Arts
7 நிமிட வாசிப்பு

இரசவர்க்கம் – மூலிகை மருந்துகள் – பகுதி 3

December 1, 2022 | Ezhuna

ஈழத்தில் தோன்றிய வைத்தியம் தொடர்பான நூல்களில் ஒன்று செகராசசேகரம். கி.பி.15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செகராஜசேகரன் என்னும் பெயருடன் நல்லூரில் இருந்து ஆட்சிசெய்த மன்னன் குடிமக்களுக்காக இந்தியாவில் இருந்து பண்டிதர்களை வரவழைத்து செகராசசேகரம் என்னும் வைத்தியநூலை ஆக்குவித்தான். இதில் பல பகுதிகள் தற்போது அழிந்துள்ளன. தற்போது  கிடைக்கும் செகராசேகரம் நூலில் உள்ள ‘இரசவர்க்கம்’ என்ற பகுதியில் சொல்லப்பட்டுள்ள, பாரம்பரிய வைத்திய முறைமைகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள், நோய்களுக்கான சிகிச்சைகள் பற்றி தெளிவுபடுத்துவதாக ‘யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகிறது.

கடுகுரோகிணி

போகாச் சுரமும் போகும் திரிதோஷம்
வாகாய் வயிறுவலி வாங்கிடுமே- வேகாக்
கடுகுரோகிணியைக் கண்டாலும் மந்தம்போம்
பொடுகு சிரங்கும் போம் பொருந்து

இதன் பொருள்: கடுகுரோகிணி தொடர்ந்து நீடிக்கும் காய்ச்சல் மாற்றும். வாதம், பித்தம், கபம் என்னும் முத்தோஷங்களைச் சமநிலையில் பேணும். வயிற்றுவலி, மாந்தம் பொடுகு சிரங்கு என்பனவற்றுக்குக் கடுகுரோகிணி மருந்தாகும்.

கடுகுரோகிணி

மேலதிக விபரம்: ஆயுள்வேதமருத்துவத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகைகளுள் கடுகுரோகிணியும் ஒன்று. ஈரல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. மஞ்சட்காமாலை (செங்கமாரி) அலேர்ஜி, ஆஸ்த்மா போன்ற நோய்களின் சிகிச்சையில் பெரிதும் பயன்படும் இம்மூலிகை, அருகிவரும் தாவர இனங்களுள் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது.

kutki என்பது இதன் ஆங்கிலப்பெயர். kaduku rohini என்பது இதன் வர்த்தகப் பெயர். Picrorhiza kurroa ROYLE EX BENTH. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

ஆனைத்திப்பிலி

அருந்தச் சுரம்போம் அடுத்து இருமலை அகற்றும்
பெருந் திப்பிலி கொள்ளப் பிணிபோம்- திருந்தவே
வேகமுடன் பசிக்கும் வெண்சோறு தான்செரிக்கும்
பாகமுடன் கொள்வாய் பயன்

இதன் பொருள்: ஆனைத்திப்பிலிக்குக் காய்ச்சல் மாறும். இருமல் குணமாகும். பசியை உண்டாக்கும். சோற்றைச் சமிபாடு அடையவைக்கும்.

மேலதிகவிபரம்: தோல்வியாதிகள், ஆஸ்த்மா, வயிற்றோட்டம், நீரிழிவு என்பவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இத்தாவரத்தின் இலைத்தூள் களை மூக்கில் இரத்தம் வடிவதை நிறுத்த முகரப்படுகிறது.

ஆண்பனைப் பாளையை ஆனைத்திப்பிலியாகச் சிலர் கருதுவர். திப்பிலியை ஒத்த வடிவத்தில் ஆண்பனைப்பாளை காணப்படுவதே இதற்குக் காரணம். ஆனால் ஆனைத்திப்பிலி வேறு ஒரு தாவரமாகும்.

Gaja Pippali இதன் ஆங்கிலப்பெயர். Scindapsus officinalis SCHOTT என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

வலம்புரிக்காய்

நலம்புரியும் காயம் நணுகாது நாரியரே
வலம்புரிக் காய்க்கு மண்டைக் கரப்பன் போம்- பலம் கொடுக்கும்
காதடைப்புத்தீரும் கடியசுரம் போக்கும்
மூதறிவாளர் சொல்லை மதி

வலம்புரிக்காய்

இதன் பொருள்: உடலுக்கு நன்மை விளைவிக்கும். பலம்கொடுக்கும். மண்டைக்கரப்பன் காய்ச்சல், காதடைப்பு, காதுவலி என்பவற்றுக்கும் வலம்புரிக்காய் மருந்தாகும்.

மேலதிக விபரம்: வலம்புரிச் செடியின் வேர் நீரிழிவுக்கு மருந்தாகப் பயன்படக்கூடும் என்னும் விபரம் சமீபத்தைய ஆய்வுகளின்மூலம் தெரியவந்துள்ளது.

kaivum fibres என்பது இதன் ஆங்கிலப்பெயர். Helicteres isora L. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

வெட்பாலரிசி

செப்பாரிளமுலையீர் சேர்ந்த வயிறுகட்டும்
வெட்பாலரிசியினை மேவினால்-தப்பாது
தொத்தபித்தங்கிராணிபோம் நாடாது ரோகங்கள்
ஒத்ததுவே சொன்னோம் உகந்து

வெட்பாலரிசி

இதன் பொருள்:  வெட்பாலரிசி வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். பித்தக்கழிச்சல் குணமாகும்.

மேலதிகவிபரம்: இது சொறி, எக்சிமா போன்ற தோல் வியாதிகளுக்கென பயன்படும். எண்ணெய்த் தயாரிப்புக்களில் வெட்பாலரிசி சேர்க்கப்படுகின்றது. பொடுகை நீக்கும் குணமும் இதற்கு இருப்பதால் கூந்தல் தைலங்களிலும் வெட்பாலை அரிசி சேர்க்கப்படுகின்றது.

Wrightia tinctoria R.BR. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

கர்க்கடகசிங்கி

வாந்திபோம் தோஷம்போம் வாதம்போம் வாயுவும்போம்
ஏந்திழையீர் நல்ல இதங்கொடுக்கும்-சாந்தியாகும்
சுரமும் திரிதோஷம் சூலைகரப்பன் போம்
தரமுள்ள சிங்கிக்கே தான்

இதன் பொருள்: கர்க்கடகசிங்கிக்கு வாந்தி, வாய்வு, வாதம் என்பன தீரும். மனதுக்கு அமைதியையும் சுகத்தையும் கொடுக்கும். காய்ச்சல், வாத, பித்த ,கப தோஷங்கள் விலகும். வயிற்றுவலி, கரப்பன் என்பனவும் குணமாகும்.

மேலதிகவிபரம்: வயிற்றோட்டம், சீதபேதி என்பவற்றுக்கு மருந்தாகப் பயன்படும் கர்க்கடகசிங்கி பக்ரீரியா எதிர்ப்புச்சக்தி உடையது. ஆஸ்த்மா, சயம், செமியாக்குணம், இருதய வியாதிகள், காய்ச்சல், ஈரல் வியாதிகள் போன்றவற்றுக்குப் பரிந்துரைக்கப்படும் ஆயுள்வேத மருந்துத் தயாரிப்புகளில் கர்க்கடகசிங்கி சேர்க்கப்படுகின்றது.

இந்தத் தாவரத்தில் இலையில் தொற்றுகாரணமாக ஏற்படும் கட்டியை இலைக்காம்புடன் சேர்த்து மருந்தாகப் பயன்படுத்துகின்றார்கள். தமிழ்மருத்துவர்கள் சிலர் இந்தமூலிகை மருந்துக்குப் பதிலாக கடுக்காய்ப்பூவைப் பயன்படுத்திகிறார்கள், இது தவறாகும்.

Rhus succedanea L. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

சிறுதேக்கு

ஆறாக்கடுப்பும் போம் ஆற்றுமுடல் ரோகமெல்லாம்
தூறாக வுழலை துரத்துமே-வீறாகச்
சிறுதேக்கு கண்டால் சிதறிடுமே வாய்வு
குறுவேற் கண்ணாளிதையே கூறு

சிறுதேக்கு-1

இதன் பொருள்: சலக்கடுப்பு, சீதபேதி, கண்ணோய் போன்ற சூட்டு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் சிறுதேக்கு வாய்வுக்கும் மருந்தாகும். பெருந்தாகத்தையும் அடக்கும்.

மேலதிகவிபரம்: மூட்டுவாதம், செமியாக்குணம், வயிற்றுவலி, நெஞ்செரிவு, குடற்புழு, மலேரியா, ஆஸ்த்மா போன்ற பல்வேறு வியாதிகளுக்கான மருந்துத் தயாரிப்புக்களில் பாரங்கி எனப்படும் சிறுதேக்கின் வேர் சேர்க்கப்படுகின்றது.

Bharangi   என்பது இதன் ஆங்கிலப்பெயர். Clerodendrum serratum L. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயர்.

போளம்

நீளமுள்ள கால்கையில் நேராது சூலை அறும்
போளந்தனைக் கண்டாற்போகுமே-மாளுவற்கு
மாருவலி வீக்கம் வயிற்றுவலி போக்குமே
தீராத வாதம்போம் செப்பு

இதன் பொருள்: கால், கைகளில் ஏற்படக்கூடிய நோவு தீரும். மார்புவலி, வீக்கம், வயிற்றுவலி, வாதம் என்பனவற்றுக்குப் போளம் மருந்தாகும்.

மேலதிகவிபரம்: கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது ஆயுள்வேத மூலிகைக் கடைகளில் கிடைக்கும்.

அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் கரிய போளத்தை எலுமிச்சை சாற்றில் சேர்த்து ஒட்டும் தன்மைவரும் வரை காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர இரத்தக்கட்டு கரையும்.

கண்டங்கத்தரி

சேத்துமத்தைப்போக்கும் தினவடக்கும் போசனமாம்
போத்தும் சயரோகம் போக்குமே – நீத்துவார்
வண்டாடுங்கூந்தல் வஞ்சியரே முட்பெரிய
கண்டங்காரி யிப்பாரினிலே காண்

இதன் பொருள்: வண்டுகள் நாடுகின்ற மலர்க்கூந்தலை உடைய பெண்ணே! பெரிய முட்கள் நிறைந்த கண்டங்கத்தரி சுவாசக்குழாயில் ஏற்படும் சளிக்கட்டை அகற்றும். அரிப்பை அடக்கும் உணவாகவும் பயன்படும். காசரோகத்துக்கும் நல்லது.

கண்டங்கத்தரி

மேலதிகவிபரம்: காய்ச்சல் குடிநீர் தயாரிப்பதற்கென விற்கப்படும் மூலிகைப் பைக்கெற்றுகளில் மரமஞ்சளோடு கண்டங்கத்தரியும் தவறாமல் இடம் பிடித்துவிடும். எங்களுக்கு மிகவும் பழக்கமான காய்கறியாகிவிட்ட கத்தரிக்காய், கண்டங்கத்தரி, வட்டுக்கத்தரி, சுண்டங்காய் அனைத்துமே ஒரே குடும்பத்தச் சேர்ந்த தாவரங்கள். கண்டத்தில் (தொண்டையில்) ஏற்படக்கூடிய சளிக்கட்டு, இருமல் என்பவற்றுக்கு மருந்தாக இருப்பதால் இதற்குக் கண்டங்கத்தரி என்று பெயர்.

கண்டங்கத்தரியின் வேர், தண்டு, இலை, பழம் அனைத்துமே மருந்தாகப் பயன்படுகின்றன. இதன் கசாயத்தைத் தேனுடன் அல்லது சீனியுடன் சேர்த்துக் குடித்தால் நெஞ்சில் சளிக்கட்டு, இருமல் என்பன தீரும். இதன் பழச்சாறு தொண்டை நோவுக்கு மருந்தாகும்.

கண்டங்கத்தரிப்பழமும் இலைகளும் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட கசாயத்துடன் சிறிதளவு சீனியும் சுண்ணாம்பும் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் பூசினால் உடலில் ஏற்படும் அரிப்பு தீரும்.

கண்டங்கத்தரியின் பழங்களைக் காயவைத்து இடித்து எடுத்த தூளில் ஒரு சுருட்டு தயாரித்து அதன் புகையை வாய்க்குள் சிறிதுநேரம் வைத்திருப்பதன் மூலம் பற்களில் உள்ள தொற்றுக்களை அகற்றமுடியும் என்பது ஆயுள்வேத மருத்துவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

கர்ப்பிணிப்பெண்கள் கண்டங்கத்தரியைத் தவிர்க்கவேண்டும் என்றும் கூறப்படுகிறது.

kantakari என்பது கண்டங்கத்தரியின் வர்த்தகப் பெயர். Solanum xanthocarpum SCHRAD & WENDL என்பது கண்டங்கத்தரியின் இலத்தீன் விஞ்ஞானப்பெயர்.

தேற்றாவிரை (தேத்தான் கொட்டை)

தேற்றாவிரைக்குணத்தைச் செங்கனிவாய் நீயறியச்
சாற்றிடுவேன் கேளீர் தையலே-ஆற்றுமிந்த
வெட்டை பிரமேகம் மேல்மூச்சுத் தீருமே
கிட்டிடுமேற் தோஷம்போம் கேளு

இதன் பொருள்: சிவந்த கனியைப்போன்ற வாயுடையவளே! தேற்றாவிரையின் குணத்தைச் சொல்வேன் கேட்பாயாக.தேற்றாவிரைக்கு சிறுநீருடன் விந்துவெளியேறும் வெட்டை நோய் மற்றும் நீரிழிவு மேல்மூச்சு என்பன தீரும்.

மேலதிகவிபரம்: தேற்றாவிரை அல்லது தேத்தான் கொட்டை எனப்படும் மூலிகை பல்வேறு நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

தேற்றாவிரை

தேற்றாவிரையின் தூள் கண்படலம், கீரைப்பூச்சி, தலைவியாதிகள், இருமல், நெஞ்சுநோக்காடு, நீரிழிவு, வயிற்றோட்டம் என்னும் பல வியாதிகளுக்குத் தமிழ் மருத்துவரால் பயன்படுத்தபட்டு வந்துள்ளது.

தேற்றான்விரைத்தூளும் கற்பூரமும் தேனும் கலந்து தயாரிக்கப்பட்ட அஞ்சனம், கண்ணில் தோன்றும் பூப்படலத்தை அகற்றப் பயன்பட்டு வந்துள்ளது.

தேற்றாவிரை 10 கிராம் அளவு எடுத்து மோருடன் சேர்த்து இடித்துப் பின்னர் தேனுடன் சேர்த்து நீரிழிவு நோயாளர்க்கு மருந்தாகப் பரிந்துரைக்கப்பட்டு வந்துள்ளது.

பாதி அல்லது ஒரு விதையை மோரில் சேர்த்து பசுந்தாக அரைத்துக் குடிக்க நெடுநாளாக நீடித்திருக்கும் வயிற்றோட்டம் சுகமாகும் என்று கூறப்படுகிறது.

சேற்றுத்தண்ணீரைத் தெளியவைக்கும் குணம் தேற்றாவிரைக்கு உண்டு. இத்தாவரத்தை ஆங்கிலத்தில் clearing nut (தெளியவைக்கும் விதை) என்று குறிப்பிடுவார்கள். தேற்றான்விதையை துண்டு துண்டாக அரிந்து குடிதண்ணீர் கொள்ளப்பயன்படும் மண்பானையின் உட்பக்கமாகத் தேய்த்துவிடுவார்கள். இதன்மூலம் தண்ணீரில் தொங்கிநிற்கும் மண் துகள்கள் பிரிக்கப்பட்டுவிடும்.

Clearing nut  என்பது இதன் ஆங்கிலப்பெயர். Strychnos potatorum L. என்பது இதன் இலத்தீன் விஞ்ஞானப் பெயர்.


ஒலிவடிவில் கேட்க

12623 பார்வைகள்

About the Author

பால. சிவகடாட்சம்

பால. சிவகடாட்சம் அவர்கள் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தாவரவியலை பிரதான பாடமாகக் கொண்டு உயிரியல் விஞ்ஞானத்துறையில் (B.Sc. Hons) சிறப்புப் பட்டம் பெற்றவர். இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் (London Imperial College) டிப்ளோமா சான்றிதழும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுள்ளதுடன் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் B.Ed பட்டமும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியற் பீடத்தில் மூத்த விரிவுரையாளராகவும் அதன் தலைவராகவும் பதவி வகித்த இவர் பின்னர் கனடாவில் உள்ள ரொறொன்ரோ கல்விச்சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள மார்க் கார்னோ கல்லூரியில் விஞ்ஞான மற்றும் உயிரியற் பாட ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கையிலிருந்து 1971 - 1973 காலப் பகுதியில் விஞ்ஞானக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த 'ஊற்று' என்ற மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும், 1970-1971 காலப்பகுதியில் வெளிவந்த தமிழமுது இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றிய சிவகடாட்சம் (அவர்கள்) தொடர்ச்சியாக ஆய்வுக்கட்டுரைகளையும் இலக்கிய கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (13)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)