பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன் பரிமாணமும் சிக்கல் தன்மைகளும் பல்வேறுபட்டவை. வரலாற்று ரீதியில் வளர்ச்சி குன்றிய நிலைக்குட்பட்ட இந்தியத் தமிழ்ச் சமூகம், புதிய சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. புது நிலைமைகளினால் உருவான வாய்ப்புகளையும் அது கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. தேசிய மட்டத்தை அடைவதற்குத் தேவையான துரித முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்குப் புதுமையான, சர்வ அம்சங்களும் தழுவிய மூலோபாயங்களை வகுப்பது அவசியமாகியது.

சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கியமான கவனம், யுத்தத்தால் சீர்குலைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் புனர்நிர்மாணம் செய்வது, உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்களையும் அகதிகளையும் மீளக்குடியேற்றுவது, அவர்களுக்கு மறுவாழ்வளிப்பது இந்தக் கடமைகளைச் செயலூக்கமான முறையில் மேற்கொள்வதற்குப் பொருத்தமான இடைக்கால நிறுவக, நிர்வாகப் பொறியமைவுகளை நிர்ணயிப்பது ஆகியன தொடர்பான பிரச்சினைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காலப்போக்கில் நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்தை அடைவதற்கு சமூகங்கள் மத்தியில் அதிகாரப் பகிர்வு சம்பந்தமான முக்கியமான அரசியல் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடித் தீர்வு கண்டாக வேண்டும். அத்தகைய கலந்துரையாடல்கள் மனப்பூர்வமானவையாகவும் நாட்டின் பல-இன, பல-கலாசாரத்தன்மையை மனதிற் கொண்டவையாகவும் இருக்க வேண்டும். அவை, பிரதேசம் சார்ந்த, பிரதேசம் சாராத சமூகங்களின் அக்கறைகளை ஒருங்கிணைப்பவையாகவும் இருக்க வேண்டும்.

இலங்கையின் சனத்தொகைக் கணிப்பில் நான்கு பாரிய இனச் சமூகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. (1). சிங்களவர்கள், (2). இலங்கைத்தமிழர்கள் (3). முஸ்லிம்கள் (4).இந்தியத்தமிழர்கள் – இலங்கைத்தமிழர்கள், இலங்கையின் வடக்கு-கிழக்கில் தமது பூர்வீகத்தையும் தாயகத்தையும் கொண்டவர்கள். முஸ்லிம்கள் நாடு முழுவதிலும் பரந்து காணப்படுகின்றார்கள். இவர்களில் சுமார் 30 சதவீதமானவர்கள் வடக்கு-கிழக்கில் வாழ்கின்றனர். பெரும்பான்மையானவர்கள் அம்பாறை மாவட்டத்தில் செறிந்துள்ளனர்.

இந்திய வம்சாவளி  தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுப் பின்னணி

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் குடியேறியவர்களின் வழித்தோன்றல்களே சனத்தொகைக் கணிப்பு சம்பந்தமான இன ரீதியிலான வகைப்படுத்தலில் இந்தியத்தமிழர் என்ற உத்தியோக பூர்வமான பதத்தின் மூலம் இனங்காணப்பட்டுள்ளனர். இலங்கையின் மத்திய பகுதியில் பிரிட்டிசார் ஆரம்பித்த பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதற்காகவே இவர்கள் வந்து குடியேறினர். ஆரம்பத்தில் குடியேறியவர்களில் சுமார் 20 சதவீதத்தினர் அரசாங்க மற்றும் வர்த்தகத்துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டவர்களும், நகர்ப்புற தொழிலாளர்களும் ஆவர். மேலும் ஒரு கணிசமான பகுதியினர் வர்த்தக நோக்கங்களுக்காக வந்தார்கள். காலப்போக்கில் சுலபமாக இனங்காணக்கூடிய, தனித்துவமான ஒரு வர்த்தக சமூகம் தோன்றியது. இவ்வாறு குடியேறியவர்களில் சிலர், குறிப்பாகக் கண்டி, மாத்தளை, பதுளை ஆகிய மாவட்டங்களில் சிறு நிலவுடமையாளர்களாகவும் குடியமர்ந்தனர். கைவினைத்துறை சார்ந்த பிரிவினரும் இருந்த போதிலும் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே.

வர்த்தக சமூகத்தினர் வட இந்தியாவில் இருந்தும் தென் இந்தியாவில் இருந்தும் வந்தனர். தமிழ்நாட்டில் இருந்து வந்த வர்த்தகர்களில் பெரும்பாலானவர்கள் பெருந்தோட்டங்களில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்துடன் மிகவும் குறைவான தொடர்பையே வைத்திருந்தனர். இந்த வர்த்தகப் பிரிவினர் சுதந்திரத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் நாட்டை விட்டு படிப்படியாக வெளியேறினர். இவர்களின் இடத்தை, பெருந்தோட்ட தமிழ்ச் சமூகத்தின் மேல் நோக்கி நகர்ந்த பிரிவினர் இப்போது வகிக்கின்றனர். பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு ஆள்திரட்டும் முகவர்களாகவும் விளங்கிய பெரிய கங்காணிமார் தோட்டங்களில் கடைகளைத் திறந்தனர். பிற்காலத்தில் இவர்களில் சிலர் அருகிலுள்ள நகர மையங்களிலும், கொழும்பிலும் தமது சொந்த வர்த்தக நிறுவனங்களை நிறுவினர். நாம் ஏற்கனவே கூறியதைப் போல, ஆரம்ப காலத்திலிருந்து வர்த்தகப் பிரிவினரில் ஒரு சிலரே இப்போது எஞ்சியிருக்கின்றனர். தற்காலத்து இந்தியத்தமிழ் வர்த்தகர்கள் பெரும்பாலும் பெருந்தோட்ட வம்சாவளியினரே. தற்கால இந்தியத் தமிழ் வர்த்தகச் சமூகத்துக்கும் பெருந்தோட்டத் தமிழர்களுக்கும் இடையே ஒரு இரத்த உறவு இருக்கின்றது. இருதரப்பாருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தியத் தமிழ் வர்த்தகச் சமூகத்தினர் எண்ணற்ற சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. இவர்களுக்கு அரசியல் பக்கபலமும் அனுசரணையும் இருக்கவில்லை. மேலும், அவர்கள் அடுத்தடுத்து நிகழ்ந்த இன வன்முறை அலைகளினால் பாரதூரமாக பாதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் கலவரங்களின் போது தமது சொத்து முழுவதையும் இழந்தார்கள். ஆயினும் இந்த சமூகத்தைச் சேர்ந்த சிலர் தமது கடின உழைப்பாலும் பிறப்பிலேயே உருவான தொழில் முயற்சியாலும் புத்துயிர் பெற்றார்கள். கொழும்பிலும், கண்டி, ஹட்டன், நுவரெலியா, பண்டாரவளை, பதுளை, மாத்தளை போன்ற பிற நகரங்களிலும் வர்த்தகத்தையும் தொழில்களையும் ஏற்படுத்தினர். இன்று இலங்கையில் சிறப்பாக நடாத்தப்படும் இந்தியத்தமிழ் வர்த்தக நிறுவனங்கள் பல உள்ளன. அரசாங்கத்துறைகளிலும் நிபுணத்துவ துறைகளிலும் தொழில் பெற்ற, இந்தியத்தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். இதற்கு, மிகச் சமீப காலம் வரையில் கல்வியைப் பெறுவதற்குப் போதிய வாய்ப்பு இல்லாமல் இருந்ததே காரணமாகும்.

சமீப ஆண்டுகளில் குறிப்பாக இடைநிலைக்குப் பிற்பட்ட கல்வி ஓரளவு வளர்ச்சியடைந்ததால் இந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்தது. எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறுவோரின் தொகை அதிகரித்திருக்கின்றது. உயர்கல்விக்கான விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. உயர் கல்வி பெற்ற ஒரு பிரிவினரும் தோன்றியுள்ளனர். இந்தப்பிரிவினர், உயர் அல்லது நிபுணத்துவம் சார்ந்த தகுதிகள் தேவைப்படும் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். இலங்கையில் உயர் கல்வி பெறுவதில் சிரமப்படும் வசதிபடைத்த இந்தியத் தமிழர்கள், உயர் கல்விக்காக இந்தியப் பல்கலைக்கழகங்களுக்குத் தமது பிள்ளைகளை அனுப்புகின்றனர்.

சமூகத்தின் தற்போதைய செறிவு நிலை

நாட்டின் மொத்த சனத்தொகையில், சுமார் 15 இலட்சம்பேர் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினர். இவர்கள் இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 8 சதவீதத்தினர். இவர்களில் 12 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்ந்து பணியாற்றுகின்றனர். நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இவர்கள் செறிந்து வாழ்கின்றனர். இந்த மூன்று மாவட்டங்களில் மாத்திரமன்றி கண்டி, மாத்தளை, கேகாலை, களுத்துறை, காலி, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தோட்டங்களிலும் கொழும்பு மாவட்டத்திலும் கணிசமான தொகையினர் வாழ்கின்றனர். நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களின் சனத்தொகையில், இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் மாவட்ட வாரியான விகிதாசாரம் முறையே, 52.5%, 21.1%, 9.3%, 6.8%,11.1%, 6.4%, ஆகும். இது தவிர, இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மலையகத்தில் இருந்து வட – கிழக்கு மாவட்டங்களான மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகியவற்றுக்குக் குடிபெயர்ந்தும் உள்ளனர்.

தற்போது இந்திய வம்சாவளித் தமிழ் மக்களில் 81.4%, சதவீதமானவர்கள் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர். இந்தியத் தமிழர்களில் எஞ்சியோர் பெருந்தோட்டங்களைச் சூழவுள்ள நகரங்களிலும் கொழும்பிலும் வாழ்கின்றனர். இந்த இரண்டு தரத்தினரையும் நாம் கவனத்தில் கொண்டோமேயானால், பெரும்பான்மையான இந்திய வம்சாவளி மக்கள் பெருந்தோட்டபகுதிகளிலேயே செறிந்து வாழ்கின்றனர். குறைந்த சதவீதத்தினர் பெருந்தோட்ட மாவட்டங்களுக்கு வெளியே வாழ்கின்றனர். அவர்கள் கிராமப்புற விவசாயத்தில் அல்லது நகர்ப்புறங்களில் வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். என்பதை அவதானிக்க முடியும். சுமார் 90 சதவீதமான பெருந்தோட்ட தொழிலாளர் அணியினர் இந்திய வம்சாவளி தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 2001ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணிப்பின் நிர்வாக அறிக்கையின்படி, அந்த ஆண்டில் இலங்கையில் வாழ்ந்த மொத்த தோட்ட (பெருந்தோட்டம் என்று அழைக்கப்படுகின்றது) மக்களின் எண்ணிக்கை 900,713 இதில் 88.4 சதவீதத்தினர் தமிழர்கள், பெருந்தோட்டங்களில் வாழும் மொத்த தமிழ் சனத்தொகையில் 95.9 சதவீதத்தினர் தோட்ட தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்தவர்கள். எனவே, பெருந்தோட்டத் தமிழர்கள் என்ற பதம் இந்திய வம்சாவளி தமிழர்களை வகைப்படுத்துவதற்கு அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

சமூகச் சூழலில் பின்னடைவுகள்

காலத்தால் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டபோதிலுங்கூட, ஆரம்ப காலத்துப் பெருந்தோட்டங்களைக் குணாம்சப்படுத்திய காரணிகள் தொடர்ந்து நிலவின. பெருந்தோட்ட சமூக மக்களின் வாழ்வில் செல்வாக்குச் செலுத்தின. வரிசைக்கிரமமான வீடமைப்பு, எதேச்சாதிகார நிர்வாக முறை, பிரதான நீரோட்ட அபிவிருத்தி நிகழ்வுப்போக்கிலிருந்து இன்னமும் தூரத்தில் விலக்கி வைக்கப்பட்டிருப்பது ஆகியன குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். மனித உரிமைகளுக்கு இங்கு மதிப்பும் இல்லை. குறிப்பிடத்தக்க அளவுக்குச் சமூக வளர்ச்சியில்லாத சமூகக் கட்டமைப்புக்குள் வரம்பிடப்பட்டு, சிறைவாழ்க்கையான உழைப்பு அமைப்புக்குள் சிக்குண்டு, பெருந்தோட்ட தமிழர்கள் இன்னமும்  சுலபமாக சமூக ரீதியில் முன்னேற முடியாமல் உள்ளனர். கல்வி, பயிற்சி ஆகியவற்றைப் போதியளவு பெறமுடியாமலும் தமக்கென சொந்த வாழ்க்கை முறையை பின்பற்ற முடியாமலும் இன்னமும் துன்பப்படுகின்றனர். தொழில் வாய்ப்பு, லயன் காம்பிரா வசதி, தோட்டத்தினால் வழங்கப்படும் சுகாதார வசதிகள் ஆகியனவும் ஏனைய பல அம்சங்களும் அவர்களைப் பெருமளவுக்குத் தோட்ட நிர்வாகத்தின் மீது சார்ந்து இருக்கச் செய்கின்றன. எனவே, அவர்களது அபிவிருத்தி போக்கும் பெருந்தோட்டங்களின் பரிமாணத்துக்கும் இடையிலான பிணைப்பு மிக மிகப் பலமானது. பெருந்தோட்டச் சமூகத்தின் வரலாறு முழுவதிலும் அதன் வளர்ச்சியில்லாத போக்கு, பெருந்தோட்ட அமைப்பின் முழுமையான அபிவிருத்திப் போக்கின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வந்திருக்கின்றது என்பதை இதுவரை கிடைத்துள்ள ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் கடந்த கால அபிவிருத்திக் கொள்கைகளுக்குப் பலியானவர்கள் என்பதை இதன்மூலம் காணமுடியும். இது, அவர்களது வளர்ச்சியின்மைக்கும், சமூக பொருளாதார ரீதியில் ஒதுக்கப்படுவதற்கும் வழிவகுத்தது. காலனியாதிக்கத்துடன் இணைந்த அடக்கு முறையாலும் கட்டுப்பாடுகளாலும் கூட அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்டங்களின் அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், வரலாற்று ரீதியிலான பின்னடைவை வெற்றிகொள்வதில் இன்னமும் வலுவான சவால்களை அவர்கள் எதிர்நோக்குகின்றனர்.

இந்த பின்தங்கிய நிலைமைக்கும் தேக்க நிலைக்கும் பாரிய காரணிகளில் ஒன்று போதிய அளவு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்ததுதான் சுதந்திரத்துக்குப் பின்னர் கடுமையான சட்டங்கள் மூலம் இந்த சமூகத்தின் குடியுரிமை பறிக்கப்பட்டது. வாக்குரிமையில்லாத காரணத்தினால் அரசியல் ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளும் போக்கில் அவர்களுக்கு எந்தவிதமான வாய்ப்பும் இருக்கவில்லை. இந்த நிலைமை, 1980ஆம் ஆண்டு பிற்பகுதியில் நாடற்றவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்ட பின்னரே மாறியது. 1964ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களுக்கு அமைய இலங்கையில் வசித்து வரும் சுமார் 160,000 நாடற்றவர்களுக்கும் அவர்களது வழித்தோன்றல்களுக்கும் குடியுரிமை வழங்கும் உத்தேச சட்டம் அமுலுக்கு வந்ததும் அந்த நிலைமை மேலும் மாற்றமடையும்.

ஒரு ஒட்டுமொத்தமான மதிப்பீட்டில் இருந்து பார்த்தால் இந்திய வம்சாவளி தமிழர்கள் இனவாதத்திற்கு பலியான முதல் மக்களாவார். இனப் பாரபட்சம் போதிய பொருளாதார சந்தர்ப்பங்கள் வழங்கப்படாமை, போதிய கல்வி வசதிகள் இல்லாமை, தோட்டங்களுக்கு வெளியே தொழில்வாய்ப்புக்கு போதிய வாய்ப்புகள் இல்லாமை ஆகிய மிக மோசமான வடிவங்களில் இந்த இனவாதம் உருவானது. உண்மையில் அவர்களுக்குத் தோட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார வாய்ப்புகளே உள்ளன. அவர்கள் போதிய அளவு பொருளாதார வாய்ப்பு இல்லாமலும் வேலையில்லாப் பிரச்சினையாலும் துன்பப்படுகின்றனர். மேலும், தோட்டங்களில் குறைந்த சம்பளம், அதிக உழைப்பு நிலைமைகள் போன்றவற்றின் மூலம் சுரண்டலுக்கு உள்ளாகின்றனர்.

கடந்தகால அபிவிருத்தி அனுபவங்கள்

தோட்டங்கள் யாவும் முன்னர் தனித்த ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்தன என்பதை நாம் பார்த்தோம். ஆனால் இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்கவில்லை. சிறையில் அடைக்கப்பட்டவர்கள் போலவே அவர்கள் இருந்தனர். அவர்களது வாழ்க்கை முறை ஓரளவிற்கு அடிமைத்தனமாகவே இருந்தது. 1975ஆம் ஆண்டு அரசாங்கம் தோட்டங்களைப் பொறுப்பேற்றது. அல்லது தேசியமயமாக்கியது. இது பெருந்தோட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்களில் குறிப்பிடத்தக்கதாகும். ஏஜென்சி நிறுவனங்களிடம் இருந்த தோட்ட நிலங்களையும் தோட்ட தொழில்களையும் அரசுடமையாக்கியது. நிர்வாகங்களின் கட்டுப்பாடு அரசின் கீழ் வந்தது. அரசின் தலையீடு சட்டபூர்வமானது. இந்த சட்டபூர்வ தன்மை சமூக நீதிக்கு ஒரு கருவியாகியது. இந்த சமூகத்துக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிகளை அரசின் தலையீடு நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. தோட்டக்காணிகளும் நிர்வாகமும் அரசின் பொறுப்பில் வந்தன. இது, தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் அரசின் கீழ் வரும் தொழிலாள வர்க்கத்தின் ஓர் அங்கமாக்கியது. இந்த மாற்றம் காரணமாக, பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொறுப்பு, சமூக நல்வாழ்வை மேற்கொள்ளும் பணி, வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தும் கடமை ஆகிய யாவும் அரசின் கீழ் வந்தன. இதனால் இந்த மக்களின் வாழ்விலும் உழைப்பு நிலைமைகளிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டன.

இந்திய வம்சாவளி தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சி இலங்கையில் உள்ள ஏனைய சமூகங்களின் வளர்ச்சியுடன் எவ்விதத்திலும் ஒப்பிடக்கூடியதாக இல்லை. இந்தச்சமூகத்தின் அபிவிருத்தியை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டாலும் அதனால் கிடைத்த பலாபலன்கள் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளைக்கூட ஈடுசெய்யக்கூடியவையாக இருக்கவில்லை. இருந்த போதிலும் அரசு பொறுப்பேற்றதால் பெருந்தோட்ட அமைப்பின் இயல்பு தன்மை ஆகியவற்றில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டது. இதை இங்கு குறிப்பிடுவது முக்கியமானது. இந்த சமூகத்தின் வளர்ச்சி பற்றிய எந்தவொரு ஆராய்ச்சியிலும் இந்த அம்சம் போதுமான அளவிற்கு உரிய கவனத்தைப் பெறவேண்டும்.

1970ஆம் ஆண்டுகளில், தோட்டப்  பாடசாலைகளில் அரசாங்கம் பொறுப்பேற்றது. இது, கல்வித்துறையில் குறிப்பாக ஆரம்ப பாடசாலை மட்டத்தில் சாதகமான பலாபலன்களைத் தந்தது. 1972ஆம் ஆண்டுக்கும் 1975ஆம் ஆண்டுக்குமிடையே தோட்டங்களின் உரிமையும் நிர்வாகமும் கை மாறின. இதனால் பெருந்தோட்டங்களில் அரசாங்கம் சமூக நலதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு வழிபிறந்தது. 1980ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நாடற்றவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. இதனால், அவர்கள் பாராளுமன்றத்திலும் மாகாண சபையிலும் பிரதிநிதித்துவம் பெற முடிந்தது. இது குறிப்பிடத்தக்களவு முக்கியத்துவம் வாய்ந்த அம்சம். இந்த சமூகத்திற்கு அரசியல் அதிகாரத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த அரசியல் அதிகாரம், இளைய சமுதாயத்தின் அபிவிருத்தி எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்யும் பாதையில் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, உயர்கல்வி, தொழில் வாய்ப்புக்கள், ஆகியனவே இந்த எதிர்பார்ப்புகளாகும். மேலும் இன மோதல் இலங்கைச் சமூகத்தில் ஒரு பெரும் முரண்பாடான தோற்றத்தைப் பெற்றது. இந்த அம்சம் நாட்டின் சமாதானம், ஸ்திர நிலை ஆகியவற்றுக்குத் தோட்டத் தொழிலாளர்களைப் பெரும் முக்கியத்துவம் மிக்கவர்களாக்கியது. இந்தப்பின்னணியில் பார்த்தோமேயானால், இந்தச் சமூகம் எதிர்நோக்கும் அபிவிருத்திப் பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வுகான வேண்டும். இது ஒரு அதிக அவசரமான பிரச்சினை. இதற்குத் தீர்வு காணாவிட்டால் புதிய முரண்பாடுகளும், மோதல்களும் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

பெருந்தோட்டச் சமூகம் எதிர்நோக்கும் பாரிய அபிவிருத்தி சவால்கள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் இளம் தலைமுறையினர் பற்றியது. அவர்களின் பொருளாதார அபிலாஷைகளை நிறைவேற்றுவதுடன் சம்பந்தப்பட்டது. இது இந்த நாட்டில் இளம் தலைமுறையினர் உயிர் வாழ்வதை உத்தரவாதம் செய்யும் பிரச்சினை பற்றியது. கடந்த பத்து வருடகாலத்தில் தோட்ட இளைஞர்கள் பொருளாதார ரீதியில் மிகவும் குறைந்த அளவையே அனுபவித்தனர். அவர்களுக்குச் சமூக பாதுகாப்பு, சுய பாதுகாப்பு, தொழில் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்த இளைஞர்களின் குடும்பங்களும் பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கின. இதனால், இவர்களின் பொருளாதார சங்கடங்களும் அதிகரித்துவிட்டன. இவை யாவும் இந்த இளைஞர்கள் மத்தியில் விரக்தி, அதிருப்தி ஆகியவற்றை ஏற்படுத்தின. சமூகத்தில் அமைதி குலையக்கூடிய நிலையை உருவாக்கின. இது தான், இந்தச் சமூகத்தின் வாழ்க்கையில் ஆர்வங் கொண்டவர்கள் இப்பிரச்சினை பற்றி சிந்தனை செய்வதற்கு தூண்டியது. தோட்டப்புற இளைஞர்கள் எந்த அளவிற்கு வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கின்றார்கள்? நாட்டின் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களிடமிருந்து இவர்கள் எவ்வாறு வித்தியாசப்படுகின்றார்கள்? இந்த நிலைமையை மாற்ற வேண்டிய அவசரமான தேவை ஏன் ஏற்பட்டிருக்கின்றது? இவ்வாறான கேள்விகளுக்கு அவர்கள் விடைகாண முயன்றார்கள்.

பொருளாதாரத்துக்குப் பங்களிப்பு

உள்நாட்டின் விவசாயத்துறை மொத்த உற்பத்தியில் பெருந்தோட்டத்துறையின் பங்கு சுமார் 15 சதவீதம். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3 சதவீதம். வெளிநாட்டுச் சம்பாத்தியத்தில் 19 சதவீதம் பெருந்தோட்டத் தொழில்கள் மூலமே கிடைக்கின்றது. அந்தப் பங்களிப்பு ஓரளவு குறைந்ததாக இருந்தாலும் 2000ஆம் ஆண்டில் இது கணிசமானது. தேயிலை மூலம் 500 மில்லியன் அமெரிக்க டொலரை (இலங்கை ரூபா 53.132 மில்லியன்) கூடுதல் சம்பாத்தியமாக பெற்றுக்கொண்டது. சேவைகளும் வர்த்தகமும் முக்கியமான பங்கை வகிக்கின்றன. இவை மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கணிசமான பங்களிப்பையும் செய்கின்றன. பெருந்தோட்டத்துறையில், பெருந்தோட்டத்தைச் சேர்ந்த தமிழச் சமூகமே பெரும் பங்களிப்பைச் செலுத்துகின்றது.

தோட்டத்துறை சம்பந்தமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

  • அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

பெருந்தோட்டங்களில் பல்வேறு அரசாங்க நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலமே அபிவிருத்திக்கும் சேமநல நடவடிக்கைகளுக்கும் நிதி வழங்கப்படுகின்றது. இந்த அரசாங்க நிறுவனங்களை நேரடியானவை, மறைமுகமானவை என்று பிரித்துக் காட்டலாம். கல்வி, சுகாதாரம், பிராந்திய அபிவிருத்தி ஆகியவற்றுக்குப் பொறுப்பான அமைச்சுகள் மறைமுகமானவைப் பட்டியலில் உள்ளன. பெருந்தோட்ட அமைச்சு, தோட்ட உட்கட்டமைச்சு, சமூக அபிவிருத்தி அமைச்சு என்பன நேரடியாக சம்பந்தப்பட்டவை.

நேரடியாகச் சம்பந்தப்பட்ட அமைச்சுகள், அவற்றின் செயற்பாடுகள் நிதி ஒதுக்கீடு என்பனவற்றை பின்வரும் பந்திகளில் பார்ப்போம்.

சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் பொறுப்புகள் பற்றி வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை கீழே தருகின்றோம்.

1. பெருந்தோட்டத் தொழில் அமைச்சு

இந்த அமைச்சு, கடந்த 30 ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றது. தோட்டப் பயிர்களின் உற்பத்திக்கு ஊக்கம் அளிப்பதே அதன் பிரதான பொறுப்பாகும். சமூக அபிவிருத்தி பொறுப்பாக இருக்கும் அமைப்புக்களில் தோட்ட வீடமைப்பு, சமூகநல நம்பிக்கை நிதியமும் ஒன்று. (இப்பொழுது இந்த அமைப்பு தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.) இது 1992ஆம் ஆண்டு தோட்டங்கள் தனியார்மயமாக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டில், இதன் பெயர் மனிதவள அபிவிருத்தி நிதியம் என்று மாற்றம் செய்யப்பட்டது. இதன் நோக்கம், மனித வள அபிவிருத்தியில் அதன் பங்கை வலியுறுத்துவதாகும். தோட்டங்களில் சமூக நல அபிவிருத்தித் திட்டங்களை திட்டமிடுவதும் நடைமுறைப்படுத்துவதும் இதன் கடமைகள். தனியார்மயமாக்கப்படுவதற்கு முன்னர் தோட்டங்களை இரண்டு அரசாங்க நிறுவனங்கள் பராமரித்து வந்தன. இவற்றில் சமூக அபிவிருத்திப் பிரிவுகள் இருந்தன. இந்தப் பிரிவுகளின் பணிகளில் சிலவற்றை பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் சமூகநல நம்பிக்கை நிதியம் பொறுப்பேற்றுக் கொண்டது. பெருந்தோட்ட தொழில் அமைச்சு மேற்கொண்ட பெருந்தோட்ட சமூக அபிவிருத்தித் திட்டங்களை இதுவே அமுல்படுத்திற்று.

2. வீடமைப்பு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு

காட்மோர்-தோட்டத்தின்-லயன்-அறைகள்

1997ஆம் ஆண்டு தனியாகத் தோட்ட உட்கட்டமைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. தோட்டப்பகுதிகளில் அரசாங்கம் மேற்கொள்ளும் சேம நலச்சேவை முயற்சிகளைப் பலப்படுத்துவது இதன் குறிக்கோள். அபிவிருத்தித் திட்டங்களில் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபாடு கொள்ளச் செய்வதற்காகவே இந்த அமைச்சு உருவாக்கப்பட்டது. இவர்களைப் பல்வேறுபட்ட திட்டங்கள் மூலம் பிரதான நீரோட்டத்திற்குள் இணைப்பதே இதன் நோக்கமாகும். பெருந்தோட்டச் சமூகத்தின் பொருளாதார, சமூக வசதிகளை அபிவிருத்தி செய்வதற்குப் பொருத்தமான செயற்பாடுகள் அனைத்தையும் இந்த அமைச்சு ஒருங்கே இணைக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. மின்சார வசதி, பாடசாலைகள், மருத்துவமனைகள், தபால் அலுவலகங்கள், வீட்டு வசதி, சனசமூக நிலையங்கள் போன்றவை கூடுதல் கவனத்தைப் பெற்றன. 2001ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தது. இந்த அமைச்சிடம் இருந்த சில பொறுப்புகள் வீடமைப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டன. பாதைகள், மின்சாரம், வீட்டுவசதி போன்றவற்றை மாத்திரம் கொண்ட பொருளாதார உட்கட்டமைப்பு மாத்திரமே இந்த அமைச்சுக்கு மிஞ்சியது. சமூக வசதிகளை ஏற்படுத்தும் பொறுப்புகள் சமூக அபிவிருத்தி அமைச்சிடம் வழங்கப்பட்டன. இந்த அமைச்சு புதிதாக உருவாக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குரிய வேலைத்திட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் 1,146 மில்லியன் ரூபாவை வரவு – செலவுத்திட்டத்தில் ஒதுக்குவதற்கு இணங்கியது. இந்தத் தொகை 2000ஆம் ஆண்டுக்கும் 2002ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குரியது.

3. சமூக அபிவிருத்தி அமைச்சு

2001ஆம் ஆண்டு அரசு மாறிய போது இந்த அமைச்சிடமிருந்த சில பொறுப்புகள் வீடமைப்பு அமைச்சோடு இணைக்கப்பட்டது. பாதைகள், மின்சாரம், வீட்டு வசதி போன்றவை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சாக வீடமைப்பு அமைச்சோடு இணைக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட சமூக அபிவிருத்தி அமைச்சிடம் கல்வி மற்றும் பல சமூக வசதிகளை ஏற்படுத்தும் பொறுப்பு கையளிக்கப்பட்டது. சமூக அபிவிருத்தி அமைச்சுக்கு அமைச்சரவை அந்தஸ்த்து அளிக்கப்பட்டது. இப்பொழுது அமைச்சு பொறுப்புக்களில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பெருந்தோட்ட சமூக அபிவருத்தி வீடமைப்பு, மின்சாரம் போன்ற திட்டங்களை நாட்டின் இதர பகுதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகளோடு ஒப்பீடு செய்வது அவசியமாகும். பெருந்தோட்ட சமூகத்தின் தேவைகளை கணக்கிடும் போது ஒதுக்கப்படும் நிதி மிகக் குறைவாகவே உள்ளது.

வெளிநாட்டு நிதி உதவியுடன் பெருந்தோட்டத்துறையில் ஐந்து மிகப்பெரிய சமூக அபிவிருத்தித் திட்டங்கள் அமுல் செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்கள் பற்றிய விபரங்களைக் கீழே தருகின்றோம்.
NORAD, ADB, OECD, SIDA, போன்ற வெளிநாட்டு அபிவிருத்தி நிறுவனங்கள் இந்தத் திட்டங்களுக்கு நிதி வழங்கின.

  • ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்கள் அமுல்படுத்திய திட்டங்கள்

தோட்டப்பகுதிகளின் வளர்ச்சியில் ஏனைய அரசாங்க சார்பற்ற சர்வதேச நிறுவனங்களும் ஈடுபட்டிருக்கின்றன. இந்த அரசாங்க சார்பற்ற ஸ்தாபனங்கள் பல துறைகளில் கவனஞ் செலுத்துகின்றன. மனித வளத்தை அபிவிருத்தி செய்வது வருமானத்தை உருவாக்குவது, தொழில் பயிற்சி வழங்குவது, சமூகத்தின் மத்தியில் இயங்கி வரும் ஸ்தாபனங்களை அபிவிருத்தி செய்வது போன்றவற்றில் இவை கவனஞ் செலுத்துகின்றன. இந்தத் திட்டங்களுக்கு கனடிய உலகப் பல்கலைக்கழகச் சேவை நிறுவனம் (WUSC), CARE, இலங்கை – கனடா அபிவிருத்தி நிதியம் என்பனவே நிதி வழங்குகின்றன.

அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் அமுல் செய்த திட்டங்கள் வருமாறு:

• கல்வி மூலமாகவும் பயிற்சி மூலமாகவும் புனர்வாழ்வை அளிப்பதற்கான திட்டம் (PRETT)) என அழைக்கப்படும் இந்தத் திட்டத்துக்கு WUSC நிதி தருகிறது.

• தொழில் அபிவிருத்திக்கும் நிர்வாக அபிவிருத்திக்குமாக தேயிலைத் தோட்டங்களில் வசிப்பவர்களைப் பயிற்றுவிப்பது (TEAM எனப்படும் இந்தத் திட்டத்துக்குக் CARE ஸ்தாபனம் உதவி வழங்குகின்றது).

• பெண்களுக்குத் தொழில் பயிற்சி (GTZ எனப்படும் நிறுவனத்தின் இந்தத்திட்டம் ஏவுறு என அழைக்கப்படுகின்றது).

• சர்வதேச தொழிலாளர். ஸ்தாபனத்தின் (ILO) உதவியுடன் தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்குப் பயிற்சி அளிக்கும் திட்டம்.

• தொழில் முயற்சியில் ஈடுபடுவோரை உருவாக்கும் திட்டம் (ILO நிறுவனத்தின்CEFE திட்டம்).

• இலங்கை – கனடா அபிவிருத்தி நிறுவனத்தின் பெருந்தோட்டத் துறைக்கான வேலைத்திட்டங்கள். (SLCDE).

  • துறைவாரியாக மேற்கொள்ளப்படும் திட்டங்கள்

1996ஆம் ஆண்டில் பெருந்தோட்டங்கள் தனியார் மயமாக்கப்படுவது பூர்த்தியடைந்தது. அதன் பின்னர், பெருந்தோட்டங்களில் தொழிலை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கென ஏழு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவை பாரிய துறைவாரியான அபிவருத்தித் திட்டங்கள். இந்தத் திட்டங்கள் இரு பெரும் குறிக்கோள்களைக் கொண்டிருக்கின்றன.

1. பெருந்தோட்டத் தொழில் துறையில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதேசமயம், தொழிலாளர்களுக்கு நிலையான வாய்ப்பு வழங்க வேண்டும். அவர்களின் வருமானமும் நிலையாக இருக்க வேண்டும். கீழ்காணும் முயற்சிகள் மூலம் இந்தக் குறிக்கோள் அடையப்படும் என்று கூறப்பட்டது.

  • தோட்டத்தைத் (தேயிலைக் காணிகளை) நிர்வகிப்பது,
  • பல்வேறு பயிர்களை விளைவிப்பது,
  • சந்தைப்படுத்துவது,
  • தொழிற்சாலைகளை நவீனமாக்குவது,
  • நிர்வாக முறைகளைப் பலப்படுத்துவது,
  • சுற்றாடலை மாசடையாமல் பாதுகாப்பது, இதில் வனவளத்தையும் நீர் வளத்தையும்; உபயோகிப்பதும் இவை மாசுபடுவதைக் கட்டுப்படுவதும் அடங்கும்.

2. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளையும் சமூக அந்தஸ்த்தையும் மேம்படுத்த வேண்டும். சுகாதாரம், சிறார் பராமரிப்புப் பணிகளைச் சீரமைக்க வேண்டும். சனசமூக நிலையங்களில் வசதிகளை அதிகரிக்க வேண்டும். இதற்கென சமூக அபிவிருத்தி வங்கியொன்றை ஏற்படுத்த வேண்டும். இவைதான் இரண்டு மிகப் பெரிய நோக்கங்கள்.

பாரிய துறைவாரியான அபிவிருத்தித் திட்டங்களும் முதலீட்டு மார்க்கங்களும்

இந்த முதலீடுகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஜப்பானிய சர்வதேச நிர்மான வங்கி (JBIC), அமெரிக்க அபிவிருத்தி நிறுவனம் (USDA), ஜெர்மன் நிறுவனமான GTZ ஆகியன நிதி வழங்குகின்றன. அது போலவே, நோர்வே, நெதர்லாந்து அரசாங்கங்களும் நிதியுதவி வழங்குகின்றன. முதலீட்டுத்திட்டங்களில் ஒரு முக்கியமான அம்சம் உண்டு. அதாவது, மொத்தத் தொகையில் 92.6 சதவீதம் கடன் வாயிலாக முதலீடு செய்யப்படுகின்றது. மிகுதி உதவித் தொகையாகும். இந்தக் கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். முதலீடு மூலம் எதிர்பார்க்கப்பட்டபலன்கள் கிடைக்காவிட்டால், அது தோட்ட தொழில் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் சுமைகளை ஏற்படுத்தும்.

மேற்கூறப்பட்ட திட்டங்களில் பெருந்தோட்டச் சீர்திருத்தத் திட்டம் (PRP) ஏற்கனவே பூர்த்தியடைந்து விட்டது. ஏனையவை பூர்த்தியடையும் நிலையில் உள்ளன. பெருந்தோட்ட அபிவிருத்தித் திட்டம் (PDP) இதற்கு விதிவிலக்கு. இந்தத் திட்டத்தின் அமுலாக்கம் பின்னர் தான் ஆரம்பமாகியது. இதற்கு ஆதரவு வழங்கும் குழுவின் (PSP) – 2002 கூற்றுப்படி, மொத்தமாக ஆயிரத்து நூறு கோடி ரூபா (11 பில்லியன்) தோட்டங்கள் தனியார்மயமாக்கப்பட்ட பின்னர் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது. அதாவது, தோட்டக் கம்பெனி ஒவ்வொன்றுக்கும் சராசரியாக 55கோடி ரூபா (550 மில்லியன்) கிடைத்துள்ளது. முழுமையான முதலீட்டை இவ்வாறு பிரித்துப் பார்க்க முடியும்.

தோட்டக் காணிக்கான முதலீட்டில் 80 சதவீதம் மரநடுகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேயளவு தொகை தொழிற்சாலை அபிவிருத்திக்கும் புதிய இயந்திர சாதனக் கொள்வனவுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. தோட்டச் சமூகத்துக்கு தேவையான பொது வசதிகளை வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பணம் மிகமிகக் குறைவானதாகும். இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தையும் தோட்ட மக்களின் தேவைகளையும் ஒப்பிட்டால் அவை மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் போன்றது. சமூகத்தின் பொது வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள செலவுத் தொகையில் பெரும் பகுதி (அதாவது 45 சதவீதம்) தொழிலாளர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகும். நீர் விநியோகத்துக்கு 19 சதவீதமும் மலசலகூடங்களை அமைப்பதற்கு 18 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மிகுதியான 18 சதவீதமே ஏனைய சேவைகளை வழங்குவதற்கு முதலிடப்பட்டுள்ளது.

செலவுக்கு ஏற்ற பயன் கிடைத்துள்ளதா என பார்த்தால், தொழிலாளருக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முதலீட்டின் பங்கு மிகவும் மோசமானதே. இந்த சமூகத்திற்கு ஏனைய அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காகச் செய்யப்பட்ட முதலீடும் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவேதான், செலவுக்கு ஏற்ப கிடைத்த நன்மைகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. எனவே, இந்தச் சேவைகளை வழங்க வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும். முதலீட்டுக்கு முன்னுரிமை கொடுப்பதில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கருதுவது விரும்பத்தக்கது. முதலீட்டுத் திட்டங்களின் மூலம் கிடைக்கும் பொருளாதாரப் பலாபலன்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே, தோட்டங்களில் வாழும் தமிழ்ச் சமூகத்தின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தவதற்கு முதலீட்டை அதிகரிப்பது அத்தியாவசியத் தேவையாகும்.

தொடரும்.

குறிப்பு : 2015 இற்கு முன் எடுக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்ட ஆய்வு.


ஒலிவடிவில் கேட்க

9113 பார்வைகள்

About the Author

முத்துவடிவு சின்னத்தம்பி

முத்துவடிவு சின்னத்தம்பி அவர்கள் 1965ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்று அதே பீடத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகினார். 1969இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணிப் பட்டத்தைப்பெற்றார்.

1993ஆம் ஆண்டு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற முத்துவடிவு சின்னத்தம்பி 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை அலங்கரித்த மலையகத்தின் முதலாவது பேராசிரியர் என்ற சிறப்புக்குரியவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)