Arts
16 நிமிட வாசிப்பு

மதமும் மரபினமும்

December 12, 2022 | Ezhuna

இலங்கை முஸ்லிம்களின் இனத்துவ (ethnic) மூலத்தையும், வரலாற்றையும், இலங்கை முஸ்லிம்கள் எனும் இன அடையாளத்தினுள் கரைந்திருக்கும் பன்முக இன மரபுகளின் கலவையையும் தேடிய பக்கச்சார்போ, புனித நோக்குகளோ அற்ற ஒரு பரந்த அறிவியல்தன்மையுடன் கூடிய ஆய்வாக ‘இலங்கை முஸ்லிம்கள் – இனத்துவ மரபும் சமூகவியலும்’ என்ற இந்த கட்டுரைத்தொடர் அமைகிறது. குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் என்போர் இன மரபு சார்ந்து அரபு மூலத்தையா அல்லது தமிழ் மூலத்தையா தங்கள் இனத் தொடர்ச்சியாகக் கொண்டுள்ளனர், இலங்கை முஸ்லிம்களின் இனத்துவ அடையாளமாக தமிழைக்கொள்ள முடியுமா?, ஒரு சமூகமாக இலங்கை முஸ்லிம்களுக்குள்ளே இருக்கும் பண்பாட்டு வேறுபாடுகள், உள்ளக வேறுபாடுகள் மற்றும் முரண்கள் அவற்றின் சமூகவியல் தன்மை ஆகியவற்றை இந்தத் தொடர் பரந்த ஆய்வுக்குட்படுத்துகிறது.

இலங்கை முஸ்லிம்கள் ஒரு பன்மையான இனக் கலப்பைக்கொண்ட முஸ்லிம் என்ற மத அடையாளத்தினூடே ஒரு புள்ளியில் இணைந்த இனம் என்பதையும், அவர்களை மரபினரீதியாக முழுமையாக அரபு வேரோடு தொடர்புறுத்த முடியாது என்பதையும் மரபணுவியல் ஆய்வுகளை முன்வைத்து முதலாம் அத்தியாயத்தில் விவாதித்திருந்தேன். தவிர, அவர்களின் இனத்துவ மூலமானது இந்திய-இலங்கைத் தன்மையுள்ள இனத்துவ மரபை, பண்பாட்டுத் தொடர்ச்சியைக் கொண்டிருப்பதையும் எடுத்துக்காட்டி இருந்தேன். அந்தவகையில் பார்த்தால் இலங்கை முஸ்லிம்கள் மொழி, மரபணு, பண்பாடு சார்ந்து தமிழ் மூலத்துக்கு மிக நெருக்கமானவர்கள். ஆனாலும் சமகாலத்தில் முஸ்லிம்கள் அந்த அடையாளத்திலிருந்து தூரமாகிக்கொண்டிருக்கின்றனர். அது குறித்த ஒரு நோக்கையும் இந்த அத்தியாயத்தில் செலுத்த விரும்புகிறேன்.  

இன்றைய உலகு பல மதங்கள், பண்பாடுகள், மொழிகள், இனங்கள் என பிரிந்திருக்கும் பன்மை நிலமாகும். இன்று ஒவ்வொரு தனிமனிதனும் ஏதேனுமொரு இனத்தின், மதத்தின், சமூகத்தின், பண்பாட்டின், மொழியின், தேசத்தின் உறுப்பினனாகவே இருக்கிறான். பழங்குடிகள் கூட ஒரு சமூகமாகவே இன்று வாழ்ந்து வருகின்றனர். மனித சமூகங்களின் பௌதீக வாழ்விலும், சிந்தனை முறையிலும் மரபார்ந்த வாழ்க்கை முறையிலிருந்து பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ள இந்த யுகத்திலும் இது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் மதமும் (சிலருக்கு மதம் விதிவிலக்காக இருக்கலாம்), பண்பாடும், மொழியும் முதன்மையானதாகவும், வழிபாட்டுக்குரியதாகவும், அவர்களின் குருதியில் கெட்டியாகக் கலந்து விட்டதாகவுமே இருக்கிறது. இந்த எல்லைகளைக் கடந்து நிற்பவர்கள் ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு குறித்த விகிதத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த பண்பாடுகள், மொழிகள், மதங்கள், நாகரீகங்கள், தேசங்கள் அனைத்தும் ஒரே நாளில் ஒரே இடத்தில் அல்லது ஒரே காலப் பகுதியிலோ தோன்றியவை அல்ல என்பதை நாம் அறிவோம்.

ஆயினும் சில மதங்களுக்கிடையில் அவை தோன்றிய நிலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு தொடர்புகள் இருப்பதைக் காணலாம். உதாரணமாக மத்திய கிழக்கு நிலப்பகுதியில் தோன்றிய யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவற்றுக்கிடையில் தொடர்புகள் உள்ளன. பொதுவாக இம்மூன்று பெருமதங்களும் பல்லிறை (Multitheism) வழிபாட்டுச் சமூகங்களிலிருந்து பல்லிறைவாதத்தை எதிர்த்துத் தோன்றிய மதங்களாகும். அதனால் இந்த மும்மதங்களினதும் மையக் கொள்கையாக ஓரிறைவாதம் (Monotheism) விளங்குகிறது.

Artistic rendering of pre-Islamic costumes of Arab men and Arab women between fourth to sixth century

அரேபியத் தீபகற்பத்தில் தோன்றிய இம்மூன்று மதங்களினதும் கடவுள்கொள்கை, வேதம் கூறும் செய்திகள் போன்றவற்றில் ஒத்த தன்மை இருப்பதையும் காணலாம். அதேபோன்று, இந்திய மண்ணில் தோன்றிய சமணம், பௌத்தம் போன்றவற்றுக்கிடையிலும் இந்த நெருக்கம் உள்ளது. அதேபோன்று ரஸ்யா, பாரசீகம், சிரியா, கிரேக்கம் மற்றும் ஐரோப்பா போன்ற பகுதிகளில் தோன்றிய மதங்கள் மற்றும் தத்துவங்களும் கூட ஒன்றுக்கொன்று ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன. இது ஒன்றின் மீது மற்றொன்று ஏற்படுத்தும் தாக்கம் தான். முன்னையதிலிருந்து (அல்லது சமகாலத்தில் நிலைபெறும் மற்றையதிலிருந்து) பின்னையது தாக்கம் பெறாமல் முழுமையாகத் தனித்துவமானதாக எந்த மதமும் இல்லை என்பதை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்கிறோம்.

ஒரு மண்ணில் தோன்றும் மதமோ, தத்துவமோ முதன்மையாக அந்த மண்ணுக்குத்தான் அசலானதாக இருக்கும். ஏனெனில் அந்த மதம் அந்த சமூகத்தின் பாரம்பரியமான மொழி, பண்பாடு, மரபுகள், கலைகள், சமூக உளவியல், மானுடவியல் கூறுகள், சமூகத் தன்மைகள் போன்றவற்றையே பெருமளவில் பிரதிபலிக்கும். கடவுள் கொள்கையில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, மிகச்சிறு அளவில் வணக்கமுறைகளில் புதுமையை அறிமுகப்படுத்தும்.

ஒரு மதம் அது தோன்றிய மண்ணிலிருந்து, தேசத்திலிருந்து, கலாசாரத்திலிருந்து, நாகரீகத்திலிருந்து, சமூகத்திலிருந்து மிகத் தொலைவிலிருக்கும் வேறு சமூகங்களுக்கு, பண்பாடுகளுக்கு, இடங்களுக்கு பரவிச்செல்லும் போது அந்த அந்த சுதேச சமூகங்களுக்கு அப்புதிய மதம் செயற்கையானதாக, அந்நியமானதாகவே (exotic) தோன்றும். காரணம், ஒரு மதம் புதிதாக ஒரு சமூகத்தில் அறிமுகமாகும் போது அந்த மக்கள் ஏற்கனவே ஒரு மதத்தின், சமூகத்தின், மொழியின், பண்பாட்டின் உறுப்பினர்களாகவே இருப்பார்கள். அவர்களில் எல்லோருமே தங்களது பழைய நம்பிக்கையை, மதத்தைத் துறந்து புதிய மதத்தை ஏற்றுக்கொண்டு அது உருவாக்கும் சமூகத்தினதோ, இனத்தினதோ, பண்பாட்டினதோ உறுப்பினராக ஆகிவிடுவதில்லை. மாறாக, தாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை, பண்பாட்டு நடைமுறைகள், வழக்காறுகள், இனத் தனித்துவங்கள், மொழிப் பாவனைகள் போன்றவற்றை அப்படியே பேணிக்கொண்டு கடவுள் கொள்கையாக புதிய மதத்தைத் தழுவிக்கொள்கின்றனர். ஆயினும் இந்த மாற்றம் இலகுவில் நடந்து முடிவதுமல்ல.

பழைய மதத் தலைவர்களினதும், அபிமானிகளினதும் பலத்த எதிர்ப்புகள் (அதன் உச்ச எல்லையாக யுத்தம் வரை அந்த எதிர்ப்பு இருக்கும்) அனைத்தையும் தாண்டித்தான் ஒரு மதத்தால் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடிந்திருக்கிறது. உலக வரலாற்றில், பெரும் மதங்களுடன் மோதி இதில் தோல்வியடைந்த பல மதங்கள் அப்படியே எச்ச சொச்சம் இல்லாமல் அழிக்கப்பட்டுமுள்ளன.

உள்நாட்டு சமூக மரபுகளை மறு ஆக்கம் செய்யும் வெளிநாட்டு மதங்கள்

புதிதாக ஒரு மதம் அந்த மண்ணிலிருந்தே உருவாகி வரும் போது அல்லது வேறு மண்ணிலிருந்து வந்து அறிமுகமாகும் போது அம்மண்ணில் வாழும் சுதேச மக்கள் அப்புதிய மதத்தைத் தழுவிக்கொண்டாலும், அதன் பண்பாடு மற்றும் மரபுகளையும் சேர்த்து பின்பற்றுவதில்லை. காலப்போக்கில், அது திட்டமிட்டவகையில் அந்த மக்களின் பழைய நம்பிக்கைகள், வழக்காறுகள் போன்றன முற்றாக புதிய மதத்தால் களையப்பட்டு மறு ஆக்கம் செய்யப்படும். அப்புதிய மதத்தைப் பின்பற்றும் சுதேச மக்களின் மூன்றாம் நான்காம் தலைமுறையினரை அவர்களது முன்னோரின் பழைய நம்பிக்கைகள், வழக்காறுகள், கலாச்சார எச்சங்கள் போன்றவை தம்முடையவை அல்ல, அவை அழிக்கப்பட வேண்டியவை அல்லது வழிகேடானவை என புதிய மதத்தின் தூய்மைவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு புதிய மதத்தின் தூய்மை வாத பக்தர்களாக மாற்றப்படுகின்றனர். இப்படித்தான் தூய்மைவாதம் உருவாகிறது.  

கி.பி. 6ஆம் நூற்றாண்டில் மக்காவில் இஸ்லாத்தை முதன் முதலில் முகம்மது நபிகளார் முன்வைத்தது பல்லிறைவாத வழிபாட்டிலிருந்த, இஸ்லாத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட மத நம்பிக்கை கொண்ட, கலாசாரத்தைக் கொண்ட அரபிகளிடம்தான். அப்போது அந்த அரபிகளின் பிரதான மதமாக அவர்களின் மூதாதையரின் மதமான பல்லிறை வழிபாடு (multitheism) விளங்கியது. அதேநேரம் அவர்களை மிக அண்டிய பகுதிகளில் கிறிஸ்வதம், யூதம் போன்ற மதங்களும் காணப்பட்டன. முகம்மது நபிகள் அரபிகளின் பாரம்பரிய மதமான பல்லிறைவாத மதத்திலிருந்தே தோன்றினார்.

ஏற்கனவே, அரபுத் தீபகற்பத்தில் ஒரு நாகரீகத்தை, வரலாற்றைத் தோற்றுவித்த அரபிகள் அரபு மொழியையும் உருவாக்கி இருந்தனர். அரபுத் தீபகற்பத்தில் பல்வேறு மதங்கள், நம்பிக்கைகள், பண்பாடுகள், மரபுகள் உருவாகி வந்த போதிலும் வலுவானதும், உறுதியானதுமான மொழியாக அரபும், அரபுப் பண்பாடும் விளங்கியது. இதனால் தான் அந்த மக்களும், தேசமும், அரபுக்கள் என்றும் அரேபியா எனவும் அழைக்கப்படுகிறது. எனினும் இதன் மூலம் இஸ்லாம் வருவதற்கு முன்னர் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த மக்களிடமிருந்து வந்த வழக்காறுகள், மரபுகள், மொழி கலாசாரம் போன்றன இந்த புதிய மதத்தின் வருகையினால் முற்றாக அழித்தொழிக்கப்படவில்லை. கடவுள் வழிபாட்டிலும், மத நம்பிக்கையிலும்தான் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இஸ்லாத்தின் வருகையின் பின்னரும் அரபு மொழி மாற்றியமைக்கப்படவில்லை என்பதையும், அரபிகளின் பாரம்பரியமான ஆடை, உணவு, கலை போன்ற பண்பாட்டுக் கூறுகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை. இஸ்லாத்தின் வருகைக்குப் பின்னரும் இஸ்லாத்துக்கு முன்னர் இருந்த அதே மொழியும், பண்பாடும், மரபுகளும், பாரம்பரியங்களும் தான் இஸ்லாத்துக்குப் பின்னரும் தொடர்ந்தது. இதிலிருந்து இஸ்லாத்திற்காக ஒரு சமூகம் தங்கள் மொழியை, மரபுகளை, பண்பாட்டை, பாரம்பரியங்களைக் கைவிட வேண்டிய எந்த அவசியமுமில்லை என்பது புலனாகிறது.

இந்திய, இலங்கைச் சூழலில் இஸ்லாம் பரவுவதற்கு முன் இங்குள்ள மக்கள் சுதேச மதத்தின், பண்பாட்டின், இனத்தின் மொழியின் உறுப்பினர்களாகவே இருந்திருப்பார்கள். இஸ்லாம் இங்கு அறிமுகமானதன் பின்னர் இந்திய, இலங்கைச் சுதேசிகளாக இருந்த சிலர் இஸ்லாத்தைத் தழுவி இஸ்லாம் என்ற புதிய மதத்தின் அங்கத்தவர்களாயினர். ஆனால் அவர்களின் பூர்வீக மதம் இஸ்லாமல்ல. மொழி அரபும் அல்ல. அவர்களின் பண்பாடும் மரபும் கூட அரபுப் பண்பாடோ, மரபோ அல்ல. அநேகமாக அவர்களும் பல்லிறைவாத நம்பிக்கையுடைய இந்நாடுகளின் சுதேசக் குடிகள்தான். இவ்வாறு புதிதாக இஸ்லாத்தைத் தழுவிக்கொண்ட சுதேசிகள் மத்தியில் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மாற்றம் நிகழ்ந்து வந்திருக்கும். அது மெல்ல மெல்ல நிகழ்ந்து நான்காம் ஐந்தாம் தலைமுறையாகும் போது மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபட்ட ஒரு இனக்குழுமமாக உணரத் தலைப்பட்டிருப்பர். மற்ற சமூகங்களின் புதிய தலைமுறையினரும் அவர்களை ஒரு வேறு இனக்குழுமமாகவே பார்த்திருப்பார்கள். ஏனெனில் அவர்களது 4ஆம் 5ஆம் தலைமுறைக்கும் இவர்களின் கடந்த காலங்களில் இவர்கள் மத்தியில் நிகழ்ந்த சமூகப் பண்பாட்டு மதரீதியான மாற்றங்கள் தெரிந்திருக்காது. அவர்களும் தங்களிலிருந்து சென்றவர்கள்தான் என்ற உண்மையை அவர்களால் உணரமுடியாது. காரணம், அவர்கள் சிறுபிள்ளைகளாக சமூகத்திலிருந்து உருவாகி, சமூகமயமாகி வரும் போது இவ்வாறு பண்பாட்டு மாற்றத்துக்குள்ளானவர்களை புதிய இனமாக, வேறு மதமாகத் தங்களிலிருந்து வேறுபட்டவர்களாக பார்த்தே பழகி வந்திருப்பார்கள்.

இலங்கை முஸ்லிம்கள் இலங்கை எங்கிலும் பரந்து வாழ்ந்தாலும் அவர்களின் தாய் மொழி தமிழ். வரலாற்றுரீதியாகப் மொழியை அடிப்படையாகக் கொண்டுதான் இனம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. சிங்களவர்கள் பௌத்தம் – கிறிஸ்தவம் ஆகிய மதங்களைப் பின்தொடர்பவர்கள். ஆனால் இனம் சார்ந்து அவர்கள் சிங்களவர்கள். இங்கு அவர்களின் மொழி, சமூக உளவியல், கூட்டுறவு, கலை, கலாசாரத் தளம் ஆகியவை இனப் பண்பாட்டினாலேயே இன்றளவும் தீர்மானிக்கப்படுகின்றன. சிங்களவர்கள் பௌத்த – கிறிஸ்தவ வித்தியாசங்களின்றி தங்களை சிங்கள இனமாகவே உணர்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை சிங்களவர்களில் ஒரு சொற்ப அளவினர் இடைநடுவில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிக்கொண்டவர்கள் அவ்வளவுதான். தமிழர்களிலும் இந்துக்கள் – கிறிஸ்தவர்கள் மத வேறுபாடு இருந்தாலும் மொழியினடிப்படையில் தமிழர்களே. அவர்களது பௌதீகத் தோற்றம், சமூக உளவியல், அறிவுத் திறம் போன்றவையும் ஒரேமாதிரியானதுதான்.

அதேபோன்றுதான் அரபிகள், பாரசீகர், ஆங்கிலேயர், ஜேர்மனியர், பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர், இத்தாலியர் என்போர் இஸ்லாம், கிறிஸ்தவம், கத்தோலிக்க மதத்தவராக இருந்தாலும் அவர்களது இனம், மொழி அடிப்படையில் அமைந்ததுதான். ஏனெனில் மதத்துக்கு முன்னரே மொழியும், இனமும் உருவாகி இருக்கிறது. அதுவே இயற்கையான அளவீடாகும். தொன்றுதொட்டு ஒரு சமூகம் என்ன அடையாளத்துடன் இருந்ததோ அதுவே அதன் உண்மையான அடையாளமாகும். அவர்கள் புதிய மதத்தைத் தழுவிக்கொண்டாலும் உடல் தோற்றம், மொழி, பண்பாடு, வழக்காறு, மரபுகள், சமூக உளவியல் என்பன அதன் உண்மையான அந்த ஆதி இனக்குழுமத்தினதுடையதைப் போன்றே இருக்கும். அவர்களது உடல் தோற்றத்திலோ, நடத்தைகளிலோ, உளவியலிலோ எந்த மாற்றமும் நிகழாது. வேண்டுமானால் புதிய மதத்தை தழுவும் போது இனக் கலப்பு ஏதும் ஏற்பட்டிருந்தால் அவர்களின் ஆதி இனக்கூறிலிருந்து சிறிது வித்தியாசம் வெளிப்படலாம். காரணம் மதத்தால் மட்டுமே ஒரு இனம் மாறுவதில்லை. இயற்கையில் அது எந்த இனமாக இருந்ததோ அந்த இனத்தின் பண்புகளையும், உளவியலையும், உடற்கூறுகளையும் தான் அது வெளிப்படுத்தும்.

காலனித்துவப் பாணியில் அரபுப் பண்பாட்டுமயமாக்கம்

மேற்கு, காலனித்துவத்தின் மூலம் கீழைத்தேய சமூக அமைப்பை மேற்கு மாதிரியில் மாற்றியமைத்ததை நாம் அறிவோம். அது கீழைத்தேய நாடுகளை ஆக்கிரமித்து கிறிஸ்தவ மதம், ஐரோப்பிய அரசியல் முறை, கலாசார முறை (ஆடை, உணவு) கல்வி முறை போன்றவற்றை மூன்றாம் உலகின் மீது பலாத்காரமாகத் திணித்தது. அதனையே நாம் காலனித்துவம் என்கிறோம். இப்போது மேற்கு நாடுகள் மறைமுகமாக தங்களது அரசியல் பொருளாதார பலத்தைப் பயன்படுத்தி மறைமுகமாக கீழை மற்றும் வளர்முக நாடுகள் மீது செல்வாக்கைச் செலுத்தி மேலும் தங்களது கொள்கைகளைத் திணித்து வருகிறது. மேற்கு வடிவமைத்த கல்வித் திட்டம் அரசியல் முறை, பொருளாதார முறை போன்றவற்றையே எல்லா நாடுகளையும் பின்பற்ற வைப்பதன் மூலம் ஓர் உலகு தழுவிய முறைமை ஒன்று நிறுவப்பட முயற்சிக்கப்படுகிறது. அதற்கான கடனுதவிகள் சலுகைகள் போன்றவை வழங்கப்படுகின்றன. அல்லது எதிர் நடவடிக்கையாக பொருளாதாரத் தடைகள் போன்ற செயற்பாடுகள் மூலம் வளர்முகநாடுகள் ஒருவழிக்குக் கொண்டு வரப்படுகின்றன.

A-Muslim-shop-in-Kandy-Ceylon-in-1890s

இதே பாணியில் இன்று உலகெங்கிலுமுள்ள அரபுக்கள் மற்றும் அரபு அல்லாத முஸ்லிம் என அனைவரும் அரபு மய்ய தூய்மைவாத இஸ்லாமியர்களாகவே மாற வேண்டும் என்று சவுதியைத் தளமாகக் கொண்ட சில அரபு மய்ய இஸ்லாமிய இயக்கங்கள் விரும்புகின்றன. தன்னிடமுள்ள பணபலத்தைப் பயன்படுத்தி இந்த இயக்கங்கள் மூலம் இச்செயல்பாடு முன்னெடுக்கப்படுகிறது. ஒருவகையில் பார்த்தால், இது அப்பட்டமான தூய்மைவாத அரபு மதக் காலனித்துவமாகும். இச்செயல்பாடு மூலம், அரபு மரபுகள், பண்பாடுகள், நம்பிக்கை, சிந்தனை முறை மற்றும் வாழ்வியல் முறை என்பவற்றை இலங்கையின் பாரம்பரிய முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது.

 உள்ளூர் முஸ்லிம் பண்பாடுகளை, மரபுகளை, வழக்காறுகளை மதச்சாயம் பூசி அவற்றை “வழிகேடு” என்ற வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் இல்லாதொழிப்பதற்கான திட்டங்கள் மிக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அதற்காக குர்ஆன், ஹதீஸ்களுக்கு ஒருதலைப்பட்சமான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. உனது மரபை சொந்தப் பண்பாட்டை விட்டு நீ வெளியேறு. அரபுப் பண்பாட்டையும், வாழ்க்கை முறையையுமே நீ பின்பற்ற வேண்டும். உனக்கென்று ஒரு சுயமான வாழ்க்கை முறை, வழக்காறு, சிந்தனை முறை, பண்பாடு, கலைமரபு என எதுவும் இருக்கத் தேவையில்லை. தூய அரபிகள் போன்று உன் ஆடைகளை, உன் உணவுப் பழக்கத்தை, ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றிக்கொள் என்று அறிவிப்பதாகத்தான் இலங்கையில் செயற்படும் அரபுமய்ய இஸ்லாமிய மதக் காலனித்துவ இயக்கங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

இந்த மதக் காலனித்துவ செயல்பாடானது இலங்கை போன்ற நாடுகளில் உள்ளூர் முஸ்லிம்களுக்கு பாரிய நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளது. இஸ்லாமியத் தூய்மைவாத இயக்கங்களின் வருகைக்கு முன்னர் வேறு நாகரீகங்களின், பண்பாடுகளின் தேசங்களின் மக்கள் இஸ்லாத்தை தழுவிக்கொண்ட போது அதனை ஒரு மதமாக மட்டுமே தழுவிக்கொண்டார்கள். தங்களுக்கு எந்த விதத்திலும் பொருந்தாத அரபுத்தேச மரபுகளை, பண்பாட்டை, வழக்காறுகளை எல்லாம் இஸ்லாமாக வரித்துக்கொண்டு பின்பற்றவில்லை. அவர்கள் என்றென்றும் தங்களது பண்பாட்டு மரபுகளிலேயே அப்படியே தொடர்ந்திருந்தனர். உண்மையில், இஸ்லாம் வேறு அரேபியப் பண்பாடு வேறு என்பதை அவர்கள் நன்கு புரிந்துகொண்டனர். அரபுப் பண்பாடு, அரபிகளின் வழக்காறுகள், மரபுகள் கலைகள் எல்லாம் சேர்ந்துதான் இஸ்லாம் என்ற தவறான புரிதல் அவர்களிடம் இருக்கவில்லை.

ஈரான், சிரியா, மலேசியா, இந்தோனேசியா, இந்தியா (சில பிராந்தியங்களில்) போன்ற நாடுகளில் இந்நிலைமயை சிறப்பாகக் காண முடியும். அவர்கள் தங்கள் மொழியை, நாகரீகத்தை, மரபுகளை, கலைகளை அழித்துவிட்டு அரபுப் பண்பாட்டையும் மரபுகளையும் கண்மூடித்தனமாக தழுவிக்கொள்ளவில்லை. இஸ்லாத்தை மதமாக, தங்களின் கடவுள் கொள்கையாக, வழிபாட்டுமுறையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். அதாவது அந்த மாற்றம் பல்லிறைவாதத்திலிருந்து ஓரிறைக் கொள்கையை நோக்கிய புலப்பெயர்வாக இடம்பெற்றுள்ளது.

அதேபோல், ஆபிரிக்க சமூகங்களிலும் இஸ்லாம் பரவிய போது பெரும்பாலான சமூகங்கள் இஸ்லாத்தை மதநெறியாக தழுவிக் கொண்டனவே ஒழிய அரபுகளின் பண்பாட்டையும் சேர்த்து தங்களது நூற்றாண்டுகால மரபுகளை, பண்பாடுகளை அப்படியே கைவிட்டு விட்டு கண்மூடித்தனமாகப் பின்பற்றவில்லை. ஆன்மீகம்தான் ஒரு மதத்தின் ஆன்மாவாகும். அதுவே பின்பற்றப்படவேண்டியது. மாறாக அதற்கு வெளியேயான அந்த மதம் தோன்றிய சமூகத்தின் மொழியையும், ஆடைகளையும், சாப்பாட்டையும் சேர்த்தே பின்பற்ற வேண்டும் என வாதிப்பது அடிமுட்டாள்த்தனமானது.

பண்பாடு என்பது ஒரு சமூகம் நூற்றாண்டு காலமாக தாம் உருவாக்கிப் பேணி வரும் ஒரு சமூகவிசையாகும். மதத்துக்காக தன் சொந்தப் பண்பாட்டை ஏன் கைவிட வேண்டும்? எல்லா சமூகங்களிலும் மதம் பண்பாட்டின் ஒரு கூறாகவே இருந்து வருகிறது. மதத்தின் ஒரு கூறாக பண்பாடு இருப்பதில்லை.

உண்மையில், அரபு நாடுகளுக்கு வெளியில் வாழும் சுதேச சமூகங்கள் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்ட போது அந்ததந்த சமூகங்களின் மத நம்பிக்கையிலும், வழிபாட்டு முறையிலும் தான் மாற்றம் ஏற்பட்டதே ஒழிய அதைவிடுத்து மதம் சாராத பண்பாட்டு பகுதியில் மாற்றம் நிகழவில்லை. ஆனால் இலங்கை போன்ற தமிழ் இஸ்லாமியச் சூழலில் தூய்மைவாத  இஸ்லாமிய இயக்கங்கள் அரபுப் பண்பாட்டையும், மரபுகளையும் கூட இஸ்லாமாக முன்நிறுத்துகிறது. இலங்கை முஸ்லிம்களின் சுய மரபுகள், பாரம்பரியங்கள், வழக்காறுகளை முற்றாக அழித்தொழித்து இலங்கைக்கு எந்த விதத்திலும் பொருந்தாத அரபு மைய இஸ்லாத்தை திணிக்க முற்படுகின்றன. இலங்கையின் சமூக, அரசியல், பண்பாட்டுச் சூழலுக்கு இந்தத் தூய்மைவாத இஸ்லாம் எந்த விதத்திலும் உகந்ததல்ல என்பதை இலங்கையின் அண்மைக்கால அரசியல் போக்குகளும், சிறுபான்மை இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடிகளும் இதற்கு தக்க சான்றாகவுள்ளன.

இஸ்லாத்தின் பல சட்டதிட்டங்கள் தூய்மைவாதக் கருத்துகள் என்பன இஸ்லாம் ஒரு ஆதிக்க சக்தியாக உருவான பின்பு கொண்டு வரப்பட்டவை. முஸ்லிம் பெரும்பான்மை, இராணுவப் பலம், யுத்த வெற்றிகள், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய வல்லமை உருவான பின்புதான் தூய்மைவாதக் கருத்தியல் பேசப்பட்டது. காரணம், அப்போது முஸ்லிம்கள்தான் பெரும்பான்மை. உலகின் ஆதிக்கத்தரப்பு ஆட்சியினர். எனவே மற்றவர்கள் அவர்களுக்குக் கீழ் இருப்பதால் அங்கு முஸ்லிம்கள் தனிமைப்படப் போவதில்லை. முஸ்லிம் அல்லாதவர்கள் தான் முஸ்லிம்களோடு ஒத்துழைத்துப் போகாவிட்டால் தனிமைப்படல் மற்றும் வேறு விதமான பாதிப்புகளுக்கும் உள்ளாக வேண்டி ஏற்படக்கூடிய சூழல் இருந்தது. இதனால் வேறு வழியின்றி அவர்கள் இஸ்லாத்துக்கு வரவேண்டி இருக்கும். இந்த சூழல் இப்போது உலகத்திலும் இல்லை. இலங்கையிலுமில்லை.

ஆனால் தூய்மைவாத இஸ்லாமிய இயக்கங்கள் இன்னும் அதேநிலையில்தான் தாங்கள் இருப்பதான கற்பனையில் அவர்களது எதிர்பார்ப்புகளும், செயல்பாடுகளும் மிதப்பது போலுள்ளன.

ஒரு மதத்தால் ஒரு சமூகத்தில் இத்தகைய பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்த முடியுமே தவிர அதன் மரபினத்தை மாற்ற முடியாது. ஏனெனில் மரபினம் என்பது உயிரியலோடு தொடர்புபட்டது என்பதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்.

எனவே இந்திய-இலங்கைத் தன்மையும் பூர்வீகமும் கொண்ட இலங்கை மரபின வேரைக்கொண்ட முஸ்லிம்களின் இனத்துவ மூலத்தை மதத்தால் பதிலீடு செய்ய முடியாது என்றே கருதுகிறேன்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

20254 பார்வைகள்

About the Author

ஜிஃப்ரி ஹாசன்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையைச் சேர்ந்த ஜிஃப்ரி ஹாசன் அவர்கள் சப்ரகமுவப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பட்டம் பெற்றவர். மேலும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியலிலும் பட்டப்பின் டிப்ளோமா பட்டம் பெற்ற இவர், தற்போது ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

சிறுகதை, கவிதை, இலக்கிய விமர்சனம், பண்பாட்டு ஆய்வு, மொழிபெயர்ப்பு என விரிந்த தளத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். இவரது ‘போர்க்குணம் கொண்ட ஆடுகள்’, ‘அகாலத்தில் கரைந்த நிழல்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு சார்ந்து இவரது நூல்கள் பல வெளிவந்துள்ளன.

இலங்கை முஸ்லிம் பண்பாடு, சமூகவியல், ஈழ இலக்கியம், சிங்கள இலக்கியம் முதலான கருபொருள்களில் ஆழமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)