Arts
10 நிமிட வாசிப்பு

கடலோர வேட்டுவ சமூகங்களுள் காணப்படும் குடிவழமைகள்

August 20, 2022 | Ezhuna

இலங்கைத் தீவின்  பூர்வீக குடிகளாக சிங்களவர்களையும்  மற்றும் தமிழர்களையும்  அவர் தம் பேரினவாத சிந்தனையானது,  பல வரலாற்று புனைவுகளின் ஊடாக இற்றை வரை  தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால்  இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் வேடுவர் என்பதை எவரும் மறுக்கவியலாது. அதனடிப்படையில், கிழக்குக் கரையோரம் எங்கும் வாழும் இன்று தமிழை பேசு மொழியாகக் கொண்டுள்ள வேடுவர்களின் இருப்பியல் பற்றியும், அவர் தம் தேவை பற்றியும் ‘வேடர் மானிடவியல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் ஆய்வுப்பாங்கில் விவரிக்கின்றது. வேடுவர்களுக்கே உரித்தான அடையாளங்களை வெளிக்கொணர்வதாகவும், இதுவரை நாம் அறிந்திடாத வேடுவர் குணமாக்கல் சடங்குகள், இயற்கையுடன்  பின்னிப்பிணைந்த அவர்களின் வாழ்வியல், வேடுவர் மீதான ஆதிக்க சாதியினரின் பாகுபாடுகள் என்பன உள்ளிருந்து மரபு மீட்கும் நோக்கில் பிரதானமாகக் கண்டறியப்பட்டு, அவை தொடரின் ஊடாக முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் காலனிய எண்ண மேலாதிக்கத்துள் சிக்குண்டு அழிந்துகொண்டிருக்கும், அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அவர் தம் மானுட நகர்வுகள் முதலான பல அல்லோல கல்லோல நிலைமைகளும் இதில் விரிவாகப் பேசப்படுகின்றன.

ஒவ்வொரு சமூகக்குழுக்களும் தமக்கு  வாலாயமான பண்பாட்டு நகர்வுகளுள் பல முன்னெடுப்புக்களை, கால வர்த்தமானங்களுக்கு அமைவாக ஈடேற்றிக் கொண்டுள்ளமையே வரலாறாகின்றது. அவ்வாறான நிலைப்பாடானது இயல்பான முறையிலும், வலிந்து புகுத்தப்பட்ட வடிவிலும்  குறித்தவொரு சமூகத்தில் தாக்கம் செலுத்தியே வந்துள்ளது. இதற்கு தீவின் ஆதிப்பிரஜைகளான வேடரும் விதிவிலக்கல்லர்.

விஜயனின் வருகையின் போது குவேனி நூல்நூற்கும் நிகழ்வை விபரிக்கும் படம்

இலங்கை வரலாறானது காலத்துக்குக் காலம் இடம் பெற்ற, வரத்து இனங்களின் குடியேற்றத்துடனேயே பார்க்கப்படுகின்றமையை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டிய பாரிய தேவையுண்டு. உதாரணமாக இலங்கையின் முதல் மன்னனாக மகாவம்சம் கூறும் விஜயன் இலங்கை வந்தடைந்த போது அவனை வரவேற்று, பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றியும், விஜயன் அரசமைத்து தனது  பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை மணந்தான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும், அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கைக் காடுகளில் வசிக்கும் வேடர்கள் என்றும் கூறப்படுகின்றது. இதுவே இற்றை வரைக்குமான பூர்வ குடிகளுக்கான வரலாறாகப் பார்க்கப்பட்டு வந்துள்ளமையினை பலரும் அறிவர்.

 ஆனால் இவ்வாறு புனைந்தவர்களும், புனைவை ஏற்றோரும் சில விடயங்களை உணர்ந்து கொள்ள வேண்டும். விஜயன் இலங்கைக்கு வரும் போது குவேனி நூல் நூற்றுக்கொண்டிருந்தாள் எனில், மனிதக் கூட்டமானது மரவுரியில் இருந்து கைத்தறிக்கு வருவதற்கு எத்துனை காலம் எடுத்திருக்கும்?, குவேனியின் வாரிசுகள் வேடர்களாயின் குவேனியின் சமூகத்தினர் யார்? இன்று இராவணனைப்பற்றி பலரும் கதைத்துக் கொண்டிருக்கின்ற வேளையில் இராவணன் தொடக்கம் விஜயன் வரைக்குமான பல்லாயிரம் வருடங்களுக்கு மேலான இலங்கை வரலாறு எங்கே? என்பதான கேள்விகளுக்கான விடைகளை மானிடவியல் நகர்வுகளை நன்குணர்ந்த புத்திஜீவிகள் தொடக்கம் சாதாரண பிரசை வரை கேள்வி கேட்க வேண்டிய தேவையும் அதனை எமது முதுசங்களூடாக மீட்டெடுக்க வேண்டிய கடப்பாடும் உண்டு.

மட்டக்களப்பு வேடுவர்

 இது இவ்வாறு இருக்கையிலும் தான் வேடர்கள் என்போர் இன்று நாம் காணுகின்ற ஈழத்து சமூகங்களில் ஆதிப்பிரசைகள் எனக் கொள்ளப் போதிய சான்றுகள் உள்ளன. ஆரியக் குடியேற்றங்களிலும் சரி, பௌத்த மதப் பரம்பலிலும் சரி அவற்றின் திடீர்ப் புனைவு நிலைக்குள் உள்வாங்கப்படாமல், சவால் விட்ட  பெருமளவு இயக்கரும் நாகரும் வேடர் என்ற சமூக அமைப்பினுள் இருந்தே வந்தவர்கள் என்பதே நிதர்சனத் தெளிவு. பண்டைய மட்டக்களப்பின் விந்தனை, வேகம் (நாடு காடு) கோறளை (வாகரைப் பகுதி) போன்ற நிலப்பரப்புள் தொடர்ந்தாற்போல் இச்சமூகத்தினர் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வாழ்ந்து வருகின்றனர். மட்டக்களப்பு பிரதேசத்தின் எல்லாப் பகுதிகளிலும் வேடரின் வாழ்விடங்கள் பற்றிய தகவல்களும் தடயங்களும் ஐயத்துக்கு இடமின்றி வெளிப்படுகின்றன. இப் பிரதேச ஆலய நடைமுறைகளிலும் வழிபாட்டுத் தன்மையிலும் கூட வேடர்களின் வழக்காறுகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

மேற்கண்டவாறான தனித்துவப் பாரம்பரியங்களுடன் இன்றும் தீவின் கிழக்குக்கரைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற வேடர் சமூகத்தினுள் இடப்பரம்பலின் அடிப்படையிலும்,  வந்தேறு குடிகளின் குடியேற்றப் பரம்பலின் அடிப்படையிலும் இற்றைவரைக்குமாக காணப்படுகின்ற சமூகக்குடி வழமைகள் பற்றி விவரிப்பதாகவே இக்கட்டுரை விரிகின்றது.

குடிவழமைகள்

கடல்வேடுவர்

 தீவின் கிழக்குக் கரையோரத்தினை அண்டியே பெரும்பாலான கடலோர வேட்டுவக் குடிகள் இன்றும் காணப்படுகின்றனர். ஆரம்ப கால கடலோர வேட்டுவக்குடிகளின் ஆதிக் கிராமமாக இன்று மட்டக்களப்புத் தமிழகத்தின்  செங்கலடிப் பிரதேச பிரிவுக்குள் காணப்படுகின்ற “களுவன்கேணி” எனும் மீன்பிடிக்கிராமமானது திகழ்கின்றது. இக்கிராமமானது பழங்காலத்தில் கரையோரமாக மட்டக்களப்பு திராய்மடு தொடக்கம் வாகரை வரையும், தெற்கே சித்தாண்டியை அண்மித்துள்ளதும் வேடுவர்களால் செல்லாபத்து என அழைக்கப்பட்ட மோட்டுக்காட்டுப்பிரதேசம் அடங்கலாக பரந்த ஒரு நிலப்பரப்பை கொண்டமைந்துள்ளது.

இதற்கு வேடுவர்களால் அழைக்கப்படும் இடப்பெயர்கள் சான்றாக உள்ளன. உதாரணமாக மட்டக்களப்பு கருவப்பங்கேணி தொடக்கம் பாலையடித்தோணா வரை பனுவளக்குடி எனவும், மட்டக்களப்பு சித்தாண்டி தொடக்கம் பேரிலாவளியை அண்டிய பிரதேசம் “செல்லாப்பத்து” எனவும், மட்டக்களப்பு கல்குடா மற்றும் கல்மடு வரையான பகுதி “கல்கோடா “ எனவும், மட்டக்களப்பு தளவாய், சவுக்கடி வரையிலான பகுதி “கிரிமட்டி” எனவும்,  மட்டக்களப்பு திராய்மடு தொடக்கம் கருவப்பங்கேணி வரைக்குமான பகுதி “திருக்காக்கேணி” எனவும், மட்டக்களப்பு வாகரை மற்றும் மாங்கேணி வரையிலான பகுதி “ஆக்கமது” எனவும் அழைக்கப்படுகின்றன. அவ்வாறே இப்பிரதேசத்தில் இருந்த வேடுவக்குடித் தலைமைகளுக்கெல்லாம் பிரதான தலைவராக களுவன் எனப்படுபவரே மதிக்கப்பட்டார். இவரின் பெயராலும் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் காணப்பட்ட பல இயற்கையான கேணிகளையும் கொண்ட காரணப்பெயராகவே “களுவன்கேணி” எனும் ஊர்ப்பெயர் வரலாயிற்று என்பது வேட முதுசங்களின் வாய் மொழிக்கருத்துக்களாகும்.

மேற்கண்டவாறான இயல்புகளுடன் காணப்பட்ட களுவன்கேணி கிராமத்திலே வணக்கமுறை, வணங்கும் உத்தியாக்கள் (மூதாதையர்கள்) மற்றும் வாழும் இடத்தின் இயல்புகளின் அடிப்படையில் பல குடிப்பிரிப்புக்கள் காணப்படுகின்றன. அவை இன்றும் பல சாதக,பாதக விளைவுகளைக் கொண்டதாக வேடுவர்களிடையே காணப்படுகின்றன. ஒவ்வொரு வேடுவக் குடிக்குமென வேடுவத்தலைமையினால் குறிப்பிட்ட தெய்வம் தான் உரித்துடையது என ஆரம்ப காலத்தில் நிர்ணயிக்கப்பட்டதே இன்றும் பின்பற்றப்படுகின்றது. அவை பின்வருமாறு;

  • பனுவளக்குடி           –   மாறாய்த் தெய்வம்
  • செல்லாப்பத்துக் குடி         –   குடா நீலி
  • திருக்காக்கேணிக் குடி       –   மாநீலி
  • வெல்லாயன் குடி           –   தெய்யநாச்சி
  • ஆக்கமதும குடி             –   கன்னிமார் (பட்டு)
  • வெல்லம்பாலைக் குடி       –   பூச்சாண்டி
  • வெரிகடிகத்தோக் குடி         –   கிரியம்மா

பனுவளக்குடி

இந்தக் குடியைச் சேர்ந்த வேடுவர்கள்  மட்டக்களப்பு கருவப்பங்கேணி தொடக்கம் பாலையடித்தோணா வரையான பெரியதொரு காட்டுப்பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்தனர். ஏனைய குடிகளுக்கெல்லாம் உயர்ந்த மதிப்புள்ள குடியாக இந்தக்குடி திகழ்ந்தது. இவர்களின் தலைமைத்தெய்வம் அல்லது உரித்துடைய தெய்வமாக மாறாத்தெய்வம் (தேன் மரத்தில் ஏறி தேன் பூச்சி கொட்டி தெய்வமாடும் தெய்வம்) இருந்தது. அத்துடன் மாநெடுத்தன் பத்தினி தெய்யா முதலான தெய்வங்களும் இவர்களுக்கான தெய்வமாக இருந்துள்ளன. இந்தக் குடியினர் தான் வருடத்தில் முதலாவது சடங்கினை பிரமாண்டமாக நடத்துவர். இந்தச் சடங்கில் ஏனைய குடியினருக்கும் பொறுப்புக்களும் கடமைகளும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. மாறாத் தெய்வத்திற்கு ஆடுபவர் பனுவளக் குடியைச் சேர்ந்தவராக இருப்பார். தேன் மரத்தில் ஏறி தேன் பூச்சி கொட்டி, தெய்வமாடும் தெய்வங்கள் இந்தக் குடியினராகவே இருப்பர். வேறு குடியினர் தோரண மரம் ஏறக்கூடாது என்ற நியதியினை பின்னைய காலத்தில் ஏற்படுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு பூர்விக குடி சடங்குகள்

பனுவளக் குடியினரின் சடங்கு, எல்லாக் குடியினரும் ஒன்று கூடி பணிவிடை செய்யும் ஒரு பொது நிகழ்வாக இருந்து வந்தது. ஆயினும் இவர்களுக்குரிய கடமைகள் வரையறுக்கப்பட்டிருந்தன. இது கூட வேடுவத் தலைமையினால் தான் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆக்க முதுகியா குடியினருக்கு பரிவாரத் தெய்வங்களான கன்னிமார், தெழுத்தன் கலை, கடல்பகுதிதெய்வம், காட்டுத்தெய்வம் முதலான தெய்வங்களுக்கு பந்தல் அமைக்கும் பணி இவர்களுக்குரியது. செல்லாப்பத்து குடியினருக்கு பூக்கொண்டு வருதல், அலங்கரித்தல் ஆகிய பணிகளும், திருக்காக்கேணி குடியினருக்கு பந்தல் அமைப்பதற்கு தடி, கொடி, குழை சேகரிக்கும் பணியும், வெல்லாயன் குடியினருக்கு துப்பரவு செய்தல், கழிவுப் பொருட்களை அகற்றுதல் ஆகிய பணிகளும், வெல்லம் பாணன் குடியினருக்கு சடங்கிற்கு  வாத்தியங்களை சேகரித்தல் மற்றும் தயாரித்தல் முதலான பணிகளும், கடிகத்தோ குடியினக்கு வாத்தியம் இசைத்தல் ஆகிய பணிகளும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான தன்மைகளுடன் காணப்பட்ட களுவன்கேணி  வேட்டுவக்கிராமத்திலே கால அசைவுகளுக்கு அமைவாக ஏற்பட்ட குடிப்பரம்பலின் அடிப்படையிலும் குடி வேறுபாடுகள் உதயமாகியுள்ளன. கடந்த இரண்டாயிரத்து இரண்டாம்  (2002) ஆண்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் களுவன்கேணி வேடுவர் பற்றி எழுதிய கட்டுரை பற்றியும் கவனம் செலுத்துவது பொருத்தமானதாக இருக்கும். இவர் தனது கட்டுரையில் பின்வரும்  வகையான வேடுவ சமூகங்கள் களுவன்கேணியில் இருந்ததாக அடையாளப்படுத்துகின்றார்.

  • முட்டுக்காட்டு வேடர்
  • குரங்கு திண்ணி வேடர்
  • வேட வெள்ளாளர்

அத்துடன் இவர்களுடைய வேடுவத் தெய்வங்களாக செண்பகராச்சி  செண்பக வன்னியன் ஆகிய தெய்வங்களைக் குறிப்பிடுகின்றார். இவர் குறிப்பிடும் முட்டுக்காட்டு வேடர் என்பது மோட்டுக்காட்டு வேடர் என்பதன் திரிபாகும். மோட்டுக்காடு என்பது களுவன்கேணிக்கு மேற்கே உள்ள இலாவாணை பேரிலாவெளி ஆகிய காட்டுபிரதேசங்களைக் குறிக்கும். இந்தப் பிரதேசத்தில் இருந்து களுவன்கேணிக்கு வந்து குடியேறிய வேடுவர்களே இவர்கள் இவர்களுடைய வழிபாட்டில் மோட்டுக்காட்டுத் தெய்வம் என்றொரு தெய்வம் இருக்கின்றது. இந்த மோட்டுக்காட்டு தெய்வம் என்பது பிற்காலத்தில் மொக்காட்டுத் தெய்வம் அல்லது மொக்காட்டுப்பேய் என அழைக்கப்படுகின்றது.

இவரது கட்டுரையில் குறிப்பிடப்படும் செண்பகராச்சி செண்பக வன்னியன் என்ற தெய்வங்கள்,  ஆட்சி மற்றும் தொடர்புகளினால் களுவன்கேணி வேடுவக் குடிகளுக்குள் வந்து சேர்ந்து கொண்ட தெய்வங்களாகும். குரங்கு திண்ணி வேடர் என்போர் களுவன்கேணி குரங்குமூலை என்ற பகுதியில் வாழ்ந்த ஏனைய வேடுவக் குடிகளால்  ஒதுக்கப்பட்ட ஒரு குடியினராவார். ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தென்னிந்திய மதக்கலப்பின் பின்னர் வேடுவர்கள் இடையே குரங்கை தெய்வமாகக் போற்றுகின்ற மரபு புகுந்துள்ளது. குரங்கைக் கொன்று இறைச்சியை புசிப்பதை இவர்கள் எதிர்த்தனர். அவ்வாறு குரங்கு தின்கின்ற வேடரை ஒதுக்கி வைத்தனர்.

வேட வெள்ளாளர் என்பது விவசாயத் தொழிலை மேற் கொண்ட வேடர் பரம்பரை என்ற கருத்து நிலவுகின்றது. வெள்ளாளர் என்பது குடியேறிய தமிழர்கள் என ஈழத்துப்பூராடனர் என்ற புனை பெயர் கொண்ட செல்வராசா கோபால் தனது மட்டக்களப்பு மாவட்டத்தின் பண்டைய வரலாற்றுச் அடிச்சுவடுகள் என்ற நூலில் குறிப்பிடுகின்றார். இதே நூலில் முதன்மைப்படைப்பாசிரியர் உரை என்ற தலைப்பின் கீழ்  இவ்வாறு குறிப்பிடுகின்றார். ’வேடக் குடியிருப்புக்கள் மகியங்கனை(வத்தளை), தம்பானை, களுவன்கேணி எனும் இடங்களில் மட்டும் இருந்தன. நாளடைவில் களுவன்கேணி வேடர்களும் தமிழர் என்ற தேசிய அடையாளத்தைப் பெற்றுக் கொண்டனர்.’

இலங்கை வேடுவர்

ஆகவே குடியேறிய வெள்ளாளரும் வேடுவரும் இரண்டறக்கலந்ததன் விளைவே இந்த வேட வெள்ளாளர்கள் ஆக இருக்கலாம். இதை உறுதிப்படுத்துவதாக இவர்களின் வழிபாட்டுச் சடங்கில் வேடுவத் தெய்வம் தமிழர் தெய்வங்களான மாரி, காளி, வயிரவர் முதலான தெய்வங்களும் வழிபடப்படுகின்றன. வேட வெள்ளாளர் என்ற ஒரு வகுப்பினரும் களுவன்கேணியில் வசிக்கின்றனர். இன்றைய வாகரைப்பிரதேசங்களில் இந்த வேட வெள்ளாளரை வெள்வேடர் என்று அழைக்கின்றனர். இதனைப் போலவே மட்டக்களப்பில் செல்வாக்குப் பெற்று விளங்கும் முக்குகர் எனப்படும் சமூகத்தவர்களும் தொழில் நிமித்தம் களுவன்கேணி கிராமத்தில் புகுந்து திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதன் வாயிலாக முக்குக வேடர் எனும் குடிப்பிரிப்பும் தோன்றலாகியது அவ்வாறே ஏனைய சமூகங்களும் வேடர்களுடன் திருமண உறவுகளை ஏற்படுத்திக்கொண்டதன் பின்னர் தம்மை வேடர் எனும் அடைமொழியுடன் மாத்திரம் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாது தமது சமூக அடையாளத்தினை திணித்தவொரு புதிய சமூகப்பெயரை உருவாக்கிக்கொள்கின்றனர். இவ்வாறே தான் கிறிஸ்தவ வேடர் என்ற பிரிப்பும் இன்று உண்டு. அவர்கள் கிறிஸ்தவ மதத்தினை பின்பற்றுகின்ற வேடர்களாக தம்மை அடையாளப்படுத்துகின்றனர்.

இவ்வாறு  வாழ்ந்த வேடுவக்குடிக்குள்ளே பல உப குடிகளும் காணப்படுகின்றன. உயர் குலமாகக் கருதப்படும் வேடுவக் குடியான பனுவனக் குடிக்குள்,  நாகசீயா, தேவசீயா, கிரிமட்டி சியா, கல்கோடா சியா, வீரசியா ஆகிய உப குடிகள் காணப்படுகின்றன.

இதே போல் ஆக்கமுத்து கியா குடிக்குள், ஆண்டி கியா, உக்குளு கியா  ஆகிய குடிகளும், திருக்காணி குடிக்குள் வில்லா கியா, வண்டு கியா ஆகிய குடிகளும், செல்லாபத்து குடிக்குள் களுசியா, நாக்கியா குடியும், வெல்லாயன் குடிக்குள் களுநாக்கி குடியும், செல்லம்பாணன் குடிக்குள் தளுகியா, வனி மீயு குடியும், வெரிகடிகத்தோடு குடிக்குள் – வட்டுமுனா கியா, கற்சி குடியும் -என பலவகையான உபகுடி வழமைகள் காணப்படுகின்றன. இவற்றை ஆழ்ந்து அறிந்தால் சில விடயங்களை உணர்ந்து கொள்ள முடியும். இதில் கூறப்பட்ட உபகுடிகள் அனைத்தும் ஒவ்வொரு குடியையும் வழிநடத்திய நடத்துகின்ற உத்தியாக்களான (முன்னோர்கள்) முதுசங்களின் பெயர்களினாலேயே அமைந்துள்ளன.

இலங்கையின் ஆதிக்குடிகள்

இவ்வாறான போக்கானது கிழக்குக்கரையோர வேடர்களிடையே மிக இயல்பாகக் காணப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இருந்தும் கி.பி.13 ஆம் நூற்றாண்டு வாக்கில் கலிங்க மாகோனால் மட்டக்களப்புத் தமிழகத்தில் ஆட்சி முறையை இலகுவாக நிர்வகிக்கவென மக்கள் கூட்டத்தினரை அவர்தம் தொழில் முறைகள் மற்றும் வாழ்வியலின் அடிப்படையில் சுமார் 25 சாதிய அமைப்புக்கொண்டதாக குடிமுறைகள் வகுக்கப்படுகின்றன. அதில் வேடர்களுக்கும் ஒரு இடம் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறான வேளையில் தான் தொழில் மற்றும் திருமணம் என்பவற்றின் அடியாக வேடர்களுடன் கலப்புற்ற சமூகத்தினர் தமது குடிப்பெயரின் அடியாக வேடரை அணுக நினைத்ததும் அல்லது வேடர் என்ற அடையாளத்தினையே மறுத்ததுமான செயற்பாடுகளினால் தான் இன்றைய கால வேடர் சமூகத்துள்ளும் குடியமைப்பிலான மனித நடத்தை வேற்றுமைகள் உட்புகுந்துள்ளன. அதன் எதிர்த்தாக்கமானது வழிபாட்டு மரபுகள், நாளாந்த வாழ்வியல் முறைகள் என்பவற்றுள் பல மனித ஏற்றத்தாழ்வுகளை இற்றைவரைக்கும் மிக இறுக்கமாகப் பேணி வருகின்றன. இவ்வாறான நடவடிக்கைகளினால் கடலோர வேடர் சமூகமானது ஆதிக்க வலைக்குள் சிக்குண்டு மீளாது கரைகின்ற அவலப்பிடிக்குள்ளும் சிக்கியுள்ளது என்பது  கசப்பான உண்மையாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

16601 பார்வைகள்

About the Author

கமலநாதன் பத்திநாதன்

கமலநாதன் பத்திநாதன் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடன நாடகத்துறையில் நாடகமும் அரங்கியலும் கற்கைநெறியில் இளமானி சிறப்புப்பட்டம் பெற்றவர். கிழக்கிலங்கையின் பூர்வ குடிகளான வேடர் சமூகத்தைச் சேர்ந்த இவர் இலங்கையில் தமிழ் பேசும் வேட்டுவ மக்கள் சார்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார். அவ்வகையில் ‘வேடர் மானிடவியல்’ எனும் விடயத்தின் கீழ் பல ஆய்வுக் கட்டுரைகளை தொடரச்சியாக வெளியிட்டு வருகின்றார்.

மேலும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நாளிதழ்கள், சஞ்சிகைகளில் வேடர் சமூகத்தின் சமயம், வரலாறு, தமிழ் இலக்கியம், பண்பாட்டு ஆய்வு சார்ந்த கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள பத்திநாதன் தற்பொழுது இலங்கை நூலக நிறுவனத்தில் கள ஆய்வாளராகக் கடமையாற்றுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)