Arts
8 நிமிட வாசிப்பு

சுயபுலம்பெயரிகள்: இலங்கைக்கு தாமே வந்த தோட்டத்தொழிலாளர்கள்

August 2, 2022 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய வம்சாவளித் தமிழரின் சனத்தொகையில் கணிசமான அளவுக்கு அதிகரிப்பு காணப்பட்டது. 1871 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 444 ஆக இருந்த இவர்களின் சனத்தொகை 1906 ஆம் ஆண்டு 4 லட்சத்து 36 ஆயிரத்து 622 ஆக அதிகரித்தது.  பின்னர் 1936 ஆம் ஆண்டு 6 லட்சத்து 92 ஆயிரத்து 540 ஆக அதிகரித்தது. இவர்களில் சுமார் 88 சதவீதத்தினர் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக இருந்தனர். ஏனைய 12 சதவீதத்தினரிலேயே வர்த்தகர்கள்,  அரசாங்க உத்தியோகத்தர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள்,  எழுதுவினைஞர்கள் போன்றோர் உள்ளடங்கினர். வர்த்தகர்கள் என்ற பிரிவுக்குள் நாட்டுக்கோட்டை செட்டியார்கள், தூத்துக்குடியில் இருந்து வந்த முதலாளிகள், மேற்கு இந்தியாவில் இருந்துவந்த சிந்தி,  மேமன், போரா, குஜராத்தி, பார்சி போன்ற இனத்தவர்கள் உள்ளடங்கியிருந்தனர் என “இலங்கையில் இந்தியர்கள்”   (Indians In Ceylon – An Historical Survey, Haraprasath Chattobathyaya) என்ற நூலில் ஹரபிரசாத் சட்டோபாத்தியாயா குறிப்பிட்டுள்ளார்.

இக்காலத்தில் கொழும்பு நகரத்தில் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்து குடியிருந்த கணிசமான தொகையினர் துறைமுக தொழிலாளர்களாகவும், வீட்டுப் பணியாளர்களாகவும், ரிக்க்ஷா இழுப்பவர்களாகவும், நாட்டாமைகளாகவும் இருந்துள்ளனர்.  இவ்விதம் வந்தவர்கள் “ஆள் பிடித்து” கூட்டி வரப்படாமல் சுய விருப்பத்தின் பேரில் வந்தவர்களாவர். இவர்களுக்கு அப்போது ஏற்படுத்தப்பட்டிருந்த குடியகல்வு நிதியிலிருந்து  (Immigration Fund)  இலங்கைக்கு வருவதற்காக உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

 இந்தியாவில் இருந்து வந்த மலையாள தொழிலாளர்கள்

பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்கென வராமல் தென்னிந்தியாவின் கொச்சின், மலபார்,  மற்றும் திருவாங்கூர் ஆகிய பிரதேசங்களில் இருந்து வந்த மலையாளி இனத்தவர்கள், தேர்ச்சி பெற்ற வீட்டுப் பணியாளர்களாகவும், சமையல்காரர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் கொச்சின் பகுதியில் இருந்து வந்ததால்  “கொச்சியர்கள்” என கொச்சைப்படுத்தி அழைக்கப்பட்டனர். இவர்கள் வீட்டுப் பணியாளர்கள் என்பவற்றுக்கு மேலதிகமாக காரியாலய உதவியாளர்கள் (Peon), போர்ட்டர் (Porter) தொழில், கள்  விற்பனை, வீட்டுத் தோட்ட பணியாளர்கள் போன்ற பணிகளிலும் ஈடுபட்டனர். எனினும் இவர்கள் மிக அரிதாகவே தம் மனைவி பிள்ளைகளுடன் வந்தனர் என ஆய்வாளர் கே.பி .மேனன் குறிப்பிடுகின்றார். 1931ஆம் ஆண்டு இலங்கையில் மொத்தம் 17,127 மலையாளிகள் வசித்த போதும் இவர்களில் 628 பேர் மட்டுமே பெண்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 இலங்கையின் மத்திய மலைநாட்டில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக தொழில்புரிய வந்தவர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதி வரை இந்த நாட்டில் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. இவர்கள் வேலை இல்லாத காலப்பகுதிகளில் தமிழ்நாட்டின் தமது சொந்த கிராமங்களுக்கு சென்று சிறிது காலம் தம் உறவினருடன் இருந்துவிட்டு மீண்டும் இங்கே வந்தனர். இவ்விதம் மீண்டும் வருபவர்கள் “பழையல்கள்”  (பழையவர்கள்) என அழைக்கப்பட்டனர். பழையவர்கள் மீண்டும் தமது தோட்டங்களுக்கு வந்தபோது மேலும் பல உறவினர்களையும் ஊரவர்களையும் தம்முடன் கூட்டிக்கொண்டு வந்தனர். இவர்கள் ஒரு கங்காணியின் கீழ் வந்தவர்களாக கருதப்படாமல் சுயமாக புலம்பெயர்ந்தவர்கள் எனக் கருதப்பட்டனர். புதிதாக வருபவர்கள் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைக்கு புலம்பெயர்பவர்களுக்கான ஆணையாளர் அலுவலகத்தில் தம்மை பதிவு செய்து கொண்டபோது அவர்களுக்கு பயணச் செலவுக்கும்  வேறு செலவுகளுக்கும் என முற்பணம் ஒன்றும் கொடுக்கப்பட்டது.

நிரந்தரமாகத் தங்கும் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோதெல்லாம் பருவ காலத்தில் வரும் தொழிலாளர்களே குறை நிரப்பும்  தொழிலாளர்களாக இருந்தனர். சிலவேளை மேலும் பற்றாக்குறை ஏற்பட்டபோது தோட்ட துரைமார்கள் ஆள் காட்டும் அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் (License For Recruitment)    ஒரு கங்காணியை அணுகி, அவரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி தமக்குத் தேவையான கூலியாட்களை பெற்றுக் கொண்டனர். இவர்களால் 20 கூலியாட்களை மட்டுமே ஒரு தடவை கூட்டிவர இக்காலத்தில் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு இத்தகைய லைசென்ஸ்கள் வழங்கப்பட்டிருந்தன.

இவ்விதம் வேலைதேடி இலங்கை நாட்டுக்குள் நுழைபவர்களுக்கு,  இலங்கைத் தேயிலை தோட்டங்களில் உடனடியாக வேலை வழங்கப்படும் என்று உறுதிமொழி இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு எப்போதும் விரும்பியபடி வந்து போகலாம் என்ற விதத்தில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன. அதேபோல் வந்து போனவர்கள் அதற்கேற்ற விதத்தில் அடையாள ஆவணங்களை வைத்திருந்தனர். அவர்கள் வருவதற்கும் மீண்டும் செல்வதற்கும் அந்த ஆவணங்கள் உதவியாக இருந்தன . ஆரம்பத்தில் முற்றிலும் இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்களையும் வெள்ளைக்கார துரைமார்களையும் மாத்திரமே உள்ளடக்கி செயற்பட்ட பெருந்தோட்டங்கள் பின்னர் படிப்படியாக கரையோரச் சிங்களவர்கள், கண்டிய சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், இலங்கைச் சோனகர்கள், இந்திய சோனகர்கள், பறங்கியர்கள்,  ஐரோப்பிய ஆசியர்கள்  (Euro Asians)  மற்றும் இன்ன பிற இனத்தினரையும் உள்வாங்கிக் கொண்டன. இதன் அடிப்படையில் 1921 ஆம் ஆண்டு சனத்தொகை மதிப்பீட்டின்படி மேற்படி எல்லா இனங்களையும் சேர்ந்த மொத்தம் 569,118 பேரை பெருந்தோட்டத்துறை உள்ளடக்கியிருந்தது. இதில் இந்திய வம்சாவழி தமிழர்களின் தொகை நான்கு லட்சத்து 93 ஆயிரத்து 944 ஆக இருந்தது.  இது முறையே 1931 ஆம் ஆண்டு 789,934 ஆக அதிகரித்தது .

இதே காலப்பகுதியில் பெருந்தோட்டத் துறையை மையமாகக் கொண்டு செயற்பட்ட இந்திய வம்சாவழி சோனகர்களின் தொகை 1921 ஆம் ஆண்டு 4,214 ஆகவும் நாட்டில் இவர்களின் மொத்த சனத்தொகை 330 26 ஆகவும் இருந்தது. இது முறையே 1946ஆம் ஆண்டு 4,258 ஆகவும் 35,624 ஆகவும் இருந்தது. இவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு கடன் கொடுத்து வட்டி வசூலிப்பவர்களாகவும் இருந்தனர். இவர்களை தோட்டத் தொழிலாளர்கள் ஆரம்பத்தில்   “ஈட்டுக்காரன்” என்று அழைத்த போதும் பின்னர் இவர்களை, இவர்கள் வட்டி வசூலிப்பதில் காட்டிய கொடூரம் கருதி  “ஈட்டிக்காரன்” வருகிறான் என்று கூறி இவர்களை கண்டதும் ஓடி ஒளிந்தனர்.  பின்னர் இவர்கள்  “சுல்தான் பாய்” என்ற பெயர் கொண்டும் பிரபலம் வாய்ந்தவர்களாக காணப்பட்டனர்.

கோதண்டராமையர் நடேசய்யர்

இத்தகை ஒரு நிலைமையில்தான் இலங்கையில் வாழ்ந்த இந்தியர்களின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வதற்காக இரண்டு சட்ட சபை அங்கத்தவர்களை தேர்ந்தெடுக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்தது. அதன் பிரகாரம் 1923 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு திருத்தத்தின் பின்னர் இந்தியர் சார்பாக குரல் கொடுக்க இரண்டு அங்கத்தவர்கள் சட்டசபைக்கு நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் பிற்காலத்தில் மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியில் முதல் தொழிற்சங்கவாதியாக பிரபலமடைந்த கோதண்டராமையர் நடேசய்யர் ஆவார்.

இவர் ஆரம்பத்தில் கொழும்பை மையமாகக் கொண்ட நகர்ப்புற தொழிலாளர்களின் தொழிலாளர் தலைவரான குணசிங்கவுடன் இணைந்து கொழும்பில் வாழ்ந்த இந்தியத் தொழிலாளர்களின் உரிமை தொடர்பில் குரல் கொடுப்பவராகவும் பல தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுத்தார். எனினும் பிற்காலத்தில் குணசிங்க இந்திய தொழிலாளர்கள் தொடர்பில் குறிப்பாக மலையாள தொழிலாளர்களுக்கு எதிராக கடைபிடித்த இனவாதக் கொள்கை காரணமாக 1928ஆம் ஆண்டு குணசிங்கவின் தொழிலாளர் இயக்கத்தில் இருந்து விலகிக்கொண்டார்.

சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட 2 இந்திய வம்சாவழி சட்டசபை அங்கத்தவர்களும் கொழும்பில் வாழ்ந்த இந்திய வர்த்தகர்களின் நலனின் அக்கறை செலுத்துவதற்காகவே நியமிக்கப்பட்ட போதும் நடேசய்யர் முற்றிலும் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினைகள் பற்றி குரல் கொடுப்பதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இவர் பின்னர் இடம்பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட தேர்தலின்போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டசபை அங்கத்தவராக தெரிவுச்செய்யப்பட்டார். இவர் காலப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களில் அடிமை நிலையில் வைக்கப்பட்டிருந்தமை,  அவர்கள் மீது கங்காணிகளால் சுமத்தப்பட்டிருந்த கடன் சுமை, அவர்களது சுகாதார நிலைமை, கல்வி போன்ற விடயங்களை கடுமையாக விமர்சித்தார். இவரது சட்டசபை உரைகள் அன்றைய நாளிதழ்களில் பிரசுரம் ஆகி சர்ச்சைகளை உண்டுபண்ணின.  இதே காலப்பகுதியில் இந்தியாவில் அசாம் மாநிலத்தில் தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள் என இந்திய அசோசியேஷன்  (Indian Association) என்ற அமைப்பின் தலைவர் எஸ். கே. கோகலே அவர்களும், தென்னாப்பிரிக்காவில் தொழிலாளர்கள் கொடூரமாக நடத்தப்படுவது தொடர்பில் அப்போது சட்டக் கல்வி கற்று இளம் சட்டத்தரணியாக பணிபுரிந்துகொண்டிருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் கடுமையாக குரல் எழுப்பினார்.

இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு இந்திய அரசாங்கம் தமது நாட்டின் பிரஜைகள் வெளிநாடுகளில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்று தேடிப்பார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டது. இதன் விளைவாக இந்திய குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டது. குடியகல்வு தொடர்பான சகல விவரங்களையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தொழிலாளர் மீதான கடன் செலுத்தும் முறை நீக்கப்பட்டது. செலவுகளை ஆள் கட்டும் முகவர்களே பொறுப்பேற்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

 தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6370 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (21)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)