Arts
10 நிமிட வாசிப்பு

நாகசேனன் பற்றிக் குறிப்பிடும் சித்துள்பவ்வ கல்வெட்டுகள்

March 19, 2024 | Ezhuna

‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாகர்

தென்னிலங்கையில் பொ.ஆ.மு 3 ஆம் நூற்றாண்டில் மகாகம எனும் ஓர் இராச்சியத்தை அமைத்தவன் தேவநம்பிய தீசனின் சகோதரனான மகாநாகன் என்பவனே. இவன் ஓர் நாக மன்னனாவான். இவன் அமைத்த மகாகம இராச்சியத்தில் முதன் முதலாக நாகமகா விகாரை எனும் வழிபாட்டுத் தலத்தை இவன் அமைத்தான். தேவநம்பிய தீசனின் பின் அரசனாக வேண்டியவன் என்பதால் இவன் ‘உப ராஜா மகா நாகன்’ என அழைக்கப்பட்டான். தென்னிலங்கையில் கிரிந்த, திஸ்ஸ மகராம ஆகிய இடங்களில் பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகளில் தவறான நம்பிக்கைகளை உடைய (இந்து சமய நம்பிக்கைகள்) இவன் புத்த மதத்தைத் தழுவினான் எனக் கூறப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் திஸ்ஸ மகாராமையின் அருகில் இருந்த ‘நநிகிரி’ எனும் இடம் பற்றி பொ.ஆ 2 ஆம் நூற்றாண்டிற்குரிய தொலமியின் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நாகவழிபாடு நிலவிய இடம் என அறிஞர்கள் கூறியுள்ளனர். பொ.ஆ 1 ஆம் நூற்றாண்டில் திஸ்ஸ மகாராமையில் இருந்த நாக மாகாவிகாரை ஈழநாகன் எனும் மன்னனால் புனரமைக்கப்பட்டது. மேலும் தொலமியின் வரைபடம் குறிப்பிடும் ‘நசடும’ எனும் நாகரின் நகரமும் இப்பகுதியில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரம்பா விகாரை அமைந்துள்ள பகுதி ஓர் பண்டைய நாக வழிபாட்டுத் தலமாகும். இதன் பண்டைய பெயர் மகாநாக குளம் என்பதாகும். மகாநாக குளம் நகரின் முக்கிய வழிபாட்டிடமான ரம்பா விகாரையை நாகசேனன் எனும் துறவி பராமரித்து வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

மேற்சொன்ன இடங்களைத் தவிர நாக வழிபாடு நிலவிய பத்துக்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் தென்னிலங்கையில் இருந்தன. இவை நாகமலை, நாககல்லு, நாகவில்லு, நாககுளம், நாகதுறை, நாககண்டி, நாகமடு, நாகதொடுவாய், நாகவத்த, நாகபவத்த, நாகஹெல, நாகவல, நாககுளி போன்ற இடங்களாகும். தற்பொழுது இவை நாக விகாரை எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளன.

தென்னிலங்கையில் நாக வழிபாடு தொடர்பான 6 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் ‘பருமகன்’ என்ற பட்டத்துடன் சேர்த்தே நாகன் எனும் பெயர் அதிகளவில் காணப்படுவதால், இப்பகுதியில் நாக வணக்கத்தைக் கடைப்பிடித்தோர் அரச பிரதானிகளாகவோ அல்லது தலைவர்களாகவோ இருந்திருக்க வேண்டும். மேலும் நாக யுவராஜன் பற்றிய கல்வெட்டுக்களும் தென்னிலங்கையில் காணப்படுகின்றன. இது நாக சிற்றரசன் எனப் பொருள்படும்.

நாகசேனன் பற்றிக் குறிப்பிடும் சித்துள்பவ்வ கல்வெட்டுகள்

இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தில், கதிர்காமத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் 16 கி.மீ தூரத்தில், யால வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ள காட்டின் தென்மேற்குப் பகுதியில் சித்துள்பவ்வ என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு கோரவக் கல, சித்துள்பவ்வ, தெகுந்தரவெவ எனும் மூன்று மலைப் பகுதிகள் காணப்படுகின்றன. இம் மூன்று இடங்களிலும் நூற்றுக்கணக்கான கற்குகைகள் காணப்படுகின்றன.

இக்குகைகளில் பண்டைய காலம் முதல் கதிர்காமத்திற்கு தல யாத்திரை வந்த சித்தர்களும், முனிவர்களும் அதிகளவில் தங்கிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக இம் மலை சித்தர் மலை எனப் பெயர் பெற்றுள்ளது. இதுவே சிங்கள மொழியில் சித்தர பப்பத்த என அழைக்கப்பட்டு, பின்பு சித்தல பப்பத்த என மருவியுள்ளது. பப்பத்த என்பது மலை எனப் பொருள்படும். இப்படி காலத்துக்குக் காலம் மருவி வந்து தற்போது சித்துள்பவ்வ என அழைக்கப்படுகின்றது.

சித்தர் மலைப் பகுதியிலுள்ள குகைகளிலும், பாறையிலும் 64 முற்கால பிராமிக் கல்வெட்டுக்களும், 11 பிற்கால பிராமிக் கல்வெட்டுக்களுமாக மொத்தமாக 75 கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. சித்துள்பவ்வ எனும் சித்தர் மலையில் மட்டும் 31 பிராமிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் 15 கல்வெட்டுக்களில் இந்து சமயம் மற்றும் தமிழர் பற்றிய பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக் கல்வெட்டுகளில் சிவன், நாகம், வேலன் போன்ற இந்து தெய்வங்கள் தொடர்பான பெயர்களும், சுவாமி, பிராமணன், பெருமகன் போன்ற தமிழர் தொடர்பான பெயர்களும் காணப்படுகின்றன.

இவற்றில் இரண்டு கல்வெட்டுகளில் நாகசேன எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. முதலாவது கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு,

நாகசேன தேரச லேன சகச”

இதன் பொருள் “தேரர் நாகசேனனின் குகை சங்கத்திற்கு” என்பதாகும். இது ஆங்கிலத்தில் “The cave of the elder Nagasena, [is given] to the sangha” எனப் பொருள்படுகிறது.

brahmi inscription

முதலாவது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்களே இரண்டாவது கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இக் கல்வெட்டின் படியெடுக்கப்பட்ட படம் கிடைக்கவில்லை. இக்கல்வெட்டில் உள்ள விபரங்கள் பின்வருமாறு, 

“நாகசேன தேரஹ லேன சகச”

இதன் பொருள் “பெரியவர் நாகசேனனின் குகை சங்கத்திற்கு..” என்பதாகும்.

சிவனின் மகன் நாகன் பற்றிக் குறிப்பிடும் பிற்கால பிராமிக் கல்வெட்டுகள்

சித்துள் பவ்வவில் பிரதான கற்குகைக்கு முன்பக்கம் உள்ள சித்துள்பவ்வ குளத்தின் வலது கரையில் உள்ள ஓர் பாறையில் பிற்கால பிராமிக் கல்வெட்டுக்கள் பல பொறிக்கப்பட்டுள்ளன. இப்பாறையில் மொத்தமாக  6 பிற்கால பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் பொ.ஆ 3 முதல் 6 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில்  பொறிக்கப்பட்ட பிராமிக் கல்வெட்டுகளாகும். கல்வெட்டு ஆய்வாளர் மாலினி டயல் இவற்றில் 5 கல்வெட்டுகளைப் பதிவு செய்துள்ளார். இவற்றில் 2 கல்வெட்டுகளில் நாகன், சிவன் ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன.

இக்கல்வெட்டுக்கள் இரண்டிலும் ஒரே செய்தியே பொறிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:

“ஹித உதய என்னுமிடத்தை சேர்ந்த சிவனின் மகன் நாகன் இங்கிருந்த மடாலயத்தில் நடைபெற்ற ஆரியவாச எனும் விழாவிற்காக நூறு கஹப்பணம் வழங்கினான்” 

brahmi inscription 2

நாக ராமினி பற்றிக் கூறும் பிற்கால பிராமிக் கல்வெட்டு

பாறையில் பொறிக்கப்பட்டுள்ள அடுத்த கல்வெட்டு பற்றிய பெயர்ப் பலகையும் கல்வெட்டின் அருகில் வைக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டில் மருமகன், நாக ராமனி ஆகிய தமிழ் சொற்கள் காணப்படுகின்றன. கல்வெட்டின் விபரம் பின்வருமாறு:

இதன் பொருள் “சித்தம்… மகாராஜனின் மருமகன் யுவராஜா தீசனின் மகள் க….  ராஜாவின் மகள்…….நாகராமினி மகாராஜா……………………” என்பதாகும்.

சித்த………….மகாராஜஹ மருமகனஹ யுவராஜா திசயஹ

ஜித க……..ரஜஹ ஜித……… நாகராமினிய மகாராஜா….

brahmi inscription 3

இக்கல்வெட்டில் ஓர் மகாராஜனின் (மகாராஜனின் பெயர் சிதைவடைந்துள்ளது) மருமகனான உபராஜன் தீசனின் மகள் (மகளின் பெயரும் சிதைவடைந்துள்ளது), இன்னுமோர் ராஜனின் மகள் (இரண்டாவது ராஜனின் பெயரும் சிதைவடைந்துள்ளது), நாக ராமினி மகாராஜன் (மகாராஜனின் பெயர் கூறப்படவில்லை) ஆகியோர் இப்பகுதிக்கு செய்த ஏதோ ஒரு பணி பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4264 பார்வைகள்

About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (20)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)