Arts
12 நிமிட வாசிப்பு

கீழைக்கரையில் நாகரும் அனுரை அரசரும்

January 26, 2024 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

கீழைக்கரையில் நாகர்

“கலி கடந்து எண்ணூறு ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் நாகர் இயக்கரோடு கலந்து ஓரினமானார்கள். அவர்கள் தனி இனமாக பல்வேறு நகரங்களை ஆளலாயினர். அவர்களது முதன்மை நகராக உகந்தம் எனும் நகர் விளங்கியது.” என்று ஆரம்பிக்கின்றது மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம். இலங்கையில் வாழ்ந்த நாகர் எனும் இனம் இயக்கர் என்னும் இன்னொரு குலத்தை வென்று கலந்ததும், அவர்கள் உகந்தையை அரசிருக்கையாக்கியமையையும் சொல்லும் பாடல் இது.

நாகபாம்பை குலக்குறியாகக் கொண்டிருந்தோர் என ஊகிக்கப்படும் நாகர்கள் பற்றி தெற்காசியா – தென்கிழக்காசியா முழுவதும் ஏராளமான தொன்மங்கள் நிலவுகின்றன. இராமாயணம், மகாபாரதம் முதலிய இதிகாசங்களிலும், இந்தியப் புராணங்களிலும் புத்த சாதகக் கதைகளிலும் நாகர்கள் பற்றிய பல்வேறு கதைகள் வழங்குகின்றன. நாகர்கள் பற்றிய கதைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றாலும், அப்பெயரில் உண்மையிலேயே ஒரு தனியினம் வாழ்ந்ததா என்பதில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் வரலாற்றுலகில் உள்ளன. எவ்வாறெனினும் தெற்காசியாவில் பல்வேறு மொழி பேசிய, பல்வேறு இடங்களில் வசித்த இனக்குழுக்கள் தங்களை நாகங்களோடு தொடர்புபடுத்தி தம்மை நாகர் என்று அழைத்துக்கொண்டார்கள் என்பதை தொல்லியல் சான்றுகள் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றது.  

இப்படி இலங்கையில் வசித்த நாகர், மாப்பார் பண்பாட்டை இலங்கைக்கு அறிமுகம் செய்த நாகரிகமுற்ற இனக்குழுவினர். இவர்களது மிகப்பழைய கல்வெட்டுகள் தமிழியில் கிடைப்பதால் இவர்கள் தமிழ் பேசினர் என்றும் தமிழகத்திலிருந்து வந்து குடியேறினர் என்றும் அறியமுடிகின்றது (பத்மநாதன், 2016). உழவுத்தொழில், அதற்கான நீர்ப்பாசன வழிமுறைகள், நீர்நிலைகளைச் சீரமைத்தல், குடியிருப்புகளை அமைத்து வாழ்தல், மட்பாண்டம் முதலான கைத்தொழில்களும் கைப்பணிப் பொருட்களை ஏனையோருடன் விற்று வாங்குதலும் முதலிய மாப்பார் சமூகமொன்றின் இயல்புகளை நாகரும் கொண்டிருந்தார்கள். 

கைத்தொழில் வளர்ச்சியும் வணிகமும் இரும்புக் காலத்தில் வளர்ச்சியுற்ற முக்கியமான விடயங்கள். நாகர்கள் கடல் கடந்து இங்கு வந்தோர் என்பதாலும், போக்குவரத்துக்கும் வணிகத்துக்கும் கப்பல், வள்ளம் முதலிய கடலோடிக் கலங்களை உருவாக்கிப் பயன்படுத்தினர் (Archaeology.lk, 2024). இந்தக் கடற்பயணங்களின் வழியே வட இந்தியாவில் உருவாகி வந்த புதிய அரசுகளுடனும் உரோமப் பேரரசு முதலிய மேலைத்தேய அரசுகளுடனும் ஊடாடும் வாய்ப்பு நாகருக்கு ஏற்பட்டது. இரும்புக் காலத்தின் முதன்மையான சான்றுகளில் ஒன்றான குதிரை இறக்குமதியும் குதிரை வளர்ப்பும் இலங்கையில் நிலவியது. (The archaeological background and origin of the state, n.d:192) 

Bantharumoola

கல்லில் செக்கு, ஆட்டுக்கல், சுடுமண்ணாலான மட்கலங்கள், செங்கற்கள் முதலியவற்றை நாகர்கள் உருவாக்கிப் பயன்படுத்தி வந்தனர். கல்லில் மாத்திரமன்றி, இத்தகைய அன்றாடப் பாவனைப் பொருட்களிலும் தங்கள் பெயரை எழுதுவது அவர்களது வழக்கமாக இருந்து வந்தது (உரு. 01). விலங்கு, மனிதர், தெய்வங்களின் சுடுமண் சிற்பங்களை செதுக்கும், வடிக்கும் வழக்கமும் அவர்களிடம் காணப்பட்டது. தெய்வ நம்பிக்கை கொண்டிருந்த நாகர், நாகங்களின் அரசனான ‘மணிநாகன்’ என்ற தெய்வத்தை வழிபட்டு வந்தார்கள். அத்தெய்வம் ஆரம்பத்தில் வெறும் கல்லாகவும் பின்னர் ஐந்தலை நாகபாம்பின் வடிவிலும் பின்னர் பாதி மனிதன் பாதி நாகமாகவும் சித்தரிக்கப்பட்டது. கல்லில் செதுக்கிய மணிநாகனின் சிற்பங்கள் காரைதீவு, பாலாமடு முதலிய இடங்களில் கிடைத்துள்ளன. 

மணிநாகனுக்கு மலையிலும் மண்ணிலும் கோவில் அமைத்துக் கும்பிடும் வழக்கம் நாகரிடம் இருந்ததாகத் தெரிகிறது. அவை மணிநாகன் பள்ளி என்று அழைக்கப்பட்டன. ‘மணிநாகன்’, ‘மணிநாகன் பள்ளி’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட கற்றூண்களும் மலைப்படுக்கைகளும் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் கணிசமான அளவு தற்போதுவரை கண்டறியப்பட்டுள்ளன (கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நாகர் கல்வெட்டு வந்தாறுமூலையில் கண்டுபிடிப்பு, 2015). 

உற்பத்தி அதிகரிப்பாலும் செல்வச் செழிப்பாலும் நாகரில் செல்வந்தர் உருவானார்கள். செல்வந்தர்களிலிருந்து நிலக்கிழார்கள் உருவானார்கள். நிலக்கிழார்களிடம் அதிகாரப்போட்டி ஏற்பட்டபோது அவர்களிடையே குழுக்களும் குழுக்களிடையே மோதலும் உண்டானது. அந்த மோதலில் வென்றோர் அருகிலுள்ள இன்னொரு குழுவை வெல்ல முயன்றனர். இந்தப் போராட்டங்களின் வழியே ஒருவரை ஒருவர் வென்றடக்கி இறுதியாக மேலெழுந்தவன் பெரிய நிலப்பரப்புக்கும் அதன் கீழ் அடங்கும் மக்களுக்கும் தலைவன் ஆனான். இந்தத் தலைவனை நாகர் ‘வேள்’ என்று அழைத்தனர். வேளிர் பலரால் ஆளப்பட்டது நாகர் நிலம்.

வேள் பட்டம் தந்தை – மகன் என்ற முறையிலோ மாமன் – மருகன் என்ற முறையிலோ தலைமுறைகளூடாகக் கடத்தப்பட்டது. வேளிர் பெரும்பாலும் நாகன், கண்ணன் என்ற பெயர்களைத் தங்களுக்குள் மாறிமாறிச் சூடிக்கொண்டார்கள். அன்றாடப் பாவனைப் பொருட்களிலும் ஈமத்தாழிகளிலும் தங்கள் வேளிரின் மூன்று தலைமுறைகளை “வேள்நாகன் மகன் வேள்கண்ணன் வேள்கண்ணன் மகன் வேள்நாகன்” என்று பல தடவை தமிழ் எழுத்தில் பொறிப்பது நாகரின் வழக்கமாக இருந்தது. அதிகாரமும் ஆற்றலும் பொருந்திய வேளிரின் இல்லங்கள் மணிநாகனின் பள்ளிகளுக்கு அடுத்த இடத்தில் கருதப்பட்டதுடன், அவை ‘வேள்நாகன் பள்ளி’ என்று அறியப்பட்டன. வேளிர் பின்னாளில் அரசர்களாக வளர்ச்சி கண்டபோது, வேள்நாகன் பள்ளிகள் அரண்மனைகளாக மலர்ந்தன. 

நாகரின் பண்பாடு சார்ந்த தொல்லியல் சின்னங்கள், தமிழிக் கல்வெட்டுகள் கிடைத்த இடங்களின் அடிப்படையில் பேரா.சி. பத்மநாதனால் சுமார் பதினைந்து நாகரின் வேளிர் ஆட்சிப் புலங்கள் இனங்காணப்பட்டன. அவர் கருத்தின்படி, இவை பதினைந்தும் வடக்கே வாகரையிலிருந்து தெற்கே சங்கமன்கண்டி வரை துண்டுபட்ட புவியியற் பரப்புகளில் அமைந்திருந்தன. அவரது அனுமானம் சரி எனின், இன்னும் ஏராளமான வேள்புலங்கள் அவற்றுக்கு வடக்கிலும் தெற்கிலும் மேற்கிலும் மறைந்திருக்கின்றன என்றே பொருள். 

அனுரை அரசர்

அனுராதபுரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் குடியிருப்புப் பகுதியாக நீடித்து வருகின்ற தொல்நகரம். அங்கு எப்போது முதலரசு தோன்றியது என்று தெரியவில்லை. பாலி வம்ச இலக்கியங்களில் சொல்வதன்படி, அது பண்டுகாபய மன்னனால் அரசிருக்கை ஆக்கப்பட்டது. அவனுக்கு முன்னர் ஆண்ட மன்னர்களான வி|சயன், உபதிசையன், பண்டு வாசுதேவன் முதலியோர் தம்பபண்ணி அல்லது உபதீச நகரி முதலிய வேறு நகரங்களிலிருந்து ஆட்சிபுரிந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. 

வம்ச இலக்கியங்களின் வி|சயன் தொன்மத்துக்குச் சமனான பல தொன்மக்கதைகள் பழைய இலங்கையில் வழங்கி வந்ததை அறியமுடிகின்றது. வரலாற்றாய்வாளரில் சிலர், தொல்லியல் சான்று கிடையாத காரணத்தால் வி|சயன் தொன்மத்தை மறுப்பர். வம்ச இலக்கிய அரசர்களில், பொமு 3 முதல் பொபி 1 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த தேவானாம்பிரிய திசையன், உதியன், இலாஞ்ச திசையன், குடாக்கண்ண திசையன், வசபன், முதலாம் க|சபாகு (Gajabahu I) ஆகியோரின் நேரடிப் பெயர் பொறித்த பிராமிக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. நேரடியாகப் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் காமணி, நாகன், திசையன் எனும் பெயர்கள் வரும் கல்வெட்டுகளை அவற்றின் வரிவடிவக் காலங்களைக் கணித்து துட்டகாமணி, வட்டகாமணி, ஆமந்தகாமணி, மகாதாடிக மகாநாகன், மாகல்லக நாகன், சத்தா திசையன், மகாசூலி மகாதிசையன் ஆகிய மன்னர்களால் பொறிக்கப்பட்டதாகக் கொள்வோரும் உண்டு.

எவ்வாறெனினும் தேவானாம்பிரிய திசையனுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் வி|சயன், உபதீசன், பண்டுவாசுதேவன், பாண்டுகாபயன், மூத்தசிவன் முதலிய மன்னர்களின் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை என்பதே பொதுக்கருத்து (Paranavitana, 1970: XLIX – LI). ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செலுத்திய அனுராதபுர அரசர்களின் கல்வெட்டுகள் கீழைக்கரை உட்பட இலங்கைத்தீவு முழுவதும் கிடைத்திருப்பதால் அனுராதபுரம் பொதுக்காலத்திலேயே ஒரு பலம் வாய்ந்த அரசாக வளர்ச்சி கண்டு வந்தது என்பதை ஊகிக்கலாம். 

ஆனால், அனுராதபுர அரசு தோன்றியபோது, கீழைக்கரை சுதந்திரமான தனியரசாக விளங்கியது. அந்தத் தனியரசு பற்றிய தகவல்களை நாம் பாலிமொழி வம்ச இலக்கியங்களிலிருந்து அன்றி, நேரடியாகவே கல்வெட்டு ஆதாரங்கள் மூலமே கண்டடைந்திருக்கிறோம் என்பது சுவாரசியமான தகவல்.

அடிக்குறிப்புகள்

  1. “கலிகடந்து எண்ணூறு ஆண்டில் கருதிய இலங்கை தன்னில் வலியவர் இயக்கரோடு கலந்தவர் மரபொன்றாகி நலிவில்லா நிருபம் செய்து நகர் எல்லாம் இறைகள் என்ன ஒலிவளர் உகந்தம் என்னும் நகரதில் உறைந்தார் நாகர்” – (கமலநாதன் & கமலநாதன், 2005:03)
  2. நாகம் என்பது பாம்புகளில் ஒருவகை. பாம்புகளில் இன்னொரு வகையான உரகர் பற்றியும் புராணங்களில் குறிப்புண்டு. நாகம் என்பது யானைகளுக்கும் உரிய பெயரே. நாகம் என்ற பெயரில் மரம், உலோகம் என்பன உள்ளதையும் இங்கு நாம் ஒப்பிடலாம்.  
  3. தமிழி, பிராமிக் கல்வெட்டுகளில் ‘மருமகன்’ என்ற சொல் வாசிக்கப்பட்டது. பரணவிதானவால் தவறாக பேரன் எனப் பொருள்கொள்ளப்பட்ட இச்சொல்லை, இந்திரபாலா, பரமு பு^ச்பரட்ணம் முதலியோர் தமிழ்ச் சொல்லான மருமகனே என்று நிறுவியுள்ளனர்.
  4. வாகரைக்கு வடக்கே தம்பலகாமம்பற்றின் கந்தளாய், கொட்டியாரப்பற்று மேற்கு (சேருவில) பகுதியில் அமைந்துள்ள திருக்கரைசை, ஆதியம்மன்கேணி ஆகிய இடங்களில் வேள்நாகர் தமிழிக் கல்வெட்டுகள் கிடைத்தமையை பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார் (பத்மநாதன், 2016:464). நாக வேளிர் பற்றிய தொல்லியற்சான்று கிடைத்த இரு இடங்களுக்கிடையே சற்று தூரம் அல்லது தொல்லியல் சான்று கிடைக்காத வெளியொன்று காணப்படுகின்றது என்ற ஒரே காரணத்துக்காக அவை இரண்டும் வெவ்வேறு வேள்புலங்களுக்கு உட்பட்டவை என்று சொல்வது கடினம். தொடர்ச்சியான குடியேற்றங்கள், நகரமயமாக்கம், இயற்கை – செயற்கை பேரிடர்களின் பின்னணியில் தொல்லியற்சான்றுகள் சிதைந்து மறைந்துபோயிருக்க வாய்ப்புண்டு. எனவே தற்போது துண்டுபட்டு தனித்தனி ஆட்சிப்பரப்புகளாக சி. பத்மநாதனால் இனங்காணப்படும் நாக வேள்புலங்கள், ஒருகாலத்தில் தொடரான ஒரே தனிப்பிராந்தியமாக இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கு போதிய தரவில்லை. ஆக, நாக வேளிர் கீழைக்கரையின் பெரும்பரப்பில் ஆட்சிபுரிந்து வந்தமை உண்மையே என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்ற போதும், நாகராட்சி இத்தனை நாக வேள்புலங்களாக தனித்தனி இடங்களில் நீடித்துவந்தன என்று கூறுவது மேலதிக ஆய்வுக்குரியது. 
  5. பொபி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திவ்யாவதானம் எனும் வடமொழிப் பௌத்த நூலிலும் ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கை வந்த சுவாங்சங் எனும் சீனப்பயணியின் குறிப்பிலும் காணப்படும் குறிப்பின்படி நாவலந்தீவின் பெருவணிகன் சிங்கனின் மகன் சிங்களன். அவன் ஐநூறு வணிகருடன் இலங்கை மணிகளுக்காக தங்கியிருக்கும் போது இராட்சசிகளின் உதவியைப் பெறுகிறான். இராட்சசிகளால் தாங்கள் சிறைப்பிடிக்கப்படலாம் என அஞ்சிய அவர்கள் பறக்கும் குதிரையிலேறித் தப்பிச் செல்கின்றனர். பிறகு சிங்களன் படையோடு வந்து இராட்சசிகளை அழித்து இங்கு அரசொன்றை அமைக்கின்றான். சுவாங்சங்கின் இன்னொரு கதையில் தென்னகத்தில் சிங்கத்துக்கு மகனாகப் பிறந்த சிங்களன் எனும் இளவரசன் இலங்கையை வந்தடைந்து, இங்கு மாணிக்கக்கற்களைப் பொறுக்க வந்த வணிகர்களைச் சூறையாடி இங்கு அரசமைத்த கதை சொல்லப்படுகின்றது. சீனப்பயணி பாகியனின் (பொபி 337 – 422) குறிப்பின்படி தென்னகத்திலிருந்து இயக்கரிடம் மாணிக்கம் பெற வந்த வணிகர்கள் இத்தீவின் செழிப்பில் மயங்கி இங்கேயே தங்கி அரசொன்றை அமைத்தனர் (Gunawardana & Dissanayake, 2020:55-57).  
  6. தேவானாம்பிரியன் திசையன் = |தெவநபிய மஃகர|ச (Devanapiya Maharaja) இல. 03; உதியன் = |தெவநபிய மஃகர|ச |கமனி உதி (Devanapiya Maharaja Gamani Uti) இல.47 ; இலாஞ்சதிசையன் = |தெவநபிய ல|ஜலதி`ச (“Devanapiya Lajalatisa,”), இல. 16 ; குடாக்கண்ணன் திசையன் = |தெவநபிய புடகன |கமனி அ|பய (Devanapiya Pudakana Gamani Abaya), இல. 22 ; வசபன் = வஃக|ப மகர|சஃக மருமகன் (Vahaba maharajaha marumakana) இல. 57. (இலக்கங்கள் Inscription of Ceylon Vol. Iஇல் கண்டபடி: Paranavitana, 1970). 

உசாத்துணை

  1. கமலநாதன், சா.இ., கமலநாதன், க. (2005). மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், கொழும்பு, சென்னை : குமரன் புத்தக இல்லம்.
  2. கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நாகர் கல்வெட்டு வந்தாறுமூலையில் கண்டுபிடிப்பு, (2015.06.22), The Government Official Web Portal, retrieved from: http://www.news.lk.
  3. Archaeology.lk, (2024). The first evidence of Prehistoric seafarers of South Asia was found on Velanai Island in Jaffna., retrieved from:// www.archaeology.lk.
  4. Gunawardana, N., Dissanayake, U. (2020). Two Stories on Origin of Sinhalese as in the Records of Xuanzang, AJMRD, 2(10), pp. 55-57.
  5. Paranavitana, S. (1970). Inscriptions of Ceylon, Volume I, Ceylon: Department of Archaeology. The archaeological background and origin of the state, (n.d), in Chapter III The State, Kingship and Buddhism in Ancient Sri Lanka, retrieved from https://docplayer.net/64469037-The-state-kingship-and-buddhism-in-ancient-sri-lanka.html.

இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919 ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6344 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)